பிறந்த நாள் பரிசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 4, 2025
பார்வையிட்டோர்: 2,426 
 
 

“ஏ.. நீலா என்னடி ஒரே யோசனையா இருக்க டல்லா வேற இருக்கே.. என்னாச்சு..?” அக்கறையோடு கேட்டாள் கீதா.

“ஒன்னும் இல்லடி நாளைக்கு என்னோட ப்ரண்ட் ஒருத்தருக்கு பர்த்டே அதான் என்ன பண்றதுன்னு தெரியல.. “

“ஏ.. யாருடி அது நீ அடிக்கடி என்கிட்ட சொல்லிட்டே இருப்பியே அந்த ப்ரண்டா…? “
“ஆமா.. ஆனால் எனக்கு எதும் வாங்கனும்னு தோணல விஷ் பண்ணனும்னு தோணல நான் அவங்கள விஷ் பண்ணாம பழி வாங்களாம்னு இருக்கேன்… முன்னாடி நான் இப்படி இல்ல தெரியுமா எப்படா அவங்க பர்த்டே வரும்னு காத்துட்டு இருப்பேன் எந்த கடையில் நல்ல கிரிட்டிங்க்ஸ் கிடைக்கும்னு தேடி பார்த்து வாங்கி அதில் பக்கம் பக்கமா மனசுல தோன்றது எல்லாம் எழுதுவேன் … 12 மணி வரைக்கும் முழிச்சு இருந்து வாழ்த்து சொல்வேன் அது ஒரு கனா காலம்.. ” அவள் சொல்லும் போதே ஒரு மின்னல்  தெரிந்தது அவள் கண்களில்.

“ஏ…. நிறுத்து.. நிறுத்து… மறுபடியும் அவங்க புராணத்தை பாடாதே என் காது கேட்டு கேட்டு செவிடா போச்சு… நீ 12 மணி வரைக்கும் காத்திருந்து வாழ்த்து சொன்னியே அதுக்கு அவங்க என்ன சொல்வாங்க… தேங்க்ஸ்னு ஒரு வார்த்தை சொல்லியிருப்பாங்க அதானே?”

“ஏ… லூசு நாம வாழ்த்து சொன்னால் தேங்க்ஸ்னுதான் சொல்ல முடியும் வேறென்ன சொல்வாங்க” நக்கலாக சிரித்தபடி சொன்னாள் நீலா.

“சரி உன்னோட பர்த்டே அவங்களுக்கு தெரியுமா? என்னைக்காவது உனக்கு 12மணிக்கு வாழ்த்து சொல்லி இருக்காங்களா?

“அவங்களுக்கு என்னோட பர்த்டே தெரியாது 12மணிக்கு வாழ்த்து சொன்னதும் இல்ல ஆனால் எனக்குத் தெரிஞ்ச இன்னொரு ப்ரண்ட்கிட்ட கேட்டு அவங்க ஞாபகப்படுத்தி எனக்கு வாழ்த்து சொல்லி இருக்காங்க அப்ப என் மனசு ரொம்ப வலிக்கும் அப்புறம் என் மனச நானே தேத்திக்குவேன் அவங்களுக்கு பல வேலைகள் இருக்கு நம்மலோட பிறந்த நாளெல்லாம் அவங்க ஞாபகம் வச்சுக்க முடியுமான்னு நினைச்சுக்குவேன், அதோட எதையும் எதிர்பார்ப்பது உண்மையான அன்பா இருக்க முடியாது நல்ல நட்பாகவும் இருக்க முடியாது அவங்க என் கூட பேசுறதையே நான் பெரிசா நினைக்கிறேன் இதுவே எனக்கும் போதும்பா..” என்றாள் தொண்டை அடைக்க.

“நான் ஒன்னு கேட்கட்டா… அவங்களோட சொந்தகாரங்களோ இல்ல  ப்ரண்டோ இருந்தால் அவங்களோட பிறந்த நாளை மறப்பாங்களா சொல்லு இல்லைதானே நீதான் அவங்களை ப்ரண்டா நினைச்சு உருகிறே அவங்க உன்னை சரியான கேனைன்னு நினைச்சு இருப்பாங்க ஒரு லூசு நம்மகிட்ட வசமா மாட்டிக்கிட்டு நாம வச்சு செய்வோம்னு சொல்லி சிரிச்சாலும் ஆச்சிரியப்படுறதுக்கு இல்ல நான் எவ்வளவோ சொல்லிட்டேன் நீ திறந்தவே மாட்டே என்னைக்காவது ஒரு நாள் நீ அழத்தான் போறே பாரு… இப்ப உனக்குத் தெரியாது…” கோபத்தில் பொரிந்து தள்ளினாள்.

“சும்மா கண்டபடி உளறாதே அவங்களை பத்தி உனக்கு என்ன தெரியும்.. அவங்க என் மேல எந்தளவுக்கு அன்பு வைச்சுருக்காங்கன்னு எனக்குத் தெரியாது அவங்க என்னை எப்படி நினைக்கிறாங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனால் நான் அவங்களை என் அம்மாவுக்கும் மேல நினைக்கிறேன் அவங்களுக்கு குழந்தை இல்லை அதுமட்டுமல்ல அவங்க மனசுக்குள்ள நிறைய மன வேதனை இருக்கு அதை நான் உணர்ந்து இருக்கேன் அவங்க மனசுல என்ன வலி இருக்குன்னு எனக்குத் தெரியும் அதனால்தான் என்னையும் அறியாமல் எம்மனசு அவங்களைத் தேடிப் போகுது எம்மனசு என்னை ஏமாற்றாது. என்னோட அன்பு, பாசம், நட்பு எல்லாமே நிஜம் அவங்க என்னை எப்படி வேணா நினைச்சுட்டு போகட்டும் எனக்கு கவலை இல்லை… “

“ஏய்… இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னே அவங்களுக்கு வாழ்த்து சொல்ல மாட்டேன் பழி வாங்கப்போறேன்னு சொன்னேன்.  என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது லூசு மாதிரி தெரியுதா..? ” கோவமாக முறைத்தாள்.

“ம்.. சொன்னேன் தான் ஆனால் மனசு கேக்குது இல்லையே… என்ன பண்றது என்னவோ தெரியல அவங்க மேல எனக்கு கோவம் வரும் ஆனால் அது கொஞ்ச நேரம்தான் அப்புறம் காணாமல் போயிடுது தெரியும்மா.. அவங்க பேசுறதை நீ கேட்டு இருக்குறீயா அப்படி ஒரு வாய்ஸ், அவங்க என்ன அழகு தெரியும்மா…  இவள் சொல்லி முடிப்பதற்குள்…

கீதா தன் இரண்டு காதையும் பொத்திக்கிட்டு கண்களை இருக்கி மூடிகிட்டு “அய்யோ….. ராமா…. நிறுத்துறீயா என்னால தாங்க முடியல ஏன்டி இப்படி அவங்க மேல  பைத்தியமா இருக்கிற… உன்னை நினைச்சா பாவமாவும் இருக்கு கோவமா இருக்கு சரி நான் போறேன் எனக்கு தூக்கம் வருது..”

“ப்ளிஸ்டி.. எனக்கு ஒரு ஐடியா சொல்லிட்டு தூங்குடி…”

“ஒகே… ஒரு குட் ஐடியா சொல்றேன் நல்லா கேட்டுக்க, நைட் பன்னிரெண்டு மணிக்கு கால் பண்ணு ஹேப்பி பர்த்டே ன்னு விஷ் பண்ணிட்டு அப்படியே கிஸ் கொடுத்திரு அதை விட சிறந்த பரிசு இந்த உலகத்தில் எதுவுமே இல்ல தெரியுமா? நெஞ்சில் ஜில்ஜில்… காதில் தில்தில்… கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் … அப்படி இருக்கும்.. ராகமாக பாடியே காட்டினாள் கீதா.

“ஏய்… ச்சீ.. அவங்களுக்கு போய் நான் எப்படி அவங்க என்ன நினைப்பாங்களோ…” லேசாக வெட்கப்பட்டு இழுத்தாள்

“என்னடி ச்சீ..னு சொல்றே உனக்கு நிஜமாவே அப்படி ஆசை இல்லன்னு சொல்லு பார்க்கலாம் உண்மையான அன்பு இருந்தா யாரும் யாருக்கும் கொடுக்கலாம் ஏன் நம்ம அம்மா, அக்கா, தங்கச்சிக்கு கொடுக்கிறது இல்லையா..? ஏன் நான் கூடதான் உனக்கு நிறைய கொடுத்து இருக்கேன் அதென்ன பெரிய தப்பா.. அன்புடி அன்பு… நீ நல்லா வாங்கிக்க ஆனால் இதை மட்டும் யாருக்கும் திருப்பி கொடுத்துறாத.. ரோபோ.. ரோபோ…” பல்லை கடித்தபடி பேசினாள் கீதா.

“நீ சொல்ற ஐடியா நல்லாதான் இருக்கு ஆனா எனக்கு பயமா இருக்கே…”

“அப்ப மூடிகிட்டு தூங்கு இல்ல என்னையாவது தூங்க விடுடீ… உனக்கு அவங்க ப்ரண்ட் தானே லவ்வர் இல்லையே ச்சே… காதலிக்கிறவங்க கூட ப்ரண்ட்ஷிப் வைச்சுக்கிட்டாதான் நிம்மதியா தூங்க முடியாதுன்னு நினைச்சேன் இப்பதான்டி புரியுது நல்ல ப்ரண்ட்ஷிப் இருக்கிறவங்கிட்டயும் தூங்க முடியாதுன்னு…”

“இதுவும் ஒருவகையில் லவ் தான் ஆனால் இது அதுல்ல, ஒரு அம்மா தன் பிள்ளை மேல வைக்கிற பாசம் ஒரு அக்கறை, அக்கா தங்கச்சிங்களுக்குள்ள இருக்கிற குறும்பு, சண்டை, கோபம் இப்படி எல்லா கலந்து இருக்கிற ஒரு உறவு அதான் நட்பு. என்னோட அன்பு அப்படிப்பட்டது கல்கி படத்துல வர்ற கீதாவும் கல்கியும் மாதிரி அந்த படம் எப்ப பார்த்தாலும் எனக்கு அப்படிதான் தோணும் கீதா…”

“நான் ஒன்னு சொல்லவா நீலா.. உன்னைய பார்த்தா எனக்கு பொறாமையா இருக்குத் தெரியுமா… நீ அவங்க மேல எவ்வளவு அன்பு வைச்சுருக்க ஆனால் அது அவங்களுக்கு தெரியாது நீ எத்தனையோ தடவை அதை காட்டி இருக்க ஆனால் அவங்க அதை உணர்ந்த மாதிரி தெரியல,  அவங்க சாதாரணமா இருக்காங்க நீ தான் எப்ப பார்த்தாலும் அவங்களையே நினைச்சு கவலைப்படுறே.. வருத்தப்படுறே… ஆனால் அவங்க ஒரு தடவையாவது உன்னை நினைச்சு கவலைப்பட்டு இருப்பாங்களான்னு எனக்குத் தெரியல கவலைப்பட்ட மாதிரியும் தெரியல,  உண்மையிலே உன்னை மாதிரி ஒரு ப்ரண்ட் கிடைக்க அவங்க கொடுத்து வைச்சுருக்கனும் நாங்க உன் மீது வைச்சுருக்கிற அன்பு எப்படி உனக்குத் தெரியலையோ அதே மாதிரி நீ அவங்க மேல வைச்சுருக்க அன்பு  அவங்களுக்கும் தெரியலன்னு நினைக்கிறேன், நீ அவங்களையே நினைச்சுட்டு இருந்தாலும் நாங்க உன்னைதான் நினைச்சுட்டு இருக்கோங்ம்கிறதை மறந்துறாதே…” நா தழுதழுக்க சொன்னாள்.

“ச்சீ… என்னடி நீ இப்படியெல்லாம் சொல்றே நீங்க என் மேல எவ்வளவு அன்பு வைச்சு இருக்குறீங்கன்னு எனக்குத் தெரியும் ஆனால் அவங்க மேல கொஞ்சம் கூடுதலா வைச்சுட்டேன் அவ்வளவுதான் இதுக்கு காரணம் கேட்டா எனக்கு சொல்லத் தெரியாது பூர்வ ஜென்மத்தில் நான் ஏதோ ஒருவகையில் கடன் பட்டுருக்கேன் போல அதான் இப்படி. அவங்களுக்கு என் மேல அன்பு இ்லலன்னு நினைக்கிறீயா அவங்களுக்கு அதை எப்படி காட்டுறதுன்னு தெரியல ஆனால் இருக்கு அதை நான் உணர்ந்து இருக்கேன். உனக்கு இருக்கிற அதே சந்தேகம் எனக்கும் இருக்கு ஆனால் என் மனசு அவங்களை நோக்கிதானே போகுது  அப்ப அவங்க மனசுல நான் இருக்கேன்  அதான் என்னை ஏதோ ஒன்று அவங்க பக்கம் இழுக்குது. வெளியே சொன்னாதான் அன்பா… மனசுல நினைக்கிறதுதான் உண்மையான அன்பு, சில பேர் அதை வெளியே கொட்டுறாங்க சில பேர் உள்ளுக்குள்ளேயே வைச்சுக்கிறாங்க இவங்க இப்படிதான்.

உனக்குத் தெரியுமா அவங்க எதைப்பற்றியும் என்கிட்ட மறைச்சது இல்ல எல்லாத்தையும் ஒன்னுவிடாம சொல்லி இருக்காங்க ஆனால் நான்தான் எதையும் சொன்னதே இல்ல காலையில் எழுந்ததில் இருந்து நைட் தூங்குற வரைக்கும் தினமும் நடக்கிற விஷயங்களை என் கூட ஷேர் பண்ணிப்பாங்க மனசு விட்டு பேசி இருக்காங்க அவங்க அம்மா அப்பா, கணவருக்கு பிறகு நான்தான்னு ஒருநாள் என்கிட்ட சொல்லி இருக்காங்க இதைவிட வேறென்ன வேணும் சொல்லு.. வழிந்த கண்ணீரை துடைத்தபடி சொன்னாள் நீலா.

“ஸாரிடி… நீ எவ்வளவு சொன்னாலும் ஏனோ என் மனசு நம்ப மறுக்குது சரி ரொம்ப பீல் பண்ணாம தூங்கு…” என்றபடி பெட்ஷீட்டை இழுத்து மூடிக்கொண்டாளே தவிர அவள் கண்களிலும் சில கண்ணீர் துளிகள் எட்டி பார்க்க தான் செய்தது அதை மறைக்கவே அவள் அப்படி செய்ய வேண்டியதாகிவிட்டது கீதா வழிந்த கண்ணீரை கூட துடைக்காமல் அப்படியே தூங்கிப்போனாள்.  நீலா வெகு நேரம் வரை தூங்காமல் இருந்துவிட்டு ஒரு வழியாக அவளும் தூங்கினாள்.

நீலாவும் கீதாவும் நல்ல ப்ரண்ட்ஸ் இருவரும் சென்னையில் வேலை பார்க்கும் போது பழக்கம் நட்பாகி இப்ப ஒரு வீடு எடுத்து தங்கி இருக்கிறார்கள். இருவரும் ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறார்கள். நீலாவுக்கு கடல் கடந்து ஒரு நட்பு கிடைத்தது அவர் ஒரு பெரிய எழுந்தாளர் பல விருதுக்கு சொந்தக்காரர், பாடலாசிரியரும் கூட புகழின் உச்சத்தில் இருப்பவர் அவரின் படைப்புகள் பிடித்துப்போய் அடிக்கடி விமர்சனம் எழுத தொடங்கி  அது கடிதமாக மாறி பிறகு நட்பாக வளரத்தொடங்கியது. எல்லா விஷயங்களையும் மனம் விட்டு பேசுற அளவு நெருக்கமான நட்பாகி போனது. தினமும் வாட்ஸ்அப் ல இருவரின் தூரத்தையும் அருகருகே வைக்குது நிறைய அன்பு, கொஞ்சம் கோபம், கொஞ்சம் குறும்பு,  சின்னதா ஒரு சண்டைன்னு தினமும் நாட்களை நகர்ந்து போகிறது.

மறுநாள் காலை ஆறுமணி கிச்சனில் ரவா கேசரி நெய் வாசத்தோடு கமகமத்தது.. இன்னொரு பக்கம் இட்லியும் அதுக்கு சுவையான சாம்பாரும் ரெடியா இருந்தது. நீலா கேசரியை அடிபிடிக்காமல் லாவகமாக கிண்டிக்கொண்டிருந்தாள். கீதா பாத்ரூமில் இருந்து வந்தவள் “ஏய்… என்னடி சமையல் இன்னைக்கு தூக்கலா இருக்கு.. ஓ… இன்னைக்கு உன் ப்ரண்ட் பர்த்டே இல்ல.. ம்.. உனக்கு கல்யாணம் பண்ணி நீ இப்ப உன் ஹஸ்பன்ட்டுக்கு இந்த மாதிரி செய்திருந்த இந்நேரம் இங்கே என்னன்னவோ நடந்திருக்கும் நீ மிஸ் பண்ணிட்ட ஆனா இது உன் ப்ரண்ட்க்கு தெரிஞ்சாலும் ஒன்னும் ஆகப்போறது இல்ல, பர்ஸ்ட் அம்மாகிட்ட சொல்லி உனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்க்க சொல்லனும் கீதா சொல்லி முடிப்பதற்குள்…

“ஏய்… வாலு காலையிலே வந்துட்டியா என்னை வம்பு இழுக்கிறதுக்கு இப்ப உன்னை யாரு இங்க கூப்பிட்டாங்க போ… அந்த பக்கம் என்னை டிஸ்ரப் பண்ணமா போறீயா..”

“ஏய்… ரோபோ ஒன்னும் சொல்ல விடமாட்டியே நானா எங்க எழுந்தேன் நீ செய்யுற கேசரி வாசம் என்னை எழுப்பி விட்டுருச்சு.. மூஞ்ச பாரு சிடுசிடுன்னு வெவ்வவ்வே…” பழித்துக்காட்டினாள்.

“சரி போய் தொலை அந்தப்பக்கம் முதல்ல உன்னை தள்ளிவிடனும் எவன் மாட்டப்போறானோ தெரியல.. மாட்டுனவன் செத்தான்…”

“சரி..சரி.. ரொம்ப பேசாத மதியம் என்ன லன்ச்..?”

“ம்… சாம்பார், ரசம், முட்டைகோஸ் பொரியல், உருளைக்கிழங்கு பட்டானி மசாலா.. போதுமா..?”

“என்னது.. வெஜ்ஜா? இன்னைக்கு நான்வெஜ் இல்லையா? ” முகத்தை சுழித்தாள்

“இன்னைக்கு சனிக்கிழமை நான்வெஜ் சாப்பிடமாட்டேன்னு உனக்குத்தெரியாதா..? “

“நீ சாப்பிடலன்னா நாங்களும் சாப்பிடக்கூடாதா..? சாமியார் கூட கோழிக்கறியும் குத்துப்பரோட்டவாவும் சாப்பிடுறாங்க இவங்க சனிக்கிழமையாம் சாப்பிட மாட்டாங்களாம் சரி..சரி முறைக்காதே நானும் அதையே சாப்பிட்டுத் தொலைக்கிறேன்..”சலிப்போடு சொன்னாள் கீதா.

“சரி.. சரி .. தள்ளு மதியத்துக்கும் இப்பவே சமைச்சுடுறேன் கோவிலுக்கு போகனும் பன்னிரெண்டு மணிக்கெல்லாம் நடை சாத்திருவாங்க..”

“கோவிலுக்கா… ம்.. உன் ப்ரண்ட்க்கு வாழ்த்து சொல்லிட்டியா..?

“இன்னும் இல்ல, ஈவ்னிங் தான் சொல்லப்போறேன் என்னோட வாழ்த்து வரலையேன்னு ஏமாந்து போகட்டும்..”

“ஹா..ஹா… நக்கலாக சிரித்தபடி சொன்னாள் கீதா அவங்க உன்னோட வாழ்த்தை எதிர்பார்த்துட்டு இருப்பாங்களா..? காலையிலையே காமெடி பண்ணாத எனக்கு சிரிப்பு.. சிரிப்பா வருது.. உன்னோட கற்பனைக்கு அளவே இல்லாம போச்சு… நீ மட்டும்தான் அவங்களுக்கு ப்ரண்ட்டா அவங்களுக்கு எவ்வளவு பேர் இருக்காங்க தெரியுமா அவங்களுக்கு எவ்வளவு பேன்ஸ் இருக்கு இதுல உன்னோட வாழ்த்து வரலன்னு ப்பீல் பண்ணுவாங்களாக்கும் நீ இப்படியே நினைச்சு நினைச்சு கற்பனை உலகத்தில் வாழ்ந்திட்டு இரு.. ஹைய்யோ… இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா சாமி…”

“சரி நீ போய் குளி நான் வர்றதுக்குள்ள ரெடியா இரு நான் சமைச்சு வைச்சுட்டு வர்றேன்…”

“நான் வேணா வந்து ஹெல்ப் பண்ணட்டுமா..?”

நீலா இரண்டு கைகளையும் மேலே தூக்கி “அம்மா தாயே நீ போ ஒரு ஆணியும் நீ புடுங்க வேணாம் நானே எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்..”

“எங்க உன்னைவிட நான் நல்லா சமையல் செஞ்சுருவேணோன்னு பயம் உனக்கு சரி நான் போய் குளிக்கிறேன்… ” என்றபடி அறைக்குள் சென்றாள் கீதா.

நீலா சமையல் எல்லாம் முடித்துவிட்டு வர ஒன்பது மணியானது..  அப்படியே போய் முகத்தை மட்டும் கழுவி விட்டு ட்ரெஸ் மாற்ற அறைக்குள் சென்றாள் சிறிது நேரத்திலே ரெடியாகி வந்தாள் கீதாவும் ரெடியாகி வர நீலா கேட்டாள் “நீ சீக்கிரம் சாப்பிடுறியா.. நாம கோவிலுக்கு போகனும்.. லேட் ஆச்சு..”

“ஏன் நீ சாப்பிடலையா.. “

“நான் கோவிலுக்கு போகும் போது சாப்பிட மாட்டேன்னு உனக்குத் தெரியாதா?”

“ஏன் சாப்பிட்டு போனா சாமி கண்ண குத்திருமா.. யாருடி இவ எப்ப பாரு கிழவி மாதிரி ஏதாவது சொல்லிகிட்டு..”

“உன்னைய நான் சாப்பிட வேண்டான்னு சொல்லல நீ சாப்பிடு..”

“நீ சாப்பிடமா நான் மட்டும் சாப்பிடவா இவ்வளவு செஞ்ச..? இருக்கிறது ரெண்டு பேரு அதுல நான் மட்டும் எப்படி சாப்பிடுறது.”

“அய்யோ நான் வந்து சாப்பிடுறேன் நீ இப்ப சாப்பிடு சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு..”

கீதா டைனிங் டேபிலில் உட்கார்ந்து ப்ளேட்டை எடுத்து வைத்து இரண்டு இ்ட்லியும் சாம்பாரும் கொஞ்சம் கேசரி எடுத்து வைத்து கேசரியை ஒரு வாய் எடுத்து வைத்தாள் “வாவ்… கேசரி சூப்பர் அடுத்து இட்லியை எடுத்து சாம்பாரில் நனைத்து ஒரு வாய் வைத்தாள் ம்ம்ம்….. இது செம்மையாக இருக்கு நீலா  உன் ப்ரண்ட் வாழ்க இல்லன்னா இப்படியொரு டேஸ்ட்டான சாப்பாடு கிடைச்சுருக்காதே… ஆனா இதை சாப்பிட உன் ப்ரண்ட்டுக்கு கொடுத்து வைக்கல பாரு.. அவங்க எங்கேயோ இருக்காங்க அவங்கப் பேரைச் சொல்லி நான் சாப்பிடுறேன்.. நீலா .. நாம சைடு பிசினஸ்சா சின்னதா ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சோம்னு வையி செம்மையா கல்லா கட்டலம்.. ” கண்சிமிட்டி சிரித்தாள்.

“நீ தான் நான் சமைக்கிறது நல்லா இருக்குன்னு புகழ்ற ஆனால் அவங்க என்கிட்ட எப்ப பார்த்தாலும் யாரு சமைச்சது அம்மாவா.. அம்மாவான்னு கேட்குறாங்க நான் தான் சமைப்பேன்னு சொன்ன நீங்க சமைக்கிறீங்களா உங்களுக்கு சமைக்கத் தெரியுமான்னு கிண்டல் பண்றாங்க…”

“அப்படியா சொல்றாங்க வந்து சாப்பிட்டு பார்த்துட்டு சொல்ல சொல்லு அப்புறம்தான் தெரியும் இது  மரண மாசுன்னு..”

“சரி.. விளையாடியது போய் கை கழுவிட்டு வா..”

“இரு வர்றேன்… நல்ல சமைச்சு வைச்சுட்டு இப்படி அவசரப்படுத்துறீயே இது உனக்கே நல்லா இருக்கா சொல்லு தட்டை கழுவாமலே கழுவியது போல் சுத்தமாக துடைத்து விட்டாள்.. பிறகு மெதுவாக எழுந்து தட்டை கழுவி விட்டு கைகளை டவலில் துடைத்தபடி சரி வா போகலாம் என்றாள்.

அவசரமாக கதை இழுத்து பூட்டிவிட்டு அருகில் இருக்கும் அஷ்டலக்ஷமி கோவிலுக்கு இருவரும் சென்றார்கள். கோவில் அவ்வளவாக கூட்டமில்லை ஓடிச் சென்று ஒரு அர்ச்சனை செய்தார்கள் .. பெருமாள் லெட்சுமியோடு அழகாக காட்சி தந்தார். இந்த அஷ்டலக்ஷமி கோவிலில் எட்டு லக்ஷ்மி இருக்கிறது மேலே சுற்றி சுற்றி போகவேண்டும் எங்குமில்லாத ஒரு சிறப்பு இங்குள்ளது. கோவில் கோபுரத்தில் ஏற எங்கும் அனுமதியில்லை ஆனால் இங்கே கோபுரத்தையே சுற்றி வருவது போல் கோவில் கட்டப்பட்டு இருக்கிறது. நடை சாத்தும் நேரம் நெருங்கியதால் இருவரும் வெளியே வந்தார்கள்.

“அடுத்து என்ன ப்ளான்..? கேட்டாள் கீதா.

“இப்ப நாம ஒரு ஹோட்டலுக்கு போறோம் ஒரு அஞ்சு சாப்பாடு வாங்குறோம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறவங்களா பார்த்து கொடுக்கிறோம் ஓகே…”

நீலாவை வியப்பாக பார்த்தாள் கீதா “இதை நீ சொல்லவே இல்லை இதெல்லாம் எதுக்குப்பா.. சாப்பாடு வாங்கி கொடுக்கிறது நல்ல விஷயம் ஆனா….ல்? மேலே வார்த்தை வராமல் நிறுத்தினாள்.

“இதுலென்ன இருக்கு எப்பவும் அவங்களுக்கு ஏதாவது ஒரு ஹிப்ட் வாங்கி ஒரு வாரத்திற்கு முன்னாடியே கிடைக்கிற மாதிரி செய்திடுவேன் இந்த தடவை அப்படி செய்யாம அந்த காசுக்கு ஒரு அஞ்சு பேருக்கு பசியாத்தலாமேன்னு நினைச்சேன் அந்த அஞ்சு பேருல ஒருத்தராவது அவங்களை வாழ்த்த மாட்டாங்களா.. அதோட நாம எப்பவுமா இவங்களுக்கு செய்யுறோம் எப்போதாவது தானே… சில நேரம் இந்த ரோட்டுல நான் நடந்து போறப்போ ஒவ்வொரு ஹோட்டலுக்கும் முன்னாடி யாராவது ஒரு பிச்சைக்காரங்க உட்கார்ந்து இருப்பாங்க அவங்க பார்வையில ஒரு ஆசை இருக்கும் அவங்களுக்கும் இந்த மாதிரி நல்ல சாப்பிடனும்னு உள்ளுக்குள்ள ஆசை இருக்கும் இல்ல.. அவங்களால நிறைய காசு கொடுத்து வாங்க முடியாது இல்ல அப்ப அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும் … சாப்பிட்டுட்டு வெளிய வர்ற ஒவ்வொருத்தரையும் அவங்க ஏக்கத்தோடு பார்க்கும் போது எத்தனை வலி இருக்கும் அதான் இப்படி… என்னோட பிறந்த நாளா இருந்தாலும் சரி என் ப்ரண்ட் பர்த்டேவா இருந்தாலும் சரி சாப்பாடு வாங்கி கொடுத்துருவேன்.. நீயும் அப்படியே செய் தானத்திலே சிறந்தது அன்னதானம்தான். நம்ம வயிறு சின்னதுதான் ஆனால் அதோட ஆசை ரொம்ப பெருசு அதை திருப்தி படுத்துறதுல இருக்கிற சந்தோஷம் வேர எதிலும் இல்ல… இப்ப சொல்லு நான் செய்தது  தவறா..?

“இல்ல… நீலா நான் என்னவோ நினைச்சேன் ஆனால் ஒருத்தர் மனச புரிஞ்சு அவங்க கஷ்டத்தை உணர்ந்து செய்யுற பாரு இது யாருக்குமே வராது.. உன் கூட ப்ரண்ட்ஷிப் வைச்சுக்கிறதை நினைக்கும் போது உண்மையிலே பெருமையா இருக்கு.. “

“ஏய்.. அதோ பாரு ஒரு ஹோட்டல் ரோட்டை கிராஸ் பண்ணும் அந்த பக்கம் போவோம்”

இருவரும் கடைக்குள் நுழைந்து சாப்பாடு இருக்கா கேட்டாள் நீலா.. இருக்கும்மா ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க நீங்கதான் முதல் போணி காக்காவுக்கு சாதம் வைச்சுட்டு வந்துர்றேன் என்றபடி ஓடினார்.. பிறகு பரபரவென சாதம், சாம்பார், ரசம், பொரியல், அப்பளம் என பார்சல் கட்டி கொடுத்தார் பணத்தைக் கொடுத்துவிட்டு இருவரும் சாலை ஓரங்களை பார்த்தபடி அங்கே படுத்திருக்கும் முதியவர்களுக்கு சாப்பாட்டை கொடுத்தார்கள் அவர்களுக்கு நிறைய சந்தோஷம். இருவருக்கும் ஒரு மன நிறைவு ஏற்பட்டது. பிறகு அப்படியே நடந்து வந்தவர்களின் கண்களில் அழகான மாலைகள் விற்பனை செய்யும் கடைகளை கண்டார்கள்.

“கீதா… அந்த மாலை வாங்களாம்மா… அவங்களுக்கு ஹிப்ட்டா இதையே கொடுத்துறலாம்… “

“சரி வா பார்ப்போம்..” அருகே சென்று மாலைகளை பார்த்தார்கள் எல்லாமே நல்லா இருந்தது.. கடை விற்பனையாளரோ சாப்பிட்டுக்கொண்டு இருந்தார் இந்த மாலை எவ்வளவுங்க.. என்றாள் நீலா.. அவர் சாப்பிடுவதை விட்டுட்டு எழுந்து வந்தார்… அய்யோ நீங்க சாப்பிட்டு வாங்க பரவாயில்லை என்றாள்.

“இல்லம்மா.. நீங்கதான் முதல் போணி காலையில் இருந்து வியாபாரமே இல்லை மழை வேற பெய்யுது…  நான் சாப்பிட்டேன் உங்களுக்கு எது வேணும்மோ எடுத்துக்கோங்க என்றார். கடைசியில் பேரம் பேசி ஒரு வழியாக மூன்று மாலைகளை வாங்கினாள். அவருக்கோ ரொம்ப சந்தோஷம் ப்ரியா இந்த கம்மல்ல ஏதாவது எடுத்துக்கோங்கம்மா.. முதல் போணி… அதான் சொல்றேன் “

“இல்லங்க பரவாயில்ல…”என்றபடி கீதா கையை இழுத்தபடி நகர்ந்தாள்.

“என்னடி அவரே ஓசில தர்றேன்னு சொல்றார் நீ வேண்டாம்னு சொல்றே.. அநியாத்து நல்லவளா இருக்கேடி நீ..”

“பாவம் அவங்க வேற யாருக்காவது விற்றுட்டு போகட்டும் விடு… “

இருவரும் பேசியபடி கொஞ்ச தூரம் வந்திருப்பார்கள் இன்னொரு கடை அதே போன்று இருந்தது.. அதில் சில மாலைகளை பார்த்தார்கள் அதில் ஒன்று கவரவே அந்த ஆரஞ் கலர் மாலை எவ்வளவு..?

“அந்தம்மா.. அது நூத்தென்பதும்மா..”

“என்னங்க விலை அதிகமா சொல்றீங்களே பக்கத்து கடையில இப்பதான் வாங்கிட்டு வர்றோம்..”

“சரி எவ்வளவு தர்றீங்க..”

“நூறு..”

“சரி.. குடுங்க காலையில் இருந்து வியாபரமே இல்ல அதனால தர்றேன்..”

“நூறு ரூபாயை கொடுத்து மாலையை வாங்கினாள்..நீலா”

“இதையும் எடுத்துக்கோங்கம்மா எல்லா சேலைக்கும் போட்டுக்கலாம்..”

” அய்யோ.. காசு இல்லம்மா… இன்னொரு நாள் வாங்கிக்கிறேன்..”

“கையில் என்ன இருக்கோ அதை கொடுங்கம்மா கெஞ்சியது அந்தம்மா..”
வேறு வழியில்லாமல் மேற்கொண்டு ஐம்பது ரூபாயை கொடுத்து அந்த வெள்ளை நிற மாலையை வாங்கினாள்..

“என்ன நீ இத்தனை மாலை வாங்கிட்ட ஏன்டி.. இப்படி காசை செலவு பண்றே…”

“சும்மா.. இருடி அவங்களை பார்த்தியா எவ்வளவு பாவமா இருந்தாங்க இன்னைக்கு வியாபாரம் ஓடலன்னுதான் இந்த விலைக்கு தர்றாங்க இதே இன்னொரு நாள் வந்து கேளு தரமாட்டாங்க இன்னைக்கு அவங்களுக்கு பணம் தேவை அதான் நாம கேட்ட விலைக்கு தர்றாங்க.. பாவம்டி ..அவங்க கஷ்டம் அவங்களுக்கு எல்லா பணத்தையும் இதுல போட்டுட்டு யாராவது வாங்கமாட்டாங்களா இந்த பொருள் விற்காதான்னு ஒவ்வொரு நொடியும் கவலையோட உட்கார்ந்து இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியும்மா… ரோட்டுல போற ஒவ்வொருத்தரையும் அவங்க கண்ணு தன்னிச்சையாவே அழைக்கும் அவுங்க இடத்துல இருந்து யோசிச்சு பாரு… உனக்கே புரியும்… இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என்னோட பரிசு என் ப்ரண்ட்டுக்கு மட்டுமில்ல இவங்களுக்கும்தான்… நாம ஒருத்தரை மட்டும் சந்தோஷப்படுத்தல ஆறேழு பேரை சந்தோஷப்படுத்தி இருக்கோம்.. ஏய்ய்ய்…… எங்கே கையில் அடிச்சுக்கோ… டிஸ்கோ…” வாய்விட்டு சிரித்தாள்.

கீதா ஒன்றுமே சொல்ல முடியாமல் வியப்போடு நடந்து வந்தாள்.. உள்ளுக்குள்ளே நிறைய கேள்வி எழுந்தது இதில் எத்தனை விஷயம் அடங்கியிருக்கு இவ்வளவு நாளா நாம இப்படி யோசித்ததே இல்லையே… சிந்தித்தபடி மவுனமா வந்தாள்,

“ஏய்… சீக்கிரம் வாடி எனக்கு பசிக்குது நீ காலையில சாப்பிட்ட நான் இன்னும் சாப்பிடவே இல்லை..”

” ம்… மேடத்துக்கு இப்பதான் பசி தெரியுதா…?”

“ஆமா வா… ” என்றபடி அவளை இழுத்துக்கொண்டு நடந்தாள் நீலா.

ஒருவழியாக வீடுவந்து சேர்ந்ததும் ட்ரெஸ் மாற்றிக்கொண்டு கை கால் கழுவி விட்டு இருவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்தார்கள் கீதா அவள் ரூமிற்கு சென்றாள். நீலா ரிலாக்ஸ்சாக சோபாவில் வந்து அமர்ந்து போனை எடுத்து ஆன் செய்து வாட்ஸ் அப்பில் ஹேப்பி பர்த்டே டூ யூ ன்னு மெசேஜ் தட்டி விட்டு அடுத்து வாய்ஸ் மெசேஜ் ஒன்றை ஆன் செய்து அன்று தான் செய்தவை எல்லாம் ஒன்று விடாமல் பேசி அனுப்பினாள் நீலா.

சிறிது நேரத்திற்கு பிறகு நீலாவின் ப்ரண்ட்டிடம் இருந்து ரிப்பிளை வந்தது… ப்ளையிங்க கிஸ் ஸ்டிக்கரும்.. நான் செய்ய வேண்டியதெல்லாம் நீங்களே செய்திட்டிங்க எனக்கு உண்மையில் ரொம்ப சந்தோஷம் என்று வாய்ஸ் மெசேஜ் வந்தது.. ஆவலாய் எடுத்து பார்த்தவள் மவுனமாய் சிரித்து விட்டு அந்த ஷோபாவில் மெல்ல சாய்ந்தாள் நீலா..

எங்கே இவள காணும் என்றபடி ஹாலுக்கு வந்தவள் நீலா படுத்திருப்பதை பார்த்து விட்டு அவளை எழுப்பாமல் அருகில் இருந்த போனை எடுத்து மெசேஜ் பார்த்துவிட்டு இந்த ஒற்றை வார்த்தைக்காகவா இவள் காலையில் இருந்து  பம்பரமாக சுற்றினாள் என நினைத்தபடி  அவளையே பார்த்துக்கொண்டு நின்றாள் கீதா…

தாயின் அன்பிற்கு எதிர்ப்பார்ப்பு ஏது..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *