பிணம் தின்னும் காட்டில் பிறிதொரு நிலை காண

நோர்வேயிலிருந்து கொழும்பில் இருக்கும் அக்காவைக் காண, முதன்முறையாக ரவீந்தர் வந்திருந்தான்.
உண்மையில் இது ஒரு விசித்திரமான உறவு பரஸ்பரம் சொல்லிக் கொள்ளும்படியான உறவு அல்ல அது, அதற்கும் மேலே. அதுவும் முகநூல் வழியாக வந்த ஆத்மார்த்த உறவு.
அவனைப் பொறுத்தவரை ஆத்மாவை ஒரு போதும் அவன் அறிந்திருக்கவில்லை. ஆனால் உயிர் இருப்பது ஒரு பொய்யான தகவலாய் தெரியும். சிறகு முளைத்து காற்றிலே பறக்கும் போது. அதுவும் பிரக்ஞையில் எடுபடுவதில்லை. உடலே எல்லாம் என்று நம்புகிற முட்டாள் கூட்டத்தில் அவனும் ஒருவன்.
சங்கவிக்கு அது மனப்பாடமாகவே ஆகி விட்டிருந்தது. எனினும் அவன் உறவை விடவும் முடியவில்லை. எல்லாம் கழன்று ஒற்றை நிழலில் தூங்குவது ஒரு பாவனை அவளுக்கு.
ஊரில் இருந்த போது, ரவீந்தரை நேர்முகமாக அவள் அறிந்ததில்லை. இருவரும் ஒரே ஊர் தான், முத்தமிழ் மன்றத்தில் அவன் பேசும் போது, ஓரிரு சமயங்களில் அவன் பேச்சைக் கேட்டதாக ஞாபகம். அவன் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளன் மட்டுமல்ல கைதேர்ந்த ஒரு மிருதங்க வித்துவானாகவும் அவனை அறிய முடிந்தது. அவன் தாய் நர்ஸாக பணி புரிந்ததும் தெரியும். அவர்கள் குடும்பம் நடுத்தரம் கூட இல்லாமல் வறுமையில் உழலும் கீழ் நிலையில் இருந்ததால், சங்கவிக்கு அவர்களோடு பழகும் சந்தர்ப்பம் கடைசி வரை கிடைக்கவேயில்லை.
பிறகு இருவரும் கிளை பிரிந்து வந்து விட்டார்கள்.
சங்கவி சண்டை காரணமாகவே, இடம்பெயர நேர்ந்தது. ஆனால் அவனோ நோர்வே போக நேர்ந்தது பணக் கடலில் நீந்த அதுவும் சாதாரண நீச்சலல்ல உற்சாக கதியில் ஒரு நீச்சல். பணம் புரட்டுவதற்காக எதையும் இழந்து விடலாம் என்ற நிலையில், தான் அவன் அவனின் அபூர்வ நட்பு அவளுக்கு முகநூல் மூலமே கிடைத்த வரம் இது வரமா சாபமா என்று தெரியவில்லை. ஒரு வகையில் அது வரமாகப்பட்டாலும் கடைசி முடிவில் அதை சாபமாகவே ஏற்கத் துணிந்த மனப் பக்குவம் இப்போது அவளை ஒரு நேர் கோட்டில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது.
முதன் முதலாக அவன் வீட்டிற்கு வரும் போது ஒரு பண்பாடு கருதி அவள் புடவையே கட்டியிருந்தாள். வீட்டிலே அவள் பற்றிக் சட்டை அணிந்தே, பழக்கம். மூத்த மகனும் மருமகளுமாக அவளுக்குத் துணையாக இவளுடனேயே குடியியிருந்தனர் மிகுதி இருவரும் வெளிநாட்டில்.
ரவீந்தர் ஒரு உலகப் புகழ்பெற்ற மிருதங்க வித்வான். மனைவி ஒரு பல் டாக்டர் ஒரேயொரு மகள். அவள் கம்பியூட்டர் என்ஞினியராக படித்துக் கொண்டிருப்பதாக சொல்லியிருந்தான். அன்று முதன்முதலாக அவளைப் பார்க்க வீட்டிற்கு அவன் வந்திருந்தான்.
அவன் வாசல் கடந்து வரும் போது ஒரு கரும் பூதம் தன்னை எதிர் கொள்ள வருவது போல் உனர்ந்து ஒரு கணம் உறைந்து போனாள். இது வெறும் உடல் மாயை என்று படவே சுதாரித்து கொண்டு அவள் அவனை வரவேற்ற விதம் அவன் உள்ளத்தையே நெகிழ வைத்தது. உலகம் சுற்றும் வாலிபன் அவன்.
அவன் உள்ளே வந்து அமர்ந்தவுடன் அவள் கேட்டாள்.
தம்பிக்கு என்ன பிடிக்கும்?
அவன் இதற்கு ஒன்றும் சொல்லாமல், அவளையே, பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு மெளனம், கலைந்து கேட்டான்.
அக்கா நீங்கள் மாறவேயில்லை, ஏன் இப்படி?
அதற்கு அவள் கேட்டாள், என்ன சொல்லுறியள்? தொடர்ந்து அவள் கூறினாள். நான் நானாய்த் தான் இருக்கிறன்.
நான் அதைச் சொல்ல வரேலை. இப்ப உலகம் எவ்வளவோ மாறிப் போச்சு. இப்ப பெட்டையள் சீலையே கட்ட மாட்டினம் அப்ப என்ன போடுறவை?அதைக் கேட்டு விட்டு சிரித்துக் கொண்டே அவன் சொன்னான் அக்கா! இது கூடத் தெரியாதா? எல்லோரும் ஜீன்ஸ் தான் போடினம் மேலே ரீ சேட் போட்டுக் கொண்டால் இன்னும் கவர்ச்சியாய் தெரியும்.
ஓ! உங்கடை வீடியோவில் நானும் தான் பார்த்தேனே, உங்கடை மனைவி அப்படி நிக்கிறதை. அதைக்குற்றம் என்று நான் சொல்ல வரேலை. ஆனால் என்ரை இயல்புக்கு இது தான் பிடிச்சிருக்கு. சரி தம்பி! பேச்சைவிடுவம் சாப்பிடிறியளா?
ஓ! தாராளாமாக என்ன இருக்கு?
இடியப்பம்சொதி உருளைக்கிழங்கு பிரட்டல், சரி பசிக்குது வீட்டுச் சாப்பாட்டிலை, நாக்கே மரத்துப் போச்சு, இப்ப ஒரு பிடிபிடிப்பம் ஆயிற்று.
அவனுக்கு விருந்து படைத்த மகிழ்ச்சியில்நிலை கொள்ளவில்லை அவளுக்கு , எதிரே உண்டு களித்த மகிழ்ச்சியோடு அவனைப் பார்க்க பெருமிதமாக இருந்தது. அது ஒரு கண் கொள்ளாக் காட்சி அவளுக்கு. ஏனென்றால் அவன் மனைவி ராகினி வேலைக்குப் போவதால், ஒரு கிழமைக்கு வேண்டியதை சமைத்து பிரிட்ஜில் வைத்துத் தான் அவர்கள் சாப்பிடுவார்களாம். அவளின் கை விசேஷம், இன்று மாறுதலான ஒரு விருந்து அவனுக்கு.
அப்படி உண்ட களைப்போடு அவனிருக்க அவள் கேட்டாள் ரவி உங்கடை மகள் ஆரணிக்கு இன்னும் படிப்பு முடியேலையா?
எல்லாம் முடிஞ்சுது.
அப்ப வேலைபாக்கிறாவா?
ஓம், ஆனால் இப்ப அவள் எங்களோடு இல்லை.
என்ன சொல்லுறியள்?
ஆம் அக்கா! இதைச் சொல்ல வெட்கப்படேலலை. அவள் புது பிளாட் வாங்கிக் கொண்டு, எங்களை விட்டு, பிரிந்து போய் வெகு காலமாகிறது. நான் எல்லாவற்றையும் மறந்திட்டான். எல்லாம் எங்கடைகாலம்.
இதைக் கேட்டு விட்டு, பெருந் துக்கம் கொண்டு அவள் தனக்குள் அழுது தீர்த்தாள். நீண்ட நேரமாய் அவளுக்கு பேச வரவில்லை. அவனைப் பார்க்க மிகவும் பாவமாக இருந்தது. எப்படி இதை சரி செய்வது என்று அவளுக்குப் புரியவில்லை.
மொட்டையடிக்கப்பட்ட ஒரு அரை வேக்காட்டு சிறுமி போல் அவன் மகளின் முகம் மனத்திரையில் மங்கலாகத் தெரிந்தது.
அப்பா அம்மா என்ற குடும்ப உறவுகளெல்லாம், சிதைந்து போய் , மூளியாகிவிட்ட, ஒரு சமூகப்பிரதிநிதி யாகவல்ல பொறுப்பற்ற ஒரு ஒரு தனி மனிதனாய் அவனைக் கண் கொண்டு பார்க்கவே, மனம் வெறுத்துப் போய் அவள் கேட்டாள்.
என் கண் முன்னால் ஒரு விருட்சமே சரிந்து கிடக்கு. இதை என்னாலை தாங்க முடியேலை. இப்ப நான் கேட்கிறன். பொறுப்புள்ள ஒரு தகப்பனாய் இருந்து, நீங்கள் உங்கள் மகளை வழி நடத்தியிருந்தால் இந்தத் தான்தோன்றித் தனத்தை முளையிலேயே, கிள்ளி எறிந்து விட்டிருக்கலாம் தானே. ஏன் செய்யேலை?
அப்படிக் கேளுங்கோ. நான் என்னத்தை சொல்ல. இப்ப எங்களுக்கு, வாத்தியாரே இந்தப் பிள்ளைகள் தான். வாய் திறந்து எதிர்த்து ஒரு வார்த்தை,பேச ஏலாது. அப்படிப் பேசப் போனால் கொலை தான் விழும்.
அவளுக்கு அதைக் கேட்டு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. கைநிறையய காசு வந்தும் எல்லாம் வெற்றிடம் தான். பிணம் தின்னும் இந்தக் காட்டில் பிறிதொரு நிலை அறிகின்ற பேரறிவு, உள்ளூலகமாய் வாழதெரிந்த அன்பு கூட பட்டமரமாகி பகற்கனவாய் போன பின் இனி எதை நிறுவ எந்த சாம்ராச்சியத்தை நோக்கி, நடை பயிலும் இந்த இருட்டு யுக மனிதர்கள்.
அவர்களில் ஒருவன் போல் அவனைக் காண அன்பையும் மீறி வெறுப்புத் தான் மிஞ்சியது.
![]() |
என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 28, 2025
பார்வையிட்டோர்: 116
