பாவம் அவள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 207 
 
 

முந்திரிகொட்டையாட்டம், பொங்கலை முந்திகொண்டு வந்து நின்றதுபோகி. அந்த பண்டிகையே எரிச்சலாகி, நார்நாராய் கிழித்து கொள்ளும் அளவுக்கு, படுத்தித்தான் வைத்தது அந்த ஊர்

கிழிந்தது கிழியாதது, ஒதுக்கியது ஓரம்போட்டது என, எல்லாவற்றையும் சகட்டுமேனிக்கு எரித்தனர். திண்ணையில்,இருமியபடியே முடங்கி கிடந்த கூழச்சி, மண்டச்சி என்ற இரண் டு கிழங்களை தவிர…

‘அவ்வளவு பெரிய மனசா?’ அப்டியெல்லாம் நினைக்க வேண்டாம்.பாரபட்சமெல்லாம் இல்லை. தீப்பெட்டியில் குச்சி இல்லையாம்

“இதென்ன கன்றாவி” என்று நினைத்ததோ என்னவோமஞ்சள் பூசிக்கொண்ட சூரியன், சொல்லாமல் கொள்ளாமல் போய் ஒளிந்துகொண்டது

விடிந்தும் விடியாமலும் பொழுது புலரும் தருணம்…

குளித்தும் குளிக்காமலும், வாசலுக்கு முன்னால் குனிந்தவாறு, குந்திய கால்களில் அசைந்து கொண்டிருந்தனர் பெண்கள். சிறிது நேரத்திற்கு பிறகு நிமிர்ந்தவர்கள், போட்ட கோலத்தை, ஷும்-இன், ஷும்-அவுட் பார்வையில் அளந்தனர்

வண்ணபொடிகளில் வளைந்தும், நெளிந்தும் நேர்கோடாகவும் போனவை,அவர்களை விட அழகாகவே தெரிந்தது. அந்த சந்தோஷத்தில், ஒரு புன்முறுவல். ஓவியமே ஓவியனை மெருவேற்றியது போல..

ஏனென்றால், கழுத்து காதுகளில், எலிபுழுக்கை அளவுக்கு கூட ஆபரணமின்றி இருந்ததால், அதுவரை அந்த மூஞ்சிகளில்,மூளிஅலங்காரிகள்தான் சப்பனமிட்டு அமர்ந்திருந்தனர்

பழையது கழிய,பஞ்சம் பிழைப்பதற்காக வெளியூர் சென்ற அதே பழசுகளும், பாழாய்போனதுகளும் வெளுத்துக்கட்டிய வேட்டி சட்டைகளுடன் புதியவர்களைப் போல, ஊருக்குள் நுழைந்தனர். பொங்கலுக்கு புகுந்த புதியவை, இவர்களை தவிர எந்த சக்காத்தும் அங்கே கிடையாது.

ஊரின் தென்கிழக்கில், அரண்மனை போன்ற வீடு. உறவுமுறைகள் வந்து சென்றனர். மூத்த மருமகள் செல்லமணி,வராத விருந்தாளி போல் தயங்கி தயங்கி நடந்துபோனாள். நடந்து போனாளோ,ஊர்ந்து போனாளோ தெரியவில்லை.உள்ளே இருந்தாள்{அவ்வளவுதாங்க சொல்ல முடியும்,போட்டு நச்சரிக்காதீங்க}

செல்லம் கொஞ்சுமளவுக்கு நிறமோ, நிறத்திற்கேற்ற தோற்றமோ இல்லைதான். அதற்கு என்ன செய்ய முடியும்? இதற்காகதான், பெயரில் இருக்கும் மணியை,இருமும்போது எச்சில் தெறிக்கும் தொலைவில் வைத்து, கொஞ்சி கொண்டிருந்தது செல்லம்

‘கழுதை அது கெடக்கட்டும்’ என்பது போல, அத்தை என்ற வாஞ்சையான அழைப்பும், பளிச்சென்று வெளியே நீண்ட பற்களும்,மாமியாரின் கவனத்தை ஈர்த்தது.’வாமா’என்று முகம் முழுக்க படர்ந்த சிரிப்புடன், குசலம் விசாரித்தாள்

“நல்லாயிருக்கியாமா, பேரப் புள்ளைங்க எப்புடி இருக்காங்க?”

‘உங்க புண்ணியத்திலே இருக்காங்க அத்தை’ என, கையிடுக்கில் புத்தாடைகள் இருந்த பையை கொடுத்தாள். வம்பு பேசியே பழக்கப்பட்டு போன அவளது வாய், அன்பான விசாரிப்புகளுக்காக, கொஞ்சம் திறந்து மூடியிருக்கலாம். திறக்கவில்லை (‘அதுக்கு வந்த எகத்தாளம்’ !) இதனால் வாயை நொந்தபடியே,பேனும் ஈறும் கதறி அழும் அளவுக்கு, தலையை சொறிந்தாள் செல்லமணி

திடீரென,எதிரே நின்ற சபரீஸ்வரனின் மனைவி ஷீமா,’இந்தாங்க காப்பீ..’ என்று நீட்டிய கையைவிட, குரலை . இரண்டு அடிஸ்கேல் நீளத்துக்கு இழுத்தே கொடுத்தாள். பலநாள் பூட்டி கிடந்த பஞ்சாலையின், புகை போக்கி போன்ற அவளது நாசி துவாரங்களையும், மொங்கானி கொங்கைகளையும் பார்த்த செல்லமணி, கோணவாய் காட்டியவாறு தம்ளரை வாங்கினாள்

‘எனக்கென்ன பொண்டாட்டியா, புள்ளையா’ என, கவலையே இல்லாமல் ஆண்டுகள் கழிந்தன. நாத்தனாரின் மகளுக்கு மகனை மணமுடித்து, உறவை புதுப்பித்துக் கொண்டாள் செல்லமணி. விருந்து விசேஷங்கள் முதல்,குடும்ப புகைபடம் வரை, கடைசி ஓரத்தில் நிறுத்தப்பட்ட ஷீமா, இப்போது, கழிவுக்கூடையில் தள்ள முடியாத குப்பையாகிப் போனாள்(‘அட பாவமே, உடம்பு ஊதிபோனா இப்படியா பண்ணுவாங்க’)

புதுமணப்பெண்ணான ஜெஸ்ஸி, நகரத்தில் குடியேறினாள். ஒட்(டு)டிக் கிடக்காத வாய்க்கு மூடி போடமுடியாத ஷீமா, நிழலே பின் தொடர முடியாத வகையில், ஜெஸ்ஸி வீட்டுக்கு வருவாள்…போவாள்…

பழைய குருடி கதவை திறடி என, ஒரு நாள் வந்தே விட்டாள். அளந்தாள்.. அளந்தாள்.. எண்ணெயில் இட்ட அப்பமே, தோற்றுப்போகுமளவுக்கு..

கழிப்பறையிலிருந்து படுக்கையறை வரை,பார்த்து பழகிப்போன அவளது மண வாழ்க்கையை சொன்னாள். வடிவேலு காமெடிக்கு நிகரான, கணவனின் புருஷ லட்சணத்தை சொல்ல, கூட இருந்த ஜெஸ்ஸிக்கு ஒரே சிரிப்பு. பொறுக்கமுடியாத அளவுக்கு, இரண்டுபேரும் சேர்ந்து அந்த இடத்தில் சிரிப்பை சிந்தி வைத்தார்கள்

ஷீமாவின் வாழ்வில் காமெடி கலந்திருக்க, ஜெஸ்ஸியின் வாழ்க்கையில் வில்லங்கம் குழிபறித்தது. பிறந்த வீட்டிற்கே திரும்பினாள் அவள். திரும்பும் தூரம் அதிகமில்லை என்ற, புத்திசாலிதனமாக கூட இருக்கலாம்.

ஒருநாள் மாமியார் வீட்டிற்கு வந்தாள் ஷீமா. ஜெஸ்ஸியை பார்த்தும் எதிர்ச்சியடையவில்லை. எதிர்பார்த்தது நடந்து விட்டது போல, ஒப்பனைக்கு ஆறுதல் சொன்னாள்

“எப்ப வந்தே ஜெஸ்ஸி”

“எதுவும் சரியாயிலலை. நீங்க சொன்ன மாதிரியே நடந்துக்கலாம்னு வந்துட்டேன்.உங்களுக்கு இப்ப ஓகேதானே “

“நல்லதா போச்சு, இம்சை தீந்ததா நினைச்சுக்கோ, இனி எல்லாம் நல்லபடியா நடக்கும்”(யாருக்கு? உனக்கா?)

‘அடடே ஆறுதலாக’ வெறும் வார்த்தைகளில் பசப்புவதால், அந்த குடும்பம் ஷீமாவை உச்சியில் வைத்து மெச்சியது. வாயுள்ள பிள்ளைக்கு வயிறு இருக்காதா என்ன? ஜெஸ்ஸிக்கு, இதிலிருந்த சென்ட்ரல் நாலேஜால், வயிறு வளர்க்க உதவியாக, மூன்று ஏக்கர் நிலத்தை, ஷீமாவுக்கு பிரிக்காமல் பிரித்து கொடுத்தனர். எஞ்சிய உரிமைகளை விட முடியுமா? அவளே எடுத்துக்கொண்டாள்

’சிவனே’ என இருந்த அண்ணனுக்கு, திருவெற்றியூர் என்ற கிராமத்தில் கடை திறக்க, அந்த குடும்பத்தில் கடன் பெற்றாள். ஆடாதது,அசையாதது எதுவும் அவளுக்கு பிடிக்காது என்பதால், அசையும் சொத்துக்கும் உரிமை கொண்டாடினாள். தண்ணீர் பிடிக்கும் சட்டி பானையிலிருந்து, ஈரம் கசியாத கேடயமாக இருக்கும், விஸ்பர் வரை…

பிரிட்ஜில் வைக்கப்பட்ட காய்கறி, பருப்பு வகைகளை தனது கட்டைப் பைக்குள் தள்ளினாள். அப்போது, அங்கு வந்த வெங்கடேஷ், திடீரென பறித்து கீழே வீசினான். இதை, சுயமரியாதைக்கு கேடு என நினைத்தவள்(‘அடிஆத்தி இப்டியொரு சுயமரியாதையா’)வாக்குவாதத்தை தொடங்கினாள்

இந்த விவகாரம் ஓட்டை, ஓரங்களில் வழிந்துவிடாமல் கணவன், மருமகன். காதுகளுக்க எடுத்து சென்றாள். சும்மா இருப்பவர்களுக்கு இதை வாங்கிக் கொள்ள இடமா இருக்காது. அந்த இருவருக்கும் புருச லட்சணம் இருந்ததோ, இல்லையோ (அது யாருக்கு தெரியும்)ஆண்டவனு க்குத்தான் வெளிச்சம். ஆனால் இந்த பிரச்சினையில், ‘அத்தரிமா ஜோக்கே கத்தரிபிஞ்சே’ என கொதித்தனர். (1கொஞ்சம் குதிததாக கூட தகவல்)

பொழுது சாயும் நேரத்தில்.போதையில் வருபவர்கள், வெங்கடேஷை சன்னம் சன்னமாக அடித்து காயப்படுத்தினர். பாயும் நோயுமாக படுத்தபடுக்கையானான். சில நாட்களில் உயிர் பிரிந்தது.வெங்கடேஷ் இல்லை, பிரேதம் என்ற பெயரில் அவன் உடல் தான் வைக்கப்பட்டிருந்தது. பரிகாரமோ என்னவோ{அந்தமாதிரி தப்பா பண்ணமாட்டாங்க}அவன் சாவுக்கு காரணமான இரண்டு பேரும், பாடையை சுமந்தனர் (கொல்லி தானே வைக்க போகிறார்கள் என்ற, குரூரமாக கூட இருக்கலாம்’)

அடுத்த சில மாதங்களுக்குபிறகு, குடும்பத்தோடு மாமியார் வீட்டுக்கு வந்த ஷீமா,.வாசலில் மகளுடன் பேசிக்கொண்டிருந்தாள்

“அம்மா, அந்த கல்யாணத்துக்கு போனேம்மா, யாருன்னு கேட்டாங்க, நா ஷீமா மகள்ன்னு சொன்னேன். அதுக்கு..நீ காட்டுங்குடியாரு வீடானு நக்கலா பேசி, மூஞ்சை காட்றாங்கம்மா”

“பேசுனா பேசட்டும்டி, அவங்களுக்கு நாம யாருன்னு தெரியலை,’இந்த பன்னண்டரை கிராமத்துலே, நாமதான்டி விழிப்புணர்வா இருக்கவங்க”என, மரித்துப் போய், மாலையுடன் போட்டோவில் தொங்கிய வெங்கடேஷ் படத்தை பார்த்து, முகத்தை நீட்டி காட்டினாள்

மெல்லிய குறுநகையுடன், ‘இப்ப புரியுதும்மா’ என்றாள் மகள்

அப்போது யதேச்சையாக வந்த ஜெஸ்ஸியை, வேலையெல்லாம் முடிஞ்சதா என, உள்ளம் தீயெரிய உதடு பழஞ்சொரிய கவனத்தைதிருப்பினாள் ஷீமா. அப்போது,ஜெஸ்ஸியும் வெறுமனே சேர்ந்து சிரித்தாள்{’இதுகெல்லாம் என்ன சிரிப்பு என கேட்கலாம், நாஞ்சொல்லமாட்டேனே’}

எடுத்ததற்கெல்லாம் சிரித்துகொண்டே இருந்ததால், கடந்துபோன பிரச்சினைகளும், கண்முன் உருவெடுத்து நிற்கும் பிரச்சினைகளின் பூதாகாரத்தையும்,ஜெஸ்ஸியின் உதடுகள் அறியவில்லை

உயிரிழப்பில் சந்தேகம் இருந்தால், ரத்த உறவுகள் நீதிமன்றத்தை நாடலாம் என்பதை அறிந்துவைத்திருந்த, வெங்கடேஷின் அண்ணன்{’அதாங்க மூத்தவனாக பிறந்த முட்டாள்’}வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்தது.

குடும்ப உறுப்பினர்கள் ஒரே இடத்தில் கூடி பேசினார்கள். பரமேஸ்வரன் சிரித்து கொண்டே அலட்சியமாக சொன்னான்.

“இனிமே என்ன செய்ய முடியும்..?

“பரமேசு, நீ எதுக்கும் லாயக்குபடாட்டாலும் எகத்தாளமா சிரிக்காதே, விசாரணையை ஆரம்பிச்சா மாட்டத்தானே வேணும்”

’அது எப்படிங்க நடக்கும்?’

“தலையிலே ஈறு உருவும் போது, பேனும் சேந்து விழுறதில்லையா” இதுமாதிரியே வச்சுக்கோ என சொல்லிய முக்கிய புள்ளி, காபியை குடித்துவிட்டு, மறக்காமல் தம்ளரை வைத்துவிட்டு போனான்{’எப்போதும்மாதிரி அந்த வாயிலை வச்ச கிளாசை, எடுத்துக்கிட்டே போயிருக்கலாம்’}

இந்த வார்த்தையால், ஜெஸ்ஸிக்கு இரவும் பகலாகி போனது.ஒரு தாய்மாமன் மனைவியால், அலைமேல் துரும்பாக்கப்பட்டவள், எதற்கும் துப்புகெட்ட மற்றொரு தாய்மாமன் மனைவியால், அனல் மேல் மெழுகாகிவிட்டாள்

வரதட்சணை என ஒரு ரூபாய் கொடுக்காதவள், வாரிச்சுருட்டிச் செல்வதை,யாரும் ஏற்றுக்கொள்ளவில்லைதான். இதனை புரிந்து கொள்ளும் இங்கிதம இல்லையே என்ற வருத்தம், அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு உண்டு. என்ன செய்வது?

இந்த விடியாமூஞ்சிகள் மத்தியில் ஜெஸ்ஸி என்ன செய்ய முடியும். என்னை படைத்த இறைவா என் கண்ணை திறக்க மாட்டாயா என்று புலம்புகிறாள்

சொந்த புத்தியும் இல்லை, சொல்புத்தியும் இல்லாதவர், அடுத்தவர் யோசனையிலோ, தானே சிந்தித்தோ முடிவுகட்ட முடியாதுதான்

கடலில் தண்ணீருக்கே கரையில்லை என்கிறபோது, ஜெஸ்ஸியின் கண்ணீருக்கு இறைவன் கரை கட்டினால்தான் உண்டு. ஏனென்றால் அவனுக்குதான் உருவமில்லையாம்

பாவம் அவள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *