பாலா




(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஹோலியின் சாயக் குழம்பில் தோய்ந்து, தோழிகள் தூவிய வர்ணப் பொடிகள் நெற்றி, கன்னம், மார்மேடுகளில் கறைபடிய, துரத்தும் சிரிப்புக்கு ஒளிந்து, தன் சிரிப்பு காட்டி, மார்வாரிப் பெண் களவு காட்டுகிறாள். அதுபோல், சட்டென்று கண்ணுக்குப்படாமல் விதைச் சூழ்ந்த பாக்கு, தன்னை நடுவே பதுங்கி, கூரை விளிம்பு காட்டும் ஒளிவு மறைவில் ஒளிச் சிரிப்பில் வீடு பார்வைக்கு எழுந்தது.

குடிசை மோஸ்தரில்-குடிசை அல்ல.
கூரை ஓடுகள் – ஓடுகள் அல்ல. ஓடுபோன்று கட்டான வர்ணம் தீட்டிச் சிமிட்டியில் செதுக்கல்கள், புகைப்போக்கி புகைப்போக்கி அல்ல. ஸ்தூபி உச்சியில், தாமரை இதழ்கள் விரிந்து உயரம் காட்டுகின்றன.
மானேஜர் சற்று என் பின்னால் நின்ற இடத்தில் நின்ற வண்ணம், ஸ்தூபியின் உச்சிமேல் விரித்த இதழ்கள்மேல் பார்வை பதிந்தபடி சிந்திக்கிறார், வேதனை?
“கிருஷ்ணா!”
இருளில் கூட்டுக்கு வழி தேடிக்கொண்டு போகும் ஒரு பருந்து, போகும். வழிக்குத்துணை தன் குரலையே கொடுத்துக் கொள்கிறது.
அசரீரி கேட்டது தானோ என்னவோ, அவர் முகத்தில் சஞ்சலம் படிப்படியாக அடங்குகிறது. முகம் தெளிவடை வதைத் தெள்ளெனக் காணமுடிகிறது.
“அம்பி, நம்மைப் பயமுறுத்துவதே நம் நிழல்கள்தான்! நீ பயப்படாதே -” என் முதுகைத் தட்டுகிறார். என்னுள் எலும்பு கதகதப்பாக உருகுகிறது. அவர் முகத்தில் புன்னகை படர்கிறது.ஆனால் புன்னகையா அது? மார்பில் தழும்பை மூடிமறைக்கும் பதக்கம்போலும் புன்னகை – ஏதோ ஒரு நகை!
“சரி வா, உள்ளே போகலாம்.”
வீட்டைச் சுற்றித் தாழ்வாரம் தாண்டி வாசல். வெளித் தாழ்வாரத்தில், சோபாக்கள் நாற்காலி வகைச் சாமான்கள் மண்டிக் கிடக்கின்றன. அவைகளின் செறிவு, வாசலுக்கு வாசல், ஜன்னலுக்கு ஜன்னல் திரைகள் சேர்ந்து வீட்டிலேயே எப்பவும் ஒரு இருட்டு,மிருது நிழல். இருட்டென்று சொல்ல மனமில்லை.
“பாலா!”
மாடியில், படிக்கட்டின் திருப்பத்தில் ஒரு சிலை. பாற்கடலில் லக்ஷ்மி எழுந்தாள்.
சிவன் விரித்த சடைமேல் ஆகாச கங்கை இறங்கினாள்.
யாக குண்டத்தினின்று கிருஷ்ணை எழுந்தாள்.
இவை கதைகள்.
இது நான் கண்டது.
நெற்றியில் ஜிகினாப் பொட்டு, மாடிச் சுவரும் அடங்கிய குளோப் வெளிச்சத்தில் சுடர் விட்டது. இப்போக்கூட உடல் பரபரக்கிறது. அந்தக் காட்சி நினைவில் எழுகையில்
“நான் ஒரு நாத அதிர்வு.”
இந்த பாஷை என் னுடையது அல்ல. ஆனால் என்னுள் எங்கே ஒளிந்துகொண்டிருந்தது?
ஆனால் இது என்ன?
“பாலா. இந்தப் பையன் இனி நம்மோடு இருக்கப் போகிறான்.”
சிலை இறங்கி வந்தது. தாழம்பூ நிறம். நீலப்புடவை நீல ரவிக்கை, நீல ஜிகினாப் பொட்டு, நீல வளையல்: நாயன பாஷையில், பாலாவுக்கு இன்றைய ராகம் நீலாம்பரி.
எனக்கு மூத்தவள்தான்.
முகத்தில் கடுப்பு இல்லையே அன்றி, அதில் புதுமுகம் கண்ட ஆர்வமோ, ஆர்வம் விடுத்து முகமனோ காண முடியவில்லை.
இன்று மட்டுமல்ல. நான் அங்கு இருந்தவரை, என்றுமே நுட்பமான முகபாவங்கள் அவளிடம் விளையாடவில்லை. உறைந்துபோன செதுக்கலில், எப்போதேனும் கன்னங்களில் லேசான இளக்கம் இல்லை. அதுவும் நான் நினைத்துக் கொண்டதுதானோ என்னவோ? அதுவும் உடனே மருள் கண்டு மறைந்துவிடும்.
(நாடகம் பண்ணுகிறேனா, பண்ணிவிட்டுப் போகிறேன். இல்லையென்று யாருக்கு என்னை ருசுப்படுத்திக்கொள்ள வேண்டும்!)
“அம்பி, உன் பெட்டி, படுக்கை பொருளென்று இருந் தால், கொண்டுவந்துவிடு. என்ன முழிக்கிறாய்? சரி.சரி பரவாயில்லை. நாளைக்கு… ஜவுளிக்கடையில் உனக்கு வேண்டியதை வாங்கித் தைக்கக் கொடு. என் பேரைச் சொல். வில்லை எனக்கு அனுப்பச் சொல்லிவிடு. பாலா என் அறைக்குப் பக்கத்து அறையை இவனுக்குக் காண்பி – உஸ், அப்பாடா…!”
ஒரு சோபாவில் சாய்ந்து உடைகளைக் கழற்ற ஆரம்பிக் கிறார். பனியனுக்சுடியில், பறங்கிக் கொட்டைபோல் இளந் தொந்தி.
மேஜை சாப்பாடு.
மானேஜருக்கு உள்ளங்கையளவுக்கு இரண்டு சிறிய சப்பாத்திகள்.ஏதோ கூட்டு எங்களுக்கு வற்றல் குழம்பு, பருப்புத் துவையல். சுடவைத்த மத்தியான்ன ரஸவண்டல்.
“அம்பி, என் சாப்பாட்டைப் பார்த்து, நீ வெட்கப் படாதே. அதற்கேற்றபடி உன் வயிற்றை நீ குறுக்கிக்கப் பார்க்காதே. வயசுப் பையன் நீ நல்லா சாப்பிடணும். இது என் தலையெழுத்து. சாப்பாட்டு ராமனாயிருந்துதான் பட்டினிச் சாவில் வந்து முடிஞ்சிருக்கு. எனக்கு இனி விமோசனமில்லை.
பாலா எதிரில் அமர்ந்திருக்கிறாள், மோன பீடத்தில் முகத்தில் லேசான புன்னகைகூட இல்லை. நான் இங்கிருந்த வரை அவள் பேசியதாகவே தெரியவில்லை. அல்லது அவள் குரலையேனும் எந்தவிதமாகவும் கேட்டதாகவும் தெரிய வில்லை.
அன்றிரவு தூக்கம் சரியாக இல்லை. புது இடமோ, இவ்வளவு திடீர் சுகங்களுக்குப் பழக்கம் உடையேன் அல்லன் என்றோ, இன்னும் வார்த்தைகள் அவை பயக்கும் ரேகைகள் இமையுள் தம்மை எழுதிக்கொண்டு மறைந்துகொண்டு, மறுபடியும் வரைந்து கொண்டு…
யூனிபாரம். உருப்படியா,உறுதியா. நிச்சயமா, பாங்க் செலவில் இரண்டு ஸெட் வெள்ளை உடைகள். வலிக்கிறதா? மாலையில் அதைக் களைந்ததும், மறுபடியும் அம்பி. (எப்பவுமே அம்பிதான்!) மானேஜர் என்னிடம் காட்டும் தனி உறவின் விளைவாக! என்னைக் காப்பி வாங்கி வா பொட்டலம் வாங்கிவா” இதுபோன்ற காரியங்களை வாங்குவதற்குச் சிவராமன், விசு, காஷியருக்குத் துணிச்சல் இல்லை. யாரும் மணி அடித்து அழைக்கவில்லை. பேரைச் சொல்லியே அழைத்தார்கள். கேட்கப்போனால், அதிகம் அழைப்பதுகூட இல்லை. மானேஜர்கூட மணி தட்டுவ தில்லை.
நீங்கள் ஒருமுறை அழைத்தால் போதும், அனுமன் போலும் பதறி ஓடிவருவேனே. ஆனால் அந்த பாக்கியம் ஒருசமயம்கூட நீங்கள் எனக்குத் தரவில்லை ஸார், உங்க ளுடைய “தோ! தோ!’வுக்கு நாய்க்குட்டியாக இருக்க எனக்கு என்ன ஆசை தெரியுமா சொன்னால் வெட்கம். இது மாதிரியும் ஒரு ஆசை, ஒரு நிலை உண்டா? எனக்கு வேலை மட்டும் நீங்கள் தரவில்லை; என் வேளையையே திருப்பி விட்ட ராமன். அகலிகைக்கடுத்து, உங்கள் கருணையில் கல்லினின்று உயிர் பெற்றவன். ஆனால் ராமசரிதையில் இந்த ஏடுமட்டும் என் நெஞ்சில் புரளும் சுவடி.
இரவு வேளைகளில் பாடப் புத்தகங்களைப் பரப்பிக் கொண்டு, விட்டுப்போன பரீக்ஷைக்குப் படிக்கிறேன்- இல்லை, டப்பா அடிக்கிறேன். அர்த்தம் கேட்டுத் தெரிந்து, புரிந்து, படிக்க நேரமேது? ஸாரே சொல்கிறார். ‘மெய்யான படிப்பு முடிந்த பின் ஆரம்பமாகிறது. நம்முடைய படிப்பு முறை அப்படியிருக்கிறது. பரீக்ஷை தேறுவதுதான் நோக்கம்.
எப்படியும் இந்தப் பரீக்ஷையில் ‘டக்’ அடிக்காமல் தேற வேண்டும்.
“அம்பி படி, படி, இப்போ பூணூலுக்கே காலமில்லை, தெரியுமோன்னோ? அஸால்ட்டாயிருந்துட்டா ஆயுசு முழுக்க ப்யூனாகவே இருக்க தோணிடும்.”
எனக்குப் பயமாயிருக்கிறது – விழுந்து விழுந்து படித் தேன். இரவில்லை, பகலில்லை உடலை, என் சக்தியைப்
பந்தயக் குதிரையாக விரட்டுகிறேன்.
ஒருசமயம் தூக்கம் அழுத்தி, மேசைமேல், விரித்த புத்தகத்தின்மேல் முகம் கவிழ்ந்துவிட்டேன். விழிப்பு வந்த போது, என்மேல் போர்த்தியிருந்தது.
ஸார், நீங்களா?
அல்லது நீயா?
யாரைக் கேட்பது? பதில் எங்கிருந்து வரும்? வருமா? கேள்வி ஒன்றுதான். ஆனால் அதற்கு முகங்கள் ஆயிரம். காவியமே, நீ எங்கெல்லாம் ஒளிந்துகொண்டு, எதிர்பாரா வேளைகளில், பிடிபடாத நிலையிலேயே, கடைசி வரை உன்னைக் காட்டிக்கொள்கிறாய்!
வெள்ளிக்கிழமை. அவர் சோபாவில், அமர்ந்தபடி ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார். நான் ஹாலில் நுழைகையிலேயே, என் கையணைப்பிலிருந்து நழுவிய ஒன்றிரண்டு பார்சல்களைத் தடுக்கப்போய், எல்லாப் பார்சல் களுமே அவர் காலடியில் விழுந்து – நானும் அவர் பாதத்தில் விழுகிறேன்.
“தீர்க்காயுஷ்மான்பவ: அடேடே என்னப்பா இதெல் லாம்? என்ன கைநிறைய காசு நோட்டு எல்லாம்?” அவர் கையில் திணித்து மறுபடியும் நமஸ்கரிக்கிறேன். ‘இன்று சம்பளத்தினம். என் முதல் சம்பளம் ஸார்”
“தீர்க்காயுஷ்மான்பவ: ஒழுங்காய் பாங்கில் ஒரு கணக்கு ஆரம்பித்து, அதில் போட்டு வைத்துக்கொள். நீ எனக்குச் சாப்பாட்டுக்கு ஒண்ணும் தனியாத் தரவேண்டாம்.”
என் விழிகள் தளும்புகின்றன. “ஸார், எல்லாமே உங்களுடையதுதான். நீங்கள் போட்ட பிச்சைதான். நான் உங்கள் அடிமை மாதிரி. எனக்கு அப்பா அம்மா இல்லை’ தேம்பித் தேம்பி அழுகிறேன்.
“உஷ்’ நிமிர்ந்து உட்காருகிறார். வா இப்படி உட்கார் – பரவாயில்லே, ஆபீசில் அங்கே வேஷம் வேறே” முதுகைத் தடவிக்கொடுக்கிறார்.
“இப்போ என்ன நேர்ந்துவிட்டது? நீ இப்போ சொன்ன தெல்லாம் பெருமையாயிருக்கிறது. இந்தக் காலத்தில் பெற்ற பிள்ளைகூட சொல்லமாட்டேன்கிறான். புஷ்பம், சந்தனம், ரவிக்கைத் துண்டு அமர்க்களமாயிருக்கே! ஓஹோஹோ நெய் ஹல்வா – ஒரு துண்டு இப்படித் தள்ளு – பாலாவுக்குத் தெரிய வேண்டாம். தெரிந்தால் இரண்டு பேரையும் கிழித்து மாலையாகப் போட்டுக்கொண்டு விடுவாள்!”
என் பின்னால் நிழல் அரவம் கேட்டு (?) திரும்புகிறேன். என் பின்னால் மார்மேல் கை கட்டிக்கொண்டு நிற்கிறாள். அவள் புருவங்கள் மின்னல் கொடுக்குகள்போல் நெரிகின்றன. காளியாக மாறிவிடுவாளோ? முகம் தழல் வீசுகிறது.
எப்பவுமே அவளைக் கண்டால் ஒரு பயமாய் தானிருக் கிறது. ஏதோ ஒரு அணுகாத் தன்மை அவளைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. அல்லது ஆமை ஓடுபோல் அவள் அதைச் சுமந்துகொண்டிருக்கிறாளோ? ராவணன் தன் கூந்தலைத் தீண்டியதால், தன் கையே வாளாக மாறி அதை வெட்டி யெறிந்து அக்னிப்ரவேசம் செய்த வேதவதி போல-
நல்லவேளை ஒன்றும் நேரவில்லை. படிப்படியாக நெற்றி யில் மூட்டம் அடங்குகிறது.
உஸ்-எனக்கு நெற்றி கசகசத்திருக்கிறது.
நெஞ்சு முள்ளில் ஏதோ சொல் தாண்டி இடறுகிறது. இங்கு நான் வந்து எத்தனை நாளானாலும் சரி, இங்கு என்னவோ, எதுவோ எங்கோ சரியாயில்லை. விளக்கம் கேட்க எனக்கு தைரியம் இல்லையே! அது ஒரு விஷயத்தில் மட்டும் ஏதோ கதவடைப்பு உணர்கிறேன்.பயமாயிருக் கிறது. என்ன பயம்? ஏதோ பயம்.
“தொந்தி என்று பார்க்கிறாயா அம்பி?” மானேஜர் தடவிக்கொடுக்கிறார். இதனுள் வைத்தியனுக்குத் தெரியாததெல்லாம் இருக்கிறது. கண்ணாடித் துண்டு- நெருஞ்சி முள் – திரியெரிந்து கொண்டிருக்கும் பாம், என் றைக்கு வெடிக்கப் போகிறதோ?”
மனிதன் சிரிக்கிறான், பயமாயிருக்கிறது.
பாலா:
என்னிலும் மூத்தவள்.
நிச்சயம் மூணு நாலு வயதேனும் மூத்தவள்.
மானேஜருடன் Godown Inspectionனுக்குப் போகிறேன்.
கிடங்கு சோதனை என்று அப்பட்ட மொழி பெயர்ப்பு ஆனாலும், இந்த அடைமொழியில் பொதுவாக வங்கியில் கடன் வாங்கியவர்களின் பலவிதமான அடமானங்களின், சரக்குகளை மானேஜர் மாதம் ஒருமுறையேனும் நேர்முகமாக கண்காணிப்பது அடங்கும். அடமான சரக்குகள் எல்லாமே வங்கியின் பூட்டுச் சாவியின் பத்திரத்துள் அடங்கா அடங்க இயலாது.
தவிர, விவசாயக் கடன், பயிர் செய்ய, கிணறு வெட்ட, ஏற்கனவே இருக்கும் கிணறு ஆழப்படுத்த, பம்பு செட்டுகள் வாங்க, காற்றில் ஆடிக்கொண்டு அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்கதிர்மேல், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். பாடம் சொல்கையிலேயே பாடம் சொல்லிக் கொள்கிறேன்.
இதற்கெல்லாம் தனித் தனி இப்படி இப்படி என வங்கியில் விதிப் புத்தகம் இருக்கிறது. ஆனால் நடைமுறைக் கும் விதிக்கும் சம்பந்தமில்லை. எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்.
‘கை சுத்தமாய் விரல் வழி வழியாமல், பார்த்துக்கொள். தலை நிமிர்ந்து நடக்கிற மாதிரி பார்த்துக்கொள். மிச்சம் முன்னே பின்னே இருந்தால் அக்கறை இல்லை” (மானேஜர்)
டாக்ஸி வங்கி வாசலில் நின்றது.
‘அம்பி நீயும் ஏறு. வழியில் மண்டையைப் போட்டேனா னால் தானாக விழுந்தோ, கடன்காரன் அடிச்சோ வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்க்க வேண்டாமா? இல்லை முதல் அடி விழுந்ததுமே டிரைவருடன் நீயும் சேர்ந்து கம்பி நீட்டி விடுவியா? என்ன முழிக்கிறாய்? நடக்காததைச் சொல் றேனா, நடக்கக்கூடாதா இதெல்லாம்? சரி சரி, அந்த, வெற்றிலை செல்லத்தை மறக்காமல் காரில் எடுத்து வை.’
மானேஜர் ரொம்பவும் குதப்புகிறார். ரொம்பவும் புகையிலை போடுகிறார். தஞ்சாவூர் ஸைட் அப்பா! தாய் வழியில் மலையாளம் கலப்பு கேட்கணுமா?
நல்ல சிமிட்டி ரோடு. டாக்ஸி வெண்ணெய் போல் வழுக்கிக்கொண்டு போகிறது. ரோடு வளைவில் ஒரு காத்து மேடு. பழுத்த பொற்கதிர்களைப் போர் அடித்தாகிறது. பிற்பகல் மூன்று மணி வெய்யிலில் ஒரு கறுப்பு மேகத்துக்குத் தங்கவிளிம்பு கட்டியிருக்கிறது. தலைக்குமேல் உயர தூக்கிய முறங்களினின்று நெல் ஒரே சீராக அலைசாய்ந்து, முறத் துக்கும் தரைக்குமிடையே, பிற்பகலில் வெய்யிலில் ஒரு பொன் திரை மின்னிப் மின்னிப் படர்ந்து ஆடுகையில் நெஞ்சை என்னவோ பண்ணுகிறது.
அன்று அவள் கூந்தலை வாரி முடிக்கையில் அகஸ்மாத் தாகப் பார்க்க நேர்ந்தது. சீப்பு தலையின் நடு வகிடினின்று உழுதுகொண்டே கீழிறங்கும் ஒவ்வொரு தடவையும் அதற்கு ஒரு பிரயாணம். கை அலுத்துவிட்டாற்போல் கூந்தலைச் சட்டென முறுக்கிச் சுற்றி முடிந்து, நுனியை வெளி வாங் கியதும் பட்சி அவசரமாகத் தன் கூட்டுக்குள் நுழைந்தாற் போல் தோன்றிற்று.
பற்களிடையே கொண்டை ஊசி கூந்தலை அள்ளிக் கொண்டையிட உயரத் தூக்கிய கைகள் அக்குளில் ரவிக்கைக்குமேல் வேர்வைத் திட்டு.
-அச்சமயம் நான் நேர்முகமாக இருந்திருப்பின் சிற்பத்தின் சீற்றத்தில் என்னவாகியிருப்பேனோ? பஸ்மம் –
நாதமுனி நாயக்கர் தொந்தியில் துணி சரிய கூப்பிய கரங்கள் ஓடிவந்து “ஐயா வாங்க.” வண்டிக் கதவைத் திறக்கிறார். மானேஜர் மெதுவாக இறங்குகிறார். ‘என்ன நாயக்கர்வாள்? செளக்கியம் எப்படி?’
“ஐயா உருவத்தில் ஆண்டவன் கொடுக்கும்போது எனக்குக் குறை ஏது? ஐயா மகனுங்களா? படிப்பு முடிஞ்சு சின்னய்யா வந்திருக்காரா?”
மானேஜர் காதில் போட்டுக்கொண்டதாகத் தெரிய வில்லை. “அம்பி, இந்த மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திண்டிருக்கேன். நீ நாயக்கரோடு போய் அவர் தோண்டின கிணறு இருக்கா பாரு. அவருக்கு யக்ஷணி சக வாசம் உண்டு. கிணறு இடம் மாறிப்போயிடும். இல்லை, இல்லாமலே போயிடும்.
நாயக்கர் கைகூப்புகிறார். “ஐயா சொல்றதைப் பாரேன் -”
ஓய், நீர் ஒரு தடவை கிணறையே தாச்சி போத்தி அதிலிருந்து உம்மை மீட்க, என்னை மீட்டுக்கொள்ள, நான் பட்ட பாட்டில் என் ஆயுசில் அஞ்சு வயசு கிழம் எனக்குக் கூடிப்போச்சு.”
பிரம்மாண்டமான கிணறு, மோட்டார் ஓடிக்கொண் டிருக்கிறது. குபுக் குபுக் குபுக் ஜலம். குழாயின் முகவாயி னின்று நுரை கக்கிக்கொண்டு, துள்ளிக்கொண்டு, சந்தோஷ மாக, ஆனந்தமாகக் கன்றுக்குட்டியாக, நாலு கால் பாவாமல் வாய்க்கால்கள் வழியே பெரும் விஸ்தீரணங்களுக்கு பாய்வதை இன்று முழுக்கப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
“அத்தினியும் பெரிய ஐயாவின் மனசு. பெரிய ஐயாவின் மனசு இதைவிட எவ்வளவோ பெரிசு. எனக்குத் தெரியும். என் பெரிய ஐயா ஒரு அம்சம்.”
நாயக்கர் பக்தியுடன் இளநீர் சீவிக் கொடுக்கிறார். அப்பா! அந்த இளநீரின் லேசான வெண்மையையும் அற்புத மான இனிப்பையும் அடுத்தாற்போல் எடுத்துக்கொடுத்த வுடன் உள்ளங்கையில் சுருளும் அந்த வழுக்கையும் –
“அம்பி வீட்டில் இதைப் பற்றிப் பேச்சே எடுக்காதே. வயிற்று அல்சருக்குக் குடித்தேன் என்று என்னையே ஏமாற்றிக்கொள்கிறேன். ஆமாம், அல்சருக்கு நல்லது கூடவே டயபடிசுக்கு எமனாச்சே! அம்பி,என் வயிற்றில் நவக்ரஹங்கள் ஆராதனை பண்ணாமலே பூரண கும்பத்தில் ஆவாஹனம் ஆகியிருக்கின்றன. என்ன செய்வேன்?”
டாக்ஸி வீடு திரும்பும் வழியில் நாயக்கரின் வேண்டுதல், கெஞ்சுதலுக்கு இணங்கி அவர் வீட்டு வாசலில் நிற்கிறது. ஒரு நிமிசம் உள்ளே வந்து வாசலை மிதிச்சுட்டுப் போங்க! அடுத்த தடவை வரை எனக்குத் தாங்கட்டும்.
கற்றுக்கொள்ளாமலே இவர்கள் எப்படிக் கவிதை பேசுகிறார்கள்?
“ஐயா, வாங்க வாங்க!”- ஒரு ஆட்டுக் கல் நடந்து வருகிறது. “ஐயா குழந்தை. ஐயா வாங்க.”
ரவிக்கை இல்லை. அவள் பூட்டியிருக்கும் நகைகளைப் பார்த்தால், எனக்குக் கழுத்து கடுக்கிறது. தோடு தொங்கும் இழுப்பில் காது எப்போ அறுந்து விழுமோ?
கூடத்தில் கட்டிலில் குவிந்திருந்த துணிகளை அப்புறப் படுத்தி, நாயக்கர் அவசரமாக எங்களுக்கும் இடம் பண்ணுகிறார். என்னையறியாமலே எனக்கு மூக்குத் தண்டு சுருங்குகிறது. கூடம் பூரா அப்படி ஒரு ‘கம்’ நெய்யோடு சேர்ந்த தேங்காய் எண்ணெய்.
இரண்டு தட்டுக்களில் ஆளுக்கு இரண்டு மூன்று தேன் குழலுடன் நாயக்கரின் மனைவி சமையல் அறையிலிருந்து வருகிறாள். சிவக்க எடுத்திருக்கிறாள். என் பிடித்தம் இவளுக்கு எப்படித் தெரிந்தது? மானேஜர் ஊறும் ருசி நீரை உறிஞ்சி விழுங்குகிறார்.
“இதெல்லாம் எனக்கு ஆவாதம்மா. பையனுக்குக் கொடு?”
“வீட்டு விளைச்சலிலேயே சுட்டதுங்க. ஒண்ணும் செய்யாதுங்க. எண்ணெய்கூட நம்மாத்துக் காயில் ஆட்டினதுதான். நெய்யும் கொட்டில் மாடுதான். ஐயா மாரே சந்தோஷமா சாப்பிடுங்க. ஒண்ணும் செய்யாது.”
“அம்பி வீட்டில் வத்தி வைக்காதே. வாழ்க்கையிலே இப்படித்தான். விசுவாமித்திரன் தபஸ். அப்பப்போ வீண்.”
நெஞ்சில் பாலாவின் காலடிச் சத்தம் கேட்கும் பயத்தில் அவசர அவசரமாக விண்டு வாயில் போட்டுக் கொள்கிறார்.
அப்புறம் வெற்றிலை, புகையிலை.
பாவம் மூன்று நாள் அவஸ்தைப்பட்டார்.
ஒருநாள் பாங்குக்குப் போகமுடியவில்லை. பாலாவின் கண்கள் என்மேல் சினம் கக்குகின்றன. நான் என்ன செய்ய? எல்லாரும் தப்பித்துக்கொள்ளும் நேரம் நான் என்ன செய்ய?
இந்த வீட்டில் பூஜை அறை இருக்கிறது. சுவரில் மூன்று புறமும் அடைத்த படங்கள். ரவிவர்மாவின் லட்சுமி, சரஸ்வதி, ராமர், பிறகு, லட்சுமணர், ஆஞ்சனேயர் குரூப். விரித்த சடை, இடுப்பில் கை. முறுக்கிய மீசை. ஆகாசத்தி லிருந்து இறங்கிக்கொண்டிருக்கும் கங்கையைத் தாங்கிக் கொள்ளக் காத்திருக்கும் சிவன்.
கோப கங்கா, கங்கா பாலா?
தோளில் கிளியுடன் மீனாட்சி.
ராமகிருஷ்ணர். விழிகளில் உள்ளுக்கு வாங்கிப்போன பார்வை. லேசாக வாய் திறந்து இரண்டு பற்கள் தெரியும் புன்னகை.
ஆள் உயரம் வெண்கலக் குத்துவிளக்கு.
பூஜா பாத்திரங்கள். பூஜா திரவியங்கள்?
எப்பவும் தேங்கிய அகிற் புகை. (பாலா)
சுவரோரம் சாத்தியிருக்கும் தம்பூர்.
ஆனால் பூஜை செய்ய சாஸ்திரிகள் வரவில்லை. யாரும் செய்யவில்லை.
இத்தனை படங்களுக்கும் நடுநாயகமாய் உயிர் சைஸுக்கு ஒரு கலர் போட்டோ என்லார்ஜ்மெண்ட். கொசுவக் கட்டில், கொழ கொழவெனப் பசு போன்று,
நாற்காலியில் மாமி வீற்றிருக்கிறாள். அடையாளம் விசாரிக்கத் தேவையில்லை. இப்போது கடைந்தெடுத்த பொம்மை பாலா அந்த வயதுக்கு அப்படி ஆகிவிடுவாள்.
நான் யூகிக்கும் வரை தூப தீப உபசாரங்கள் அந்தப் போட்டோவுக்குத்தான்!
பூஜை அறை அநேகமாக மூடித்தான் இருக்கும். திறந் திருக்கும் நேரங்கள் அரிது.
ஒரு சமயம் அந்தப் பக்கமாகச் செல்ல நேர்ந்தபோது பூஜை அறை திறந்திருந்தது. கைகளைக் கோர்த்த வண்ணம் மானேஜர், மாமிக்கெதிரே நிற்கிறார். அடக்கிய அழுகையில் அவர் கீழுதடு பிதுங்கி நடுங்குகிறது. கண்களில் வேதனை. அவர்களுக்குள் அந்தரங்க வேளை. சத்தம் செய்யாமல் பின் வாங்குகிறேன்.
இங்கு என்ன குறைவு?
ஆனால் இழுத்துப் பிடித்து முறுக்கேறிய தந்தி எப்போ அறுந்து போமோ?
அறுந்தால் முகத்தில் எப்படி அடிக்குமோ?
என்னுடைய சேமிப்புக் கணக்கில் தொகை கூடிக் கொண்டே, உயர்ந்துகொண்டே போகிறது. செலவுக்கு வழியில்லை.
மானேஜர் அபத்தியம் பண்ணிக்கொண்டுதானிருக்கிறார்.
“அட போடா, அம்பி!” அலுத்துக்கொள்கிறார். “நான் இனிமேல் நாக்கைக் கட்டி வயிற்றை இழுத்துப் பிடிச்சு என்ன வாழறது?” எனக்கு விழி ததும்புகிறது. ஆனால் நான் என்ன செய்யட்டும்?
“ஏலே அம்பி!” மானேஜர் என் முதுகில் அறைகிறார். அரை சூடாய்த்தான் விழுகிறது. என்ன பரிட்சையில் வெளுத்து வாங்கிட்டயே!”
என்ன படித்தேன், எப்படிப் படித்தேன், பரிட்சைக்குப் போனேன்? இரவு பகல் தெரியாமல் ‘ஏக்தம்’ செஞ்ச.. முடிக்கணும். என்மேல் இத்தனை பிரியமாக இருப்பவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்குத் துரோகம் நேராமல் இருக் கணும். இந்தக் கவலை தெய்வத்தை வேண்டியதும் இதுதான் என்னை மீட்டிருக்கவேண்டும். என் செயல் இதில்- எனக்குக் கனவாக இருக்கிறது திகைப்பாக இருக்கிறது.
“சிவராமா, என்ன மொண மெணக்கிறாய்?”
“நான் என்ன ஸார் கேட்கப் போறேன்? அல்வா வேர்க்கடலை-”
“அல்வா, வேர்க்கடலையா? இந்தச் சமயத்தில் அது போதுமா? நீயே பாலாஜி ஹோட்டலுக்குப் போய், இன்னி ராத்திரி பாங்க் மொட்டை மாடியில் நிலா டின்னர் ஏற்பாடு பண்ணிடு. ஐட்டங்கள் உன் இஷ்டத்துக்கு-‘
சிவராமன் என்னைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய், கழுத்தில் ஒரு குத்து விடுகிறான். ‘இதுயார் செலவு?’
தோளைத் தூக்குகிறேன், “எனக்கென்ன தெரியும்? மானேஜர் சொன்னதைச் செய்-”
“இன்னிக் கதை எப்படி இருந்தாலும் சரி, நாளைக்கு எனக்கு நீ தனியா அல்வா, நெய்க்கடலை வாங்கிக் கொடுத்து டணும் ஆமா, சொல்லிட்டேன்.”
எனக்குச் சிரிப்பு வருகிறது.
மொட்டை மாடியில் மேஜை நாற்காலிகளை ஏற்றியாகி விட்டது.
வாழை இலையில் பிஸிபேளாஹூளி அன்னாவை ஒரு கரண்டி – ஆவி பறக்க- பின்னாலேயே இன்னொரு கரண்டி- அன்னம் ஒரு தினுசான பக்குவமான இளகலில் கரண்டியி லிருந்து திரண்டு விழுகையில் ஆஹா! அதற்குப் பின்னர் வேணது பார்ட்டிகள், -மூஞ்சியில் அடித்தாற்போல் இதற்கும் கூடுதலான ஐட்டங்களுடன் அலுத்துப்போகும் வரை சாப்பிட்டாச்சு. ஆனால் இந்த ருசி பூரா இந்த வேளை யில் ருசிக்கு ஈடாமோ?
அன்றைய சாப்பாட்டு விவரங்கள் இன்னமும் நினைவில் எப்படி தீர்க்கமாக நிலைத்து நிற்கின்றன! இது வெறும் ஒரு சாப்பாட்டு ராமனின் பசித்த வேளையின் பழங்கணக்கு அல்ல சாப்பாடு மூலை வேளை எப்படி பரிணமிக்கிறது என்று சொல்ல முயல்கிறேன்.
மானேஜர் சாம்பார் சாதத்தை ஒரு கவளம் வழித்து வாயில் போட்டுக்கொண்டு சூடு தாங்காமல் தாடைக்குத் தாடை தள்ளித் தவிக்கிறார்.
“ஓய் ராயரே. இத்தனை வித்தையை இத்தனை நாள் எங்கே ஐயா பதுக்கி வெச்சிருந்தீர்?”
“இங்கே எல்லாம் எங்கே சான்ஸ் சுவாமி? வெறும் இட்லி சாம்பார் மிளகாயைத் தீட்டி வெச்ச சட்னியோடு சரி; அப்பாசாமி அய்யரிடம் நேரே கரண்டி அடி வாங்கினவன் தான். ஆனால் வேளை இங்கேதானே எனக்குப் பிழைப்புப் போட்டிருக்கு? கத்த வித்தையை மறக்காம இருக்க, எங்களைப் போலவா அபூர்வமா இருக்கேளே? வெளியூரி லிருந்து அழைப்பு வந்தால் உண்டு. எனக்கு ஒரு குறை. பார்ட்டிக்கு ஐஸ்கிரீம் பண்ணமுடியலியேன்னு.”
“ஏன் பண்றதுதானே? உம் கையை யார் பிடிச்சா?”
“மெஷின் இல்லை, இன்னும் ஒண்ணு ரெண்டு ஐட்டங் கள்கூடத் தேவை. ப்ரிஜ், க்ரைண்டர் – பாங்க் ஒத்தாசை பண்ணினால் ஹோட்டலைக் கொஞ்சம் விரிவுபண்ணுவேன்.”
“அத்தானே பார்த்தேன், ராயர் நேராகவே ப்ரஸன்னம் ஆயிட்டாரேன்னு! எல்லாம் அடி மடிலே கைபோடத்தான்.
ஆனால் மானேஜர் வெறிபிடித்த மாதிரி இன்னும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார், பச்சைச் குழந்தை மாதிரி வயிறு தெரியாமல்
நான் எழுந்து அவர் பின்னால் நின்று அவர் காதண்டை குனிகிறேன். அவர் முழங் கையைத் தொடுகிறேன். ஸாங் கோபத்துடன் என் கையை உதறுகிறார்.
“ஏன் ராயரே எங்கேயோ போயிட்டீர்?
“இதோ இருக்கேன் அண்ணா!’ பதறி ஓடிவருகிறார்.
“அந்தப் பாதாம்கீரை இன்னொரு கப் ஊத்துமேண்’.- ஒழுங்காய்ப் பரிமாற வந்திருக்கேளா இல்லே பண்டங்களை இங்கே கொலுவச்சு அப்படியே எடுத்துண்டு போயிடறதா உத்தேசமா? உமக்கு எல்லாமே பில்தானே? ஊத்தும் ஊத்தும். இங்கே இன்னொரு கப்பும் ஊத்திவச்சிடும். அம்பி என்னைத் தொடாதே. சொல்லிட்டேன். பின்னாலிருந்து என் கழுத்தின் மேல் மூச்சுவிடாதே சொல்லிட்டேன். நான் அப்புறம் கெட்டவனாகிவிடுவேன். என்னைக் கட்டுப்படுத்த நீ யார்?’
“எல்லோரும் என்னையே பார்க்கின்றனர். சொரணை கொண்டாட எனக்குத் தகுதி ஏது? அதுவும் ஸார் உங்க ளிடமா? ஆனால் விழிகள் உறுத்துகின்றனவே?
ஏ. பாலாஜி ராவ், குடி கெடுக்கவே நேரில் வந்தயா? டேய் ஒருநாள் உன்னை மடக்கி வச்சு உதைக்காட்டா எ பேர் அம்பி இல்ல, ஆமாம் என் பேர் என்ன?
நேரம் ரொம்ப ஆகிவிட்டது.பயமாயிருக்கிறது.
அந்தச் சினம் கக்கும் விழிகள்.
அற்புதமாய் இரு பக்கங்களில் அச்சுப்பிடித்தாற் போன்று வளைந்த புருவங்கள். முழுக் கறுப்பு அல்ல. லேசாக சாம்பல் கலந்த விழிகள். நீறு கலந்த அந்தக் கணகணப்புத் தழல்களை நினைக்கையிலேயே பிடரி சிலிர்க்கிறது. அவளை என்றுமே என்னால் நேர்முகமாகப் பார்க்க முடியாது மானேஜருக்கு எப்பவுமே அவளிடம் கிலிதான். இங்கு நான் வந்திருக்கக்கூடாது. மானேஜர் என்னைக் கேடயமாகப் பயன்படுத்தித்தான் என்னைத் தன்னோடு வைத்துக்கொண் டிருக்கிறார். அவர் செய்யும் குற்றங்களுக்கு நான் கூட்டாள். ஒண்டியாக மாட்டிக்கொள்வதைவிட கூட்டாளி சேர்த்துக் கொண்டால் தென்பு அல்லவா?
“வண்டி கொண்டு வரட்டுங்களா?” முத்தையா பயத் துடன் வட்டமிடுகிறான்.
“வேண்டாம். நடக்கிறேன். நடந்தால்தான் உடம்பு வசப்படும். லோட் கூடத்தான் ஐ டோன்ட் கேர்.
“அம்பி உஷார் படுத்தினான். நான் கேட்டுக்கல்லே. ஐ டோன் கேர். என் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அம்பி பெரிய மனிதனாகி விடுவான். இந்தப் பார்ட்டியே, அம்பி யைப் பெரிய மனிதனாக்கத்தானே? அம்பி எங்கே? டேய், எங்கே போயிட்டான்?*
“வீடு வரை வரட்டுங்களா?”
“அதான் அம்பி இருக்கானே பாடி கார்டு ஏ அம்பி!” பக்கத்திலேயே நிற்கிறேன், ஸாருக்கு என்ன? லேசாகத் தள்ளாடுகிறார். என் தோள் மேலே கையை வைத்துக்கொள்கிறார்.
பௌர்ணமி அல்லது அடுத்த நாள். ஒழுகும் நிலவொளி காய்ந்தே, காற்றாகப் படர்ந்துவிடாமல் இருக்க இரவின் மேலேயே நீலப்பொடி தூவியிருப்பதுபோலும் ஒரு விபரீத உணர்வு, நேரம் ரொம்ப ஆகிவிட்டது தலைக்குமேல் போய் விட்டது.
மானேஜர் ஏதேதோ மொண மொணத்துக்கொண்டே நடக்கிறார். ஏதேதோ உறுமல்கள், குமுறல்கள் உருப்படி யாக வார்த்தைகள் ஏதும் புரியவில்லை.
பொட்டென நடுவழியில் நிற்கிறார்.
“அம்பி, அப்போதைக்கு நீ சொன்னதைக் கேட்க வில்லை. வயத்தைப் புரட்டறது.”
பாதை ஓரமாய் ஒதுங்கக்கூடக் குமட்டல் நேரம் கொடுக்கவில்லை. நடுவழியிலேயே வாந்தி அவர் தலையைப் பிடித்துக் கொள்கிறேன். சந்திரன் வானில் முழு ஆதிக்கத்தில் சிரிக்கிறான்.
இங்கே நடுவழியில், நடுநிசியில் வாய் கொப்புளிக்கக் கூடத் தண்ணீருக்கு வழியில்லை.
பாலா கோபம் நியாயமான கோபம்தான் அடிப்படைக் காரணம் நான்தானே! எனக்குப் பார்ட்டி இல்லாவிட்டால் வாழாதா? எதையோ சாக்கிட்டு ஏதோ ஒண்ணு. பாட்டி கதை ஒண்ணு ஞாபகம் வரது. கொலையுண்டவன் யாரோ சந்திரனைச் சாட்சிவைத்துவிட்டுப் போனானாம். இந்தப் பாவத்துக்கோ மழிக்கோ சந்திரனே சாட்சி.
“அம்பி, தலையை ரொம்பச் சுத்தறது. பிரஷர் ஏற்றதுன்னு நினைக்கிறேன்.”
எனக்குத் தொண்டையை அடைத்தது.
“ஸார், நாம் வீட்டுக்கே வந்தாச்சு.”
மோனச் செய்கையில் கையை உயரத் தூக்குகிறார். ஆம், அது என்ன?
நெருப்புப் பிழம்புபோலும் வீட்டுள்ளிருந்து தம்பூரின் உருகோசை புறப்பாடு, புறப்பட்டு எங்கள்மேல் இறங்கு கிறது. இந்த வீட்டுக்கு வந்தது முதல் முதன் முதலாக இப்போதுதான் கேட்கிறேன். மானேஜர் முகத்தில் திகில். இது ஒரு புது திகில்.
வாசற் கதவை மெல்ல அழுத்துகிறேன். தாளிடப்படவில்லை. நாங்கள் வந்தபோது எங்கள் சௌகரியத்துக்கா? தாளிட மறந்துபோனதா? இது எங்களுக்கு நல்ல காலம். ஆனாலும் மறந்தது தவறல்ல. இந்த நேரத்தில் ஏன் இப்படி திறந்தது திறந்தபடி?
மானேஜர் வாஷ்பேஸினில் வாய் கொப்பளித்து கம்பியில் தொங்கிய துவாலையில் முகம் துடைத்துக்கொள் கிறார். முகம் சுண்ணாம்பாய் வெளுத்திருக்கிறது.
நாதக் கனல் அனலடிக்கிறது.
பூஜை அறை வாசலில் இரு கள்ளர்கள் நிற்கிறோம்.
தம்பூராவைத் தழுவியபடி பாலா ஸஹிக்க முடியாத சௌந்தரிய தரிசனம், பாலா நீலம் உடுத்தியிருக்கிறாள். அகிற் புகையில் உருவாய சித்திரமாய் மிளிர்கிறாள். குத்து விளக்கொளியில் தானே ஒரு தழல் கொழுந்தாய் வெ மீட்டலில், என்ன கொந்தளிப்பு இது?
படத்தில் மாமி முகம் மாறுகிறது. கண்ணீரின் பளபளப்பில் கன்னங்கள் ஒளிவீசுகின்றன. எச்சமயம் படத்தி னின்று மகளை அணைத்துக் கொள்வாளோ?
எனக்குக் கொடுத்திருக்கும் அறை அலமாரியில் பல துறைப்பட்ட புத்தகங்கள் அடுக்கியிருக்கின்றன. ஆங்கிலமும் தமிழும் இடறி விழுந்து எழுந்து சமாளித்து, புரிந்தும் புரியா மலும், புரியும் வரையில் நாளடைவில் நானே படித்துச் சிந்திக்குமளவுக்குத் தயாராகிவிட்டேன். மானேஜரின் அருள் என்றுதான் என் எண்ணம். ஏனெனில் அத்தனையிலும் அவர் பெயர், அவர் கையெழுத்து பக்கவாட்டில் சில குறிப்புகள் பிறகு ஒரு நாள் எனக்கு அவர் சொன்ன புத்திமதி: நான் பண்ணின தப்பை நீ செய்யாதே. புத்தகத்தை அவலட்சணப் படுத்துவது ஆகாது நினைவில் நிற்கமுடியாத விஷயங்களை குறிப்பெடுத்து, குறிப்பு எழுதி என்ன பயன், மண்டையில் நிறுத்திக்கொள்ளப் பழக்கிக் கொள்ளவேண்டும்.)
சமைத்துப் பார், கரும்புப் பயிர், ஷாஜஹானின் துயரங்கள், மகாபாரதம், விக்கிரமாதித்தன் கதை சத்திய சோதனை (காந்தி) பிறகு அதுவே ஆங்கிலத்தில், ஒமார் கயாம் ராமகிருஷ்ண சரிதை உபதேச மொழிகள்.
மாடியில் ஒழுங்கையில் ஒரு கிழிந்த சோபா, அதில் சுருண்டு படுத்த வண்ணம் ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு தாஜ்மகால், நயாகரா, மானஸரோவர் கன்யாகுமரி, கங்கோத்ரி இருந்த இடத்திலிருந்துகொண்டே போகாத இடம் இல்லை. இடம் காலம் தாண்டிக்கூட வேளையின் ரஸாயணம், ரஸவாதம்.
எங்கோ பிறந்து, எங்கோ பாய்ந்து, ஆங்காங்கே ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து பெயர் மாறி பெயர் ஒன்றி, இடம் கடந்து, எவ்வளவு நீண்ட யாத்திரை! பூஜையில் விரித்த சடையில் இந்த மகா பிரளயத்தை வாங்கிக்கொள்ள இடுப்பில் கைகளுடன் பூஜையறை படத்தில் மகா ப்ரபு நிற்கிறான்!
ஹே கங்கா மாயா, கங்கா மாதா, கங்கா தேவி, ஜான்னவி. கங்கா பவானி, கங்கா ஜமுனா, ஹே கங்கா சரஸ்வதி சரணம் சரணம் உன் கோபத்தைத் தாங்க நாங்கள் யார்? கங்கா – காவிரி, கங்கா – வோல்கா அந்தி வேளையில் சிந்தனை மயக்கில் எல்லாம் ஒரே உழப்பலாய், ஒரே மகா நதியாய் அதுவே ஒரு பெரும் உண்மை- -அதுவேதான் உண்மையெனப்படுகிறது.
-கங்கா பாலா.
இப்படி என் இதய விலாசத்தில் பாயும்.
மகா நதியில் மூழ்கி எழுகையில் ஆடை உடலோடு ஒட்டிக்கொண்டு அங்கங்களின் விளம்பல்களில் – அவள் நிர்வாணமாக எழுந்தாலும் அவளுடைய நெருப்புக் குளியல் தீண்ட முடியாத பொற் பதுமை, கங்கா. ஜ்வாலா – பாலா ஜ்வாலா, வாலா பாலா வியப்புறுகிறேன். இதென்ன ஸ்வரங்கள் என்ன நாமாவளிகள், இதென்ன அர்ச்சனை?
நிர்வாணி,தபஸ்வினி, அமானுஷ்யை மகா ஜ்வாலா பாலா.
கங்கையை அவன் தாங்கியதுபோல் நான் – நான்-
கன்னங்களடியில் குறுகுறுக்கிறது. ஆனால் தழலை ஏந்த நான் சிவனா? எனக்குக் காதல் பிறந்துவிட்டதா? இ …a…ma. அடித்தும் சொல்லிக்கொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு இன்பக் குழப்பம். தெளிந்து இப்போ சொல் கிறேன். இது காதல் இல்லை. ஆனால் நட்சத்திரத்தை விழுங்கிவிட்டு அது உள்ளே ஓடி ஓடி விளையாடுவது தாங்க முடியவில்லை. எண்ணம் பட்டபின்தான் அதன் துணிச்சல் தெரிந்தது. உணர்வில் தோய்ந்ததும் திகில் வந்தது. இந்த விஷயம் என்னுடைய கிரகத்தில் அடங்கியதல்ல.
மானேஜர் உடல்நிறம் ஒரு சமயம்போல் இல்லை. குளித்துவிட்டு வெந்நீருள்ளிருந்து புறப்பட்டவுடன் இடுப்பில் சிறு முண்டுடன் பிதுங்கும் இளம் தொந்தியுடன் (இல்லை, தான் வந்ததுக்கு இப்போது பெரிதாகிக்கொண்டு வருகிறது.) தக்காளிப்பழம் போல் டால் அடிக்கிறார். நேரம் ஆகஆக ஒரு மாதிரியாக தேஜஸ் மங்கி வெளுத்துக் கொள்கிறார்.சில சமயங்களில் கறுப்பு காட்டுவதுபோல் கூடத் தோன்றுகிறார். உடல் வாகா? அல்ல படும் பல நோய் வாகா?
“அம்பி சொல்ல மறந்துட்டேன். அடுத்த வாரம் தஞ்சையில் காம்ப் போடறான். உன்ன இன்டர்வியூவுக்கு அனுப்பச் சொல்லி எழுதியிருக்கான் – ஐயோ!’
மானேஜர் முதுகில் ‘மளுக்’கென்று முறிந்தது. ஒன்றுக் கொன்று ஆகிவிட்டதா? தலை வலி போய் திருகு வலி. எனக்கு அழுகை வருகிறது. ஐயோடக்ஸ் தடவுகிறேன். நல்ல வேளை சுளுக்குத்தான்.
“ஏன் ஸார்,நான் ஏன் ஸார் போகணும்?’
“ப்ரமோஷன் பண்ணினதும் இங்கே இருக்கமுடியாது. வெளியூருக்கு -”
“நான் எங்கேயும் போகல்லே ஸார். எனக்குப் ப்ரமோஷன் வேண்டாம்.”
மானேஜர் திரும்பிய வேகத்தில் சுளுக்கு திரும்பிக் கொண்டது.
“என்னடா உளர்றே? ப்யூனாகவே ஆயுசுக்கும் காலம் கடத்தப் போறயா? வாழ்க்கையில் முன்னேறப் பார்-என்ன கண்ணில் துளும்பல்?” முறுவலிக்கிறார்.அப்பா இந்தச் சமயம் இவருக்கு எவ்வளவு அழகான முகம்! ஆனால் என்ன, அவர் புன்சிரிப்புக் கண்டதும் என் உதடு அதிகம் பிதுங்குகிறது. என் அறைக்கு ஓடிப்போய் கதவைத் தடால் என்று மூடிக்கொண்டதும் மேஜைமேல் முகம் கவிழ்ந்ததும் அம்மாடி – அழுகை, சத்தம் போட்ட அழுகை எவ்வளவு பெரிய விடுதலை!
“உங்களுக்குப் புரியல்லே ஸார். கருணையினாலேயே கொல்லும் இந்த வீட்டுக்கு ஏன் வந்தேன்?”
கருணையும் இரக்கமற்றதுதான்.
இதென்ன பிதற்றல்? எனக்குப் புத்தி நழுவிக்கொண்டிருக்கிறதா?
ஏனென்று தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் தனிமையை வெகுவாய் விரும்புகிறேன்.முத்தையாவின் தென்னந்தோப்பில் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தபடி, அல்லது படுத்தபடி தென்னங்கீற்றுகளிடையே குலை முடிச்சுக்களைப் பார்த்துக்கொண்டு.
தனிமையின் சுழிப்பு என்னைத் தன்னுள் இழுக்கிறது. சப்பாத்திப் புதர். ஆற்று மணல். காடென்று சொல்ல முடியாத தாவர அடர்த்தி நடுவில் ஒற்றையடிப் பாதை வெறிபிடித்து நடக்கிறேன். நடந்துகொண்டே இருக்கிறேன். தப்பிய வழி. இங்கு நான் எப்படி வந்தேன்? திகைப்பு. ஓய்ந்த நேரங்களின் நடைமுறையாகி விட்டன.
தஞ்சாவூருக்கு இன்டர்வுயூவுக்குப் போய் வந்தாச்சு. உன் மானேஜர் உன்னைப் பற்றி ரொம்ப சிபாரிசு செய் திருக்கிறார் அவரைவிட நான் வடிகட்டப் போவதில்லை. இருந்தாலும் – என்று என் வேலைக்கே சம்பந்தமில்லாத பேச்சு கேள்விகள் ல்லை – பேசிவிட்டு – இன்டர்வியூ முடிஞ்சு போச்சு.
அற்புதமான காலை இன்று சூரியனே ஆகாச கங்கை யில் குளித்துவிட்டு பளிச்சென்று பட்டணம் பார்க்கப் புறப் பட்டிருக்கிறான்.
எழுந்து பால்கனிக்கு வந்து ராஜ்யத்தை ஒரு கண் ணோட்டம் விடுகிறேன். சுவரோரம் சிலந்திக் கூடு ஒன்று பொற் கோலமாய் மின்னுகிறது.
தோட்டத்தில் பாலா செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறாள்.
பக்கத்தறையிலிருந்து மானேஜர், “அம்பி வேலையா இருக்கியா?”
“என்ன ஸார் வேணும்?”
”பாலாவுக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்.”
கீழே விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறேன்.
வாசல் தாண்டுகையில் கால் அடி சறுக்கி நான் வந்த வேகமோ, சேறோ, வாழைப்பழத் தோலோ, கல் தடுக் கியோ- ‘ஆ!’- என் குரல் கேட்டுப் பாலா திடுக்கெனத் திரும்ப – அவள்மேல் நான் விழுந்தோ, என்மேல் அவள் விழுந்தோ – அவள் கீழே விழா வண்ணம் தாங்கிக் கொண்டேன்.
‘க்…றீ…ச்..’
அந்த அமானுஷ்யமான மிருக அலறலை என்னென்று சொல்ல? அவள் திமிறித் துள்ளிய வேகமே அவளை நாலடி தள்ளிக்கொண்டுபோய் வீழ்த்திற்று. “வீல் -வீல் -வீல்’
உச்சமும் கட்டையுமாய் மூச்சுவிடாமல் இடைவிடா அலறல்கள். அவள் முகம் கோணிக்கொண்டு விட்டது. தாங்க முடியாமல் செவிகளைப் பொத்திக்கொண்டேன். எனக்கு நகர முடியவில்லை. உங்ளங்காலிலிருந்து தலை வரை அப்படியே ஒரு உதறல். அப்படியும் செவிகளைத் துளைத்தன. குரங்கா பட்சியா, பூனையா. கீரியா?
அவள் உடல் பூராவும் பூமியுடன் கிடுகிடென ஆடிற்று. அந்த முகத்தில் மாறி மாறி அந்தத் திகில், கோபம், பைத்தியத்தையும் – சகிக்கவில்லை. என் முகத்தைப் பொத்திக்கொண்டேன். நான் பார்ப்பது மனிதமே அல்ல- ஏதோ ஒரு ஐந்து. ஆமாம், மிரண்ட ஜந்து,
“அம்பீ, அம்பீ!” மானேஜர் பின்னாலேயே வந்து விட்டார். “ஒன்றுமில்லை. பயப்படாதே. பாலா!பாலா!- அவளுக்கு வழிவிட்டு நில். பாலா!பாலா!ஏ பாலா?”
அவரைத் கண்டதும் அவள் பின்னடைந்தாள். விழிகளில் திகில் வட்டங்கள். தப்பி ஓட முகம் அப்படியும் இப்படியும் அலைந்தது. எங்கிருந்தோ ஓடிவந்தாற்போல் மூச்சு இறைத்தது.
“பாலா பாலா!”
புயல் நுழைந்தாற்போல் பாலா வீட்டிற்குள் ஓடினாள். திடுதிடுவென மாடி ஏறி, அறைக் கதவு தடாலென் அறைந்து மூடிக்கொண்டது. ஆனால் உள்ளிருந்து கத்தல்கள் ஓயவில்லை.
வேட்டி நுனியில் மானேஜர் முகத்தைத் துடைத்துக் கொண்டார். துடைத்த இடங்களில் பப்பாளிப் பழம்போல் சிவப்பு கண்டு உடனே வெளுப்பு விட்டுக்கொண்டது.
“இந்த அலை அடங்க மூணு நாளேனும் ஆகும். நம் வயிற்றில் மண் அவளும் சாப்பிட மாட்டாள்.”
துடைக்கத் துடைக்க அவர் முகம் கொப்புளித்த வண்ணம் இருந்தது. “நான் அவளுக்குக் காவல் இருக்கணும். நீ இன்று அவள் கண்ணில் படக்கூடாது. அம்பி நீ காலி பண்ணியாகணும். நான் பண்ணின சோதனை தோற்று விட்டது.”
இது வந்து ரொம்ப நாள் ஆச்சேன்னு பார்த்தேன். கள்ளன் இன்னும் உள்ளே பதுங்கிக் கொண்டுதான் இருக் கிறான் நீ ஆபீஸ் போயிடு.
ஆபீஸ் போயிடு. நான் சொல்லி அனுப்பும் வரை வராதே.
“நான் ஒண்ணுமே பண்ணலை ஸார் – எனக்கு ஒண்ணுமே தெரியாது!” ஏதோ உளறுகிறேன்.
“இல்லை. எனக்குத் தெரியும். நான் இப்போ அவளைக் கவனிக்கணும். இன்னிக்கு நான் ஆபீசுக்கு வரமுடியாது. சாயந்திரமா வா, நீ வந்தது தெரியாமல் வா — எப்படியும் நீ அவள் கண்ணில் படக்கூடாது. உன் ஓசை அவளுக்குத் தெரியக் கூடாது.”
ஆபீஸில் என் பேயடைந்த முகம் கண்டு விசாரித்தவர் களுக்கு என்ன சாக்கு சொன்னேனோ ஞாபகம் இல்லை எப்போது மாலை வரும்? எப்போது மானேஜரைப் பார்ப்பேன்?
அவர் வாசலில் காத்திருந்தார். “பரவாயில்லை. முற்பகல் மூணு மணிக்கு வெறி தணிஞ்சு, தாஜா பண்ணி கதவைத் திறக்கப் பண்ணி, மாத்திரை கொடுத்து தூங்கப் பண்ணியிருக்கேன். நாளைக் காலை வரை கட்டைதான். அம்பி காப்பி போடறியா? காலையிலேருந்து கொலை பட்டினி.”
நான் காப்பி போட்டுக் கொண்டிருக்கையில் மானேஜர் கைகளை வீசிய வண்ணம் என்னவோ பேசிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக உலாவினார். எத்தனை நாள் உள்ளடக்கி வைத்திருந்த பித்தமோ?
“மரகதத்துக்குத் தாங்கலே. இதே சாக்கில் படுத்தவள் தான். மறுவருஷம் போய்விட்டாள். பாலாவுக்கு நேர்ந்த தற்கு அவளால் நாங்கள் பட்ட பாடு, ஏன் அவள் பட்ட பாட்டுக்குச் செத்துப்போயிருக்கலாம். அவள் செத்துட் போயிருந்தால் மரகதம் தக்கியிருப்பாளோ என்னவோ? ஆனால் அவள் மனுஷிதானே? எந்தத் தாயாருக்குத்தான் தாங்கும்?
ஏதேதோ துண்டும் துணுக்குமாக தாக்கல் மோக்கல் இல்லாமல். ஆனால் இல்லை என்று சொல்ல முடியுமோ?
மானேஜர் திடீரென்று சிரிக்கிறார். புகை கக்குகிறது. அம்பி, பாலாவை என்னன்னு நினைக்கிறே? பாலா அழகா இல்லையா?’
இதென்ன கேலிக்கூத்தான கேள்வி!
“அம்பி, அழகாகவே பிறக்கப்படாது. அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாமல் இருக்கணும் சரி. அதுதான் பத்திரம். பாலாவை அழகு என்று சொல்லமாட்டேன். இது ஒரு அமானுஷ்யம், விபரிதம். இந்த பெர்ஃபெக்ஷன் பாந்த மில்லை. வரம்பு மீறின கேஸ். நானும் மரகதமும் அப்படி ஒன்றும் ரதி மன்மத ஜோடி இல்லை. வம்சா வளியில் இவள் மாதிரி இருந்து இப்போ இவளில் திரும்பியிருக்கிறார்களோ? இப்போ பாலா மங்கிப் போய்விட்டாள் என்று சொல்லணும். பத்து வயசில் அப்பா! என்ன டால்! என்ன உடல் வாளிப்பு! சுருக்கச் சொல்லி முடிச்சுடறேன்”
“அன்று தை வெள்ளிக்கிழமை. தாயும் பெண்ணும் மங்கள ஸ்நானம் செய்து நேம நிஷ்டையாக ராகு காலத்துக்கு முன்னால் மாவிளக்கு ஏற்றி, முறைப்படி மலையும் ஏறி யாச்சு. பாலா பள்ளிக்கூடம் போற வழியில் – கொஞ்சம் தள்ளிப் போகணும் – தெரிஞ்ச மாமிக்கு பிரசாதத்தைக் கொடுத்துவிட்டுப் போகச் சொல்லியிருக்காள். அவ்வளவு தான்.
மாலை பாலா திரும்பி வரவேண்டிய வேளைக்கு வரல்லை. அதுபோல் அவள் அங்கே இங்கே என்று ஆயாக் கால் போட்டு கொண்டு இஷ்டத்துக்கு வருவதில்லை. நேரமோ ஏறிக்கொண்டிருந்தது. பள்ளிக்கூடத்துக்குப் போன் பண்ணிப் பாத்திருக்காள். “பாலா இன்னிக்குப் பள்ளிக்கூடத்துக்கே வரல்லியே!’
வயிறு பகீர்! மறுபடியும் போன்: மாவிளக்குப் பிரசாதம் மாமியிடம் போய்ச் சேரவில்லை.”பாலா இங்கு வல்லியே!
எப்படி இருக்கும்? பிறகு எனக்கு போன்.
மணி ஏழு. எட்டு, ஒன்பது, பத்து. போலீசில் எழுதி வச்சாச்சு. எங்களால் முடிஞ்ச வரை தேடின பிறகு, பீச் முழுக்கச் சல்லடை போட்டுச் சலிக்கிறது. இப்போ நினைச் சாக்கூட இப்போ மாதிரி இருக்கு. மரகதத்துக்குப் பைத்தியம் பிடிக்கல்லே. அவ்வளவுதான். அல்லது பிடிச்சுடுத்தா? குத்துவிளக்கு ராப்பூரா அவ்வப்போது அதை நமஸ்கரிக் கிறாள். பாலா போட்டோவை மார்போடு அணைச்சுக்கிறா. ஸ்தோத்திரம் சொல்றா! என்னிடம் வருகிறாள். “நீங்கள் தைரியமா இருங்கோ. என்னண்ணா பண்ணுவோம்? கேட்டுக் கொண்டே உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அடக்கிக் கொள்ளப் பார்க்கிறாள். கறையறாள். உண்மையில் யாருக்கு யார் ஆறுதல்?
விடியுமா? ஒரு வழியா விடிஞ்சது. போலீஸ் நாய் வந்தது. ஓடித்தோ ஓடித்தோ அப்படி ஓடித்து.வாரைப் பிடிச்சுண்டிருந்தவனுக்குத் தாக்குப் பிடிக்க முடியல்லே. எங்கள் வீடு தாண்டி இரண்டு மூன்று மைல் இருக்கும்-ஒரு பாலத்தடியில் கரையோரமா ஜல விளிம்பில் ஸ்மரணை இல்லாமல்.
மேலே பேச்சு ஓடவில்லை. அவருக்குக் குரல் கம்மிற்று. எனக்கு அழுகை வந்துவிட்டது. வெட்கம் கெட்டு முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதேன். மானேஜர் அழவில்லை.
அழுது வரண்டு போயிருப்பார். முகத்தைத் திருப்பிக் கொண்டார். எங்கிருந்தோ அவர் குரல்- பாவாடையெல் லாம் – நோ, நோ, நான் அதுபற்றிப் பேசப் போவதில்லை.
(இன்று அற்புதமான காலை, சூரியனே ஆகாச கங்கை யில் குளித்துவிட்டு பளிச்சென்ற முகத்துடன் பட்டணம் பார்க்க புறப்பட்டுவிட்டான் – ஹும்!)
“என்ன?”
“எங்கே?”
“எப்போ?”
“எப்படி?”
“ராப்பூராப் பாலத்தடியிலா?”
“யார்?”
”எது?”
நாங்கள். போலீஸ் எல்லாம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருக்கவேண்டியதுதான். ஒரு கேள்விக்கும் ஜாடையாகக் கூடப் பதில் இல்லை. டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு அவள் பேச்சை இழந்துவிட்டதாகத் தீர்ப்புச் சொல்லிவிட்டார். ஷாக். அதோடு இல்லை-
திடீர் திடீர் என்று வீல் வீல் என்று ஒரே அலறல். பக்கத்தில் யாரேனும் அண்டினாலே அப்படி ஒரு அலறல், கத்தல், இப்போ நீ கேட்டயே, அதே மாதிரி. யாரிட மிருந்தும் வாய் வார்த்தையாக ஒரு விவரமும் கிடைக்க வில்லை. போலீஸ் நாய் அப்புறம் உபயோகமில்லாமல் போய்விட்டது.ஏதோ ஒரு வீட்டுக்கு அழைத்துக்கொண்டு சென்றது. வீடு பூட்டிக் கிடந்தது. போலீஸ் உடைத்துச் சென்று ‘க்ளூ’க்களுக்குத் தேடினார்கள். ஒன்றும் சுவாரஸ்ய மில்லை. நாயின் மோப்பமும் குழப்பமாகிவிட்டது. கேஸ் பிசுபிசு.
அவள் தாயார் உட்பட யாரும் அவளைத் தொட மூடிய வில்லை. இப்போ பார்த்தயே இதே ரகளைதான். ஆள் அடியோடு உள்ளே பிரண்டு விட்டாள். தன்னைத் தொட வரவாளே தனக்குத் தீம்பு செய்யத்தான் என்று ஒரு தீர் மானம். மாற்றமுடியாத தீர்மானம்.
கஷ்டம். கஷ்டம்.படுகிறவர்களுக்கா, படுகிறவர்களைப் பார்ப்பவர்களுக்கா?
“பார்க்காத சிகிச்சை இல்லை. இடம் மாறினால் மனம் மாறும் என்று மாற்றல் வாங்கிக்கொண்டேன். நோ யூஸ். பாலா ஒருவாறு தன் கலவரம் அடங்கி, அல்லது அடங்கினாற் போல் தோன்றி, தண்ணீர் மேலே அமைதியாக ஓடிற்று – உள்ளே சுழலை காட்டாமல். மரகதம் தன் பெண்ணுக்கு நேர்ந்ததை. நேர்ந்திருக்கக்கூடியதை எண்ணி எண்ணி வெதும்பிச் செத்தாள். அதுதான் மிச்சம். நானும் பாலாவும் மிச்சம். உற்றார் உறவினர்கள் இரண்டு பக்கங்களிலும் எங்களுக்குச் சொல்லும்படியாய் இல்லை. நாங்களும் இந்த மாதிரிச் சூழலில் அவர்களை நாடமாட்டோம். ஒண்ணே ஒண்ணு பெண்ணே பெண்ணு, கண்ணே கண்ணு, எப்படி?” சிரித்தார். ஆயிரம் துக்கங்களின் முத்தாய்ப்பு.
வழி தானே வருகிற மாதிரி வேளையின் சமைப்பு இன்னும் புரியாத புதிர். அடுத்த நாளே என்னை கிளார்க் ஆக ப்ரமோஷன் செய்து கோயமுத்தூருக்கு உடனே மாற்ற லாக ரீஜினல் ஆபீஸிலிருந்து தந்தி வந்தது. உடனே நெய்க் கடலையும் அல்வாவும் எனக்குத்தான். அதில் நினைப்புக் கூட ஒட்டவில்லை என்று யாருக்குத் தெரியும்?
வழியனுப்ப மானேஜர் ரயிலடிக்கு வந்திருந்தது மற்ற வர்களுக்கு ஆச்சரியம், ரயில் கிளம்பும் சமயத்தில் திடீரென்று என்னை அவர் அணைத்துக்கொண்டது அதைவிட ஆச்சரியம். அவர் கண் கலங்கியதைக் கவனித்திருந்தார் களெனில் —ஹூம்- நல்லவேளை ரயில் நகர்ந்துவிட்டது. கையை உயரத் தூக்கிக் காட்டிக்கொண்டு ப்ளாட்பாரத்தில் அத்தனைபேர் நடுவிலும் தனியன் – நெஞ்சில் அழுந்திவிட்ட அழியாத புகைப்படம்.
கோயமுத்தூர். கிளை ஆபீஸ் மிகப் பெரியது. ஐம்பது அறுபது சிப்பந்திகள் வேலை செய்கின்றனர். அத்தனை பேரும் ஒழுங்காய் செய்வதாக இருந்தாலும் ஓயாத வேலை. இன்னும் இருபதுபேர் இருந்தாலும் அத்தனை பேருக்கும் வேலை. ஆகையால் யாரும் வேலை செய்யவில்லை. ஆனால் யூனியன் மீட்டிங்கு அவ்வப்போது வங்கி வாசலுக்கு வெளியே உள்ளே போகாமலே நடக்கும். ஆரவாரங்கள் உள்ளே கேட்கும். இவைகளுக்கெல்லாம் குறைச்சலே இல்லை. நான் விட்டுவிட்டு வந்த இடம்போல் நிம்மதி இல்லை. ஆனால் நிம்மதி இப்போது எனக்கு வேண்டாம். பைத்தியம் பிடித்து. விடும். என்னை மறக்க வழி பிறந்தால் சரி. பைத்தியம் பிடித்தாற்போல் உழைக்கிறேன். யூனியன் காரியதரிசி என்னை வெறுப்புடன் பார்க்கிறான். ‘புது ஜோர், புது. துடைப்பம் சண்டைக்கு இழுக்கிறான். நான் போகவில்லை.
“அம்பி ஸார், உங்களுக்குத் தந்தி!”
எனக்குத் தந்தியா? எனக்கு யார் உற்றார்? உறவினர் ஏது? பிரிக்கிறேன்.
“மேனேஜர் அண்ட் டாட்டர் டெட், மீட் மீ, டாக்டர் சுந்தரவதனம்.”
அழுகை வரவில்லை. துக்கம் கூட இல்லை. கொஞ்சம் செத்துப்போகும் நிலை என்ன இன்னதென அப்படி இறந்தவர்தான் அறிவர். இந்தச் சாவு முழுச்சாவோடு போய்க் கலக்கும் வரை விண் விண் – உயிர் பெற்ற சாவு.
இங்கு வந்து இன்னும் மூன்று மாதங்கள் முழுக்க ஆசவில்லை. மூன்று நாட்கள் லீவு போட்டுவிட்டுக் கிளம்பு: கிறேன். எனக்கு ஏன் ஆச்சரியம் கூட இல்லை?
ரயிலடியிலிருந்து டாக்டர் கிளீனிக்குக்கு நடக்கிறேன். இங்கே எவ்வளவு சந்தோஷமாக இப்போது இருந்தேன். ஆனால் இந்த ஊருக்கும் எனக்கும் தொப்புள்கொடி அறுந்து விட்டாற்போல சம்பந்தமே இல்லாததுபோல் தோன்றுகிறது. ஏன்?
“வா அம்பி. ஐஆம் ஸாரி” என்று சொல்வதில் அர்த்த மில்லை. உனக்கு ஷாக் ஆக இருக்கும். எனக்குத் தெரியும். இருந்தாலும் மனத்தெம்பு இல்லாவிட்டால் நாம் எல்லாரும் காலி. இந்தா இதை உன்னிடம் கொடுக்கும்படி அவருடைய உயில்.”
கவரைப் பிரிக்கவில்லை. ஜேபியில் போட்டுக்கொள்கிறேன். காத்திருக்கிறேன்.
“மானேஜர் ஒரு பதினைந்து நாளைக்கு முன் வந்தார். தொண்டை வலிக்கிறதென்று பரிசோதித்துப் பார்த்தேன். என் முக மாறுதலை எப்படியோ கவனித்துவிட்டார், “டாக்டர், என்ன பாக்கி எனக்கு வர இருக்கு?”
“எக்ஸ்ரே எடுக்கணும்.”
“எதுவாக இருந்தாலும், நீங்கள் என்னிடம் சொல்லலாம். என் வீட்டில் என்னைவிடப் பெரியவர்களும் இல்லை. நீங்கள் சொல்லப் போவதின் பொறுப்பை ஏற்றுக் கொள்ள எனக்குப் பிள்ளைகளும் இல்லை. ப்ளீஸ்…?”
“கான்ஸர்.”
“ஓ!” உங்கள் மானேஜர் கடாத் தலையன்.
“புகையிலைப் போட்டுக்கொள்வதன் விளைவு.”
“அப்படியா?” உடனே தன் டப்பியிலிருந்து சிவபுரி புகையிலைத் தூளை அள்ளி வாயில் போட்டுக்கொண்டார். மானேஜர் கடாத் தலையர்.
“சிகிச்சை உடனே செய்துகொள்ள வேண்டும். இங்கே வசதியில்லை. வேலூர் – அல்லது மெட்றாஸ் -”
“என்ன ஸ்டேஜ் என்று நான் கேட்கப் போவதில்லை.”
“நான் சொல்லப் போவதுமில்லை.”
“நல்ல ஜோக்! சரி டாக்டர், போயிட்டு வரேன், உங்கள் பில்லை இப்பவே செட்டில் பண்றேன். இதோ கையெழுத்தோடு செக்.உங்கள் பாக்கியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.’
“என்ன சார் அவசரம்?”
“உங்களுக்கு இல்லை, எனக்கு வந்துவிட்டது. சிகிச்சை ஆரம்பிப்பது பற்றி இன்னும் இரண்டு நாளில் சொல்கிறேன்,”
“அடுத்த நாள் பாங்கில் பதினொரு மணி ஆகியும் மானேஜர் வரவில்லை. கேஷ் எடுக்கணுமே. முத்தையா வீட்டுக்கு வந்து பார்த்திருக்கிறான். வாசற் கதவு திறந்தபடி மானேஜர் படுக்கையில் இன்னும் தூங்கிக்கொண்டிருக் கிறார். கட்டில் அருகே மேஜைமேல்; உனக்கு ஒரு கவருடன் எனக்குக் கடிதம் பாங்குக்கு ஒரு கடிதம் தூக்க மாத்திரைகள் சீசா ஒன்று காலியாக.
டாக்டர் பெண் அவள் அறையில் தூங்குகிறாள்.
இன்னும் சொல்ல என்ன இருக்கு? போலீஸ் ஒத்துழைப்பு ஊர் ஒத்துழைப்பு சேர்ந்து கேஸ் பதிவாகாமல், அமுக்கிட்டோம். சுருக்க தகனம் பண்ணியாச்சு. பெரிய மனுஷன் நானும் உடந்தைதான். உன்னிடம் சொல்வதற்கென்ன? டெத் சர்டிபிகெட் என் பொறுப்புதானே!”
மாலை முத்தையாவின் தென்னந்தோப்பில் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருக்கிறேன். கவலையேற்றம் ஓடிக் கொண்டிருக்கிறது. சால் கவிழ்ந்ததும் ஜலம் சுழித்து நுரைத்து, ஜிலுஜிலு குளுகுளு கிளுகிளு – எனக்கு ஆறுதல் சொல்ல முயல்கிறதோ?
மானேஜர் கடிதம் என் மடியில் கிடக்கிறது.
“டியர் அம்பி,
ஐயாம் நாட் ஸாரி. எனக்கு – எங்களுக்கு வேறு வழி என்ன இருக்கிறது?
குட்லக்”
அவளிடம் சொல்லியிருப்பாரா? “என்னோடு வந்துவிடு நான் போன பின்னர் உன்னை உலகத்தின் ஏலத்துக்கு விட எனக்குச் சம்மதமில்லை.”
இல்லை முடிவு அவளுடையதா? உங்களுக்குப் பின் என் நிலையில் எனக்குத் துணையில்லாமல், நம் இருவருக்கும் இங்கே என்ன வேலை?”
கொலை: அடுத்து தற்கொலையா? அல்லது தற்கொலை உடன்படிக்கையா? இருவரும் சிதையோடு கொண்டுபோய் விட்ட ரகஸ்யம்.
திடீரென்று காற்று ‘விர்ர்’ என்ற சத்தத்துடன் என் தோள்மேல் விசை கொண்ட அந்தச் சிறகடிப்பு என் தோளைப் பிய்த்துக்கொண்டு சென்றது. அகன்று நீண்டு இருளாலாய இறக்கைகள். வாள் வீச்சுப்போல் கீழிறங்கி பூமியைத் தொட்டுக்கொண்டு மேலெழுகையில் பாதாளக் கொலுசுபோல் அதன் பாதங்களில் ஒரு சாட்டை தொங்கியது தடுமனாய், கறுப்பாய், பாலாவின் பின்னல்போல், எட்டடி நீளம் –
நெளிந்தது.
என்னிடமிருந்து “வீல் வீல் வீல்”-
“பாலா!பாலா! பாலா”
அது வந்த திக்குக்கு எதிர் திக்கில் பறந்து சென்று விட்டது.
நான் ஒரு நாத அதிர்வு
இடிவலியின் அலையில்
கரையில் தூக்கி எறியப்பட்டேன்
அந்தரத்தில் தொங்கித்
தவித்துத் திணறித் திக்கற்றுத்
தெப்பலாடித் தத்தளிக்கிறேன்
என் அதிர்வுக்குச் சொந்த அலையில்
என்னை வளிக்கவ்வி எடுத்துச் சென்று
மூலத்தின் இருண்ட கர்ப்பத்துள்
என்னைச் சேர்த்துவிடு
அங்கு நான் என்னை
இழந்து கொள்கிறேன்
ஆமாம் இதையெல்லாம்
நான் யாரைக் கேட்கிறேன்
கதை முடிந்தது
கவிதை தன்னை முடித்துக்கொண்டு
கண்ணாடிச்சுவரும் உடைந்தது.
– நேசம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1989, வானதி பதிப்பகம், சென்னை.
![]() |
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க... |