கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 30, 2025
பார்வையிட்டோர்: 13,381 
 
 

தினசரி மாலையில் மகாவுடன் வாக்கிங்க் போவது சகாவின் வழக்கம்!. அன்றைக்கும் அப்படி இருவரும் பேசிக்கொண்டே காலாற ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வழக்கம்போல் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

என்றைக்குமில்லாதபடி தன் எஜமானியம்மாவைப் பற்றி மகாவிடம் மனம் விட்டுப் பேசியபடியே நடந்த சகா…

‘எங்க எஜமானியம்மா போல வராது! ரொம்ப நல்ல குணம்!’ என்று சொல்ல…

‘எல்லாம் வேலை வாங்குகிற டெக்னிக்!’ என்று ஒப்புக்கொள்ளாமல் மகா வார்த்தைகளை உதிர்க்க, பொத்துக் கொண்டு வந்தது கோபம் சகாவுக்கு.

‘காலையில் எஜமானிக்குக் காப்பி போட்டுக் கொடுக்கையில் அதே பாலில், அதே டிகாஷனில் எனக்கும் போட்டுக் கொள்ளலாம், ஒன்றும் சொல்லாது எங்க எஜமானியம்மா… தெரியுமா?!’என்று பெருமையாய்ச் சொல்லிவிட்டு, தொடர்ந்து…

‘வாசல் கூட எஜமானியம்மாவே கூட்டிடும்! நான் வெறும் வாஷிங்க் மெஷினில் துணியைத் துவைக்கப் போட்டுத் துவைத்ததும் எடுத்துக் காயப் போட்டுக், காய்ந்ததும் எடுத்து மடித்துக் கொடுப்பதோடு சரி! அதுவே பீரோவில் அழகா அடுக்கி வைத்துக் கொள்ளுமாக்கும்!. கிச்சனிலிருந்து பெட்ரூம் வரை எங்கும் போக பர்மிஷன் உண்டு! மத்த மொதலாளிக மாதிரி எல்லாம் ‘ஆச்சாரம் அனுஷ்டானமெல்லாம்’ சொல்லிக் கடுப்பேத்தாது!, என் சுதந்திரத்தில் அது தலையிடாது’ என்று மகாவிடம் சாக சொல்ல…

‘சம்பளம்….?’ என்று மகா கேட்க.

‘அதெல்லாம் ஒடம்புகிடம்பு சரியில்லாம லீவு, கீவு எடுத்தாக்கூட பத்து பைசா பிடிக்காது! அப்படியே பேசினதைக் கொடுத்துடும்! தங்கமாக்கும்! ஆனா, ஒரே ஒரு விஷயம்…’ என்று சகா நிறுத்த…!

பிடிகிடைத்த பெருமையில்.. ‘என்ன… என்ன…’ என்று ஆர்வமாய் மகா கேட்க..

‘முப்பதாம் தேதி என் ஏடிஎம் கார்டை மட்டும் அது கிட்டக் கொடுத்திடணும்!’ என்று சகா சொல்ல..

‘என்ன என்ன சொல்றே நீ..? உன் ஏடிஎம் கார்டை எதுக்குக் குடுக்கணும்?’ என்று மகா கேட்க..

‘ரொமப தூரம் நடந்துட்டோம்..! போறும்! திரும்பிடலாம்’னு சொன்ன சகா ‘நீ… ஒரு பழமொழி கேள்விப்பட்டதில்லையோ?’

‘என்ன பழமொழி..?’ என மகா கேட்க,

‘ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியசாலி!’ என்று பதில் சொல்லி, சகா முடிக்க..! ‘சகா’… ‘சகா’ என்று இதுவரை சொல்லப்பட்ட ‘சகாயராஜன்’ தன் தோழன் ‘மகா மகா’ என்று சொல்லப்பட்ட மகாதேவனிடம் தன் எஜமானி என்று சொன்ன இதய ராணியைச் சுட்டி!

‘ஏர்பிடித்தவன் என்ன செய்வான்? பென்ஷன் கிரிடிட் ஆனா கொடுத்திடணும் தானே? அவள் பானை பிடித்த பாக்கிய சாலி! நான் ஏர் பிடித்தவன்.ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியசாலியாச்சே?.. சரி சரி.. நேரமாயிடப்போகுது போய்தான் டிபன் செய்யணும்… என்று விடைபெற்றான் சகாயராஜன் மகாதேவனிடமிருந்து!’

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *