பரம்பரையின் மகத்துவம்




கலாசாரம், தர்மம், விஞ்ஞானம்…
இவையனைத்தும் பரம்பரையாக வரக்கூடியவை. ஒருவரிடமிருந்து மற்றவருக்குக் கிடைப்பவை. ஒரு காலத்தில் அல்பமாகத் தோன்றுவது பின்னால் வரும் வம்சாவளிக்கு அதிக பலத்துடன் கூடியதாகிறது. எனவே தான் ஒவ்வொரு பரம்பரையினரும் தம் பின் வரும் பரம்பரைகளுக்காகத் தகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு வயதானவர் ஒரு மாஞ்செடியை நடுகையில் வழிப்போக்கர் ஒருவர் பார்த்து சிரித்து, “தாத்தா! இந்தச் செடி வளர்ந்து மரமாகும் வரை நீ உயிருடன் இருப்பாயா?” என்று கேட்டார்.
அதற்கு அந்த பெரியவர், “மகனே! எனக்குப் பிறகு உள்ளவர்கள் வளரும் போது இந்தச் செடியும் வளர்ந்து மரமாகி, நிழலையும் பழங்களையும் அளிக்கும் என்றே இதனை நடுகிறேன் ” என்று பதிலளித்தார்.
பெரியவர்கள் நமக்களிக்கும் செல்வங்களையே வாரிசுகளாக நாம் அடைகிறோம். வெறும் ஆஸ்தி அந்தஸ்து மட்டுமேயல்லாமல் தம் வரை வந்த பூர்வ ஆசாரங்கள், பழக்க வழக்கங்கள், கல்வியறிவு, தர்மங்கள், விஞ்ஞானங்கள் இவற்றைக் கூட நம் பின் வரும் வாரிசுகளுக்காக மீதம் வைக்க வேண்டும்.
இந்த பூமி மேல் வாழும் நாம் தாற்காலிக பயன்களுக்காக எல்லைக்குட்பட்ட பார்வையால், நிலைத்த நன்மைகளை கோட்டை விட்டு விடுகிறோம். சுற்றுச் சூழல் விஷயத்தில்- இப்போதைய நம் சௌகர்யங்களுக்காக மரங்களை வெட்டுவது, நீர்நிலைகளை அசுத்தமாக்குவாது, விஷ வாயுக்களால் வாயு மண்டலத்தை அசுத்தப்படுத்துவது
இவ்விதம் எதிகால கண்ணோட்டம் இல்லாத சுயநலமான ஓட்டங்களில் ஈடுபடுகிறோம். பின், எதிர்கால சந்ததிகளின் நிலை என்ன? அவர்களுக்கு ஆரோக்யமான சூழலை மீத்து வைக்கப் போகிறோமா?
அதே போல், நம் மூதாதையர் நம் வரை எடுத்து வந்த கலாசாரத்தை காப்பாற்ற இயலாதிருக்கிறோம்.
சோம்பல், அலட்சியப் போக்கு, சுகவாழ்க்கை, அர்த்தமற்ற பிடிவாதங்களால் எத்தனையோ நல்ல சம்பிரதாயங்களை நாசம் செய்து விட்டோம்.
கடந்த சில பத்தாண்டுகளாக புதிய நாகரீக மோகத்தால் நம்முடையதான சில பூர்வ சம்பிரதாயங்களை ஏளனம் செய்வது ஒரு பேஷனாக மாறியுள்ளது. அப்போது நாம் மறுத்த பழக்க வழக்கங்களில் விஞ்ஞான அம்சங்கள் உள்ளனவென்று தற்போது நிரூபணமாகியுள்ளது. மீண்டும் அவற்றை மேல்நாட்டவர் முதற்கொண்டு அனவைரும் பின் பற்றுகிறார்கள். உதாரணத்திற்கு யோகம், ஆயுர்வேதம், தியானம்… போன்ற பழங்கால வழிமுறைகள்.
எனவேதான் தற்போது நமக்குப் புரியவில்லை என்பதால் எந்த கல்வியறிவையும் விட்டொழிப்பதும், காப்பாற்றாமல் விடுவதும் தகாது. நம்மை விட அறிவு மிகுந்த பிற்கால சந்ததியினர் அவற்றிலுள்ள மதிப்புகளை அறியக் கூடும்.
வித்யை, தர்மம், விஞ்ஞானம்…இவை வெறும் புத்தகங்கள் மூலமாக அன்றி, நடைமுறையில் கடைபிடிப்பதால் மட்டுமே பிற்கால சந்ததியினருக்குக் கிடைக்கும்.
‘எங்கள் தாய் இவ்விதம் செய்தாள் … என் தந்தை இவ்வாறு நடந்து கொண்டார்…’ என்ற அன்புடன் கூடிய அனுபந்தத்தோடு வரும் சம்பிரதாயத்தால் தான் அனேக ஆசார பழக்கங்கள் இன்றும் வாழ்கின்றன.
கங்கையை பூமிக்கு அளித்த பகீரதனின் கதையை ராமாயணத்தில் கூட விவரித்துள்ளர்கள். சகரர்களை உய்விப்பதற்காக கங்கையை பூமிக்கு எடுத்து வர வேண்டுமென்று அவருடைய புதல்வன் அம்சுமந்தன் தவம் செய்தான். ஆனால் தன வாழ்நாளில் அதை சாதிக்க முடியவில்லை.
அவனுக்குப் பின் அவன் குமாரன் திலீபன் தவம் மேற்கொண்டான். அவனாலும் கூட சாத்தியப்படவில்லை. அதற்குப்பின் திலீபனின் தனயன் பகீரதன் தவம் செய்து கங்கையை அழைத்து வந்தான்.
கங்கையை சாதித்த பகீரதனிடம் வந்த பிரம்மா, “மகனே! உன் மூதாதையர் சாதிக்க இயலாததை நீ சாதித்து விட்டாய்” என்று புகழ்ந்தார். உடனே பகீரதன், “ஸ்வாமி! அது உண்மையல்ல. அவர்கள் செய்த தவம் என் வரை தொடர்ந்து வந்து என்னிடம் பலன் பெற்றது. அவ்வளவே. என் மூதாதையர் தவம் மேற்கொள்ளவில்லை என்றால், என்னால் மட்டுமே தவம் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் அது பலனளிப்பதற்கு மேலும் இரண்டு வம்சங்கள் பிடித்திருக்கும்.
என் பூர்வீகர்கள் என் வரை எடுத்து வந்த தவ ரூபமான சூத்திரத்தை (நூலை) நான் பிடித்துக் கொண்டு சாதிக்க முடிந்தது” என்று பதிலளித்தான்.
அதனைக் கேட்டு மகிழ்ந்த பிரம்மா, “அற்புதமாகக் கூறினாய். உன் வினயமும் விவேகமும் உயர்ந்தவை. நீ கங்கையை க் கொண்டு வந்தது ஒரு சிறப்பு என்றால் உன் பதில் மற்றுமொரு சிறப்பு” என்று புகழ்ந்தார்.
தற்போது பலனற்றதாக, காரணமற்றதாகத் தோன்றுவது, காலக் கிராமத்தில் பலனளித்து, காரணத்தோடு கூடியதாகத் தோற்றமளிக்கும் என்பது நிச்சயம். எனவே தான் எந்த ஒரு சாதனையையும் விட்டு விடக் கூடாது. தொடர்ந்து செய்து வர வேண்டும். நடைமுறையில் அனுசரித்து வருவதன் மூலம் அதனைக் காத்து வர வேண்டும்.
“தவம்” என்னும் தர்மத்தை அம்சுமந்தன் மேற்கொண்டான். “தந்தை செய்தாரல்லவா!” என்று விசுவாசத்தோடு திலீபனும், அதன் பின் பகீரதனும் அனுசரித்தனர். பிரபஞ்சத்திற்கு கங்கையை அனுகிரகித்தனர்.
ஒரு சந்ததியிடமிருந்து அடுத்த சந்ததிக்கு “சமயக்ப்ரதானம்” – அதாவது ‘அழகாக, சிறப்பாக அளிப்பதே’ சம்பிரதாயம்.
– தெலுங்கில்- பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
![]() |
'கணையாழி களஞ்சியம் பாகம் 3' ல் திரு என். எஸ். ஜகந்நாதன் அவர்கள் மூன்றாவது பத்தாண்டு காலத் தொகுப்பாக தேர்நதெடுத்து கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட 80 கதைகளில் ஒன்று ராஜி ரகுநாதன் எழுதி கணையாழி, செப்டம்பர் 1989ல் வெளிவந்த 'வேப்பமரத்தை வெட்டிய போது...' சிறுகதை. பெரிய ஜாம்பவான்களோடு சேர்ந்து இவர் கதையும் சிறந்த கதைகளுக்கான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவது குறித்து மகிழ்கிறார். கீழ்வேளூரில் பிறந்து ஹைதராபாத்தில் வாழ்ந்து வரும் பி.ஏ.…மேலும் படிக்க... |