கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: August 1, 2024
பார்வையிட்டோர்: 3,166 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எவ்வளவு நேரம்தான் நிற்பது… தேவைப்படும்போது ஒரு டாக்ஸிகூட வராது. நடந்து கொண்டிருக்கும்போது வரிசையாக ஹார்ன் அடித்துக்கொண்டு போவார்கள்.

நீட்டி நீட்டி கைதான் வலிக்கிறது, ஒருத்தனாவது நிறுத்து கிறானர்… இரண்டு கைகளிலும் பைகள். தூக்க முடியாத அளவுக்குப் பாரம். இத்தனை சாமான்களையும் வாங்கி இருக்கத் தேவையில்லை. வேலை முடியும் நேரம். பஸ் கூட்டமாக இருக்கும். பைகளைத் தூக்கிக்கொண்டு, நின்றுகொண்டே போக முடியாது. பஸ் ஸ்டாண்டும் பக்கத்தில் இல்லை. சே… கால் வலிக்கிறது, கை வலிக்கிறது. வேறு வழியில்லை. பஸ்ஸிலாவது போகலாம், வீட்டுக்குப் போனால் போதும்…

அதிசயம்தான் டாக்ஸி கிடைத்தது. அதுவும் அவன் “ஜூரோங் போகிறவர் மட்டுமே” என்றதால். உள்ளே ஏறி உட்கார்ந்தால் போதும் என்றாகி விட்டது.

“எங்கே போகணும்?”

கொஞ்சம் மூச்சு விட வேண்டாமா… என்ன அவசரம்… இவனுக்கு பாட்டு ஒன்றுதான் குறை. இதுங்களே இப்படித்தான். எப்போதும் அதுங்க பாட்டை கத்த விட்டுக்கொண்டே இருக்கும். இவன் பாட்டைக் கேட்க எனக்கென்ன தலை யெழுத்தா… இருக்கிற தலைவலியில் இது வேறு…

“இந்த ஒப்பாரியை முதல்ல அடை.”

“நீ சொல்வது கேட்கவில்லை.”

‘எப்படிக் கேட்கும்’ வாய்க்குள் திட்டிக்கொண்டே, இடத்தைச் சொல்லி முடிப்பதற்குள்… ரேடியோவை அடைத்து காசெட் போட்டான். அட இவன் நமக்காக காசெட், அதுவும் புதுப்பாட்டாக வாங்கி வைத்திருக்கிறானே…

“உனக்குத் தமிழ் தெரியுமா?”

“தெரியாது.”

“தமிழ் காசெட் வாங்கி வைத்திருக்கிறாய்…”

“பயணிகளுக்காகத்தான். பார் நிறைய காசெட் வாங்கி வைத்திருக்கிறேன். வயதானவர்களுக்கு இது. இளையர்களுக்கு இது. பெண்கள் என்றால் இந்தக் காசெட்.”

முன்னால் சாய்ந்து அவனோடு பேசத் தொடங்கினேன்.

அவன் திடீரென்று “சாரி…” என்றான்.

“எதுக்கு?”

“உள்ளே சாப்பாடு வச்சிருக்கேன்.”

“அதனாலென்ன, பரவாயில்லை.”

“இன்று வெள்ளிக்கிழமை. நீங்கள் சாமி கும்பிடுவீர்கள். இது மாடு. வாடை அடிக்கும். நீ பூ வாங்கி இருக்கிறாய்தானே.”

“ஆமாம். பரவாயில்லையே நீ இந்தியர்களைப் பற்றி நிறையத் தெரிந்து வைத்திருக்கிறாய்.”

“ம்… நான் பல வருஷங்களா டாக்ஸி ஓட்டுகிறேன். எல்லா பயணிகளிடமும் பேசுவேன். சில பேர் பேசமாட்டார்கள். முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருப்பார்கள். மல்லிகைப் பூ எனக்கும் பிடிக்கும். நல்ல வாசனை.”

“ஆமாம்… நீ சொன்ன பிறகுதான் தெரிகிறது. உன் சாப்பாடு வாடை அடிக்கிறது.”

“மன்னிக்க வேண்டும்.”

“பரவாயில்லை. வீட்டுக்கா?”

“இல்லை என் அண்ணனுக்கு.”

அதற்கு பிறகு பேச்சைத் தொடர விருப்பமின்றி வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். ஆனால் அவன் நிறுத்துவதாக இல்லை.

“அண்ணனுக்கு ரெண்டு நாட்களாகக் காய்ச்சல். அவனைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. தனியாக இருக்கிறான். அவனைப் பார்க்கத்தான் போகிறேன். ஜூரோங்கில் இருக்கிறான். உன் வீட்டைத் தாண்டித்தான் போக வேண்டும்.”

“அவன் வீட்டில் வேறு யாரும் இல்லையா?”

“அவன் கல்யாணம் செய்யவில்லை.”

“அப்போது அவனுக்கு நல்ல வேலை இல்லை. மாதம் 700 வெள்ளிதான் சம்பளம். எப்படி… குடும்பம் நடத்த முடியாது. மூன்று கேர்ள் பிரெண்ட்ஸ் இருந்தார்கள். மூவரும் பாதியிலே முறித்துக்கொண்டு போய்விட்டார்கள். பாவம். பிறகு அம்மா பெண் பார்த்துக்கொடுத்தார். 700 வெள்ளியில் குடும்பம் நடத்துவது கஷ்டம் என்று அவன் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி விட்டான். பிறகு பிஸினஸில் நிறைய சம்பாதித்தான். இப்போது வயதாகி விட்டது. அவனிடம் பணம் இருக்கிறது. தனியாக ஸ்டூடியோ அப்பார்ட் மெண்ட் வாங்கி இருக்கிறான். எனக்கு நேரம் கிடைக்கும்போது போய் பார்ப்பேன்.”

“பாவம். நிறையப் பேர் உன் அண்ணனைப் போல்தான் வாழ்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒருவர்கூட…”

“என் தம்பியும் கல்யாணம் செய்யவில்லை. அவனுக்கும் பணப் பிரச்சினைதான். நாங்கள் பெரிய குடும்பம். 11 பேர். அப்போது எங்கள் அப்பாவுக்கு பெரிய வருமானம் இல்லை. அப்பாவும் அம்மாவும் கோப்பிக் கடையில் வேலை செய்தார்கள். ஆனாலும் கஷ்டம்தான். நாங்கள் சின்ன வயதிலேயே வேலைக்குப் போய் விட்டோம். யாரும் பெரிய படிப்புப் படிக்கவில்லை. அதனால் நல்ல வேலை கிடைக்கவில்லை. குறைந்த சம்பளத்தில் எப்படிக் குடும்பம் நடத்துவது. என் தம்பியின் கேர்ள் பிரெண்டும் அவனுக்கு நல்ல வேலை இல்லையென்று அவனை விட்டு விட்டாள். பிறகு அவன் வேறு பெண் பார்க்கவில்லை. ரொம்ப நல்ல பையன். உண்மை யானவன். என்ன செய்வது பணம் இல்லை…”

என்னைப் பேசவிடாமல் அவனே தொடர்கிறான். இந்த டாக்ஸிக்காரர்களே இப்படித்தான், அதிகப்பிரசங்கிகள். உலகுக்கே தாங்கள்தான் தலைவர்கள் மாதிரி, எல்லா விஷயமும் இவர்களுக்கு அத்துப்படி என்பதுபோல் பேசிக்கொண்டே போவார்கள்.

“இப்போது உன் தம்பி என்ன செய்கிறான்…” என்னைப் பற்றி இனி எதையும் சொல்வதில்லை என்று முடிவு செய்தபடி அவனைப் பற்றியே கேட்டேன்.

“ஒரு அக்காவோடு சேர்ந்து கோப்பிக் கடை நடத்துகிறான். ஆனால் அவனும் தனியாத்தான் இருக்கிறான். அக்கா அவனைப் பார்த்துக் கொள்வார். நேரம் கிடைக்கும்போது நான் சாப்பாடு வாங்கிக்கொடுப்பேன்.”

“வீட்டில் சமைத்துக் கொடுக்க மாட்டீர்களா…”

“சீனப் புத்தாண்டுக்கு எல்லாரும் வீட்டுக்கு வருவார்கள். என் மனைவி வேலை பார்க்கிறாள். சமைக்க நேரம் இருக்காது. சிங்கப்பூரில் பணம் இல்லாமல் முடியாது. எல்லாவற்றுக்கும் பணம்தான் வேண்டும். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் படிக்கிறார்கள். அவர்களுக்குப் பணம் அனுப்ப வேண்டும், வீட்டு வரி, இன்கம்டாக்ஸ், தண்ணி காசு, கரண்ட் காசு என்று வீட்டுச் செலவுக்கே மாதம் ஆயிரம் வெள்ளிக்குமேல் தேவைப்படுகிறது. அம்மாவுக்கு வயசாகி விட்டது. கான்சர் நோயாளி. அவரின் ஆஸ்பத்திரி செலவு எங்கோ போய்விடும். அவரைக் கவனிக்க பணிப்பெண் வைத்திருக்கிறோம். இரு… போன் வருகிறது. ஹலோ…”

போன் பேசிக்கொண்டே ஒவ்வொரு சிவப்பு விளக்காக நிறுத்தி நிறுத்தி போகிறான். காசு ஏறிக்கொண்டே போகிறது. எப்படியா வது காசைக் கறக்க வேண்டும். அதுவும் லேட்டஸ் போன்… இந்த சிங்கப்பூரர்களே இப்படித்தான்…

“அண்ணன்தான். எப்போது வருவாய் என்று கேட்டார்.”

“நீ முழு நேரமாக டாக்ஸி ஓட்டுகிறாயா?”

“இல்லை பகுதி நேரம்தான்.”

“வேறு என்ன வேலை செய்கிறாய்?”

“தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக இருக்கிறேன்.”

“டாக்ஸியில் நல்ல வருமானம் கிடைக்குமே…”

“பரவாயில்லைதான். ஆனால் நிறைய பணம் வேண்டும். சில நேரம் நாலு நம்பர் அடிக்கும். டூர் போவோம். இந்தியாகூடப் போயிருக்கிறேன். இந்தியா நல்ல ஊர். ஆனால் சுத்தமே இல்லை. நிறைய பிச்சைக்காரர்கள்.”

“பணம் வேண்டும் என்கிறாய்… பிறகு ஏன் ஊர் சுற்றி காசைச் செலவு செய்கிறாய்…”

“மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமா. கஷ்டப்பட்டு சம்பாதிக் கிறோம். நன்றாகச் சாப்பிட வேண்டும். மகிழ்ச்சியாக ஹாலிடே போகவேண்டும். பிள்ளைகள் படிப்புக்குத்தான் நிறைய காசு செலவாகிறது. இந்தக் காலத்தில் படிப்புத்தான் முக்கியம்.”

“டாக்ஸி ஓட்டுபவர்களிடம் நிறைய பணம் இருக்கும் என்று இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். நீ இவ்வளவு கஷ்டப்படுகிறாய். ஆனால் பரவாயில்லை. கல்யாணம் செய்து மனைவி, பிள்ளைகள் என்று சந்தோஷமாக இருக்கிறாய். உன் அண்ணனும் தம்பியும் பணத்தை முக்கியமாக நினைக்காமல் கல்யாணம் செய்துகொண்டிருக்கலாம். அப்போது கஷ்டப்பட்டாலும் இன்று வசதியாகத்தானே இருக்கிறார்கள்…”

“சொல்ல முடியாது. அவர்கள் தனியாக இருந்ததால்தான் இவ்வளவு சேர்க்க முடிந்தது. நாங்கள்தான் அவர்களைப் பார்த்துக்கொள்கிறோமே. ஆனால் இந்தக் காலத்துப் பிள்ளைகள் எங்களைப்போல் இல்லை. காலம் மாறிவிட்டது. பெரியவர்களிடம் மரியாதை இல்லை. நான் பார்க்கிறேன், எல்லா இனத்திலும் இதே பிரச்சினைதான். பல இந்தியர்கள் சொல்லி இருக்கிறார்கள். நீ சிங்கப்பூர் இந்தியன்தானே.”

“ஆமாம்.”

“உனக்குத்தான் தெரியுமே.”

“தெரிந்து என்ன. உன்னைப்போல்தான் நானும். வேலை செய்வது, பணம் சம்பாதிப்பது என்றே வாழ்க்கை ஓடுகிறது.”

“இவ்வளவு சாமான் வாங்கி இருக்கிறாய். அதிகம் செலவு செய்வாயா?”

என்னைப் பற்றிக்கூட இவன் கேட்கிறானே…

“சாமானைப் பார்த்தால் வாங்கச் சொல்கிறது. ஆனால் எல்லாமே மலிவு விலையில்தான் வாங்கினேன்.”

“மலிவு விலையெல்லாம் ஏமாற்று வேலை. அப்படியே விலை குறைவாக இருந்தால் பழைய பொருளாக இருக்கும்.”

“என்ன செய்வது, கடைக்குப் போனால் எல்லாம் மறந்து போய்விடுகிறது. காசை வீணாக்கக்கூடாது என்றுதான் எப்போதும் நினைப்பேன். கிடக்கட்டும். எப்போதுமா செலவழிக் கிறோம். போகட்டும். தமிழ்ப் பாட்டுக் கேட்க உனக்கு கஷ்டமாக இல்லையா. சில சீனர்களுக்குப் பிடிக்காது.”

“எனக்கு எல்லாமே ஓகே. மலாய், இங்கிலீஸ் எல்லாப் பாட்டும் போடுவேன். ஆனால் எனக்கு ரேடியோவே பிடிக்காது. பயணிகளை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமே. இது சிங்கப்பூர். பணிவன்பு முக்கியம். வாடிக்கையாளர்களின் திருப்தி மிகவும் முக்கியம். பணிவன்பு மிக்க டாக்ஸி ஓட்டுநர் விருது போன வருஷம் எனக்குத்தான் கிடைத்தது தெரியுமா.’

“நீ நல்லவன். ஆனால் சிலர் சீனப் பாட்டுதான் போடுவார்கள். மாற்றச் சொன்னால் சண்டைக்கு வருவார்கள். உன்னை மாதிரி காசெட் வாங்கி வைத்துப்போட வேண்டாம். பொதுவாக இங்கிலீஷ் பாட்டு போடலாமே.”

“அதுதான், நம் தலைவர்கள் புத்திசாலிகள். சிங்கப்பூரில் எல்லாமே இங்கிலீஷ் ஆக்கிவிட்டார்கள். உன் மொழி வேண்டும் என் மொழி வேண்டும் என்று சண்டையே வராது பார். வெரிகுட். படித்தவர்கள் படித்தவர்கள்தான். நம் தலைவர்களுக்கு எல்லாமே தெரியும். அதனால்தான் ஒரே மாதிரி சிந்திப்பவர்களாகத் தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள். மக்களையும் அவர்களைப் போலவே சிந்திக்கப் பழக்கியும் விட்டார்கள். இப்படி இருப்பதால் தான் நம் நாட்டில் பிரச்சினையும் இல்லை, சண்டையும் இல்லை.”

“எல்லாம் சரிதான். ஆனால் டாக்ஸி காசுதான் அநியாயமாகக் கூடிவிட்டது. மேலும் மேலும் கூட்டிக்கொண்டே போகிறீர்கள். ஒரு அவசரத்துக்கு டாக்ஸி எடுக்கக்கூட நூறு தடவை யோசிக்க வேண்டியிருக்கிறது.”

“கம்பெனி கூட்டினதுக்கு நான் என்ன செய்ய முடியும். பொருளியல் மந்தம் என்றால் சம்பந்தமே இல்லாமல் ரொட்டிக் கடைக்காரன்கள் எல்லாம் ரொட்டி விலையை ஏற்றுகிறார்கள். ஆனால் சிங்கப்பூரில் சாப்பாட்டு விலை பரவாயில்லை. எல்லா சாப்பாடும் கிடைக்கிறது.”

“நீ எத்தனை மணிக்குச் சாப்பிடுவாய்?”

‘அண்ணனுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டுதான் நான் சாப்பிட வேண்டும். அங்கேயே ஒரு கடை இருக்கிறது. கையால் செய்யும் மீ. விலையும் குறைவு, சுவையாகவும் இருக்கும்.”

“அண்ணனுக்கு வாங்கும்போது உனக்கு வாங்கவில்லை?”

“ரொம்ப விலை. அண்ணன் இந்தக் கடையில் வாங்கி வரச் சொன்னார். அதனால் அவருக்கு மட்டும் வாங்கினேன்.”

“சீனர்கள் சாப்பாட்டுக்குக் கவலைப்படாமல் செலவு செய்வார்கள் என்று நினைத்தேன்.”

“நாலு நம்பர் பட்டால் குடும்பத்தோடு சீ ஃபுட் சாப்பிடுவோம். எப்போதும் முடியாது. இந்த வாரம் ரொம்ப செலவு. இந்தப் பக்கம் தானே உன் புளோக்? என்ன நம்பர்?”

“ஆமாம் இதோ இங்கேயே நிறுத்திவிடு. எவ்வளவு 14 வெள்ளி 80 காசா… சில்லறை இல்லை. 50 வெள்ளிதான் இருக்கிறது.”

“எல்லாருமே 50 வெள்ளி நோட்டாகக் கொடுத்தால், சில்லறைக்கு எங்கே போவது… நீ ஏறும்போதே சில்லறை இல்லை என்று சொல்லி இருக்கக்கூடாது? உன்னிடம் சில்லறை இல்லை என்றால் உன்னை ஏற்றி இருக்கவேமாட்டேன். பார் உன்னால் என் நேரம் வீணாகப் போகிறது.”

“இரு இந்தக் கோப்பிக் கடையில் மாற்றித் தருகிறேன்.”

“நேரமாகிறது சீக்கிரமாக வா. அண்ணனுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு நான் சாப்பிடப் போக வேண்டும்.”

இவன் டாக்ஸில ஏறினதுக்கு நடந்தே வந்திருக்கலாம். இப்ப நான் கடை கடையாகப் போய் காசு மாற்ற வேண்டும்.

“பத்து பத்து வெள்ளியாத்தான் கொடுத்தான். இந்தா 20 வெள்ளி.”

“என்னிடம் இருபது காசு இல்லை. உனக்கு ஐந்து வெள்ளி 50 காசு தருகிறேன். நீ எனக்கு 30 காசு கொடு.”

“இரு சில்லறை இருக்கிறதா என்று பார்க்கிறேன். ம்… என்னிடம் இரண்டு 20 காசுகள் இருக்கு. நீ எனக்கு 10 காசு கொடு.”

“பத்து காசு… பத்து காசு… ம்… இருக்கிறது. இந்தா. ரொம்ப நன்றி.”

“ரொம்ப நன்றி. பார்த்து ஓட்டு.”

“Have a nice day…”

– ‘நான் கொலை செய்யும் பெண்கள்’ சிறுகதைத் தொகுப்பு 2008ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்றது.

– 1999, நான் கொலை செய்யும் பெண்கள், முதற் பதிப்பு: டிசம்பர் 2007, கனகலதா வெளியீடு, சிங்கப்பூர்.

லதா லதா எனப்படும் கனகலதா கிருஷ்ணசாமி ஐயர் சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இலங்கையில் பிறந்து, சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறியவர். சிங்கப்பூர் தேசிய நாளிதழான தமிழ் முரசில் நீண்ட காலம் துணையாசிரியராகப் பணியாற்றுபவர். இவர் எழுதிய நான் கொலை செய்த பெண்கள் என்ற புத்தகத்திற்கு 2008 ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது (தமிழ்) வழங்கப்பட்டது. வாழ்க்கைக் குறிப்பு இலங்கையில் நீர்கொழும்பில் பிறந்த கனகலதா நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *