கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2025
பார்வையிட்டோர்: 5,539 
 
 

(1993ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம் – 1

‘சினேகிதர்களுடன் சேர்ந்து காரில் போயிருக்கலாமா’- தியாகராஜன் சூட்கேசைத் தூக்கி இருக்கைக்கு மேல் வைத்தபோது யோசித்தான். 

அவர்களுடன் பிரயாணம் செய்தால் எடின்பரோவி லிருந்து லண்டன் போய்ச் சேர ஒரு நாளைக்குமேல் எடுக்கலாம்; ரெயிலில் என்றால் இரவு பன்னிரண்டு மணிக்கு முதல் போய்ச் சேர்ந்து விடலாம். 

அவனுடைய சினேகிதர்கள் எப்போது இந்த ட்ரெயினிங் முடியும் என்று காத்திருந்தவர்கள்போல் மத்தியானம் பயிற்சி முடிந்தவுடனேயே குடித்துக் கும்மாளம் போடத் தொடங்கி விட்டார்கள். 

தியாகராஜன் பக்குவமாக ஒதுங்கிக் கொண்டான். கடந்த இரண்டு கிழமைகளாகக் காலையில் ஒன்பது மணியிலிருந்து பின்னேரம் நான்கு மணி வரை ஓயாமல் லெக்ஸர் நடந்து கொண்டிருக்கும். அதன் பின்னரும் சினேகிதர்கள் ஒன்று சேர்ந்தால் மத்தியானம் நடந்த கொம்பியூட்டர் லெக்ஸர் பற்றிப் பேசிக் கொண்டிருப் பார்கள்; கொம்பியூட்டர் பற்றிக் கதைக்காத நேரங்களில் காதலிகள் பற்றிக் கதைக்கத் தொடங்கி விடுவார்கள். தியாகராஜனைத் தவிர இந்தியரோ கறுப்பரோ யாரும் அந்தக் குழுவில் இல்லை. ஆங்கிலேய இளைஞர்களுடன் சேர்ந்து அவர்களைப் போல் அரட்டையடிக்க தியாகுவால் முடியவில்லை. 

தியாகுவின் சினேகிதன் மால்கம் ஹரிசன் நல்லவன்; தியாகுவின் தர்ம சங்கடங்களைப் புரிந்து கொண்டவன்; இயலுமானவரையில் தியாகுவுடன் திரிவான். தனக்காக மால்க்கம் தன் சந்தோசங்களைத் தவிர்த்துக் கொள்வதை தியாகு விரும்பவில்லை. 

மால்க்கம் ஹரிஸனின் காரில் இவனையும் வரச் சொல்லிக் கேட்டான். தியாகு தான் ரெயினில் லண்டனுக்குப் போவதாகச் சொல்லி விட்டான். 

மால்கமும் சினேகிதர்களும் மத்தியானமே புறப்பட்டு விட்டார்கள். எடின்பரோவிலிருந்து லண்டனுக்கு நானூறு மைல்களாவது இருக்கலாம். அதை எட்டு  அல்லது ஒன்பது மணித்தியாலங்களில் கடந்து விடலாம். ஆனால் அந்தக் கூட்டம் எந்தக் கிளப்பில் அல்லது எந்த போரில்’ கும்மாளம் போட்டுக் கொண்டிருக்குமோ என்ற பயத்தில் தியாகு மறுத்து விட்டான். 

”ஏன் இந்தச் சாட்டெல்லாம், ராதிகாவைப் பார்க்காமல் உன்னால் இருக்க முடியாது என்று சொல்லேன்” – மால்க்கம் நண்பனைச் சீண்டினான். 

தியாகு மால்க்கத்திற்குப் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டான். 

“ராதிகாவைப் பார்க்காமல் தன்னால் இருக்க முடியாதா?” தியாகு தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். 

ரெயின் இன்னும் வெளிக்கிடவில்லை. கொம்பனியின் காசில் முதல் வகுப்பில் பிரயாணம் செய்வது சுகம்தான். இவனுக்கு முன்னால் ஒரு மத்தியதர வயதுக்காரப் பிரமுகரைத் தவிர யாரும் இல்லை. 

அந்த மனிதர் இவனைப் பார்த்துப் புன்னகைத்தார். கௌரவமான மனிதர் என்று ஒரு நிமிடத்தில் மதிப்பிடக் கூடிய தோற்றம். இன்னும் ஆறு மணித் தியாலங்களுக்கு இருவரும் பிரயாணம் செய்ய வேண்டும். 

இவன் கையிலிருந்த கார்டியன் பேப்பரை விரித்தான். அவர் ஏதோ சொல்லத் தொடங்குவதற்காகத் தொண்டையைக் கனைத்தார். 

தியாகு நிமிர்ந்து பார்த்தான். 

“என்ன இருக்கும் பேப்பரில், எல்லாம் இந்த யுத்தத்தைப் பற்றித்தானே இருக்கும்” அவர் அலுப்புடன் சொன்னார். 

தியாகுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட எல்லா வெள்ளைக்காரர்களும் இந்த வளைகுடா யுத்தத்தை ஆதரிக்கிறார்கள் என்றுதான் இதுவரைக்கும் நினைத்திருந்தான். 

இவர் வித்தியாசமான மனிதராக இருக்கிறாரே! 

இவன் பத்திரிகையை மடியில் வைத்தபடி சொன்னான். 

“எதையாவது எழுதி பத்திரிகை விற்பனையானால் சரி என்று இந்தப் பேப்பர்கள் போட்டி போடுகின்றன”. தன் அரசியல் பாகுபாட்டை அவரிடம் சொல்லாமல் அவன் பொதுப்படையாகச் சொன்னான். 

“என்னை அறிமுகம் செய்யாமலே உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேனே” கிழவர் குரலில் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்ற பாவம் தொனித்தது 

“எனது பெயர் ஜேம்ஸ் மக்பேர்ஸன்…” கிழவர் கை குலுக்கினார். 

“எனது பெயர் ராஜன்’ ஆங்கிலேயர்களுக்குத் தன் முழுப் பெயரையும் சொல்லி அவர்களைத் திண்டாட வைத்து அவன் பட்ட பாடு அவனுக்குத்தான் தெரியும். சுருக்கமான பெயராக இல்லாவிட்டால் அவர்களின் வாயில் எங்கள் பெயர்கள் படும்பாடே பெரிய பரிதாபம் தான். 

“ராஜன்?” கிழவர் சந்தேகத்துடன் இவனைப் பார்த்தார். 

தியாகராஜன்… தியாகுவைக் குறைத்து விட்டு ராஜன் என்று மட்டும் தன்னை அறிமுகம் செய்து கொள்வான். 

கிழவன் இவனை உற்றுப் பார்த்தார். முகத்தில் எத்தனையோ விதமான சிந்தனைகள் தோன்றி மறைந்ததின் எதிரொலிப்பு தெரிந்தது. வெள்ளைக்காரன் தன் நரைத் தலையைத் தடவிக்கொண்டு இவனைப் பார்த்துப் புன்னகைத்தார். 

“இலங்கையனா” 

தியாகு ‘யேஸ்’ என்றான். 

“உன்னைச் சந்திப்பதில் சந்தோசமடைகிறேன், நானும் இலங்கையில் தான் பிறந்தேன். சுதந்திரம் கிடைத்த பின் எடின்பரோவுக்கு வந்துவிட்டோம்” 

கிழவனின் முகத்தில் ஒரு பெரிய மலர்ச்சி. 

“என்ன ஆச்சரியம்… இலங்கையிற் பிறந்த இரு மனிதர்கள்…” கிழவர் தலையை ஆட்டிக்கொண்டார்.

ரெயின் புறப்படத் தொடங்கிவிட்டது. 

எடின்பரோவின் மலைத் தொடர்கள் நகரத் தொடங்கியது போலிருந்தது. தியாகு ஓடும் ரெயினின் ஜன்னலால் வெளிப்புறம் பார்த்தான். 

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் பெரிய மாமா வீட்டுக்குப் போய்விட்டுப் பதுளையிலிருந்து ட்ரெயின் எடுத்து கொழும்புக்கு வரும் ஞாபகம் வந்தது. 

பின்னேரம் நான்கு மணிதான் என்றாலும் வின்ரரின் காடிய இருளும் குளிரும் ஜன்னலால் தெரியும் காட்சிகளை மறைத்துக் கொண்டிருந்தது. 

“எடின்பரோ பிடித்ததா” கிழவர் தன் ஓவர் கோட்டைக் கழட்டி விட்டு சேர்ட்டுடன் உட்கார்ந்திருந்தார். இவர்களுக்கு இதெல்லாம் பழக்கம், எத்தனை வயதென்றாலும் குளிரே தெரியாத மாதிரி நடக்கும் கிழவர்களை அவன் கண்டிருக்கிறான். 

அவர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லத் தயங்கினான். கடந்த இரண்டு கிழமைகளும் எடின்பரோவில் நின்றிருந்தாலும் பகல் நேரம் முழுக்க ட்ரெயினிங்கில் முடிந்துவிட பின்னேரம் நண்பர்களுடன் சுத்தியடிக்கத்தான் சரியாக இருந்தது. சனிக்கிழமை எடின்பரோ கோட்டைக்குப் போயிருந்தான். அங்கிருந்து எடின்பரோவைப் பார்ப்பது கண்டி அல்லது பதுளை மலைச் சாரல்களிலிருந்து நகரங்களைப் பார்ப்பது போலத்தானிருக்கிறது. 

எடின்பரோவைச் சுற்றிக் கடலிருக்கிறது, நுரை பொங்கும் அலைகள் குன்றுகளிலும் பாறைகளிலும் அடித்துத் திரும்பியது. பதுளை மலை முகட்டிலிருந்து பனி மூடிய காலைகளில் – மலையடியின் நகரத்தைப் பார்த்தால் புகார்க்குள்ளால் இந்தியத் தொழிலாளியின் சிறு குடிலின் மெல்லிய விளக்கொலி மின் மினியாய்த் தெரியும். 

“உங்களின் அழகிய நகரத்தைப் பற்றி நான் அதிகம் சொல்லுமளவுக்கு என்னிடம் அனுபவமில்லை” மரியாதையாகச் சொன்னான். 

வித்தியாசம்தான், லண்டனுக்கும் எடின்பரோவுக்கும் எத்தனையோ வித்தியாசம். பதுளைக்கும் கொழும்புக்கு முள்ள வித்தியாசம் போல் எத்தனையோ வித்தியாசம் என்பதைச் சொன்னால் அவனுக்கு விளங்கப் போவதில்லை. 

சுவாத்திய நிலையில், சூழ்நிலையில், மனிதரின் பழக்க வழக்கத்தில் மட்டுமா கொழும்புக்கும் பதுளைக்கும் வித்தியாசம்? 

அவன் தற்செயலாய் ஏதோ சொல்ல நினைத்ததும் அதே நேரம் அவன் மனத்திரையில் மறந்து விட்டதாக நினைத்த எத்தனையோ சம்பவங்கள் நிழலாடின. 

அடிமனத்தில் உறைந்து கிடந்த எத்தனையோ பழைய ஞாபகங்களை இந்த எடின்பரோ ஞாபகப்படுத்தியதை அவன் உணர்ந்தான். அந்த உணர்வின் துயரில் நேரத்தைச் செலவழித்தால் தன் மனநிலையில் என்ன மாற்றம் வரும் என்று அவனுக்குத் தெரியும். 

எடின்பரோவுக்கு அவன் ட்ரெயினிங் விஷயமாக வந்திருந்தான். வந்த ஒன்றிரண்டு நாட்கள் இந்த நகரின் கம்பீரமான, கலைத்துவமான, மோகனமாக அழகை அவன் ரசிக்கவில்லை. எடின்பரோ வந்து மூன்றாம் நாள் மால்க்கமும் மற்றவர்களும் கிளப்புக்கு குடிக்கப் போனபின் எடின்பரோ ரோட்டையைச் சுற்றியபடி நடந்தான். அன்று – அவன் எடின்பரோ கோட்டைக்கு ஏறி எடின் பரோ நகரைப் பார்த்தபோது திடிரென்று அவன் மனத் தில் பெரிய மாமாவும் செந்தாமரையும் சாரதாவும் வந்து நின்றார்கள். 

அவர்களுடன் சேர்ந்து பதுளையின் உயர்ந்த மலைச்சாரல் தோட்டங்களில் நடந்த ஞாபகம் மனதைக் குடைந்தது. சாரதாவைப்பற்றி அதிகம் நினைக்கக் கூடாது என்று தனக்குத் தானே செய்து கொண்ட முடிவை எடின்பரோ நகரம் சிதைத்து விட்டது 

நீண்ட நேரம் கோட்டையின் விளிம்பில் நின்றபடி தூரத்தே கல கலப்பாக இருக்கும் எடின்பரோவை வெறித்துப் பார்த்தான். வெள்ளைக்காரர்கள் செல்லமாக ஆடம்பரமாக வாழ்கிறார்கள். 

பதுளை மலைமுகடும் எடின்பரோ கோட்டையின் விளிம்புக்கும்தான் எத்தனை வித்தியாசம்! 

“என்ன தூங்கப் போகிறீர்களா” ஜேம்ஸ் மக்பேர்ஸன் கேட்டார். 

ரெயில் இருளைப் பிழந்து கொண்டு எண்டன் நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. 

“லண்டன் போய்ச் சேர இரவு பதினொரு மணியாகலாம். அதற்கிடையில் நானும் ஒரு குட்டித்தூக்கம் போடத்தான் செய்வேன்”

ஜேம்ஸ் உற்சாகத்துடன் சொன்னார்; தான் எப்போதும் எதையும் திட்டமிட்டுச் செய்வதான பிரகடனம். 

“எனக்குப் பதினொரு மணிக்குமேல் நித்திரை செய்து பழக்கமில்லை”

“நல்ல பழக்கம், உன் வயதுக்கு நல்லது, எனக்கு அறுபது வயது, நித்திரையே வராது, பிரயாணம் செய்த களைப்பில் நித்திரை வந்தால் அதைக் குழப்பிக் கொள்ள மாட்டேன். எல்லாம் எங்கள் அனுபவத்தையும் முயற்சிகளையும் பொறுத்தது என்று நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்” 

கிழவர் பேப்பர் எடுத்து விரிக்கத் தொடங்கினார். ஜேம்ஸ் கிழவர் தியாகராஜனுடன் பழகும் ஆங்கிலேயர் போலில்லை. ஸ்கொட்டிஸ் மனிதர்கள் சினேகிதமாகப் பழகக்கூடியவர்கள் என்பதற்கு மால்க்கம் ஒரு உதாரணம். 

தியாகராஜனின் நண்பன் மால்க்கத்தின் தாய் ஸ்கொட்டிஷ், தகப்பன் ஆங்கிலேயன் ; மிகவும் அன்னி யோன்னியமாய்ப் பழகிக் கொள்வான். 

“எனது வயது உங்கள் வயதின் அரைவாசிதானாகிறது. உங்களைப் போல அனுபவங்கள் வரும்போது, எனது முயற்சிகளையும் திட்டமிட்டுக் கொள்கிறேன்.” 

கிழவர் வாய் விட்டுச் சிரிந் தார். 

அவனுக்கு அவரைப் பிடித்து விட்டது. 

ரெயின் லண்டனுக்கு வந்து சேர்ந்தபோது இரவு பதினொரு மணிக்கு மேலாகி விட்டது. 

ஜேம்ஸ் தனது கொலிஜ் விடயமாக ஒரு கொன்பரன்ஸ்சுக்கு வந்தாராம். லண்டனில் தான் தங்கி நிற்கும் ஹோட்டலின் நம்பரையும் கொடுத்தார். 

அவர் ஒரு பிலோசபி லெக்ஸரர். இந்தியத் தத்துவத்தில் அவருக்கு அபாரமான ஈடுபாடு. அவனுடன் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பினார். 

தியாகராஜாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. “நான் ஒரு இலங்கையன்தான், இந்து சமயம் என்று சொல்லிக் கொள்பவன்தான். ஆனால் எனக்கு உங்களுடன் சமமாகப் பேசுமளவுக்கு இந்துத் தத்துவத்தைப் பற்றி எனக்குத் தெரியாது” அவன் தாழ்மையுடன் சொன்னான். 

ஜேம்ஸ் கல கலவென்று சிரித்தார். அவர் பற்கள் வெண்மையாக இருந்தன. செயற்கைப்பற்களாக இருக்கலாம். இல்லா விட்டால் ஆங்கிலேயர்களுக்கு அறுபது வயதில் இவ்வளவு அழகான பற்கள் இருக்காது. 

“வாழ்க்கையே ஒரு தத்துவம்தானே” ஜேம்ஸ் தன் சூட்கேசைத் தூக்குக் கொண்டார். 

“கல்யாணமாகி விட்டதா” அவர் குரலில் கனிவு. 

“இல்லை” என்றான் இவன் கல்யாணம் முடிவானதைச் சொல்லலாமா? 

“உன்னுடைய வயதில் எனக்கு மூன்று குழந்தைகள் பிறந்து விட்டார்கள். டோன் வேஸ்ட் யுவர் டைம்” கிழவர் குறும்புடன் அவன் தோள்களைத் தட்டிக் கொடுத்தார். 

“காதலி எப்படி” கிழவர் மிகவும் குறும்புக்காரன்தான் அவன் சங்கோஜத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். 

“உன் அவசரத்தைப் பார்த்தால் அவளில் நீ பைத்தியமாய் இருப்பாய் என்று தெரிகிறது” ஜேம்ஸின் குரலில் இன்னும் குறும்பு. 

ராதிகாவில் நான் பைத்தியமாக இருக்கிறேனா? தனக்குள் வந்த கேள்வியைத் தானாகத் தடைசெய்து கொண்டான் “கீப் இன் ரச் . ஸீ யு” கிழவர் லண்டனின் நெருக்கமான சனத்திரளில் ஒருத்தராய் மறைந்து விட்டார். அவர் கொடுத்த டெலிபோன் நம்பரை எடுத்து வைத்துக் கொண்டான். 

நேரம் பன்னிரண்டு மணியாகப் போகிறது. வீட்டுக்குப் போக அண்டர் கிரவுண்ட் ரெயினுக்குப் போய் அவதிப் பட அவன் தயாராக இல்லை. 

ஸ்டேசனை விட்டு வெளியே வந்ததும் தைமாதக் குளிர் தோலை ஊடுருவிக் கொண்டு எலும்பைத் துளைப்பது போலிருந்தது. 

டாக்ஸியில் ஏறுமட்டும் குளிர் நடுக்கம் தாங்க முடியாம லிருந்தது. நிம்மதியாக கண்ணை மூடியதும் ராதிகாவின் முகம் மனக்கண்ணில் தவழ்ந்தது. 

இன்னும் அரைமணித்தியாலத்தில் அவளின் தழுவல் கிடைக்கும் என்ற நினைவே உடம்பில் திடீரென்று சூட்டை உண்டாக்கியது. 

எப்படி அவளைப் பிரிந்து இரண்டு கிழமைகள் எடின் பரோவில் சீவித்தேன்; அவனுக்கே விளங்கவில்லை. 

அவளுக்கும் அவனுக்குமுள்ள நெருக்கம் எப்படிப்பட்டது என்பதை எடின்பரோவில் தங்கியபோதுதான் உணர்ந்தான். 

அத்தியாயம் – 2

டாக்ஸி போய்க் கொண்டிருந்தது. வீடுவர இன்னும் ஒன்றிரண்டு நிமிடங்களேயிருந்தன. டாக்ஸிக்காரனுக்குக் கொடுக்க காசை எடுத்தான். 

அடுத்த கை சூட்கேசைத் தூக்கியது. 

டாக்ஸிக்காரன் காசைப் பெற்றதும் ‘குட் நைட் சேர்’ என்றான். 

அவனுடைய வீட்டின் மேல்மாடியில் லைட் எரிந்து கொண்டிருந்தது. வழிமேல் விழிவைத்து அவள் பார்த்திருப்பாள். 

இன்று வரப்போவதாகச் சொன்னதுமே “உங்களுக்கு, என்ன சமைத்து வைக்கலாம்” என்று கேட்டாள் ராதிகா. 

அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது. 

ராதிகாவுக்கும் சமையலுக்கும் வெகுதூரம் இருந்தாலும் இவனுக்காக எதையாவது சமைக்க ஆரம்பித்து இவனிடம் வம்புக்குப் போவாள் அவள். 

வீட்டுக் கதவைத் திறந்ததும் அவள், மேல்மாடியிலிருந்து தட தடவென்று ஓடிவரும் சத்தம் கேட்டது. 

“ஹலோ ராஜன்” ஓடி வந்தவள் இவனில் கொடியாய்த் துவண்டாள். 

வெளியே பனி பெய்யத் தொடங்கியிருக்க வேண்டும். சட்டென்று குளிர் கதவிடுக்கால் வரத் தொடங்கியது. “டார்லிங் ஐ மிஸ்ட் யு” அவளின் முணு முணுப்பு அவன் இதழ்களில் அரை குறையாய்ப் படிந்தன.

அவன் அதிகம் பேசாதவன். அதுவும் இந்த மாதிரிச் சந்தர்ப்பத்தில் என்ன பேச இருக்கிறது? 

“எப்படிப் பிரயாணம்” 

“இதைவிட விரைவாக வரமுடியவில்லை” அவன் அவளின் கன்னத்தைச் சீண்டினான். 

“எப்படி எடின்பரோ” அவள் கேட்ட கேள்விக்கு அவன் சொல்ல மறுமொழி வாயில் வரமுதலே அடங்கி விட்டது. எடின்பரோவின் குளிரும், அமைதியும், மலைமுகடுகளும் பதுளையை ஞாபகப் படுத்தியது என்று சொன்னால் ராதிகா எப்படி நடந்து கொள்வாள் என்று தெரியாது. 

“எப்படி எடின்பரோ என்றால்…” 

அவன் தோள்களில் தொங்கிய அவள் கரங்களை விலக்கி விட்டு அவள் கண்களை உற்றுப் பார்த்தான். 

இவள் என்ன இவள் கண்களுக்குள் காந்தத்தையா புகுத்தி வைத்திருக்கிறாள்? அப்படியே அவனுடையவனாகி விடுகிறாளே! 

“பசிக்கவில்லையா” அவள் செல்லமாய்க் கொஞ்சினாள். “கடையில் சாப்பாட்டை மைக்ரோ ஆவணில் வைத்திருக்கிறாயா” அவன் கிண்டலாகக் கேட்டான். 

“ஏதோ சாப்பாடு தயாராக வைத்திருக்கிறேன் என்ற நன்றியில்லாமல்…” அவள் செல்லமாய்ச் சிணுங்கினாள். இவனுக்குக் கடைச் சாப்பாடு பிடிக்காது. ஆனாலும் அவள் என்ன செய்து வைத்திருந்தாலும் அவன் அவளுக்காகச் சாப்பிடத் தயார். 

“நீ எப்படி இருக்கிறாய் ராதிகா, படிப்பெல்லாம் எப் படிப் போகிறது” அவன் டையைக் கழட்டிக்கொண்டு கேட்டான். 

“படிப்புக்கென்ன மூட்டை மூட்டையாகப் புத்தகங்களைக் குவித்து வைத்திருக்கிறேன். இந்த வருடம் என் சோதனை முடியும் வரைக்கும் ஒரு இடமும் போவதில்லை என்று முடிவு கட்டியிருக்கிறேன்”. 

“என்னிடம் கூட வரமாட்டாயா” 

“என்னால் அது முடியுமா” 

அவள் பட்டென்று கேட்டாள். அவளுக்கு ஒளித்து மறைத்து ஒன்றையும் பேசமுடியாது. நேரே நேரே எதையும் சொல்லி விடுவாள். லண்டனில் பிறந்து வளர்ந்த தன்மை அதுதான். எதையும் சாட்டுக்கும் போக்குக்கும் சொல்ல மாட்டாள். தனக்குப் பிடிக்காதவர்களுடன் பேச்சு வார்த்தை கூட வைத்துக்கொள்ள மாட்டாள். 

அவளுக்குப் பதில் சொல்ல நினைத்தவனுக்கு சட்டென்று ஒலித்த டெலிபோன் தடைபோட்டது. 

“என்ன இந்த நேரத்தில் யார் போன் பண்ணுகிறார்கள்?” அவன் கேள்விக்குறியுடன் முகத்தைச் சுழித்துக் கொண்டான். 

ராதிகாவின் முகத்தில் ஒரு வினாடியில் தோன்றி மறைந்த அதிருப்தியை அவன் கவனிக்கவில்லை. 

அவன் கைக் கடிகாரத்தைப் பார்த்தான். ஒரு மணிக்கு ஐந்து நிமிடமிருந்தது. 

”ஹலோ…” 

“நான்தான் ராமநாதன் பேசுறன்” தியாகராஜன் தன் ஆச்சரியத்தைக் காட்டிக் கொள்ளவில்லை. 

“ம்…” ராமநாதனின் குரலில் தயக்கம். 

“என்ன விசயம்…” தியாகு பொறுமையாய்க் கேட்டாலும் அவன் வயிற்றில் ஏதோ பூச்சி ஊர்வது போன்றதொரு உணர்ச்சி. 

சாரதாவுக்கு ஒன்றும் நடக்காமலிருக்க வேண்டும். 

அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். 

“சாரதா ஹொஸ்பிட்டலி லிருக்கிறாள்” 

ராமநாதன் ரேடியோ அறிவிப்பாளர் சொல்வது போல் மெளனமாகி விட்டார்.

இவன் ஒன்றும் சொல்லாமல் நின்றான். 

எத்தனையோ கேள்விகள் கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனால் தொண்டைக்குள் ஏதோ கல் அடைத்துக் கொண்டது போல் இருந்தது. 

“என்ன சுகவீனம்” தியாகுவின் குரல் அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. 

“கொஞ்ச நாளாகச் சுகமில்லை… போன கிழமைதான் ஹொஸ்பிட்டலில் அட்மிட் பண்ணினன்… வயிற்றில் ரியுமர் என்று டொக்டர் சொன்னார். ஒப்பரேஷன் செய்ய வேண்டுமாம்.” 

ராமநாதனின் தொனி பெலவீனமாக இருந்தது. 

“நான் போன கிழமையிலிருந்து போன் பண்ணினன். நீங்கள் ஸ்கொட்லாந்துக்குப் போய் விட்டதாகவும் இன்று வர இருப்பதாகவும் சொன்னாள்.”

போன கிழமையிலிருந்து ராமநாதன் போன் பண்ணிக் கொண்டிருக்கிறார்! 

ராதிகாவுடன் அவன் ஒவ்வொரு இரவும் ஸ்கொட்லாந்திலிருந்து பேசிக் கொண்டிருக்கிறான். அவள் சாரதா சுகமில்லாமலிருப்பது பற்றி மூச்சுக் கூட விடவில்லை!

தியாகு சாப்பிட்டு மேசையில் மிக ஒழுங்காகக் கோப்பை களையும் கிளாஸ்களையும் வைத்துக் கொண்டிருக்கும் ராதிகாவைப் பார்த்தான். 

அவள் இவன் தன்னைப் பார்ப்பது தெரிந்தும் தெரியாதது போல் தன் வேலையில் ஈடுபட்டிருந்தாள். 

சாரதா எந்த ஆஸ்பத்திரியிலிருக்கிறாள் என்ன வார்ட் என்றெல்லாம் கேட்டுவிட்டு போனை வைத்தான் தியாகு. 

வெளியில் திடீரென்று மழை தொடங்கியிருக்க வேண்டும். பொட்டுப் பொட்டென்று மழைத்துளிகள் ஜன்னலிற் தெறித்தது. 

சிறிது நேரத்துக்கு முதல் வெளிச்சமும் கலகலப்புமாக இருந்த இதே இடம் இப்போது இருண்டு போய் சூனியமாகத் தெரிந்தது. 

“சாப்பாடு ஆறப்போகிறது” 

ராதிகா இவனுக்காகச் சாப்பாட்டு மேசையிற் காத்திருந்தாள். டெலிபோன் வைத்திருக்கும் மூலையில் நின்றபடி ராதிகாவை ஏறிட்டுப் பார்த்தான் தியாகு, 

அவள் உலகத்தில் ஒன்றும் நடக்காத மாதிரி முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள். 

சாரதா சுகமில்லாமல் ஒரு கிழமையாக ஆஸ்பத்திரியிலிருப் பதைப் பற்றி ஒரு துளியும் அக்கறைப் படாத ராதிகாவின் அலட்சியத்தை அவனால் தாங்க முடியாதிருந்தது. 

அதே நேரம் சாரதாவின் பேச்செடுத்தால் நடுச் சாமத்தில் ராதிகா ஒரு திருவிழாவே நடத்தி விடுவாள்.

சாதாரண நேரங்களாயிருந்தால் சாரதாவை ராதிகா அலட்சியப்படுத்துவதை அவன் தாங்கிக் கொள்வான் அல்லது தாங்கிக் கொள்வதாக நடித்துக் கொள்வான். ஆனால் சாரதா ஹொஸ்பிட்டலிலிருப்பதை இவனிடம் ஒரு கிழமையாகச் சொல்லாமலிருக்கிறாள் என்பதை அவனால் தாங்க முடியாதிருந்தது. 

ராதிகா இவனையுற்றுப் பார்த்தாள். எப்போது இவன் கேள்வி கேட்பான் என்று எதிர்பார்ப்பது போலிருந்தது அவள் தோற்றம். 

என்ன செய்வது? 

இவளிடம் சாரதாவைப் பற்றிக் கேட்டு நிம்மதியைக் குலைத்துக் கொள்வதா அல்லது இவள் சாரதா பற்றிய விடயங்களை இப்படித்தான் அலட்சியம் செய்வாள் என்பதை ஒத்துக்கொண்டு ஒன்றும் நடக்காதது போல் நடித்துக் கொள்வதா? 

இரண்டு கிழமையாக வெளியூரிலிருந்து வந்த களைப்பு ராமநாதனின் டெலிபோனுடன் எங்கேயோ பறந்து விட்டது. 

சாரதா போன கிழமை ஹொஸ்பிட்டலுக்கு அட்மிட் பண்ணப் பட்டாளாம். என்ன ஆச்சரியம்! 

எடின்பரோக் கோட்டையின் சுவர் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு பழைய நினைவுகளை அசைபோட்ட அதே நேரம் அவள் இங்கே அட்மிட் பண்ணப்பட்டிருக்கிறாள். 

வயிற்றில் ஏதோ ரியுமர். அதைப்பற்றி விளக்கமாகச் கேட்க இவன் தயாராக இல்லை. 

தன்னைத்தானே சித்திரவதைப் படுத்திக்கொள்ளத் தயாராக இல்லை. 

ராமநாதன் சாரதாவின் கணவர், அவரை இவனுக்குப் பிடிக்காது. அந்த விடயம் ராமநாதனுக்கும் தெரியும். இருந்தும் சாரதா சுகமில்லாத விடயத்தை அவரே இவனுக்கு அறிவிப்பதென்றால் அவளின் நிலை கடுமையாகத் தானிருக்க வேண்டும். 

சாரதாவை உடனே போய்ப் பார்க்க வேண்டும் போலிருந்தது. இந்த இரவில் வார்ட்டில் நுழைய விடுவார்களோ தெரியாது. இருதயத்தை யாரோ குடைவது போலிருந்தது. “சாப்பாடு காத்திருக்கிறது” ராதிகா குரலையுயர்த்தினாள். அவன் அவளை ஏறிட்டுப் பார்த்தான். 

“அப்படி என்ன என்னை எரித்து விடுமாற்போல்ப் பார்க்கிறீர்கள்” என்பதுபோல் அவளும் முறைத்துப் பார்த்தாள். அதுதான் ராதிகாவின் குணம். விட்டுக் கொடுக்க மாட்டாள். 

ராதிகாவின் முகத்தில் அவன் பார்வை பதிந்திருந்தாலும் சிந்தனை சாரதாவை நோக்கியோடியது. சாரதாவை அவன் கண்டு ஒரு வருடமாகிறது. 

“என்னில் உண்மையான அன்பிருந்தால் என்னை இனி வந்து பாராதே” 

சாரதா இப்படித்தான் போனவருடம் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முதல் சொன்னாள். சொல்லும்போது அவள் குலுங்கிக் குலுங்கியழுதாள். 

“நீ என்னை வந்து பார்ப்பதால் எனக்குக் கெட்டபேரும் அவமானமும்தான் கிடைக்குமென்றால் அதன் விளைவை உன்னால் யோசித்துப் பார்க்க முடியாதா ராஜன்?” குரலடைக்க விம்மிய அந்தக் கேள்வி இன்னும் அவன் செவிகளில் ஒலிக்கிறது. 

சாரதா இவனை ஒருநாளும் ‘தியாகராஜன்’ என்றோ ‘தியாகு’ என்றோ கூப்பிட்டிருக்க மாட்டாள். இவன் ஐந்து வயதாகவும் அவள் ஏழு வயதாகவும் இருக்கும் போது பனி படிந்த ஒரு காலை நேரம் இந்தச் சிறுபையன் மெல்லிய குளிர்காற்றில் தலைமயிர் பறக்க பூசைக்கு வெண் மல்லிகை பறித்துக் கொண்டிருந்த ஏழு வயதுச் சாரதா என்ற குறிஞ்சி மலரைக் கண்டான். “உன் பெயர் ராஜன்தானே” அவள் கண்கள் சிரிக்க, முகம் மலர, குரல் கணீரென்று கேட்டாள். இவன் தலையாட்டினான். 

“அப்பா சொன்னார் நீ நல்லாப் பாடுவியாம். நல்லாக் கணக்குச் செய்வாயாம். நல்ல கெட்டிக்காரனாம்” ஏழு வயதுச் சாரதா இவனைப் பற்றிய மதிப்புடன் சொன்னாள். 

தூரத்தில் மலை முகட்டைப் பனிப்படலம் மறைத்துக் கொண்டிருந்தது மலைச் சாரல்களில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். இவனும் இவன் தகப்பனும் இரவுதான் வந்திருந்தார்கள். இவர்கள் வரும் போது சாரதா நல்ல நித்திரை. நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்ததாகத் தியாகராஜனின் பெரிய மாமா சத்தியமூர்த்தி, சாரதாவின் தகப்பன் சொன்னார். 

தியாகராஜன் பெரிய மாமாவை எப்போதாவ கொழும்பிற் காணுவான். அவருக்கு இப்படி ஒரு மகள் இருக்கிறாள் என்பதும் அவளுக்குக் கொழும்பு உறவுகளில் ஒரு தொடர்புமில்லை என்பதையும் அறிந்துகொள்ள முடியாத பிஞ்சு வயது அவனுக்கு. 

“அம்மா பூசை பண்ணப் போறாங்க நீயும் வாறியா” அவளின் மலைநாட்டுத் தமிழ் அவனுக்குப் புதினமாக இருந்தது. 

கொழும்பில் அவர்களின் வீட்டில் ஒரு வேலைக்காரி முத்தம்மா இருக்கிறாள். அவள் இப்படித்தான் பேசுவாள். இதெல்லாம் விளங்கிக் கொள்ளத் தெரியாத பிஞ்சு வயது அவனுக்கு இதெல்லாம் ஒரு கால் நூற்றாண்டுக்கு மேல் நடந்த கதைகள். 

இன்று அவள் லண்டனில் ஒரு ஆஸ்பத்திரியில் நோயாளியாக இருக்கிறாள். 

அவனுக்கு இப்போது பாட வராது. கொம்பியூட்டரிற் புரோக்கிறாம் செய்யத் தெரியும். லண்டனில் ராதிகா மல்லிகை பூ வைத்துப் பூசை பண்ண மாட்டாள். ஐந்து வயதில் அவனுக்கிருந்த உரிமை முப்பது வயதிலில்லை.

அன்று அவன்தாய் அவனருகிலிருந்தால் அவனுக்குச் சாரதாவைப் பார்க்கும் உரிமை கிடைத்திருக்காது பதுளை யிலுள்ள ஒரு நண்பனின் கல்யாணத்துக்கு வந்திருந்த அவன் தகப்பன் நீண்ட காலமாகத் தங்கள் குடும்பத்துடன் ஒரு உறவும் வைத்துக் கொள்ளாமல் தனிக் குடித்தனம் நடத்தும் தன் மைத்துனர் சத்தியமூர்த்தியைப் பார்க்க வந்திருந்தார். 

இந்தச் சிக்கலான விபரங்கள் தெரியாத வயதில் சாரதாவைச் சந்தித்தான். அவனுக்கு அப்போது இரண்டு தங்கச்சிகள் இருந்தார்கள். வீட்டில் அவனே பெரிய பையன். சாரதாவுடன் நின்றிருந்தபோது அவன் சின்னப் பையன். செல்லப் பையன். “ராஜன் அடிக்கடி வந்திட்டுப் போயேன்” இரண்டு நாள் நின்று விட்டு வெளிக்கிட்ட போது மலைச் சாரல் வரைக்கும் ஓடிவந்து சாரதா சொன்னாள். 

ஏதோ அவன் அடுத்த மலைச் சாரலில் வசிப்பதாக நினைத்துக் கொண்டாளோ என்னவோ. 

இவனின் தகப்பன் அருளம்பலம் தன் மைத்துனர் சத்திய மூர்த்தியைப் பார்த்துக் கொண்டார். 

அப்படிப்பட்டவள்தான் போன வருடம் “தயவு செய்து இனி என்னை வந்து சந்திக்காதே” என்று கெஞ்சினாள். 

”என்ன, என்னுடன் பேசவே மாட்டியளா” இது ராதிகாவின் கேள்வி. 

அத்தியாயம் – 3

இவளுடன் பேசாமல் அவன் எப்படி இருப்பான்? 

‘ஏன் சாரதா ஆஸ்பத்திரிபிலிருக்கிறாள் என்பதைச் சொல்லவில்லை’ என்ற கேள்வி அவன் நாக்கின் நுனி வரையிலும் வந்து விட்டது. எவ்வளவு நேரம்தான் பொறுத்துப் பார்த்தாலும் அவன் கோபம் ஆறப் போவதில்லை என்று தெரிந்தது. 

ராதிகா தன் பரீட்சைக்கு அவள் படித்துக் கொண்டிருக்கிறாள். அந்தக் காரணத்தால்தான் சாரதா ஹொஸ்பிட்டலில் இருக்கும் விடயத்தைச் சொல்ல மறந்து விட்டாள் என்று தியாகராஜன் தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொள்ளத் தயாராக இல்லை. 

ராதிகா சாரதா விடயத்தில் எப்படி நடந்து கொள்வாள் என்று தெரியும், அத்தோடு தன் அன்பையும் ராதிகா எப்படிச் சோதிப்பாள் என்று அவனுக்குத் தெரியாத தல்ல. 

ராதிகா சாதாரண பெண்ணா? மெடிகல் கல்லூரியின் கடைசி வருட மாணவி. உலகத்து விடயங்களை ‘இன்டெலெக்சுவல்’ ரீதியாக விளங்கிக் கொள்ளத் தெரிந்தவள். மனித உறவுகளை வெறும் சதையுணர்வுகளுக்குள்ளும் சம்பிரதாயக் கோட்பாடுகளுக்கும் நிறுத்திக் கொள்ளாமல் ஒரு மனிதன் தன் உறவை மற்ற மனிதர்களிடம் கௌரவமாகவும் ஒளிவு மறைவின்றியும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பவள். அந்தக் கோட்பாட்டை நடை முறையிலும் காட்டிக் கொள்பவள். 

அவர்களின் உறவு லண்டன் வாழும்பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உறவோ வாழ்க்கை முறையோ போலில்லை. அவர்கள் இனனும் கொஞ்சக் காலத்தில் திருமணம் செய்யப் போகிறவர்கள். ஆனால் அதற்கு முதலே கலியாணம் கட்டிக் கொள்ளாத தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், அவர்களின் பெற்றோர்களுக்கு ராதிகா வார விடுமுறையில் எங்கே போகிறாள் என்று தெரிந்தாலும் தெரியாத மாதிரி நடந்து கொள்கிறார்கள். 

லண்டனில் மனித உரிமை சட்டம் இந்தத் தாய் தகப்பன் மாரின் கட்டுப்பாடுகளைக் கடக்க ஏதுவாக இருக்கிறது.

கொழும்பில் தான் வளர்ந்தது போல் ராதிகாவின் தந்தை சிதம்பரவேலன் லண்டனில் தன் பெண்கள் இருவரையும் வளர்க்க முடியவில்லை. முதல் மகள் பவானி கிட்டத் தட்டத் தாய் தகப்பன் சொல்லியபடி வாழ்ந்து கணவன் நினைத்தபடி வாழ்கிறாள் என்று அவர்கள் தங்களுக்குள் சமாதானப் படுத்திக்கொண்டாலும் பவானி தன் குடும்பத்தில் எவ்வளவு தூரம் சந்தோசமாய் இருக்கிறாள் என்று அவர்களுக்குத் தெரியும். 

ராதிகா பெற்றோர்கள் சொன்னபடி கேட்க மாட்டாள் என்று தெரியும். தனக்கென்று ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கத் திறமையும் வழி முறைகளும் தெரிந்தவள். கெட்டிக்காரி, விட்டுக் கொடுத்தவள், பழைமைகளைக் கேட்பவள். 

அவளுடன் பேசிக் கொள்ளாமல் தியாகுவால் ஒரு மணித் தியாலம் கூடக் கழிக்க முடியாது. 

இப்போதிருக்கும் நிலையில் ஏதும் கதைக்க முயற்சித்தால் அவர்களின் உறவே ஒரேயடியாகச் சிதைந்து போகலாம். அவளைப் பற்றி அவனுக்குத் தெரியும். 

சாரதாவை ஒரு வருடம் பார்க்காமல் இருப்பதற்குச் சாரதாவின் உத்தரவுதான் காரணம் என்றால் அந்த உத்தரவே இவளின் கூத்துக்களால்தானே நடந்தது? 

எடின்பரோ மலைச் சாரல்கள், பனித்துளிகள், இரவின் அமைதி என்பன இலங்கையின் பதுளை நகரத்தையும் சாரதாவையும் அவளின் பழைய நிகழ்ச்சிகளையும் கிளறி விட்டது என்றால் இப்போது ராமநாதனின் டெலிபோன் கோல் இன்றும் எத்தனையோ வேதனை படர்ந்த சம்பவங்களைக் கிளறி விட்டது. 

ராதிகாவுக்கு இவனின் ‘மூட்’ தெரிந்திருக்க வேண்டும். எழும்பிப் போய் டெலிவிஷனைப் போட்டாள். வளைகுடா யுத்தம் எந்த நிமிடமும் நடக்கலாம் என்று விவர்ணச் சித்திரம் செய்து கொண்டிருந்தார்கள். 

நடு நிசியிலும் போர்த்திட்டம், ஏதோ காரணம் கொண்டு எந்தவொரு மூன்றாம் தர நாட்டையும் நாசம் செய்யும் மேற்கத்திய மூர்க்கம், கௌரவமான சொற்களுக்குள்ளால் வெளிவந்து கொண்டிருந்தன. 

இந்த வாழ்க்கையைப் பொறுத்தவரையிலும் ஒரே மாதிரியான தத்துவம் தானே? 

அவனுக்கு ஜேம்ஸ் மக்பேர்ஸன் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள் ஞாபகம் வந்தன. 

வாழ்க்கையின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒவ்வொரு திருப்பமும் ஒவ்வொரு மாற்றங்களும் ஏதோ ஒரு தத்துவத்தின் அடிப்படையில்தானா நடந்து கொண்டிருக்கின்றன? 

ராதிகா இவன் மௌனத்தைக் கலைக்க யோசித்து டெலிவிஷன் போட்டதும் அவன் எழும்பினான். வயிற்றில் ஒரு துளியும் பசியில்லை. 

அவன் கோர்ட்ஹாங்கரில் மாட்டியிருந்த கோட்டை எடுத்தான். 

இவன் எங்கே போகிறான் என்று ராதிகாவுக்குச் சொல்லத் தெரியவில்லை. அவள் கண்களில் அலை தெறித்தது. அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. 

என்னைவிட எப்போதும் அவள்தானே பெரிது என்று சாரதாவைப் பற்றிக் குரூரமாகச் சொல்ல ராதிகா தயங்கப் போவதில்லை. 

வெளியில் நல்ல குளிர். மெல்லிய பனிச் சிதறல்கள் மழைத் துளிகளோடு உதிர்ந்து கொண்டிருந்தன. 

இரவின் அமைதியில் ஹைகேட் தூங்கிக் கொண்டிருந்தது. ரோட்டருகில் பார்க் பண்ணியிருக்கும் காருக்குப் போவதற்கிடையில் மழையிற் சரியாக நனைந்து விட்டான். ஒன்றிரண்டு கார்களைத் தவிர ரோட்டில் அதிக நடமாட்டம் இல்லை. 

இரண்டு கிழமையாகப் பாவிக்காததால் கார் ஸ்ராட் பண்ணுவது சிரமமாக இருந்தது. இந்தப் பனிக் குளிரில் கார் எஞ்சின் குளிர் பிடித்துப் போய் விட்டதா? 

காரை ஸ்ராட் பண்ணி வெளியிற் திருப்பியதும் மெயின் ரோடு இவனை மெளனமாக வரவேற்பது போலிருந்தது. 

பகல் நேரமென்றால் ஹைகேட்டிலிருந்து ஹைபரி வரைக்கும் கார்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து கொண்டிருக்கும். இரவு இரண்டு மணியாகப் போகிறது. உலகம் பனி பெய்யும் இரவின் குளிர் தாங்காது தன்னை ஒடுக்கிக் கொண்டது போலிருந்தது. 

சாரதாவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ராதிகாவைப் பற்றி நினைக்காமலிருக்க முடியவில்லை. ராதிகாவை இவனுக்காகச் சிபாரிசு செய்தவளே சாரதா தானே. 

ஏழு வருடங்களுக்கு முன் ராதிகாவின் பதினெட்டாவது பிறந்த தினத்திற்குச் சாரதாதானே இவனைப் பிடிவாதமாக இழுத்துக் கொண்டு போனாள்?

“லண்டனில் யாரையும் இங்கிலிஸ் பெட்டையைப் பார்த்து பிடிச்சுப் போடாதே – நீ ஒரு அசல்த் தமிழன். உனக்கு உன்னைப் புரிந்து கொள்கிற மாதிரி ஒரு தமிழ்ப் பெட்டை தேவை” 

சாரதாவுக்கு உலகம் எவ்வளவு சிக்கலில்லாமல் தெரிகிறது? இப்படித்தான் தியாகு அன்றைக்கு நினைத்தான். 

சாதாரண பெண்களைவிடக் கொஞ்சம் உயர்ந்து வளர்ந்து, காந்தம்போல இரண்டு கண்களுடன் ஒரு இளம் பெண் இவனுக்குக் கேக் கொடுத்தாள். 

“இதுதான் தியாகு, இவள்தான் சொந்தக்காரரின் பெண் ராதிகா.” 

ராமநாதன் தான் ராதிகாவையும் தியாகுவையும் அறிமுகம் செய்தார். 

அவனுக்கு இருபத்து மூன்று வயது, இவளுக்கு பதினெட்டு வயது. அவன் லண்டனுக்குப் படிக்க வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. 

ராதிகாவின் குடும்பம் லண்டனில் கடந்த பதினைந்து வருடங்களாக வாழ்கிறார்கள். கொழும்பிற் பிறந்தாலும் ராதிகா லண்டனில் வளர்ந்தவள். கூச்சமில்லாமல் பழகினாள். 

தான் மெடிக்கல் காலேஜுக்குப் போக இருப்பதாகவும் அதற்குமுன் ஒரு வருட லீவில் ஏதோ ஒரு இடத்துக்குப் போக வேண்டும் என்றும் சொன்னாள். 

லண்டனிற் பெரும்பாலான இளம் வயதினர் இப்படிச் செய்வார்கள். யூனிவர் சிட்டிக்குப் போக முதல் ஒரு வருடம் உலகம் சுற்றிப் பார்ப்பார்கள். தானும் தன் சீனேகிதிகள் இருவரும் இந்தியா போக இருப்பதாக ராதிகா சொன்னாள்.

லண்டனில் வளரும் சாதாரண தமிழ்ப் பெண்களைவிட ராதிகா வித்தியாசமாகந் தெரிந்தாள். பதினெட்டு வயதிலேயே தன் தேவைகள் பற்றி யோசிக்கத் தொடங்கி விட்டாள். 

சாதாரணமான பேர்த்டே பார்ட்டிகளுக்குத் தியாகராஜன் போக மாட்டான். லண்டன் தமிழர்களின் போலி வாழ்க்கை அவனுக்குப் பிடிக்கவில்லை. ஒருத்தருக்கு ஒருத்தர் தன்னையுயர்த்திக் காட்ட பார்ட்டிகள் வைப்பது, புதுக்கார் வாங்குவது என்ற ‘சின்னத் தனமான’ ஆடம்பரங்களை அவனாள் சகிக்க முடியாது. 

ராமநாதனின் சொந்தக்காரர்கள் என்ற அடிப்படையில் சாரதாவின் நச்சரிப்புக்காக அவன் இந்தப் பார்ட்டிக்கு வந்திருந்தான். 

வழக்கம் போல் அளவுக்கு மீறிய உணவு வகைகள் ஆடம்பரமான உடுப்புக்கள், வாய் மீறிய அலட்டல்கள். இவை தான் லண்டன் தமிழர்கள் சிலரின் வாழ்க்கை முறைகள் – இலங்கையில் தமிழர்கள் கண்ணீரும் கம்பலையுமாக வாழ்கிறார்கள். இங்கேயென்றால் தமிழர் தண்ணீர் போத்தலும் போலிக் கூத்துக்களுடனும் வாழ்கிறார்கள் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். 

அவன் இலங்கையை விட்டு 1983ஆம் ஆண்டு வெளிக்கிட்டான். இலங்கையின் பயங்கரக் கலவரத்துக்கு இரண்டு கிழமைகளுக்கு முன் வெளிக்கிட்டான். தமிழருக்கெதரான வகுப்புக் கலவரத்தில் அவன் அகப்பட்டுக் கொள்ளா விட்டாலும் அவனுடைய தாய் தகப்பனுக்கு கொழும்பில் என்ன நடந்தது என்று தெரியும். அதைப்பற்றி எல்லாம் அவன் நிறைய அலட்டிக் கொள்வதில்லை. அரசியல் ஒரு அதர்மமான விளையாட்டாகப் போய்விட்டது என்று மட்டும் நினைத்துக் கொள்வான். 

ராதிகாவின் பிறந்த தினப் பார்ட்டிக்கு சாரதா தான் நச்சரித்துக் கொண்டு இழுத்துக் கொண்டு போனாள். “யாரும் அரசியல் என்னுடன் பேசினால் நான் ஓடி விடுவேன்” என்று சொல்லிக் கொண்டு தான் பார்ட்டிக்குப் போனான். 

ராதிகாவின் தகப்பன் ஒரு டொக்டர். தாய் ஒரு ஆசிரியை. தமக்கைக்கு இப்போதுதான் கல்யாணம் நடந்து முடிந்திருந்தது. ராதிகாவின் தமக்கை பவானி அவனை வரவேற்றாள்; சாரதா வீட்டில் சந்தித்தபடியால் பவானிக்குத் தியாகராஜனைத் தெரியும். 

சாரதாவின் கணவர் ராமநாதன் ராதிகாவின் தகப்பனின் உறவினர். அப்படி என்றால் ஏதோ ஒரு வழியில் தாங்களும் தியாகராஜனுக்கு உறவினர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று பவானி சொல்லிச் சிரித்தாள்.

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்று சொன்னான் தியாகு, 

பவானிக்கு இவனின் வயதுதான் என்றாலும் கல்யாணம் நடந்த பூரிப்போ ஏதோ நன்றாகக் கொழுத்திருந்தாள். 

“உங்களுக்குப் பகிடி விடத்தெரியாது என்று நினைத்தேன்” 

பவானி வடை ஒன்றைக் கடித்துக் கொண்டே சொன்னாள். 

“எனக்கு என்னென்ன தெரித்திருக்க வேண்டும் என ஏன் அக்கறைப் படுகிறீர்கள்.” பார்ட்டிக்கு வந்து உம்மணா மூஞ்சியாய் இருக்கக்கூடாது என்பதற்காக இப்படிச் சொன்னான். 

ஆனாலும் பவானியை அவனுக்குப் பிடித்துக் கொண்டது. அவனுடைய சிது வயதிலேயே லண்டனுக்கு வந்தாலும் தாய் தகப்பன் சொற்படி நடந்து கொண்டவள். அவர்கள் தெரிந்தெடுத்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டவள். அவள் கணவர் நடராஜன் ஒரு பணப்பித்து என்று கேள்விப் பட்டிருக்கிறாள். நடராஜனைப் பற்றி தியாகுவுக்கு ஒரு அக்கறையுமில்லை. 
 
உலகத்தில் எத்தனையோ பேர் எத்தனையோ விதமான பித்துக்களாகத் தானிருக்கிறார்கள். அவர்களுக்காக நாங்கள் ஏன் மனத்தைப் போட்டு உடைக்க வேண்டும்.? ராதிகாவின் பர்த்டே பார்டி அன்று அவன் ராதிகாவுடன் ஒன்றும் அதிகமாகக் கதைத்துக் கொள்ளவில்லை. 

‘ஹப்பி பர்த்டே’ என்று எல்லோரையும் போல் சொல்லிக் கொண்டான். 

இவனை அவளுக்குத் தெரியாது. எல்லோருக்கும் சொல்வதுபோல் “தாங் யு” என்றாள். 

அவள் லண்டனில் வளர்ந்தவள். வெட்கம், நாணம் என்று தமிழ்ப் பெண்கள் அணிந்து கொள்ளும் அல்லது அணியப் பண்ணிக் கொள்ளும் போலிகளுக்கு அப்பாற்பட்டவள். 

ஆனால் அவளைப் பற்றி ஓயாமல் சாரதா பேசிக் கொண்டே வந்தாள். “பவானி எவ்வளவு நல்ல பிள்ளை. லண்டனில் வளர்ந்தாலும் தாய் தகப்பன் சொன்னபடி நடந்து கொள்பவள். ராதிகாவுக்குக் கொஞ்சம் குழந்தைத் தனம் கூடத்தான் இருக்கிறது. அதற்கென்ன. காலமும் நேரமும் வரும்போது ராதிகாவும் தாய் தகப்பன்சொற்படி தானே நடப்பாள்” 

சாரதா அன்றைக்குக் கண்ட கனவும் இவனை ராதிகாவுடன் சேர்த்து வைக்கப்பட்ட பாடும் இவனுக்குத் தெரியாத தல்ல. “எனக்கு விருப்பமானால் நான் எனக்கு விருப்பமானவர்களுடன் பழகுவேனே தவிர மற்றவர்களுக்காக நான் என் விருப்பங்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை.” 

“நான் யாரோ மற்றவர்களா” 

அவன் மறுமொழி சொல்லவில்லை. 

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரம் இன்னும் அவன் மனதில் பசுமையாக இருக்கிறது. 

இன்று இரவு இரண்டு மணிக்கு அவன் சாரதாவைப் பார்க்க லண்டன் தெருக்களிற் போய்க் கொண்டிருக்கிறான். 

அவன் இப்படிப் பேய் பிடித்தவன் மாதிரிப் போய்க் கொண்டிருப்பானா? 

வீட்டில் அவனுக்காக அவன் எதிர்கால மனைவி காத்துக் கொண்டிருக்கிறாள். அவள் மனம் எப்படியிருக்கும்?

ராதிகாவுக்கு இன்றைக்கு எவ்வளவு கோபம் வரும் என்பது அவனுக்குத் தெரியாததல்ல. ஆனால் அவளின் கோபத்தைப் பற்றி அவன் இப்போது யோசித்துக் கொள்ளப் போவதில்லை. 

ஆஸ்பத்திரியருகில் காரை நிற்பாட்டிவிட்டு இறங்கினான். தேம்ஸ் நதியின் அருகில் – பிரிட்டிஸ் பாராளுமன்றத்திற்கு எதிராக அந்த ஹொஸ்பிட்டல் பிரமாண்டமாகத் தெரிந்தது. தேம்ஸ் நதியில் ஒன்றிரண்டு படகுகள் போய்க் கொண்டிருந்தன; அவைகள் இரவு உல்லாசப் படகுகள், அந்தப் படகுகளிலிருந்து ஆடலும் பாடலும் கேட்டுக் கொண்டிருந்தன. 

அவன் தேம்ஸ் நதியை ஒட்டி கடந்துபோய் ஹொஸ்பிட்டலில் கால் வைத்தான். ரிஸப்சனிஸ்ட், ‘என்ன வேண்டும்’ என்பதுபோல் இவனைப் பார்த்தான். 

தான் சாரதா ராமநாதன் என்ற நோயாளியைப் பார்க்க வந்ததாகவும், அவள் இருக்கும் வார்ட்டின் பெயரையும் நம்பரையும் சொன்னான். ரிஸப்சனிஸ்ட் இவனை மேலும் கீழும் பார்த்தான். “ஏதும் அபாயமான நிலையிலிருக்கிறாளா. உங்கள் சொந்தக்காரப் பெண்.”

இவன் என்ன பதில் சொல்வதாம்? 

“எனக்குத் தெரியாது, நான் இரண்டு கிழமையாக லண்டனில் இல்லை. இன்றைக்குத்தான் வந்தேன். இப்போதுதான் செய்தி கிடைத்தது… தயவு செய்து ஒரு ஐந்து நிமிடம் நான் போய்ப் பார்க்க முடியுமா?” 

“சேர் நான் ஒன்றும் அதிகாரம் படைத்தவனல்ல. வார்ட் சிஸ்டரைப் போன் பண்ணிக் கேட்கிறேன்… அந்த சிஸ்டர் அநுமதித்தால் நான் உங்களை விடுகிறேன்.”

தியாகு பொறுமையுடன் ஒரு மூலையில் உட்கார நினைத்தான். நீண்ட வழியால் ஒரு டொக்டர் வந்து கொண்டிருந்தார். இந்திய – அல்லது இலங்கை டொக்டராக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு உற்றுப் பார்த்தான்.

கையில் ஏதோ ரிப்போர்ட்டுடன் வந்த டொக்டர் நிமிர்ந்து பார்த்தார். 

தியாகுவும் உற்றுப் பார்த்தான். 

இருவர் முகத்திலும் ஒரே நேரத்தில் புன்னகை மலர்ந்தது. “பாரதி” – தியாகு சந்தேகத்துடன் கேட்டான். 

“என்ன ஆச்சரியம் என்ன ஆச்சரியம்” பாரதியின் கண்களில் திடீரென்று ஒரு மலர்ச்சி. 

தியாகுவுக்கு இந்தச் சந்திப்பை எப்படி வர்ணிப்பது என்று பாரதியும் தியாகுவும் கொழும்பில் ஒன்றாய்ப் படித்தவர்கள். தியாகு லண்டனுக்கு வந்த அதே வருடம் பாரதியும் மெடிகல் கொலிஜ்ஜுக்குப் போயிருந்தான். இருவருக்கு மிடையிலும் ஒரு தொடர்பும் இதுவரை யிருந்ததில்லை. 

பாரதி உயர்ந்த உருவமும், கல கலக்கும் மனப்பான்மையும் உள்ளவன். கைகள் எப்போதும் வாய்ப் பேச்சுக்கு ஏற்ப அசைந்து கொண்டேயிருக்கும். 

தியாகுவைப் போல் அளந்து பேசும், அடக்கமான தன்மை பாரதிக்கில்லை. 

– தொடரும்…

– பனி பெய்யும் இரவுகள் (நாவல்), முதல் பதிப்பு: செப்டம்பர் 1993, பாரி நிலையம், சென்னை

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *