பதர்




(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கக்கத்தில் சுருட்டி வைத்திருந்த காலி சாக்குப் பைகளின் கனத்தால் நடை தள்ளாட மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க அந்த வீட்டுக்குள் ஏறும்போது ரத்த நிற செம்பருத்திப் பூக்கள் மெளனமாய்த் தலையாட்டிக் கோபியை வரவேற்றன.

முதலில் தென்பட்ட சமையலறையைச் சுற்றிக்கொண்டு வீட்டின் முற்றத்துக்குச் செல்லும்போது பக்கவாட்டில் ஒரு சின்ன ஜன்னலுக்குள் முன் அனுமதியின்றி கடந்து சென்ற அவன் விழிகளில், தோளில் வேட்டியைப் போட்டுக்கொண்டு ஜார்ஜ் ஜட்டியைக் கட்டிக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு காட்சி விழுந்து மறைந்தது போலிருந்தது.
முற்றத்திலிருந்து வராந்தாப் படிகளில் இவன் ஏறும்போது, எதிரில் நடு அறையில் உரக்கக் கூவிக் கொண்டிருந்த ரேடியோவைத் திருகிக் கொண்டிருந்த ரோஸி இவனைப் பார்த்துவிட்டு இவன் வருகையின் விருத்தாந்தத்தைத் தெரிவிக்க உள்ளே விரைந்து செல்வது தெரிந்தது.
வராந்தாவில் ஏறிக் கட்டையிலிருந்து விலகத் தெரியாது பற்றிக் கொண்டிருக்கும் உயிர் என்ற பாரத்தைப் போன்ற கோணிப் பை கட்டைக் கீழே போட்டபோது உடம்புக்கு என்னவோ சொல்லத் தெரியாத ஒரு சுகம்.
செருப்பைக் கழற்றிப் போட்டுவிட்டு, ரேஷன் கார்டு, நோ அப்ஜக்ஷன் சர்ட்டிஃபிக்கேட், கோர்ட் பீஸ் ஸ்டாம்ப் ஒட்டிய விண்ணப்பம் முதலியவை போட்டுவைத்திருந்த நீள கவரைப் பத்திரமாய் மடியில் வைத்தவாறு
சிமிண்ட் குட்டிச் சுவரில் அவன் உட்கார்ந்தான். எதிரில் கிடந்த பெஞ்சின் அடியில் கால்களுக் கடியில் முகத்தைப் புதைத்துச் சுக நித்திரை பிராபித்திருக்கும் சாம்பல் நிற நாய் அவன் கண்களில் விழுந்தது.
உள்ளேயிருந்து, எங்கோ புறப்பட்டுக் கொண்டிருந்ததால் வழக்கத்திற்கு மீறிய வெள்ளை உடையில் அன்னம்மா டீச்சர் வருவது தெரிகிறது. தன்னை இப்போது எதிர்பார்க்காத ஒரு வியப்பு அவள் முகத்தில்.
‘இப்போதான் வாறேளா?’
‘ஆமா.’
ஒரு மூன்று வயசுப் பையன் ஜார்ஜின் மகனாக இருக்க வேண்டும். இடுப்பில் அழுக்கு நிக்கர். அதைவிட அழுக்கான உடம்புடன் அந்த நாயின் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு விளையாடிக் கொண்டிருந்தான்.
நாய் தூக்கம் கலைந்து இவனை ஒருதடவை வெறுப்புடன் பார்த்துவிட்டு, மறுபடியும் தலையைப் புதைத்துக் கொண்டது.
‘இண்ணைக்கு ஞாயிற்றுக்கிழமையாச்சே…உங்களுக்கு ஸ்கூல் இல்லையே… எங்கோ போகப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறீங்க போலிருக்கு…’
‘இல்லே… இவ ரோஸி. பி.எட். பாஸாகி அஞ்சு வருஷம் ஆயாச்சு. இவ்வளவு நாளா வேலைக்கு முயற்சி செஞ்சு தோற் றாச்சு. இப்போ தடிக்காரன் கோணத்திலிருந்து ஒரு சம்பந்தா லோசனை வந்திருக்கு. இந்த வீட்டை விற்றாவது அவ கல்யா ணத்தை முடிச்சிருலாமுண்ணு ஒரு எண்ணம். அதுக்காகத்தான் ஒரு ஆளைப் பார்க்கப் புறப்பட்டுக்கிட்டிருந்தோம்… பரவாயில்லே… பிறகு பாத்துக்கிறோம்…’
‘என்னா அரிசியாக்கித் தர முடியாதுண்ணு ஒரேயடியா எழுதியிருக்கிறீங்களே…’ என்று அவன் கேட்டதும், உணர்ச்சி வசப்படுகையில் எல்லாம் சம்பவிக்கும் ஒரு தலையாட்டலுடன் அன்னம்மா, ‘அக்கில்லே… எனக்கு உடம்புக்குச் சுகமில்லே. ஆள் வச்சு செய்யலாமுண்ணா இங்கே அறுப்புச் சமயத்தில் கூலிக்கு ஆள் கிடைப்பது கஷ்டம். அதோடு இங்கே மில்லில் பவர்கட் வேறு…’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் இடைமறித்தான்.
‘எல்லாம் வேணுமுன்னா செய்யலாம்… உங்களுக்கு அதுக்கெல் லாம் மனசில்லே. உங்ககிட்டெ எத்தனையோ தடவை நான் சொல்லியிருக்கேன். இது எனக்கும் என் பெண்டாட்டி பிள்ளை களுக்கும் சாப்பாட்டுக்காக நான் கொண்டு போகிற நெல்லு. அதை நீங்க கல்லும் மண்ணும் பதறுமாக அளந்தால் எங்க ரேஷன் கார்டை கேன்சல் செஞ்சு இந்தப் பாடான பாடெல்லாம் பட்டுக் கொண்டு போனால் ரெண்டு மாசத்துக்குக்கூட எங்க சாப்பாட்டுக் குத் திகையாது. அதுதான் உள்ளதையாவது உருப்படியாகக் கொண்டு போகலாமுண்ணு அரிசியாக்கித் தரச் சொன்னா, அதுக்கும் இப்படியெல்லாம் நொண்டிக் காரணங்கள்.’
அப்போது பக்கவாட்டு அறையிலிருந்து ஜார்ஜ் மெல்ல அங்கே வந்தான்.
‘இப்போதான் வந்தேளா?’
‘ஆமா… கொஞ்ச முந்தி வந்தேன்.’
‘பெர்மிட் எல்லாம் எடுத்தாச்சா?’
‘இல்லை. ரேஷன் கார்டு, அது இதுவெல்லாம் கொண்டு வந்திருக்கேன்… இனிமேல்தான் எடுக்கணும்.’
‘இண்ணைக்கு ஞாயிற்றுக் கிழமையாச்சே; ஆபீஸொண்ணும் இருக்காதே…’
‘தெரியும்… நெல்லை அளந்து பார்ஸல் ஆபீஸில் சேர்த்து விட்டுப் போனா அந்த வேலையாவது தீருமே. இன்னொரு தடவை உங்க வீட்டுக்கு நான் அலைய வேண்டாமுண்ணு நினைச்சு வந்தேன்.’
‘இந்தத் தடவை ரொம்பக் கஷ்டமாம். எல்லோரும் பேசிக்கிறாங்க… பெர்மிட் கிடைக்கணுமுண்ணா லெவி அளக்க வேண்டியிருக்கும்.’
‘லெவியா? ஒரு ஏக்கருக்கு மேலிருந்தாத்தானே லெவி அளக்கணும்?’
‘அது போன தடவை… இந்தத் தடவை அம்பது சென்டுக்கு மேலிருந்தா; விளைச்சலைப்பற்றி யாருக்கும் கவலை இல்லை. நாலு மூட்டை அளந்துவிட வேண்டுமாம்… நம்ம நிலம் அம்பத்திரெண்டு சென்ட் வருமே. ‘
இவனுக்குத் தலையில் என்னவோ செய்தது.
இப்போது ரோஸியும் வாசலில் வந்து நின்று கொண்டாள். கல்யாணத்துக்கு முந்தியே இப்போது இவளுக்கு முப்பது வயது இருக்காதா, இவள் முகத்தில் குடிவந்து விட்ட மூப்பு இவன் மனசை ஏனோ சங்கடப்படுத்தியது.
‘இந்தத் தடவை விளைச்சல் படு மோசம்…’ என்று அன்னம்மை தொடங்கியபோது, ‘எப்போதான் உங்களுக்கு நல்லா இருந்திருக்கு? நல்லா விளைகிறபோது நீங்க கூடுதலா எனக்குத் தருவதுண்டா? நீங்க குறச்சுத் தருகிற இந்த நெல்லை முழுவதையும் லெவியாய் அளந்து பெர்மிட் எடுத்தால், பிறகு பெர்மிட்படி கொண்டுபோக நெல்லுக்கு நான் எங்கே போவேன்? கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கிய கதைதான்…’ என்று அவன் சத்தம் போட்டான்.
‘இல்லை… இந்தத் தடவை முந்நூறு ரூபாய்க்கு மேல் செலவு. நல்லபடியாகத்தான் பயிர் செஞ்சோம்… நல்ல உரம் போட் டோம். பயிர் அளகா வளர்ந்து கண்ணுக்கு நிறைவா நின்றது. கடைசியில் பயிரில் பால் வந்ததும் நெட்டுப் புழு விழுந்தது. பலன் சூன்யம்… பாதி நெல்லுக்கு மேல் சாவியாயிட்டது. இது எனக்கு மட்டுமில்லே. பக்கத்து விவசாயிகள் எல்லோரும் தலையில் கை வைக்கும் நிலைமை… வேணுமுன்னா விசாரிச்சுப் பாருங்களேன்…’ என்று ரோஸியும் அவள் அம்மாவின் கட்சிக்காக வாதாடினாள்.
‘ஏன், பூச்சி மருந்து ஒன்றும் வாங்கித் தெளிக்கல்லியா?’
பயிரில் பால் வந்த பிறகு மருந்து தெளிக்கக்கூடாதுங்க… ஹும் புடைச்ச நெல்லைக் காயப் போட்டுப் புடைக்கப் போட்டிருக்கேன்… மொத்தம் மூணு மூட்டை ரெண்டு மரைக்கால் நெல் கிடைச்சது. காயப் போட்டுப் புடைச்ச பிறகு அளந்து பாக்கலை. மூணு கோட்டைகூட தேறுமா என்பதே சந்தேகம்… பயிர் செஞ்ச நிலத்திலிருந்து நாழி அரிசிக்குக்கூட எங்களுக்குப் பலன் கிடைக்காமல் தவிக்கிறோம். இந்த ஒரே நிலம் தவிர மற்ற எல்லா நிலங்களையும் விட்டேன். என்னால் முடிய மாட்டேங்குது. இருந்தும் இதை மட்டும் ஆள் வைச்சுத்தான் வீட்டிலே ரெண்டு நெல்லு மிதி படணுமுண்ணு ஏதோ ஆத்ம திருப்திக்காக நான் விவசாயம் செஞ்சுக்கிட்டிருக்கேன்… உம், உள்ள நிலைமையை உள்ளபடி சொல்லி விட்டேன். இனி உங்கள் விருப்பம் போல்…’
‘சரி, சரி. எனக்க தரித்திரத்தில் இனி உங்க தரித்திரக் கொடுமையைக் கூடச் சொல்லி என்னை வதைக்காதீங்க. சரி அளக்கலாமே… எனக்கு நேரமாச்சு’ என்று அவன் அவசரப்படுத் தியதும், ‘சரி முதலாளி ரோட்டுக்குப் போயி அளக்க ஆராவது நிக்காண்ணா கூட்டிக்கிட்டு வாறேன்’ என்று சொல்லிவிட்டு ஜார்ஜ் இறங்கியபோது, ‘எதுக்கு வேறே ஆளு? நீ போதாதா?’ என்று மடக்கினாள் ரோஸி. ‘அவன் அளந்தால் சரிப்படாது’ என்று அன்னம்மா சொன்னபோது, ‘வீட்டிலிருந்து கள்ளக் களவில் அளந்து விக்க மட்டும் தெரியுமில்லே’ என்று ரோஸி கேலி செய்ததைக்கேட்டு ஜார்ஜின் மீசை துடித்தது.
‘போட்டீ நாயே. நீ அதிகம் வெளையாதே…’ என்று அவன் படியில் நின்றவாறு கத்தியதும் ரோஸியின் முகத்தில் ஒரு ரௌத்திர பாவம் ஆர்பவித்தது. ஜார்ஜின் அருகில் வெறி பிடித்தவளைப்போல் ஓடி வந்து அவன் முகத்தின் நேர் கையை நீட்டி ஆட்டியவாறு, ‘டேய், ராட்சஸா உனக்க இந்த மாதிரி நாயே… பேயே… பேச்செல்லாம் எங்கிட்ட வெச்சிக்காதே. உனக்க பெண்டாட்டியோடு இருக்கட்டும். உன் இம்ஸை பொறுக்காம அந்த மவராசி பிள்ளங்களையும் தூக்கிக்கிட்டு அவ அம்மை வீட்டோட போய்ச் சேர்ந்துட்டா. கட்டிலுக்கு அடியில் நெல்லை விரிச்சு நானும், அம்மையும் காவல் காத்தும் நீ திருடி விக்கலையாடா? உன்னாலே பக்கத்து வீட்டு ப்ரண்ட்ஸ்கள் முகத்திலே ஒண்ணும் முழிக்க முடியாமல் ஆயாச்சு… வீட்டிலே மறிக்குப் போட்டிருந்த தேங்காயைத் திருடிக்கிட்டுப்போய் அவங்களுக்குக் கண்ட விலைக்கு விற்றவன்தானே நீ…’ என்றெல்லாம் ரோஸி சத்தம்போடத் தொடங்கியபோது, அன்னம்மா அண்ணன் – தங்கையின் இடையில் அழுகையுடன் குறுக்கிட்டாள்.
‘உங்க ரெண்டு பேருக்கும் எப்பவும் இதே வழக்கமாகிட்டது. வீட்டில் யாரு வந்திருந்தாலும் சரி, அவுங்க முன்னே வச்சும் கீரியும் பாம்புமா இப்படியா சண்டை போடுவாங்க?’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அன்னம்மாவுக்கு இருமல் வந்துவிட்டது. அவள் நிறுத்தாமல் இருமத் தொடங்கியபோது, இவன் ஜார்ஜிடம் குறுக்கிட்டுச் சொன்னான். ‘ஜார்ஜ், எனக்கு நேரம் ஆச்சு. நீ போய் யாரையாவது கூட்டிக்கிட்டு வா… போ போ’ என்று அவனைப் பிடித்திழுத்து வெளியே கொண்டுபோய் விட்டு, திரும்ப வரும்போது முற்றத்தில் ஒரு மூலையில் குவிந்து குந்தியிருந்தவாறு விழிகளில் இருந்து நீர் வடிய அன்னம்மா இருமி இருமி துப்பியிருப்பது தெரிகிறது. அவள் முன் வறண்ட மண் தரையில் பரந்து கொண்டிருக்கும் செக்கச் சிவப்பைக் கண்டதும் தலை சுற்றியது.
ரோஸி அடுத்த வீட்டு வேலிக்கருகில் போய் நின்றுகொண்டு ‘கோமதீ… கோமதீ… உங்க கோழி முட்டைப் போட்டுண்ணா ஒரு முட்டை தா… பிறகு பைசா தாறேன். அன்னா அம்மா மறுபடியும் ரத்தம் ரத்தமா வாந்தி எடுக்கிறா…’ என்று பதட்டத்துடன் சத்தம் போட்டுச்சொல்வது கேட்கிறது.
இப்போது வேறு கூலியாளுடன் உள்ளே வந்து கொண்டிருந்த ஜார்ஜிடம் கையும் காலும் பதற ஓடிச் சென்று, ‘ஜார்ஜ், உங்க அம்மா ரத்தம் ரத்தமா வாந்தி எடுக்கிறா… ஓடிப்போய் டாக்டரைக் கூட்டி வா…’ என்று சொன்னதும், ‘அவ சாகணும் அப்போதான் புத்தி வரும்’ என்று நிதானமாகச் சொல்லிவிட்டு அவன் உள்ளே போய் ஒரு பெரிய ஓலை நார் பெட்டியில் நெல்லை அள்ளிக் கொண்டு வந்து முற்றத்தில் தட்டத் தொடங்கினான். அது ஒரு அன்றாட சம்பவம் என்ற ரீதியில் அன்னம்மாவின் பேரப் பையன், இப்போது மண்ணை அள்ளிக் கொண்டுவந்து போட்டுச் செகப்பைக் கறுப்பாக்கிக் கொண்டிருந்தான். ரோஸி வந்து அன்னம்மாவைக் கைத்தாங்கலாக உள்ளே கூட்டிக்கிட்டுச் சென்று, கட்டிலில் படுக்க வைப்பது தெரிகிறது.
ஜார்ஜ் கோணிப் பையின் வாயை விரித்துப் பிடித்திருக்க, அவன் கூட்டிக்கிட்டு வந்த ஆள் மரக்காலில் நெல்லை அளந்து அதில் தட்டிக் கொண்டிருந்தான். இவனுக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை. இருந்தும் நெல்லைக் கையில் எடுத்துப் பார்த்த போது காற்றுபோல் இருந்தது. கனமில்லை. இதுக்குள்ளே அரிசி இருக்குமோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. அதோடு சின்னச் சின்ன மண் கட்டிகள் வேறு. பதினஞ்சு மரக்கால் வைத்து மூன்று சாக்குக்கூட அந்த நெல் திகையயும் இல்லை.
‘இந்த ஊசியையும் சணல் நாரையும் யாரு எடுத்தா?’ என்று கேட்டவாறு, வராந்தா கூரை இடுக்கில் கையை விட்டு ஜார்ஜ் துழாவிக் கொண்டிருக்கும்போது மீதியிருந்த இரண்டு காலிக் கோணிப் பைகளையும் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக்கொண்டு, தெரு நடையில் உச்சி வெயிலில் காய்ந்தவாறு நின்று கொண்டிருந்தான் இவன்.
– 26.03.1975 – சதங்கை 12/1975.
– நாகம்மாவா? (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2014, கிழக்கு பதிப்பகம், சென்னை.
![]() |
நீல பத்மநாபன் (பிறப்பு: சூன் 24, 1938, கன்னியாக்குமரி மாவட்டம்), தமிழகத்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர். இலை உதிர் காலம் புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது விருது பெற்றுள்ள நீல பத்மநாபன், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக நவீனத்துவ வடிவ…மேலும் படிக்க... |