பசுந்தோல் புலிகள்!




வளர்ப்பவரையே தன் பசிக்கு இரையாக்கி விடும் என்பதால் யாரும் புலியை வளர்ப்பதில்லை. பசி தீர்க்க நமக்கு பால் தரும் என்பதால் பசுவை வளர்க்கின்றோம். ஆனால்பசுவே வளர்ப்பவரை இரையாக்கும் நிகழ்வு நடக்கும் நிலையில் அது பசுவல்ல. பசுந்தோல் போர்த்திய புலி. அது போல தவறான மனிதர்கள் நம் வாழ்வை கெடுத்து விடுவார்கள் என ஒதுங்கி, ஒதுக்கி நம்பிக்கையான மனிதர்களிடம் பழகுகின்றோம். நம்பிக்கையானவர்கள் என நாம் நம்பியவர்களே நமக்கு ஆபத்தை விளைவிக்கும் போதும், நம்மை முழுமையாக நம் விருப்பமில்லாத நிலையிலும் அபகரிக்க திட்டமிடும் போதும் அனைவரின் மீதும் நம்பிக்கையை இழந்து விடுகின்றோம்.
கயானா தான் பெரிதும் நம்பிக்கை வைத்திருந்த, குரு போன்ற நிலையிலுள்ள, தந்தை வயதினரான முதலாளி ரிங்கன் இவ்வாறு தன்னுடன் பேசுவார் என கனவிலும் நினைக்கவில்லை.
ரிங்கன் பெரிய தொழிலதிபர். ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அவரிடம் வேலை செய்கின்றனர். சிறு வயதில் வறுமையில் வாழ்ந்தவருக்கு சிறந்த திறமையும், விடா முயற்ச்சியும், அறிவுக்கூர்மையும் இருந்ததைப்பார்த்து வசதி படைத்த உறவினர் ஒருவர் கண்களில் பார்வை குறைவான தன் பெண்ணைக்கொடுக்க முன் வர, வசதிக்காக திருணம் செய்து கொண்டதால் திடீர் பணக்காரராகி, தொழிலாளியாக இருந்தவர் தொழிலதிபர் ஆகிவிட்டார். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தாலும் மனைவியுடன் எங்கும் சேர்ந்து ஜோடியாக செல்ல முடியாததின் ஏக்கம் அவருக்குள் விஸ்வரூபம் எடுத்து நின்றது.
தனக்கு இணையாக சில பெண்களை கற்பனை செய்து பார்த்துக்கொள்வார். ஆனால் கற்பனையோடு வயது அறுபது கடந்து விட்டது. இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடிந்த பின் மனைவியும் உடல் நிலை சரியில்லாமல் போய்விட , எவ்வளவு முயன்றும் உயிரைக்காப்பாற்ற முடியாமல் போனதால் , தனிமை வாட்டியது.

” பாதி சொத்த உன்ற பேருக்கு எழுதிப்போடறேன். அழகென்ன கொஞ்ச நாள்ல காணாமப்போயிரும். சொத்து உசுருள்ள காலத்துக்கும் ஒதவியா இருக்கும். நல்லா யோசன பண்ணிப்பாரு. ஊருலகம் நாளு நாளைக்கு பேசும். அப்பறம் மறந்துரும். பேசறவங்க ஒருத்தரும் நம்ம கஷ்டத்துக்கு ஒதவ மாட்டாங்க” என தன் முகத்துக்கு நேராகக்கூறியதும் தூக்கி வாரிப்போட்டது கயானாவிற்கு.
திருமணமாகி இரண்டு குழந்தைகளைப்பெற்ற நிலையில் விபத்தில் காதல் கணவன் காலமாகி விட, வீட்டில் இருந்தால் குழந்தைகளை படிக்க வைக்க முடியாது என நினைத்து உறவுக்காரரான ரிங்கனுக்கு உதவியாளராக சேர்ந்த போது யாரும் தடுக்கவில்லை.
“நீ இருக்கிற லட்சணமான அழகுக்கு புதுசான பக்கம் அறிமுகமில்லாதவங்க கம்பெனிக்கு வேலைக்கு போனா, கண்ட படி ஒலகம் பேசிப்போடும். ரிங்கன மாதர பெரிய மனுசங்கிட்ட வேலைக்கு போனது நல்ல முடிவு தான். பொறந்த ஊட்டுக்கு போன மாதர பயமில்லாம போயிட்டு வந்துறலாம்” என தனது தாயார் நம்பிக்கையுடன் பேசியதை தற்போது நினைத்துப்பார்த்தாள்.
“நானொன்னும் மத்தவங்க மாதர, உனக்கு பேரு கெடற மாதர சும்மா வந்து என் கூட வாழச்சொல்லல. முறையா ஊரறிய தாலி கட்டி பொண்டாட்டியா வெச்சுக்கறேன். என்ற பொண்ணுங்களும் என்ற நெலமைய நெனைச்சு எதிர்க்கப்போறதில்ல. உன்ற வயித்துல பொறந்த கொழந்தைகள என்ற கொழந்தைகள மாதர படிக்க வெச்சு , சொத்தும் கொடுத்து உனக்கு சிரமம் இல்லாம மகாராணி மாதர பார்த்துக்கறேன்” என கெஞ்சுவது போல் முதலாளி கேட்டாலும், முப்பது வயதை முழுமையாகக்கடக்காத கயானாவுக்கு ஒரு சதவீதம் கூட உடன்பாடு ஏற்படவில்லை. மனதளவில் கூட நினைத்துப் பார்ப்பதையே நிராகரித்தாள்.
‘கணவனை இழந்தவர்கள் பலர் மறுமணம் செய்தாலும், சம வயது அல்லது ஐந்து வயது வரை மூத்தவருடன் வாழ்கின்றனர். வெளி நாட்டினரைப்போல சொத்துக்காக வயதானவரை நடிப்பு போல திருமணம் செய்து கொண்டு, கணவர் இறந்தவுடன் தான் விரும்பியவரை திருமணம் செய்து வாழ்வதென்பதை நினைக்கவே வெறுப்பாக இருக்கிறது. பணம் மட்டுமே வாழ்க்கையில்லை. பங்களா வீடு, சொகுசு கார், தேவைக்கு பணம் என்பது மட்டும் இல்லறத்தை நல்லறமாக்குவதில்லை. அதற்கு மேலான தேவைகளை யாரும் நினைத்துப்பார்ப்பதில்லை. பண நிலையின் தேவைகளின் அவசியத்தை விட, மன நிலையின் தேவைகளின் அவசியத்தையே பெரும்பாலும் நினைக்கத்தோன்றுகிறது. பெரும் ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னர்களைக்கூட உதாசீனப்படுத்தி விட்டு சாதாரண வீரனை மணந்து வாழ்ந்த பெண்களின் வரலாறுகளைப்படித்துள்ளோம்’ என பல விதமான, குழப்பத்துடனான மன ஓட்டத்தில் பதில் எதுவும் கூறாமலேயே அலுவலகத்தை விட்டு வெளியேறினாள் கயானா.
‘தனிமையின் நிலையைக்கண்டு பரிதாபப்படுவதை விட, பயன் படுத்திக்கொள்ளும் சுயநல வாதிகளாகவே பலரும் இருக்கின்றனர். பாசம், நேசம், ஆசை, அன்பு போன்றவற்றை குற்றமாகவும் கருதி விட முடியாது. ஒருவரின் தேவையின் விருப்பங்களை அதைத்தீர்க்கப்பயன் படுகிறவர்களிடம் கூறுவது குற்றமில்லையென்றாலும் அதற்கென சில வரைமுறை உள்ளதையும் யோசிக்க வேண்டியுள்ளது. இருவருக்குமான மன இணக்கம் வரும் நிலையில், பிறருக்கு தீங்கு வராத எதுவுமே தவறில்லை. அதற்கென சில எழுதப்படாத சட்டங்கள் இருப்பதும், தமது எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ளும் போது தாம் வாழும் சமுதாயத்தின் கட்டுப்பாடுகளின் மீது கறை வராத, குறை சொல்ல முடியாத வகையில் ஏற்படும் மன விருப்பங்களை சமூகம் அங்கீகரிக்கிறது. லட்சுமண கோடு போல் உள்ள கட்டுப்பாட்டுக்கோடுகளை சுயநலத்துக்காகத்தாண்டுபவர்களை ஒதுக்குகிறது, ஏசிப்பேசுகிறது. அது காலமுள்ளவரை ஆறாத புண்ணாகவே வலியைக்கொடுத்துக்கொண்டே இருக்குமென்பதால் தான் மனித சமுதாயம் மிருகங்களைப்போலில்லாமல் பின் விளைவுகளையும், பின் வரும் சந்ததிகளையும் மனதில் வைத்து ஆசைகளைத்தடுத்து அறிவெனும் சுவற்றால் அணை போட்டுக்கொள்கிறது’ என சிந்தனையோட்டத்தில் உறக்கமின்றி படுக்கையில் இரவைக்கழித்தாள்.
காலையில் இப்படியொரு அதிர்ச்சியை தனக்கு கயானா கொடுப்பாள் என ரிங்கன் யோசிக்கவே இல்லை.
“எங்களை வாழ்த்தி ஆசீர்வாதம் பண்ணுங்க” என ரஞ்சனுடன் ரிங்கன் காலில் விழுந்த கயானா, மாலையும் கழுத்துமாக மார்பில் மஞ்சள் கயிறு, மஞ்சள் கொம்புடன் தொங்க தனது அலுவலகத்தில் வேலை செய்யும் ரஞ்சனை கணவனாக மனதார ஏற்றுக்கொண்டே மாலையிட்டுக்கொண்டிருந்தாள்.
வேலையில் சேர்ந்த ஒரு வருடத்தில் அலுவலகத்திலேயே மிகவும் பிடித்த ஒருவனாக கயானாவின் மனதைக்கவர்ந்திருந்தான் ரஞ்சன். அவனிடமும் ரிங்கனைப்போலவே சுயநலம் இருந்தது. சுய நலம் இல்லையென்றால் வாழ்வின் இயக்கமே நின்று போகும் என்பதையும் தெரிந்து வைத்திருந்தாள். அந்த சுய நலமானது தாம் பயன் படுத்திக்கொள்ளப்போகிறவருக்கும் பயன் படும் வகையில் இருந்தால் பாதகமின்றி சாதகமான நிலையை உருவாக்கும்.
ரிங்கனைப்போலவே ரஞ்சன் ‘திருமணம் செய்து கொள்ள சம்மதமா?’ என தன்னைப்பார்த்து தயங்கிக்கேட்ட போதும் மௌனத்தையே பதிலாகக்கொடுத்தாலும், மனம் எவ்வித மறுப்பையும் காட்டாமல் ‘சரியென சொல்’
என சொன்னதை அறிவும் தடுக்காமல் பின் விளைவுகளை சிந்தித்து ஆமோதித்தது. ஒரு புன் சிரிப்பை உதிர்த்தவள் புதிராகவே அவனுக்கு தன்னைக்காட்டிக்கொண்டாள்.
வசதியால் உயர்ந்து நிற்கும் ரிங்கனை விட, வறுமையின் பிடியில் வாழ்ந்தாலும் ரஞ்சனை மனம் ஏற்கச்சொன்னது. அவனை மணந்து கொள்ளும் போது தற்காலத்தில் மறுமணத்தை ஆதரிக்கும் கலாச்சாரம் தன் செயலையும் ஆதரித்து, மனதார ஆசீர்வதிக்கவும் செய்யும் நிலையில் இது வரை மணமாகாத ரஞ்சனின் தன்னையொத்த சம வயதும் அங்கீகரிக்கும் வாய்ப்பின் வசதியைக்கொண்டிருந்தது மனமும் ஏற்க காரணமானதாக எண்ணினாள்.
‘முப்பது வயதில் தந்தையை இழந்திருந்த தனது தாய் ஒரு துறவியைப்போல வாழ்ந்தது போல் தன்னால் ஏன் வாழ முடியவில்லை?’ என நினைத்தாலும், அக்கால சூழ்நிலைகள் அம்மாவுக்கு கைகொடுத்தது போல தற்கால சூழ்நிலைகள் இல்லையென்பதும் தன் மன மாற்றத்துக்கு காரணமென நன்கு யோசித்து உறுதியான முடிவுக்கு வந்திருந்தாள்.
முன் காலத்தில் கணவன் இல்லாத நிலையில் தாய் வழி குடும்பத்தின் அரவணைப்பு, சுற்றிலும் இருந்த கட்டுப்பாடான மனிதர்கள், ஒரே நிலை கொண்டவர்களின் ஒத்த போக்கு, மாறாத சிந்தனை தனிமையை கடந்து செல்ல உதவியது. தற்காலத்தில் படிப்பு, வேலை, தனிமை மற்றும் தன்னிலை கொண்டவர்களின் மேம்பட்ட கலாச்சார வாழ்க்கை முறை, அதனால் தனக்குள் நிகழ்ந்த மன மாற்றம் என மறுமணமே தன்னைப்பற்றிய பலரின் தேவையற்ற, ஒழுங்கற்ற சிந்தனைகளுக்கு தடை போடும் தீர்வு என்பதை தீர்க்கமாக யோசித்ததின் காரணமாக எடுத்த முடிவு இன்று பலரது எண்ணங்களுக்கு பூட்டு போட்டதால் மனம் சலனமின்றி இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தது.
அதே சமயம் இன்றைய நடைமுறை வாழ்வியல் முறையில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்களை சம்மந்தப்பட்டவர்களின் மனம் விரும்பாவிட்டாலும் விரும்பி ஏற்கும் நிலைக்கு தம்முடன் பயணிக்கும் மனித சமூகம் அழைத்துச்செல்வதின் தவிர்க்க முடியாத நிலை கட்டாயமாக உருவாகி விட்டதையும், பெரும்பான்மையானவர்கள் ஒரு தவறை செய்யும் போது அதை சரியென தீர்ப்பு வழங்குவதையும், தனியொருவரின் மற்றவர்களுக்கு மாற்றான, சரியான செயல் கூட தவறெனவும் தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் ‘ஊரோடு நீயும் ஒத்து வாழ்’ எனும் பழமொழியின் கூற்றுக்கிணங்க வாழ்வதை பழக்கப்படுத்திக்கொள்பவர்களே வாழ்வை எளிதாகக்கடக்கக்கூடியவர்கள் என்பதையும் நன்கு உணர்ந்திருந்ததால் தனது முடிவும் நியாயமானதாகே இருக்கிறது என்பதை பல உதாரணங்களை, பல பேரின் வாழ்வை சுட்டிக்காட்டி மனதை சாந்தப்படுத்திக்கொண்டாள் கயானா.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |