கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2025
பார்வையிட்டோர்: 639 
 
 

(2022ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீட்டின் வரவேற்பு அறையை அலங்கரிக்க வண்ணத்தில் ராதை, கண்ணன் பொம்மை வேண்டும் என்பது விமலாவின் நெடுநாளைய ஆசை. அருகிலிருந்த “காளிதாசன் பொம்மைகள்” கடைக்குச் சென்றாள் கணவன் திவாகருடன்.

அவர்கள் எதிர்பார்த்த வண்ணத்தில் அழகிய பொம்மை இருந்தது. கடைக்காரர் எண்ணூறு ரூபாய் விலை சொல்ல, ஐநூறு ரூபாய்க்குக் கேட்டாள் விமலா. நூறு ரூபாய் குறைத்துத் தருகிறேன். அதற்கு மேல் முடியாது என்று மறுத்து விட்டார் கடைக்காரர்.

பொம்மை கடை பேர் மாடர்ன் ஆக இல்லை. கடையும் அலங்காரமா இல்லை. ஹேமா ஆர்ட் காலரி போவோம். அங்கு தரமான பொம்மை நியாயமான விலையில் கிடைக்கும் என்றாள்.

‘ஹேமா ஆர்ட் காலரி’ வண்ண விளக்குகளுடன் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் விலையில் ராதை கண்ணன் வண்ண பொம்மை இருந்தது. திவாகர் கண்ணிற்கு பொம்மை முந்தைய கடையில் பார்த்ததைப் போலவே இருப்பதாகத் தோன்றியது. விமலா ஒத்துக் கொள்ளவில்லை. பேரம் இல்லாததால் சொன்ன விலை கொடுத்து வாங்கி வந்தார்கள்.

வீட்டு வரவேற்பு அறையின் மூலையில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடித் தட்டின் மீது வைக்கலாம் என்று விமலா பொம்மையைக் கையில் எடுத்தாள். பொம்மையின் அடிப்பாகத்தில் கடையின் முத்திரை போட்ட காகிதம் பிய்ந்து வருவதைப் போலிருந்தது. தொட்டவுடன் அந்தக் காகிதம் கையுடன் வந்துவிட்டது. அதன் கீழே ஒட்டப்பட்டிருந்த ‘காளிதாசன் பொம்மைகள்’ என்ற காகிதம் விமலாவைப் பார்த்துச் சிரித்தது.

– 26-03-2022, மங்கையர் மலர்.

கே.என்.சுவாமிநாதன் பொறியியல் பயின்று, அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பணி புரிந்து, பின்பு, 15 ஆண்டுகளாக கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன். “யு-டியூப் – ஸ்வாமிமேடிக்ஸ்” என்ற சேனலில், சுலப கணிதம் குறித்து ஆங்கிலத்தில் விளக்கி வந்தேன். கோவிட் ஊரடங்கு என்னை கதை, கட்டுரை, எழுத ஊக்கம் அளித்தது. கதைகள், கட்டுரைகள் வெளியான இதழ்கள் - தினமலர்-வாரமலர், கலைமகள், அமுதசுரபி, தினமணி, சிறுவர்மணி, கதிர், நம் உரத்த சிந்தனை,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *