நேசிப்பு நெஞ்சங்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 27, 2025
பார்வையிட்டோர்: 3,258 
 
 

நமக்கு மிகவும் பிடித்தவர்களானாலும் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதும், பார்த்துக்கொண்டிருக்கும் போதும் பிடிப்பதை விட, பேசாமலிருக்கும் போதும், பார்க்காமலிருக்கும் போதும் தான் நமக்கு அவர்களை மிகவும் பிடித்திருக்கும். அது தான் உன்னத நேசிப்பாகும்.

பேசாமலிருக்கும் போது தான் அவர்களைப்பற்றிய விசயங்களை மட்டும் நம் மனமானது அசைபோட்டு சிந்திக்கும். நம் வாய் பேசாத போது மனம் அதிகம் பேசும். நம்மால் நேசிக்கப்படுபவர்களும், நம்மை அதிகமாக நேசிப்பவர்களும் நம் மனதில் அப்போது ஒரு படி மேல் உயர்ந்து நிற்பார்கள்.

இப்படியான சிந்தனை ஓட்டம் சுகன்யாவுக்கு தன்னுள் ஏற்பட்டதன் விளைவு பல வருடங்களாக நேசித்த குகனிடம் சிறிய தவறைச்சுட்டிக்காட்டி, கோபித்து விலகி நிற்க வைத்து விட்டாள். மனதிலிருந்தல்ல, உடலால் என்பது அவளுக்குத்தெரிந்தாலும் அவனுக்கு இத்தருணம் குழப்பத்தையும், வருத்தத்தையும் கொடுத்திருந்தது. 

அன்பிற்குரியவர்கள் அறியாமல் செய்யும் சிறு,சிறு தவறுகள் ஆற்றின் வேகத்தை அதிகரிக்கப்பயன்படும் சிறு, சிறு கற்களைப்போல மனமெனும் ஆற்றில் அன்பின் பிரவாகத்தை அதிகரிக்கச்செய்யும் வல்லமை உள்ளது என்பதையும் தெரிந்து வைத்திருக்கும் அறிவாளிதான் சுகன்யா.

உண்மை காரணத்தை அவனிடம் கூறிவிட்டால் மனதின் போலித்தனமானது முன் நின்று இயல்பு நிலையை அறிய முடியாமல் போக வைத்து விடும் என நினைத்திருந்ததால், அவனிடம் கூறாமல் தனது திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்திருந்தாள்.

சங்க இலக்கியங்களில் ‘தலைவனைப்பிரிந்த தலைவியின் உடல் மெலிவதால் அவளது கை வளையல்கள் தானாக கழன்று விழுந்தன’ என குறிப்பிட்டிருப்பார்களே, அது போல குகனின் உடல் உண்ணாமல் மெலிந்து வாடி, தாடி வளர்ந்து முகமே அடையாளம் தெரியாமல் மாறிப்போயிருந்தது. சுகன்யாவும் குகனது பிரிவால் மனதாலும், உடலாலும் வாட்டமடைந்திருந்தாள்.

பள்ளிப்பருவத்திலிருந்து காதலி என்றாலும், மனைவி என்றாலும் சுயா மட்டும் தான் என்பதில் உறுதியாக இருந்தான். அவளது பெயரை சுருக்கி சுயா என்றே அழைப்பான். அவள் இல்லாத வாழ்க்கையை அவனால் கற்பனை செய்ய முடியவில்லை. 

ஷாஜஹான் மும்தாஜ் மீது பைத்தியமாக இருந்தது போல் சுகன்யா மீது குகன் பைத்தியமாக இருந்தான் என்றால் மிகையில்லை. தன்னை அவன் சுயா என அழைப்பதையே அவளும் விரும்பினாள். அவனது குரலில் அழைக்கும் போது மனதால் உருகினாள் என்றால் மிகையில்லை.

பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து இருவருக்குள்ளும் வெளிப்படையாக சொல்ல இயலாத நட்பின் வெளிப்பாடு மனதுக்குள்ளேயே வலம் வந்து கொண்டு இருந்தது. ஒரே கல்லூரியில் சேர்ந்த பின் அதிகரித்தது. 

பிறர் அறியா நேசிப்பு மனதளவில் இமயமாக வளர்ந்து நின்றது. 

நேசிப்பிற்கு  நம்மையறியாமல் அது வளரும்போது பிறரை அறிய வைக்கும் சமிக்ஞைகளை வெளிப்படுத்தாமல் நீண்ட நாட்கள் ரகசியம் காக்கும் தன்மை இல்லை. பெரும்பாலான நேசிப்புகள் அவ்வாறானவை தான். ஆனால் குகன் சுகன்யாவின்  மீது வைத்திருக்கும் நேசிப்பானது, நேசிக்கும் அவர்களே முழுமையாக அறிந்திட முடியாத அளவுக்கு ரகசியமாக வளர்ந்திருந்தது.

சுகன்யாவைப்பொறுத்தவரை எப்படிப்பட்ட நேசிப்பும் பெற்றோருக்கு அடுத்த நிலை தான் என்பதில் மன உறுதியுடன் இருந்தாள்‌.

இதை நேசிப்பவர்கள் ஏற்க மாட்டார்கள் எனபதையும் அறிவாள்.

தோழி ரகியா பக்கத்து வீட்டிற்கு குடி வந்து பத்துநாட்கள் பழக்கமான ஒருவருடன் பெற்றோரை மறந்து, ஓடிப்போய் ரகசியத்திருமணம் செய்து கொண்டதை சுகன்யாவால் ஏற்க இயலவில்லை. வேர் விட்டு வளராத, மேலோட்டமான  நேசிப்புகள் அன்றைக்கு முளைத்த காளான்களாகி விடுமென்பதை அறிந்தவளாக இருந்தாள்.

ஊடலால் ஏற்படும் பிரிவிலும் மாறாத நேசிப்பு, அதன் பின்பே அதிகரிக்கும், ஆயுளுக்கும் மாறாமல் இருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்ததால் குகனை வெறுப்பது போன்ற போலியான நடவடிக்கை மூலம் சோதிக்க திட்டமிட்டதின் விளைவுதான் இப்பிரிவிற்கான காரணம் என்பது அவளுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.

நேசிப்பை சோதிப்பதென்பது அதன் புனிதத்தன்மைக்கு எதிரானதென்பதையும் சுகன்யா அறியாதவளில்லை. இருந்தாலும் நடை முறை வாழ்வின் முக்கியத்துவம் கருதி சிறிது காலம் விலகியிருக்க நினைத்தாள்.

‘எளிதாகக்கிடைக்கும் எதுவும் பெரிதாகத்தெரியாது’ எனும் கருத்தை ஒரு நூலில் அவள் படித்ததால் தான் தன்னை குகனிடமிருந்து சற்று எட்டாக்கனியாக வைத்திருக்கும் தனது உறுதியான முடிவிற்கான காரணம் எனவும் கூறலாம். 

தினமும் பத்து முறையாவது கால் பண்ணி பேசுவது, ஐம்பது முறையாவது மெசேஜ் அனுப்புவது, ஒரு முறையாவது முகத்தை நேரில் பார்ப்பது என்று பிரிவுக்கு முன்பு வரை அன்றாடம் நடக்கும் நிகழ்வாக இருந்தது.  இருவரும் விரைந்து சந்திக்கும் தூரத்தில் தான் வேறு அலுவலகத்தில் குகன் வேலை பார்த்தான்.

கடந்த ஒரு வருடமாக  முற்றிலும் சந்திக்காத நிலையாகி விடவே, மீண்டும் இருவரும் சந்திப்பதின் தொடக்க நாளாக தன் திட்டப்படி தனது பிறந்த நாளான இன்று  தன்னை முழுமையாக குகன் நேசிப்பவனாக இருந்தால் ஏதாவதொரு வழியில் தன்னை சந்தித்தே தீருவான் என சுகன்யா நம்பினாள். 

இதை அலைக்கழிக்கும் துர்குணம் என மற்றவர்கள் நினைத்தாலும், மாறாத நிலையின் வெளிப்பாட்டை அவன் மனதில் தோன்ற வைக்கும் சிறு சோதனையாகவே சுகன்யா பார்த்தாள்.

நாள் முழுவதும் அவனது போன் காலை எடுக்காமல் இருந்தாள். சைலண்ட் மோடில் அவனிடமிருக்கும் தனது அலைபேசி எண்ணிற்கான போனை வீட்டிலேயே வைத்திருந்தாள். 

இரவு அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு சென்று அலைபேசியை எடுத்துப்பார்த்த போது நூறு மிஸ்டு கால்கள் இருந்தன. அத்தனையும் குகனது அழைப்புதான். நினைக்கவே பாவமாக இருந்தது. ‘தன் மீது பைத்தியமாக இருந்தவனுக்கு கடினமான இந்த சோதனை வேதனை தராதா….?  இதையெல்லாம் நினைக்காமல் முடிவெடுத்து விட்டோமோ?’ என நினைத்த போது தனது செயலுக்காக வருந்தினாள்.

அன்று வெறுப்பாகப்பேசிய போது “நான் அழைக்காமல் நீ என்னை போனில் அழைக்கக்கூடாது. ஒரே ஊரில் வேலை பார்த்தாலும் நேரில் பார்க்க எந்த வழியிலும் முயலக்கூடாது. உன் செயலால் உன் மீது வெறுப்பான என் மனம் விருப்பானால் நானே அழைக்கிறேன்” என கூறிய பின் ஒரு முறை கூட அழைக்காமல் கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட்டு, மனதைக்கட்டுப்படுத்தி வைத்திருந்தவனால் அவளது பிறந்த நாளில் அவளை சந்தித்தே ஆக வேண்டும் என்கிற உந்துததால் பல முறை அழைத்திருந்தான்.

உடலுக்கு உணவு போல மனசுக்கு உணவு சுகன்யாவின் பேச்சு தான். மனம் கெட்டால் உடல் இயக்கமே பாதிப்பதை இன்று தான் முழுவதுமாக உணர்ந்தான்.

பதட்டத்துடன் சுகன்யா வீட்டின் காலிங் பெல்லை அடித்தான். திறந்த சுகன்யாவைப்பார்த்ததும் வாடியிருந்த குகன் முகம் மலர்ந்தது. ஆனால் சுகன்யா குகனைப்பார்த்ததும் மிகவும் பதட்டமானாள்.

தேக்கி வைக்கப்படும் நேசிப்பு பிரளயமாக வெளிப்படக்கூடும் என்பதை இப்போது தான் உணர்ந்தாள். அவனைக்கண்டதும் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. நேசிப்பு மேகங்களின் கூட்டிணைவு மனமெனும் வானத்தை இடியும், மழையுமாக, அதனால் ஏற்படும் காட்டாற்று வெள்ளமாக பாய்ந்தோடும் நதியின் பிரவாகத்தை தாக்குப்பிடிக்காத அணை உடைந்து ஊரையே மூழ்கடித்த நிலையாக முகம் வேர்த்தது, உடல் நடுங்கியது, நிற்க இயலாமல் மனமயக்கத்தால் உடல் நிலை தடுமாற உட்கார்ந்து கொண்டாள்.

குகனும் தேம்பி அழுத நிலையில் வார்த்தைகள் வராமல் சிட்டவுட்டில் போட்டிருந்த சேரில் அமர்ந்து கொண்டான்.

இயல்பு நிலைக்கு வந்தவளுக்கு அறிவு விழிக்க, யோசிக்கும் நிலை வந்திருந்தது. ‘போன் எடுக்காத காரணத்தால் வீட்டிற்கே வந்து விட்டானே…. அப்பா பார்த்தால் தப்பாக நினைப்பாரே…. போ… என சொல்லவும் முடியாமல், உள்ளே வா… என சொல்லவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக மனதால் மட்டுமில்லாமல் அறிவாலும் தவித்தாள்.

அவளது பிரார்த்தனையெல்லாம் அப்பா மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து விடக்கூடாது. அல்லது குகன் இங்கிருந்து செல்ல வேண்டும் என்பது தான்.

அப்போது மாடியிலிருந்து பதறியபடி சுகன்யாவின் தாய் பரிமளம் இறங்கி வந்தவள் சுகன்யாவிடம் “அப்பாவுக்கு திடீர்னு நெஞ்சு வலி. 108க்கு போன் பண்ணு. அதுக்குள்ள பக்கத்துல இருக்கிற ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகனம். வெளில யாராவது போனா கூப்பிடு” என்றவுடன் குகனை முகஸ்துதியால் வேறு வழியின்றி உள்ளே வா என சுகன்யா அழைத்த மறுநொடி, ஓடியபடி மாடிக்குச்சென்று தனது தோளோடு தோள் சேர்த்து, அரவணைத்து சுகன்யாவின் தந்தையை கீழே அழைத்துக்கொண்டு வந்து தனது காரிலேயே மருத்துவ மனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்கு அனுமதித்தவுடன் தனது வங்கிக்கணக்கிலிருந்து உரிய பணத்தையும் கட்டினான்.

குகனது செயல்பாடுகளைக்கண்டு சுகன்யாவின் தாய் அவனை கையெடுத்து வணங்கினாள்.

மருத்துவர் அழைத்தவுடன் சிகிச்சையளிக்கும் அறைக்கு சென்றனர். 

“சாதாரண பெய்ன் தான். ஈசிசி பார்த்துட்டேன். எம்ஆர்ஐ தேவைப்படாது. இப்போதைக்கு ரெஸ்ட் ரொம்ப முக்கியம்.  இதுல எழுதியிருக்கிற மாத்திரைகளை ஒரு வாரம் கொடுங்க. அப்புறம் தினமும் காலைல ஒரு மணி நேரம் அவசியம் வாக்கிங் போகனம். அறுபதுக்கு மேல ஆயிட்டதால அசைவத்த குறைக்கனம்” என கணிவாகக்கூறிய மருத்துவரிடமிருந்து மகிழ்ச்சியுடன் விடை பெற்று வெளியே வந்தவர்கள் குகனின் காரிலேயே வீடிற்கும் சென்றனர்.

இப்போதும் வெளியே உள்ள சிட்டவுட்டில் போடப்பட்டிருந்த சேரிலேயே உட்கார்ந்து கொண்டான் குகன். 

“ஏம்மா சுகன்யா…. யாரந்த பையன்….? தெய்வமே அனுப்பி வெச்ச மாதிரி என்னை வந்து காப்பாத்தியிருக்காரு…. உன் கூட ஆபீஸ்ல வேலை செய்யறவரா….? பிரண்டா….?” தந்தை ராகவனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தாள்.

“அப்பா…. அது வந்து….” வார்த்தைகள் வரவில்லை.

“என்ன வந்து போயி…. இவரைப்போல மகனுக்கு பதிலா ஒரு மகனத்தான் நான் தேடிட்டிருந்தேன். அந்தப்பையனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலேன்னா நாளைக்கே உன்னப்பொண்ணுப்பார்க்க வரச்சொல்லு…. இப்ப உள்ள வந்து ஒரு கப் காபி சாப்பிட்டிட்டு போகச்சொல்லு….” என தந்தை மனப்பூர்வமாக கூறியவுடன் பூரித்துப்போனவள் “கூ…கூ…” என்றாள்.

குகனை செல்லமாக அவ்வாறு தான் சுகன்யா அழைப்பாள். குகனும் அவளது பிறந்த நாளான இன்று  அவளது குயிலின் தன்மையொத்த குரலைக்கேட்க ஆவலாக இருந்தவன்  கேட்ட மகிழ்ச்சியில் உடனே எழுந்து வீட்டிற்கு உள்ளே வந்தான். அங்கிருந்த அனைவரது மனங்களுக்குள்ளேயும் தான்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *