நெடுஞ்சாலையும் வாழ்க்கையும்
கதையாசிரியர்: இளையவேணி கிருஷ்ணா
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 10, 2025
பார்வையிட்டோர்: 60

விவேகா ஒரு அற்புதமான இளம் வயது பதினான்கு வருடம் நிறைந்த சிறுமி… பெற்றோர் இறந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் சாலையில் சுற்றி திரிந்த அந்த சிறுமியை அந்த வயதான கிழவர் தான் பராமரித்தார்… அவரும் வீட்டினரால் கைவிடப்பட்ட வயது முதிர்ந்த குழந்தை…
அவர் அந்த நெடுஞ்சாலையில் சிறிய அளவில் கைத்தறி துண்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு விற்பனை செய்து வருபவர்..
ஏதோ வயிற்றுப் பிழைப்புக்கு போதுமானதாக இருந்தது என்று சொல்லி விட முடியாது என்றாலும் அந்த நெடுஞ்சாலையில் விலையுயர்ந்த கார்களில் போவோர் எவராகிலும் இவரிடம் கைத்தறி துண்டு வாங்கிக் கொண்டு உணவு வாங்க காசும் கொடுத்து விட்டு போவார்கள்…அதை வைத்து தான் அவர் தினசரி வாழ்வும் சென்றது…
ஆனால் அவருக்கு துண்டு தினமும் விற்பனை செய்து தீர்ந்து விடும்.. ஏனெனில் அவரது சிரித்த முகமே அவருக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உதவ மனிதர்களை இறைவன் அனுப்பி வைத்தார் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்… ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று சொல்கிறார்களே அது இவருக்கு முற்றிலும் பொருந்துவதாக இருந்தது…
மேலும் அந்த விவேகாவின் முகமும் கள்ளம் கபடம் இல்லாமல் இருந்ததால் இருவருக்கும் பணத்தை கொடுத்து விட்டு போவார்கள் ஒரு சிலர்..
விவேகா தாத்தா இந்த பணத்தை கொடுத்து சாப்பிட என்ன உங்களுக்கு வாங்கி வரட்டும் என்று ஆவலாக கேட்பாள்..
இவரோ உனக்கு என்ன பிடிக்குதோ வாங்கி வா தாயி… என்று சிரித்துக்கொண்டே சொல்வார்..
அவளும் சரி தாத்தா என்று சொல்லி விட்டு சிட்டாக பறந்து அருகில் உள்ள சிறிய ஹோட்டலில் தோசை ஆளுக்கு மூன்று என்று கட்டிக் கொண்டு ஓடி வந்து வேகமாக பிரித்து சாப்பிடுங்கள் தாத்தா என்று சொல்லி விட்டு அவருக்கு டம்ளரில் தண்ணீர் ஊற்றி வைப்பாள்..
அவர் சாப்பிடுவதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கும் போது தாத்தா அவளை பார்த்து நீ சாப்பிடு தாயி.. உனக்கு பசிக்கல என்று கேட்பார் வாஞ்சையாக…
இல்லை தாத்தா.. நீங்கள் சாப்பிட்டவுடன் சாப்பிடுகிறேன் என்று சொல்லி கொண்டே உங்களுக்கு இன்னும் ஒரு தோசை வைக்கட்டுமா என்று தனது தோசை பார்சலை பிரிப்பாள்.. இல்லை தாயி.. இதுவே போதும்..நீ சாப்பிடு என்று சிரித்துக்கொண்டே சொல்வார்..
அந்த சிறுமியும் சிரித்துக்கொண்டே சரி சரி தாத்தா என்று தலையாட்டி விட்டு தனது பார்சலில் உள்ள தோசையை ஆவலாக சாப்பிடுவாள்…
இப்படி தான் அவர்கள் தினசரி பொழுதுகள் போனது… கைத்தறி துண்டுகளை நெடுஞ்சாலையில் போவோரிடம் விற்பனை செய்வதும் அந்த வருமானத்தை சேகரித்து ஒரு பக்கம் துண்டுகளை வாங்கி விற்பதும் மறு பக்கம் அவர்கள் வாழ்க்கையை ஓட்டுவதுமாக இருந்தது…
துண்டு விற்பனை செய்வதற்கு இடையே இருவரும் பல கதைகளை பேசிக் கொண்டு இருப்பார்கள்..
அங்கே இருந்த பாலத்தின் அடியில் தான் இருவரும் உறங்குவார்கள்… தற்போதைய குளிர் காலத்தில் அவர்களுக்கு உதவியது அங்கே ஒரு நாள் எந்த புண்ணியவானோ கொடுத்த ஸ்வர்ட்டர்..
மீதம் உள்ள கைத்தறி துண்டுகள் அடங்கிய பையை தலைக்கு தலையணையாக வைத்துக் கொண்டு உறங்கி போவார்கள்…
இங்கே எளியவன் வதைப்பட்டு கொண்டு கொசுக் கடியில் கிடக்க அங்கே நாட்டை ஆள்பவர்கள் நேரத்திற்கு ஒரு உடை மாற்றி அழகு பார்ப்பது மற்றும் இந்த நிலையில் இருக்கும் மக்கள் வாழும் பகுதிகளை எவரேனும் அயல் தேசத்து அரசர் வந்தால் தட்டிகள் வைத்து மறைப்பதும் இந்த நாட்டில் கொஞ்சமும் வெட்கமே இல்லாமல் நடக்கும் செயல்கள்…
இவற்றை எல்லாம் கண்டும் காணாதது போல அரசியல் பேசும் ஒரு கூட்டம்.. இதற்கு அவர்கள் வாங்கி வந்த தலையெழுத்து என்று ஒரு கூட்டம்… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்…
எது எப்படியோ இந்த நாட்டில் அவர்களும் ஒரு பிரஜைகள் என்பது எழுதப்படாத சட்டம்.. பாம்பை அடித்து பரணில் போட்டால் ஒரு உதவும் என்று நம்மூரில் ஒரு பழமொழி உண்டு.. அதைப் போல அப்போதைக்கு அப்போது அதான் இந்த தேர்தல் வருகிறது இல்லையா.. அந்த நிகழ்வுகளில் கூட்டம் காண்பிக்க இந்த மனிதர்களை கூப்பிட்டுக் கொள்வார்கள்… ஆனால் அவர்களுக்கு ஓட்டு உரிமை இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் நினைக்கிறேன்.. ஏனெனில் அவர்களுக்கு சொல்லி கொள்ள முகவரி இல்லையே.. மேலும் இவர்கள் ஓட்டு போட்டு தான் அவர்கள் ஆட்சி அதிகார கட்டிலில் அமர வேண்டும் என்று விதி ஏதும் இல்லையே.. அதற்கு தான் பல்வேறு வழிகள் இருக்கிறதே…
சரி இந்த ஏழைகளுக்கு அரசியல் எதற்காக.. அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்கு யாரையோ நம்பிக் கொண்டு இருக்கும் போது…
சரி அதை விடுங்கள்..
இதோ இங்கே விடிவதற்கு தயாராக இருக்கிறது இயற்கை..
வழக்கம் போல தாத்தா தான் முதலில் எழுந்தார்.. பக்கத்தில் சிறுமியை காணவில்லை… எங்கே என்று விவேகா விவேகா என்று குரல் கொடுக்கிறார்.. ஆனால் அவளை காணவில்லை..
தாத்தா மனம் அந்த அதிகாலையில் கருக்கென்று இருந்தது..இன்று நான் இவ்வளவு அசதியாக உறங்கி விட்டேனே என்று வேகமாக எழ முயற்சி செய்கிறார்.. அவசரத்தில் கீழே விழுகிறார்.. மீண்டும் தட்டு தடுமாறி எழுந்து இங்கும் அங்கும் வேகமாக போகிறார்.. அந்த சிறுமியின் பெயரை உச்சரித்துக் கொண்டே…
அவள் அங்கே அந்த கார் அருகில் நின்று கொண்டு அதிகாலை வேளையில் கைத்தறி துண்டிற்கு விலை பேசிக் கொண்டு இருக்கிறாள்.. அவர்கள் அதை வாங்கிக் கொண்டு அதற்கான விலையைக் கொடுத்து விட்டு இவளை பற்றி விசாரிக்கிறார்கள்.. இவளும் தனது கதையை சுருங்க சொல்லி தன்னோடு ஒரு தாத்தா இருப்பதாக சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அவள் சாலையின் மறு பக்கத்தில் நிற்பதை பார்த்து விட்டு தாத்தா அந்த சாலையை கடக்க முயல்கிறார்..
அவளை அடைந்து விட்டார் ஒரு வழியாக..ஏம்மா இந்த குளிரில் இப்படி வந்து நிற்கிறாய்… பிறகு விற்பனை செய்து கொள்ளலாம் அல்லவா என்று அவள் கையை பிடித்துக் கொண்டார்..இதை எல்லாம் கவனித்து வந்த அந்த காரில் இருந்த மனிதர்.. தாத்தா உங்கள் தாத்தாவா என்று கேட்கிறார்கள்.. இவளும் ஆமாம் இவர் எனது தாத்தா என்று சிரித்துக்கொண்டே அவர் கையை பிடித்துக் கொள்கிறாள்..
அவர்கள் அந்த பெரிமவரிடம் உங்கள் பேத்தியை நாங்கள் கூட்டிச் சென்று படிக்க வைக்கிறோம் என்று சொல்கிறார்கள்.. அதை கேட்ட தாத்தாவுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.. ஆனால் அந்த சிறுமி உடனே இல்லை இல்லை வேண்டாம்.. நான் உங்களோடு வர மாட்டேன்.. நான் வந்து விட்டால் தாத்தா மிகவும் சிரமமாக உணர்வார் என்று சொல்கிறாள்..நீ படித்து பெரிய ஆளாக வந்தால் தானே உங்கள் தாத்தாவிற்கு பெருமை என்று சொல்லி பார்த்தார்.. இல்லை இல்லை வேண்டாம்.. எனக்கு எந்த பெருமையும் வேண்டாம்.. நான் தாத்தாவோடு இருப்பதை தவிர இந்த உலகத்தில் எந்த பெருமையும் இல்லை என்று சொல்லி விட்டு வேக வேகமாக தாத்தா கையை பிடித்துக் கொண்டு வாங்க தாத்தா போகலாம் என்று சொல்லி சாலையை கடக்க முயல்கிறாள்..
அதை பார்த்த அந்த மனிதர் பெரும் குரலெடுத்து அழுகிறார்… இப்படி ஒரு நல்ல மனிதரை இந்த நெடுஞ்சாலையில் தவிக்க விட்டு விட்டேனே என்று…
திடீரென காரை அந்த நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்திவிட்டு அப்பா அப்பா என்று ஓடுகிறார்.. அவர்கள் இவர் கூப்பிவது காதில் விழாத தூரத்திற்கு சாலையின் மறுபக்கத்தில் சென்று விட்டார்கள்.. அவரோ இவர்களை சந்திக்க வரும் ஆவலில் அங்கிருந்து வெகு வேகமாக வந்த காரின் சக்கரத்தில் சிக்கி உயிருக்கு போராடுகிறார்…இதை உள்ளுணர்வில் உணர்ந்து கொஞ்சம் திரும்பி பார்க்கிறார்கள் தாத்தாவும் அந்த சிறுமியும்…
அந்த நிகழ்வை பார்த்த அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நிற்கிறாள் அந்த சிறுமி..
அந்த பெரியவரோ என்னம்மா ஆச்சு…என்று சிறுமியை உலுக்கிய உலுக்கில் தாத்தா அவர் அங்கே பாருங்கள் என்று கையை நீட்டி சொல்கிறாள்…
அவரோ தினமும் இப்படி ஏதோவொரு நிகழ்வு இந்த நெடுஞ்சாலையில் நடந்து விடுவது கொடுமை மா..நீ அதை பார்க்காதே…வா நமது இடத்திற்கு போய் விடலாம் என்று அந்த சிறுமியை பாதுகாப்பாக கையை பிடித்துக் கொண்டு போகிறார்.. அங்கே அவர்கள் எப்போதும் இருக்கும் இடத்தில் ஒரு நாய் படுத்து இருக்கிறது…
அதை விரட்ட இருவருக்கும் மனம் இல்லாமல் அதன் அருகில் அமர்ந்து கொண்டார்கள்… சிறிது நேரம் அமைதியாக இருந்த அந்த சிறுமி திடீரென தாத்தா ஏன் தாத்தா நல்லவர்களை இறைவன் சோதிக்கிறார் என்று கேட்கிறாள்..
அதற்கு அவரோ தெரியலையே மா…ஏதோ காரணம் இருக்கும்.. சரி அதை விடு தாயி..
சூரியன் மேலே வந்து விட்டான்.. தனது மெல்லிய சுருக்கு பையில் உள்ள பணத்தை கொடுத்து இந்தா போய் உனக்கு பிடித்த காலை சிற்றுண்டி வாங்கி வா.. எனக்கு பசிக்கிறது தாயி என்கிறார்…
இதோ தாத்தா..என்று அந்த பணத்தை வாங்கிக் கொண்டு சிட்டாக பறக்கிறாள் அந்த சிறுமி…
இங்கே ஆதரவற்றவர்கள் என்று நெடுஞ்சாலையில் யாரும் இல்லை.. ஒரு வேளை கோடிக் கணக்கில் சேர்த்து ஊர் மெச்ச பெரிய பங்களாவில் ஒரு வேளை இருக்கலாமோ என்னவோ… அறிந்தவர்கள் சொல்லுங்கள்…