கதையாசிரியர்:
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2024
பார்வையிட்டோர்: 1,755 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதிரேசனுக்கு உலகமே இருண்டுவிட்டது போன்ற பிரமை தட்டிப் போனது. கையிலே பிடித்திருந்த அந்த வெள்ளை நிறக் காகிதம் அவர் கௌரவத்தைக் குறைத்து அவரை நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டது போல் அவமானத்தால் எண்சாண் உடம்பும் கூனிக் குறுகிப் போனார்.

“ஆயிரந் தடவை அடிச்சிகிட்டேனேடி… கேட்டியா நீ இந்தப் பாவிப் பயல் என்ன வேலை பண்ணிட்டு வந்துருக்கான்னு பார்த்தியா…! பள்ளிக்கூடம் போறேன்னு சொல்லிட்டுப் போனவன், அந்தப் பக்கமே போகாம ஊர் சுத்தித் திரிஞ்சிருக்கான். காரணம் சொல்லாம பள்ளிக்கு வரத் தவறினதா முடிவு பண்ணி ஆசிரியர் அவனைப் பள்ளிக் கூடத்திலேர்ந்து தள்ளி வெச்சிட்டாரு… இனிமே அவன் எந்தப் பள்ளிக்கூடத்தில கொண்டு போய்ச் சேர்க்கப் போறேன் நான்”

ஆசையாக வளர்த்த பிள்ளை அடிமாடாய்ப் போய் விட்ட ஆற்றாமையில் அவர் குமுறிக் கொண்டிருக்க…

“எல்லாம் நீங்க கொடுத்த செல்லந்தான், கையில காசைக் குடுத்துக் கெடுத்துப்புட்டு இப்படிப் புலம்பினா இப்ப நான் என்ன செய்யறதாம்! அப்ப என் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்தீங்களா நீங்க…? ஒரே பிள்ளைன்னு தூக்கிவைச்சு ஆடனீங்களே! அவர் மனைவிதான் முனகினார். கதிரேசனுக்கு ஆத்திரம் அளவு கடந்தது. எதிரில் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்த மகனை வலது கையால் பிடித்து இழுத்துப் பளார் பளார் என நாலு அறைவிட்டார். பதினான்கு வயது பையனான கண்ணன் அடியை வாங்கிக் கொண்டு ஒரு மூலையில் போய் விழுந்தான். கதிரேசன் தலையைப் பிடித்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்தார்.

மகனை அடித்த கையும், மகனால் நொந்து போன உள்ளமும் ஒருசேர வலித்தன.

“ராத்திரி பகலா நான் சம்பாதிக்கிறேன்… யாருக்காக எல்லாம், இவன் உருப்பட்டுக் கரை சேரணும்னுதானே… இவன் அத நெனைச்சுப் பார்த்தானா…? படிக்க வேண்டிய வயசுல படிப்புப் போச்சே… இவன் இனிமே என்னடி பண்ணுவான்…?”

தலையில் அடித்துக் கொண்டார். மனைவி ஓடிவந்து அவரின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“வேண்டாங்க… இந்த மாதிரி நீங்க கவலைப்பட்டா உடம்புக்கு ஆகாதுங்க… அமைதியா இருங்க…”

என்று தேற்றினாள். இரவு முழுவதும் அதையே நினைத்துப் புலம்பித் தூங்கிப்போன கதிரேசன் மறுநாள் அவனுக்காகத் தலைமை ஆசிரியப் பார்த்தார். காரணத்தை விசாரித்தார். மறுபடியும் அதே பள்ளியில் சேர்த்துக் கொள்ள வழியே இல்லை என்ற முடிவு தெரிந்த பின் கவலையோடு வீடு திரும்பினார்.

விடுவிடுவென்று நாள்கள் ஓடின. கண்ணன் தன் விருப்பம்போல் நாளைக் கழித்தான். வேலைக்குப் போய்விடும் பெற்றோர்களால் அவனுக்குப் பிரச்சினை இல்லாமல் இருந்தது. அவர்கள் வெளியேறிய பின்பு அவன் தன் வழியில் ஊர் சுற்றக் கிளம்புவதுமாய்க் காலம் ஓடிக் கொண்டிருந்தது.

பொறுப்பில்லாத பிள்ளையாய்ப் போய்விட்ட கண்ணனைப் பார்ப்பதையும், அவனோடு பேசுவதையும் கதிரேசன் குறைத்துக் கொண்டான். ஒருநாள் அவரின் நண்பர் தாஸ் அவரைப் பார்க்க வந்தார். தாசும், கதிரேசனும் நீண்டநாள் நண்பர்கள். குடும்ப நலனில் ஒருவருக்கொருவர் அக்கறை உள்ளவர்கள். தாஸ் கதிரேசனிடம் கண்ணனைப் பற்றி விசாரித்தார்.

நண்பரிடம் தன்பிள்ளையைப் பற்றிப் பெருமை யோடு சொல்லிக் கொள்ள எந்த விஷயமும் இல்லை என்ற விரக்தியுடன், “நீ, நினைக்கிற மாதிரி அவன் ஒன்னும் உருப்படியாய் இல்லை தாஸ்… இஷ்டத்துக்குத் திரிகிறான். படிப்புப் போச்சு… நல்ல பழக்கமும் நல்ல பண்புகளும் இல்லாம போச்சு… இந்த நேரத்துல எங்கே போனான்னு கூடத் தெரியலை…” என்று வருத்தப்பட்டார்.

அவரைத் தேற்றிய தாஸ் உன்னோட பிள்ளையைப் பார்க்கக்கூடாத இடத்துல பார்த்ததாலதான் உன்கிட்டே கேட்க வந்தேன் கதிரேசா… அவன் காலிப் பசங்களோட சேர்ந்து புகைபிடிக்கிறான்; போறவங்க வர்றவங்களக் கிண்டல் பண்ணிக் கேலி செய்கிறான். போறாத குறைக்குச் சூதாட ஆரம்பிச்சிருக்கான். இப்பவே நீ கவனிக்கலைன்னா அப்புறம் நீயே ஒரு தேச விரோதியை வளர்த்த பாவத்துக்கு ஆளாகிவிடப் போற…’

கதிரேசன் கதிகலங்கிப் போனார். நண்பனின் வார்த்தைகள் அவரைப் பயமுறுத்தின. பேச வாய்வராமல் நின்றார்.

“பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டியது… நல்ல பண்புகளை அவங்களுக்குத் தரவேண்டியது ஒவ்வொரு பெற்றோருடைய கடமை என்பது உனக்குத் தெரியாதா? தப்பு பண்ணிட்டான்னு அவனைத் தறுதலை மாதிரி அலைய விட்டிருக்கியே… அவன் உன் பேச்ச கேக்கலைன்னா நீ அவன் பக்கம் போய்க் காரியம் சாதிக்கப் பார்க்கணும் கதிரேசா”

“பிள்ளைங்க நமக்குமட்டுமில்ல… நாட்டுக்கும் விலை மதிக்க முடியாத சொத்து. அத நல்லவிதமா உருவாக்கித் தரவேண்டியது ஒவ்வொரு பெற்றோருக்கும் உரிய பெரிய கடமை… உன்னோட பிள்ளையை உன்னோட அன்பால திருத்து. ஒருநாள் பலநாள் கஷ்டப்படு. அவன் தன்னோட தப்பை உணர்ந்து திருந்துவான். அவனை அடிச்சு மிரட்டாதே!”

நண்பனை விளங்காமல் பார்க்கிறார் கதிரேசன். உன்னோட பிள்ளைக்கு இப்ப அள்ளிக் கொடுக்க வேண்டியது உன்னோட பணத்தை இல்ல கதிரேசா… உன் நெஞ்சம் நிரம்பி வழிகின்ற பாசம்! அந்த விலைமதிக்க முடியாத பாசத்தை அவனுக்கு நீ கொடு. அவன் உன் வழிக்குத் தானா வந்து சேருவான். அவன் கிட்ட பலப்பரிட்சை பார்க்காதே. அது ரெண்டு பேருக்குமே நஷ்டமா போயிடும்.

“தாஸ் போய்விட்டார்…” நீண்ட நேரம் கதிரேசன் நிலையாய் உட்கார்ந்திருந்தார். இதுவரை தன் அதிகார பலத்தையே மகனிடம் காட்டி வந்ததை மாற்றி ஒரு அன்பான தந்தையாய் இருக்க அப்போதே முடிவு செய்து கொண்டார். வெளியே போய்விட்ட மகனுக்காகப் பொறுமையாய்க் காத்திருந்தார். அவர் மனத்திலிருந்தும் வெளியேறிப் போயிருந்த மகனும் இப்போது உள்ளே மறுபடியும் வந்து புகுந்து கொண்டான்.”

– தமிழ் முரசு 16-7-95.

– கவரிமான் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.

சிங்கை தமிழ்ச்செல்வம் நூலாசிரியர் பற்றி... - மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005 இலக்கிய வடிவங்களில் சிறுகதை. புதினம், கட்டுரை, உரைவீச்சு போன்ற அனைத்து நிலைகளிலும் சிந்தனையை வெளிப்படுத்துகின்ற ஆற்றல் மிக்கவராக மதிக்கப்படுகின்ற சிங்கை. தமிழ்ச்செல்வம் அவர்களை 1995-ம் ஆண்டு முதல் நான் நன்கு அறிந்து வைத்து உள்ளேன். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் உறுப்பியம் பெற்றுத் தொண்டாற்றினார். துணைச் செயலாளர் பொறுப்பேற்றுத் துணை நின்றார். கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராய்த் தொடர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *