நெஞ்சுக்குள் நெஞ்சு வை…





(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம் – 7

கடற்கரையில்… மணிமேகலையைக் கண்டதும் தன் நண்பன் செல்வமணியை விட்டு ஓடிவந்து ஒட்டி பேச்சுக் கொடுத்த சிவா… அவர்கள் அகன்றதும் திரும்ப அவனிடம் வந்து அமர்ந்து…
“எப்படியும் நான் இவளை மடக்கிடுவேன். நமக்குள் என்ன பந்தயம் வச்சுக்கலாம்..?” கேட்டான்.
“வேணாம். நான் இந்த விளையாட்டுக்கு வரலை.”
“சரி. முடியும். முடியாது சொல்லு…?”
பெண்கள்
பார்த்தால் பற்றிக் கொள்வார்களா..? தொட்டால் ஒட்டிக்கொள்வார்களா..? – கிடையாது!… தோன்ற…
“முடியாது!”
“முடியும்.. !” கட்டை விரல் உயர்த்திச் சொன்னான் சிவா.
சிவாவைப் பற்றி செல்வமணிக்குத் தெரியும்.
‘பெண்களைப் பொறுத்தவரை இவனுக்குப் போகப் பொருள். வித்தை காட்டி வீழ்த்துபவன். வீம்பிற்குப் பந்தயம் கட்டி வீணாக ஒரு குடும்பப் பெண்ணைக் கெடுப்பானேன்’ நினைத்த செல்வமணி…
“சரி முடியும்ண்ணே வச்சுக்கோ.. பாவம்” சொன்னான்.
“என்ன பாவம்! இதோ பார்டா மணி! அவளை அவனால திருப்தி படுத்த முடியாது. என்னைக்காவது அவள் எவன்கூடவோ போகப்போறா. கை மாற போறாள். நான் புள்ளையார் சுழி போடுறது தப்பா..?”
“ஓஓ… அப்படியா உன் நெனப்பு..? புருசனால் தனக்குத் திருப்தி இல்லேன்னு அவள் உன்கிட்ட சொன்னாளா..?”
“சொல்லலை..”
“அப்புறம் எப்படி அவ்வளவு உறுதியாச் சொல்றே..? சரி. எப்படியோ ஒருத்தன் வாழ்க்கையைக் கெடுக்கக் கூடாது. கெடுத்து பெண்ணோட பாவத்தைக் கொட்டிக்கக் கூடாது.”
“அட போடா. பாவமாவது புண்ணியமாவது. எனக்குக் கடவுள் நம்பிக்கையியே கிடையாது. கோயில்ல இருக்கிறதெல்லாம் சிலை. கும்பிடுவனெல்லாம் முட்டாள். கடவுள் இருந்தா கொரோனா ஏன்டா வருது. வந்தாலும் ஏன் அதைக் கட்டுப்படுத்த முடியல…? என்னை விடு சாமியே சர்வம்ன்னு கும்பிடுறானுங்கள்ல அவனுங்களையாவது காபந்து பண்ணனாமில்லே. ஏன் செய்யல..?”
அவன் பேச்சு பொறுக்காத செல்வமணி..
“இப்போ ஆடினா… பின்னால் அனுபவிப்பே..!” எச்சரித்தான்.
“ஆடின பின்தானே அனுபவிக்கப் போறேன். அனுபவிச்சுட்டுப் போறேன். அதுக்காக இந்த வயசுல புத்தனாவும் கிழ வயசுல ஞானியாவும் ஆக மாட்டேன்.”
அந்த கடற்கரை மணல்வெளியில் காற்று சுநாதமாக அடிக்கும் ஆனந்த வேளையில் செல்வமணி எவ்வளவோ சொல்லி கெஞ்சிப் பார்த்தும், மிரட்டிப் பார்த்தும் மணிமேகலையின் மேல் வைத்த மோகத்தை சிவா மாற்றிக் கொள்வதாய் இல்லை.
ஒரே அலுவலகம். நாளைக்கு விசயம் வெளியே தெரிந்தால் அலுவலகமே நாறும். தலை நிமிர்ந்து நடக்க முடியாது. அதுவும் உச்ச அதிகாரி பார்த்து நடத்தி வைத்த திருமணம். பொறுப்பு அவருடையது. பெண் வீட்டாரோ, பிள்ளை வீட்டாரோ முறையிட்டால் போதும் வேலை காலி. இப்படியெல்லாம் சிக்கல் இருந்து எதிர்காலமே கேள்வி குறியாய் இருக்கும்போது… சிவா..? நினைக்கப் பயமாய் இருந்தது.
அப்படி என்ன இருக்கிறது மணிமேகலையிடம்..? செல்வமணி அவனை விட்டுப் பிரிந்து போனான்.
என்ன இல்லை அவளிடம்..? – சிவா பூங்கா வந்து அமர்ந்தான்.
மணிமேகலையின் உருவத்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை மனக்கண்ணில் ஓடவிட்டான். நெற்றி, கண். காது, மூக்கு, வாய், செவ்விதழ்… ஒவ்வொன்றையும் நினைக்க நினைக்க உடல் சூடேறி முறுக்கானது.
கால் விளங்காத சப்பாணிக்கு இப்படி ஒரு தேவதையா….! ஆண்டவனே..! அகிலமெல்லாம் ரட்சிப்பவனே! உனக்கு ஓரவஞ்சனை. இவள் இவனுக்காகப் பிறக்கவில்லை. எந்த அழகனுக்கோப் பிறந்திருக்கிறாள். முகவரி மாறி இவன் கையில் வந்து சேர்ந்திருக்கிறாள். நிச்சயம் இவள் இவனிடம் திருப்பத்தில் சாசுவத்தமில்லை. நாகரீகம் தெரிந்தல்வ, நன்றாகப் பேசுகிறாள். இன்னும் கொஞ்சம் நெருங்கினால் கண்டிப்பாக வீழ்ந்து விடுவாள். மனதை லீலையை வென்றவருண்டோ..!
சரி இவளுக்காகக் கொஞ்சம் மெனக்கட வேண்டும்! தீர்மானித்தான்.
இரண்டு நாட்கள் கழித்து மணிமேகலை காய்கறி மார்கெட்டிற்கு ஒயர்கூடை எடுத்துக் கொண்டு வாசல்விட்டு இறங்கினாள்.
கண்கொத்திப் பாம்பாக இருந்த சிவா நூலகத்திற்குச் செல்வது போல் சைக்கிள் கேரியரில் இரண்டு புத்தகங்களை வைத்துக் கொண்டு அவளைக் கொஞ்சம் போகவிட்டு இந்த சந்தில் புகுந்து அந்த சந்தில் வெளியே வந்து அவளுக்கு எதிரில் சைக்கிளை நிறுத்தி..
“என்ன காய்கறி வாங்கவா…?” கேட்டான்.
இவனின் எதிர்பாராத வரவால் துணுக்குற்ற மணிமேகலை…
“அ… ஆமாம்” என்றாள். சைக்கிளில் புத்தகங்களைப் பார்த்து…”நீங்க… லைப்ரரிக்கா… போறீங்க…?” – கேட்டாள்.
“ஆமாம்!”
“நீங்க உறுப்பினரா..?”
“ஆமாம்.”
“நானும் உறுப்பினராகனும்..”
“அதற்கான விண்ணப்பம் வாங்கி வரவா..?”
‘அவர் சேர்க்கிறேன் என்று சொன்னார். சேர்க்கவில்லை. சிவா மூலமாக விண்ணப்பம் வாங்கி வந்து உறுப்பினர் ஆகலாம். விசயம் தெரிந்தால் வீட்டில் கொலையே நடக்கும். அடுத்த வீட்டில் கல்லூரி செல்லும் பெண் லட்சுமியை விட்டு வாங்கி வரச் சொன்னேன். சமாளிக்கலாம்’.
“வாங்கிட்டு வாங்க..”
சிவாவிற்கு பச்சை கோடி காட்டிய மகிழ்ச்சி. நெருங்க வாய்ப்பு வந்துவிட்டது. இனி நூல் பிடித்துக் கொண்டு நடக்க வேண்டியதுதான்.
“நிறைய புத்தகம் படிப்பீங்களா..?”
“படிப்பேன்.”
“என்னென்ன படிப்பீங்க…?”
“எல்லாம் படிப்பேன்!”
‘சமையல், வீட்டு வேலை என்று இவளால் நாலு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் நூலகத்திற்கு அடிக்கடி சென்று வர முடியாது. ஆனால் போனால் நல்லது. இங்கே யாருக்கும் தெரியாமல் அங்கேயே கடலை போட்டு ஆளை கவிழ்க்கலாம். தனிமையில் இருவருமே சரளமாக பேசலாம். போக முடியவில்லை என்றால் விருத்திசுக்கு புத்தகம், படிப்பு வாசனை பிடிக்காது. போனாலும் அவனால் சிரத்தை எடுத்து இவள் விரும்பிய நூல்கள் எடுத்து வர முடியாது. ஏனோதானோ வென்று எதையாவது எடுத்து வருவான். நாம் அவள் விருப்பப்படி எடுத்து வந்து கொடுத்து…’
“வாங்கிக்கிட்டு வர்றீங்களா..?”
“வர்றேன்.”
“பணம் தர்றேன்!” கையிலுள்ள பர்ஸ் பிரித்தாள்.
“தேவை இல்லே. விண்ணப்பம் இனாம். நிரப்பி பத்து ரூபாய் பணம் கட்டினால் போதும்.”
“சரி. விண்ணப்பம் வாங்கி வந்து உங்க நண்பருக்குத் தெரியாமல் கொடுங்க..”
‘இது தனக்கு சாதகமான இரண்டாவது ஓட்டை!’
“சரி” தலையாட்டினான்.
மறுநாள் விண்ணப்பம் வாங்கி வந்து விருத்திஷ் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து கொடுத்து…
“கையெழுத்து மட்டும் போட்டு கொடுங்க..” நீட்டினான்.
போட்டுக் கொடுத்தாள்.
இரண்டு நாட்களில் அவளுக்கு பாலகுமாரனின் இரண்டு புத்தகங்களையும் எடுத்து வந்து கொடுத்தான்.
படித்துக் கொண்டிருந்த மணிமேகலையிடம் விருத்திஷ்…
“ஏது புத்தகம்?” கேட்டான்.
“பக்கத்து கட்டிடத்துல உள்ள கமலா கொண்டு வந்து கொடுத்தாள்.” சொன்னாள்.
மனமெங்கும் பூரிப்பும், இனம் தெரியாது புளகாங்கிதமும் மண்டிக்கிடந்தது சிவாவிற்கு. ஏறக்குறைய இலக்கை நெருங்கி விட்டான். இன்னும் தொடுவதுதான் பாக்கி. தொட்டுவிட்டால் காயா பழமா தெரிந்து விடும்.
சில பெண்கள் இப்படித்தான் நன்றாக பேசி பழகுவார்கள்; தப்பெண்ணம் தெரிந்தால் தானாக விலகுவார்கள் இல்லை தீயாகச் சுடுவார்கள்.
சிவா இப்படி இரண்டு மூன்று பெண்களிடம் சூடு பட்டிருக்கிறான்.
விருத்திஷ் இல்லாத நேரம் பார்த்து அவன் வீட்டு அழைப்பு மணி அழுத்த கையை வைத்தான்.
உள்ளே ஆணின் சிரிப்பொலி கேட்டது. அதைத் தொடர்ந்து…மணிமேகலையின் சிரிப்பு.
‘யார்..? யார்..?’
அழைப்பு மணி அழுத்தினான்.
மணிமேகலைத்தான் கொஞ்சமாக கதவு திறந்தாள்.
”நான் வீட்டுல வேலையா இருக்கேன் அப்புறம் வாங்க..” சொல்லி இவன் பதிலை எதிர்பாராமல் கதைவடைத்தாள்.
சிவாவிற்குப் பெருத்த ஏமாற்றம், அவமானம்..! அதை எல்லாம் விட… சரியாய்க் கதவு திறந்து பதில் சொல்லாமல் என்ன களவாணித்தனம். உள்ளே இருப்பவன் யார்..? – இவனுக்குள் சந்தேக வண்டு சதிராடியது.
அத்தியாயம் – 8
கதவடைத்து விட்டு திரும்பிய மணிமேகலையிடம்…
“யார் மணிமேகலை..?” வெங்கடேஷ் கேட்டான்.
“வீட்டுக்காரர் நண்பர். அடுத்தக் கட்டிடத்தில் இருக்கார். ம்ம் அப்புறம் ஜோக் சொல்லுங்க..?”
“ஜோக் இருக்கட்டும். நீ எப்படி இருக்கே..?”
“நல்லா இருக்கேன்.”
“பிரச்சனை..?”
“ஒண்ணுமில்லே. என் வீட்டுப் பக்கம் போனீங்களா..? அம்மா, தங்கச்சி எல்லாம் எப்படி இருக்காங்க..?”
“ரொம்ப நல்லா இருக்காங்க.”
“வந்த வேலை முடிஞ்சுதா..?”
“இல்லே. பேருந்தை விட்டு இறங்கினேன். நேரா இங்கே வந்துட்டேன்.”
“பார்க்கணும்ன்னு நெனப்பு இருக்கா..?”
“உன்னை மறந்தாதானே நெனைக்கிறதுக்கு..!”
“மறந்துடு வெங்கடேஷ்!”
“மறந்துட்டேன் உன்னை.”
“ரொம்ப நன்றி!”
“ஆனா… மறக்கல நம்ம காதலை..!”
“வெங்கடேஷ்!” அதிர்ந்து பார்த்தாள்.
“சத்தியமா மறந்துட்டேன் மணிமேகலை. ஆனா… இங்கே நான் ஏன் வந்தேன் தெரியுமா..?”
“ஏன்..?”
“நீ நினைச்சது, நான் வீட்டுக் கொடுத்ததுக்கு அர்த்தமிருக்கா..? நீ சந்தோசமா இருக்குறியான்னு பார்க்கத்தான்.”
“வெங்கடேஷ்!” தழுதழுத்தாள்.
“என் கை பேசி எண் கொடுத்துட்டுப் போறேன். உனக்கு என்ன உதவி வேணும்மின்னாலும் தொடர்பு கொள்.” சொன்னான்.
அதே நேரம்…
தன் கைக்கு எட்டும் தூரத்தில் அமைக்கப்பட்டிருந்த அழைப்பு மணி அழுத்தினான் விருத்திஷ்.
மணிமேகலை வந்து கதவு திறந்தாள்.
வாசலில் புதிதாய் ஒரு ஜோடி செருப்புகள் இருப்பதைப் பார்த்த விருத்திஷ்…
“யார்..?” கேட்டான்.
“விருந்தாளி..!”
அதற்குள் உள்ளே அமர்ந்திருந்த வெங்கடேஷ் தானாக எழுந்து வந்து…
“வணக்கம் சார்.” என்றான்.
“வணக்கம்…நீங்க…?”
“வெங்கடேஷ்! அத்தை பையன்!” மணிமேகலை அறிமுகப்படுத்தினாள்.
“மன்னிக்கனும். மறந்துட்டேன்.” – சமாளித்தான்.
“நம்ம திருமணத்துக்கும் வந்திருந்தார்..”
“கவனிக்கல..”
உள்ளே சென்றார்கள். அமர்ந்தார்கள்.
“எப்போ வந்தீங்க..?”
“இப்போதான் கொஞ்ச நேரத்துக்கு முந்தி..'”
“நீங்க அந்தண்டை போனீங்க இவர் இங்கே வந்துட்டார்.”
“வீட்டுல குழந்தைகள்….”
“இன்னும் வெங்கடேசுக்குத் திருமணமே ஆகலை..” சொன்னாள் மணிமேகலை.
“அப்போ நான் புறப்படுறேன்..” வெங்கடேஷ் எழுந்தான்.
“ஏன் அவசரம்..?”
“ஒரு வேலையாய் வந்தேன். அப்படியே மணிமேகலையையும் கண்டுக்கிட்டு போகலாம்ன்னு வந்தேன்.” கிளம்பினான்.
அவனை வாசல் வரை வந்து வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தாள்.
ஆள் நல்ல சிகப்பு. எடுப்பு. வாட்ட சட்டம். அத்தை மகன். திருமணம் வேறு ஆகவில்லை. ஆளில்லா சமயத்தில் உள்ளே நுழைந்து இருந்துவிட்டு தான் வந்ததும் அவசரமாக கிளம்பிச் செல்கிறானென்றால்..?
இவர்களுக்குள் காதல், தவறான பழக்கம்..? இல்லை…தற்போது கண்ட இடத்தில் தொடுதல், கட்டிப்பிடித்து முத்தம்…. கட்டிப் பிடிப்பு…? விருத்திசுக்குள் வழக்கமான மனம் வேலை செய்தது.
இரண்டு மாத கால வாழ்க்கையில் கணவனைப் பற்றி ஓரளவிற்குத் தெரிந்துதான் வந்திருக்கிறாளென்றாலும்…. இவன் அளவிற்கு இவளுக்கு அடிக்கடி சுதாரிப்பு வராது. எண்ணம் அது மாதிரி இருந்தால் தானே சுதாரிப்பு வரும்..?
சந்தேகம் இவன் பிறவியிலேயே ஊறியது. தொட்டதிற்கெல்லாம் சந்தேகம். நன்றாக உடுத்திக் கொள்ள முடியாது.
“வீட்ல இருக்கும்போது எதுக்கு நல்ல புடவையெல்லாம் கட்டி வீணாக்குறே..?” – கேட்பான்.
இவள் சுத்தமாக நேர்த்தியாகத்தான் கட்டிக் கொள்வாள். பழைய புடவைகூட இவள் காட்டினால் பளீரென்று இருக்கும். எடுப்பாக இருக்கும். அது பிடிக்காது இவனுக்கு.
“கட்டிக்கத்தானே இருக்கு!” சொல்வாள்.
“அதுக்காக வாசல்ல அனாவசியமா நின்னு காட்டணுமா..?”
‘எவனைப் பார்க்க நிக்கிறே…அல்லது எவன் பார்க்கிறான் நிக்கிறே..?’ – இந்தக் கேள்விதான் அவனிடம் அப்படி மாறி வரும். பெண் எப்படி வெளியே கூட எட்டிப் பார்க்காமல் சிறை போல வீட்டிற்குள் இருக்க முடியும்..?
இரவில் இவள் எந்த நேரம் விழித்தாலும் விழித்திருப்பான். ஏன்..?
கணவன் தூங்கியதும் மனைவி இடம் மாறிடுவாள்! என்கிற பயம்! புத்தி! கோளாறு..!
இப்படியெல்லாமா பயம் இருக்கும்..? – இவளுக்கே பயமாக இருக்கும்.
“ஏன் இப்படி விழிச்சிருக்கீங்க..? இதுதான் காரணமா…?” என்று கேட்கக்கூட இவளுக்கு ஒருநாள் திடீர் ஆசை.
அப்படிக் கேட்டால் அவன்…
‘நீ ஏன் இப்படி நெனைச்சே..? குத்தமுள்ள நெஞ்சுதான் இப்படியெல்லாம் நினைக்கச் சொல்லும். அதனால்தான் இப்படி தப்பா பேசறே..? எனக்குத் தூக்கம் வரல விழிச்சிருக்கேன். நீ இப்படி கேட்ட பிறகுதான் எனக்கு சந்தேகமே வருது’ திருப்பித் தாக்குவான்.
‘நான் சுத்தம். என் மனசு சுத்தம். நீ அழுக்கு. உன் நெனப்பு அப்படி இருந்தா அதுக்கு நானென்ன செய்ய முடியும்..? கண்டதை நெனைச்சி அவஸ்தைப்படுங்க…’ படுத்து விட்டாள்.
‘இந்தக் குணம், மனம்த்தை எப்படி மாற்றுவது..? மாற்றினாலும் மாற்ற முடியவில்லையே…! எறும்பு ஊற கல்லும் தேயும்!’ – நினைத்தாள்.
சிவா என்னதான் சமாதானம் செய்து கொண்டாலும்…
‘யாரந்த வில்லன்..? எனக்கு முன் வீட்டினுள் புகுந்து பழத்தைப் பறிப்பது…? குட்டையைக் குழப்புவது..?’ – இந்த நினைப்புதான் அவனைச் சுற்றி சுற்றி வந்தது. விருத்திசிடம் கேட்கலாம்..? – கேட்டால்….
‘உனக்கென்ன அதைப் பத்தை என் வீட்டுக்கு ஆயிரம் பேர் போவான் வருவான்…? நீ எதுக்குப் பார்க்கிறே..? கேட்கிறே..? விசாரிக்கிறே..?’ – பாய்வான். ஏனென்றால் அவனுக்கு நம்மைப் பற்றி நன்றாகத் தெரியும்..
அது மட்டுமல்ல… அவனே உஷாராகி எச்சரிக்கையாய் இருப்பான். மணிமேகலையைத்தான் விசாரிக்க வேண்டும்! தீர்மானித்துக் கொண்டு காத்திருந்தான்.
வெளியே மார்கெட்டிற்கு கறிகாய் வாங்க வந்தவளை மடக்கி…
“அன்னைக்கு யாரு..? வீட்ல விருந்தாளியா..?” கேட்டான்.
“என்னைக்கு…?”
“போன சனிக்கிழமைக்கும் முந்தின சனிக்கிழமை.”
“ஆமா. விருந்தாளிதான்!
“யார்..? “
“அத்தைப் பையன்.!”
“அடிக்கடி வருவாரா..?”
“வருவார்..?”
”அவரைக் கட்டிக்காம….இந்த விருத்திசை ஏன் கட்டிக்கிட்டீங்க..?”
‘இது இவனுக்குத் தேவை இல்லாத கேள்வி. ஆனாலும் பதில் சொல்லாமல் விடுதல் சரி இல்லை.!’ – நினைத்த மணிமேகலை..
“அவரை கட்டிக்க ஆயிரம் பொண்ணுங்க வருவாங்க. இவரைக் கட்டிக்க யார் வருவா..?” – உண்மையைச் சொன்னாள்.
இது இவனுக்கு எதிர்பாராத பதில்.
“உண்மையிலேயே முழு மனசோடத்தான் விருத்திசைக் கலியாணம் பண்ணிக்கிட்டீங்களா…?” கேட்டான்.
இவனுக்குத் தன்னைப் பற்றி சிறிதாவது திறந்து காட்ட வேண்டும் என்று நினைத்த மணிமேகலை…
“ஆமாம்!” அழுத்திச் சொன்னாள்.
“இது சொல் புத்தியா?….சுய புத்தியா…?”
“சுய புத்தி!”
“எனக்காகச் சொல்லலையே…?”
“உங்களுக்காக நான் எதுக்குச் சொல்லனும்..?” – திருப்பித் தாக்கிப் பார்த்தாள்.
“நான் கேட்கிறேன்னு நீங்க சொல்லலாம்…”
“அப்படி சொல்லலை..”
“வந்து…”
“இது என் வாழ்க்கை. நான்தான் தீர்மானம் பண்ணனும். விரும்பி ஏத்துக்கிட்ட வாழ்க்கையை வெளியில் சொல்லணும்ன்னு அவசியமில்லே…” என்று கடகடவென்று சொல்லிவிட்டு இவனைத் திரும்பிக்கூட பார்க்காமல் விடுவிடுவென்று சென்றாள்.
சிவா அப்படியே ஆடாமல் அசையாமல் நின்றான்.
அத்தியாயம் – 9
வெங்கடேஷ் வந்துவிட்டு சென்றதிலிருந்து விருத்திசுக்குள் இருந்த உறுத்தல் வெளியேறவில்லை.
அப்படி இருக்காது. இப்படி இருக்காது என்று மனதை எப்படி சமாதானம் செய்து அடக்கினாலும்… மீண்டும் மீண்டும் அது உயிர்ப்பித்துக்கொண்டே இருந்தது..
சந்தேகம் ஒரு பெரிய நோய் . சாமானியத்தில் அது அழியாது, அழிக்க முடியாது. அது மட்டுமில்லே இப்படிப்பட்ட சந்தேகப் பிராணிகளின் உள்ளே புகுந்து விட்டால் அது சாமானியத்தில் வெளிய வராது.
அப்படித்தான் விருத்திசையும் அது சுற்றி சுற்றி வந்தது.
அதிகமான மன உளைச்சலைக் கொடுத்தது. சரிவர சாப்பிடக்கூடப் பிடிக்காமல் உடல் ஒரு சுற்று இளைத்து வேறு போனது.
திருமணம் முடித்து இப்படி சங்கடப்படுவானேன் …! என்று வாழ்க்கை மீதே ஒரு வெறுப்பு வந்தது.
நிம்மதியாய் இருந்த தன்னை திருமண வளையத்திற்குள் சிக்க வைத்து அவதிப்பட வைத்து விட்டார்களே! – என்று அம்மா, அப்பா மீது வேறு காழ்ப்பு வந்தது.
என்னென்னவோ நினைத்துக் கொண்டு விட்டம் பார்த்து வெறித்துப் படுத்திருந்தான் விருத்திஷ்.
அருகில் மணிமேகலை சுவரில் சாய்ந்து புத்தகம் விரித்துப் படித்துக் கொண்டிருந்தாள்.
அழைப்பு மணி ஒலித்தது.
“யார் மணிமேகலை..?”
புத்தகத்தை மூடி வைத்துவிட்டு சென்று பார்த்தவளுக்கு நம்ப முடியாத அதிர்ச்சி.
பெண் வந்து பார்த்து பேசி முடித்த சந்திரசேகரன். விருத்திஷ் இயக்குனர்.
“வாங்க… வாங்க..” கையும் ஓடாமல் காலும் ஓடாமல் பரபரப்பாக அழைத்தாள். வரவேற்றாள்.
அவர் புண் சிரிப்பு, முறுவல் முகத்துடன்…
“நல்லா இருக்கியாம்மா..? ” கேட்டு உள்நுழைந்தார்.
“இருக்கேன் சார்!” சொல்லி மணிமேகலை அவர் பின் வந்தாள்.
ஆளைப் பார்த்த விருத்திசுக்கும் நம்பமுடியவில்லை. தெய்வமே தன் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த திகைப்பு வியப்பு.
“சார் ! வாங்க…” படக்கென்று எழுந்து அமர்ந்தான்.
“உட்காருங்க சார்!” மணிமேகலை நாற்காலியை துடைத்து நகர்த்தினாள்.
அமர்ந்தார்.
“மணிமேகலை காபி…”
“இதோ…!” உள்ளே ஓடினாள்.
“:இரும்மா. வேணாம். கலியாணத்தன்னைக்குப் பார்த்தது. குடும்பம் எப்படி நடத்துறேன்னு பார்க்க வந்தேன். எப்படிடா இருக்கே..?” – விருத்திசைப் பார்த்து அன்பு, அதட்டலாய்க் கேட்டார்.
“நல்லா இருக்கேன் சார். ஒரு டம்ளர் மோர்..?”
“சரி.”
விருத்திஷ் மனைவியைப் பார்த்தான்.
அவள் உள்ளே சென்று நொடியில் கையில் மோருடன் திரும்பினாள்.
அவர்கள் திருப்திக்காக அருந்தினார். வைத்தார்.
:மணிமேகலை உன்னைத்தான் பார்க்க வந்தேன். பையன் எப்படி இருக்கான். ஒழுங்கா குடித்தனம் நடத்துறானா..? “‘ அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்த்தார்.
என்ன சொல்வதென்று தெரியாமல் மணிமேகலை விழித்தாள்.
“சங்கோஜம், தயக்கம் இல்லாம சொல்லு..? ஏதாவது குறையா..? “
“நான் ஒன்னும் குறை வைக்கல சார்..”
“நான் உன்னைக் கேட்கலை. அவள் சொல்லட்டும். “
“ஒன்னும் குறை இல்லே சார்..”
இருந்த இடத்திலிருந்தே வீட்டை நோட்டம் விட்டார்.
டி.வி., ப்ரிட்ஜ், கிரைண்டர், வாசிங்மெஷின், சாமான் சட்டுகள் எல்லாம் இருந்தன. திருப்தியாய் இருந்தது.
“மணிமேகலையை அழைச்சுக்கிட்டு ஒரு நாள் வீட்டுக்கு வாடா. உனக்கு விருந்து வைக்கணும்..”
அதிகாரிக்குத் தன் மீது என்ன ஒரு அக்கறை..?! மறுக்க முடியாது.
“வர்றேன் சார்!”
“என்னைக்கு வர்றே..?”
“என்ன சொல்ல..?” மனைவியைப் பார்த்தான்.
அவளும் விழித்தாள்.
“சரி. சவுகரியப்பட்டபோது வாங்க ” எழுந்தார்.
”வர்றேன் மணிமேகலை” அவளிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டார்.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |