நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
கதையாசிரியர்: இம்தியாஸ் தாஸிம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: December 26, 2025
பார்வையிட்டோர்: 174

பேரனர்த்தத்தில் பெற்றார், இரு தங்கைமார், இரு தம்பிகளை இழந்த சுரேஸ், 15நாட்கள் முஸ்லிம்களின் பள்ளிவாசலில் அகதியர்களில் ஒருவராகத் தங்கியிருந்து விட்டு, இன்றுதான் தான் பணிபுரியும் கொழும்பு sea streetல் உள்ள நகைக் கடையை நோக்கிச் செல்வதற்காக காலை 6மணிக்கு நுவரெலியாவிலிருந்து கொழும்பை நோக்கிப் புறப்படும் ctb பஸ்ஸில் ஏறி அமர்ந்தான்.
கவலை குடியிருந்த அவனது உள்ளம், இடைப்பட்ட நாட்களில் நிகழ்ந்த ஒவ்வொன்றையும் நினைவுக்குக் கொண்டு வந்தது.
கடந்த 8 வருடங்களாக ஜுவெலரியில் தொழில் புரிந்துவந்த சுரேஸ், ol பரீட்சை முடிவுடன் நகைக் கடையில் இணைந்தான். சிறந்த பெறுபேர்கள் கிடைத்திருந்த போதும் குடும்பத்தின் வறுமை நிலையை உணர்ந்து தான் கற்ற கல்லூரியில் கல்வியை தொடர்ந்து கொண்டிருக்கும் உடன் பிறப்புக்களின் நலவை நாடி தியாகியானான். தோட்ட பணியில் ஈடுபட்டிருந்த தந்தையும் நோயுற்று கட்டிலிக்கானதும் தாய்க்கு வீட்டுப் பணிக்கதிமாக வேறொன்றும் செய்ய முடியவில்லை.
இவர்களின் குடியிருப்பு நுவரெலியாவுக்கு நெருக்கமான மலை பிரதேசத்தின் பள்ளத்தாக்கில் இருந்தது. சில முஸ்லிம், தமிழ் குடியிருப்புக்கள் அங்கு இருந்தன.
15 நாட்களுக்கு தனது பணியிலிருந்த போதே நுவரெலியாவில் பல இடங்களில் மண்சரிவு நிகழ்வு நிகழ்ந்துள்ளதென்ற செய்தி அறிந்து இரவோடு இரவாக ஊர்திரும்பிய போதே தான் வாழ்ந்த இல்லமும் மற்றும் சில குடியிருப்புக்களும் மண்ணில் புதையுண்ட துயரச் செய்தியை அறிய முடிந்தது. அவன் வீட்டில் யாரும் உயிர் பிழைக்கவில்லை. நான்கு நாட்கள் கழிந்ததன் பின்னரே சடலங்களை தேடி இறுதிக் கிரியைகளை செய்ய முடிந்தது. அனர்த்தம் நடந்த இடத்திற்கு நெருக்கமாக மேட்டுப் பகுதியில் ஒரு முஸ்லிம் பள்ளியிருந்ததால் எல்லா மக்களுடன் சேர்ந்து சுரேஸும் அங்கேயே தங்கலானன். உணவு, உடை, தங்குவதற்கான ஏற்பாடுகளெல்லாம் அனர்த்த உதவியாளர்களால் சீராகக் கிடைத்தபோதும் பெற்றாரையும் உடன் பிறந்தாரையும் இழந்து நிற்கும் துயர் மனதை விட்டும் அகலவில்லை.
நான்கு நாட்களில் கொழும்பு திரும்பியிருக்கலாம். ஆனால், அவசரமாக ஊரை விட்டும் திரும்ப மனம் இடம் கொடுக்கவில்லை.
பஸ் கொழும்பை நோக்கி நகர, துயர் நிறைந்த உணர்வோடு பயணம் தொடர்ந்தது. சிறிது தூரம்தான் பயணித்திருக்கும். பஸ்ஸில் சத்தமாக ஒலிபரப்பாகிய பாடல் சுரேஸை உருக வைத்தது.
நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் வேறு இல்லை.
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி எங்குமில்லை.
சுரேஷ், தன்னால் தொடர முடியாதிருந்த கல்வியை தனது உடன் பிறப்புக்களை தொடரவிட்டு நல்ல நிலையில் அவர்களின் உயர்வை எதிர்பார்த்து பெற்றாரையும் மகிழ வைக்க ஆசை வைத்திருந்தவனுக்கு நிகழ்வுகள் கனவானது பெரும் துயரை அளித்தது.
சில அடிகள் தாண்டி, எங்கே வாழக்கை தொடரும், அது எங்கே எவ்விதம் முடியும் என்ற அடிகள் பாடலில் வரும் போது கைகளால் முகத்தை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதபோது பஸ்ஸில் பயணித்த சுரேஸை தெரிந்த சிலரையும் கலங்க வைத்தது.
(யாவும் கற்பனை)