நாமொன்று நினைக்க!
கதையாசிரியர்: நுஸ்பா இம்தியாஸ்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: December 12, 2025
பார்வையிட்டோர்: 59

ஆதிராவுக்கு ஏனோ மனதில் இனம்புரியாத பயம் மனதுமுழுக்க நிறைந்திருந்தது.
வீட்டில் தடல்புடலாக நடந்து கொண்டிருந்த ஏற்பாடுகள் எல்லாம் அவளுக்கானதுதான். இருந்தாலும்..அவளுக்கு அவற்றிலெல்லாம் சிறுதுளியளவு கூட விருப்பமில்லை.
என்ன செய்ய? நான்கு நாநாமார்களுக்கு ஒரே தங்கையிவள். வீட்டில் உள்ள அனைவரின் பாசமும் இவளுக்கு அதிகமாகவே கிடைத்தது. ஆனாலும் நாநாமார்கள் மீது இவளுக்கு பயமும், நிறையவே மரியாதையும் இருந்தன எனலாம்.
அவர்கள் எல்லோரும் அவளைவிட சற்று அதிகமாகவே வயதில் கூடியவர்கள். நான்கு பேர்களும் திருமணம் ஆனவர்கள். குழந்தைகளும் இருக்கின்றது.
வீட்டின் செல்லப் பிள்ளையான, சகோதரங்களின் பாசமலரான ஆதிராவின் கல்யாணத்தை மிகவும் ஆடம்பரமாகவும் விமரிசையாகவும் எடுத்துச் செய்ய வேண்டும் என்பது அவளது சகோதரங்களின் நோக்கம். ஆதலால் வீட்டில் அளவுக்கு அதிகமான ஆடம்பரங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன.
அவள் சகோதரங்களிடம் ‘இவை ஒன்றும் வேண்டாம். சிம்பிளாக செலவழிக்கலாம்’ என்று அமைதியான முறையில் எத்தனையோ முறை கேட்டு தோற்றுப் போனாள். அவர்களை மேற்கொண்டு எதிர்க்கும் தைரியம் அவளுக்கில்லை.
உம்மாவிடம் இது பற்றி பேசிய போது “ஆதிரா அதையெல்லாம் நீ யோசிக்காத… உனக்கு வந்திருக்கிறது நம்மல விட பெரிய இடத்து விசயம். அவங்களுக்கு தெரிய வேண்டாமா.. நாமளும் உள்ளவங்க என்று,அதக்குத்தானே நாநாங்களும் கைநிறைய செலவழிச்சி உன்ன கரைசேர்க்க முயற்சிக்குறாங்க. நாம என்ன அப்படி ஒன்டும் இல்லாதவங்களா? அப்பதானே நமக்கும் கெளரவம். ஊர் வேறு பெருமையாய் பேசும். இது புரியாம நீ உன் வாப்பா மாதிரி ஏதேதோ கதைக்குற…. இப்படி சகோதரங்க கிடைக்க நீ குடுத்து வச்சவ… புரியுதா? “தன்னைப் பெற்றவளின் பெரிய விளக்கத்தை காதில் வாங்கியும் வாங்காமலும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.
உம்மாவுக்கு! மற்றவர்கள் நம்மை பெருமையாகப் பார்க்க வேண்டும், வியந்து பேச வேண்டும் என்கிற எண்ணம்.அதனால்தான் அவளது சகோதரங்களின் செயல்களை சரி கண்டாள். இவைகள் ஆடம்பரங்கள், வீண்விரயங்கள் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை . ஆதிரா வீட்டின் சிறியவளாய் இருந்தாலும் இவைகளைப் பற்றி சிந்தித்து கவலைப்பட்டாள். இப்படியெல்லாம் வாழ்ந்தால் அல்லாஹ்வின் கோபத்துக்கு தன் குடும்பம் ஆளாகிவிடுமோ…! என்று மிகவும் பயந்தாள். தனது குடும்பத்துக்காக பிரார்த்தித்தாள்.
நாளை விடிந்தால் அவளது நிகாஹ் ஏற்பாடுகள் நடக்கவிருந்தது. வீடே அரண்மனை போல் புதுப்பொலிவுடன் ஜொலித்தது. பெரிய பெரிய மேசைகளில் பலகையிலான தட்டுகளில் பழங்களும், விதவிதமான சொக்லட்களும், ஜூஸ் போத்தல்கள், பாதம்.. பிஸ்தா.. பேரீத்தம்பழம் நட்ஸ் வகைகள்… சுவீட்கள்… மற்றும் மணமக்களின் பெயர்கள் பொரிக்கப் பட்ட ஐஸீங்கேக்.. இன்னும் சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு ஏராளமான உணவுகள். அத்தோடு மாப்பிள்ளை க்கு சேட், ஸாரம், டொளஸர், டீசேட்.. சப்பாத்து….செருப்பு…. வார்ச்… தங்கமோதிரம் …
குர்ஆன்… முஸல்லா இன்னும் நிறைய தேவையான தேவையற்ற பொருட்கள் கிட்டத்தட்ட நாற்பது தட்டுகளில் உள்தெரியும்படி பெகிங் செய்யப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. இவையெல்லாம் பார்க்கும் போது கண்காட்சி போல் தெரிந்தது . இவை மாப்பிள்ளை வீட்டிற்கு கொடுத்தனுப்புவதற்கான ஆயத்தங்கள். இதைப் போல் பல மடங்கு ஆயத்தங்கள் மாப்பிள்ளை வீட்டிலும் ஏற்பாடாயிருக்கும்.
‘இரு உள்ளங்களை மணவாழ்கையில் இணைப்பதற்கு இவையெல்லாம் அவசியமா? இதா இஸ்லாம் காட்டித் தந்த வாழ்க்கை? எதற்கு இந்தப் பேரு.. புகழ்..எல்லாம். லட்சக்கணக்கான பணத்தை வீண்விரயம் செய்றாங்க. இல்லாத ஏழைங்களுக்கு கொடுத்தாலாவது நிறைய நன்மைகள சேர்த்துக் கொள்ளலாம். இவையெல்லாம் யாருக்குப் புரியப் போவுது ‘ஆதிரா உருக்கமாக மனதினால் கவலைப்பட்டாள்.தனது
நிகாஹ்வில் நடக்கும் ஆடம்பரங்களை தன்னால் தடுக்க முடியவில்லையே’ என்று வருந்தினாள்.
காலை பதினொரு மணியளவில் மாப்பிள்ளை வீட்டில் நிகாஹ் ஏற்பாடும், பகல்நேரச் சாப்பாடு மணப்பெணின் வீட்டிலும் ஏற்பாடாகியிருந்தது.
இன்னும் ஒரு சில மாதங்களில் திருமணத்தை நடத்துவதாகவும் இரு வீட்டாரும் பேசி முடிவெடுத்திருந்தார்கள்.’ நிகாஹ் நடந்தால் திருமணம் முடிஞ்சமாதிரிதான். அவர்கள் இருவரும் சேர்ந்து வாழலாம். ஆனால் இப்ப அப்படியா? இருவரையும் சில நாட்கள் தவிக்க வைப்பதுமல்லாமல் திருமணம் என்ற பெயரில் மீண்டும் மீண்டும் ஆடம்பரச் செலவுகளும் சாப்பாடுகளும் …இதுதான் இப்போ பெஃசன். திருந்தாத ஜனங்கள்…’என்று ஆதிராவைப் போல் அவள் வாப்பாவும் தனக்குள் வருத்தப்பட்டார்.
மகன்களிடமும், மனைவியிடமும் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவர்கள் காதில் வாங்கவில்லை.
என்ன செய்ய மகள் நல்லபடியாக வாழ்ந்தால் போதும் என்று நினைத்து அமைதியாக இருந்தார்.
எல்லோரும் நேரம் சென்றே உறங்கப் போனார்கள். தஹஜுத் தொழுகைக்காக ஆதிராவும்,வாப்பாவும் நேரகாலத்துடன் எழுந்திருக்க வேண்டும் என நினைத்து அவசரமாக தூங்கிவிட்டார்கள். அன்றுதான் யாரும் எதிர்பார்க்காத அந்த பயங்கர நாள். டிட்வா பேரலை வந்து நிறைய இழப்புக்களை உயிர் சேதங்களை ஏற்படுத்தியது.அதில் ஆதிராவின் குடும்பமும் மொத்தமாக மண்ணில் புதையுண்டு போனார்கள். ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜீயூன் ‘ஊரில் உயிர் பிழைத்தவர்களின் நாவுகள் இதை உச்சரித்தவன்னம் இருந்தன. கண்டியில் இவர்கள் வசித்த பகுதியில் நிறைய சேதங்களை காண முடிந்தது. எவ்வளவு எதிர்பார்ப்புக்களுடன் நடக்க இருந்த ஆதிராவின் நிகாஹ். இன்று அவர்கள் வாழ்ந்த தடயமே தெரியாது அழிந்துவிட்டது. இன்று எத்தனை ஊர்களில் சேதங்கள், உயிர் இழப்புகள் இது படைத்தவனின் சோதனையா? தண்டனையா? மனிதர்கள் பணம் இருப்பதற்காக எப்படியெல்லாம் ஆட்டம் போட்டாலும் இறைவனால் கண்இமைக்கும் நொடியிலும் அழித்து விட முடியும். மனிதன் பலதை நினைக்கலாம். ஆனால் அல்லாஹ் ஒருவனே எல்லாம் நடத்தி முடிப்பவன்.அவன் இன்றி அணுவும் அசையாது.
(யாவும் கற்பனை)