நான் வரமாட்டேன்!
கதையாசிரியர்: பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா
தின/வார இதழ்: தினக்குரல்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 107
(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த மாவட்ட நீதி மன்றத்தில், வழமைபோல மக்கள் அங்கும் இங்கும் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருந்தார்கள். சட்டத்தரணிகள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள். கட்சிக்காரர்களும், பார்வையாளர்களும் அமர்ந்திருக்கும் இடத்தில் பெரும் பகுதி நிறைந்திருந்தது. சிலர் தங்கள் சட்டத்தரணிகளோடு பேசிக்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். அன்று கூப்பிடப்படவிருக்கும் வழக்குகளின் கோப்புக்களைச் சுமந்தவாறு நீதிமன்ற ஊழியர் உள்ளே வந்தார். நீதிமன்ற முதலியார் மற்றும் அலுவலர்கள் அவரவருக்குரிய இடங்களில் நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும் ருந்தார்கள். நீதிமன்றக் கட்டிடத் தொகுதியின் மறு பக்கத்தில் உள்ள மேல்நீதிமன்ற அலுவலகத்தில் வழக்கொன்றிற்கான பதிலுரையைச் சமர்ப்பிக்கவேண்டியிருந்ததால் அந்த வேலையை முடித்துவிட்டு, சற்றுத் தாமதமாக மாவட்ட நீதிமன்றுக்குச் சட்டத்தரணி சிவராசா வந்தபோது வழமையாக அவர் அமரும் இருக்கையில், கொழும்பில் கடமையாற்றுபவரும், மாதத்தில் ஒன்றிரண்டு தடவைகள் மட்டும் இந்த நீதிமன்றத்திற்கு வருகைதருபவருமான மூத்த சட்டத்தரணி ஒருவர் அமர்ந்திருந்தார். அவரைப்பார்த்து மரியாதை கலந்த புன்முறுவல் ஒன்றை உதிர்த்துவிட்டு, அவருக்கு எதிர்ப்பக்கத்தில் இருந்த இருக்கையில் சட்டத்தரணி சிவராசா போய் அமர்ந்து கொண்டார்.
சிறிது நேரத்தில் வழமைபோல நீதிமன்ற ஊழியரின் “நீதிமன்றம் அமைதி” என்ற குரல் ஒலியைத் தொடர்ந்து நீதிபதி தனது இருக்கையின் பின்னால் உள்ள கதவின் வழியாக வந்தபோது எல்லோரும் எழுந்து நிற்க அவர் மன்றை வணங்கித் தனது கதிரையில் அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து எல்லோரும் தத்தமது இருக்கைகளில் அமர்ந்தார்கள். வழக்குகள் ஒவ்வொன்றாகக் கூப்பிடப்பட்டன. சிறிது நேரத்தில் சரசாவின் தாபரிப்பு வழக்கு கூப்பிடப்பட்டது. மூன்று முறை பெயர்சொல்லி அழைக்கப்பட்டும், வழக்காளி சரசா வரவில்லை. கட்சிக்காரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் கண்ணோட்டம் விட்டுத் தேடினார் சட்டத்தரணி சிவராசா. சரசாவைக் காணவில்லை. வழக்கை வேறோரு தவணைக்கு ஒத்திவைக்க நீதிபதியிடம் கோரிக்கை விடுத்து விட்டு, அவர் தனது ஏனைய வழக்குகளில் கவனத்தைத் தொடர்ந்தார்.
அன்றைய தினம், நீதிமன்றம் முடிந்ததும், வழமைபோல சட்டத்தரணி சிவராசா கச்சேரியில் உள்ள காணிப்பதிவு அலுவலகத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினார். வீட்டில் அந்த அதிர்ச்சியான செய்தி அவருக்காகக் காத்திருந்தது. “சங்கரன் நஞ்சு குடித்து இறந்துவிட்டான்!”
ஏறத்தாழ, ஒருமணி நேரம் கடந்திருக்கும். சங்கரனின் உடல் வைத்தியசாலையில் இருந்து மாட்டுவண்டியில் வந்துகொண்டிருந்தது. வீதியில் அவரது வீட்டைக்கடந்து அது போய்க்கொண்டிருந்தபோது, சோகம் கலந்த அதிர்ச்சியில் நீண்டதொரு வெற்றுப் பார்வையோடு வீட்டின்முன் இருக்கும் தூணில் சாய்ந்தபடி அவர் நின்றுகொண்டிருந்தார்.
“வழக்குப் போட்டாங்களே…வழக்குப் போட்டாங்களே.. இப்ப என்ன செய்யப் போறாங்க உயிரத் திருப்பிக் குடுப்பாங்களா?” வண்டியின் பின்னால் சென்று கொண்டிருந்த சங்கரனின் தம்பி அவரைப் பார்த்து அழுகையும் கோபமும் கலந்த தொனியில் கேட்டான். பக்கத்தில் சென்று கொண்டிருந்த பெரியவர்கள் அப்படிக் கதைக்கூடாது என்று அச்சுறுத்தி அவனைப் பேசவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தார்கள். வண்டிசென்று மறைந்தபின்னரும் நின்ற இடத்திலிருந்து அவரால் அசைய முடியவில்லை. சிலைபோல அவர் உறைந்து நிற்க அவரின் சிந்தையிலே சங்கரனையும் அவனது குடும்பத்தையும் பற்றிய நினைவுகள் அசையும் சித்திரமாகத் தொடர்ந்தன.
சங்கரன் ஒரு முட்டாள் என்பது அவருக்குத் தெரியும். ஏன் ஊருக்கே அது தெரியும். ஆனால் இப்படியொரு முட்டாள்தனமான காரியத்தைச் செய்வான் என்று அவர் எதிர்பார்த்ததில்லை. மண்டையில்தான் அவனுக்கு ஒன்றுமில்லை. ஆனால் நல்ல உடல்வாகு கொண்டவன். அவனது கைகளிலும் கால்களிலும் முறுக்கேறிய தசைநார்கள் புடைத்து நிற்கும். திமிர்த்த நெஞ்சு எப்போதும் விம்மி நிற்கும். அவனைப் பார்த்தால் அந்தக்காலத்தில் வருகின்ற அஜமாமிச லேகியத்திற்கான விளம்பரத்தில் காணப்படும் மனிதனின் படம் நினைவுக்கு வரும். அவ்வளவு உறுதியான தேக்குமர உடற்கட்டு அவனுக்கு. கடின உழைப்பாளி. ஆடு ஒன்றைத் தன்னந்தனியனாக இரண்டு நிமிடங்களில் அவன் உரித்துப்போடுவான் என்று ஊரவர்கள் சொல்வார்கள்.
வானுயர்ந்து நிற்கும் தென்னை மரங்களில் அவன் ஏறும் வேகத்தை பார்ப்பவர்கள் மலைத்து நிற்பார்கள். மற்றவர்களைப் போல மரத்தைக் கட்டிப்பிடித்து, உன்னி உன்னி அவன் ஏறமாட்டான். தளைக் கயிறு எதையும் காலில் மாட்டிக்கொள்ள மாட்டான். ஒருகையால் மரத்தை வளைத்துப் பிடித்து, மறுகையின் முழங்கை வயிற்றுப் பகுதியை இடித்துக் கொண்டிருக்க, உள்ளங்கையால் மரத்தில் முஸ்டி கொடுத்து தாவித்தாவி ஏறுவான். எங்கே, இவன் விழுந்துவிடப் போகிறானே என்று பார்ப்பவர்களின் மனம் பதை பதைக்கும். சில வினாடிகளில் மரத்தின் வட்டுக் குள் ஏறியிருந்துகொண்டு குலைகளைக் காலால் உதைத்து தேங்காய்களை விழுத்துவான். கால்களாலும், ஒருகையாலும் மரத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு மறு கையால் தேங்காயை எட்டிப்பிடித்துத் திருகிப் பறிப்பது அவ னுக்கு வழக்கமில்லை. மற்றவர்கள் பெரும்பாலும் அப்படித்தான் செய்வார்கள்.
வயல்வேலைக்கு ஆட்களை எடுக்கும்போது சங்கரனுக்குத்தான் முதல் இடம். வரம்பு கட்டுதல், மாடுபூட்டி உழுதல், பலகை அடித்தல், விதைத்தல், அருவி வெட்டுதல் என்று இப்படி எல்லாவித வயல் வேலைக ளுக்கும் எல்லோரும் சங்கரனைத்தான் தேடிப்பிடிப்பார்கள். வீடு கட்டும் மேசன்மாருக்கு சங்கரன் என்றால் மிகவும் விருப்பம். சீமேந்து குழைத்தல், கல்தூக்குதல், கல்லடுக்குதல் எல்லாவற்றுக்கும் சங்கரனுக்கு நிகராக யாரும் நிற்க முடியாதாம். அவ்வளவுக்குக் களைப்பில்லாமல் மாடுமாதிரி வேலை செய்வான் என்று கூலிவேலை வட்டாரத்தில் அவனுக்கு நல்ல பெயர்.
சங்கரனுக்கு நிரந்தரமான வேலை என்று ஒன்றும் இல்லை. ஆனால், வாரத்தில் ஏழு நாட்களிலும் அவன் வேலைக்குப் போகாத நாள் என்றும் ஒன்று இல்லை. சனி ஞாயிற்றுக் கிழமைகளில்கூட சங்கரன் ஓய்வெடுப்பதில்லை. உழைப்பு, உழைப்பு. அப்படிப்பட்ட உழைப்பாளி. ஆனால் அவனது கையிலோ ஒருசதக் காசுகூட இருப்பதில்லை. மனைவி, குழந்தைகளுக்குச் சாப்பாட்டுக்குக்கூட அவன் போதிய பணம் கொடுப்ப தில்லை. தினமும் அவர்களுக்கு அரை வயிறுதான். சில நாட்களில் முழுப்பட்டினி. சங்கரன் மட்டும் தான் வேலை செய்யப் போகும் இடங்களில் நன்றாகச் சாப்பிட்டுக்கொள்வான். ஒவ்வொரு நாளும் அவன் உழைக்கும் பணம் முழுவதும் உள்ளுரில் சாராயம் விற்கும் கணபதியிடமே சேரும். செய்தவேலைக்குச் சம்பளம் கிடைக்காத நாட்களில் சங்கரனுக்குக் கடனுக்குச் சாராயம் கொடுப்பதற்கு கணபதி ஒருநாளும் தயங்கியதேயில்லை. மறுநாளோ அல்லது சில நாட்களின் பின்னரோ மொத்தமாகச் சங்கரனிடம் உருவிவிட அவனால் முடியும். அப்போது பொய்க்கணக்கும் அதில் சேர்ந் திருக்கும். போதை ஏறத் தொடங்கியதுமே சங்கரனுக்குச் சட்டைப் பையில் உள்ள பணத்தின் பெறுமதி தெரியாமல் போய்விடும். பெரும் பாலான நாட்களில் கணபதியின் வீட்டிலேயே சாப்பாடும் கிடைக்கும். சாப்பாட்டுக் கணக்கையும் சாராயக் கணக்கில் சேர்த்து வசூலிக்கும் கணபதியின் தந்திரத்தை உணராத சங்கரன், பசிக்கு உணவளிக்கும் பரோபகாரிகளாகக் கணபதியையும், அவரது மனைவி தங்கம்மாவையும் நன்றிப்பெருக்கோடு உள்ளத்தில் போற்றுவான். போதை தலைக்கேறியபோது எத்தனையோ தடவைகள் தன் மனைவி, சரசாவிடமே அவர்களைப் புகழ்ந்து பிதற்றியிருக்கிறான்.
தள்ளாடிக்கொண்டு ஒவ்வொருநாளும் அவன்வீட்டுக்குச் செல்லும்போது இருட்டுப்பட்டுவிடும். அப்படியே வந்து வீட்டுத்திண்ணை யில் பொத்தென்று சரிந்து கால்களைப் பரப்பி நித்திரையாகி விடுவான். போதை குறைவாக இருந்தாலோ அல்லது படுத்துச் சிலமணிநேரத்தில் போதை தணிந்து விட்டாலோ சரசாவைக் கூப்பிடுவான். அவள் வந்தே ஆக வேண்டும். பிறகு அவளின் நிலைமை அதோகதிதான். அவளுக்கு இயலுமோ இயலாதோ, அவள் சாப்பிட்டாளோ அல்லது பட்டினியோ எதையுமே அவன் கவனிக்க மாட்டான். தனது முரட்டுப் பிடிக்குள் அவளை அடக்கி, மிருகத் தனமாக கசக்கிப் பிழிந்துவிட்டு மறுபக்கம் புரண்டு படுத்துக் குறட்டை விடுவான். சரசாவின் வேதனையும், துன்பமும் கண்ணீராகக் கரையும்.
காலையில் பொழுது புலரும்போது எழுந்து குளக்கட்டுக்குப் போய், குளத்தில் அடிக்கழுவி விட்டு அவன் திரும்பி வரும்போது சூடான தேனீரைச் சரசா கொடுத்தால் அதைக்குடிக்கும்போது மட்டும் அன்பாகப் பேசுவான். சிறிது நேரத்தில் வீட்டைவிட்டுப் புறப்பட்டு விடுவான். அவள் அவனிடம் எதுவுமே கேட்பதில்லை. கேட்டுப் பயனில்லை. அவள் எதை யாவது கேட்டு, அதற்கு அவன் பதில் சொன்னாலும் அதில் உண்மை இருப்ப தில்லை. சொல்வது போல அவன் நடப்பதுமில்லை. இதுதான் சங்கரன் சரசாவுடன் குடும்பம் நடத்தும் இலட்சணம். இந்த இலட்சணத்தின் விளைவாக நான்கு குழந்தைகள். வட்டும் வழுதிலையுமாக ஒன்றன்பின் ஒன்றாக, சரசா ஒவ்வொரு தடவையும் செத்துப்பிழைத்து பெற்றுப் போட்ட அந்தக் குழந்தைகளுக்கு மாற்றிப் போடுவதற்கு உடுப்புக்கூட இல்லை.
இல்லறவாழ்வில் சரசாவின் வயிறு குழந்தைகளைச் சுமந்த வேளைகளில் உப்பியதேயன்றி, சாப்பாட்டினால் அது என்றுமே நிறைந்த தில்லை. வற்றிய குடலும், கலங்கிய கண்களும், பயந்த நெஞ்சுமாக சரசாவின் வாழ்வு தொடர்ந்தது.
நான்காவது குழந்தை பிறந்து சிலமாதங்களில் இருந்து சங்கரன் வீட்டுக்கு வருவது குறைந்தது. அதுவரை குடித்தாலும், வெறித்தாலும், அவன் வீட்டுக்கு வராமல் விட்டதில்லை. அவளையும், குழந்தைகளையும் சரிவரப் பராமரிக்காமல், பட்டினிக்கு ஆளாக்கியதைத் தவிர சரசாவை அவன் என்றுமே அடித்துக் கொடுமைப் படுத்தியதில்லை. தினமும் அவன் வீட்டுக்கு வரும்போது சில நாட்களில் அவனின் சட்டைப்பையில் தப்பித் தவறிக்கிடக்கும் சிறுதொகைப் பணம் அல்லது சில்லறைக்காசு வரண்ட பூமியில் விழுந்த பனித்துளிபோல சரசாவின் குடும்பத் தேவைகளுக்குப் பயன்பட்டு வந்தது. சங்கரன் தனது சட்டைப்பையில் இருந்த பணத்தைப்பற்றி என்றுமே அவளிடம் கேட்டதில்லை. அப்படியெல்லாம் எஞ்சிய சில்லறைப் பணம் தன் சட்டைப்பையில் இருப்பது போதையில் அவனுக்கு மறந்து போகிறதா அல்லது சரசா எடுக் கட்டுமே என்று தெரிந்தே விட்டிருந்தானா என்பது அவனுக்கே வெளிச்சம்.
இப்போது அவன் வீட்டுக்கு வருவது குறைந்து விட்டதால் டைக்கிடையே கிடைக்கும் அந்தப் பணமும் இல்லை என்று ஆகி விட்டது. பணம் கிடைப்பதில்லை என்பதற்கும் மேலாக அவன் வீட்டுக்கு வராமல் விடுவதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இனம் புரியாத ஏதோவொரு பாரிய இழப்பு தனக்கு நேர்ந்து விட்டதாகவே சரசா பயந்து வெதும்பினாள்.
சங்கரன் வீட்டுக்கு வராமல் விடும் இடைவெளி, நாட்கணக்கில் இருந்து வாரக்கணக்காக நீண்டது. சரசாவுக்கு அது மெல்ல மெல்லப் பழகிப் போய்விட்டாலும், இனியும் பட்டினியால் வாட அவளால் முடிய வில்லை. எத்தனை நாளைக்குத்தான் பெற்றோரிடமும் சகோதரிகளிடமும் அவளால் கையேந்தி நிற்க முடியும்? அவர்களும் கூட அன்றாடங்காய்ச்சிகளாக இருப்பதால் சரசா உதவிகேட்டு வருவதை உபத்திரவமாகவே உணர்ந்தார்கள். அந்த உணர்வுகளின் பிரதிபலிப்பாக அவர்களிடம் இருந்து வெளிப்படும் சுடுசொற்களைத் தாங்கிக்கொள்ளும் திராணி இனியும் தனக்கு இல்லை என்ற நிலை வந்தபோது சரசா ஒரு முடிவுக்கு வந்தாள். ஒருநாள் சட்டத்தரணி சிவராசா அவர்களைச் சென்று சந்தித்தாள். சங்கரனிடம் தாபரிப்புக்கேட்டு வழக்குப் போடவேண்டும் என்று கேட்டாள். அப்படியொரு வழக்குப் போடலாம் என்பதெல்லாம் அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவளின் துன்பத்தை உணர்ந்த யாரோ அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்.
ஊரவர் என்பதால் அவளது நிலைமை அவருக்கும் ஓரளவு தெரிந்திருந்தாலும், எந்த அளவுக்கு அவளும் அவளின் குழந்தைகளும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அவள் சொல்லும்போது அவருக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
வழக்குப் போடுவதற்கு முன்னர் சங்கரனோடு கதைப்பதற்கு அவர் விரும்பினார். தொழில் ரீதியாக அது அவருக்கு அவசியமில்லாத ஒன்று என்றாலும், சமுதாயக் கண்ணோட்டத்திலும், மனிதாபிமான அடிப்படையிலும் அவனிடம் பேசிக் குடும்பத்திற்குள் ஓர் இணக்கத்தை ஏற்படுத்த நினைத்தார். விவாகரத்து வழக்குப் போட தன்னிடம் வந்திருந்த சில குடும்பங்களை, இரு தரப்பிடமும் சமரசம் பேசி, அறிவுரை சொல்லி அந்த எண்ணத்தைக் கைவிடச் செய்து தம்பதிகளைச் சேர்ந்து வாழவைத் திருக்கிறார் அவர். அதே வழியில்தான் சங்கரனோடும் பேசவிரும்பி அவனுக்குச் சொல்லி அனுப்பினார். இரண்டு தடவைகள் செய்தி அனுப்பியும் அவன் வரவில்லை. அதற்குள் சரசா அடிக்கடி அவரிடம் வந்திருந்தாள். கடைசி யாக வந்தபோது, வழக்குப் போட்டு அவனிடம் பராமரிப்பு வாங்கித்தரா விட்டால், தானும் குழந்தைகளும் ஆற்றிலோ கிணற்றிலோ விழுந்து தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அழுதாள்.
அதன்பின்னர், தாபரிப்புக் கோரிக்கை மனுவைத் தயாரித்து, சரசாவின் கையொப்பத்துடன் வழக்குத்தாக்கல் செய்தார். நீதிமன்றத்தால் சங்கரனுக்கு முறைப்படி அழைப்பாணை அனுப்பப்பட்டது. நீதிமன்றத்திற்கு வரும்படி அழைப்பாணை கிடைத்ததும் சங்கரனுக்கு நடுக்கம் பிடிக்கத் தொடங்கியது. மிகவும் பயந்துவிட்டான். உடலில் பலம் இருக்கும் அளவுக்கு அவனுக்கு உள்ளத்தில் இல்லை. நீதிமன்றத்திற்குப் போவதை அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. படிப்பறிவு இல்லாததும் அதற்கு ஒரு காரணம்.
ஒருநாள் மிதமிஞ்சிய போதையில் சட்டத்தரணி சிவராசா அவர்களைத் தேடி அவரின் வீட்டுக்குச் சென்றான். உள்ளே செல்லும் போதே உளறிக்கொண்டுதான் சென்றான். மதுபோதை தயக்கத்தைப் போக்கியதா அல்லது துணிவைக் கொடுத்ததா தெரியவில்லை. அவரைக் கண்டதும், வழக்கமாக வெளிப்படும் தயக்கம் எதுவும் இல்லாமல் நேரடியாகப் பேசத்தொடங்கினான்.
“என்ன வழக்குப் போட்டிருக்கியளாம்?” என்று அவரிடம் கேட்டான்.
“சங்கரன் உள்ள வா..” என்று அவர் அழைத்தார்.
“நான் உள்ளுக்க வரல்ல. வழக்குப் போட்டிருக்கியளாம். அதுக்கு என்ர பொண்டாட்டி உங்களுக்கு எவ்வளவு காசி தந்தவள்? அதிலயும் கூடக்காசி நான் தாறன். அந்த வழக்க இல்லாமச் செய்யுங்க. உங்களுக்கு எவ்வளவு காசி வேணும்?”
“ஏய் சங்கரன்! வெளியில் நிண்டு கதைக்காம உள்ளவா. உள்ள வா, கதைப்பம்.”
“நான் வரமாட்டன். நான் உள்ளுக்கையும் வரமாட்டன். கோட்டுக் கும் வரமாட்டன். அவள் உங்களுக்கு எவ்வளவு காசி தந்தவள் சொல்லுங்க.”
“அவள் எனக்கு காசு தரல்ல. எனக்குத் தாறத்துக்கு அவளிட்டக் காசு இருந்தா, அவள் ஏன்ரா பட்டினி கிடக்கோணும்.”
“அவள் பட்டினி கிடந்தா உங்களுக்கு என்ன? அவள் என்ர பொண்டாட்டி. வழக்க இல்லாமல் பண்ண எவ்வளவு வேணும்?”
“இஞ்ச பார் சங்கரன். இது நான் போட்ட வழக்கில்ல. உன்ர மனிசி போட்ட வழக்கு. அதை இல்லாமல் பண்ண வேணும் எண்டால் அதை அவள்தான் செய்ய வேணும். அது பிரச்சினை இல்ல. நீ காசு எனக்குத் தரத் தேவையில்லை. அவளுக்குக் குடு.”
“நான் குடுக்க மாட்டன். அவள் என்னக் கோட்டுக்கு இழுத்த மட்டும், இனி அவளுக்கு நான் புரிசன் இல்ல.”
“இஞ்ச பார் சங்கரன். சரசா உன்ர பெண்டாட்டி. உனக்கு நாலு பிள்ளைகள் இருக்கிறாங்க. உன்ர பிள்ளைகள். அவங்கள நீ தானேடா பாக்க வேணும். நீ நல்லா உழைக்கிறாய். உழைக்கிற காசெல்லாத்தையும் என்ன செய்யுறாய்? எல்லாத்தையும் நீ குடிச்சி அழிக்கிறாய். அதுசரியா? உன்ர குடும்பத்த நீ பட்டினி போடலாமா? எத்தின நாளைக்குத்தான் அதுகள் இப்படிப் பட்டினி கிடக்கிறது? சாப்பாடு இல்லாம உன்ர குடும்பம் செத்துப்போனா அது உனக்கு நல்லதா சங்கரன், யோசிச்சுப் பார்.”
“அதெல்லாம் நான் யோசிக்க மாட்டன். வழக்கக் கேன்சல் பண்ணுங்க.”
“சங்கரன்! நான் சொல்லுறதைக் கேள். இப்ப நீ உன்ர வீட்டுக்குப் போ. சரசாவோடையும் பிள்ளைகளோடையும் கதை. இனிமேல் நீ அவங்கள ஒழுங்காகப் பார்த்துக்கொள்ளுறதாகச் சொல்லு. சொல்லுறதோட நில்லாமல் அப்பிடியே நடந்துகொள். அதுகள்ற மனதில நம்பிக்கையை உண்டாக்கு. பிறகு சரசாவைக் கூட்டிற்று என்னிட்ட வா. நான் வழக்கை இல்லாமல் பண்ணுறன்.”
“நான் ஊட்ட போகயும் மாட்டன், அவையளப் பாக்கவும் மாட்டன். நீங்க வழக்க கேன்சல் பண்ணுங்க. அதுக்கு உங்களுக்கு எவ்வளவு வேணும்?”
“சரி, அப்ப ஒண்டு செய். ஓவ்வொரு மாதமும் நீ சரசாவுக்கு நானூறு ரூபா கொடு. ஒரு கிழமைக்கு நூறு ரூபா. எப்ப வழக்குத் தவணை? வாறமாதம் பதினைஞ்சாம் திகதி தானே. நீ பத்தாம் திகதி சரசாவுக்கு நானூறு ரூபா கொண்டு கொடு.”
“நான் அவளிட்டப் போக மாட்டன், அவள்ற முகத்தில முழிக்க மாட்டன்.”
“சரி பறவாயில்ல. நீ போகத்தேவையில்ல. ஆரிட்டயாவது கொடுத்து அனுப்பு.”
“நான் ஒரு சதமும் குடுக்க மாட்டன்.”
“சரி அப்ப கோட்டுக்கு வா. அங்க வந்து நீதவானிட்டச் சொல்லு. நீதவான்ர தீர்ப்புப்படி நட. நீதவான் தீர்க்கிற காசை நீ குடுக்க மாட்டன் எண்டு சொன்னால் மறியலுக்குப் போகவேண்டிவரும்.”
“நான் கோட்டுக்கும் வரமாட்டன், மறியலுக்கும் போக மாட்டன். நீங்க வேணுமெண்டா இருந்து பாருங்க. நான் கோட்டுக்கு வரவே மாட்டன். ஆனா நீங்கதான் என்ர சாவுக்கு வருவியள்”
“சரி ஒண்டு செய். இப்ப நீ போயிற்று நாளைக்குவா. நாளைக்கு சனிக்கிழமை. நான் நிற்பன். காலையில ஓண்டும் பாவிக்காம.. நிதானமாக வா…”
“நான் வரமாட்டன். நான் இஞ்சையும் வரமாட்டன். கோட்டுக்கும் வரமாட்டன். எல்லாருக்கும் ஒரு பாடம் படிப்பிப்பன். இருந்து பாருங்க.”
“போடா போடா. உன்னப்போல எத்தின பேரைப் பாத்திருக் கிறன்…போ..போ..போயிற்று நாளைக்கு வா…”
“நான் வர மாட்டன் கடைசிவரையும் நான் கோட்டுக்கு வரமாட்டன். நீங்க எல்லாரும் என்ர சாவுக்கு வருவியள். நான் வரமாட்டேன்…”
இப்படிச் சொல்லிக்கொண்டே சங்கரன் அங்கிருந்து சென்றான். மறுநாள் அவன் அவரிடம் போகவில்லை. வழக்குத் தவணைக்கு முன்னர் அவன் எப்படியும் ஒருநாள் தன்னிடம் வருவான் என்று சட்டத்தரணி சிவராசா எதிர்பார்த்தார். ஆனால் அவன் வரவேயில்லை. வழக்குத் தவணைக்கு முதல் நாள் சரசா அவரைக் காணச் சென்றாள். நீதிமன்றத்திற்கு எப்படி வரவேண்டும், எங்கே வந்து அவரைச் சந்திக்க வேண்டும் என்ற விபரங்களைக் கேட்டுப்போவதற்காகச் சென்றாள்.
நீதிமன்றத்தில் சமுகமளிக்க வேண்டியிருந்த அன்று அதிகாலையிலேயே சங்கரன் நஞ்சுகுடித்து இருக்கிறான். வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிர் பிரிந்திருக்கிறது. சங்கரன் இறந்துபோனதை சரசாவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. மறுநாள் பிற்பகல், சட்டத்தரணி சிவராசா செத்த வீட்டுக்கு சென்றிருந்தார். சங்கரனின் உடலின் அருகில் அமர்ந்திருந்து அழுதுகொண்டிருந்த சரசா, அவரைக் கண்டதும் தாவி அவரது கால்களைக் கட்டிப்பிடித்து “ஐயோ….அத்தான்… அத்தான், என்னத் தவிக்க உட்டுற்றுப் போயிற்றயளே…! இப்பிடி நடக்கும் எண்டு நான் நினைக்கல்லையே….நான் பாவி… நான் பாவி…. என்னால தானே ஐயோ..” என்று அவள் வெடித்து அலறியபோது, துக்கம் அவரது தொண்டையை அடைக்க, பொங்கிவந்த கண்ணீர் சங்கரனின் உயிரற்ற முகத்தைப் பார்க்கமுடியாமல் அவரின் விழித்திரையை மறைத்தது. சிலநிமிடங்கள் அப்படியே நின்றுவிட்டுப் பின்னர் அவ்விடத்தை விட்டு அகன்று ஆட்கள் அமர்ந்திருந்த பந்தலுக்குச் சென்றார். வழமைபோல இரண்டு மூன்றுபேர் எழுந்து, வரவேற்று இருக்கை கொடுத்தார்கள். சில நிமிடங்கள் அவரால் யாருடனும் பேச முடியவில்லை.
சங்கரனின் சித்தப்பா வெற்றிலை பாக்குத் தட்டத்தை அவருக்கு முன்னால் கொண்டுவந்து வைத்தவாறே பக்கத்துக் கதிரையில் அமர்ந்தார். “கோட்டுக்குப் போகப் பயத்திலதான் இவன் இப்பிடிச் செய்திருக்கிறான் தம்பி. கோடு, கச்சேரி, பொலிஸ்-கிலிஸ் எண்டா அவனுக்கு குலை நடுக்கம். நீங்க சொன்னமாதிரி பெண்டாட்டி பிள்ளைகளுக்கு ஒரு நானூறு ரூபா காசைக் குடுத்துற்று, இந்த நாசமாப் போனவன் குடிச்சிற்றுத் திரிஞ்சிரிக்கலாம். அதையும் செய்ய ஏலாதவன் உயிரோட இருந்துதான் என்னத்துக்கு? பாவி.” தனது ஆற்றாக் கொடுமையை அவர் அப்படி வெளிப்படுத்தினார். பதில் சொல்ல எதுவும் தோன்றாத நிலையில் ஆதரவாக அவரது தோளில் தன் கையைப் படரவிட்டபடி சட்டத்தரணி சிவராசா மௌனமானார்.
(இலங்கை, தினக்குரல் பத்திரிகையில் 2012 டிசம்பர் மாதம், ஞாயிறு பதிப்பொன்றில், பிரசுரமானது.)
– இன்னும் கன்னியாக… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2023, மகுடம் பதிப்பகம், மட்டக்களப்பு.