கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி திராவிடநாடு
கதைப்பதிவு: December 3, 2025
பார்வையிட்டோர்: 178 
 
 

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நாடோடிப் பயல் – நாடோடி! பிழைக்கிற கழுதே இங்கேயே பிழைக்கக் கூடாதா? ரொம்பக் காரியமாக, சிதம்பரம் ஓடினானா. போய். . .” என்று எம்பெருமான் கேட்டார். தோட்டக்காரன், தன் மகன் விஷயமாக முறையிட்டுக் கொண்டபோது.

எஜமானர் எம்பெருமான் பிள்ளைமான் அண்டு கோ சொந்தக்காரர். தோட்டக்காரன், எம்பெருமான் பிள்ளையின் தகப்பனாருக்குப் பால்ய சினேகிதம். “கால வித்யாசத்தாலே, அவன் தோட்டக்காரனாக நேரிட்டது. அது வேறு கதை. தோட் டக்காரனாக இருந்தாலும், தன் தகப்பனாருக்குப் பால்ய சினேகம் என்பதாலே எம்பெருமான் பிள்ளை, தோட்டக்காரனிடம் கொஞ்சம் அன்போடும் அக்கறையோடும் பேசுவது வாடிக்கை. அன்று தோட்டக்காரன், தன் மகனுடைய, கெட்ட நடவடிக்கை ‘யைப் பற்றி முறையிட்டுக் கொண்டு வரும்போதுதான் எம்பெருமான் பிள்ளை, நாடோடி – நாய் கழுதை என்று பேசித் தோட்டக்காரனிடம் தனக்குள்ள அக்கறையைக் காட்டிக் கொண்டிருந்தார்.

“என்ன பண்றதுங்க, நான் எவ்வளவோ சொன்னேன்.”

”ஆமாம்! முந்தி அவன் நாகப்பட்டணம் போறபோதே கூட வேண்டாம்னுதான் சொன்னேன்.”

“ஆமாங்க, ஏண்டாப்பா, நாகப்பட்டணம் போக வேணும்னு கேட்டேன். போய்த்தான் ஆகணும், அங்கே வேலை கிடைக்கும்னு சொல்லிவிட்டுப் போனான்…போன பத்தாம் நாள் பாண்டிச்சேரிக்கு போறேன்னு கடிதம் போட்டான். நானுங்கூடக் கொஞ்சம் சந்தோஷப்பட்ட னுங்களே; தொலையட்டும், பாண்டியிலேதானே, என் மச்சான் இருக்கிறான். அவனோடு இருந்து தொலைக்கட்டும்னு நினைச்சேன். அங்கே இரண்டு மாசம் சரியா இல்லை, நான் சிலோன் போகிறேன்டான்னா.”

“போறவனோ, போய்க் கொண்டிருக்கிற போக்கு. உழைச்சி ஊருக்கு அடங்கி இருக்க வேணும்னா நாகப்பட்டி னத்திலேயே இருக்க மாட்டானா, சிலோன் ஏன் போகணும்? அதுதான் சொல்றேனே, இதுகளுக்குக் காலிலே சக்கரம் இருக்கு. சுத்திகிட்டே இருக்கும்.”

”நான் தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன். டே! மருதாச்சலம், வேண்டாம்பா. நாம்ப ஏதோ கொஞ்சம் கெளரவமா வாழ்ந்தவங்க. கால வித்யாசம் கொஞ்சம் நொந்து போயிட்டோம்; ஊரோட இருந்து எதுவோ ஒரு பிழைப்புக்கான வேலையைக் கவனிப்போம். நீ இங்கேயே இருடான்னு சொன்னேன்.அவன், நீங்க சொல்ற மாதிரியா, அவன் காலிலே சக்கரம் இருக்கோ என்னமோ! நாகப்பட்டணம்ன்னா, புதுச்சேரின்னா, கடைசியிலே சிலோனுக்குப் போனான். போனான், முட்டாப்பய, இவனை என்னாண்ணு எண்ணியிருப்பாங்க அங்கே? நாடோடி போலிருக்குன்னுதானே சொல்லி இருப்பாங்க?”

“வேறே என்ன சொல்வாங்க? சிலோனிலே இருந்து மறுபடியும் தூத்துக்குடி வந்தானாம். இப்ப சிதம்பரத்திலே இருந்து ஒரு கடுதாசி போடறான், சிங்கப்பூர் போகிறதாக இருக்கிறேன்னு. நான் என்னத்தைச் செய்யறதுங்க”

“என்ன செய்ய முடியும்? அவன் சுபாவம் அப்படியாகி விட்ட ட்டது. நாடோடியாகி விட்டான். போயி, கெட்டு அலைஞ்சு, கழுதே, தானா வந்து சேரும்.”

எஜமானர் நெடுநேரம் பேசிவிட்டார். மேலும் அன்று ஒரு கமிட்டிக் கூட்டம், அதற்குப் போக வேண்டிய அவசரம் இருந்தது. தோட்டக்காரனுக்குத் திருப்திதான். என்னமோ, எஜமானர் இவ்வளவு அக்கரையுடன், தன்னிடம் பேசினாரே என்பது பற்றி.

எஜமானர் சொன்னதிலே என்ன தப்பிதம் இருக்கு? பயல், நாடோடியாகத்தான் இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டே. தோட்டம் போய்ச் சேர்ந்தார். மருதாசலத்தின் தந்தை, மார்த்தாண்டம் பிள்ளை.

மான் அண்டு கம்பெனி, எம்பெருமானுடையது; ஆனால் இது தவிர, அவருக்கு வேறு பல வியாபாரக் கம்பெனிகளில் தொடர்பு உண்டு. அப்படிப்பட்ட ஒரு கம்பெனியின் கமிட்டிக் கூட்டம்தான் நடந்தது அதற்காகத்தான் அவசரமாகத் தோட்டக்காரரிடம் பேச்சை முடித்துக் கொண்டு. எம்பெருமான் பிள்ளை சென்றார்.

கமிட்டியிலே கொஞ்சம் சூடான விவாதம். கமிட்டியாரால் நியமிக்கப்பட்டிருந்த கம்பெனி மானேஜர் மீது புகார்கள், அவர் சரியாக வேலையைக் கவனிக்கவில்லை என்று. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது, எம்பெருமான் பிள்ளை. அன்று குறுக்குக் கேள்விகளையும் அவரேதான் பூட்டினார்.

”ஆமாம் சார்! ஆறாம் தேதிதானே ஆற்காடு போனீர்?” ”ஆமாம்! ஆற்காட்டிலேயே சரக்கு கிடைக்குமென்று சொன்னார்கள் போனேன். சரியாக பஸ் சர்வீஸ்கூட இல்லை. பாதிதூரம் ஜட்காவில் கூடப் போக வேண்டி நேரிட்டது.”

”அது சரி! வேலையை அக்கரையாகப் பார்க்காவிட்டால் எப்படி ஆகுமய்யா? ஜட்காவிலே போனது ஒரு பெரிய பிரமாதமாக இருக்கு உமக்கு. இப்படி, உடல் குலுங்குவது கூடாது என்று எண்ணுபவர்கள் வீட்டோடு இருக்க வேண்டும். வேலை பார்க்கிறேன் என்று வருவானேன், கம்பெனிக்கு வீண் நஷ்டம் எதற்கு? உம்முடைய டயரியைப் பார்த்தாலே தெரிகிறதே. நீர் வேலை பார்த்த இலட்சணம். ஆற்காட்டுக்கு ஆறாம் தேதி போயிருக்கிறீர், மறுதினமே திரும்பி ஊருக்கு வந்துவிட்டிருக்கிறீர்?”

“ஆமாம்! வராமல் என்ன செய்வது? ஆற்காட்டிலே சரக்குக் கிடைக்கவில்லை.”

“உடனே மாப்பிள்ளை மாதிரி ஊருக்கு வந்து விட்டீர்- ஏன், ஆற்காட்டிலே இல்லை என்றால், வேலூர் போய்ப் பார்க்கிறது?”

”ஆற்காடு போவதற்குப் பட்ட அலைச்சல் கொஞ்சமா? அலைச்சலோடு அலைச்சலா, வேலூருக்குப் போகணும்னா.”

”உம்மாலே முடியலேன்னா சொல்லி விடவேணும். எதுக்காக, இப்படி கல்லுப் பிள்ளையார் போல, ஊரோடு உட் கார்ந்து கொண்டு இருக்கிறவர், மானேஜர் வேலைக்கு வரணும்? நம்ம கம்பெனி வியாபாரத்துக்குச் சுத்தி அலைஞ்சாதானே நடக்கும். கொட்டி இருக்கிறமே பணத்தை, உமக்கு ஊர் போய் வருவது பெரிய சிரமமா இருக்கு.”

“ஊர் சுற்றி, அலையாமலா இருக்கறேன். ஆற்காடு போய் வந்தபிறகு அடுத்தவாரமே, சோளிங்கபுரம் போயிருந்தேன்.”

“சோளிங்கபுரம் போய் வந்ததை என்னய்யா, என்னமோ, சிலோன் சிங்கப்பூர் போய் வந்தது போலப் பேசிக் காட்டறே. பிரமாதமான பிரயாணம் செய்துட்டே போய்யா! ஆறாம் தேதி ஆற்காடு போய் வந்த ஆசாமி பதினாலாம் தேதி வரைக்கும் ஊரை விட்டு அசையவே இல்லை. ஒரு நாள் சோளிங்கபுரம் போய் வந்த பிறகு மறுபடியும் ஏழு நாள், இங்கேயே இருந்திருக்கிறே! பிறகு ஒரு நாலு நாள், எதெதுவோ ஊர் போயிருந்திருக்கறே. “

“அந்த நாலுநாள் நான் அலைஞ்சு திரிஞ்சது இருக்குங்களே, நாய் படாத பாடு பட்டிருக்கிறேன். நெல்லூர் எங்கே இருக்கு, அங்குப் போயி மறுநாளே புறப்பட்டு, சித்தூர் போயி வருகிறேன். வழியிலே வேலூரைப் பார்த்துக்கிட்டு, மறுபடியும் ஆற்காட்டுக்குப் போயி, காஞ்சிபுரத்திலே ஒரு மணி நேரம் இருந்து, அந்த வேலையைக் கவனிச்சுக்கிட்டு, மறுபடியும் ஊருக்கு வந்தேன். நாடோடி மாதிரியாகச் சுத்தி இருக்கிறேன்.”

“ஒஹோ! நாலு ஊரு போயி வந்தது, உமக்கு நாடோடி பிழைப்பாகத் தோணுதா? நாடோடியாகச் சுத்தினாதானேய்யா வியாபாரம் நடக்கும்? மாசம் முள்ளங்கிப் பத்தை மாதிரி, தொண்ணூறு ரூபா வாங்கறயே வெளியூர் போகாவிட்டா வியாபாரம் எப்படி இலாபம் தரும் யார் அப்பன் வீட்டிலே இருந்து உனக்குச் சம்பளம் கொடுக்கறது? நாடோடியாமே, நாடோடி! ஆமாய்யா, ஆமாம் – நாங்களெல்லாம், வியாபார சம்பந்தமா வெளியூர் போகாமத்தானே இருக்கிறோம்! நாடோடியாம்! கட்டிப்போட்ட மாடு மாதிரி, பிடிச்சுவைச்ச பிள்ளையார் மாதிரி, இடிச்சி வைச்ச புளி மாதிரியா உள்ளூரிலேயே இருந்து கொள்ளேன், யார் உன்னை வேண்டாம்னு சொல்றவங்க. நம்ம கம்பெனிக்கு மானேஜராக இருக்க வேணும்னா, நாலு ஊருக்கு அலைஞ்சு திரியத்தான் வேணும் தூத்துக்குடி தொலைவாச்சே, பெங்களூரிலே குளிராச்சே, நெல்லூரிலே வெள்ளமாச்சேன்னு பேசினா, கம்பெனி என்ன ஆவது? அலையத்தான் வேணும், திரியத்தான் வேணும், இன்றைக்கு ஒரு ஊரு. நாளைக்கு ஒரு ஊருன்னு போய்த்தான் வரவேணும். இதோ பாரய்யா, மானேஜர்! நான் திட்டமா, கண்டிப்பாச் சொல்லி விடுகிறேன். கேட்டுக்கோ. என் மேலே குறை சொல்லாதே. நம்ம கம்பெனிக்கு, அலைஞ்சு திரிகிற ஆசாமிதான் வேணும். ஊரோடு இருக்கணும், வெளியூர் அடிக்கடி போக முடியாதுன்னு நினைச்சா, கணக்கைத் தீர்த்துக்கோ, நாலு ஊரு போய் வந்திருக்கிறே, ஏனய்யா இன்னும் சில இடத்தைப் பார்த்திருக்கக்கூடாதா என்று கேட்டதற்கு, உன் வாய்க் கொழுப்பு, நாடோடியா நானு அலையறதுக்குன்னு கேட்டிருக்கிறே. இதோ பாரய்யா, வெளியூர் போகவர இருக்கிறதுதான் வியாபாரி இலட்சணம்னு நான் சொல்கிறேன், உள்ளூரோடே இருந்து கொண்டிருப்பவனை, குண்டு சட்டியிலே குதிரை ஒட்டுகிறவன்னு சொல்கிறேன். நீ என்னா சொல்ல முடியும் அதற்கு? நாடோடியாம்- நாலு ஊருக்குப் போகவர இருந்தாத்தானே கம்பெனி நடக்கும். நாடோடியாக இருக்க வேணாம்னா மகாராஜனாக நீ உண்டு, உன் வீடு உண்டு. இந்த ஊர் உண்டுன்னு இருந்து கொள்வதிலே எனக்கு ஆட்சேபனை இருக்காது. இங்கே இருக்கிறவங்களெல்லாம் நாடோடிதான். இன்னிக்கி ஒரு ஊரு, நாளைக்கு ஒரு ஊருன்னு போய் அவரவர்கள் வியாபாரத்தைக் கவனிக்கிறவங்கதான். உனக்கு வேணாம் அந்த நாடோடிப் பிழைப்பு — நீ பட்டத்து ராஜா! அரண்மனையை விட்டு வெளியே வரவே வேணாம் போ.”

கமிட்டி, எம்பெருமான் பிள்ளையின் தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றிவிட்டது. மானேஜருக்கு வேலை போயிற்று. அடுத்த வாரம் ஜோலார்ப்பேட்டை ஜங்ஷன்- மலபார் மெயில் வந்து நின்றது. எதிர்ப்புறத்திலே இருந்து பெங்களூர் மெயிலும் வந்து நின்றது. மலபார் மெயிலிலிருந்து எம்பெருமான் பிள்ளை இறங்கி பிளாட்பாரத்தில் உலாவிக் கொண்டிருந்தார். பெங்களூர் வண்டியிலிருந்து, எம்பெருமானின் நண்பர், கம்பெனி டைரக்டர்களில் ஒருவர் சம்பந்தம் பிள்ளை, அவர் இறங்கி வந்தார். ”அடடே! பிள்ளைவாளா? மைசூரிலிருந்தா?”

“மைசூரிலே இருந்து நேற்றே வந்துட்டேன் பெங்களூரிலே கொஞ்சம் வேலை இருந்தது. பார்த்துக் கொண்டு புறப்பட்டேன். நீங்க கோயமுத்தூரா?”

“கோயமுத்தூரிலே காலையிலே கொஞ்சம் வேலையைப் பார்க்கணும் – மத்யானமா பாலக்காடு போகலாம்னு இருக்கிறேன்..”

”நானும், நேரா, மெட்ராஸ் போகிறேன். அங்குப் போன பிறகு, மார்க்கட் நிலவரத்தைப் பார்த்துவிட்டு, மங்களூர் போகணும்.”

“மசூலிப்பட்டணம் போகவேணும்னு சொன்னீரே”

”ஆமாம். அங்கேயுந்தான் போய் வரணும். வேலை சரியாக இருக்கு. இரயிலில் இடம் சௌகரியமாகக் கிடைச்சுதா?” “செகண்டு கிளாஸ் கிடைக்கலே, பஸ்ட் கிளாஸ் வாங்கிக் கொண்டு வருகிறேன்.”

“சரி, பாலக்காடு முடிந்ததும், நேரே ஊருக்குத்தானா?”

”ஆமாம்! ஊருக்கு வந்து உப்பங்கழி காண்ட்ராக்ட் வேலையைக் கவனித்துவிட்டு, உடனே ஊட்டி போக வேணும்; நம்ம பம்பாய் சேட் மூல்ஜி வந்திருக்கிறான் ஊட்டியிலே. என்னமோ அமெரிக்கன் ரேடியோவுக்கு ஏஜண்டு வேணும்னு சொன்னானாம். அதை எடுத்து வைப்போமேன்னு ஒரு யோசனை.”

“செய்யறது. சரி! ரயில் புறப்படப் போவுது. வரட்டுமா?”

இரயில்கள் புறப்பட்டு விட்டன. இரண்டாம் வகுப்பிலே சம்பந்தம் ‘அப்பா! பயல் பணத்துக்குப் பிசாசாக அலைகிறான்’ என்று எண்ணிக் கொண்டே படுத்தார்- எம்பெருமான் பிள்ளையைப் பற்றி எம்பெருமான், சம்பந்தம் சுற்றுவதற்குச் களைப்பதில்லை. பணம் எங்குக் கிடைக்குமோ என்று மோப்பம் பிடித்துக் கொண்டு அலைகிறான்’ என்று சம்பந்தத்தை மனதிற்குள் திட்டிக் கொண்டே இருந்தான். வியாபாரிகளை ஏற்றிக் கொண்டு இரண்டு இரயில்களும், கெம்பீரமாகச் சென்றன. சிதம்பரம் சந்திரா டாக்கீசில், டீ கடையில், மருதாச்சலம் அரைத் தூக்கத்தோடு உட்கார்ந்து கொண்டிருந்தான். உள்ளே ‘மாய உலகு’ என்ற தமிழ்ப்படக் காட்சி நடந்து கொண்டிருந்தது.

– 17-11-1946. திராவிடநாடு.

Peraringnar_Anna காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *