நாகம்மாள்
கதையாசிரியர்: ஆர்.சண்முகசுந்தரம்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 64
(1942ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம் – 7

நாகம்மாள் தோட்டத்திற்கு வந்து சேர்ந்த போது சூரியன் மரக்கிளைக்கு மேலே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். நாற்புறமும் அசைந்தாடிக் கொண்டிருந்த கிளைக்கு மேல் சூரிய வெளிச்சம்பட்டு மின்னிக் கொண்டிருந்தது. காக்கைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மண்ணுக்கு மேல் சிதறிக் கிடந்த எள்ளுகளைக் கொத்த ஆரம்பித்தன. வேலியோரத்தில் ஒரு மாடு மேய்ச்சலுக்காகக் கட்டப்பட்டிருந்தது. அப்போது இரண்டு நெடும் பாத்திக்கு மேல் சின்னப்பன் உழுதிருந்தான். காளைகள் பஞ்சுப் பூமியை உழுவதைப் போல் சுலபமாக தலைகுனியாமல் போய்க் கொண்டிருந்தன. சின்னப்பன் கையிலிருக்கும் உழுக்கோலால் கொழுவில் கட்டிக் கொள்ளும் மண்ணை அடிக்கடி தடவிவிட்டுக் கொண்டே சென்றான். இவ்வளவு நேரம் சாலிட்டுக் கொண்டிருந்த கருப்பன் எள்ளுக் கூடையை நாகம்மாளிடம் கொடுத்துவிட்டுப் பட்டி திறந்து விடுவதற்காகப் போனான்.
அவன் நாலடி போவதற்குள், “அடே ராகிக் காட்டிலே பண்டம் பூந்திடப் போவுது, ஜாக்கிரதை” என்றாள் அதட்டலாக. ‘சரி’ என்று தலையசைத்துச் சென்றவனைக் கூப்பிட்டு, ‘ஏண்டா சொன்னது காதிலே கேக்கலையா?” என்றாள். அவன் ‘திரு திரு’வென விழித்தான்; இந்த மாதிரி அதட்டல் அதிகாரங்கள் எல்லாம் சின்னப்பனுக்குத் துளி கூடப் பிடிக்காது. “அவனை ஏன் பயப்படுத்த வேண்டும்? இங்கே எள்ளு விளாவில் விழுவுதில்லை” என்றான் சின்னப்பன்.
“ஆமாம், நான் தான் ஊட்டியிலிருந்து கருப்புக் கம்பளியைப் போத்திக்கிட்டு வந்திருக்கேன்; உங்களைக் கண்டா எல்லாரும் பயப்படுவாங்க” என்றாள் நாகம்மாள்.
“ஏன் அவனை மறுபடியும் கூப்பிட்டீங்க?”
“தண்ணி கொண்டாரத்தான். குடிக்காமே தாகமாகவே இருந்திரமுடியுமா?”
“தண்ணீங்கிற பேச்சே எடுக்கக் காணாமே. நீங்க மனசுக்குள்ளவே சும்மா நெனச்சிருப்பீங்க” என்றான் சின்னப்பன்.
அவள் வெறுப்போடு அவன் முகத்தைப் பார்க்காமல் கூடையிலிருந்து குத்துக் குத்தாக எள்ளை வாரி இறைத்தாள். கருப்பன் திரும்பிக் கூடப் பார்க்காமல் வேகமாக நடந்தான்; ஏனென்றால் பார்த்து விட்டால் அது கூட ஒரு குற்றம் ஆகிவிடாதா?
நேர் கோடு கிழித்ததைப் போல கலப்பை பூமியைப் பிளந்து கொண்டு தெற்கே போகும். பின்பு வளைந்து மறுபுறம் திரும்பும். நாகம்மாள் மௌனமாகச் சாலிட்டுக் கொண்டே வந்தாள்.
இள மத்தியானத்துக்குள் பாதிக்காடு உழுதாகிவிட்டது. அப்போது ஒரு சிறுமி பழைய சாதத்தைக் கொண்டு வந்து வேலா மரத்தடியில் இறக்கி வைத்தாள். சின்னப்பனும் ஏரை நிறுத்திவிட்டுக் கை கால் அலம்பிக் கொள்ள கிணற்றுப் பக்கம் போனான். நாகம்மாள் கூடையை வரப்போரத்தில் வைத்துவிட்டு அங்கேயே உட்கார்ந்து விட்டாள். வந்த பெண், கூடைக்குள்ளிருந்து சோற்றுக் கலயத்தை எடுத்து வெளியே வைத்தாள். ஒரு கொட்டைச் செடியிலிருந்த இலையைக் கிள்ளி வந்து சோற்றுக் கலயத்தை மூடிவிட்டு, “ஏக்கா பல் விளக்கியாச்சா” என்று நாகம்மாளைப் பார்த்துக் கேட்டாள். நாகம்மாள் அவள் கேட்டதற்குப் பதில் சொல்லவில்லை. “உங்க அம்மா உன்னைச் சோறு கொண்டு போகச் சொன்னாளா?” என்றாள்.
வழக்கத்துக்கு மாறாக இன்று பக்கத்து வீட்டுச் சிறுமி சாதம் கொண்டு வந்ததால் இப்படிக் கேட்டாள் நாகம்மாள்.
“ஆமாம். எங்க அம்மா தான் போகச் சொன்னா” என்றாள்.
“எப்பவும் இல்லாத அதிசயமா இன்னைக்கு ஏது போகச் சொல்லீட்டா” என்று சிரித்துக் கொண்டே நாகம்மாள் கேட்டாள்.
“எங்கம்மா ‘நீயாச்சு கொண்டு போய் சோறு கொடுத்திட்டு வா; பாவம் ராமாயி ஒருத்தியா கஷ்டப்படுறா’ என்றாள். நானும் எங்க தோட்டத்துக்கு இதுலே தானே போகவேணும்; இதையும் வாங்கிட்டு வந்தேன்” என்றாள்.
இந்த சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு இன்னும் நடந்த விஷயங்களை எல்லாம் கேட்டறிய வேண்டி, “பாப்பா உங்குணம் தங்கமான குணம்; அதனாலேதான் உன்னைக் கண்டாலே எனக்குப் பேச வேணுமினுருக்குது. உம், அப்புறம் என்ன பேசினாங்க?” என்றாள்.
பாப்பாவும் உலகத்தைப் புரட்டிவிடுகிற பெரியதொரு ரகஸ்யம் தன்னிடம் இருப்பதைப் போல, “உன்னைப்பத்தித் தான் என்னமோ பேசீட்டிருந்தாங்க” என்றாள்.
சிறு குழந்தைகளுக்கு இம்மாதிரி விஷயங்களில் சிரத்தையே கிடையாது. வீணாக அவர்களுடைய வாயைக் கிளறினால் இல்லாததைக் கூடக் கண்டபடி சொல்ல ஆரம்பிப்பார்கள். பின்பு அதனால் எத்தனை சண்டைகளோ?
நாகம்மாள் துருவிக் கேட்டாள். அவளுக்குத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற பேரவா மிகுந்திருந்தது. இதற்குள் சின்னப்பன் அருகில் வந்துவிட்டான். அவன், தலைத் துண்டை விரித்துப் போட்டு அதன்மேல் உட்கார்ந்தான். சிறுமி, சாதத்தைக் கரைத்து கையில் ஊற்றினாள். நாகம்மாள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து அசையவில்லை. அவள் மனதில் பல சிந்தனைகள் உருண்டோடிக் கொண்டிருந்தன. இந்தப் பரந்து கிடக்கும் காட்டிலும், தோட்டத்திலும் தன் கணவனுக்குச் சேர வேண்டிய பாகம் பாதி இல்லையா? தானும் தன் குழந்தைக்கு அழகான சீலை, ஒரு நகை நட்டு பண்ணிப் போட்டு பார்த்தால் எப்படியிருக்கும்? மாதத்திற்கு நாலு பேருக்குக் குறையாமல் அவர்களுக்கு வேண்டியவர்கள் சொந்தம் பாராட்டிக் கொண்டு வந்து விடுகிறார்கள். இதெல்லாம் யார் சம்பாதித்தது?
நல்லதோ, கெட்டதோ எதுவும் இப்படித்தான். ஒரு சிறு வித்து எப்படி பிஞ்சும் பூவும் குலுங்கும் விருக்ஷமாகி அதன் நிழலிலே எத்தனையோ ஜீவராசிகளுக்குக் குளிர்ந்த நிழலைத் தருகிறதோ, அந்த மாதிரி இந்தச் சிறு கனல் பொரியும் அவள் மனதில் மகாப் பெரிய அனல் மலையை வளர்க்கலாயிற்று. அப்படியே சிலை மாதிரி உட்கார்ந்து கொண்டிருந்தாளேயொழிய எழுந்திருக்கவில்லை.
சின்னப்பன் பாப்பாவிடம் மெதுவாக, “அவுங்களையும் சோறு குடிக்கச் சொல்லு” என்றான்.
“பல்லு விளக்கச் சொன்னேன்! அதையே கேக்கலையே” என்றாள் பாப்பா. அவள் சொல்லியது அருகிலிருக்கும் பத்துப் பேருக்குக் கேட்கும் போலிருந்தது.
நாகம்மாள் வெடுக்கென்று, “இந்தத் தலைவலியில் பழைய சோத்தை நான் வாயில் கூட ஊத்த மாட்டேன்” என்றாள். சின்னப்பன் அதைக் கேட்டு “தலைவலியானால் ஊட்டுக்குப் போயிடறது” என்றான்.
“போயிட்டா சாலிட வேறே ஆள் இருக்குதாக்கும்?”
“அடே, மாரா, மாரா” என்று கூப்பிட்டான் சின்னப்பன்.
“மாரனும் வேண்டாம் செல்லனும் வேண்டாம்” என்று தானே எழுந்தாள்.
அத்தியாயம் – 8
அந்தி நேரம். மிருதுவான காற்று வீசிக் கொண்டிருந்தது. மெல்லிய காற்றால் கலைக்கப்படும் மேகக் கூட்டங்கள் விதவித உருவங்களால் வானத்தை அலங்கரித்த வண்ணமிருந்தன. நொய்யல் நதியில் ‘குறு, குறு’வென ஓடிக் கொண்டிருந்த நீரைக் காலால் அடித்தவாறே வெண் மணலில் ஒரு மனிதன் நடந்து கொண்டிருந்தான். அவன் தலையில் ஒரு ஐந்து முழ நீளமுள்ள துப்பட்டியை உருமாலாகச் சுற்றிக் கொண்டிருந்தான். உருட்டிக் கட்டிய வேட்டியை கையால் தடவிக் கொண்டே கரையேறி ஒற்றையடிப் பாதையில் இறங்கி நடந்தான்.
கருப்புக் கோடுபோல கரையருகே இருண்டிருந்த மரங்கள் அசையும் போது, சில சில பழுப்பு இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன. அவன் போய்க் கொண்டிருந்த காட்டின் இடக்கோடியில் ஒரு குடிசை, பனை ஓலைகளால் வேயப்பட்டிருந்தது. அக்குடிசையின் ஓரத்தில் இரண்டொரு ஓலைகள் தலை தூக்கிக் கொண்டிருந்தன. அதன் அருகே எப்போதோ கள்ளோ அல்லது தெளுவோ குடித்து விட்டு எறிந்த பனங்கோட்டையொன்றும், ரொம்ப நாளைக்கு முன் மாமிசம் வறுத்ததிற்கு அடையாளமாக உடைந்து போய்க் கிடந்த சட்டித் துண்டுகளும், அடுப்புக் கல்லும் தங்களை இந்த நிலைக்கு கொண்டு போய்விட்ட அன்பனின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது!
நாம் முன்பு சொன்ன ஆள் நடுக்காட்டிற்கு வந்ததும் குனிந்து ஒரு கல்லை எடுத்தான். பின்பு என்ன நினைத்துக் கொண்டானோ, கல்லைத் தூர எறிந்து விட்டு, “யாரடா அது எருமையை வேலியோரம் கட்டினது” என்றான். அந்தக் குரல் வெண்கல மணியிலிருந்து எழுந்த நாதம் போல வெகு தூரத்திற்கு விசிறி அடித்தது. ஆற்றங்கரையோரம், இடிந்து போய்க் கிடந்த கோவிலில் அதன் பிரதித்வனி ‘கணக்’கென எழுந்தது. இந்த அமானுஷ்யமான குரலிலிருந்தே அந்த நபர் கெட்டியப்பன் தானென்று விளங்கியிருக்கும். திடீரென்று பிறந்த இந்த ‘அதிகாரம்’ வெகு பேருடைய வேலையைத் தடை செய்யும் என்று கெட்டியப்பனால் எண்ணியிருக்கவே முடியாது.
பக்கத்துக் காட்டில் மரம் ஏறிக் கொண்டிருந்த சடைய மூப்பன் பாதி மரத்திலேயே ‘டக்’கென்று இடைக்கயிற்றை நிறுத்தி சுற்று முற்றும் பார்த்தான். அவன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்த ஜீவன்களெல்லாம் தங்கள் பாட்டில் இயங்கிக் கொண்டிருந்தன. ஆனால் இந்தத் த்வனிக்குச் சொந்தக்காரர் யார் என்பதை அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு சூன்யத்திலிருந்து வெடித்து வீசிய பேய்க் காற்றாக்கும் என்று எண்ணிக் கொண்டான் போலிருக்கிறது. அதனால் மூப்பன் ‘டப், டப்’ என்று முன்னோக்கி மேலேறி உச்சியின் அமிர்த கலசத்தை அடைய முயன்றான். பண்டபாடிகளை ஓட்டிக் கொண்டு போகிற சிறுவர் சிறுமியர்களும், அவசர அவசரமாகப் புல் பிடுங்கிக் கொண்டிருந்த கருப்பாயியும், சோளக்காட்டிற்குத் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த குப்பனும், இன்னும் மற்றவர்களும் ஏக காலத்தில் நாற்புறமும் திரும்பிப் பார்த்தார்கள் என்பதைச் சொல்வது அனாவசியம். ஆனால், இதற்குள் அந்த எருமைக்குச் சொந்தக்காரன், மந்திரவாதியைப் போல மாயமாகத் தோன்றி எருமையுடன் மறைந்து விட்டான். அவன் எங்கிருந்து வந்தான் என்ற ஆராய்ச்சியியெல்லாம் இறங்காமல் கெட்டியப்பனைப் பின் தொடர்வோம்.
குடிசைக்கு முன்னால் மூடியிருந்த தென்னந்தடுக்கை எடுத்து உசரத்தில் போட்டுவிட்டு உள்ளே நுழைந்தான். உட்புறம் ஒரே இருட்டாயிருந்தது. அதனால் அங்கே போட்டிருந்த கட்டிலில் நெற்றி ‘பட்’ என்று மோதி விட்டது. ‘உஸ், ஆ’ என்று கொண்டே, தீப்பெட்டியை எடுக்க ஓலைக்கிடையே கையை விட்டான். “ஓ, அடி பலமாகப் பட்டுட்டதோ?” என்று யாரோ கேட்கவும், கெட்டியப்பன், ‘சடக்’கென பின்னால் நகர்ந்தான். அகாலத்தில் வந்த இந்த அபூர்வக் குரல் மனிதக் குரல் தானா அல்லது பேயா பிசாசோவென அவன் மிரண்டு நிற்கையில், மெதுவாக ஒரு பெண்ணின் குரல் “நீ தான் கெட்டியப்பனாச்சே” என்றது.
“அட! நீயா, மாரியாத்தா மாதிரி இந்நேரத்தில் இங்கு வந்து ஒளிஞ்சிருக்கிறே?”
“ஆமாம் நான் ஒளிஞ்சுதான் போனேன்” என்றது அந்தப் பெண் குரல். எடுத்த எடுப்பிலேயே இப்படி சுடச்சுட பதில் கொடுப்பது நாகம்மாள் தான். அவள் மசமசவென்றிருக்கும் போதே வந்துவிட்டாள். வரம் கொடுக்கும் வரை பக்தன் காத்துக் கொண்டிருப்பதைப் போல தன் அன்பன் வரும் வரை பொறுமையுடன் இருந்தாள். அன்று சிக்கலான சில விஷயங்களை அவனுடைய அரிவாள் மூளையினால் தெரிந்து செல்ல வந்திருந்தாள்.
“விளக்கில்லையே?” என்றாள் நாகம்மா.
“அதுக்குத்தான் தீப்பெட்டி எடுக்கப் போற போது நீ பயப்படுத்தி உட்டாயே” என்று சொல்லிக் கொண்டே ஓலைக்குள் கையைவிட்டுத் துளாவினான். அவன் கைபட்டு ஓலை சரசரத்தது. “இந்தா, சத்தம் செய்யாதே” என்று சொல்லிக் கொண்டே நாகம்மாள் தான் கொண்டு வந்திருந்த பலகாரங்களை மடியிலிருந்து எடுத்தாள்.
“இங்கே யாருமில்லை. காளியையும் நாய்ச்சோறு கொண்டு வர போகச் சொல்லீட்டேன். இந்தா வெளியே எட்டிப் பாரு, பட்டி சாத்தியிருக்குதா?” என்றான்.
“என்ன நானா போய்ப் பாக்கிறது. யாராச்சு இந்தப் பக்கம் வருவாங்க போவாங்க.”
“அடடா” என்றான். அதிலே எத்தனையோ வார்த்தைகளில் பேசுவதைச் சொல்லிவிட்டான். நாகம்மாள் ரொம்ப தனிவாக, “அதுக்காகச் சொல்லலை, உனக்குக்கூட” என்றவள், கொஞ்சம் பலமாக, “அதென்ன அசங்கியம்” என்றாள். அவள் வார்த்தைகளிலே உண்மையான வருத்தம் கலந்திருந்தது.
ஆமாம், இது சகஜம் தானே. தன் நடத்தையின் சாயை ஒரு தரம் மின்னி விழுந்தது. காரிருளில் கன்னம் வைக்கும் கொலைகாரன் கூட தன் செய்கையை எண்ணி உள்ளூர அதிகமாக ஒவ்வோர் சமயம் வருத்தப் படுவதில்லையா? கெட்டியப்பன் விளக்கைக் கொளுத்திக் கொண்டு, “இன்னைக்கு காட்டிலே ரொம்ப வேலையா? இப்படி வெய்யல்லே உழைச்சா உன்னுடம்பு என்னவாகும்?” என்றான்.
வாழைக் குருத்துபோலத் தளதளவென்றிருக்கும் அவளுடைய தேகம் கருப்பாகிவிடுமோ என்று அவன் சஞ்சலப் பட்டான் போலும்!
நாகம்மாள் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசலாமென்று வந்தாளோ அந்த விஷயம் ஆரம்பிக்கும் முன்பே எதிர்வந்து நிற்கிறது! இனியென்ன, மனதிலுள்ளதை வெளிப்படுத்த வேண்டியதுதானே!
“உனக்கு எப்பவும் பச்சை மாவு தானே பிடிக்கும்” என்று இலையிலிருந்த பலகாரங்களை அவன் முன் நகர்த்தினாள். கெட்டியப்பன் ஒப்புக்கு அதைத் தொட்டு ஒரு வாய் போட்டுக் கொண்டு, “எனக்கு ராமாயி கொடுத்தா, பொழுதோடே தின்னது, இன்னம் பசியே இல்லை, நெஞ்சைக் கரிக்குது” என்றான்.
“என்ன, நிசம்மாவா. ராமாயி கொடுத்தாளா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டாள். “நீ எப்போ ஊட்டுக்குப் போனாய்?’
“மத்தியானம், தூங்கீட்டு எழுந்ததும் அங்கேதான் வந்தேன். நீ காட்டிலே இருந்தாய். கொஞ்ச நேரம் உக்காந்திருந்தேன். என்ன இருந்தாலும், ராமாயி கொஞ்சம் விதரணை தெரிஞ்சவதான்.”
நாகம்மாள் எதைப் பற்றியோ யோசித்துக் கொண்டிருந்தாள். காற்று கொஞ்சம் கனத்தடித்ததால் வாரி வெளியில் ‘தொப்’பென்று ஒரு தேங்காய் விழுந்து உருண்டு சென்றது.
“எல்லாம் எப்படி இருக்குது? சும்மா கையைக் கட்டி உக்காந்திட்டயே” என்றான்.
அவள் ரொம்பத் தனிவாக “நான் அவர்களிடமிருந்து விலகீடப் பாக்கிறேன்” என்றாள்.
“நீ சொன்னதும் ஒத்துக்குவாங்களா?” என்றான்.
“அதுக்குத்தானே உம்பட ரோசனையைக் கேக்கிறேன்.”
“இந்தத் தோட்டம் காடு எல்லாம் உம் புருஷன் சம்பாதிச்சது தானே?”
“புது மனுஷனாட்டப் பேசறயே?”
“சரி, இதுலே குடுக்கமாட்டேன்னு சின்னப்பன் தகராறு செஞ்சா என்ன பண்றது?” என்று கெட்டியப்பன் சந்தேகத்தோடு கேட்டான்.
“நீதான் என்னவாவது பண்ணவேணும்” என்றாள் அவள், அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு. கெட்டியப்பன் சிறிது நிதானித்து விட்டு, “எப்படியும் பார்த்தே தீருவது. அப்படி கன்னா பின்னான்னா, மணியக்காரனை நம்ம கைக்குள் போட்டுக் கொள்றது. கடைசியிலே நான் இருக்கிறதே இருக்கிறேன்” என்றான்.
நாகம்மாள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். அவள் கண்களிலே சற்று முன் காணாத ஒரு ஒளி வீசியது.
“உம், நேரமாச்சு. நான் போறேன். இப்படி ஒரச்சு சொல்றதுக்கு ஒரு ஆள் இல்லையேன்னு தான் தவம் கெடந்தே” என்று சொல்லிக் கொண்டே தலையை வெளியில் நீட்டிப் பார்த்தாள். யாரோ வரப்பின் மீது வருவது தெரிந்தது.
உடனே அவசரமாக, “நான் போறேன்” என்று அடி எடுத்து வைத்தாள். “அது யாருமிருக்காது” என்று கூறிக் கொண்டே அவள் பின்னால் வெளியே வந்தான் கெட்டியப்பன். துரிதமாக மறையும் பட்டுப் பூச்சியைப் போல அந்த இருளில் கண நேரத்தில் பறந்து சென்றாள் நாகம்மாள்.
அத்தியாயம் – 9
பொங்கல் கழிந்து ஒரு மாதமாயிற்று. ஆயினும் அதைப் பற்றிய பேச்சே இன்னும் ஊரில் அடிப்பட்டுக் கொண்டிருந்தது. பள்ளுப்பறை பதினெட்டுச் சாதிக்கும் இந்தப் பேச்சு உபயோகமான பொழுது போக்காயிருந்தது. “அக்கா, என்னூட்டிலே அப்படி குபு குபுன்னு பொங்கல் சாய்ந்திருக்காட்டி என்னாவது நடந்திருக்கும்” என்பாள் ஒருத்தி.
“ஆத்தாள் கிருபை இல்லாட்டி கட்டாப்பு எம்பொண்ணு பிழைக்கிறதேது” என்பாள் மற்றவள். இப்படி அம்மனுக்குக் கூட அதனால் கௌரவம் உயரத்தான் செய்தது. இந்த வைபவத்தை ஒரு மாதம் அல்ல, ஒரு வருஷத்திற்கு பின்னும் பேசிக் கொண்டிருக்கச் சிலர் தயாராயிருந்தார்கள். ஒரு விஷயம் அது நல்லதோ கெட்டதோ, அவசியமோ அனாவசியமோ, ஆகக் கூடியதோ ஆக முடியாததோ என்ன சங்கதியானாலும் அதை வளர்த்திக் கொண்டே பொழுதைக் கழிப்பதில் தான் சிலருக்குப் பிரியம். அம்மாதிரி விவரங்கள் அவர்களோடு நிற்காம வீட்டுக்கு வீடு பரவி, கூடிய சீக்கிரம் கிராமம் முழுவதும் வியாபித்து விடும். இப்போது இப்படிப்பட்டவர்களுக்குத் தான் கெட்டியப்பன் நாகம்மாள் கிடைத்து விட்டார்களே. இனி சும்மாவா விடுவார்கள்!
காட்டிலும், மேட்டிலும், களத்திலும், இட்டேறியிலும் முதலில் ஓரிருவர் ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்தது பின்பு பகிரங்க ரகசியமாயிற்று. உள்ளேயிருப்பவர்களுக்குத் தெரியாததெல்லாம் எப்படித்தான் வெளியில் இருப்பவர்களுக்குத் தெரிந்து விடுகிறதோ! ஒரு வேளை கற்பனை ரொம்பவும் உதவி செய்கிறது போலும்! நாலைச் சொல்லி வைப்போமே; பத்துக் கல்லு போட்டால் ஒரு கல் குறியாக விழாதா என்பது அவர்கள் எண்ணம். அதன் பின் நுணுக்கமாக ஆராய்ச்சி செய்யத் தலைப்பட்டு விடுகிறார்கள். சின்னப்பனுக்கு இதைக் கேட்கும் தோறும் ஒரு சாண் கயிற்றை எடுத்துச் சுறுக்குப் போட்டுக் கொள்ளலாமாவென்று தோன்றும். பரம்பரையாக அவனுடைய பாட்டன், பூட்டனெல்லாம் எவ்வளவோ மானமரியாதையாக வாழ்ந்திருக்கிறார்கள். அவனுடைய தகப்பனார் காலத்தில் அவர் தான் ஊருக்குப் பெரிய மனிதர். அதாவது தோட்டி முதற்கொண்டு தொண்டைமான் வரையிலும் அனைவரும் தங்களுடைய வழக்குகளைத் தீர்த்துக் கொள்ள அவரிடம் தான் வருவார்கள். அவர் குணத்தில் தங்கமானவராய் இருந்ததைப் போலவே, பல்வேறு சச்சரவுகளையும் இரண்டு கட்சியாரும் சரியென ஒத்துக் கொள்ளும்படி சொல்வார். கடைசியாக மனஸ்தாபத்தோடு வந்தவர்கள், மகிழ்ச்சியோடு “மவராசன் எது சொன்னாலும் ரண்டு கண்ணுக்கு மூக்கு வெச்சது போலத்தான்” என்று வாழ்த்திக் கொண்டே போவார்கள். சின்னப்பனும் தன் தகப்பனைப் போல ‘நேர்மையானவன்’தான் என்றாலும் இப்போது இவனிடத்தில் யாரும் எந்த வழக்குகளையும் தீர்த்து வைக்கச் சொல்வதில்லை. இதற்குப் பல காரணங்கள்; முக்கியமாக ஊருக்குள் இரண்டு கட்சி இருப்பதுதான்.
யாரும் நேரடியாகத் தன்னிடம் நாகம்மாளின் நடத்தையைப் பற்றிச் சொல்வதில்லையென்றாலும், அப்போதைக்கப்போது நடப்பு விவரங்கள் சின்னப்பனுக்குத் தெரிந்து கொண்டுதானிருந்தன. ஒரு நாள் இதை மனதில் வைத்துக் கொண்டு தன் மனைவியை இரண்டு அடி பலமாகப் போட்டு விட்டான். பாவம், எதிர்த்துச் சொல்லக்கூடத் தெரியாத ராமாயி தன் தலைவிதியை நொந்து கொண்டே குப்புறப்படுத்து அழு அழு என்று அழுததுதான் மிச்சம். இன்னொரு நாள் தன் மனைவியிடம் “நீதான் சொல்லக்கூடாதா?” என்றான்.
“என்ன?” என்று அவள் கேட்டாள்.
“என்னவா? அதுதான் ஊர் சிரிக்குதே, உங்காது செவிடாவா போச்சு?”
“அதெல்லாம் கேட்டுத்தான் இருக்கிறேன். என்னை என்ன பண்ணச் சொல்றீங்க?” என்றாள்.
சின்னப்பன் பேசாமல் இருந்தான். அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்படியே பிறர் நினைப்பார்கள்? என்ன அசிங்கம்! குடும்பத்தின் பெயரைக் கெடுக்கத் தோன்றிவிட்டாளே! இந்த நாசக்காரியால் இன்னும் என்னென்ன அனர்த்தங்கள் விளையுமோ என்று நினைக்கும் போதே அவனுக்கு நடுக்கமெடுத்தது.
“எழுந்து போங்க, பால் கறக்க நேரமாகவில்லையா? என்னத்துக்கு விருமத்தி பிடிச்சாப்பலே உக்காந்திட்டே இருக்கிறீங்க” என்றாள் ராமாயி.
சின்னப்பனுக்கு அப்போதுதான் இன்னும் பால் கறக்காமல் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தெரிந்தது. ‘உம்’ என்று ஒருவிதச் சலிப்போடு எழுந்தான். ஒரு மூலையில் ஒதுக்கி வைத்திருந்த குப்பைகளைப் பார்த்து “இதெ வழிச்சுக் கொட்டப்படாதா?” என்றான் வெறுப்போடு. அதே சமயம் திண்ணையோரம் கோழிக்கூடு இன்னும் மூடாமல் இருப்பதையும், கோழியும் குஞ்சுகளும் சத்தம் இடுவதையும் கண்டான். இவைகளை எல்லாம் காணக்காண சின்னப்பன் கோபம் அதிகரித்துக் கொண்டே வந்தது.
“ஏன் இதெல்லாம் அப்படியப்படியே கிடக்குது? பாங்காக் கவனிக்க ஒருத்தரும் இல்லையா?” என்றான் கோபமாக. அதட்டிப் பேசினாலே விறுக்கெனப் பயந்து கொள்கிற சுபாவம் உள்ளவள் ராமாயி. தன் கணவன் என்ன கேட்டான் என்பதையே மறந்துவிட்டு, “இதெல்லாம் அக்கா தான் பாத்துக்குவா” என்றாள்.
“அவளுக்கு வரவரப் புத்தியும் கெட்டுப்போச்சு” என்றான் சாதாரணமாக. தன் அண்ணன் மனைவியிடம் சின்னப்பனுக்கு எப்போதும் அதிக மதிப்பு உண்டு. ஆதியிலிருந்து ‘அவர்கள், நீங்கள்’ என்று மரியாதை தப்பி ஒரு போதும் குறிப்பிட்டதில்லை. ஆனால் இன்று அவன் வாயிலிருந்து ‘அவள்’ என்று வருகிறது. இதெல்லாம் நடத்தையின் பலன் போலும்!
அப்போது நாகம்மாள் எங்கிருந்தோ வந்துவிட்டாள். ஆகையால் இவர்கள் சம்பாஷனை அப்படியே பாதியில் நிற்க வேண்டியதாயிற்று. சின்னப்பன் அருகிலிருந்த பால் கலயத்தை எடுத்துக் கொண்டு கட்டத்தரைக்குப் போனான். அவனிடம் இப்போது நாலு எருதுகள் தானிருக்கின்றன. கறவைக்காக இருந்த இரண்டு பசுக்களில் ஒன்றைப் போன வருஷம் திருப்பூர் தேரில் விற்று விட்டான். அதற்குப் பதிலாக வேறு பசு வாங்கவில்லை. குழந்தை முத்தம்மாள் பால் குடியை மறந்து விட்டாளாதலால் அந்த ஒரு பசுவே அவர்களுக்கு எதேஷ்டமாக இருந்தது. காளைகள் எப்பொழுதும் தோட்டத்தில் தானிருக்கும். பசுவையும் பால் கறந்தவுடன் தோட்டத்திற்குப் பிடித்துக் கொண்டு போய் விடுவான். சின்னப்பனைக் கண்டவுடன் கன்றுக்குட்டி ஒரு குதி துள்ளிக் குதித்தது. ‘இந்த வாயில்லாப் பண்டத்திற்குக் கூட விசுவாசம் இருக்கிறது. அந்தப் பழிகாரிக்கு அது கூட இல்லையே’ என்று நினைத்தான். வேட்டியை முழங்காலுக்கு மேல் இழுத்துக் கோவணம் போட்டுக் கட்டிக் கொண்டு, எதிரில் துடித்துக் கொண்டிருந்த கன்றிடம், “பால் குடிக்க ரொம்ப ஆசையா” என்று அதன் ரஞ்சிதமான முதுகைத் தடவிக் கொண்டே அவிழ்த்து விட்டான். கன்று நாலு கால் பாய்ச்சலில் சென்று அடிமடியை நாலு மோது மோதி வாயை வைத்துச் சப்பியது.
அருகே, எங்கோ சென்று கொண்டிருந்த எருமை ஒன்று இந்தக் காட்சியை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றது. எருமையையும் பசுவையும் சின்னப்பன் மாறி மாறிப் பார்த்தான். ஒருவேளை அந்த வெள்ளைக்கும் கருப்புக்கும் உள்ள ஒற்றுமையைப் போலத்தான் குடும்பத்திலும் தற்போது ஒற்றுமை இருக்கிறதென நினைத்தானோ என்னவோ!
பின்பு பால் கறந்து கொண்டு வீட்டிற்குத் திரும்பினான். வீதித் திண்ணையோரம் முத்தாயி ஒண்டியாக நின்றிருப்பதைக் கண்டதும், “இங்கே ஏனாத்தா நிக்கிறாய்?” என்று அன்பாக அதனுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான். “அம்மாளைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். இப்பத்தான் மாமன் கூட்டிப் போனாங்க” என்றாள் முத்தாயி. ‘மாமன்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் ‘திகீல்’ என்றது சின்னப்பனுக்கு. சகஜமாக மாமன் என்று முத்தாயி கெட்டியப்பனைத் தான் சொல்வாள்.
“சரி கண்ணு நீ இப்படி விளையாடீட்டு இரு. அம்மா வருவாங்க” என்று கூறிவிட்டு அவன் உள்ளே போனான்.
ராமாயி உள்ளிருந்தவாறே “நான் போயிட்டா வெடுக்கிண்ணு போயிடும்; இந்தச் சங்காத்தம் ஒழிஞ்ச மாதிரி” என்று உரக்கச் சொல்லிக் கொண்டு வந்தாள். சின்னப்பன் தெரிந்து கொண்டவனாய், “நீயும் போக வேண்டாம். அவளும் போக வேண்டாம். இந்தா பாலைக் காச்சு போ” என்று பால் கலயத்தைக் கொடுத்தான்.
ராமாயி என்னவோ முணுமுணுத்துக் கொண்டே உள்ளே போய் அடுப்பை மூட்டினாள். சின்னப்பன் திண்ணையின் மீது மேல் துண்டை விரித்துப் படுத்தான்.
முத்தாயி “சின்னய்யா, என் கிலுகிலுப்பையைப் பாத்தயா?” என்று ஆனந்தப் பெருக்குடன் ஓடி வந்து அவன் மடி மீது விழுந்தாள். சின்னப்பன் அவளிடமிருந்த கிலுகிலுப்பையை வாங்கிப் பார்த்தான். புத்தம் புதிசாக பளபளவென்று மேல்தகடு இன்னும் மெருகு போகாது இருக்கக் கண்டு, “இது ஏது?” என்று ஆச்சரியப்பட்டான். ஒரு வேளை பொங்கலில் வாங்கினதாக இருக்குமோ? அப்படியானால் இந்தப் பளபளப்பு இன்னும் இருக்குமா? குழந்தைதான் உடைக்காமல் இன்னும் விட்டு வைக்குமா?
சின்னப்பன், குழந்தையின் தலையை அன்புடன் தடவி விட்டுக் கொண்டு, “இது உனக்கு யாரு கொடுத்தாங்க” என்று கேட்டான். அதற்குள் தலையில் நிறைய மண் இருப்பதைப் பார்த்து நன்றாகத் தட்டிவிட்டுக் கொண்டே “யாராச்சு தலையில் மண்ணைப் போட்டுக் கொண்டா விளையாடுவாங்க?” என்றான்.
“எல்லாம் மண்ணை அள்ளிப் போட்டுக்கரப்போ, நான் போட்டுக்காமே எப்படியிருக்கிறது சின்னையா?” என்று கேட்டது குழந்தை.
சின்னப்பனுக்கு சிரிப்பு வந்தது. ஆமாம் வாஸ்தவம் தான். கோவணம் கட்டாத ஊரில், கோவணம் கட்டினவன் பைத்தியக்காரன் தான். ஆனாலும் இந்தக் குழந்தைக்கு இருக்கிற யூகம் இதைப் பெற்றவளுக்கு இல்லையே! எல்லாரும், யோக்கியமாக ஒழுங்காக இருக்கிற போது அவளுக்கேன் புத்தி இப்படிப் போச்சு என்று எண்ணினான். முத்தாயி என்னென்னவோ கேட்டுக் கொண்டேயிருந்தாள். அவள் கேட்கிற போதெல்லாம், “ஆம், இல்லை” என்று சொல்லிக் கொண்டிருந்தான் சின்னப்பன். “என்னப்பா, அப்பனும் மவளும் கொம்மாளம் போடறீங்க” என்று குரல் கேட்கவும் சின்னப்பன் திரும்பிப் பார்த்தான். தடியை ஊன்றிக் கொண்டு மேக்கால வளவுப் பெரியவர் நிற்பதைப் பார்த்து “வாங்க, மாமா, வாங்க வாங்க. ஏது இந்தப் பக்கம் அத்தி பூத்தாப்பலே” என்று எழுந்து உட்கார்ந்தான்.
“அட, இல்லையப்பா, நம்ம செங்காளி காங்கயம் போயிருந்தானாக்கும். இந்த எளவு கிலுகிலுப்பை ரண்டு மூணு வாங்கியாந்திட்டான். அவனூட்டு புள்ளை பசங்கள் அதை வெச்சுக்கிட்டு, குடு குடுன்னு ஆட்றதுகள். அதைப் பாத்து நம்ம வளவுப் பையன் கத்தறான். இந்தக் கெரகம் என்ன சொன்னாலும் கேக்க மாட்டீங்கது. நாளைக்கு நீ சந்தைக்குப் போனா ஒண்ணு வாங்கியாந்து தொலைச்சிடப்பா” என்றார்.
அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தன் வீட்டுக் குழந்தைக்கு கிலு கிலுப்பை கிடைத்த விஷயம் விளங்கி விட்டது. செங்காளி வகையறாக்கள் கெட்டியப்பனுடைய அத்தியந்த நண்பர்கள். அவர்களிடம் சின்னப்பனைச் சேர்ந்தவர்கள் சரியாகக் கூட பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ள மாட்டார்கள். “ஓஹோ, அங்கிருந்துதான் கைக்குக் கைமாறி நம்ம வீட்டுக்குக் கிலுகிலுப்பை வந்ததா? சரிதான், இதுதான் இங்கே எதற்கு இருக்கிறது?” என்று முத்தாயி கையில் வைத்திருந்த கிலுகிலுப்பையை எடுத்தான். அவள் தூங்கிவிட்டதால் மெதுவாக கிலுகிலுப்பையை விட்டு விட்டாள். அதை எறிந்து விட உத்தேசித்தவன் அதையே பெரியவரிடம் கொடுத்து விடலாமென நினைத்தான். பின்பு ஏனோ, “நாளைக்குப் போனால் வாங்கியாரனுங்க. அதுக்காக இன்னேரத்திலே வராது போனால் என்னுங்க” என்று அவரைத் தாட்டி விட்டான். அப்புறம் அந்தச் சாமானை வெகுதூரத்திற்கப்பால் போய் விழும்படி விசிறி எறிந்தான். உடனே, ‘ஐயோ, விடியாலே குழந்தை விளையாடக் கேட்டா எதைக் கொடுப்பது’ என்று எண்ணினான். ராமாயி வேலையை முடித்துக் கொண்டு தன் கணவனைச் சாப்பாட்டுக்கு அழைக்க வந்தாள். தூங்குகிறானென சற்று நின்று நிதானித்தாள். பிறகு “என்னுங்க” என்று குரல் கொடுத்தாள். சின்னப்பன் விழித்துக் கொண்டு தான் படுத்திருந்தான் என்றாலும் ஏனோ பேச இஷ்டப்படாமல் கம்மென்றிருந்தான். ராமாயி மறுபடியும் கூப்பிட்டுவிட்டு தட்டி எழுப்பலாமென கீழே உட்கார்ந்தாள்.
“நான் சும்மா தான் படுத்திருக்கிறேன், வேலையிருந்தாப் போயிப்பாரு” என்றான்.
“நீங்க… சோறு…” என்று ஆரம்பிக்கும் போதே, “எனக்கு வாண்டாம்” என்று சின்னப்பன் சொல்லிவிட்டான்.
“அப்படியானால் சோத்துக்குத் தண்ணி ஊத்தி மூடிவிடட்டுமா? அக்காளும் வாண்டாமிண்ணுட்டாள்.”
சின்னப்பன் மௌனமாகவே படுத்திருந்தான். ராமாயிக்கு இதெல்லாம் பிடிக்காது. யார் எக்கேடு கெட்டுப் போனாலும் என்ன? நாம் ஒழுங்காய் இருந்தால் போதும் என்று நினைப்பவள் அவள். எந்த மூதேவியின் பொருட்டோ தன் கணவன் பட்டினி கிடப்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்று நினைத்தாள்.
“இப்படியே இனி சாப்பிடாமத்தான் இருந்திடப் போறீங்களா?” என்றாள்.
“அப்படியிருந்திட்டா சௌக்கியமாப் போகுமா?”
“ஆமாம், அப்படியே விட்டுட்டாலும் இன்னும் சில பேருக்குக் கொண்டாட்டம் தான்!”
“இதெல்லாம் விதி. இந்த மூக்குப் போன மூதேவி எல்லாம் உதித்துவிட்டுத் திரியுதே!”
“நீங்க பேசறது எனக்கொன்றும் தெரியலை. இப்படி இல்லாததெல்லாம் நீங்களே உண்டு பண்ணுவீங்க போலிருக்குதே. என்னமோ யார் கண்டது? சும்மா ஏன் சமுசயப்படவேணும்?” என்றாள் ராமாயி.
சின்னப்பன் அவளையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தான். பின்பு “குழந்தையை எடுத்துப் போயி உள்ளே படுக்க வை” என்று கூறிவிட்டு ‘விர்’ரென்று எழுந்து வெளியே போனான்.
“எங்கேயாவது ரவிசு ரச்சைக்குப் போகாதீங்க” என்று சொல்லியபடியே அவள் ஸ்தம்பித்து நின்றாள்.
– தொடரும்…
– நாகம்மாள் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1942, புதுமலர் நிலையம், கோயம்புத்தூர்.