கணினி வசதி வேண்டும்
கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: December 19, 2024
பார்வையிட்டோர்: 25,068
எம்லோகத்தில் அன்று காரசாரமான விவாதங்கள் எழுந்தன. சித்திரகுப்தரிடம் ஒரு சில எம கிங்கரர்கள் எமலோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை பற்றி காரசாரமாக விவாதித்தனர். ஒரு சிலரின் வாழ்க்கை காலம் முடிவதற்குள் சிலரின் உயிர்கள் பறிக்கப்பட்டு இங்கே வந்து விடுகிறது. அதனால் ஏற்படும் நெரிசல்களால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறோம். எல்லா உயிர்களும் ஒரே நேரத்தில் வந்து விடுவதால் பாவ புண்ணியம் அட்டவணைப்படுத்த முடியாமல் தடுமாறுகிறோம் என்று சித்திரகுப்தரின் கீழ் உள்ள அலுவலக கிங்கரர்கள் குற்றச்சாட்டை வாசித்தனர்
சித்திரகுப்தர் தானும் எமதர்மாராஜாவும் அதை பற்றி கலந்தாலோசித்து ஒரு நல்ல தீர்வை தெரியப்படுத்துவதாக கூறி அனைவரையும் அனுப்பி வைத்தார்.

எமதர்மராஜா அறையில் சித்திரகுப்தரும் எமனும் இந்த பிரச்சினையை பற்றி விவாதித்தனர். சித்திரகுப்தனார் எமதர்மராஜாவிடம் குறைபட்டுக்கொண்டார். எத்தனை நாள் இந்த “பேரேடையே”(டைரி) வைத்துக்கொண்டு உயிர்களின் பாவ புண்ணியங்களையும், அவர்களின் வாழ்க்கை காலங்களையும் கணக்கிட்டு கொண்டிருப்பது?
எமதர்மராஜா அதற்கு நாம் என்ன பண்ணூவது சித்திரகுப்தா? மேலிடத்தில் நான் இதை பற்றி கலந்தாலோசித்து உனக்கு பதில் சொல்கிறேன். அவரும் சித்திரகுப்தரை சமாதானப்படுத்தி விட்டு முத்தேவர்களும் ஒன்றாக இருக்கும் சமயம் உள்ளே நுழைந்தார்.
வழக்கமான விசாரிப்புகள் முடிந்தவுடன் என்ன பிரச்சினை என்று மூவரும் கேட்க எமதர்மராஜா சித்திரகுதனின் கவலையும் கஷ்டங்களையும் தெரிவித்தார். நாம் இதற்கு ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
முப்பெரும் கடவுள்களும், இவர்களுடன். முருகன், விநாயகர், ஐயப்பன், மற்றும் முப்பெரும் தேவியர்களும் அவர்களின் சொரூபங்களான எல்லா அம்மன்களையும் கலந்தாலோசித்தனர்.
சிவனின் சொரூபங்களும் அவரது தரிசனங்களையும் இன்று மக்கள் காண இணைய வழியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
திருமாலின் சொரூபங்களும், அவரது தரிசனங்களையும் காண இணைய தள வழியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது
ஐயப்பனை காணவும், அவரது தரிசனம் கிட்டவும் இன்று இணையதள வசதிகள் செய்யப்பட்டுள்ளது
முருகனின் சொரூபங்களையும் அவரது அறுபடை வீடுகளையும் தரிசனம் செய்ய மக்களுக்கு இணைய தள வழியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
அப்படி பார்த்தால் விநாயகப்பெருமானின் சொருபங்களும், அவரது தரிசனமும், முப்பெரும் தேவியர்களும் அவர்களது சொரூபங்களின், தரிசனமுமே இணைய தள வசதி மட்டுமில்லாமல் எங்கும் எந்த இடத்திலும் மக்கள் தரிசிக்க வசதி இருக்கிறது. என்றாலும் அங்கும் ஒரு சில காலங்களில் கூட்டம் அளவுக்கதிகமாகி இணைய தள தரிசனம் கொடுக்கலாமா என்று யோசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
முடிவாக என்னதான் செய்யலாம் என்று சிவபெருமான் கடவுள் கேட்க நம்மை தரிசிக்க வரும் அனைவருக்கும் இணையதள வசதிகளை ஏற்படுத்தி தந்திருக்கும் இந்த சாதாரண மனிதர்களுக்கே இவ்வளவு வாய்ப்புக்கள் இருக்கிறது என்றால் நாம் எமதர்மாராஜாவிடம் சொல்லி சித்திரகுப்தனாருக்கும் கணினி வசதிகள் செய்து தரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த தகவல் எமதர்மராஜாவிடம் எடுத்துரைக்கப்பட்டு அது அவர் மூலமாக சித்திரகுப்தனாரிடம் தகவல் போய் சேர்ந்தது.
சித்திரகுப்தனார் எமதர்மராஜா கூடத்துக்குள் அடைபட்டு கிடந்த மானிட அரூபங்களை அழைத்து உங்களில் யார் கணினி நிபுணர்? என்று கேட்க அவர்கள் அனைவரும் தங்களது உடலையும், மூளையும் மண்ணுக்குள் இழந்து விட்டு வெறும் அரூபமாய் இருந்ததால் தாங்கள் பூலோகத்தில் என்ன செய்து கொண்டிருந்தோம் என்ற ஞாபகம் இல்லாமல் இருந்தார்கள்.
சித்திரகுப்தன் அலுவலகத்தில் மீண்டும் ஒரு ஆலோசனை செய்யப்பட்டு, மனித உடல் அழியாமல், ஆனால் உயிரை மட்டும் கொஞ்ச காலம் நம் இடத்துக்கு அழைத்து வந்தால் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விடலாம் என்று முடிவு செய்தார்கள்.
ராஜராஜன் என்னும் இளம் வாலிபன் மாயவரத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து அதுவும் தமிழ் வழியில் படித்து எப்படியோ தட்டு தடுமாறி கீழ் படிப்பு முடித்து அதன் பின் அவனது அறிவு கணிணியை பற்றி அறிய ஆவல் கொண்டதால் எக்ஸ்ஸெல், எம்மெல்,விண்டோ, ஆரிக்கிள், இன்னும் பல பல மென்பொருள், பன்பொருள், அனைத்தையும் அந்த சிறு மூளைக்குள் பதுக்கி கொண்டு இருபத்தி ஏழு வயது வரையிலும் அங்கும் இங்கும் பெண்கள் பக்கம் அலையாமல் முகத்தை இறுக்கி பிடித்தாலும் ஒவ்வொரு முறை வழியில் போகும் பெண்களை பார்த்து நமக்கு வருபவள் இப்படி இருந்தாள் எப்படி இருக்கும்? என்ற கனவில் அவனை அவனே கேட்டுக்கொண்டு, வாழ்நாளை சென்னையில் ஓட்டிக்கொண்டிருநதவன்
அவனது ஜாதகம் நிறைய இடங்களில் பெண் வீட்டாரால் நிராகரிக்கப்பட்டதன் காரணம் அவனுக்கு தெரியாவிட்டாலும் அவனது பெற்றோருக்கு ம்ட்டும் தெரிந்த ஒரு விஷயம் அதுவும் ஜோசியக்காரன் சொன்ன விஷயம் “பையனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு ஓகோன்னு வருவான்”ஆனா அவனுக்கு பெரிய கண்டம் ஒண்ணு இருக்கு, அது உயிருக்கு உத்தரவாதமில்லாதது.
இப்படி சொல்லியிருக்கும் ஜாதகத்துக்கு யார் பெண் கொடுக்க முன் வருவார்கள்?
இத்தகைய சூழ்நிலையில் நன்கு படித்த அழகான (அவனுக்கு கிளி போல) ஒரு பெண்ணின் பெற்றோர் (கொஞ்சம் முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள்) தைரியமாக இவனுக்கு பெண் கொடுக்க சம்மதித்தனர்.
பெண் பார்க்கும் படலம் முடிந்து அனுதினமும் அவன் கனவில் அந்த பெண் வர, அவள் கனவில் இவன் சென்று வர, உலகமெல்லாம் இன்று பரவி கிடக்கும் செல்போன் துணையுடன் இருவரும் சாட்டிங், சீட்டிங், மீட்டிங், எல்லாம் செய்து வரப்போகும் திருமண நாளுக்காக ஏங்கி கொண்டிருந்த நேரம்
இருசக்கர வாகனத்தில் அவளுடன் கற்பனையில் சஞ்சரித்து கொண்டே சென்ற ராஜராஜன் ஒரு பெரும் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் ஐ.சி.யூ வில் (அவசர சிகிச்சை பிரிவு) அனுமதிக்கப்பட்டான்.
இவனை பெற்றோரும், பெண்னை கொடுக்க போகும் பெற்றோரும் அடித்து பிடித்து கண்ணீரும் கம்பலையுமாக மருத்துவமனையின் ஐ.சி.யூ.வில் நின்று கொண்டிருக்க…
எமதர்மராஜா முன்னிலையில் “மனோகரா படத்தில் கை விலங்குடன்” சிவாஜி அரசர் முன் கர்ஜித்து கொண்டிருப்பாரே அது போல ராஜராஜன் எமதர்மராஜன் முன் கர்ஜித்து கொண்டிருந்தான்.
என்ன குற்றம் கண்டீர்? தினமும் இறைவனை தொழுகாமல் எந்த பணியும் செய்யாதவனா நான்? என் பெற்றோரும், உற்றோரும் இறைவனை தேடி ஒவ்வொரு முறையும் எல்லா ஊர்களுக்கும் போகவில்லையா? முருகனுக்கு காவடி, பெருமாளுக்கு திருப்பதி, சிவனுக்கு இராமேஸ்வரம், எங்கள் தெருவில் ஆரம்பித்து போகும் வரைக்கும் உட்கார்ந்திருந்த பிள்ளையாருக்கு ஒரு தோப்புக்கரணம், மாரியம்மன், நீலியம்மன், இன்னும் எத்தனை தெய்வங்களை வேண்டி வளர்த்த என்னை…..
இன்னும் பத்தே பத்து நாட்களில் திருமணம் முடிக்கப்போகும் என்னை (மூச்சு வாங்குகிறது) தேடாத இடம் தேடி கடைசியில் பெண் கொடுக்க சம்மதித்த அவர்களையாவது இந்த இறைவன் திருப்தி படுத்த வேண்டாமா? இப்படி எல்லாரையும் ஏமாற்றி என்னை இங்கு இழுத்து வந்திருக்கிறீர்கள்
எமதர்மராஜனுக்கு இவனை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை.இவன் குறிப்பிட்ட எல்லா கடவுள்களும் எமதர்மராஜனிடம் என்ன பிரச்சினை என்று தூது விட்டு விட்டார்கள். அவர்களை சமாதானப்படுத்தி ஐந்து நாள் இவன் வாயை அடைத்து வேலை வாங்கி அனுப்பி விடுகிறேன் என்று உறுதி மொழி கொடுக்க வேண்டியதாகி விட்டது.
ஒரு வழியாக பேசி முடித்து களைத்து போன ராஜராஜனை சமாதானப்படுத்த சித்திரகுப்தன் அவனருகில் நெருங்கி அவனை தட்டி கொடுத்து அவனை அழைத்து வந்த நோக்கங்களை மெல்ல புரியும்படி தெரிவித்தார்.
அடுத்த ஐந்து நாட்கள் அவனது கணினி மூளை அபாரமாக செயல்பட்டு ஒவ்வொரு உயிரின் பிறப்பும் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தனி தனி பக்கம் ஒதுக்கப்பட்டு அவர்களது இறுதி காலமும் குறிக்கப்பட்டு இதற்கு இடையில் வாழ்நாளில் அவர்கள் செய்யும் பாவ புண்ணியங்கள் அதில் பதிவாகி சித்திரகுப்தனுக்கும் அவரது பணியாளர்களுக்கும் பயிற்சி கொடுத்துவிட்டு மேலும் ஒரு நாள் அதன் பயன்பாட்டை செய்து காட்டிய ராஜராஜனை சித்திருகுபதன் மட்டுமில்லாமல் எமதர்மராஜனும் பாராட்டி பெருமையுடன் வழி அனுப்பி வைத்தனர்.
சட்டென மருத்துவமனையில் ஐ.சி.யூ. வில் படுத்திருந்த ராஜராஜனுக்கு விழிப்பு வர மருத்துவர்கள் ஓடோடி வந்து பார்த்தவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். அதெப்படி இந்த ஆக்சிடெண்டுக்கு குறைந்த பட்சம் எழுந்து வர மூன்று மாதங்களாவது ஆகுமே? அவர்களுக்கு தெரியுமா இது சித்திரகுப்தனின் வேலை என்று..!
வாசகர்களுக்கும் ஒரு வேண்டுகோள் இனிமேல் நம்முடைய குழந்தைகள் பிறக்கும் போது ஏதாவது ஒச்சம் (குறைகள்) இருந்தால் மனதை போட்டு வருத்தி கொள்ளாதீர்கள் அது இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கும் ஆதார் போன்ற அடையாளம்தான்.
சித்திரகுப்தனின் அலுவலகத்தில் இனி எல்லாம் கணினி மையம் தான். அதனால் நம் ராஜராஜன் அறிவுரைப்படி இந்த உலகத்தின் ஒவ்வொரு பிறப்புக்கும் ஏதோவொரு கணணி குறியீட்டுடனே பிறக்கும்.
ராஜராஜனுக்கு பிழைத்து எழுந்தவுடன் மேலோகத்தில் நடந்தது எதுவும் ஞாபகம் இல்லை.
![]() |
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க... |
