தொலையும் முகவரிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 4, 2025
பார்வையிட்டோர்: 1,700 
 
 

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஏறத்தாழ விழா முடிவுற்று விட்டது.

விழா ஏற்பாட்டுக்குழுத் தலைவர் நன்றியுரையாற்றிக் கொண்டிருந்தார். இயல்பாக நகைச்சுவை ததும்பக் கதைகள் சொல்லும் அவர் மேடையில் வலு ‘சீரியஸாக’, தனது நன்றியுரையில் எவரையும் தவற விட்டுவிடக் கூடாது என்பதிலேயே குறியாக இருந்தார். மண்டபத்தை நிறைத்திருந்த சனங்கள் இன்னும் கலைய ஆரம்பிக்கவில்லை. எங்களூரில், இலங்கையிலாக இருந்தால் நன்றியுரை கேட்க நாலைந்து பேர்தான் இருந்திருப்பார்கள். அவர்களும் அனேகமாக மேடையில் வீற்றிருப் போருக்கு மிக வேண்டப்பட்டவர்களாகவோ அல்லது அவர்களது வாகனத்தில் வந்தவர்களாகவேகத்தான் இருப்பார்கள். ஆனால் லண்டனில் இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது கூட எனக்கு சற்று வியப்பாக இருந்தது. நூற்றி ஐம்பது பேருக்கு மேலாவது இருக்கமாட்டார்களா?

தனது உரையில் ஆங்கிலப் பதங்கள் ஊடுருவி விடக் கூடாது என்பதில் விழாக்குழுத்தலைவர் மிக்க அவதானம் பேணிவந்தார். எனது பெயரைக் கூட அழகுதமிழில் அவர் உச்சரித்தது என்னை அதிசயிக்க வைத்தது. எங்களூர் பள்ளிக் கூடத்தில் படிப்பித்த பெரியதம்பி வாத்தியாருக்குப் பிறகு எனது பெயரை இத்தனை அழகாகத் தமிழில் உச்சரித்தது இவராகத்தான் இருக்க முடியும். இந்த விழாக்குழுவினர் கூட ஊரில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் பழைய மாணவர் சங்க லண்டன் கிளையினரே! தாயகப் பாடசாலையின் வளர்ச்சிக்காக இப்பேர்ப்பட்ட விழாக்கள் மூலம் நிதி திரட்டி உதவி இன்று சர்வதேசப் புகழடைந்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் நடாத்திய சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற கதைகளைத் தொகுத்து இன்று நூலாக வெளியிடுகிறார்கள். எழுத்தாளன் என்ற ரீதியில் இந்நிகழ்விற்குச் சிறப்பு அதிதியாக இவர்களால் அழைக்கப்பட்டு லண்டன் வந்துள்ளேன்.

இங்கு வருவதற்கு விசா எடுப்பதற்கு முயற்சித்தபோது, இவர்களின் அனுசரணைக் கடிதத்தைப் பார்த்துவிட்டு, ‘பத்து சதம்வீதம்தான் சாத்தியம் எதற்கும் போய் முயற்சித்துப் பார்!’ என்றுதான் அனேகமாக எல்லோரும் சொன்னார்கள். ரவல் ஏஜன்சியில் பணிபுரியும் பள்ளி நண்பன் ஒருவன் மூலம் விசா விண்ணப்பப் பத்திரங்களை நிரப்பிக்கொண்டு ஒரு துணிச்சலுடன் தான் விசா எடுப்பதற்கென்று புறப்பட்டேன். விண்ணப்பத்தை ஏற்கும் அதிகாரிகளுக்கு விண்ணப்பதாரிகளுடன் சீரியஸாக இருக்குமாறு திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போலும். கடுகடுப்பாகவே அந்த அதிகாரி முகத்தை வைத்திருந்தார்.

விசா விண்ணப்பப்பத்திரத்தையும் அனுசரணைக் கடிதத்தையும் பவ்வியமாகச் சமர்ப்பித்தேன். அவற்றினை வாசித்துப் பார்த்து விட்டு அதிகாரி ஓர்தடவை என்னை உச்சிமுதல் உள்ளங்கால்வரை பார்த்தார். சிறப்பு அதிதியாக அழைக்கப்பட உனக்கென்ன தகுதியிருக்கு? என்பது போலிருந்தது அந்தப் பார்வை. கையோடு கொண்டு சென்ற நான் எழுதிய ஏழெட்டுப் புத்தகங்களையும் எடுத்து மேசையில் அடுக்கினேன். புத்தகங்களை ஒவ்வொன்றாக அட்டைப் படத்திலிருந்து பின் அட்டை வரை பனாட்டுத் தட்டைப்போல் புரட்டிப் புரட்டிப் பார்த்தார். புத்தகங்களின் தலைப்புக்களோ அதிலுள்ள விடய தானங்களோ அவருக்கு விளங்கியிருக்க நியாயமில்லைத் தான். பின் அட்டைகளில் எனது புகைப்படங்கள் இருந்தது நல்லதாகிப்போய் விட்டது. அப்படங்களைப் பார்த்ததும் அவரது கடுகடுப்பில் கணிசமான வீதம் குறைந்திருந்தது.

அதன் பின்னர் லண்டனில் யார்யாரைத் தெரியும் என்று கேட்டார். அனுசரணை வழங்கியவர்களைத் தவிர வேறொரு குருவியையும் தெரியாது என்று கற்பூரத்தில் அடித்துச் சத்தியம் பண்ணாத குறையாக பயபக்தியுடன் சொன்னேன். அனேகமாக அந்தப் பதில்தான் சாதகமாக அமைந்திருக்க வேண்டும். இரண்டு கிழமைக்குள் விசா கையில் கிடைத்துவிட்டது.

கையில் லண்டன் விசா குத்திய பாஸ்போட்டுடன் டுப்ளிகேசன் வீதியிலிருந்து காலி வீதிவரை நடந்தபோது எனக்குக் காற்றில் மிதந்து செல்வது போல் இருந்தது. சந்திரமண்டலத்தில் முதன் முதலில் காலடி பதித்த ஆம்ஸ்ரோங் கூட அங்கு மிதந்து திரிந்ததாக சின்னவயதில் எங்கோ வாசித்த போது சந்தோச மிகுதியால்தான் அவர் மிதந்திருப்பார் என பலநாட்களாக நான் எண்ணிக் கொண்டது ஏனோ அப்போது என் நினைவுக்கு வந்தது. எனது பதினெட்டு வயதில் முதலாவது கதை பத்திரிகையில் வெளிவந்தபோதும் இப்படித் தான் ஒரு தடவை ஆம்ஸ்ரோங்காக மாறியிருந்தேன்.

ஒருவாரகால பயண ஆயத்தங்களின் பின்னர் ஒரு வழியாக விமானமேறி லண்டனை வந்தடைந்து விட்டேன். கீத்றோ விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரியிடம் பாஸ் போட்டை நீட்டியபோது அடுத்த தத்து காத்திருந்தது. இங்கும் அதிகாரியாக ஒரு நரசிம்மராவ்தான் இருந்தார். அவர் சிரித்து பத்துப் பதினைந்து ருடங்களாகியிருக்கும் போல் தோன்றியது. லண்டனுக்கு எதற்கு வந்ததாகவும் எங்கு தங்கியிருக்கப்
போவதாகவும் அவர் வினவியதை கஷ்டப்பட்டு விளங்கிக் கொண்டேன். லண்டனுக்கு என்ன புண்ணாக்கு வாங்கவோ வந்திருப்பேன்? மூக்கு முட்ட வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு கைப்பைக்குள் தயாராக வைத்திருந்த அனுசரணைக் கடிதத்தின் நகல் பிரதியை நீட்டினேன். மளமளவென்று வாசித்து விட்டு என்னை ஏறிட்டுப் பார்த்தார். கோட்சூட்டுடன் சுமாராகத் தான் நின்றிருந்தாலும் என்னையே அறியாது எனக்குள் ஒரு
பதட்டம் தொற்றிக்கொண்டது. இதயம் வேறு படக் படக் என்று தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. எவ்வளவு காலம் தங்கியிருக்கப் போகிறீர்கள்? என்று கேட்டார். ‘ஜஸ் ட்ரு வீக்ஸ்’ என்றவாறே றிட்டேன் ரிக்கெட்டை சமர்ப்பித்தேன். ‘ஓ.கே’ என்று கூறியவாறே பாஸ்போட்டில் திகதியை குத்தி பொத்தென்று என்முன் போட்டுவிட்டு “நெக்ஸ்ட் பிளீஸ்” என்ற போதுதான் எனக்கு இதயம் ‘நோமலாக’ அடிக்க ஆரம்பித்தது.

குகைபோல் நீண்டுசென்ற ‘எக்ஸிட்’ வழியே புகுந்து வெளியே வந்தபோது எனது பெயரை கடதாசி மட்டையில் எழுதித் தாங்கியவாறே அனுசரணையாளர்கள் காத்து நின்றார்கள். தொலைபேசியில் கதைத்துப் பழகியவர்களை முதன் முதலாக நேரில் சந்தித்தேன். கந்தசஷ்டி விரதம் இருந்து விட்டு வந்ததைப் போன்ற தோற்றங் கொண்ட என்னை தூரத்தில் வரும்போதே தான் ஊகித்துக் கொண்டதாக, தொலைபேசியில் என்னுடன் ‘அண்ணா, அண்ணா’ எனக் கதைக்கும் அந்த இளைஞன் கரன் சொன்னாள். நான் எதிர்பார்த்ததை விட இன்னும் இளமையுடன் காட்சியளித்த கரன் கூடவே நின்ற, என்னைப்போல் நடுத்தர வயது கனவானைக் காட்டி “இவர் தான் எங்கடை சங்கத் தலைவர் மிஸ்டர் நாதன் என்னுடைய அங்கிள்” என்றான். “ஆனால் ஒரு துர் அதிஷ்டம் பாருங்கோ. எனக்கு மகள் ஒருதரும் இல்லை. ஒரு மகன் மட்டும் தான்” என்றார் மிஸ்டர் நாதன்.

மூவரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.

இப்போது சபையிலும் சிரிப்பொலி கேட்கிறது. அதே சங்கத் தலைவர் மிஸ்டர் நாதன்தான் தனது உரையின் இறுதியில் ஏதோ நகைச்சுவையாகச் சொல்லியிருப்பார் போலும்.

“அடுத்த வருட எமது நிகழ்வில் மீண்டும் சந்திப்போம். அது வரை உங்கள் அனைவரிடமிருந்தும் விடைபெற்றுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்!” என்றவாறே அவர் என்னருகே வந்தமர “இத்துடன், அழைப்பிதழில் குறிப்பிட்ட படியே சரியாக எழுமணிக்கு இந்நிகழ்வினை நிறைவு செய்து கொள்கின்றோம்” என விழாவிற்கு தலைமை வகித்த ‘அறிஞர்’ கூறிய பின்னர்தான் சனங்கள் கலையத் தொடங்கினார்கள்.

மேடையில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது சபை முன் வீற்றிருந்த சிலர் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். புலம்பெயர்ந்து இங்கு வந்த நம்நாட்டு எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், நான் முன்னர் பணிபுரிந்த நிறுவனத்து நண்பர்கள், கல்லூரியில் என்னுடன் படித்தவர்கள், எங்களூரவர்கள் எனப் பல ரகத்தினராய் அவர்கள் இருந்தார்கள். “உங்கடை பேட்டி தீபம் தொலைக்காட்சியிலை நேற்றுப் பார்த்தம். அப்பதான் தெரிஞ்சுது நீங்கள் இங்கை வந்திருக்கிற சங்கதி” என்று கையைக் குலுக்கியவாறே நாட்டு நிலவரங்கள், இலக்கியப் புதினங்கள் எனபத்தையும் பலதையும் கதைத்துக் கொண்டு நின்றார்கள்.

அப்போதுதான் சற்றுத் தூரத்தில் ஒரு நடுத்தர வயதுத் தம்பதியினர் என்னை எதிர்பார்த்தபடி நிற்பது தெரிந்தது. என் உறவினர்களாகவோ அல்லது நண்பர்களாகவோ அவர்களை இனங்காண முடியாதிருந்தது. அதிலும் அசப்பிலே பார்த்தால் அந்த நாள் நவரச நடிகர் முத்துராமனைப்போல் காட்சியளித்த அந்த கனவானை இதற்கு முன்னர் ஒரு போதும் நான் சந்தித்திருக்கவில்லை. ஆனால் தமிழ் கலாசாரத்தையே மொத்தமாகக் குத்தகைக்கெடுத்தாற் போல் காட்சி தந்த அந்தப் பெண்மணியை, அவளின் அந்தக் கண்களை எங்கோ, எப்போதோ அருகில் வைத்துப் பார்த்ததைப் போன்ற ஒரு பிரமை. நண்பர்களிடம் ‘எக்சியூஸ் மீ’ கேட்டவாறே அத் தம்பதியினரை நோக்கிச் செல்கிறேன். அவர்களும் என்னை நோக்கி வந்து
கொண்டிருந்தார்கள்.

முதலில் அந்தப் பெண்மணிதான் கதைக்க ஆரம்பித்தாள்.

“என்ன ஆரெண்டு இன்னும் கண்டுபிடிக்கேல்லைப் போலை கிடக்கு?”

“எனக்கோ தர்மசங்கடமாகி விட்டது. கொழும்பில் சில கல்யாண வைபவங்களில் இப்படித்தான் சில்லெடுப்புகள் வருவதுண்டு. ஒரு தடவை ஒன்றுவிட்ட தங்கையிடமே குறிப்பெடுக்க முடியாது வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டதும் ஞாபகத்திற்கு வந்தது. லண்டனில் அப்படியான உறவுமுறையில் அக்கா, தங்கைகள் எவருமே எனக்கில்லையே? அவர்களைத் தெரிந்த மாதிரி நடித்து பின்னர் தெரிந்து கொள்வதா…… அல்லது யாரென்று இன்னமும் அடையாளங் காணமுடிய வில்லை என்று சரணாகதியடைவதா?

“சந்திச்சுக் கனகாலம் தானே… நேற்று தீபத்திலை பார்த்ததாலை உங்களை எனக்குத் தெரியுது. உரிமையோடை கதைக்க முடியுது. ஆனால் இருபத்தைஞ்சு வருசத்துக்குப் பிறகு சந்திக்கைக்குள்ளை திடீரென்று கண்டு பிடிக்கேலாது தானே……”

இந்த நாடே ஒரு வியப்பு… அதற்குள் இப்படியும் இன்னொரு வியப்பா? எனக்கோ தலை சுற்றிக்கொண்டு வந்தது.

“நான் பரமேஸ். இவர் என்னோட கணவர் பரந்தாமன்”

“ஓ! பரமேஸ்” என உச்சஸ்தாயியில் சொல்ல வந்தாலும் பக்கத்தில் பரந்தாமன் நின்றதால் அடக்கியே வாசித்தேன்.

“பரமேஸ்… எவ்வளவு காலத்துக்குப் பிறகு? நீங்கள் யூ.எஸ்.ஏயிலை எண்டெல்லா கேள்விப்பட்டனான்.”

“கலியாணம் முடிச்ச கையோட, ஆரம்பத்திலை ஒரு ஐந்து வருஷம் அங்கையிருந்தம். இப்ப இங்க லண்டனிலை செற்றில்டவுனாகி பதினெட்டு வருஷங்களாகுது”

பேதையாய், பெதும்பையாய் பள்ளி நாட்களில் என்னுடன் பழகிய பரமேசை இத்தனை நீண்டகால இடைவெளியின் பின் ஒரு பேரிளம் பெண்ணாய் இந்த அந்நிய மண்ணில் அதுவும் இப்படியான ஒரு இலக்கிய நிகழ்வில் வைத்துச் சந்திப்பேனென்று ஒரு கணமேனும் நான் எண்ணியிருந்ததில்லை!

எங்களூர் பள்ளிக் கூடத்தில் அரிவரியிலிருந்து ஏழாம் வகுப்புவரை எழு வருடங்கள் தொடர்ச்சியாக என்னுடன் படித்து வந்தவள்தான் இந்தப் பரமேஸ். வகுப்பில் முன்வாங்கில் இருப்பது மட்டுமல்லாது எப்பொழுதும் அவள் முதலாம் பிள்ளை யாக வந்ததாகவே எனக்கு ஞாபகம். ஆறாம் வகுப்பிலாகத்தான் இருக்க வேண்டும். ஒரு தடவை பரமேசை விட நான் கூடுதலாகப் புள்ளிகள் பெற்று முன்னணியில் திகழ்ந்தேன். மூத்ததம்பி வாத்தியார் கூட ‘இந்தத் தடவை பரமேஸ் அவுட் போலை கிடக்கு’ என்று சொல்லி வாய் மூடுவதற்குள் பாழாய்ப்போன சங்கீத பாடத்தின் புள்ளிகள் வந்து நிலைமையைத் தலைகீழாக்கியது.

சங்கீத பாடத்திற்கு என்னை விட பரமேசுக்கு முப்பது புள்ளிகள் கூட இருந்ததில் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் அவள் முதலாம் பிள்ளையானாள்.

அப்படியாக… படிப்பில் என்றுமே என்னால் வெல்லப்படாத, என் பால்ய சிநேகிதி இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையிலும்… பவித்திரமான அந்த அன்பினைப் பேணிக் கொண்டு……!

“நேற்று ரெலிவிஷனிலை உங்கடை பேட்டி போகக்குள்ளை உண்மையிலை பெருமையாக இருந்தது. என்னோடை ஏழெட்டு வருஷங்கள் ஒன்றாகப் படித்த, பழகின ஒருதற்றை பேட்டி.. எனக்கு முதன் முதலா கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. எங்கடை பள்ளிக்கூடத்தைப் பற்றி நீ சொல்லேக்குள்ளை கொஞ்ச நேரம் அந்தக்காலத்துக்கே போய்வர முடிஞ்சுது. அந்தப் பள்ளிக்கூடம், பெரிய தம்பி வாத்தியார், மூத்ததம்பி வாத்தியார், நாகபூசணி ரீச்சர், ஆறுமுகப்பா கடை…ஓ என்ன அற்புதமான வாழ்க்கை அது? அதை றெக்கோட் பண்ணி வைச்சு இவருக்கும், இரண்டு டோட்டேசுக்கும்…எல்லாரும் வேலையாலை வந்த பிறகு போட்டுக் காட்டினன். பேட்டியின்ரை முடிவிலை இந்த விழா நடக்கிற விபரங்களையும் சொன்னதாலை எப்பிடியும் உங்களை சந்திக்க வேணுமெண்டு விடாப்பிடியா நிண்டு இவரையும் இழுத்துக் கொண்டு வந்தன்!” படபட வென்று பரமேஸ் சொல்லிக்கொண்டு போனாள்.

“எங்கை தங்கியிருக்கிறீங்க?”

முதன் முறையாகப் பரந்தாமன் வாய் திறந்தார்.

“எனக்கு ஸ்பொன்சர் பண்ணின தம்பியோடை… மிடில் செக்சிலை…” என்றேன் தூரத்தில் நின்ற கரனைக் காட்டியவாறே.

“நல்லதாப் போச்சுது. நாங்கள் ரூட்டிங்கிலைதான் இருக்கிறம். நீங்கள் எப்ப திரும்ப பிளைட்” பரந்தாமன்தான் கேட்டுக் கொண்டிருந்தார்.

“வாற சனிக்கிழமை”

“அதுக்கிடையிலை எங்கடை வீட்டுக்கு ஒருக்கால் விசிட் பண்ண வேணும். இவையளின்ரை அட்றஸ்சை ஒருக்கால் கேட்டு நோட் பண்ணுங்கோ அப்பா” என்றாள் பரமேஸ். அந்த நேரம் பார்த்து கையில் கனதியான ஏதோ பொருட்களுடன் அவசர அவசரமாக என்னருகே வந்த கரன் “போவோமா அண்ணா’ என்று கேட்டான். பரமேசையும் பரந்தாமனையும் அறிமுகப்படுத்தி வைத்தேன். பரஸ்பரம் ‘ஹலோ’ சொல்லிக் கொண்டனர். மறக்காது கரனின் விசிட்டிங்காட்டைப் பெற்றுக் கொண்டு பரந்தாமனும் பரமேசும் விடைபெற்றுச் சென்றார்கள்.

மூன்றாவது நாள் விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுதில் தொலைபேசியில் என்னை யாரோ அழைப்பதாகக் கூறியவாறே கரன் என்னிடம் கையடக்கத் தொலைபேசியைத் தந்தான். மறுமுனையில் தொங்கிக் கொண்டு பரமேஸ் நின்றாள்.

“இண்டைக்கு உங்களுக்கு லஞ் குடுக்கலாமெண்டு இருக்கிறம். இன்னும் ஷாப்பா வண் அவரிலை உங்களை ‘பிக்கப்’ பண்ண இவர் அங்கை வருவார். றெடியா இருங்கோ”

“என்ன இது திடீரென்று”

“இண்டைக்குத்தான் இவருக்கு லஞ் ரைமிலை கொஞ்சம் அஜெஸ்ட் பண்ணக்கூடியதாய் இருக்குமாம். காலையிலையே வந்தீங்கள் எண்டால் இங்கை நிண்டுட்டு அப்பிடியே லஞ் எடுத்துட்டு ஆறுதலா ஆவ்ரநூன் மிடில்செக்சுக்குப் போகலாம் என்ன?”

“ஓ.கே.” என நான் சொன்னதும் சொல்லாததுமாக இருந்த வேளையில் தொலைபேசியைத் துண்டித்துக் கொண்டாள் பரமேஸ்.

கரனிடம் விடயத்தைக் கூறி ஒரு மணித்தியாலத்தில் தயாராக நின்றேன். குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு நிமிடமும் பிந்தாமல் பரந்தாமனின் வாகனம் வாசலில் வந்து நின்றது.

வாகனத்தில் ஏறி முன் சீற்றில் அவர் அருகே அமர்ந்து சீற் பெல்ட்டை மாட்டிய பின்பே பயணம் தொடர்ந்தது. இலண்டனில் வாகனத்தில் ஏறியதும் மூச்சு விட மறந்தாலும் பெல்ட்டை கட்ட மறக்கக்கூடாது. பெல்ட் மாட்டுவதற்குக் கூட தனியாகப் பயிற்சி எடுக்க வேண்டும் போல… நிதானத்துடன் அதைக்கற்க வேண்டும். வந்த முதல் இரு நாட்கள் பெரிதும் சிரமப்பட்டு இப்போ பெல்ட்டை மாட்ட நன்றாகப் பழக்கப்பட்டுக் கொண்டேன்.

ரூட்டிங் செல்ல சரியா வண் அவர் ஆகும். M4 ஹைவேய்ஸ் சாலை போய் A205 றூட்டை எடுத்தமெண்டால் சிம்பிளா போயிடலாம்” என்றவாறே வாகனத்தை ஆர்முடுக்கிச் செலுத்திக் கொண்டிருந்தார் பரந்தாமன். நம்நாட்டு விமான நிலைய நெடுஞ்சாலை போல் வீதிகன் விசாலமாகவும் நீண்டும் கிடந்தன.

நவீன கடைத்தொகுதிகள், பெற்றோல் நிரப்பு நிலையங்கள் என நம்மவர்கள் ‘தும்படிக்கும்’ இடங்கள் யாவும் மிக வேகமாக பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தன.

எங்களூர் பாடசாலையில் ஏழாம் வகுப்பு வரை படித்த பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்தி ரவுணில் உள்ள ஆண்கள் கல்லூரிக்கு நானும் பெண்கள் கல்லூரிக்கு பரமேசும் சென்றுவிட்டோம். எல்லோரும் வியக்கும்படியாக அட்வான்ஸ் லெவலில் முதன்முறையிலேயே நல்ல றிசல்ற் எடுத்து பரமேஸ் பட்டப்படிப்பிற்காக பல்கலைக்கழகம் சென்ற பின்பு அட்வான்ஸ் லெவலில் மூன்று முறையும் மட்டையடித்து விட்டு பணிபுரிவதற்காக நான் கொழும்பு வந்தடைந்தேன். சில வருடங்களின் பின், ஆடிக் கலவரத்தை அண்டிய நாட்களில்; பட்டப்படிப்பை முடித்த பரமேஸ் அயல்கிராமத்தைச் சேர்ந்த ஒரு சட்டத்தரணியைத் திருமணம் செய்து அமெரிக்கா சென்று விட்டதாக யாரோ சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

“உங்கட டோட்டர்ஸ் மறி பண்ணி விட்டார்களா?”

மௌனத்தை கலைத்தவாறே பரந்தாமனிடம் வினவினேன்.

“மூத்தவ முடிச்சிட்டா. சின்னவவுக்கு இன்னும் சில நாட்களிலை நடக்க இருக்கு” லாவகமாக ஸ்ரியறிங்கைச் சுழற்றியவாறே அவர் கூறினார்.

ஸ்ரூடன்ஸ் விசாவில் லண்டனுக்கு வந்திருக்கும் எங்களூர் ‘பொடியனாக’ அல்லது இங்கு உயர்பதவி வகிக்கும் உறவுக்கார பையனாக பார்த்து மகளுக்கு மணமுடித்து வைத்திருப்பார்கள் போலும். இங்கு வந்து சேர்ந்த எமது தேசத்து இளைஞர்கள் பகல் இரவு பாராது எவ்வளவு கஷ்ரப்படுகிறார்கள். கரன் வீட்டில் இருக்கும் ராஜன், கோபு என்ற இரு இளைஞர்களும் தினமும் நான்கு அல்லது ஐந்து மணித்தியாலங்கள் மட்டுமே தூக்கம் கொள்வார்கள். அகால வேளை களில் வீட்டுக்கு வரும்போது ‘தும்படிச்சுப் போட்டு’ வாறம் என்பார்கள். அதன் அர்த்தம் விளங்காது நான் புருவங்களை உயர்த்தியபோதுதான் ‘வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சியாகப் பகுதிநேர வேலைகள் புரிவதுதான் தும்படிக்கிறது என்பது’ என வியாக்கியானம் சொன்னார்கள்.

“இப்ப சிலோனிலை நிலவரங்கள் சரியான மோசம் என்ன?”

வாகன வானொலியில் ஏதோ ஒரு அலைவரிசையைப் பிடிப்பதற்கு முயற்சித்தவாறே பரந்தாமன் என்னிடம் வினவினார்.

“என்னென்ன நடக்கப் போகுதோ எண்ட பயப்பிராந்தி யிலைதான் எல்லாரும் சீவிக்கிறம்”

“நீங்கள் ஏன் லண்டனிலை இப்படியே நிற்பதற்கு முயற்சிக்கக் கூடாது?” சுற்றுவட்ட மொன்றில் வாகனத்தைத் திருப்பியவாறே, திடீரென ஆங்கிலத்தில் கேட்டார் பரந்தாமன்.

அவரது கேள்வியில் விக்கித்தேன். நான் பதில் கூற முன்னரே தனது உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தார்…

“இப்பிடியே நிக்கிறது ஸ்பொன்சேஸுக்கு பிரச்சினை எண்டால், உங்களுக்கு மல்டி விசாதானே தந்திருப்பினம். இப்ப போயிட்டு ஏதாவது காரணத்தைச் சொல்லி இரண்டொரு மாதத்திலை திரும்பவும் லண்டனுக்கு வாருங்கோ. பிறகு நாட்டு நிலவரத்தைக் காட்டி அப்பிடியே இங்கை நில்லுங்கோ. அஸ் ஏ லோயர் பிறகு வாற சிக்கல்களுக்கு வேணுமெண்டால் நான் உங்களுக்கு கெல்ப் பண்ணுறன்”

வாகனத்தில் இப்போ ஒரே நிசப்தம்

ரம்மியமான இந்தத் தேசம். அமைதியான பதற்றமற்ற சூழல். எல்லாவற்றையும் விட பாதுகாப்புக்கு நூற்றுக்கு நூறுவீத உத்தரவாதம். வந்து இறங்கிய கணத்திலிருந்தே லண்டன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏற்கனவே சந்தித்திருந்த உறவினர் ஒருவர் வாயிலாக தற்காலிக தொழில்வாய்ப்பு ஒன்றிற்கும் சந்தர்ப்பம் இருக்கிறது. இப்போது மீளவும் நான் இங்கு வருவதற்கும் தொடர்ந்து தங்குவதற்கும் தான் உதவுவதாக பரந்தாமனின் உறுதிமொழி வேறு. தானாகவே வந்து கொண்டிருக்கும் இந்தப் பொன்னான வாய்ப்புக்களை நழுவவிட்டு விட்டால்……

“என்ன கனக்க யோசிக்கிறீங்கள்?”

“எல்லாம் என்ரை வயதைப் பற்றித்தான்”

“அப்பிடி என்ன வயது? பரமேசின்டை வயதுதான் உங்களுக்குமெண்டால் இப்ப இது ஒரு பெரிய வயதோ? அறுபது வயதாக்கள் கூட உழைக்கிறதுக்கெண்டு இஞ்சை அடிச்சு விழுந்து கொண்டு வரைக்குள்ளை… ரேக் யுவர் ஓன் டைம். திங் இற் ஓவர் அன்ட் லெட் மீ நோ… இண்டைக்கு போறதுக்கிடை யிலை உங்கடை முடிவைச் சொல்லுங்களேன்.”

பெரிய பூங்கா ஒன்றினைத் தாண்டி வாகனம் சென்று கொண்டிருந்தது.

“இதுதான் கியூ சார்டின். லண்டனிலை இருக்கிற ஒரு பெரிய தாவரவியல் பூங்கா… எங்கட நாட்டு பேராதனை மாதிரி”

பரந்தாமன் சொல்லிக் கொண்டே வந்தார்.

ஆடிக் கலவரத்தை ஒட்டி வந்தவர்கள் தான் இப்போதிங்கு வீடும் வாகனமுமாக வசதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது எனக்குக் கிடைக்காத வாய்ப்பு கால் நூற்றாண்டு கடந்து இப்போது கிடைத்திருக்கிறது. பரந்தாமன் கூறுவது போலவே இச்சந்தர்ப்பத்தினை வாழ்வின் ஓர் திருப்புமுனையாக ஏன் நான் கொள்ளக்கூடாது?

வாகனத்தின் வானொலியில் இப்போது ஆங்கிலப் பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது. என்னையே ஆகர்ஷிக்கும் வகையில்.

நெடுஞ்சாலையிலிருந்து விலகி விளம்பரப் பலகை ஒன்றினை கோணலாகத் தாங்கி நின்ற வீதியொன்றின் வழியாக வாகனம் இப்போது சென்றுகொண்டிருந்தது.

‘எங்கடை வீடு கிட்டிவிட்டது’ என்று பரந்தாமன் கூறிய ஐந்து நிமிடங்களில், விளையாட்டு பில்டிங் புளொக்குகளில் கட்டி அடுக்கி வைத்தால்போல் அமைந்திருந்த ஒரே மாதிரியான வீடுகளில் மூலை வீடு ஒன்றின் முன் வாகனம் வந்து நின்றது. சீற்றோடு பிணைத்திருந்த பெல்ட்டை விடுவித்து வாகனத்தை விட்டு இறங்கியபோது வாசலில் வரவேற்குமாப்போல் பரமேஸ் நின்று கொண்டிருந்தான். அவளது கையில் பிறீவ்கேஸ் ஒன்றிருந்தது.

வாசல்வரை என்னுடன் வந்த பரந்தாமன் “பரமேஸ் உங்கடை பிரண்ட் இப்ப எனக்கும் நல்ல பிரண்டாகீட்டார்” என்று கூறியவாறே பரமேசின் கையில் இருந்த பிறீவ்கேசை வாங்கிக் கொண்டார். “அக்ஸுவலி கீ இஸ் வெரி சொப்ட் பேசன். எல்லாரோடையுமே ஒத்துப்போகக் கூடியவர்” என்று பரமேஸ் கூறவே மூவரும் சிரித்தோம்.

“நீங்கள் உள்ளை போய் கதைச்சுக் கொண்டு இருங்கோ. ரூ அவஸ்சிலை நான் வந்திடுவேன்” என்று என்னைப் பார்த்துக் கூறிவிட்டு பரமேசுக்கு கையசைத்தவாறே சென்று மீண்டும் வாகனத்தில் ஏறினார் பரந்தாமன்.

வாகனம் புறப்பட்டதும் வீட்டினுள் நுழைந்தோம். இங்கு நான் சென்று விசிட் பண்ணிய வீடுகள் எல்லாவற்றையும் விட இந்த வீட்டின் உள் அமைப்பு சற்று வித்தியாசமாக இருந்தது.

கீழ் மாடியில் பெரிய வரவேற்பறையும் இறுதியில் ஓடைபோல் சென்று அதில் சமையலறையும் அதனருகே மூலையில் ஓர் சிறிய அறையும் இருக்க மற்றைய அறைகளெல்லாம் மேல் மாடியிலேயே அமைந்திருந்தன.

வரவேற்பறையின் மூலையை ஆக்கிரமித்துக்கொண்டு குறுக்காக ஷோகேஸ் ஒன்று இருந்தது. பள்ளிக் கூடம் போகிற வயதுப் பருவத்துச் சிறுமிகள் இருவர் சிரித்துக்கொண்டிருக்க பின்னால் அவர்கள் தோள்களில் கை வைத்தவாறே பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முந்திய பரமேசும் பரந்தாமனும் வாசலைப் பார்த்தவாறே இருக்கும் பெரிய படமொன்றும் சில விருதுக் கேடயங்களுமாய் ஷோகேசின் மேல்தட்டு நிறைந்தி ருந்தது. தொங்கும் கேட்டின் துணி காற்றில் அசையும் போது ஆளை மிஞ்சிய உயரத்தில் ஒரு குளிர்சாதனப் பெட்டி மேல்தட்டில் ஆப்பிள் பழங்களுடன் சமையலறையிலிருந்து எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

“லண்டனுக்கு வந்ததிலை இருந்து இங்கைதான் இருக்கிறம். வந்த புதுசிலை கடன்பட்டு இந்த வீட்டை வாங்கினம்.

முழுக்காசும் கட்டி முடிச்சு இன்னும் ஒரு வருஷம் கூட ஆகேல்லை” என்னெதிரே இருந்த சோபாவில் வந்தமர்ந்த வாறே பரமேஸ் கூறினாள். விழாவிலன்று பார்த்ததை விட பரமேஸ் இன்று முற்றிலும் வித்தியாசமாக காட்சியளித்தாள்.

நெற்றிப் பொட்டைத் தவிர உடையலங்காரம் எல்லாமே ஐரோப்பியமயப்பட்டிருந்தது.

என்னுடைய மனைவி, பிள்ளைகள் பெயர் மற்றும் விபரங்களை பரமேஸ் ஒன்றுமே விடாது கேட்டறிந்து கொண்டாள்.

என் மனைவி சாந்தி, ரவுணில் கல்லூரியில் படித்த காலங்களில் அறிமுகம் இருந்ததாகவும் தன்னை விட அவள் ஜூனியராக இருந்தாலும் நட்புடன் பழகியது இன்னும் தனக்கு ஞாபகத்தில் இருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“எங்களோடை படிச்ச காஞ்சனா, சாவித்திரி, பாரதி மற்றது உன்ரை பெஸ்ட் பிரண்ட் ரவிச்சந்திரன் எல்லாரும்
எப்பிடி இருக்கினம்?”

“காஞ்சனாவை யெண்டால் ஊரிலை இரண்டு வருசத்துக்கு முந்தி ஆசுப்பத்திரியிலை ஒரு நாள் சந்திச்சுக் கதைச்சன். நேசாக இருக்கிறாள். இரண்டு மகள்மாரையும் மெடிசினுக்கு என்ர பண்ண வைச்சிருக்கிறாள். மற்றவை யளைப் பற்றி அவ்வளவு விபரங்கள் தெரியேல்லை.” என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும்போது மூலையில் இருந்த அறையிலிருந்து அரைத்தூக்கத்தில் இருந்து எழுந்து வந்தது போல மூன்று வயது மதிக்கத்தக்க வெள்ளைக்காரச் சிறுமி ஒருத்தி கையில் ஏதோ விளையாட்டுப் பொம்மையை இழுத்தவாறே வந்து பரமேசின் மடியில் முகம் புதைத்தாள்.

“அன்பே! நீ நித்திரையை விட்டு எழுந்து விட்டாயா?” என ஆங்கிலத்தில் கேட்டவாறே அக்குழந்தையை முத்தமிட்டாள் பரமேஸ்.

“யாரும் அடுத்தவீட்டு குழந்தையாக இருக்கலாம்” என்று நான் நினைத்துக் கொண்டிருந்தபோது இது என்ரை செல்லப் பேத்தி. மூத்தவளின்ரை மகள்” என்றாள் பரமேஸ்.

எனக்கு மூச்சு ஒரு கணம் எட்ட மறுத்தது. சின்ன வயதில் கிணற்றடியில் அம்மா எனக்கு முழுகவார்க்கும் போது இப்படித்தான் சிலசமயங்களில் மூச்சு எட்ட மறுப்பதுண்டு. குஷன் கூடியதில் நான் அமர்ந்திருந்த சோபா என்னையே விழுங்கி விடும்போல் இருந்தது. அதில் இருக்கவே பிடிபடாது திணறிக்கொண்டிருந்தேன்.

“ஏன் உந்த சோபாவிலை இருக்கிறது அன்கொம்பட்ட பிள்ளா இருக்குதா?”

“இல்லை, இல்லை, இப்ப ஒ.கே.” என்றவாறே எழுந்து மீண்டும் ஒரு தடவை அமர்ந்து என்னை நான் சுதாகரித்துக் கொண்ட பின்னர் பரமேஸ் தொடர்ந்தாள்…

மூத்தவள் மறி பண்ணினது லண்டனைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு வெள்ளைக்கார போயைத்தான். இரண்டு பேரும் கேம்பிறிச்சிலை ஒண்டா வேக் பண்ணின இடத்திலை சந்தித்துப் பழகீட்டினம். லிவிங்ருகெதரா இருக்கப்போறதா வீட்டைவிட்டு மகள் வெளிக்கிட்டா. ஒருமாதிரி அட்வைஸ் பண்ணி சிம்பிளா வெடிங்கை முடிச்சு வைச்சம். இப்ப எங்களோடைதான் இருக்கினம். இரண்டு பேரும் காலையிலை வேளையோடையே வேலைக்குப் போய் விடுவினம். இனி அவை வருமட்டிலும் பேத்தி என்னோடைதான்”

முகம் புதைத்திருந்த அந்தக் குழந்தை இப்போ தாவி ஏறி பரமேசின் மடியில் குந்திக்கொண்டது.

“மம்மீ…” நிலவிய கணநேர நிசப்தத்தை குலைத்தவாறே மேல்மாடியிலிருந்து பெண்குரல் ஒன்று ஒலித்தது.

“எல்லாம் தயார் நீ கீழே வரலாம்” சோபாவில் இருந்தவாறே ஆங்கிலத்தில் கத்தினாள் பரமேஸ்.

“அது சின்னவள். கொம்பியூட்டர் பேம் ஒண்டிலை புறோகிறாமரா இருக்கிறா. நல்லவேலை. கை நிறையச் சம்பளம். கொஞ்ச நேரத்திலை றாண்ஸ்போர்ட் வரும் பிக்கப் பண்ணிக்கொண்டு போக”

பரமேஸ் சொல்லிக்கொண்டிருக்கும்போது ‘டக்டக்’ என்று பலகைப்படிகள் எழுப்பிய தாளலயத்துடன் கீழே வந்து சேர்ந்தாள் சின்னவள்.

“கிளாட் ரு மீட் யூ அங்கிள்” என்றாள் என்னை நோக்கியவாறே.

மடந்தைப் பருவத்தில் பரமேஸ் எப்படி இருந்தாளோ அதையே உரிச்சு வைச்சிருந்தாள் சின்னவளும். அன்று பரமேஸ் பாவாடை சட்டை போட்டிருப்பாள். இன்று இவள் ஜீன்ஸ் அணிந்திருக்கிறாள். அதுமட்டும்தான் வித்தியாசம்.

“கிளாட் ரூ மீட் யூ” என்று சின்னவளைப் பார்த்து கூறிவிட்டு “உங்கடை பிள்ளையளுக்கு என்ன பெயர் எண்டு இன்னும் சொல்லேல்லையே…” என்றேன் பரமேசைப் பார்த்தவாறே.

“மூத்தவவுக்கு தமிழினி எண்டும் இவவுக்கு தமிழ்ப்பிரியா எண்டும் வைச்சம்” என்ற பரமேஸ், “மத்தியானத்துக்கு கொண்டு செல்லும் சாப்பாடும் காலைச் சாப்பாடும் தயாராக மேசைமீது இருக்கிறது” என்று தமிழ்ப்பிரியாவிடம் ஆங்கிலத்தில் கூறினாள்.

“ஏன் பரமேஸ் பிள்ளைகளோடு நீங்கள் தமிழில் கதைப்பதில்லையா?” என்று நான் அங்கலாய்த்தேன்.

“தமிழினிக்கு ஓரளவு தமிழ் தெரியும். கதைக் கேலாட்டிலும் விளங்கிப் பதில் சொல்வாள். இவவுக்கு அடிச்சுப் போட்டாலும் தமிழ் வராது”

“ஏன் நீங்கள் சொல்லிக்குடுத்திருக்கலாமே…”

“எவ்வளவோ முயற்சித்தம். பாவம் இவர் எத்தனையோ தனிப்பட்ட வகுப்புகள் எல்லாம் ஒழுங்குபடுத்தியும் குடுத்துப் பார்த்தார். வை ஷுட் வி லேண் ரமில் எண்டு கேட்டுதுகள். அப்பிடியே தொப்பெண்டு விட்டுட்டம்”

வெளியில் வாகன ஹோண் சத்தம் கேட்கவே, “பிரியா உங்கள் வாகனம் வந்து விட்டது” என்று பரமேஸ் உள்நோக்கி குரல் கொடுத்தாள். “கமிங் கமிங்” என்றவாறே உள்ளிருந்து ஓடிவந்த தமிழ்ப்பிரியா எங்களைப் பார்த்து ‘பாய்’ சொல்லிவிட்டு பரமேசின் மடியிலிருந்து அக்குழந்தையையும் முத்தமிட்டு விட்டு வெளியே சென்றுகொண்டிருந்தாள்.

“தமிழ்ப்பிரியாவுக்காவது தமிழ்ப் பொடியனாகப் பார்த்துச் செய்து வையுங்கோ” என்று நான் ஆதங்கப்பட்டபோது பரமேசின் முகம் உடனேயே வதங்கியது. மேலே கதைக்க முடியாது நின்றாள். முதன் முதலாகப் பெருமூச்சு ஒன்று உதிர்த்தவாறே பின்னர் மெல்ல மெல்ல சொல்லத் தொடங்கினாள்…

“பிரியாவுக்கு இரண்டு வருஷத்துக்கு முன்னம் ஒரு யாழ்ப்பாணத்துப் பொடியனாகப் பார்த்துத்தான் புறப்போஸ் பண்ணி செய்து வைச்சம். ஒரு மாதம் கூட ஒண்டா இருந்திருக்க மாட்டினம். டிவோஸ் அளவுக்கு பிரச்சினை முத்தியிட்டுது.”

“அப்பிடி… என்ன…”

“சிலவற்றைக் சொல்லாமலிருக்கிறது தான் சிறப்பு. ஆனால் உனக்கு நான் எதையும் மறைக்க விரும்பேல்லை…எல்லாமே அடிப்படையிலை உள்ள பிரச்சினைதான். அந்தப் பொடியனுக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது.

இங்கத்தைய வாழ்க்கை முறைகள் பழக்கப்படாதது. பிரியாவுக்கு தமிழே தெரியாது. அவள் வளர்ந்த முறை சிலோன் பொடியன்ரை கொள்கைகள் கோட்பாடுகளுக்கு ஒத்து வரேல்லை. நான் எண்டால் அந்தப் பொடியனையும் குறை சொல்லமாட்டன்.

பிரியாவிலும் குற்றஞ் சொல்லமாட்டன். சொல்லப்போனால் தமிழினி ஒரு வெள்ளைக்கு வாழ்க்கப்பட்டதுகூட நல்லதுக்குத் தான் எண்டு நாங்கள் இப்ப நினைக்கிறம்”

எனக்கு நெஞ்சில் ஏதோ வந்து அடைப்பது போல் இருந்தது. ஏதாவது குடித்தால் நல்லதுபோல் தோன்றியது.

“பரமேஸ் குடிக்கக் கொஞ்சம் தண்ணி எடுக்கலாமோ?”

“சொறி மை டியர்… வீடு தேடி வந்த உங்களுக்கு குடிக்கக் கூட ஒண்டும் தராமல் என்ரை பிரச்சினையளைச் சொல்லி போறடிச்சுக் கொண்டு இருக்கிறன். கூலா முதலிலை ஏதாவது குடிக்கத் தரட்டுமா?”

“வேண்டாம் பரமேஸ் முதலிலை குடிக்கக் கொஞ்சம் தண்ணி தாங்கோ”

ஒரு மிடறு தண்ணீர் தொண்டைக்குள் இறங்கிய பின்புதான் மீண்டும் எனக்கு கதைக்கக் கூடிய தெம்பு வந்தது.

“பிரியாவுக்கு இன்னும் கொஞ்ச நாளையிலை வெடிங் எண்டு பரந்தாமன் சொன்னாரே…” அப்பாவித்தனமாய் நான் கேட்டபோது;

“அதைப் பற்றித் தான் அடுத்ததாகச் சொல்ல இருந்தன். இப்ப பிரியாவுக்கு ஒரு போய் பிரண்ட் இருக்கிறார். பொடியன்ரை பூர்விகம் போச்சுக்கல். அருமையான போய். இப்ப பிரியாவோடை தான் வேக் பண்ணுறார். இன்னும் இரண்டொரு மாதங்களிலை பழைய பிரச்சினை எல்லாம் முடிஞ்சு டிவோஸ் கிடைச்சிடும். அதுக்குப் பிறகு சிம்பிளா மறேஜை செய்து வைக்கலாம் எண்டிருக்கிறம்.”

அந்தப் பிஞ்சுக் குழந்தை இப்போ என்னை ஏறிட்டுப் பார்க்க ஆரம்பித்தது.

“கமோன் பேபி… கம் கியர்” என்றவாறே கைகள் இரண்டி னையும் நீட்டினேன். எங்களூர் கோயில் கட்டுத்தேர் போல் மெல்ல மெல்ல நகர்ந்து என்னை நோக்கி வந்தது. அருகில் வந்ததும் என் கண்களை உற்றுப்பார்த்து பூ மலர்ந்தாற் போல் புன்னகை சிந்திற்று. தூக்கி என்னருகே அமர வைத்துக் கொண்டேன்.

“ஓகே இனி நாங்கள் பிறேக் பாஸ்ட் எடுத்துட்டு நான் மெல்ல மெல்ல குக்கிங்கைத் தொடங்குகிறன். உங்களுக் கெண்டு ஸ்பெஷலாக நேற்று சிலோன் றைஸ் வாங்கி வைச்சிருக்கிறம். யாழ்ப்பாணத்து சனங்களின்ரை கடை ஒண்டு இஞ்சை இருக்கு… பருத்தித்துறை வடையிலிருந்து பச்சையரிசி மாப்பக்கெட் வரைக்கும் எல்லாம் எடுக்கலாம்” என்று கூறியவாறே பம்பரமாகச் சூழல ஆரம்பித்தாள் பரமேஸ்.

காலைச்சாப்பாடு முடிந்ததும் தேநீர் நிரம்பிய கப்பைக் கையில் தந்தவாறே “நீங்கள் ரீவியை பார்த்துக் கொண்டு இருங்கோ. இன்னும் கொஞ்ச நேரத்திலை இவரும் வந்திடுவார்.

கதைச்சுக் கொண்டு இருக்கலாம்” என்றவாறே தொலைக் காட்சியை ஒளிரவைத்து விட்டு பரமேஸ் சமையலறைக்குள் சங்கமமானாள்.

தீபம் தொலைக்காட்சியில் நேர்காணல் ஒன்று போய்க் கொண்டிருந்தது. இலங்கையில் இருந்து இங்கு வந்திருக்கும் கட்டடக்கலைஞர் ஒருவர் தனது கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தார். கீத்றோ விமான நிலையத்தில் துளைத்து எடுத்திருப்பார்கள் போலும். கட்டடக் கலைஞர் மிகவும் களைத்துப் போனவர் போல் காட்சியளித்தார்.

இந்திய சனலொன்றில் புகுந்தேன். கொடியது எது, இனியது எது, புதியது எது என தனது சந்தேகங்களுக்கு ஒளவையாரிடம் முருகன் விளக்கங்கேட்டுக் கொண்டிருந்தார்.

இன்னொரு சனலிற்குத் தாவினேன். பட்டிமன்றம் ஒன்று போய்க்கொண்டிருந்தது. இந்த நிலையில் மனம் அதையே நாடிற்று. இரு பக்கத்தினரும் தமது நியாயங்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். தலைமை வகித்தவர் அங்காலும் இங்காலும் பாடிக் கொண்டிருந்தார். இப்போது என்மனதிலும் ஒரு பட்டி மன்றம் களை கட்டிற்று. லண்டனுக்கு புலம் பெயர்வதில் உள்ள சாதகபாதகங்களை மனம் பட்டியலிட்டது.

தீர்ப்புச் சொல்ல வேண்டியது தான் பாக்கி.

நிலத்தில் குவிக்கப்பட்ட விளையாட்டுப் பொம்மைகளுடன் குழந்தை போராடிக் கொண்டிருந்தது. இடையிடையே நிமிர்ந்து பார்த்து என் இருப்பை உறுதிப்படுத்திக்கொண்டிருந்தது.

சனலை மீண்டும் தீபத்திற்கு மாற்றினேன்.

“இலங்கையில் வன்னியில் நடைபெற்ற வான் தாக்கு தலில் இருபதிற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பலி” எனும் தலைப்புச் செய்தியுடன் செய்திகள் ஆரம்பமாயின.

செய்திகேட்டு பரமேசும் ஓரு தடவை வரவேற்பறை வந்து அதனைச் செவிமடுத்தாள்.

“தமிழினைப் பூண்டோடை அழிக்கிறதெண்டுதான் நிக்கிறாங்கள்” என்றவாறே என்பதிலையும் எதிர்பார்க்காமல் உள்நுழைந்து விட்டாள்.

“அங்கு தமிழனைப் பூண்டோடு அழித்தாலும் அவன் புதுப்புதுப் பயிர்களாகத் தளிர்த்து முளைத்துக் கொண்டே யிருப்பான். ஆனால் இங்கு முளைக்கும் பயிர்கள் எல்லாமே தமிழனின் அடையாளங்களைத் தொலைத்து நிற்கின்றனவே…?” என்று நான் நினைத்துக் கொண்டிருந்தபோது வாசல் கதவைத் திறந்தவாறே பரந்தாமன் உள்ளே நுழைந்தார்.

“ஓ! எங்கடை குட்டித்தேவதை உங்களோடையும் ஒட்டீட்டா போலை கிடக்கு” என்று சொல்லியவாறே அருகில் வந்து அக் குழந்தையைத் தூக்கி அதன் வயிற்றில் முத்தமிட்டார். கூச்சம் தாளாது அது கெக்கட்டம் விட்டுச் சிரித்தது!

மனதில் நிகழ்ந்த பட்டி மன்றத்திற்கு தீர்ப்புக்கு ஏதுவாய் என்னுள் சில கேள்விகள் எழுந்தன.

குட்டி தேவதை என்று இந்த அப்பாவி மனிதர்கள் கொண்டாடும் இக்குழந்தை, புலம்பெயர்ந்து இங்கு வந்தவர் களின் எதிர்கால எச்சங்கள் உள்வாங்கப் போகும் மொழி, கலாசார மற்றும் விழுமியங்களின் ஒரு குறியீடல்லவா?

இன்னமும் எங்களூரிலும் அதன் பசுமையான நினைவுகளிலும் ஏங்கும் பரமேஸ் என்னைத் தேடிவந்து சந்தித்தது… தொலைந்து கொண்டிருக்கும் தம் முகவரியினைத் தேடும் ஒரு எத்தனிப்பிலா?

“சமையல் தயார்… இனிச் சாப்பிடலாம்…” வியர்க்க விறுவிறுக்க சமையலறையிலிருந்து வெளிப்பட்ட பரமேஸ், ஆங்கிலத்தில் கூறி இருவரையும் அழைத்தாள்.

விருந்து பரிமாற அவர்கள் உற்சாகமாகச் செயற்பட்டார்கள்.

இருந்த இடத்திலிருந்து எழுந்து வோஷ்றூம் சென்று முகத்தை கழுவிவிட்டு வந்து சாப்பாட்டு மேசைமுன் அமர்கின்றேன்.

பரமேஸ் உணவைப் பரிமாறிக் கொண்டிருந்தாள்.

குழந்தையை தூக்கியவாறே மேல்மாடி சென்றிருக்கும் பரந்தாமனை நான் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். உடன் உணவு அருந்த மட்டுமல்ல… லண்டனுக்குத் திரும்பி வருவதா இல்லையா என்பது பற்றி எனது மனதில் உருவாகியுள்ள உறுதியான முடிவையும் கூற…!

என்னை விழுங்கி விடாது தக்கவைத்துக் கொண்டிருக்கும் குஷன்களேதுமற்ற இந்த சாப்பாட்டு மேசைக் கதிரை இப்போ எனக்கு மிகவும் சௌகரியமாகத் தெரிகிறது.

– அல்வாயூர் கவிஞர் மு.செல்லையா அவர்களின் ஜனன நூற்றாண்டு விழாச் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை.

– ஞானம், ஆகஸ்ட் 2008.

புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் புலோலியூர் இரத்தினவேலோன், ஆறுமுகம் 1958.12.25 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், புலோலியூரில் பிறந்தார். சிறுகதை எழுத்தாளர். இவர் புற்றளை மகாவித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். இவர் யாழ் புற்றளை மகா வித்தியாலயம், யாழ் ஹாட்லிக் கல்லூரி மற்றும் யாழ் சென் ஜோன்ஸ் அக்கடமி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தினகரன் பத்திரிகையில் பிரசுரமான புரளும் அத்தியாயம் எனும் சிறுகதையூடு 1977 இல் இலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர். 1977 ஆம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *