தை




(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
குவிந்த இதழ்கள் அவிழ்வது போலும், விழிப்பின் வருகையினுடனேயே, தன் உள்நினைவும் மலருவதை அவன் உணர்ந்தான். இரவினின்று புறப்படும் விடிவெளிச்சத்தில், இன்னமும் விழிகளைப் பொத்தியிருக்கும் இமைகளின் உள் புறம் வெள்ளை ரோஜாவின் வெண் சிவப்பில் தோய்ந்தது.
தை பிறந்து விட்டது.

விழிப்பு வந்தும் விழிக்க இன்னும் மனமில்லை. இச்சமயம் படுக்கையில் உடல் கிடக்கிற நிலையும், கிடக்கையின் வெத வெதப்பும் அவ்வளவு இதமாயிருந்தன.
கீழே ஒரே சப்தம். வேலைக்காரி வீட்டை மெழுகிய இடங்களைப் பற்றி அம்மா அதட்டல் போட்டுக் கொண்டிருந் தாள். சமையல் கட்டில் காப்பிக் கடை நடந்து கொண்டிருக் கிறது. தம்பிக்கும் தங்கைக்கும் சண்டை.
“அம்மா, பட்டு காப்பியில் தண்ணைக் கலக்கிறாள் பாரேன்-”
“அப்படித் தான்—அம்மாவைக் கேட்டுண்டு தான் பண்ணினேன் போ- அடுப்பங்கரையில் புருஷாளுக் கென் னடா வேலை? காப்பி நன்னாயிருக்கா இல்லையான்னு பார்த் துக்கோ; அவ்வளவு தானே! தினந்தான் தண்ணைக் கொட் டிண்டிருக்கேன். இன்னிக்கு மாத்திரமில்லே, தெரிஞ்சுக்கோ – ”
“வாயாடாதேடி-இந்த வாயை வெச்சிண்டு புக்காத்துக்குப் போனா”.
“சரி சரி; இன்னிக்கு சண்டை போட வேண்டாமே”. அம்மா சண்டையைத் தீர்த்து வைக்கிறாள்- “போருண் டாப்பா, இதுகளோடே அல்லாடறது! கல்யாணீ கல்யாணீ! கல்யாணி எங்கே-வாசல் குட்டிகளோடே சேர்ந்துண்டு ‘கொளுத்தி’ விளையாடறதா? சொக்கப்பானையெல்லாம் நேத்தியோடே போச்சுடி-போய் மாமாவை எழுப்பு-‘
“மா……மா!”
இதோ இன்னும் ஒரு நிமிஷத்தில் கல்யாணி வந்துவிடு வாள், மாடிப் படிகளில் குதித்துக் குதித்து ஏறிக்கொண்டு- மை தீட்டிய விழிகளும், வளை குலுங்கும் கைகளும், வெந்நீரில் குளித்ததால் சிவப்பு குழம்பிய முகமுமாய்,மா-மா-‘ என்று செல்லமாய்க் கத்திக் கொண்டே வந்து மார்மேல் விழுவாள்.
அவள் அப்படி விழும் முன்னமேயே, அவள் விழும் உணர்ச்சியை அவன் நினைவு அவ்வளவு வேகமாய்ப் பரு கிற்று. உடனே, வாய் வைக்காத புண் போல், ‘விண்விண் ணென, உள்ளத்தில் இராப் பகலாய்த் தெறித்துக் கொண் டிருக்கும் வேதனை அதன் வேலையைத் துவக்கி விட்டது. கற்பனையில்,
அவன் இன்னமும் கண்ணால் காணாத அவன் குழந்தை யின் உரு எழுந்தது. அங்கங்கே குழிகள் சுழித்து, கொழ கொழ வெனப் பால் வடியும் ஒரு உடல். தன்னைக் கொண்டு பிறந் திருக்குமா, அல்லது அதன் தாயைக் கொண்டு பிறந்திருக் குமா? தன் போன்றே பூனைக் கண்கள் அதற்கும் இருக்குமா? அவன் தன் கற்பனையை அநுபவிக்கும் வேகத்தில், அவன் மேல் விழுந்தது அவன் குழந்தையே போலிருந்தது. உடல் ஒரு பயங்கரமான இன்பத்தில் புளகித்தது. கண்கள் திறந்தன.
‘மாமா – சங்கராந்தி வந்துடுத்து…ஏந்திரு ஏந்திரு- என் பட்டுப் பாவாடையை நீ பார்க்கல்லையே! ரெண்டு ‘டக்கு’ப் போட்டிருக்கு. நுனியிலே ‘லேஸ்’ வெச்சிருக்கு மாமா-”
புன்னகை புரிந்த வண்ணம், அவளை ஒரு முறை இறுக அணைத்து, கீழே இறக்கி விட்டு எழுந்தான். மூக்கைக் குடைந்து கொண்டு ‘நச்’சென ஒரு தும்மல் கிளம்பியது. உடனேயே, அதையடுத்து இன்னொன்று. சீ, இதென்ன மூணு மாதமாய்த் தீராத ஜலதோஷமாயிருக்கிறது, தெரியவில்லை!”
மயிரைக் கோதிக் கொண்டு கீழே இறங்கினான்.
அம்மாவுடன் யாரோ ஒரு மாமி பேசிக் கொண்டிருந்தாள்.
“ஒரு வரன் இருக்கு. போத்தனூரில் மர வியாபாரம் பண்ணிண்டு இருக்கான் பையன். ஒரு இக்குப் பிடுங்கல் கிடையாது. தனிக்காட்டு ராஜா. பொண்ணைக் கையில் ஏந்தினாப் போலே வெச்சுப்பான்-
அம்மா அதற்குள் குறுக்கே வெட்டினாள்.
“அது மாதிரி சம்பந்த மெல்லாம் நம்பாத்துக்கு வேண் டாம் மாமி- என் பிள்ளையின் வேட்டகத்துக்குப் போய் வேணுமானால் அந்த மாதிரி சம்பந்தங்களைப் பிரஸ்தாபியுங்கள். அவா ரொம்ப சந்தோஷப் படுவா. என் பெண் நன்னா பெரிய குடும்பத்திலே வாழ்க்கைப் படம்னு தான் இருக்கு. நாலு ஓர்ப்படிகள், அஞ்சு நாத்தனார், அஞ்சு மச்சினன்கள்- மாமனார்-மாமியார் எல்லாரும் இருக்கணும். கொஞ்சம் அத்து மீறினால் வாயிலேயே போடற ஆம்படையானா இருக் கணும். நீங்களும் நானும் வாழ்க்கைப்பட்ட தெல்லாம் உங்களுக்கு இப்போ மறந்து போச்சா? ‘தனி தனி’ன்னு தனியைத் தேடி, தான் குட்டிச் சுவராய்ப் போறதோடில் லாமெ புகுந்த இடத்தையும், பொறந்த இடத்தையும் குட்டிச் சுவரா அடிச்சிண்டிருந்தோமா? சண்டையோ சமாதானமோ, சந்தோஷமோ துக்கமோ, நல்லதோ கெடுதலோ நம் குடும் பமும் இப்போ விளங்கிண்டு தானே யிருக்கு? நான் வாழ்ந் தாப்போலேதான் என் பெண்ணையும் வளர்த்திருக்கேன். அதுக்குத் தகுந்தாப் போல் அவள் வாழ்க்கைப் பட்டால் போறும்”
“அப்படின்னா இன்னொரு ஜாதகமிருக்கு–”
பேசிக் கொண்டே அம்மாவும் அந்த மாமியும் நகர்ந்தார்கள்.
அம்மா இல்லாவிடில் அவன் கதி என்னவோ அம்மாதிரி தான், அவனில்லாவிடில் அம்மாவுக்கும். ஏதோ வாசலில் போகும் சனியை விலைக்கு வாங்கிக் கட்டிக் கொண்டா போல் அவனுக்குக் கலியாணம் நடந்ததிலே யிருந்து, குடும்பமே இரண்டு வருஷ காலமாய் உளைசல் பட்டுக் கொண்டிருந்தது. அதனால் இருவருக்கும் சில சச்சரவுகள் ஏற்பட்டபோதிலும், அவன் குடும்பத்துக்கு நடுமரமாய் இருந் தால், அவள் அதன் ஆணிவேர்; அவன் ஆணி வேரானால் அதை வளர்க்கும் மண் அவள்.
இப்பொழுது இம்மாதிரி அவன் கொல்லைப்புறக் குறட்டில் குந்தி உட்கார்ந்து கொண்டு பல் விளக்குகையில், அவன் மனைவி இச்சமயம் என்ன பண்ணிக் கொண்டிருப்பாள் எனும் சிற்றாவலில் மனம் சிந்தித்து நின்றது. என்ன பண்ணிக் கொண்டிருந்தால் என்ன? அவனுக்கென்ன ஆயிற்று!… இதோ அவன் தாய் தள்ளாத வயதில், அவள் பிள்ளையும் மருமகளும் பெட்டியில் வைத்துக் காப்பாற்றுவது போல் தாங்க வேண்டிய நாளில், இன்னும், இவ் வீட்டிற்கு அவன் தகப்பனாருக்கு வாழ்க்கைப் பட்ட நாளில் வந்து புகுந்து ஓடி யாடி வேலை செய்த மருமகளாகவே தான் விளங்குகிறாள். ஓடத்தான் முடியவில்லை; ஆடத்தான் முடியவில்லை. ஆனால், வேலையில்லாமல் போய் விடுகிறதோ. வயதாகி விட்டாலும், அஞ்சு பெற்றுவிட்டாலும், அகமுடையான் போய் விட்டாலும்?…
நிம்மதியாய்த் தூங்கிக் கொண்டிருப்பான். சிறு குழந்தை யைப் போல் சற்று மலர்ந்த உதடுகளுடன். அவளே தான் அவனிடம் சொல்லியிருக்கிறாளே! நான் எங்காத்துக்குச் செல்லப் பெண்; ஏழு மணி வரையில் தூங்குவேன். என் காப்பி எப்பவும் ‘சுட வெச்ச காப்பி’தான்.
அவள் அம்மாதிரி தூங்குவதைப் பற்றியோ, தூங்கியே வளர்ந்ததைப் பற்றியோ ஒரு சிறு சிலச்சையும் கூடப்பட்டது கிடையாது. வந்த இடத்துக்குத் தகுந்தாற் போல் பழக்க வழக்கங்களைத் திருத்திக் கொள்ள வேண்டுமென்று முயன்றதும் கிடையாது. மொத்தத்தில் அவள் எண்ணங்கள் ஓடும் தினுசை எண்ணக் கூட மனம் வெட்கியது. ஆயினும் –
[அவளைப் பார்க்கையில், இவ்வளவு சாது முகம் இவ் வளவு சண்டித்தனத்தை மறைக்க முடியுமா என்று இன்னும் வியப்பாய்த்தான் இருக்கிறது, அனுபவ ரீதியாய்ச் சுட்டுத் தெரிந்து கொண்டும்-)
அம்மாவும் அம்மாமியும் பேசிக் கொண்டு வெளியே வருகிறார்கள்.
வந்தவள் சொல்கிறாள்: ” எல்லாம் பாருங்கோ மாமி, தை பிறந்துடுத்து; வழியும் பிறந்துடும். எல்லாத்துக்குமாத் தான் சேர்த்துச் சொல்லறேன்-”
அவளை வாசல் வரை கொண்டு போய் விட்டு விட்டு அம்மா திரும்பி வருகிறாள்.
“என்னடா அம்பி, மூஞ்சி ஒரு தினுசா வாங்கிக் கிடக்கு? உடம்பு சரியா யில்லையா?” நெற்றிப் பொட்டில் கை வைக் கிறாள். ‘ஏண்டா இந்த மாதிரி அசட்டு ஜுரத்தை மூணு மாஸ்மா வெச்சிண்டு வைத்தியனிடமும் காண்பிக்காமே… நாளும் கிழமையுமா…ஒரு காரியம் பண்றையா? சுந்தரா மாமியாத்துக்கு நேற்றுப் போயிருந்தேன்; ஒரு பிள்ளை ஜாதகம் தரேன் என்றாள். வாங்கிண்டு வா-
சுந்தரா மாமி வீட்டுக்குக் கடற்கரை யோரமாய்ப் போகையில், மேலடிக்கும் இள வெய்யில், அவனை உறுத்தும் சிறு குளிருக்கு இதமாயிருந்தது. அவனுக்கே கடற்கரை யோரமாய் நடக்கப் பிடிக்கும். அதுவும் காலை வேளையில் வண்டி-காடிச் சத்தமும், ஆள் நடமாட்டமும் குறைந்து, இடமே ஒரு பூஜ்யத் தன்மையை அடைந்திருந்தது. அலை களின் சலசலப்புக் கப்பால் ஜலத்தின் அசைவற்ற நிலையில் உயிரும் அழகும் பொலிந்தன. மனம் ஏன் இத்தன்மையை அடைய மாட்டேன் என்கிறது? சூரியக்கிரண ஒளி சமுத்திர வெளியில் பட்டு, லட்சம் சிதர்களாய் ஜல மட்டத்தின் மேல் சிதறிக் கிடந்தன, தூரத்தில் மணல் திட்டுக்களிடையில் ஒரு மனித உரு ஊர்ந்தது. ஆயிரம் கண்டு பிடித்தும் மனிதன் விசுவயூபத்தில் எவ்வளவு அசக்தனான பிராணி!
எதிரே ஒரு வலைச்சி இடுப்பில் குழந்தையும் தலைமேல் சோற்றுப் பானையுமாய் வந்தாள். அவன் குழந்தையுடன் பேசிக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் வருகிறாள். (அவன் கவனம் குழந்தைமேல்தான் சென்றது.)
‘பூவ்வா- பூவ்வா-” என்று கீழுதட்டைப் பிதுக்கிப் பிதுக்கி, எச்சில் கொப்பளிக்கையில் அது ஒரு விளையாட்டு! மூக்கு பாட்டுக்கு ஒரு பக்கம் ஒழுகிக் கொண்டே யிருந்தது. ஆனால் அடேயப்பா, என்ன வளர்த்தி! கல் பந்து போல் அவ்வளவு பெரியதாய், கனமாய், அழுத்தமாய், உருட்டி விட்டாற் போல்!
தான் குழந்தையை வியக்கும் அதிசயத்தில், அவள் வழியை மறித்துக் கொண்டு அவன் நிற்பது கூடத் தெரிய வில்லை. அவள் முகத்தில் புன் சிரிப்பு தோன்றிற்று. தன் பிள்ளையின் கன்னத்தை நிமிண்டினாள்.
“அய்யரைக் கேளுடி அரையணா – இடியாப்பம் வாங்கித் துண்ண அது வஞ்சனையில்லாமல் உள்ளங்கையை அகல விரித்து நீட்டியது. அதன் கையே ஒரு சிறு அப்பம் போலிருந்தது. அவனுக்கு ஆசைத் தாபம் பீறிட்டுக்கொண்டு வந்தது.
“இப்படிக் கொடு -”
அவளுக்குச் சந்தோஷமும் பெருமையும் தாங்க முடிய வில்லை. அவளிடுப்பிலிருந்து அவன் குழந்தையை வாங்கிக் கொள்வதற்காக அவன் பக்கமாய் அவள் சாய்கையில், அவள் மேலிலிருந்து வீசும் மீனின் நிணம் குடலைக் குமட்டிற்று. நினைவுகூட மங்கி, பின்னோக்கி நழுவியது.
-இன்று மாதிரியிருக்கிறது; அன்றிரவு அவள் ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு அவனிடமிருந்து சற்று எட்ட நின்ற வண்ணம் தான் ஸ்நானம் பண்ணவில்லை யென்று..
அச் சமயம் அவனைக் குழந்தைப் பாசம் ஒன்றும் இப் போது போல், குரல்வளையைப் பிடித்து அமுக்க வில்லை. ஆயினும் எண்ணப் பிடிபடாத ஒரு வெற்றி யுணர்ச்சி உள் ளத்தில் கிளர்ந்தது. இப்படித்தான் எல்லோருக்கும் இருக்குமோ? ஒற்றுமையுள்ள தம்பதிகளாயிருந்தால், இவ்விஷ யத்தில் வெற்றி, தோல்வியைப் பற்றிச் சிந்திக்க ஒன்று மில்லை.
ஆயினும் அவன் உணர்ந்த பெருமிதம் அவனையும் மீறி முகத்தில் தெரிந்து விட்டதோ, என்னவோ?
“என்ன சிரிக்கறேள்?”
அவன் முறுவல் சின்னமும் அகல முகத்தில் படர்ந்தது. சாவகாசமாய் எழுந்து நடந்து அவளிடம் சென்று கழுத்துக் குப் பின்னால் கை கொடுத்து சாட்டையாய்த் தொங்கும் பின்னலைப் பிடித்து இழுத்து முகத்தை நிமிர்த்தினான்.
“ஏன், அழணுமா?”
அவனுடைய செல்லப் பிடியை உதறினாள். அவன் முகம் கடுகடுத்தது.
“எனக்கு ஒண்ணும் பிடிக்கல்லே…”
“என்ன பிடிக்கவில்லை? நான் தொடுவதா?”
“எல்லாந்தான் ஒண்ணும் பிடிக்கல்லே.”
“கர்ப்பிணியோ துர்க்குணியோ என்று இப்பவே”
“ஆமாம், என்ன குழந்தை வேண்டியிருக்கு? எனக்கு நினைக்கவே பயமாயிருக்கு, இந்த மாசங்களெல்லாம் எப்படித் தள்ளப் போறேன்னு; நாலு பேர் சிரிக்க..’
அவள் எண்ணங்கள் ஓடும் விதமே அவனுக்குப் பிடிக்க வில்லை. அவைகளின் அர்த்தமும் நன்றாயில்லை. இருந்தும் அவள் வாயினின்று வரும் பதில்களின் பொறுமை அவனுக்கே வியப்பாயிருந்தது.
“அப்படியானால், நீ உலகத்தையே குற்றம் சொல்ல வேண்டியது தான். உலகத்தில் எல்லாமே இப்படித்தான் பிறக்கிறது. இயற்கையே இது தான்! சேச்சே…இந்த மாதிரி எண்ணங்களை விட்டு விடு ராஜம்-”
சின்னக் குழந்தை மாதிரி உதட்டைப் பிதுக்கினாள்.
“ஆமாம் இன்னும், நாலஞ்சு மாஸம் போகட்டும்; ரொம்ப நன்னா யிருக்கும்…”
“ஏன் நன்னா யிருக்காது? உனக்கும் எனக்கும் என்று முடிச்சோ விழுந்தாச்சு, இனிமேல் நீ யாருக்கு நன்னா யிருக்கணும்? எனக்கு எல்லாம் நீ நன்னா யிருப்பாய்…”
‘ஆமாம், நமக்குள் இருக்கிற ஓற்றுமைக்குக் குழந்தை ஒண்ணுதான் பாக்கி……’
கோபத்தால் அவனுக்கு விழி நரம்புகள் குறு குறுத்தன.
“சரி; அப்படித்தான் வைத்துக் கொள்ளேன்…
“எப்படி?”
“நம்மிருவருக்கும் ஒற்றுமையில்லையென்று. இப்பொழுது இது உன் கொட்டத்தை அடக்குமல்லவா? இந்தப் பந்தத் துக்கு நீ மசிந்து தானே ஆக வேண்டும்?”
“ஓஹோ! அப்படியா?
அப்பொழுது அவள் உதட்டை முறுக்கிக் கொண்டு ஒலித்த “ஓஹோ’வில் எவ்வளவு அர்த்தம் இருந்தது என்று அப்பொழுது புரியவில்லை; இப்பொழுது புரிந்தது-
“என்ன சாமி, கல்லா சமைஞ்சுட்டே! கொளந்தையைக் கொடு… என்னய்யரே உனக்கு இப்படித் தூக்கி வாரிப் போடுது?
“ஒண்ணுமில்லே- இந்தா…குழந்தைக்கு இடியாப்பம் வாங்கிக் கொடு.’
அவள் போன திக்கைப் பார்த்துக் கொண்டு வெகுநேரம் நின்றான், அவன் இன்னமும், பிறந்தது முதல் கண்ணால் காணாத அவன். குழந்தையைக் காணும் வரை, வாசலில் காணும் எந்தக் குழந்தையும் அவன் குழந்தையாகவே இருக் கலாம். அதை நினைக்கையில், அவன் இதயம் குழம்பாய் உருகுவது போல் சுட்டது.
“வா-வா அம்பி! இந்தப் பக்கமே நீ இப்போ திரும்பிப் பார்க்கிறதேயில்லை…. இதோ பாருங்கோ, யார் வந்திருக்கான்னு…”
சுந்தரா மாமியின் அகத்துக்காரர் சமையலறையிலிருந்து ஒரு கையில் வெண்கலப் பானையையும், இன்னொரு கையில் கடுகு டப்பாவையும் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார். அவனைப் பார்த்துச் சிரித்தார். அவனைப் பிடிக்காதவர்களே யில்லை.
“வா அப்பா, உட்கார் என்ன ரொம்ப இளைத்துப் போயிருக்கிறாய்? ஒரு சொம்பு கொட்டிக் கொண்டு வந்து விடுகிறேன். இந்தா சுந்தரா, நீ கேட்ட சாமான்…’
“இதென்ன… கடுகு டப்பாவுக்கு இப்போ என்ன அவசரம்? மஞ்சளும் கயிறும்னா கேட்டான். சாமியலமாரி யில் வெச்சுட்டுப் போயிருக்கிறதாக சாஸ்திரிகள் சொல் லிட்டுப் போனார். நீங்கள் உங்கள் காரியத்தைப் பாருங்கோ. அம்பியை எடுத்துக் கொடுக்கச் சொல்றேன்.”
அவன் பசு மஞ்சள் கொத்தையும் கயிற்றையும் அவளிடம் கொண்டு வந்து வைத்தான்.
“என்ன மாமி, உங்கள் கால் எப்படி இருக்கிறது?”
மாமி கயிற்றின் ஒரு நுனியை அவனிடம் கொடுத்து விட்டு, இன்னொரு நுனியால் இழுத்துப் பிடித்துக் கொண்டு பசு மஞ்சளைக் கொத்தினின்று பிடுங்கி, கயிற்றில் சாயம் ஏற இன்னொரு கையால் தேய்க்க ஆரம்பித்தாள்.
“என் கால்தானே? அப்படியேதான் இருக்கு, மூணு வருஷமாய் ஆறாத புண் இப்போ திடீர்னு ஆறிடுமோ? இல்லாட்டா எப்போவாவது தான் ஆறப் போறதா?”
“ஏன் மாமி, அப்படிச் சொல்லுகிறீர்கள்?”
மாமி புன்னகை புரிந்தாள். நம்பிக்கை அறுந்து போன அவள் வாழ்வின் சோகம் அத்தனையும் அதில் தேங்கியிருந் தது.
“ஏன் அம்பி-நீயும் எல்லாரையும் போல் வேஷம் போடறே? புண்ணின் புரையோ முழங்காலுக்கு மேலே ஏறிப் போயாச்சு, எனக்கே தெரியறது. அதனால் நான் இனிமேல் என் கவலையைப் படறதை விட்டாச்சு, இதுதான் நான் இந்த சங்கராந்திக்குப் பண்ணிண்ட தீர்மானம். இனிமேல் நான் அழப் போறதில்லை; என் கவலையைப் படப் போறதில்லை; சந்தோஷமாயிருக்கப் போறேன்,என்னா, அடுத்த சங்கராந்தியை யார் கண்டா?”
“மாமி…”
அவன் குறுக்கு வெட்டாமற்படிக்கு மாமி கையமர்த்தினாள்.
“அம்பி, உன் வீட்டு மனுஷாளும் நாங்களும் ஒரே ளீட்டிலே ஒரு பத்து வருஷம் சேர்ந்தாப் போலே குடியிருந்து ஒரே குடும்பமா பழகி விட்டோம். எனக்குக் கூடப்பிறந்தவா இல்லை. உன்னை என் தம்பின்னு வெச்சிண்டு உன்னண்டை விட்டுச் சொல்றேன்; நான் இனிமேல் இருந்து கொட்டிக் கழிக்கப் போறது ஒண்ணுமில்லே. ஏதோ பூர்வ புண்ணியம் கொஞ்சம் கணக்கில் இருந்ததாலே, நல்ல இடத்திலே வாழ்க்கைப் பட்டேன்; நல்லாம்படையானும் நல்ல மாமி யாருமாக் கிடைச்சா கடுகு தாளிச்சுக் கொட்டறத்திலேருந்து கல்பானை தேய்க்கற வரைக்கும் இங்கே வந்து தான் கத்துண் டேன். எவ்வளவோ பொறுமையோடு தான் எனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தா. ஆனால் நான் புகுந்த வீட்டிலே ஒருத்தருக்கும் ஒரு சுகம் கொடுத்ததில்லை. அறுபது நாழியும் வியாதியும் வெக்கையுமாகவே என்னைப் பிடுங்கித் தின்னுண்டே இருந்திருக்கு. ஆஸ்பத்திரிக்கும் வைத்தியனுக் கும் அள்ளி அள்ளிக் கொடுத்தே இந்தக் குடும்பத்தைக் குட்டிச் சுவராக்கி விட்டேன். எனக்கு உடம்பு சரியா இருந் திருந்தால் மாமி ஆயுசு இன்னும் அஞ்சு வருஷமாவது நீடிச் சிருக்கும். விளையாட்டா இந்தக் காலிலே சிராம்பு குத்தி, நான் படுத்ததிலிருந்து எனக்குச் சிசுருஷ்ை பண்ணிப் பண்ணி அவள் உயிரையும் குடிச்சேன். இனிமேல் நான் இன்னமும் நாறாமல் முன்னால் போகணுமே என்கிற ஒரு கவலைதான் எனக்கு.
“‘என்னால் அவருக்கு என்ன சுகம்? ஒரு நாளைக்கு ஒரு படுக்கை தட்டிப் போட்டேன், ஒரு வேஷ்டியைக் கசக்கிப் பிழிஞ்சேன் என்று உண்டா? கேவலம் நான்-நான் பண்ணிப் போட வேண்டிய சமையலைக் கூட அவர் எனக்குப் பண்ணிப் போட வேண்டியிருக்-கு-ஊ-ஊ…”
மாமி முகத்தைக் கைகளில் புதைத்துக் கொண்டு விக்கி னாள். திடீரென்று ஏதோ நெருப்பில் சாய்ந்து, தீயும் வாசனை அங்குப் பரவியது. அடுக்குள்ளில் பால் தான் பொங்கிற்றோ, அல்லது இங்கு மாமி வயிறுதான் பொங்கும் நாற்றமோ?
“ஒரு ஆளைப் போட்டுக் கொள்ளவோ எங்களுக்குக் கட்டல்லை. ஒரு நாளைப் பார்த்தால் போல் இவர் இன்னும் எவ்வளவு தவிப்பார்? என்னை ஒரு நாளேனும் வாயைத் திறந்து திட்ட மாட்டாரா என்று ஏங்கறேன். ஆனால் எனக்குத்தான் ஒசந்த பதவி கிட்டியிருக்கே, என்னை எப்படித் திட்டுவார்? எல்லோரும் கீழேயிருந்தால் நான் கட்டில்லேயிருக்கேன்; எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டால், நான் படுத்துண்டு சாப்பிடறேன்; எல்லாரும் எல்லாருக்கும் உபகாரமாயிருந்தால், எல்லாரும் எனக்கு உபயோக மாயிருக்கணும்! எப்படியிருக்கு அம்பி, இது? வேடிக்கையா யில்லே”
மாமி ‘கல கல’ வென்று சிரித்தாள். அவன் வாய் திறக்கவில்லை.
அவள் கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும்? ஆனால் அவள் பதிலும் எதிர்பார்க்கவில்லை. வாய் விட்டு ஓடும் அவள் சிந்தனைக்கு அவன் இப்போதைக்கு வாய் திறவாச் சாட்சியாயிருந்தான்; அவ்வளவுதான்.
“நானே ஒரு நாசக் கிரஹம் என்றுதான் நினைக்கிறேன். என்னை ஒத்தரும் பாக்க வரக்கூடாது, கேட்க வரக்கூடாது. வந்தால் என் பாவம் அவர்களையும் ஒட்டிக் கொள்ளும். உன்னையே பார்; கலியாணமானவுடன் மஞ்ச நீர்க்கோலத் துடன் பிள்ளையும் பெண்ணும் வந்தீர்கள்; வெற்றிலையும் தேங்காயும் என் கையில் கொடுத்திட்டு நமஸ்காரம் பண்ணிட்டு நீ நிமிர்ந்த போது, உன் முகம் ஜ்வலிக்கிற ஜ்வலிப்பைப் பார்த்துவிட்டு எனக்குத்தொண்டை அடைச்சுது, அருகாமையிலேயே உன் ஆம்படையாளையும் பார்த்ததும் முதன் முதலாய் என் மனசில் என்ன தோணித்துத் தெரியுமா? ‘அட, இவனைப் பெற இவள் போன ஜன்மத்தில் தெய்வத்துக்குச் கனகாபிஷேகமாய்த் தான் பண்ணியிருக் கணும்’னு நினைச்சேன். எங்களுக்குள்ளே ஒரு வசனம் உண்டு, ‘கண்ணும் குணமும் நிறைஞ்ச ஆம்படையானைப் பெற, போன ஜன்மத்தில் பகவானை எத்தனையோ விதமான புஷ்பங்களால் அர்ச்சித்திருக்கணும்’னு,
ஆனால் விஷயங்கள் நடந்திருக்கிற தினுசைப் பார்த்தால் நீ எவ்வளவு பாபம் பண்ணியிருக்கே என்கிறதுதான் விளங்கறது! உன் முகம் சிவக்கிறதில்லையா.
உன் அகமுடையாளைப் பத்தி மூணாம் மனுஷாள் சொல்ல வாச்சே என்னு?
எனக்குந்தான் சிவக்கிறது இந்த மாதிரி ஒண்ணுரெண்டு கோடாலிகள் முளைச்சு, எங்கள் வர்க்கத்துக்கே வாங்கி வெக்கற கெட்ட பேரை நினைச்சா. உன் குழந்தை சொர்ண விக்ரஹம் மாதிரியிருக்காமே! கொழந்தைக்குச் சொந்தக்கார னிடம் நாய் மாதிரி வந்து விழாமல், இடுப்பில் தூக்கி வெச் சிண்டு ஊரெல்லாம் காண்பிச்சு,தடிச்சியாய்ச் சுத்தி வந்தால் இவளை எல்லாரும் இந்த மட்டுமாவது இருக்கையேன் கௌரவப் படுத்துவான்னு நெனைச்சுண்டு இருக்காளா? இந்த அசடை என்னன்னு சொல்றது?”
அவன் மார்புள் வாளைப் போட்டு அறுத்தது.
மாமா கதவைத் திறந்து கொண்டு ஸ்நான அறையி லிருந்து வெளி வந்தார். ஜலம் ஸ்படிகத்துளிகளாய் அவர் மார் மேலும் தோள்களிலும் நின்றது.
“சுந்தரா, என் கைக் கடிகாரத்தைக் காணோமே!-‘
“நான் எழுந்து தேடியெடுத்துக் கொடுக்க முடியுமா? சமையலுள்ளில் எங்கேயாவது வெச்சிருப்பேன். நேத்திக்கு சாதப் பதத்தை நிமிஷம் பாத்துக் கஞ்சி வடிச்சேளே!”
“ஆமாம் ஆமாம்”
விசனம் நிறைந்த கண்களுடன் மாமி, அவர் சமைய லறையுள் போன வழியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஓரொரு நாளைக்கு நெனைச்சுக்கறேன், இப்படியே இவர் என் கையை எதிர்பார்க்காமே பண்ணித் தின்னுண்டு இருந்தால், ஒரு நாளைக்கு நானாப் பண்ணிப் போடறதையும் தான் சாப்பிடட்டுமே! சாமானையெல்லாம் கொண்டு வந்து என்னைச் சுத்தி வெக்கச் சொல்றேன். அவருக்கு ஒரு வேலைக்கு இரு வேலைதான்; ஆனால் என் ஆத்திரம்எனக்குத் தணிய மாட்டேன் என்கிறது. பண்ணியும் போடறேன். உட்கார்ந்த வண்ணம் ஏத்தியிறக்கி சுத்துக் காரியம் அவரிடம் வாங்கிண்டு. அவரும் நன்னாயிருக்கு நன்னர் யிருக்குன்னு சிரிச்சுண்டே சாப்பிட்டுட்டுப் போயிடறார். ஒரு தடவை அப்படி அவர் போனப்பறம் குழம்பை வாயில் வெச்சேன்; உப்புப் போட மறந்தே போயிட்டேன்! வாயிலே வைக்க முடியல்லே… “
மாமா கையில் கடியாரத்தைக் கட்டிய வண்ணம், வாசற் படியில் தடுக்கிக் கொண்டே வந்தார்.
”அகப்பட்டதா?”
அவர் அவளைப் பார்க்கையிலும், அவள் அவரைப் பார்க்கையிலும் உலக தியில் அவர்கள் வாழ்க்கையில் ஏமாந்தவர்கள் ஆயினும், அவர் வாழ்க்கை வீணாகவில்லை யென்று நன்று தெரிந்தது. அவ்விரு நோக்குகளிலும் மிளிரும் குளிர்ந்த அனல் பிழம்பு அவர்களை ஓரே நோக்கின் இரு நுனிகளாய்த்தான் ஆக்கியது. அவர்கள் வாழ்க்கை வீணாக வில்லை. அவர்கள் மேல் ஒரு பெரும் அசூயை அவனுள் மூண்டது. அந்த நிமிஷமே அவர்களைக் கொன்று விடலாமா என்று கூடத் தோன்றும் கோரமான அசூயை!
ஓசைப்படாமல், அவ்விடம் விட்டு அவன் அகன்றான்.
‘இனி அம்மாதிரி இன்பம் எப்போ’ எனும் ஏக்கம் கொடுக்கரிவாள் போல் வனத்தில் மாட்டியிழுக்கையில், உள்ளத்தில் உதிரம் கொட்டியது. ‘ இப்படிச் செய்தாளே பாபி; அன்பை அறியாத பாபி!’ என்று அவள் மேல் எழுந்த சீற்றத்தில், மனப் போரில் அவளைத் திரும்பத் திரும்பக் கொல்லுகையில், அப்பொழுது கொட்டுவதும் அவன் உள்ளத்தின் உதிரந்தான்! அம்மாதிரி எத்தனை ஆயிரம் ராஜம், எத்தனை ஆயிரம் அம்பி தலை வேறு உடல் வேறாய், மன ரணகளத்தில் சிதறுண்டு கிடந்தார்கள்!
சாப்பிட்டதும் மாடிக்கு வந்து அறைக் கதவைத் தாளிட்டுக் கொண்டு, அவள் பிறந்தகம் போன பின்னர், எனக்கு எழுதிய கடிதங்களை யெடுத்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தான். இதுவரை எத்தனையோ தடவை படித்திருப்பான். ஆயினும் அன்று
சொல்லிக் கொடுத்தோ, சுயமாகவோ ஏதோ கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை எனும் தினுசில் அவள் எழுதி யிருக்கும் அக்கடிதங்களில், அவள் மனத்தை அவன் அறிய முயல்கையில், அவள் அகந்தையின் உச்சமா, அல்லது ‘ஆஸ்பத்திரிக்கேசா’ என்று அவனுக்கு இன்னமும் விளங்க வில்லை.
சிற்சில சொற்களும் வாக்கியங்களும் நெருப்பில் பொறித் தது போன்று கடிதத்தில் துள்ளித் துள்ளிக் குதித்தன.
“நீங்கள் தான் குழந்தை குழந்தையென்று அடித்துக் கொண்டீர்களே யொழிய, நான் இதையொன்றும் விரும்ப வில்லை. இந்தக் குழந்தை பிறந்து இனி நானும் பிழைத் திருந்தால் பார்த்துக் கொள்ளலாம். இருந்தாலும் எனக்கு இதுவே சாக்காயிற்று-‘
மஇக்கடிதம் கிட்டியதும் அதன் அர்த்தமே விளங்கவில்லை. அவசர அவசரமாய் அவள் தந்தைக்கு அவளைத தன்னிடம் கொண்டு வந்து விட்டு விடும்படி எழுதினான். அதற்கு அவளிடமிருந்து பதில்:
“இப்படியெல்லாம் அழைத்தால் நான் வந்து விடுவேனா? வாசலில் வண்டியை நிறுத்திக் கொண்டு, கையைப் பிடித்து இழுத்தாலும் வரமாட்டேன்… எங்கள் தெருவில் இருக்கும் சதிபதிகள் நீங்கள் என்னிடம் இருக்கிற மாதிரி இல்லை. கையைக் கோத்துக் கொண்டு, மாலை வேளையில் அவர்கள் உலாவப் போவதைப் பார்க்கையில் என் வயிறு எரிகிறது. ஓரு நாளைக்கு நாமிருவரும் தனியாய் ஒரு சினிமா வுக்குப் போனதுண்டா? இல்லை, எனக்கென்று நீங்கள் ஒரு சோப்பு, ஒரு ரிப்பன் வாங்கிக் கொடுத்ததுண்டா? ‘எக்ஸி பிஷன்’ என்று ஊரே திரண்டது! நீங்களோ, உங்கள் மருமாளுக்கு ஏதோ மஞ்சள் காமாலை யென்று, சோறும் தண்ணீரும் மறந்து அவள் படுக்கையண்டையே சுற்றிக் கொண்டிருந்தீர்கள். கட்டிய மனைவியைப் பற்றிக் கடுகள் வேனும் சிந்தனையிருந்ததா? எனக்கும் குழந்தைகள் என்றால் இஷ்டம்தான்; இருந்தாலும், உலகத்திவில்லாத மருமாளா? குழந்தையென்றால் உடம்புக்கு வருவதில்லையா?…
நான் என் வீட்டில் ரொம்பவும் செல்லமாய் வளர்ந்து விட்டேன். எனக்குக் கஷ்டம் என்று ஒன்றும் தெரியாது. எங்கள் வீட்டில் ரேடியோ உண்டு; எலெக்ட்ரிக் விளக்கு உண்டு; நாங்கள் மாஸம் நாலு தடவை சினிமாவுக்குப் போவோம். உங்கள் வீட்டிலோ, ‘ஏன் காரியங்கள் சுத்தமா இல்லை? ஏன் குங்குமமிட்டுக் கொள்ளவில்லை? ஏன் மஞ்சள் தேய்த்துக் கொள்ளவில்லை? ஏன் வாசலில் நிற்கிறாய்? ஏன் பகலில் தூங்குகிறாய்? என்றெல்லாம் என்னைக் கேட்கிறார்கள்.
முதன் முதலில், மணமாகி, சத்திரத்திலிருந்து நாம் உங்கள் வீட்டுள் நுழைந்து உங்கள் அம்மாவுக்கு நமஸ்காரம் பண்ணினபோது, உங்கள் தாய் என்னைப் பார்த்து, ”அம்மா. நீதான் வீட்டுக்கு மூத்த நாட்டுப் பெண். இந்த வீட்டையும், நான் பெற்று முப்பது வருஷமாய் வளர்த்த பிள்ளையையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன்” என் சொன்னபோதும், அப்போது கனிவுடன் என்னை நீங்கள் பார்த்த பொழுதும் எனக்கு எவ்வளவு பெருமையா இருந்தது தெரியுமா? ஆனால் மூத்த நாட்டுப் பெண் என்றால் உங்கள் அர்த்தம் என்ன என்று இப்பொழுதுதான் தெரிந்து கொண் டேன். நான் ஏமாற்றப்பட்டேன். நான் உங்களைக் கட்டிக் கொண்டேனேயொழிய, உங்கள் வீட்டாரைக் கட்டிக் கொள்ளவில்லை. என் தாய், என் குடும்பம், என் கடமை என் பொறுப்பு என்றெல்லாம் சொல்லிக் கொண்டும் பண்ணிக் கொண்டும் நீங்கள் என்னிடம் காட்டும் இம்மாதிரிப் பிரியம் எனக்கு வேண்டாம் என்று. நீங்கள் எனக்கேதான் என்று இருக்கப் போகிறீர்கள்?”
அப்போது போலேயே இப்பொழுதும் அவன் மண்டை யில் ஆவி பறந்தது. இவ்வளவு ஆத்திரத்தையும் வயிற்றில் வைத்துக் கொண்டா, தன் குழந்தையையும் தாங்கிக் கொண் டிருக்கிறாள்? இதென்ன சுய மூளையில்தான் இருக்கிறாளா? அவள் வாழ்க்கையே அவன் கையுள் அடங்கியிருப்பதை யறியாமல், அல்லது அறிந்து தானோ, அவன் வாழ்க்கையை அவள் சௌகரியப்படி அமைப்பதற்கு ஏதோ திட்டம். அவளும் அவளைச் சார்ந்தவர்களும் போட்டுக் கொண்டிருக் கிறார்கள் என்கிறவரை தெரிந்தது. அவனை யறிந்துமா இப்படித் துரோகம்? இனி அவளுக்குப் புத்தி தானே திருந்தும் வரை அவளும் உய்ய வழியில்லை; அவனும் அவள் வீட்டுப் படியேறுவதற்கில்லை. அவள் குழந்தை பிறந்தால் கூட, அவன் இதயம் பட்பட் என அடிப்பது அவன் காதுக்கே கேட்பது போலிருந்தது.
ஆறு மாதங்கள் கழித்து :
“என் கணவர் என்னைப் பற்றிக் கேட்காவிட்டாலும் நான் அவர் க்ஷேம லாபத்தையும் பற்றி அறிய ஆவலாயிருக் கிறேன். உங்களுக்குப் பிள்ளை பிறந்திருக்கிறான் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். குழந்தை வயிற்றில் ஐந்து மாதச் சிசுவா யிருக்கையிலேயே அதன் தகப்பன் அன்பை இழந்து விட்டது. உங்களுக்கு உண்மையாகவே என்மேல் பிரியமிருந்தால் என்னை ஏன் இந்த ஆறுமாத காலமாய்ப் பார்க்க வரவில்லை? என் கடிதத் திற்கும் ஏன் பதில் போடவில்லை? என்மேல் தங்களுக்குக் கோபமிருக்க நியாயமேயில்லை. புருஷன் பெண்மைக்கு இழைத்ததைவிட, மனைவி என்ன செய்து விட்டாள்? நீங்கள் உங்கள் வீட்டில் இருப்பதைப் போல் நானும் இருப்பேன் என்று எதிர்பார்க்க முடியாதென்றால், உங்கள் வீட்டாருக்கும் எனக்கும் ஒவ்வாது என்றால், எனக்கும் உங்க ளுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை என்து அர்த்தமா?எந்நாளும் உங்கள் அன்புக்கும், தேக சௌக்கியத்திற்காகவும் கடவுளை இங்கே பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ரொம்ப வும் இளைத்துப் போயிருப்பதாய்க் கேள்விப்படுகிறேன். உடம்பை ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்; வாரத்துக் கிருமுறை தவறாது எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள்.’
பிறகு :
”நான் திரும்பத் திரும்ப எழுதியும் உங்களிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. குழந்தை பிறக்கு முன் என்னைவிட ஆவலாய் “குழந்தை குழந்தை’ என்றீர்கள். அதுதான் நமக்கிருக்கும் பிணைப்பு என்றீர்கள். இப்பொழுது எட்டியும் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள். ஊர்க்குழந்தையை யெல்லாம் வாரியணைத்துக் கொஞ்சுவீர்கள். உங்கள் குழந் தையைக் கண்ணால்கூடக் காண வராமல் மனத்தைக் கல்லா யடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் இதை யெழுதுகையில், குழந்தை என் மடியில் படுத்துக் கொண்டு ‘என்னைப் பெற்றதாலோ, என் தகப்பனாலோ என்ன சுகத்தைக் கண் டாய்?” என்று கேலி செய்வதுபோல் பொக்கை வாயைத் திறந்து சிரிக்கிறது. துணி கிழிந்தால் ஒட்டுப் போடலாம்; ஆகாயம் கிழிந்து போனால் ஒட்டுப் போட முடியுமா?”
“பேஷ்? படிக்கும் நாவல்களும் பார்க்கும் சினிமாக்களும் ஏதோ இம்மாதிரி கடிதம் எழுதவாவது பயன்படுகின்றனவே!”
இன்னொன்று, அவசர அவசரமாய்:
“உங்கள் குழந்தைக்கு உடம்பு சரியாயில்லை. கொஞ்சம் அழுதால் கைகால் விறைத்துச் சில்லிட்டு நீலமாய்ப் போகிறது மூச்சு இழுத்துக் கொள்கிறது. உடலில் கோளா றில்லை. தெய்வ குற்றம் என்கிறார்கள். உங்களுக்கு அத்தோடு ஒட்டுதல் இல்லாவிட்டாலும், உங்கள் குலதெய்வத் தின் அருளுக்கு அதற்குப் பாத்யதை உண்டு. ஆகையினால் அம்மாவைக் கேட்டுக் கோவிலுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று தெரிந்து கொண்டு உடனே வாருங்கள்.
நீங்கள் எனக்குச் சொன்னதையே உங்களுக்குத் திருப்பிச் சொல்கிறேன்; நம்மிருவருக்கும் தவிர்க்க முடியாத பந்தம் ஏற்பட்டு விட்டது. நாமிருவரும் தனியாயிருந்தால், நான் உங்களுக்குச் சரியாயில்லையா பாருங்கள். தனிக்குடித் தனத்துக்கு வருமானம் போதாதென்றால், ஒத்தாசை செய்ய என் வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் பெண் சுகமாகயிருக்க வேண்டுமென்பதைத் தவிர அவர்கள் என்ன விரும்புவார்கள்? உங்கள் தாயாருக்கு உங்களைத் தவிர இன்னும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்; ஆனால் எனக்கு நீங்கள் ஒருத்தர் தானிருக்கிறீர்கள்”…..
ஆகவே, அவள்தான் பெண்மையையும் மானவெட்கத் தையும் விட்டு விட்டாள் என்றால் என்னையும் எல்லாம் துறந்துவிடச் சொல்கிறாளாக்கும்!”
இதற்கப்புறம் அவள் கடைசிக் கடிதம் வந்தது:
“…சரி, நீங்கள் உலகத்தாரைப்போல் இல்லாத அக முடையான் என்று எனக்கு எப்பவோ தெரியுமாயினும் இப்பொழுது சந்தேகமறத் தெரிந்து விட்டது. நீங்கள் எல்லா ருக்கும் நல்லவராயிருக்கலாம்; ஆனால் எனக்கு மாத்திரம் நல்லவர் இல்லை. என் கண்ணீரும் வீண் போகாது. (பேஷ்! இனி, பயமுறுத்தலாக்கும்!) இப்படியே உங்களுக்கு இந்தப் பக்கம் திரும்புவதாய் உத்தேசமில்லையானால் நீங்கள் ஆசை யாய் வளர்க்கும் உங்கள் மருமாளையே மணம் புரிந்து கொண்டு சௌக்கியமாயிருங்கள். உங்கள் இஷ்டப்படியும் உங்கள் வீட்டார் இஷ்டப்படியும் நடந்து கொள்வாள்”
இப்பொழுது அவனுக்கு ஒரே எண்ணந்தான் தோன்றி யது. அவன் குழந்தை இறந்துவிடாதா? அதனாலேயே அவன் பிள்ளைப் பாசத்தை வளர்த்து, அப்பாசத்தையே தன் சுயகாரிய சித்திக்காக அவன் நல்லுணர்வுகளைக் கொல்லும் ஈட்டியாயல்லவா, அவன் மார்புக்கு இலக்காய்ப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்? யாதவகுலத்தை நாசம் செய்த உலக்கை போல், அவன் வித்தேதான் அவனை நாசம் செய்யப் போகிறதோ? அவன் வித்து விஷ மரத்தில் பூத்த ஒரே காரணத்தால் விஷ வித்தாயின், அவ்வித்து மரமாவதன்முன் அதை வதைத்து விடுதல் நலமல்லவா, தன் வித்து எனும் பாபமிருப்பினும் அதை மரமாய்த் துளிர்க்க விடும் பாபத்தைவிடப் பெரிதா?- ஆனால் அவன் என்ன? சாமியா?…
“அம்பி – அம்பி -” அம்மா அவசரமாய்க் கதவைத் தட்டுகிறாள்.
அவன் கதவைத் திறந்தான். அம்மாவின் முகம் சுண் ணாம்பாய் வெளுத்திருந்தது, அவனுக்குப் பகீரென்றது.
“என்னம்மா?” அம்மா அசதியுடன் அறையுள் வந்து சுவரில் சாய்ந்தாள்,
“என்னமோ கேள்விப்படறேனேடா?’
“என்ன?”
“நீ எங்களை விட்டுப் பிரிஞ்சு அவர்களிடம் போக வில்லை என்னு உன் வேட்டாத்துலே ஏதோ பூஜையெல்லாம் பண்றாளாமேடா? நல்ல பூஜையில்லேடா-ஏதோ மாவு பொம்மை, கோழியெல்லாம் வெச்சிண்டு-”
“அம்மா,எல்லாம் வாழுகிற தினுசில் வாழாவிட்டால், நாலுபேர் நாலு விதமாய்த் தான் சொல்லுவார்கள். அதற்கு நாம் என்ன பண்ணுவது?”
“சொல்றவா சொல்றான்னா அதுக்குத் தகுந்தாப்போலே உன் உடம்பும் தேய்ஞ்சுண்டே வரதேடா! நீ எவ்வளவு ‘பீடாயிருக்கேன்னு நீ தெரிஞ்சுக்க மாட்டேன் என்கிறே. வைத்தியமும் பார்த்துக்கமாட்டேன் என்கிறே-”
“நான் கல்லு மாதிரிதான் இருக்கிறேன். எல்லாம் இந்த வெய்யிலில் அலையறதுதான்.”
“அம்பி!-‘”அம்மா கண்ணில் நீர் தளும்பியது.
“என்ன?”
“அந்தக் காலமெல்லாம் மாமியார் படுத்தறதென்பா; இப்போ மருமகள் படுத்தற காலம் வந்திருக்கு. ஈசுவரி யெண்ணம், அவளே ஜயிக்கணும்னு இருந்தால், அவளே ஜயிச்சுட்டுப் போறாள்; நீ வேணுமானால், அவளோடு அவ ளிஷ்டப்படியே தனிக் குடித்தனம் பண்ணுவதானால் பண்ணு-”
அவன் முகத்தில் சிவப்பு ஏறியது. வார்த்தைகளும் தொனியும் சற்றுக் கடுமையாகவே வந்தன.
“அம்மா ஊர் வாய்க்கு அஞ்சி நான் உங்களோடு இருப் பது உனக்கு இம்சையாக இருந்தால், என்னை வீட்டைவிட்டு வெளியே போ என்று சொல்; ஆனால் அவளிடம் போ என்று சொல்லாதே. அதற்கு உனக்கு உரிமைகூடக் கிடையாது”
அம்மா விக்கி விக்கி அழுதாள்.
“நீ எங்கே இருந்தாலும்-அவளோடு தனியாயிருந்தா லும் – நீ சௌக்கியமா இருக்கணும் என்கிற ஒரு எண்ணந்தாண்டா–”
அவன் மனைவியின் அழுத்தத்துக்கு அடங்கிப் போய். அவன் அவளுடன் தனிக் குடித்தனம் செய்வதானாலும், இனி அவனுக்கும் அவளுக்கும் எங்கிருந்தாலும் சரி, தனிமையென் பதே கிடையாது. அவர்களிடையில் சுவர் விழுந்தாய் விட்டது.
முகத்தோடு முகம் சேர்த்து, உடலோடு உடல் புல்லி, எவ்வளவு நெருக்கமான – மூச்சுத் திணறும் ஆலிங்- கனத்தில் இருந்தாலும் சரி, இடையில் அந்தச் சுவர் ஓங்கி, பயங்கரமாய்த் திமிர்த்துக்கொண்டு தான் நிற்கும்.
ஆசையும்(அந்தரங்கமும் அழிந்தபின்னர் எஞ்சி நிற்கும் கடமையை விடப் பயங்கரம் எது?
இன்று ஏன் அவள் நினைவு என்னை இப்படி உறுத்து கின்றது? புண்ணாய்ப் போன மனதை எண்ணி எண்ணி ஏன் ரணமாக்கிக் கொள்கிறேன்? என்னுள் எது இப்படி வதை படுகிறது? எதிலேயோ, என்னுள் ஏதோ தோற்றுவிட்டது. ஏன்? எண்ணி எண்ணி எத்தனை ஆயிரம் எண்ணங்கள் வீணாகின்றன? எண்ணாமல் தான் இருப்பது எப்படி? நான் தெய்வமா? ஆனால் நான் ஏன் மனிதனாகவும் இருக்க முடிவ தில்லை? என் உள்ளம் ‘பெட்ரோமாக்ஸ்’ விளக்குத் திரி மாதிரி-நான் உணருகிறேன். தொட்டாலோ, பட்டாலோ பிசுபிசுத்துப் போகும்; அம்மாதிரி நான் உள்ளுக்கே உளுத் துப் போய்க் கொண்டிருக்கிறேன். ஏன்? இன்னும் எத்தனை ‘ஏன்’கள் என்னுள் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. இத்தனை ‘ஏன்’களுக்கும் என்னால் பதில் சொல்லி மாள வில்லை.”
ஏன்?
***
அந்தி வெய்யில் சாய்கையில் அவன் கால்கள் இழுத்துச் சென்றபடி அவன் நடந்து கொண்டிருந்தான். அவனுள் ளேயே மூழ்கிப் போயிருந்த அவன், விழித்து எழுந்து தன்னைச் சுற்றிப் பார்க்கையில், அவன் இருமருங்கும் எட்ட எட்ட “பங்களாக்கள்’ கொண்டதோர் சாலையில் நடந்து கொண்டிருப்பதாகக் கண்டான். அடையாற்றில் ஏதோ ஒரு மூலை. ஜனநடமாட்டமும் இல்லை. எதிரே ஒருபெண் கொஞ்ச தூரத்தில் நடந்து கொண்டிருந்தாள். அவள் பின்னலின் வீச்சும், நடையில் இடையின் ஒடிப்பும் அம்மூக்குப் பொடிக் கலர்ப்புடவையும் எங்கேயோ பார்த்த ஞாபகமாய் இருந் தன. அகஸ்மாத்தாய் அவள் திரும்பிப் பார்த்தாள். அடை யாளம் கண்டு கொண்டதால் ‘சட்’டென அவள் முகம் மாறி யது. திரும்பி அவனை நோக்கி எதிர் வந்தாள்.
“என்ன அம்பி?”
”யாரு, சாவித்திரியா?” வெய்யிலில் அவன் கண்கள் கூசின. அத்துடன் கொஞ்சம் எரிச்சலும் இருந்தது.
“என்ன ரொம்ப இளைத்திருக்கேளே? அடையாளமே தெரியவில்லையே! ஜுரமடிக்கிற முகமாயிருக்கே!’
“இருக்கலாம் எல்லாக் கலியாணமுமே ” என்று அசதி யுடன் சிரித்தான்.
“நீ என்ன, இன்னமும் படித்துக் கொண்டுதானிருக் கிறாயா?”
‘ஆமாம்; போன வருஷம் கணக்கில் தவறிப் போச்சு… என்ன உங்கள் ஆம்படையாள் உங்களிடம் வந்து சேர்ந்து விட்டாளா?”
“இன்னும் இல்லை-” என்று மனமில்லாமல் பதிலளித் தான். அவனுக்குச் சிறு கோபமும் வந்தது. “ஏது, என் னுடைய விவகாரங்களைப் பற்றி எனக்கிருக்க வேண்டிய சிரத்தைக்குக் குறைச்சலில்லாமல், அதில் சம்பந்தப்படாத வர்களுக்குக்கூட ரொம்ப இருக்கிறாப் போலிருக்கிறதே!”
அவன் பேச்சின் குத்தலை அவள் கண்டு கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை.
“உங்கள் விவகாரங்களில் எனக்குக் கண்டிப்பாய் அக்கிசு உண்டு. தவிர, உங்கள் விவகாரங்களில் நீங்களே
ஈடுபடுவதால், உங்களுக்கு உங்கள் விவகாரங்களின் உண்மை மதிப்புத் தெரியாது. ஆனால் நான் எட்ட நின்றிருப்பதால் எனக்குத் தெரியும். நீங்கள் நினைச்சுண்டிருக்கற மாதிரி ஒண்ணும் நடக்கப் போறதில்லை. அவள் இப் போதைக்குத் திரும்பி வரமாட்டாள்-‘
“நீ ஏன் அப்படி நினைக்கிறாய்?”
அபசகுனம் போன்ற அவள் வார்த்தைகள் அவனுள் ஏதோ ஒரு தினுசான திகிலை விளைவித்தன.
“ஏன்?”-ஒரு தினுசாய் உதட்டைப் பிதுக்கினாள்.”ஏன் என்றால், நான் என்னத்தைச் சொல்ல? உங்கள் அன்பை யும் லட்சியங்களையும் அறிந்து கொள்ள அவளுக்குச் சக்தி யும் கிடையாது; இஷ்டமும் கிடையாது. அவளே ஒரு ‘அரைமூளைக்கேஸ்!’ உங்களுக்குக் களைப்பாயிருக்கு என்று எனக்குத் தோண்றது. கொஞ்ச நேரம் உட்காருவோமா?”
“உனக்கு அவசரமில்லையா?”
“எனக்கு இனி ஒரு விதமான அவசரமும் கிடையாது-” என்று அவள் சிரித்தாள். வெறுப்பில் புளித்த சிரிப்பு.
புல் தரையில் இருவரும் சற்று நேரம் மௌனமாய் உட் கார்ந்திருந்தனர். சாவித்திரி முகத்தை நோக்குகையில் அதில் இவ்வளவு அழகு எங்கிருந்து வந்தது என்று தெரிய வில்லை. மூக்கு, கண் எனத் தனித்தனியாய் நோக்குகையில் அவைகளுக்கு அழகே யில்லை. அவள் கண்ணில் சற்று விளக்குப் பார்வை என்று கூடச் சொல்லலாம். ஆயினும் முகத்தில் ஒரு தனிக் கனிவு – களை உள்ளத்தின் வெளிச்சம் ஒளி வீசுவது போல்.
“அன்புக்கும் நியாயத்துக்கும் மிருகங்கள் கட்டுப்படும்; நாங்கள் மாட்டோம். ஏனென்றால், நாங்கள் பெண்கள்’ மறுபடியும் அப்புகைச் சிரிப்பு அவளிடமிருந்து வெடிப்புடன் கிளம்பியது. “எங்களுக்கே கொஞ்சம் பேய்க் குணம் உண்டு. எங்களுக்கு முன் யோசனை, பின் யோசனையெல் லாம் சில சமயங்கள் இருக்காது. அந்தந்தச் சமயத்துக்கு என்ன சாதித்துக் கொள்ளுவோமோ அதுதான் கணக்கு…”
அவன் புன்னகை புரிந்தான்.
“ஏது உன் வர்க்கத்தைப் பற்றி உனக்கு இவ்வளவு நல்ல அபிப்பிராயம்?”
“நீங்களேதான் பாருங்களேன். ஏதோ ஒரு குழந்தை யைப் பெற்றுவிட்டதால், பெரிதாய்ச் சாதித்துவிட்டதாயும், உங்களைத் தன் சௌகரியப்படி சமைத்துக் கொள்ள முடி யும் என்றும் தானே உங்கள் மனைவி நினைத்துக் கொண்டிருக் கிறாள்? எல்லாம் கொண்டாடினால் தான் உறவு என்கிறதை அவள் மறந்துவிட்டாள். அவள் வாழ்க்கையையே அழித்து விடக்கூடிய சக்தியையும் சௌகரியங்களையும் சமூகம் உங்க ளுக்குக் கொடுத்திருந்தும், நீங்கள் பயன்படுத்த அஞ்சு கிறீர்கள். நீங்கள் அவளை யஞ்சுகிறீர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்காக அஞ்சுகிறீர்கள் என்று அறியவில்லை. அவள் மேலும் தப்பில்லை; இவ்வளவு தூரம் பிரியம் வைத்துவிட்டு, கடமையையும் பாராட்டிக் கொண்டு நீங்கள் திண்டாடினால், அவள் மேல் தப்பா? அவள் என்ன செய்வாள்; தன் சுபாவத்தைத்தான் காட்டுகிறாள். பொறுமை, அன்பு, மேதை, லட்சியங்களில் வேரூன்றிய – உங்கள் ஆண்மை – இவை அவளிடத்தில் வீண் செலாவணி. நீங்கள் கொண்டாடி ஒழுகும் லட்சியங்களுக்கே அவை செல்லுகிற இடத்தில் செல்லுபடியாகிறவரையில்தான் அவை களுக்கு வெற்றி. அவை தோற்கிற சமயத்தில் அவைகளின் தோல்வி ரொம்பவும் பயங்கரம்…அவள் ஏதோ முரட்டுத் தனத்தை மந்திரமாய்க் கொண்ட வண்டிக்காரனுக்கு வாழ்க் கைப்பட வேண்டியவள்; அவளிடம் நீங்கள் அறியாமல் மாட்டிக் கொண்டு விட்டீர்கள்…”
அவன் காதைப்பொத்திக்கொண்டு கத்தினான்; “வாயை மூடு! வாயை மூடு! வதைக்காதே!”
சற்றுநேரம் இருவரும் மௌனமாயிருந்தனர்.
மேல் வானம் ரத்தச் செவேலாய் விட்டது. அதன் சாயை அவர்கள் மேலும், சுற்றியிருப்பவை மேலும் அடித்தது. இரவுக்கடங்குவதற்காக, பறவைகள் மந்தை மந்தையாய்ப் பறந்து போவதை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரவர் மனம், அவரவர் எண்ணங்களில் மூழ்கிய வண்ணம்.
அவள் மெதுவாய், வானை நோக்கிய வண்ணமே …
“நான் இப்பொ அவளைப் பற்றி நினைக்கவில்லை; உங்களைப் பற்றியும் நினைக்கவில்லை. “மாதா பிதா பாவம் மக்கள் தலையில்’ என்கிற வசனம் பொய்க்காமல், உங்கள் இருவரிடையில் அகப்பட்டுக் கொண்டு தவிக்கும் அக்குழந் தையைப் பற்றித் தான் நினைக்கிறேன். அது அங்கேயே வளர்ந்தால் அப்பன் தெரியாக் குழந்தை;பலாத்காரமாய்த் தூக்கிக் கொண்டு வந்து நீங்கள் வளர்த்தால், ஆயி தெரி யாத குழந்தை; இத்தனையும் நேர்ந்த பின்னர், நீங்களிரு வரும் சேர்ந்து குடித்தனம் பண்ணினாலும், உங்கள் உறவின் கசப்பு அதைத் தாக்காமல் இருக்கப் போவதில்லை! கடைசி யில், அதுக்கென்ன சுகம்? நல்லவேளை ஒரு தேறுதலாவது இருக்கிறதே; பிள்ளையாய்ப் பிறந்திருக்கிறதே-என் மாதிரி பெண்ணாய்ப் பிறவாமல்!”
”ஏது சாவித்திரி, இன்னிக்குப் பிரமாதமாய்ப் பேசு கிறாய்?”
‘ஆமாம்”- அவள் கண்கள் வானிலிருந்திழிந்து நேருக்கு நேராய் அவன் பார்வையைச் சந்தித்தன.
“நான் ஏன் படிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? என்னைப் பற்றி ஒருவரிடமும் நான் சொன்னதில்லை. உங்க ளிடம் சொல்லுகிறேன்; என் தாயும் உங்கள் மனைவி போல் வாழாவெட்டியாய்ப் போனவள் தான். ஆனால் இம்மாதிரி அசட்டு அழும்பு பண்ணி, தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளவில்லை. விதி அவளை மோசம் செய்து விட்டது.
என்ன நடந்தது தெரியுமோ? என் தாய் கிராமாந்தரத் தில் இளையாளாய் வாழ்க்கைப்பட்டாள். இந்தச் சம்பவம் நடக்கிறபோது நான் என் தாய் வயிற்றில் ஆறு மாதச் சிசு வாய் இருந்தேன். அப்பா எங்கேயோ வெளியூருக்குப் போயிருக்கிறார்.
உக்கிராண உள்ளே ஏதோ சாமான் எடுக்கப் போயிருந் திருக்காள் அம்மா, பரணிலிருந்து பாம்பு தொங்கறது தெரி யல்லே. ‘புஸ்ஸுன்னு சீறி, படார்னு கன்னத்திலே போட்டுடுத்து.
“ஐயோ! பாம்பு’ என்று அம்மா கதறிண்டு கன்னத்தைப் பிடிச்சுண்டு வெளியே ஓடி வந்தாள். கண் மூடிக் கண் திறக்கறதுக்குள் “ஜே ஜே”ன்னு கூடிப் போச்சு. உப்பைக் கொண்டா, மிளகைக் கொண்டா. மந்திரவாதியைக் கொண்டா என்று எல்லோரும் பறக்கறத்துக்குள்ளே மாமி யார் மடியில் படுத்திண்டிருக்கிற அம்மாவுக்கு மயக்கம் போட ஆரம்பிச்சுடுத்து.
அப்போ பக்கத்தாத்திலேருந்து ஒரு பையன் ஒடி வந் தான். பதினெட்டு, இருபது வயதிருக்கும்; பட்டணத்தில் மெடிகல் காலேஜில் படித்துக் கொண்டிருப்பவன், லீவுக்கு ஊருக்கு வந்திருக்கான். சட்டென மண்டியிட்டு அம்மா கன்னத்தில் பாம்பு கடிச்ச இடத்தில் வாயை வெச்சு ரத்தத்தை உறிஞ்சி வெளியில் துப்பினான். இரண்டு மூணு தடவை துப்பினான்.
அம்மா தப்பிச்சாள். அந்தப் பையனை மெச்சா தவாளே கிடையாது. எங்கப்பா ஊரிலிருந்து வந்தார். சமாசாரத் தைக் கேட்டார். அவர் உற்சாகமாயில்லையாம். அவரே ஒரு தினுசாம். அம்மாவைப் ‘பார்த்து, மூட்டையைக் கட் டிண்டு உங்காத்துக்குப் போயிடு’ என்று சொல்லி விட்டார்.
“என்னடா?” என்றாள் என் பாட்டி.
“பாம்பு கடிச்சா விஷத்தை வாங்கறதுக்கு எவ்வளவோ வழியிருக்கு. அந்தக் காலிப்பயல் இவள் கன்னத்தைக் கடிச்சுத் தான் காப்பாத்தணுமாக்கும்! அவன் வந்ததே மொதக் கொண்டு இவள் ஒரு மாதிரியாத்தான் இருக்கா- கிராப்புத் தலையும் கோட்டும் சூட்டுமா நான் இருக்கேனா சரி சரி; கட்டு நடையை…’
எங்கப்பா பெரிய மூர்க்கனாம். உலகத்திலிருக்கும் கெட்ட குணங்கள் அத்தனையு முண்டு அவரிடம். ஆனால் மத்த வரிடம் ஒரு குறை காணச் சகிக்கமாட்டார். ‘அடே, ஆபத் துக்குப் பாபமில்லை’ என்று என் பாட்டி எவ்வளவோ சொல் லிப் பார்த்தாச்சு; பயனில்லை. அம்மா பிறந்தகம் வந்து சேர்ந்து விட்டாள்.
இத்தனைக்கும் என் தாய் வீட்டில் கொஞ்சம் ‘பசையுள்ளவர்கள். அப்பாவைக் கோர்ட்டுக்கிழுத்து ஜீவனாம்சம் அது இது என்று பிடுங்கலாம்; ஆனால் யாருக்கு அவ மானம்? அப்படியே பிடுங்கினாலும் அவர் அவளிடமிருந்து பிடுங்கிக் கொண்ட வாழ்க்கையைத் திருப்பிப் பெற முடி யுமா? என்னென்னவோ பண்ணிப் பார்த்தார்கள். ஏதோ பெரிய தப்புப் பண்ணி விட்டாற் போல் காலில் விழுந்து, “மன்னிக்கணும்; எங்கள் பெண் உங்கள் வீட்டுக் கொட்டி லில் சாணம் பெருக்கி யெடுத்திண்டாவது இருக்கட்டும்; ஆனால் உங்கள் வீட்டில் இருக்கட்டும்-” என்றெல்லாம் கெஞ்சிக் கேட்டுப் பார்த்தார்கள். அந்தக் காலத்தில் காசை விட மான ஈனத்தைத் தான் பெரிசாய் மதிச்சாள். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை.
அதற்கப்புறம் என் தாய் நடத்தின ஒரு வாழ்க்கை யிருக்கு பாருங்கோ, அதை நரகம் என்று தான் சொல்லணும். அவள் வாழ்ந்தது வாழ்வல்ல, ஏதோ உயிரோடிருந்தாள்; அவ்வளவு தான். உயிரோடிருந்த வரைக்குமே அந்த உயிரை அவள் எப்படிச் சகித்துக் கொண்டிருந்தாள் என் பதே ஆச்சரியம் தான். இந்த ஊர்ப் பேச்சே அவளைக் கொன்று விட்டது. ஏன்னா, வந்த புதிசிலே ஏதோ ‘த்ஸோ த்ஸோ’ கொட்டிண்டு இருந்தவா ளெல்லாம், அப்புறம் இந்த மனஸ்தாபம் தொடர்ந்துண்டே போகப் போக ஒரு தினுசாப் பேசஆரம்பிச்சுட்டாள். பாட்டிகளெல்லாம் காலை நீட்டிண்டு உட்கார்ந்துண்டு, நீட்டிய காலை உருவிண்டே, ‘என்னடீ’ நம்ப கோடியாத்துப் பெண் என்ன தான் வெகுளியாயிருந் தாலும், ஒரு பொறி நெருப்பு இல்லாமே இவ்வளவு புகையு மாடி? என்று எங்க அம்மாவின் குலைந்த வாழ்க்கையை அலசும் சமயத்தில், அதுவும் பேச்சின் அர்த்தமும் வினை யும் தெரியாது நான் கேட்டதை அவளிடம் அப்படியே ஒப்பித்து அவளை அதுக்கு அர்த்தம் கேட்கையில், வேறு என்ன வினை வேண்டும்?
‘குழந்தை முகத்தில் கோடி துக்கம்’ என்னும் பழமொழி யெல்லாம் உங்கள் மனைவியையும், என் தாயையும் போன்ற வர்களுக்காக ஏற்பட்டதில்லை. குழந்தை கையைக் காலை உதைச்சுண்டு கொக்கரிக்கிறது. இப்போ வேடிக்கையா யிருக்கும்; அப்புறம் அதுவே தான் கழுத்துக்கும் சுருக்கு. அப்போன்னா தெரியப் போறது? நான் என் அனுபவத்தைக் கொண்டு சொல்லறேன், எனக்கும் என் தாய்க்கும் கூடப் பிடிப்பு விட்டுப் போச்சு, எனக்கு நினைவு வந்து, எனக்குத் தகப்பனில்லாத மர்மம் அரை குறையாய், மூடு சூளையாய், நாலு பேர் வாய் வழி வெளியாகையில்.
அப்புறம் ஒரு நாளைக்கு எங்கம்மாவைப் பெத்த அம்மா, ஏதோ வார்த்தைத் தடிப்பில் என்னெதிரே என் அம்மாவைப் பார்த்து, “ஏண்டி, அன்னிக்குப் பாம்பு கடிச்ச போதே நீ செத்துப் போயிருக்கக் கூடாதா? எனக்குத் தீராத் துக்கமா வந்து சேர்ந்திருக்கையே!-” என்று கேட்டு விட்டாள்.
அடுத்த நாள் காலை எங்கம்மாவை எங்கெல்லாமோ தேடி விட்டு, அப்புறம் கொல்லைப் புறக் கிணற்றிலிருந்து அவள் பிணத்தை எடுத்தார்கள்.”
சாவித்திரி கொஞ்ச நேரம் அடங்கினாள். வெகு நாழிகை விடாமல் பேசிக் கொண்டிருந்ததாலோ என்னவோ மூச்சுத் திணறிற்று.
“கொ கோ – கொ-கோ-
அந்தச் சப்தம் மரங் கொத்திப் பறவையினுடையதா? பத்தடி தூரத்தில் இரண்டு அணில்கள் வாலைத் தூக்கிக் கொண்டு, ஒன்றையொன்று துரத்திக் கொண்டே ‘கீச்கீச்’ எனக் கத்திக் கொண்டு ஓடின. அடுத்த நிமிஷத்தில் எந்தப் பூனை வாயிலோ; ஆயினும் இப்பொழுது எவ்வளவு சந் தோஷமா இருக்கின்றன!
“எங்கம்மா போய் விட்டதனால் என் வாழ்க்கை விடிந்து விட வில்லை. ‘யாரு, அந்தாத்து சம்பந்தமா பண்ணப் போறேள்? அவ அந்தப் பெண்ணுடைய பெண்ணுன்னா? வயத்திலே இருக்கறத்திலேயே, அம்மாவை ஆத்தோடு கொண்டு வந்து சேர்த்துடுத்து! அதுவும் அப்பனிருக்கை யிலேயே. அத்தோடு போகாமே இப்போ அவளையும் உருட்டிடுத்து. அதிர்ஷ்டம் அவ்வளவு அமர்க்களமாயிருக்கு! போறும் போறாததுக்கு, மூச்சு விட்டத்துக்கெல்லாம், ஆத்திலே விழறேன், கிணத்திலே விழறேன், மண்ணெண் ணெயைக் கொட்டிக்கறேன்’னு அசட்டுப் பிசட்டுன்னு ஏதாவது பண்ணித்துன்னா? பிறந்த இடத்தைக் கெடுத்ததோ டில்லாம, புகுந்த இடத்தையும் விடியாமே பண்ணிடும்; எல்லாம் அதன் தாய் வயத்து மண் தானே!’. இந்தச் சிபார்சோடு நான் என்னத்தை உருப்படறது? அதனால்தான் படிக்கிறேன்.
ஆனால் படிப்பால் எங்களுக்கென்ன பயன்? கடவுள் எங்களைக் கொடியாய்ப் படைச்சிருக்காளே யொழிய மர மாய்ப் படைக்கல்லையே! எதையாவது நாங்கள் தொத்திண்டு தான் படரணும். நாங்களே ஊன்றி வளரப் பார்த்தால் உலர்ந்துதான் போவோம். உடலில் இத்தனை துடிதுடிப்பும், பதை பதைப்பும் பரதவிக்கையில், படிப்பையும் வெச்சிண்டு நான் என்ன செய்ய?”
உணர்ச்சி வேகம் அத்தனையும் முகத்தில் குழுமுகையில் அவள் நெற்றிப் பொட்டு நரம்பு ‘பட்பட்’டென அடித்தது. சட்டென்று அவன் கையைப் பிடித்தாள். பேச்சு வேகத்தில் அவன் பக்கமாய் அவள் முகம் சாய்கையில், அவள் மூக்கின் அனல் அவன் முகத்தை எரித்தது.
“அம்பி – அம்பி – என்னை மணந்து கொள், வாழ்க் கையை விட்டதால் உன் மனைவி மானம் வெட்கத்தை விட்டு விட்டாள்; வாழ்க்கை வேணுமென்கிறதால் நானும் மானம் வெட்கத்தை விட்டுக் கேட்கிறேன். என்னை மணந்து கொள்ளேன்! இன்னும் நம் வாழ்க்கையை உருப்படச் செய்ய எனக்குச் சக்தியிருக்கு. உன்னை என் மார்மேல் சாத்தி, மடிமேல் போட்டுக் கொண்டு, உன் உடல் நோயை யும், மன நோயையும் என்னால் மாத்த முடியும். நீ என்னைக் கல்யாணம் தான் பண்ணிக்கணும்னு எனக்கு அவசியமில்லை; ஆனால் நாம் உலகத்தின் விரோதத்தைச் சம்பாதிச்சுக்காமே, பிரியாமலும் இருக்கிறதுக்கு அந்தச் சடங்கை நான் ஏற்கிறேன்…”
”ராஜம்…?” அவனையுமறியாமல் அவ்வொரு வார்த்தை பெரும் வினாவாய்க் கிளம்பியது.
“ராஜம்…? அவள் விதைத்த வினையை அவளேதான் அறுக்கணும்! தானும் வாழாமல் பிறத்தியாரையும் வாழ வொட்டாமல் செய்ய அவளுக்கு த உரிமையில்லை. உன் வியர்த்தமான பாசத்துக்கு நீ ஆகுதியாகறத்துக்கு உனக்கும் உரிமையில்லை. நீ உன்னோடு போகவில்லை. உன்னை எனக்குத் தெரியும். நீ எல்லாருக்கும் உபயோகப்படுகிறவன்; எனக்கும் பயன் படேன், என்னால் நீயும் படுவாய். பயன் உன்னில் எனக்கும் கொஞ்சம் கொடேன். நான் அந்தப் பாவி போல் இல்லாமல் பத்திரமாய், நீ என்னிடம் கொடுக்கும் ன்னைக் காப்பாற்றிக் கொள்கிறேன். அதனால் உன்னையும் காப்பாற்றுவேன்: என்னையும் காப்பாற்றிக் கொள்வேன். அம்பி — அம்பி!”
அவனுக்குத் தலை சுற்றியது; கையில் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான்.
நடந்ததிலிருந்து விடுபட முடியவில்லை; நடப்பது புரிய வில்லை. இருந்தும் நடக்கப் போவதைப் பற்றித் தான் எப்பொழுதும் யோசனை! மன்னிப்பு, மறதி, புதுவாழ்வு!… என்ன ஓட்டை வார்த்தைகள்; நடந்தது எப்பவும் நடந்தது தான். மாற்ற முடியாது, அழிக்க முடியாது.
நடந்ததை மறக்க வேண்டுமானால் மனத்தின் உணர்ச்சி களை மரத்துப் போக அடித்துக் கொண்டால்தான் முடியும். ‘அதுவோ முடியுமா? நடந்த வரைக்கும், ஊனம் ஊனம்தான், அதுவரைக்கும் முதல் தூய்மை கெட்டது கெட்டதுதான், எத்தனை எண்ணங்கள்…
அவன் தலை சுழன்றது.
“சாவித்திரி…எனக்கும் உடம்பு சரியாயில்லை…’
“டாக்டரிடம் போவோம், வாருங்கள்…”
வெளித் தாழ்வாரத்தில், சாவித்திரி காத்துக் கொண்டிருந்தாள். அவள் மனம் சொல்ல இய ஒரு ‘குஷி’யில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது, இன்னமும் ஒரு மாதம் கழித்து அவள் பேர் கொண்டதோர் நோன்பு வரப் போகிறதே, அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள். மஞ்சள் சரட்டைக் கட்டிக் கொண்டு, ‘உருக்காத வெண்ணெயும் ஓரடையும் தட்டி வைத்தேன். ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டுப் பிரியாமல் இருக்கணும் – என்று விளக்கெதிரில் விழுந்து கும்பிடுவாள்.
ராஜமும் அதே மாதிரிச் சொல்லி, அந்த நோன்பை நோற்பாள் என்பதை நினைக்கையில் அவளுக்குச் சிரிப்பு வந்தது. அர்த்தம் பிரிந்து போன சடங்குகளின் விபரீதம் மிகவும் வேடிக்கையாய்த் தானிருந்தது.
‘ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டுப் பிரியாமல் இருக்கணும் –
டாக்டரின் அறைக் கதவைத் திறந்து கொண்டு அம்பி மெதுவாய் வந்தான். அவன் முகம் சவமாய் வெளுத் திருந்தது. வாயில் உயிரற்றதோர் புன்னகை உறைந்து போயிருந்தது. அவன் முகம் பார்க்கச் சகிக்கவில்லை.
“என்ன, ஒரு மாதிரியா…”
அவள் கேள்வி முடியு முன்னர், லொக்கு லொக்கு என்று
இருமல் அவனைப் பிடித்துக் கொண்டது. கீழே விழாதபடி அவனைப் பிடித்துக் கொண்டாள். ஒரு கொத்துக் கோழை கழன்று, அங்குத் துப்ப வைத்திருக்கும் பாத்திரத்துள் விழுந்தது.
கூட ஒரு நாலு சொட்டு ரத்தம்,
“ஐயோ இதென்ன?’ என்று அலறினாள் சாவித்திரி,அடி வயிற்றை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு.
அவன் முகத்தில் அவ் வுயிரற்ற புன்னகை ஒரு நொடி உயிர் பெற்றது,
“டீ.பி..”
சாவித்திரி மேல் இருள் பொதிகள் மள மள வெனச் சரிந்தன.
அம்பி அங்கிருந்த நாற்காலியில் சாய்ந்தான். அசதியால் அவன் கண்கள் மூடின. பல வர்ணச் சக்கரங்கள், பொத்திய இமைத் திரையில் கர கர வென்று சுழன்றன. வாசலில், நெருப்பணைக்கும் வண்டி ‘கணகணவென்று மணியறைப் பறந்தது. அந்தக் கோஷத்திடையில், அன்று காலை அம்மாவைப் பார்க்க வந்த மாமி, ‘தை பிறந்துடுத்து-வழி’ பிறந்துடும்பாருங்கோ – எல்லாத்துக்கும் தான் சொல்றேன்-‘ என்று கூறிய வார்த்தைகள் ஒலித்தன.
– மீனோட்டம், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1991, வானதி பதிப்பகம், சென்னை.
![]() |
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க... |