தேதி பதினாறு




அந்த ஊரில் புருசோத்தம் ஜோசியரை பார்க்க பெரிய பெரிய பணம் படைத்தவர்கள் முதல், பெரிய அதிகாரிகள் வரை காத்திருப்பர். அவரின் வாக்குக்கு அவ்வளவு மரியாதை. இதற்கும் புருசோத்தம் ஜோசியர் ஒருநாள் பொழுது முழுக்க பத்திலிருந்து பதினைந்து பேரை மட்டுமே பார்த்து ஜாதகம், ஜோசியம் சொல்லுவார். இதுதான் நடக்கும் என்று பட்டவர்த்தனமாக சொல்லி விடுவார். அது அப்படியே நடக்கவும் செய்யும். இதனால் எல்லோரும் அவரை நம்பினார்கள். அவரை பார்க்க அனுமதி வேண்டி கால் கடுக்க காத்திருந்தார்கள்.
அவர் திருமணமே செய்து கொள்ளாமல் தனித்து வாழ்ந்தார் உதவிக்கு ஒரே ஒருஆள் மட்டுமே இருந்தார்.. இவர் வசிப்பது கூட சாதாரண ஓட்டுவீடுதான். முன்புறம் நிழலுக்கு பந்தல் போட்டிருக்கும், அதில் அவரை பார்க்க வருபவர்கள் உட்கார பத்திருபது நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். முன்னறையில் அவர் வந்து உட்காரும்போது மணிசரியாக ஒன்பதாய் இருக்கும். டானென்று பனிரெண்டுக்கு இடத்தை காலி செய்துவிடுவார். அது போல மாலை மூன்று மணிக்கு உட்கார்ந்தார் என்றால் ஆறு அடிக்கும் போது எழுந்துவிடுவார். அதற்கு முன்னும் பின்னும் எவ்வளவு பெரிய ஆளாய் இருந்தாலும் பார்க்க மறுத்துவிடுவார். பணம் என்பது இவரை பொறுத்தவரை சாதாரண விசயம். இவரின் பிடிவாதம் பலருக்கு இவர் மேல் கோபத்தை தூண்டுவதாய் இருந்தாலும், இவரின் கணிப்பு சரியாக இருந்து விடுவதால் அமைதியாகி விடுவர். அவரிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமதி கிடைத்து விட்டால் சத்தமில்லாமல் அமைதியாகிவிடுவர்.
பரமசிவம் தனக்கு வரப் போகும் பேரக்குழந்தை பெண் குழந்தையா, ஆண்குழந்தையா என்று தெரிந்து கொள்ள ஆவல், அவரும் இந்தஊரில் பெரும் பணம்படைத்த ஆள்தான் இருந்தும் என்னபயன்? ஒரு ஜோசியக்காரனிடம் அனுமதி வாங்க படாதபாடு படவேண்டியதாக போய்விட்டது. அதனால் ஜோசியரின் மேல் உள்ளூர கோபம் இருந்தாலும் அதை வெளிகாட்டாமால் பயபக்தியாய் அவர் முன்னால் உட்கார்ந்திருந்தார்.
கொண்டு வந்திருந்த இரண்டு ஜாதகங்களையும் பார்த்துவிட்டு இப்ப ஆணா, பொண்ணா பார்த்து என்ன பண்ணப் போறீங்க? இந்த கேள்வி அவரை நெளிய வைத்தது. இல்லை சும்மா தெரிஞ்சுக்கலாமுன்னுதான். ஜோசியர் சிரித்தார். இறைவனின் படைப்பு என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும், அதில் கிடைக்கும் பலனைமட்டும் நாம் அனுபவித்தால் போதும்.
பரமசிவத்துக்கு சப்பென்றாகி விட்டது. இந்த ஆள் சொல்லமாட்டான் போலிருக்கிறது, இல்லை குழந்தை எப்ப பிறக்கும்? நல்லபடியா பிறக்குமா? மெல்ல இழுத்தார்.
குழந்தை அதற்கு விதிக்கப்பட்ட நேரத்தில் சரியாக பிறக்கும்,
அதுதான் எப்ப பிறக்கும் அப்படீன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.
சரியா அடுத்த மாசம் பதினாறாம்நாள் குழந்தை ஜனிக்கும். சொல்லிவிட்டு கண்களை மூடிக் கொண்டார். அவ்வளவுதான் என்று அர்த்தம்.
பரமசிவம் மனதுக்குள் முணங்கியவாறு கிளம்பினார். மனதுக்குள் கணக்கு போட்டார் இப்பதேதி இருபத்தை ஐந்து, இந்த மாசம் முடிய இன்னும் அஞ்சுநாள் இருக்கு அப்புறம் பதினாறு நாள் இன்னும் இருபத்தி ஒருநாள் இருக்கு, ம்..ம்.. என்ன குழந்தைன்னு சொல்ல மாட்டேனுட்டாரே.
அடுத்தமாதம் ஆரம்பித்த நாள் முதல் பரமசிவம் ஜோசியர் சொன்ன கணக்கை போட்டு பார்த்துக் கொண்டிருக்க பரமசிவத்தின் மகனும், மருமகனும் வேறொரு கணக்கை போட்டு விட்டனர். இருவரும் நேராக வேறோரு ஜோசியக்காரரை பார்த்து இந்த மாதத்தில் எந்தநாள் நல்லநாளாக வருகிறது என பார்த்தனர். பத்தாம்தேதி நல்லநாள், நல்ல நேரம் எல்லாம் ஜோசியக்காரர் குறித்து தர அவர்கள் அந்த நாளுக்கு முதல் நாள் மருத்துவமனையில் சேர்ந்து தங்களுக்கு சிசேரியன் செய்து, ஜோசியர் எழுதிக் கொடுத்த நேரத்திற்கு குழந்தை எடுக்க சொல்லி வற்புறுத்தி அதன்படி பெண் குழந்தையும் வெளியே வந்துவிட்டது.
செய்தி தெரிந்ததும் பரமசிவத்துக்கு ஜோசியரின் மேல் கோபமான கோபம், என்ன பெரிய ஜோசியக்காரன், இந்த ஆளை போய் பெரிய வாக்குக்காரன் அப்படீங்கறாங்களே, என்ற ஆத்திரம். தேதி “பதினாறு” என்று குறித்து கொடுத்து என்ன பயன்? குழந்தை பத்தாம் தேதியே பிறந்து விட்டதே.
ஜோசியக்காரரை மீண்டும் பார்த்தவர் கோபம் தாளாமல் கொட்டி தீர்த்துவிட்டார். என்ன ஓய் ஜோசியக்காரர் நீ ? இப்படித்தான் தப்பும் தவறுமாய் சொல்லும் நீர் எப்படி பெரிய ஜோசியக்காரன் என்கிறார்கள், எனக்கு விளங்கவில்லை.
ஜோசியக்காரர் சிரித்து விட்டு உமது மகன், மருமகள் ஜாதக பலன்படி வரும் பதினாறில் தான் புதிய உயிர் ஜனனம் என்றிருக்கிறது. அதைத்தான் நான் சொல்ல முடியும்.
அவரின் பதில் பரமசிவத்துக்குஆத்திரத்தைத்தான் வரவழைத்தது. நீரும் உமது ஜோசியமும், சொல்லி விட்டு வேகமாக வந்துவிட்டார்.
நாளை போய்விடலாம் என்று மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள். இவர்கள் எல்லாம் தயாராகி கிளம்பலாம் என நினைத்துக் கொண்டிருந்த பொழுது குழந்தைக்கு திடீரென்று மூச்சுதிணறல் ஏற்பட்டது. அவசர அவசரமாய் டாக்டர் வரவழைக்கப்பட்டு உடனடியாக குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு போகப்பட்டது.
பரமசிவம், அவர் மகன்,மருமகள், மனைவி குடுமபமே குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு வாசலில் மனசு பதைபதைக்க காத்திருந்தனர். நர்சுகள் வருவதும் போவதுமாக இருந்தனர். அவர்கள் ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று மனசு படபடக்க காத்திருந்தனர்.
கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஓடிவிட்டன. இவர்களுக்கு குழந்தை உயிருடன் கொடுப்பார்களா என்றே சந்தேகம் வந்துவிட்டது. பாவம் பரமசிவத்தின் குடும்பத்தில் ஒருவர் கூட சரியாக சாப்பிடவில்லை. மருத்துவமனையே கதி என்று இருந்தனர்.
இங்க யாருங்க ஹரிஹரன்? பரமசிவம் மகனின் பேரை சொல்லி கூப்பிட இவர்கள் குடும்பம் திடுக்கிட்டு முகம் வெளிறி கூப்பிட்டவரிடம் வர அவர் உங்களை டாக்டர் உள்ளே கூப்பிடறாரு சொல்லி விட்டு சென்றுவிட்டார்.
அவ்வளவுதான் ஒவ்வொருவரின் மனமும் துவண்டு விட்டது. மனசு முழுக்க பயமும் பதட்டமும் நிறைந்திருக்க டாக்டரை பார்க்க உள்ளே நுழைந்தனர்.
வாங்க வாங்கடாக்டர் மகிழ்ச்சியுடன் கூப்பிட இவர்களின் முகம் மெல்ல மலர்ந்தது, உங்க குழந்தை நல்லாயிடுச்சு. இனிமேல் பயமில்லை, இன்னைக்கே நீங்க வீட்டுக்கு கூப்பிட்டு போகலாம், சொல்லி முடிக்கவும் நர்ஸ் குழந்தையை எடுத்து இவர்கள் கையில் கொடுத்தாள்.
கடவுளே உனக்கு நன்றீ வாய்விட்டு சொன்ன பரமசிவம் ஏதேச்சையாக அங்கு சுவற்றில் இருந்த காலண்டரை பார்க்க அதில் தேதி“பதினாறு” என்றிருந்தது.
![]() |
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க... |