தெய்வத்தின் தீர்ப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 4, 2025
பார்வையிட்டோர்: 57 
 
 

அம்மன் கோவிலின் வாசலில் பரந்திருந்த வேப்பமரக் கிளைகள், காற்றின் சிறு அசைவுகளுக்கு நிசப்தமாக அசைந்தன. அவற்றின் அசைவுகளை கண்கள் கண்டன; ஆனால் அவற்றின் நிழலில் கூடியிருந்த மக்கள்—அவர்கள் மனங்கள் மட்டும் பாறையைப் போல உறைந்திருந்தன.

அந்த நாள்… ஒரு சாதாரண நாள் அல்ல. ஊரின் பெரும்பாலானவர்கள் கோவிலின் மண்டபத்தில் ஒன்றுகூடியிருந்தனர். காரணம்: ஒரு பெண், வேலம்மாள்.

ஏழ்மை… தனிமை… மனநிலை பாதிக்கப்பட்ட மகளுடன் வாழும் ஒரு எளிய தாயின் மீது இந்த உலகம் சுமத்தும் பாரங்களைத் தாங்கிக்கொண்டு வாழ்ந்தவள். ஆனால், அந்த நாள் – அவளின் மௌனம் உருக்கொண்டு குரலாகி, கோவிலின் மண்டபத்தை ஊடுருவியது. மாரியம்மன் கோவில் மண்டபத்தில் கூடியிருந்த ஊர் பஞ்சாயத்திற்கு ஒரு புகார் அளித்திருந்தாள்:

“பக்கத்து வீட்டு துரை… என் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றான்!” என்றாள்.

ஊர்க் குழுவினர் பஞ்சாயத்தை நடத்த கூடியிருந்தனர். முகங்களில் பதட்டம் இல்லை; பதறிய கண்களும் இல்லை. பாறைபோல் இருந்தனர்.

வேலம்மா உன் மேல் சொல்லும் புகாருக்கு என்னப்பா சொல்ற …… பஞ்சாயத்து தலைவர் துரையை விசாரித்தார்

துரையின் முகம் மட்டும் உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் இருந்தது. துரை – ஊரின் செல்வமிக்க குடும்பத்தை சேர்ந்தவன். ஆடம்பரமான உடை. சிரிப்போ, கலக்கமோ எதுவும் இல்லாத முகம். திமிரான உடல் மொழி

” எங்க பக்கத்து தோட்டத்துல இருந்து தேங்காய் பறிச்சப்போ அது இவங்க வீட்டில விழுந்தது. அதை எடுக்கத்தான்.நாங்க வீட்டு சுவர் ஏறி குதிச்சது” அவன் பேச்சு சட்டமாய் ஒலித்தது. உங்களால் என்ன செய்ய முடியும் ? என்ற அலட்சிய ம் அவன் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.

ஆனால் வேலம்மாள். கொந்தளித்தாள். அமைதியான அவளின் குரல், கோபத்தால் அதிர்ந்தது. “அய்யா, தெரு முனை குழாய்க்கு தண்ணீர் பிடிக்க போனேன். வீட்டு வாசல் திறந்த நேரம்தான். என் புள்ள கத்தி, கதறி ஓடி வந்தாள். அவனை தள்ளி வெளியே ஓடினாள். நான் வரும்போது இவன் சுவரேறி குதிக்குறது தெரிந்தது. தேங்காய் எடுக்க வந்தவன் வாசல் பக்கமாக வந்து, வெளியில் சென்ற நான் வரும்வரை காத்திருக்க

வேண்டியதுதானே? இவன் சொல்றமாதிரி எங்க வீட்டு முற்றத்தில் தேங்காய்கள் விழுந்து கிடக்கவே இல்லையே!”

“எனக்கு நீதி வேண்டும்; இந்த ஊரில் இத்தனை வருடமாக வாழ்ந்து வரும் எனக்கு பாதுகாப்பு இல்லையே ? அவனை தீர விசாரித்து தீர்ப்பு கொடுங்க “ஆக்ரோஷமாக பெருங்குரலெடுத்து கத்தி, கதறினாள் ரெங்கம்மா.

இரும்மா. நாங்க கூடி இருப்பதே நீ புகார் கொடுத்தவனை பற்றி விசாரிக்கத்தானே. கொஞ்சம் பொறுமையா இரு. அவளை அதட்டினார் பஞ்சாயத்து தலைவர்.

நீ அவன் மீது சுமத்தும் குற்றத்திற்கு சாட்சி இருக்கா ?

சாட்சிகள் இருக்கு அய்யா. பாதிக்கப்பட்ட என் பெண்ணின் வார்த்தைகளை நீங்க பொருட்படுத்த மாட்டீங்க. நான் ஏழை; ஏழைச் சொல் அம்பலம் ஏறாது.குற்றம் செய்தவனுக்கும் மனசாட்சி கிடையாது. எல்லாத்துக்கும் மேல அந்த அம்மன்தான் சாட்சி. அவ வந்து சொல்ல மாட்டாள் என்ற தைரியத்தில தானே நீங்க எல்லோரும் இப்படி பேசுறீங்க. அவ இப்போ சாட்சி சொல்ல வராமல் இருக்கலாம். ஆனால் தப்பு செய்தவனுக்கு நிச்சயம் தண்டனை தருவாள்.

நீதி மன்றத்திலே கூட பாரபட்சம் பார்க்க கூடாது என்று நீதி தேவதையின் கண்களை கருப்பு துணியால கட்டி வைத்திருப்பார்கள். ஆனால் இங்க உங்க கண்களையும், கைகளையும் இவன் பணத்தால் கட்டி வைத்து விட்டான். அவனை தண்டிக்கவோ இல்லை கண்டிக்கவோ உங்களுக்கு எண்ணம் வரவில்லை. என்னைத்தான் மிரட்டுவீங்க . அவள் குரல் கடுமையுடன் பலமாகியது. ஒரே நேரத்தில் வேதனையும் கோபமும் கலந்து வழிந்தது:.

என்னம்மா; என்ன நினைச்சுட்டு இருக்க? பேச விட்டால் ஒரேயடியாக எங்க எல்லோரையும் அவமானப்படுத்தற ; இப்படி எல்லாம் பேசினா நீ இனிமேல் இந்த ஊரிலேயே இருக்க முடியாது. புரிந்து கொள் அதட்டியது ஒரு குரல்.

“அட…. யாருய்யா இனிமேல் இந்த ஊரிலே இருக்கப்போறா; நாளைக்கு இன்னும் என்னென்ன நடக்குமோ; எங்க மானத்துக்கும் உசிருக்கும் பாதுகாப்பு இல்லாத இடத்தில நான் இனிமேல் இருக்க போவது இல்லை . ஆனால் ஒன்று உங்க எல்லார் குடும்பத்திலயும் பெண்கள், பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஏன். அவன் வீட்டிலேயும் பொம்பள புள்ளைங்க இருக்கு. இன்னிக்கு என் வீட்டு பெண்ணுக்கு நடந்த மாதிரி வேறு யாருக்கும் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கு?அதையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்”.

மாரியம்மன் கோவிலின் மண்டபம் அதிர்ந்தது மூத்தோர், பஞ்சாயத்து தலைவர், பொதுமக்கள்— எல்லோரும் அவளது ஆக்ரோஷத்தைக்கண்டு திகைத்தனர.

புலம்பியபடியே அம்மனுக்கு முன் சென்று நின்றவள் “ஆத்தா ….. உன் சன்னதியில் இவங்க நியாயம் சொல்லுவாங்க என்று எதிர்பார்த்தேன். நடக்கல. இப்போ உன்கிட்ட ஒப்படைத்து விட்டேன். நீ பார்த்துக்கோ” என்று நெடுஞ்சாண் கிடையாக விழுந்து எழுந்தவள் வேகமாக வீட்டுக்கு வந்து விட்டாள். ஒரே வாரத்தில் பெண்ணையும் அழைத்துக்கொண்டு ஊரை விட்டு கிளம்பி விட்டாள்

கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்தது.

துரை, தனது தோட்டத்தில் தேங்காய் பறிக்க மரத்தில் ஏறினான். மரம் சாய்ந்து குலுங்கும் போது, நண்பன் எச்சரித்தான்:

“மரம் சாய்ற மாதிரி இருக்கு டா… மெதுவா பார்!”

“மரம் ஏற தெரியாம இருக்கேனு நினைச்சுடாத. நான் ஒரு மரத்தில இருந்து இன்னொரு மரத்துக்கு கூட தாவுவேன்டா!” என்று இறுமாப்புடன் பதிலளித்தான் துரை.

ஆமா …. ஆமா …. உன்னைப்பற்றி தெரியாதா என்று கிண்டல் பண்ணிய நண்பனிடம் கோபம் கொண்ட துரை சட்டென்று திரும்ப. மரத்திலிருந்து கீழே விழுந்தான். பல மருத்துவ மனைகளுக்கு எடுத்துச் சென்றனர். எந்த வைத்தியமும் பலிக்கவில்லை. கால்கள் முடக்கமடைந்தன.

ஊரிலோ, சிலர் மெதுவாக பேசிக்கொண்டனர்: “வேலம்மா அன்னிக்கு சொன்னதெல்லாம் உண்மைதான் போல. அன்னிக்கு தேங்காய் பறித்தேன் என்று பொய் கூறியவனுக்கு இன்று அதே தென்னை மரம் மூலம் அம்மன் தண்டனை கொடுத்துவிட்டாள்.

அரசன் அன்று கொல்வான் ; தெய்வம் நின்று கொல்லும்” என்ற பழமொழிக்கேற்ப, மனிதர்கள் மரமாய் நின்றபோதும். சாட்சியாக நின்ற அந்த தென்னைமரத்தின் மூலமாகவே, மரத்தையே கருவியாகக்கொண்டு அம்மன் தீர்ப்பு வழங்கி விட்டாள்.

வேலம்மாவின் வேதனைக்கு இன்று தெய்வீக நீதி கிடைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *