தூண் மறைவில்!
(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தீபாவளியன்று நிச்சயம் ‘ஒரு ஸ்பெஷல் நாடகம்’ இருக்கும் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த மாதிரி ஒரு “புரட்சி”யை யாரும் எதிர்பார்க்கவே இல்லை!
ஹாஸ்ய நடிகர், நகைச்சுவை வேந்தர், விகட சக்கரவர்த்தி வேங்கடசாமி ‘ஹிரண்யன் வதம்’ என்ற ஸ்பெஷல் நாடகத்தில் தோன்றுகிறார், அதுவும் நரசிம்ம வேடத்தில் தோன்றுகிறார் என்று கேட்டால் யாராலே தான் அதை நம்ப முடியும்? முதலில், இதுவும் ஒரு ஹாஸ்யம் என்று எண்ணி ஜனங்கள் சிரித்தார்கள். பிறகு தெருச் சுவர்களில் விளம்பரக் காகிதங்கள் ஒட்டி யதைப் பார்த்ததும், சிரிப்பதைத் தளர்த்திக் கொஞ்சம் நிதானித்தார்கள். பின்னர், பத்திரிகைகளில் இதைப் பற்றிய முன்னறிவிப்புக்களோடு “நாடக உலகில் ஒரு நூதனப் புரட்சி!” என்ற விசேஷக் குறிப்புப் பிரசுர மாகியதும், பொதுமக்கள் அதை நம்ப முயன்று திணறினார்கள்!
இத்தனை திணறலுக்கும் மத்தியில், பொது மக்களையும்விட அதிகமாகத் திணறியவர் ஒருவர் இருந்தார்; அவர்தான் இந்தத் திணறலுக்கு எல்லாம் காரணரான திருவாளர் வேங்கடசாமி அவர்கள்- ஹாஸ்ய நடிகர், நகைச்சுவை வேந்தர், விகட சக்கர வர்த்தி, இத்தியாதி இத்தியாதி!
இருபத்தைந்து ஆண்டுகள். ஒரு கால் நூற்றாண்டு, வேடிக்கை விநோதங்களாலும், அணுகுண்டு ஹாஸ்யங்களாலும், நகைச்சுவை மத்தாப்புக்களாலும், விகடக் கல்வெடிகளினாலும் பொதுமக்களை மூச்சுத் திணறச் செய்த வேங்கடசாமி இப்பொழுது நரசிம்ம மூர்த்தியாக அவதரிக்கவேண்டுமே என்ற அந்தப் பெரிய பிரசவ வேதனையில் இருந்தார்! தம்முடைய தலை தெரிந்ததுமே பொதுமக்கள் கொட்டகை அதிர்ந்து விழும்படியாகக் கைதட்டி ஆர்ப்பரித்து விடுவார்களே, இந்த நிலையில் தெய்விகமான அதே சமயம் பயங்கரமான, ஒரு வேடத் தில் தோன்றி ஹிரண்யனை மட்டுமல்லாமல், அத்தனை பொதுமக்களையுமே பயமுறுத்தி ஆகவேண்டுமே என்று எண்ண எண்ண வேங்கடசாமிக்கு உடம்பெல்லாம் நடுங்கியது!
“நாடக உலகில் இம்மாதிரி ஒரு புரட்சி செய்தால் தான் இனிமேல் சரிப்பட்டு வரும். மீண்டும் மீண்டும் ஒரே நடிகர் ஒரே மாதிரியான தோற்றத்தில் வந்து வந்து மக்களுக்குச் சலிப்புத் தட்டிவிட்டது. தயங்காதே வேங்கடசாமி!” என்று நாடக முதலாளி பிரி முறுக் கினார்! எப்படியிருக்கும் வேங்கடசாமிக்கு?
ஒத்திகை ஆரம்பமாகும் தினத்திற்கு இரண்டு வாரங்கள் முன்பிருந்தே நரசிம்ம மூர்த்தியைப் பற்றிய வர்ணனைகளும், வீராவேசத்தின் நுட்ப இயல்புகளையும் ஆராய ஆரம்பித்தார் வேங்கடசாமி! மந்திர சாஸ்திரங் களில், நரசிம்ம மூர்த்தியின் தத் துவங்களைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறது, எப்படிச் சொல்லியிருக்கிறது, என்றெல்லாம் படித்துப் படித்து அநேக வரிகள் அவருக்கு மனனம் ஆகிவிட்டன! மேனாடுகளில் சில ஹாஸ்ய நடிகர்கள் பயங்கரமான வேடங்களில் எதிர் பாராத முறையில் தோன்றி வெற்றிகரமாக நடித்துப் பொதுமக்களின் வியப்பையும் பாராட்டையும் எப்படிப் பெற்றுக் கொண்டார்கள் என்ற குறிப்புக்களை யெல்லாம் படிக்கப் படிக்க அவருக்கு ஊக்கம் பிறந்தது! சில சமயங்களில் அந்தக் குறிப்புக்களைப் படித்துக்கொண்டே, அந்த வேகத்திலேயே முகத்தை ஒரே பயங்கரமாக வைத்துக்கொண்டு கண்ணாடிக்கு முன்னாலே போய் நிற்பார். “அடே ஹிரண்ய கசிபூ உஉஉ!” என்று சீறுவார்! அப்படியே இரண்டு கைகளையும் பிசைந்து கொள்வார். அந்த முகம் பார்க்கும் கண்ணாடியைக் கடித்துக் குதறுவதைப்போலப் பற்களை அப்படியே ‘நற நற’ என்று நெரிப்பார். உடனே அந்தக் கண்ணாடியை நோக்கிப் பாய்வார்!
நாள் ஆக நாள் ஆக, வேங்கடசாமி ஒரு பயங்கர சாமியாகவே மாறினார். சதா வேடிக்கையும் சிரிப்பும் விளையாடுகிற அவருடைய முகத்தில், இப்பொழுது அவரை அறியாமலேயே ஒரு பயங்கரம் படர ஆரம்பித் தது. இதைக் கண்டு அவருடைய நண்பர்கள் மட்டுமில்லை, சொந்த மனைவியே பயப்பட ஆரம்பித்தாள். நாடக முதலாளிக்கோ, பிறருடைய பயம் எவ்வளவுக் கெவ் வளவு அதிகரித்ததோ அவ்வளவுக் கவ்வளவு மனத்தில் உற்சாகம் எவ்வியது! “வெற்றி; சந்தேகமில்லாமல் இந்தத் தீபாவளி ஸ்பெஷல் அமோக வெற்றிதான். எத்தனையோ ‘ஒன்ஸ்மோர்கள்’ கிடைக்கும்!” என்று குதூகலப்பட்டார் அவர்.
2
இதுவரை அந்த நடிகருக்குப் பழக்கம் இல்லாத புதிய நாடகம் என்ற காரணத்தால், ஒத்திகைகள் மும்முரமாக நடந்தன. தீபாவளிக்கு முந்திய இரவு உடை-ஒத்தி கையே, மேடையிலே எப்படி நடக்குமோ அதே போன்ற ஏற்பாடுகளுடன் நடப்பது என்று திட்டம்!
ஆயிற்று; உடை ஒத்திகை ஆரம்பிப்பதற்கு முன்பு மணிகூட அடித்தார்கள்! ‘விறு விறு’ என்று திரைகள் ஏறுவதும் இறங்குவதுமாக நாடகத்தின் முன் பகுதி விரைவாக ஓடியது. இனி, நரசிம்ம மூர்த்தி தோன்றுகிற காட்சி.
ஹிரண்யனும் பிரகலாதனும் பலமாக வாதம் செய் கிறார்கள். “எங்கேடா இருக்கிறான் நீ சொன்ன அரி?” என்று கோபாவேசத்தோடு கேட்கிறான் ஹிரண்யன்.
“தூணிலும் இருக்கிறான், அணுவைச் சத கூறிட்ட கோணிலும் இருக்கிறான்” எனப் பிரகலாதன் ‘கணீர்’ என்று பதில் சொல்லுகிறான். உடனே “நன்று நன்று என்று அண்டமே குலங்கும்படியாகச் சிரிக்கிறான் ஹிரண்யன்.
இந்தக் கட்டம் பிரமாதமாக இருந்தது! முதலா ளிக்கு மிக்க திருப்தி. இதோ! தூணுக்கு மறைவிலிருந்து அந்த அட்டையைக் கயிற்றினால் அசைக்கிறார்கள். தூண் பிளக்கிறது. தோன்றி விட்டார் நரசிம்ம மூர்த்தி!
“சபாஷ்” என்றார் முதலாளி! இதற்குள் நரசிம்ம மூர்த்தி ஹிரண்யன் மேல் பாய்ந்து அவனை அப்படியே செந்தூக்காகத் தூக்கி-அடாடா! இதென்ன! ஒத்திகை யிலே திடீரென்று மாறாட்டமா? – “ஏ வேங்கடசாமி! ஏ வேங்கடசாமி! விடு! விடு! கழுத்து!” என்று ஒரு கதறல் கேட்டது!
திருவாளர் வேங்கடசாமிக்கே அப்பொழுதுதான் பிரக்ஞை வந்தது! ‘அவதாரம்’ கலைந்து கண்ணை விழித் துப் பார்த்தார்! “என்ன காரியம் செய்வதற்கு இருந் தோம்!” என்று அப்பொழுதுதான் உணர்ந்தார் அவர்!
நாடக முதலாளிக்கு மிக மிகத் திருப்தி. “தத்ரூபம்! தத்ரூபம்!” என்று வேங்கடசாமியைப் பாராட்டிக் கொண்டே, ஹிரண்யன் வேடம் போட்டிருந்த சிவ சுப்பிரமண்யத்தை மறுநாள் நாடகத்தில் கொஞ்சம் கருணையோடு கையாள வேண்டியதன் அவசியத்தையும் லௌகிகமான முறையிலே எச்சரிக்கை செய்தார்!
3
ஆயிரக்கணக்கான மக்கள், ஆடவர், பெண்டிர், குழந்தைகள், மொய்த்திருந்தார்கள்! நரசிம்ம மூர்த்தி தோன்றுகிற காட்சி! பொதுமக்கள் அனைவரும் அப்படியே அந்த ஒரு கணத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களாகவே மாறிக் கண் இமைகளைக் கொட்டாமல் மேடையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தூண் நிற்கிறது. அதன் அருகிலே ஹிரண்யனும் பிரகலாதனும்! அவர்களுக்குள் வாதம் நடக்கிறது! இதோ என்ன ஆயிற்று? “தடால்” என்று ஒரு சப்தம். தூண் இரண்டாகப் பிளக்கிறது. தோன்றிவிட்டார் நரசிம்ம மூர்த்தி!
“ஏ, ஹிரண்ய கசிபூ உஉஉ!” என்று ஒரு கர்ஜனை. அண்ட பிண்ட சராசரங்கள் எல்லாம் “கிடு கிடு கிடு” என்று நடுங்கின. ஹிரண்யன் என்ன ஆனான் ?
“மட மட மட” என்று கை தட்டல்கள் நெரிந்தன! “சபாஷ்” “பலே” “பலே பேஷ்” என்று கூச்சல்கள்! இடையிடையே “ஒன்ஸ்மோர்’கள் வேறு! அடாடா!
ஹிரண்யன் என்ன ஆனான்!
“ஏ வேங்கடசாமி, ஏ வேங்கடசாமி! அடேய்! அடேய்! கழுத்து! கழுத்து! அடேய் கொலைகாரப்…”
அவ்வளவுதான்! எல்லாம் ஒரு நொடிப்பொழுது வேலை!
“அட கொலைக்காரப் பாதகா! என்ன காரியமடா செய்தாய்?” என்று பதறிக் கொண்டே தூணுக்கு மறை விலே இருந்து ஓடி வந்தார் முதலாளி. அவரைப் பின் தொடர்ந்து இன்னும் பத்துப் பேர்! திரை தூக்குபவர் அப்படியே பாசக் கயிற்றைக் கை நழுவ விட்டு விட்டு ஓடினார்! அடுத்த கணம் கொட்டகையில் இருந்த ஜனங்கள் அத்தனை பேரும் மேடையிலே பாய்ந்தார்கள்!
“ஏ ஹிரண்ய கசிபூ உஉ!” என்று மீண்டும் கர்ஜனை! அந்தக் கூட்டத்தை யெல்லாம் பிளந்து சாடிக் கொண்டே “மேக்-ஆப்” அறையிலே பாய்ந்தார் வேங்கட சாம். “ஏ ஹிரண்ய கசிபூ உஉஉ!” என்று சிம்ம கர்ஜனை! அந்த அறையின் சுவர்கள் எல்லாம் நடு நடுங்கின! அங் கிருந்த நிலைக் கண்ணாடிகள் அத்தனையும் நிழல் விட்டு ஆடின! வேங்கடசாமியின் கண்முன்பு அந்தக் கண்ணாடி களில் அவருடைய நிழல் தெரியவில்லை. ஹிரண்ய கசிபு தான் நின்று சீறினான். எதிரும் எதிருமாக நின்ற அந்தக் கண்ணாடி வரிசைகளில் எல்லாம், ஒன்றிலே படிந்த நிழல் இன்னொன்றில் பிரதிபலித்து, மற்றொன்றிலே படர்ந்து, அடுத்ததில் தாவிப் பக்கத்தில் உள்ளதில் பாய்ந்து பத்து, நூறு, நூறாயிரம், கோடி ஹிரண்ய கசிபுகள் வேங்கட சாமியின்-இல்லை-நரசிம்ம மூர்த்தியின் முன்னால் சீறி நின்றார்கள்! மீண்டும் ஒரு பயங்கரமான யமசிம்ம கர்ஜனை!-“ஏ ஹிரண்ய கசிபூ உஉஉ!”
வேங்கடசாமி அப்படியே அந்த நிலைக்கண்ணாடியிலே போய் மண்டையை மோதிக்கொண்டு சிதறினார்!
4
“ தட தட” வென்று சத்தம் கேட்டது! இழுத்துச் சாத்தி உள்ளே பூட்டியிருந்த அறைக் கதவை முதலாளி தட்டிக் கொண்டிருந்தார்!
வேங்கடசாமி அன்றைய உடை – ஒத்திகைக்குப் பின் ஏற்பட்ட இந்தப் பயங்கரமான கனவிலிருந்து பதறி விழுந்து மூச்சுத் திணறிக்கொண்டே ஓடி வந்து கதவைத் திறந்தார்.
“என்ன வேங்கடசாமி! இன்னுமா உறக்கம்! நேற்று ஒத்திகையின் அலுப்பு உனக்கே இப்படியிருந்தால், உன் கையிலே கொண்டு கழுத்தைக் கொடுத்தானே சிவ சுப்பிரமணியம், அவனுக்கு, இன்னும் எத்தனை அலுப்பு இருக்கும்!” என்று சொல்லிக்கொண்டே சிரித்தார் அவர்!
வேங்கடசாமி சீறினார்!
“இந்த ஹாஸ்யம் எல்லாம் இனிமேல் நம்மிடம் வேண்டாம்! எனக்குக் கெட்ட கோபம் வரும்! ஆமாம்!” என்றார் வேங்கடசாமி. இதைக் கேட்டதும் முதலாளிக் குக் குரல்வளை அடைத்தது. மிரள மிரள விழித்தார்!
“இப்படியெல்லாம் முழித்தால், மசிந்துவிட மாட் டேன். நிச்சயமாக மாட்டேன். இன்றைய தீபாவளி ஆட்டம் நடக்கப் போவதில்லை! நானும் நரசிம்மனாகத் தோன்றப் போவதில்லை” என்று ஒரு போடு போட்டார் வேங்கடசாமி!
“தீபாவளி ஸ்பெஷல் ஆயிற்றே. ஏகப்பட்ட விளம்பரம் எல்லாம்………” என்று மெல்லிய குரலில் சன்ன மாக இழுத்தார் முதலாளி.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஹாஸ்ய நடிகன் பயங்கர வேடத்தில் தோன்றுவதைப் பற்றி எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் எவனையும் கொல்லுகிற வேஷம் நமக்கு ஒத்து வராது. பயங்கர மான வேஷத்தில் நடிக்க நான் பயப்படவில்லை. சம்ஹார மூர்த்தியாகத் தோன்றுவதற்கு நான் தயார். ஆனால் நம்முடைய கையால் இனிமேல் ஒரு காகம் மடியக் கூடாது! அது நிச்சயம்!” என்றார் வேங்கடசாமி, ஒரே தீர்மானமாக!
5
தீபாவளி விசேஷ நாடகம் விளம்பரத்துக்கு இணங்க நடைபெற்றது என்று சொன்னால் நீங்கள் நம்பமாட் டீர்கள். மெய்யாகவே தீபாவளியன்று வேங்கடசாமியின் “ஸ்பெஷல் புரட்சி”, எவ்வித விக்கினமும், சேதமும் இன்றி, நடைபெற்றது! ஆனால் ஒரே ஒரு மாறுதல்; ஒரு சிறு புரட்சி; “ஹிரண்யன் வதம்” என்ற நாடகத் திற்குப் பதிலாக, ‘நரகாசுர வதம்’ என்ற நாடகம் நடை பெற்றது! வேங்கடசாமி மேடையிலே கிருஷ்ணபரமாத்மா வாகத் தோன்றினார்! இதற்கு முழுக்க முழுக்கக் காரணம் வேங்கடசாமியும், அவருடைய “கொல்லா” விரதமும்தான். முக்கியமான கட்டத்தில் கிருஷ்ண பரமாத்மா அப்படியே மயக்கம் போட்டு விழுந்து விட்டார்! பக்கத்திலே நின்ற சத்தியபாமை அந்த வினாடியே வில்லை ஏந்தி, நரகாசுர வதத்தை அற்புத மாகச் செய்து முடித்தாள். வெற்றி யாருக்கு? சந்தேக மில்லாமல், ஹாஸ்ய நடிகர் வேங்கடசாமிக்குத்தான்!
இந்த தொகுப்பில் உள்ள பன்னிரண்டு கதைகளும் கல்கி, ஆனந்த விகடன், கலைமகள், வசந்தம் முதலான பத்திரிகைகளில் வெளியானவை.
மஞ்சள் ரோஜா முதலிய கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1954, பாரி நிலையம், சென்னை.
![]() |
மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 5, 2025
பார்வையிட்டோர்: 88
