தூசி




(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அகண்ட மணலைக் கண்டதும் பாப்பாவுக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. அதுவரை சமத்தாய் அப்பா கையைப் பிடித்துக் கொண்டு வந்தவள் திடீரென அவன் பிடியினின்று விடுவித்துக் கொண்டு, குறுக்கே விழுந் தடித்து ஓடினாள். ஒரு சைக்கிள் அவள் பாவாடை மேல் உராய்ந்து சென்றது. சவாரி செய்பவனின் வசை மொழிகள் காற்றோடு அடித்துக் கொண்டு போயின. கூடச் சேர்ந்து அவனும் சபித்தான்.

ஆனால் பாப்பாவுக்கு அதெல்லாம் கேட்கவில்லை. மணலைக் கைகளாலும் கால்களாலும் வாரியிறைத்துக் கொண்டு ஓடினாள்.
“அடி பாவி! யார் கண்ணிலாவது விழப்போறதுடீ! என்று பின்னாலிருந்து கத்தினான்.
‘இல்லேப்பா’!- என்று சொல்லிக் கொண்டே இன்னமும் அதிகமாய் இறைத்துக் கொண்டு ஓடினாள். அவள் வெறியைப் பார்க்க ஒரு பக்கம் சிரிப்பு வந்தது. வளர வளர, பாப்பா, அவள் அம்மாவையே உரித்து வைத்தாற்போல் ஆகிக்கொண்டு வந்தாள். அதே சிவப்பு, அதே மூக்கு, அதே மாதிரி செம்பட்டை மயிர், அதே அடங்காத்தன்மையும் பிடிவாதமும். ஒன்று செய்யாதே என்றால் அதைத்தான் கங்கணம் கட்டிக் கொண்டு செய்வாள். அவளைப் பார்க்கை யில் சந்தேகம் அடிக்கடி தோன்றும் குணங்கள் பழக்க தோஷமா; அல்லது ரத்தத்திலேயே ஊறினவையேதானா?
முக்கிய காரியமாய் கிளம்பிக்கொண்டிருப்பான். “எங்கேப்பா போறே?’ அச்சமயம் எரிச்சலாய் வரும். மறு சமயம், அமைதியாக, “அப்படியெல்லாம் கேட்கப்படாது பாப்பா-” என்று மடி மேல் வைத்துக் கொண்டு புத்தி சொல்கையில், “சரி தான். நீ போறப்போ கேக்கலே, ஆனால் நீ எங்கே போறே?” என்று கேட்கையில், ஆசையில் கடித்துத் தின்று விடலாம் போல் இருக்கும். மஹா துஷ்டை.
இருந்தாலும், இப்போதைக்கு வண்டி, காடி பயமில்லை. அலையண்டை போகாதவரை அவளை இஷ்டப்படி விளையாட விடலாம். ஆகையால் அன்று அவனுக்கு வந்த கடிதத்தை எடுத்து, மணலில் நடந்து கொண்டே மறுபடியும் படிக்க ஆரம்பித்தான். மனம் ரொம்பவும் வேதனையடைந் திருந்தது. சிற்சில பகுதிகள் சட்டு சட்டெனக் கண்ணிற்குப் பட்டன.
“பாப்பாவை இங்கே கொண்டு வந்து விட்டுவிடு. பொம்மனாட்டி வளர்த்த பிள்ளையும் புருஷன் வளர்த்த பெண் குழந்தையும் இதுவரை எப்பவுமே உருப்பட்ட தில்லை. பாப்பா இப்போ என்கிட்டேதான் இருக் கணும். ஏதோ நாலு காசு சம்பாதிக்கறேன்னு சமையலுக்கு ஆளைப் போட்டுண்டா ஆயிடுத்தா? நீ உன் மனசிலே என்னத்தை வெச்சிண்டிருக்கேன்னு நான் என்னத்தைக் கண் டேன்? எப்பவுமே இப்படி இருக்க முடியுமா? முடியற வயசா? உனக்கு உன் குழந்தையைப் பிரிய மனசு இருக்காது. ஆனால் எனக்கும்தான். அப்படியிருக்கு. நான் என்ன பண்ண முடியறது? அது அது பெருத்துப் போச்சு; நாலும் நாலு இடத் திலே சிதறிக் கிடக்கு. நாலுவிதமாயிருக்கு. சொன்னதைக் கேக்கறதா ? இந்த வயசிலே நானும்தான் என்னத்தைச் செய்ய முடியறது?”
“அப்பா – அப்பா-‘ அவன் சிந்தனைகள் கலைந்தன. பாப்பா கண்ணைக் கசக்கிக் கொண்டு அழுது கொண்டே வந்தாள். முகம் தக்காளிப் பழமாய்ச் சிவந்துவிட்டது.
“என்ன? என்ன?-”
“மண்ணு-”
“கடன்காரி, சொன்னால் கேட்கறையா?” அவள் முகத்தைப் பிடித்துக் கொண்டு கண்களில் ஊதினான்.
“அப்படியில்லை-‘” என்று ஒரு குரல் தடுத்தது. சிரித்துக் கொண்டு ஒருத்தி நின்றாள். “இங்கே வா- பாப்பா” என்று குழந்தையைப் பிடித்துத் தன்பால் இழுத் தாள். தலையை ஒரு பக்கமாய்ச் சாய்த்துக் கொண்டு, அவள் பாப்பாவின் கண்ணுள் ஊதுகையில், திடீரென அவள் செய்கை அவனுள் ஏதோ பொத்தானை அமுக்கி, மனக் கதவுகள் ஒன்றிற்குள் ஒன்று திறந்து கொண்டே போயின. “யார்-நீயா?”
குனிந்த நிலையிலே அவள் அவனை நிமிர்ந்து பார்க்கை யில், அவள் விழிகள் கூத்தாடின.
“நீ நீயானால், நான் நான்தான்–” என்றாள். “என்ன பாப்பா சரியாய்ப் போயிடுத்தா?-”
பாப்பா ஆம் எனத் தலையைப் பலமாய் ஆட்டினாள்.
“சரி வா. மடியிலே உட்கார் – உன் பேர் என்ன?”
“பாப்பா!—”
“ஓஹோ – நீ நீ, நான் நான்,பாப்பா பாப்பாவாக்கும் – அம்மா எங்கே பீச்சுக்கு இன்னிக்கு வரலேயா?”
பரீக்ஷையில் பதில் சொல்லும் பையனைப் போல் பாப்பா தன் அப்பாவை சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டே, ”அம்மா இல்லே -” என்றாள்.
”ஊருக்குப் போயிருக்காளா?”
”செத்துப் போயிட்டா’
“ஐயோ!-” அவள் குழந்தையை அப்படியே அணைத்துக் கொண்டாள். அவனுக்கு லேசாய் மாரை வலித்தது. எதற்கு யார் மேல் என்று நிச்சயமாய்த் தெரியாமல் சிறு கோபம் கூட உண்டாயிற்று.
”பாப்பா,போய் விளையாடு -” என்றான்.
பாப்பா அணைப்பிலிருந்து நழுவி சிட்டுக்குருவியாய்ப் பறந்தாள்.
2
“அடேயப்பா, எத்தனை நாட்கள்!” என்றான்.
அவள் தலையை யசைத்தாள்.
”ஆனால் நீ மாறவில்லை”
“வதங்கினால் தானே மாற முடியும்?” என்றாள். “நீ மாறியிருக்கிறாய்-” என்றாள் மறுபடியும்.
“ஆம், நான் வதங்கியிருக்கிறேன்-‘” என்றான். மார்புள் மறுபடியும் முணுக் முணுக்கென்றது. சட்டென ஏதோ நினைப்பெடுத்தவனாய் “தூசி ஊதி ஊதி உனக்கு ரொம்பவும் பழக்கமில்லையா?’ என்று கோபத்துடன் முணுமுணுத்தான். உள் குமுறலின் வேதனை இன்னமும் தணிந்தபாடில்லை.
ஒரு கணம் திகைத்தவளாய், திடீரென்று அர்த்தமான வளாய் கையைக் கொட்டி வாய்விட்டுச் சிரித்தாள். ஆனால் அவனுக்குச் சிரிப்பு வரவில்லை. சீற்றம்தான் பொங்கி யெழுந்தது.
“உனக்கு எல்லாமே சிரிப்புத்தானே!” என்றான். அவள் மறுபடியும் சிரித்தாள். ஆனால் முதல் சிரிப்பின் வெள்ளை இதில் இல்லை. “பிழைப்போ சிரிப்பாய்ச் சிரிக்கும் பிழைப்பு. வெறும் சிரிப்புக்கூட கூடாது?” என்றாள். மறுபடியும் ஏதோ ஞாபகம் வந்தவளாய் “உன் அப்பா செளக்கியமா?” என்றாள்.
புன்னகை அவனையும் மீறியது- “இல்லை காலமாய் விட்டார்” என்றான்.
“அடடா! எல்லாம் போன கதையாகவேயிருக்கிறதே!” என்றாள். ஆனால் அனுதாபத்துடன் “இல்லே, அவர்தான் போனார்-கூட அவர் மீசையும் போச்சே!”
“போலீஸ் மீசை!” என்றான்.
“அவர் போலீஸ் என்று அதுவும் எங்களுக்கு மறந்துடுமா என்ன? உன் கண் தூசியை நான் ஊதின மூன்றாம் நாள், எங்களை ஊரை விட்டே ஊதி விட்டாரே! எங்கள் முதலாளி அவரை ஒரு நாளும் மறக்கவில்லை-
“பரவாயில்லை. எல்லாம் ஞாபகம் எல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறாய்”
மறுபடியும் அவள் சிரித்தாள்.
“அடேயப்பா எத்தனை நாட்கள் ஆயின!” என்றான். ‘ஆனால் என்ன? இப்பொழுது பார்க்கையில் நிமிஷங்கள் மாதிரியிருக்கின்றன-”
“உலகில் நிமிஷங்கள் தாம் உண்டு. நிரந்தரம் ஏது?”
“ஆனால் நிரந்தரத்தையே தம்முள் அடக்கிய நிமிஷங் களும் சில இருக்கின்றன – அவைகளாவது இருப்பதினால் தான், நாம் இருக்கிறோம். அதுவும் இல்லாவிடில் அப்புறம் உலகில் இருக்கத்தான் என்ன இருக்கிறது?
“நிமிஷங்கள் அடங்கிய நிரந்தரம் – நிரந்தரம் அடங்கிய நிமிஷம்” “நாளையக் கவலை நாளைக்கு – இன்றைய தினம் இன்று–‘ என்றாள் அவள் மெதுவாய்; அடியெடுத்துக் கொடுப்பது போல்.
பாதி மயக்கத்தில் விழித்தவன்போல் அவன் திடீரென்று ‘நாம் இப்பொழுது என்ன பேசிக் கொண்டிருக்கிறோம்?” என்றான். படும் வேதனையில் புருவங்கள் சுழித்துப் போயிருந் தன பழைய நினைவுகளின் போதை அவனை இன்னும் முற்றிலும் மூடவில்லை.
“நீ அன்று பார்த்த நாடகத்திலிருந்து சில வசனங்கள்-”
தூரத்திலிருந்து வரும் அலைகளின் ஓசை அவர்களிடை யில் சுருதிபோல் இழைந்து கொண்டிருந்தது.
“நீ அவைகளைச் சொல்கையில் பிரமிக்கும்படியிருந்தாய்.”
“மேடைக்கே ஒரு களையுண்டு. அதில் நிற்கும் இடங்கள் உண்டு. விளக்கு வேலைப்பாடுகள் உண்டு. மேக்-அப்” சூட்கமம் உண்டு. தவிர பார்க்க வந்தவர், கேட்க வந்தவர் மனநிலையுண்டு-
“நீ என்னை அன்று வாரிக் கொண்டு போனாய்-” என்றான் தனக்குள்,
“அத்துடன் இல்லாமல் உங்களை நாடகத்துக்கு கூட்டிக் கொண்டு வந்த சினேகிதன் ”வேஷ அறைக்கு” (Green Room) வேறே கூட்டிக் கொண்டு வந்து விட்டான் இல்லையா? அவனும் எங்கள் முதலாளியும் பழக்கம். “இவர்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யா பிள்ளே” என்று பரிச்சியம் வேறே பண்ணி வைத்தார்-”
“அப்பொழுது நீ என்னைப் பார்த்து புன்னகை புரிந்தாய். மேக்கப் மேசையண்டை நின்று கொண்டிருந்தாய். அப்போதுதான் மேடையிலிருந்து வந்திருந்தாய் லேசாய்த் திணறிக் கொண்டிருந்தாய்-”
“வெற்றியும் தாங்குவது சிரமந்தான். ஆகையால் திணறி யிருக்கலாம்-”
“அந்த நிமிஷம் வெகு அழகாயிருந்தாய்-“
“எனக்கு வெக்கமாயிருக்கே!–” என்று கேலியாய் முன்றானையை வாய்மேல் போட்டு மூடித்தலையைக் குனிந்து கொண்டாள். ‘ஆனால் அதற்கப்புறம் இல்லையா?” என்றாள் அடுத்தபடியாக.
“ஆனால் அந்தச் சமயமே வேறு.”
“அப்படியானால் அது சமயத்தின் அழகுபோலும்! என் அழகு இல்லையாக்கும்!”
“என்னைக் கவிழ்த்த அழகு – அன்று என் தூக்கத்தையும் மறுநாள் என் பசியையும் கெடுத்தாய். உன்னையே நினைத்துக் கொண்டு எங்கே போகிறோம் என்று கூடத் தெரி யாமல், திகைப்பூண்டு மிதித்தவன் போல் சுற்றினேன்” என்றான்.
“நானும்தான் சுற்றினேன். ஊரை வேடிக்கை பார்க்க’ என்றாள். ஊர் ஊராய்த் திரிபவர்களுக்கு, ஒவ்வொரு ஊரும் வேடிக்கை-
அவள் சொல்வதையே கேளாதவன் போல், “நான் ஊர்த் தோப்புள் நுழைந்தேன்—”
“நானும் நுழைந்தேன். வேறு வழியாக-”
நான் நடந்து கொண்டே போனேன்.
“நான் வேடிக்கை பார்த்துக் கொண்டே போனேன்-”
“நான் உன்னைக் கண்டேன்.”
”நானும் நீ என்னைக் கண்ட அதே சமயத்தில் உன்னைக் கண்டேன்.”
ஆனால் உன்னோடு பேசினேனோ? பேசத்தான் தைரிய முண்டோ? அங்கு அப்பொழுது நம்மிருவரைத் தவிர வேறு யாரும் இல்லையே! அப்போது கூட-”
“வெட்கம்!-” என்றாள் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு. அவள் கண்களில் குறும்பு குதித்தது. அவன் காதில் வாங்கிக் கொள்ளாமலே மேலே சொல்லிக் கொண்டே போனான். தொட்டுத் தொட்டுத் தன்னைப் பாடுபவனைத் தன் னுடனேயே இழுத்துச் செல்லும் ராகம் போல் இருந்தன அவன் நினைவுகள். அவைகளுக்குப் போடும் சுருதிபோல் அவர் களிடையில் அலைகளில் ஓசை இழைந்தது.
“அச்சமயம் ஒரு தூசியோ பூச்சியோ பறந்து வந்து என் கண்ணுள் விழுந்தது. நான் கண்ணைக் கசக்கிக் கொண்டு தவித்தேன். நீ உடனே என்னிடம் வந்து என் தலையைப் பிடித்துக் கொண்டு என் கண்ணுள் ஊதினாய்-” பேச்சு அந்த இடம் வந்ததும், தடுமாறி நின்று விட்டது. அவன் அப்பொது அங்கு இல்லை. விவரித்து வரும் அந்த நிமிஷத்தில் அமிழ்ந்து விட்டான். அவன் கட்டிக் கொண்டே வந்த நினைவுத் தொடர்பைத் துண்டிக்காமல் காப்பாற்றுவது போல் அலைகளின் ஓசை, கனமாய் அவர்களிடையே சுருதி போல் இழைந்தது.
“அந்த நிலையில் நான் ரொம்பவும் அழகாயிருந்தேன் என்று சொல்லேன்” என்றாள் கிண்டலாய், புன்னகை புரிந்து கொண்டே. அவன் அவனில் இழைந்து இருக்கும் நிலையை அவள் வெகுவாய்
வெட்கத்தில் அவன் முகம் சிவந்தது. அவன் அவஸ் தையைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு ஆனந்தம் அதிகரித்தது. இரக்கமில்லாமல் வாட்டிக் கொண்டே போனாள்.
“என்னை வெட்கங் கெட்டவள் என்றுதான் சொல்லேன்-‘ என்றாள். “அந்த மாதிரி, முன்பின் பழக்க மில்லாமல், நானே வந்து உன்னைத் தொட்டு உன் முகத்தைப் பிடித்து கண்ணுள் ஊதினேனே!”
பேச முடியாமல் தவித்தான்.
“அரங்கத்தில் நடிக்கும் எங்களுக்கு எல்லாமே சகஜம் தான். நாங்களாக நடிக்கும் வெட்கம் தவிர சுய வெட்கம் எங்களுக்கு ஏது? ஆனால் அச்சமயம் என் மனதில் உன்மேல் சூழ்ச்சியொன்றும் கிடையாது. உன் கண்ணில் விழுந்தது- நீ அவஸ்தைப் பட்டாய்- நான் ஊதினேன் அவ்வளவுதான்-’
“என் கண் தூசியை மார்புள் ஊதிவிட்டாய்” என்றாள். குரல் தழதழத்தது. மார்புள் மறுபடியும் முணுக்முணுக் கென்றது.
‘ஏதேது, ஒரு நாள் நாடகம் பார்த்ததிலேயே வசனங் கட்டக்கூட வந்து விட்டார் போலிருக்கிறதே”
அவன் முகத்தில் ஜுரம் அடித்தது. “உனக்கு எல்லா வற்றையுமே நடித்து நடித்து பொய்மையிலேயே பழகிப் பழகி உண்மையை அடையாளம் கண்டு கொள்ளக் கூட மறந்து விட்டது-
கோபம் தொண்டையை அடைத்ததால் ஒரு முறை கனைத்துக் கொண்டான்.
“கனைப்புக் கூட உன் அப்பா மாதிரியே இருக்கிறதே;~” என்றாள். “அப்பொழுது நம் பின்னாலிருந்து வந்ததே, அந்த கனைப்பு சப்தமாகவே இருக்கிறதே! திடீர் என்றுநம் பின்னால் ஆள் முளைத்திருந்ததைப் பார்த்தும், எனக்கே தூக்கிவாரித் தான் போட்டது. அப்பொழுது உன் அப்பா என்று எனக்குத் தெரியுமா? ஒரு புது நாடகத்துக்கு ஒத்திகை ஆரம்பிக்கிறதுக்கு முன்னால், கதை புரிவதற்காக மூலப் புஸ்தகத்தை நாங்கள் படிப்பது உண்டு. பெரிய எழுத்து – ஐதீகப் படங்களுடன் என்று இருக்கும். அவைகளில் இருக்கும் மதுரை வீரன், காத்த வராயன் பொம்மை மாதிரியிருந்தார் உன் அப்பா. வாட்ட சாட்டமாய், குத்து மீசையும், மேட்டு விழியும், வெள்ளை முழியிலே கோபத்திலே ஆடும் கறுப்பு முழியும் அதுவுமாய் ஆள் பார்க்கக் கொஞ்சம் அச்சமாய்த்தான் இருந்தார். உனக்குக்கூட முகம் வெளுத்து விட்டது.”
“நான் அப்பாவுடன் எப்பவுமே நெருங்கிப் பழகிறது இல்லை.”
“ஆனால் அவர் என்னைத்தான் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் “என்னம்மா- நீ யார்?” என்றார். “நான் புது நாடகக் கம்பெனி,” “உனக்கு இங்கே என்ன வேலை?’
வேடிக்கை பார்க்க வந்தேன் “இல்லை ஒரு வேளை இதையும் நாடக மேடை என்று நினைத்துக் கொண்டாயோ என்று பார்த்தேன்- “உன் தகப்பனாருக்கு மரியாதை மீறாமலே அவமானப் படுத்த நன்றாய்த் தெரிகிறது-”
‘நான் ரொம்பவும் குழம்பிப் போயிருந்தேன். எனக்கு இப்பொழுது ஒன்றும் ஞாபகமில்லை’ என்றான்.
“நான் மறக்கவில்லை? இப்பொழுது வேடிக்கையாயிருந் தாலும் அப்பொழுது இல்லை. நான் ஒன்றுமே பேசவில்லை! ‘ஏன் இன்னும் நிக்கறே?’ என்று அவர் போட்ட கர்ஜனையில் நான் அங்கு நிற்கவேயில்லை. ஓட்டம் பிடித்தேன்-அப்புறம் என்ன நடந்தது?”
“என்னை உன்னைப் பற்றிக் கேட்டார். ஆனால் எனக்கு என்ன தெரியும்? உன் பேர் கூடத் தெரியாதே! பிறகு நாடகக் கம்பெனி பேரை மாத்திரம் கேட்டுக் குறித்துக் கொண்டு என்னை ஒரு தடவை துருவியெடுக்கிறாப் போல் பார்த்து விட்டு ‘நீ போ’ என்று விட்டார்-”
கையைக் கொட்டிக் கொண்டு அவள் வாய் விட்டு சிரித்தாள்.
“போனது நீ இல்லை, நாங்கள் தான். அன்றையிலிருந்து மூன்று நாட்களுக்குள் உன் தகப்பனார் போலீஸ் உடுப்பில் கொட்டகைக்கு வந்து, மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு, அது சரியில்லை இது சரியில்லை, என்று இல்லாத குற்ற மெல்லாம் பாராட்டி ‘லைசென்சை ‘யே ரத்தாகும்படி செய்து எங்களை ஊரைவிட்டு விரட்டி விட்டார். கம்பெனி அவ்வளவு சுருக்க ஊரை விட்டுப் போனதற்குக் காரணம் அது இல்லை நீயும் நானும்தான் என்று என் முதலாளியிடம் நானும் காட்டிக் கொள்ளவில்லை. எனக்கு ஏகப் பயம். உன் தகப் பனாருக்கு அவர் பயம், நான் இன்னும் தங்கியிருந்தால் பிள்ளை கெட்டுப்போய் விடுவானோ என்று. அது தானே!”
‘இருக்கலாம்’ என்றான் மறதியுடன் எங்கோ பார்த்துக் கொண்டு, “நீ ஆனால் ஒரு பெரும் ஜுரம் மாதிரிதான். அப்புறம் ரொம்ப நாள் என்னுள் அடித்துக் கொண்டிருந் தாய்.
“பிறகு என்ன நடந்தது?’
இதென்ன கேள்வி? அவனுக்கு எரிச்சலாய் வந்தது. “சும்மா என்ன நடக்கும் சினிமாவா, டிராமாவா, ஏதாவது நடந்து கொண்டேயிருக்க?”
கல்யாணம் நடக்கவில்லையா? குழந்தை பிறக்கவில்லையா? பெண்டாட்டி காலமாகவில்லையா? இதெல்லாம் நடந்ததில் சேர்த்தியில்லையா? புன்னகையை அவனால் அடக்க முடியவில்லை. “ஆமாம் சரி, உனக்கு என்ன நடந்தது?’
“எனக்கும் கல்யாணம் ஆயிற்று-” அவன் கண்கள் சட்டென அவள் கழுத்தில் பாய்ந்தன. மற்ற நகைகள் இருந் தனவேயன்றி சரடு இல்லை. (ஆனால் அதனால் என்ன? கல்யாணத்திலும் எத்தனையோ விதங்கள் இல்லையா? ஆயினும் கழுத்தில் எவ்வளவு இளமை ததும்பிக் கொண்டிருக்கிறது!)
“எங்கள் கம்பெனி முதலாளியைப் பண்ணிக் கொண்டேன்-” என்றாள் தொடர்ந்து.
“ஓ?”
”ஆம்” என்றாள் அழுத்தத்துடன். அவள் காரியத்தை அவனிடம் சாதித்தே தீரவேண்டும் போல் “எனக்குத் தெரியும் பணத்தின் அருமை, நான்தான் பளிச்சென்று சொல்கிறேனே- எங்கள் பாடெல்லாம் அடிக்கும் வரைதான் அதிர்ஷ்டம். அப்புறம் அதோ கதிதான், என்னைப் பெற்றவர்களையே எனக்குத் தெரியாது. நான் ஒரு அனாதை விடுதியில் வளர்ந்து கொண்டிருந்தேன். நாடகத்திற்கு ஆள் தேடுகையில் எங்கள் முதலாளி என்னை அங்கிருந்து கம்பெனியில் சேர்த்துக் கொண் டார். அதனால் பிழைப்பின் கஷ்டம் என்பது என்ன என்று எனக்குத் தெரியும், பணத்தின் அருமையும் எனக்குத் தெரியும்.”
“இப்பொது என்ன அதனால்?”. என்றான், பேச்சை மாற்றும் தினுசில்.
“ஒன்றுமில்லை. அவர் என்னைப் பண்ணிக் கொள்ள ஆசைப்பட்டார், நானும் அவரைப் பண்ணிக் கொண்டேன். அவருக்கும் வயசாய் விட்டது காலமும் ஆகிவிட்டது. எல்லா வற்றையும் என் பெயருக்கு எழுதி வைத்து விட்டுப்போன தினால் நான் இப்பொழுது செளக்கியமாயிருக்கிறேன்.”
“கம்பெனி?”
“அதெல்லாம் எங்களுக்குக் கலியாணம் ஆனவுடனே முடி யாகி விட்டது. எனக்கு மறுபடியும் ஊர் ஊராய்ப் போய்த் திரிந்து கொண்டிருக்கும் பிழைப்பு அலுத்து விட்டது-”
அவன் அவள் அபிப்பிராயத்தை ஆமோதிப்பது போல் தலையை அசைத்தான்.
‘ஆனால்—’ என்றாள் மெதுவாய்.
“என்ன -”
“ஆனால் அந்த பழைய துரு துருப்பு இன்னமும் அடங்க வில்லை. முன்னைவிட இப்பொழுது எவ்வளவோ சௌக்கிய மாய்த் தானிருக்கிறேன். இஷ்டப்பட்டதை வாங்கிக் கொள்ள முடிகிறது. இஷ்டப்பட்டதைச் செய்ய முடிகிறது, இருந்தும் சில சமயங்களில் பொழுது தான் போக மாட்டேன் என்கிறது. காலம் பாறையாய்த் தலைக்கு மேல் தொங்குகிறது. அப்போ தெல்லாம் இருந்த பொழுது போதாது-”
‘அப்பா – அப்பா-ஆத்துக்குப் போவோம் – ‘ என்று பாப்பா ஓடி வந்து பேச்சைக் கலைத்தாள்.
‘அட, இருட்டி விட்டதே-‘ என்றான் ஆச்சரியத்துடன். நேரமானதே அப்பொழுதுதான் தெரிந்தது.
‘அதுக்குள்ளேயே போகணுமா என்ன?’ என்றாள். “பாப்பா இங்கே வா உனக்கு நான் முந்திரிப் பருப்பு வாங்கித் தரேன்-என் மடிலே படுத்துக்கோ-” என்று குழந்தையைக் கையைப் பிடித்து இழுத்தாள். ஆனால் பாப்பாவா ஏமாறு கிறவள். அவளை உதறிக் கொண்டு அப்பா சட்டையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தாள். “வா அப்பா போகலாம்” என்றாள் அழுகைக்கு அடிகோலும் முனகலில்.
“அது ஒரு பெரும் சண்டி- பாப்பா ஏதாவது நினைத்துக் கொண்டு விட்டால் அப்புறம் அவள் எண்ணத்தை மாற்றவே முடியாது என்று சொல்லிக் கொண்டே, மேல் துண்டை உதறிக் கொண்டே எழுந்திருந்தான்.
இருவரும் சற்றுநேரம் தூரத்து சமுத்திர நீலத்தைப் பார்த்துக் கொண்டு மௌனமாய் நின்றனர்.
“சௌகரியப் பட்டால் வீட்டுப்பக்கம் வாயேன் – அடையாறில் இருக்கிறேன் – இந்தா என் விலாசம்-” என்றாள் ஏதோ சாதாரணமாய்ப் பேச்சு வாக்கில் சொல்வதுபோல். ஆனால் அந்த அனாயசம் எவ்வளவு கஷ்டப்பட்டு வர வழைத்துக் கொண்டதென்று அவள் குரலின் ஜாக்கிரதை உணர்த்தியது.
‘அதற்கென்ன?’ என்று பதில் சொல்லி விட்டு, பாப்பா வின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான். இரண்டொரு முறை திரும்பிப் பார்த்தான், அவள் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள்.
3
சாப்பிட்டு விட்டு இப்பொழுது அவன் அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். பாப்பா அவன் படுக்கையில் விளையாடிக் கொண்டேயிருந்து விட்டு அப்படியே கண் அயர்ந்து விட்டாள். மொட்டுப்போல் வாய் சற்றே திறந்த வண்ணம், அரைத் துணி போன இடம் தெரியாமல் கையை யும் காலையும் விசிறிப் போட்ட வண்ணம் அவள் தூங்கு வதைப் பார்க்க வேடிக்கையாயிருந்தது. குழந்தைகள் பாடு நிம்மதி. பேசிக் கொண்டேயிருக்கின்றன! அப்படியே தூக்கத்துள் நழுவி விடுகின்றன. விழிப்பதும் அப்படித்தான்.
மேஜையில் அவன் எதிரில் ஒரு கடிதம் பிரித்துப் போட்டபடியிருந்தது. சாயங்காலம் கொடுக்க மறந்துட் டேன் என்று சமையற்காரப் பாட்டி, இப்பொழுதுதான் அவள் வீட்டுக்குப் போகுமுன் கொடுத்து விட்டுப் போனாள்.
அவன் மாமனாரிடமிருந்து வந்திருந்தது. மேம்பாடாய்ப் பார்க்கையிலேயே ஆங்காங்கு சில வார்த்தைகள் தெறித் திருந்தன.
“மாப்பிள்ளைக்கு அனேக ஆசீர்வாதம், உங்களுக்கு எப்படி எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தா லும் நான் எழுதும் விஷயத்திற்குப் பாப்பாவை என் மனச் சாக்ஷியாய் வைத்துக் கொண்டு எழுதுகிறேன்.
“உங்களுக்குக் கொடுத்தபின் எனக்கிருப்பது ஒரு பெண் தான் என்றாலும் அவளுக்கு வரன் தேடித் தேடி இன்னமும் தகைந்த பாடில்லே. ஒன்று ஒத்துக் கொண்டால் ஒன்று ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறது. எனக்கும் அலுத்து விட்டது. வயதும் ஆகிவிட்டது. தவிர உங்களை விட சிரேஷ்டமாய் யார் எங்களுக்குக் கிடைக்கப் போகிறார்கள்? அவளையும் ஜாடை மாடையாய் அறியப் பார்க்கையில், இந் தச் சம்பந்தத்தைத் தான் விரும்புகிறாள் என்று தெரிகிறது.
“ஆகையால் உங்கள் தாயாருக்கு எழுதியிருக்கிறேன். அவளை நேரிலும் போய்ப் பார்க்கப் போகிறேன். இருந்தாலும் இந்தக் காரியத்திற்கு உங்கள் சம்மதமில்லாமல், மற்ற வர் சம்மதம் அத்தனையுமிருந்தும் என்ன பிரயோசனம்?
“மாப்பிள்ளை! உங்களுக்கு இந்த லிஷயம் எப்படிப் பிடிக்கும் என்று நான் எப்படிச் சொல்வது? முதல் சம்பந்தத் தில் உங்களை நாங்கள் ஏமாற்றி விட்டோம் என்ற எண்ணம் இருந்தாலும் இருக்கலாம். அதனால் மெத்த கோபம் இருந் தாலும் இருக்கலாம். ஏன் எனில் என் மூத்த பெண் முழுக்க முழுக்க சமத்தாய் இருந்திருப்பாள் என்று நான் சொல்லிக் கொள்ள முடியாது. முதல் குழந்தையாய், செல்லக் குழந் தையாய், வளர்ந்து விட்ட அவளே ஒரு தினுசு தான். சுற்று முற்றுமிருப்பவர்கள் எல்லாம் கலியாணம் ஆகி, குடும்பத்தில் அடிபட்டால் சரியாய்ப் போய் விடுவாள் என்று சொன்னார் கள். ஆனால் காரிய பூதத்தில் அப்படி நேரவில்லை.”
“அவள் அப்படி யானதினால், அவள் தங்கையும் அப்படியென்று நீங்கள் நினைக்கலாகாது. அத்தனைக்கத் தனை என் அடுத்த மகள் அடக்கம் பொறுமை, குணங்கள் எல்லாமே வேறுபாடுதான். ஒரே வயிற்றில் பிறந்த இரண்டும் இரண்டு விதமாயிருப்பது விதியின் வேடிக்கை என்பது தவிர வேறு என்ன சொல்வது? என் பெண்ணின் பெருமையை நானே அடித்துக் கொள்வது அழகல்ல. இருந்தும் நீங்கள் சுட்டப்பாலில் நாக்கைப் பொரித்துக் கொண்டதால் பாலே சுடும் என்று ஆகிவிடுமா? நான், என் மனோவேகத்தில் ஏதாவது உளறியிருந்தால்மன்னிக்க வேண்டும் – நல்ல வேளையாய் என் குடும்பம் உங்கள் தாயாருக்குப் புதிதல்ல. என்னையும் என் மனைவியையும் எங்களுக்குக் கலியாணம் ஆகு முன்னரே அவள் அறிவாள்-‘
கடிதத்தை வீசி ஒருபுறம் எறிந்தான். எல்லாருமே கடிதம் எழுதுவதில் சாமர்த்தியமாய்த்தான் இருக்கிறார்கள்.
வேகமாய் அறையில் முன்னும் பின்னுமாய் உலாவ ஆரம்பித்தான். அக்கடிதம் அவன் மனதை வெகுவாய்க் கிளறிவிட்டது. இன்று முழுதுமே என்னென்று தெரிய வில்லை, அவனுக்கு எதைக் கண்டாலும் கோபமாய் வந்தது.
எதிர் வீட்டில் ஒரு பெண் பிடில் பயிலும் சப்தம் ஜன்னல் வழி காற்றில் மிதந்து வந்தது. ஒரு பாட்டின் ஒரு அடி பிடி படவில்லை போலும். திரும்பத் திரும்ப அதையே வாசித்துக் கொண்டிருந்தாள், ஒரே மாதிரியாக அதே இடத்தில் அதே தப்பைப் பண்ணிக்கொண்டு. இப்பொழுதைய மனநிலையில் அது காதைப் பொளிந்தது. எரிச்சலாய் வந்தது. ஜன்னலைப் படாரென்று சாத்திவிட்டுத் திரும்பினான். எதிரே சுவற்றில் மாட்டியிருக்கும் படத்திலிருந்து அவன் மனைவி அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள். அவனைக் கேலி செய்வது போலிருந்தது. பின்னால் கையைக் கட்டிக்கொண்டு மேலுதட்டை கீழ்ப்பல்லால் கவ்விக் சொண்டு நின்றான். பெருஞ் சீற்றம் அவனுள் எழுந்தது.
‘உன்னைப்பற்றி நினைக்க வேண்டுமென்றா? இல்லை – ‘ என்ற வார்த்தைகளை வாய்க்குள் உருவாக்குகையில், நாக்கு மூடிய வாயின் மேற்கூரையைப் பிளக்க முயன்றது.
விட்டத்திலிருந்து ஒரு பல்லி ‘கட், கட்’ என்று பேசியது.
‘நான் நினைக்கச் சொல்லவில்லையே!’
‘நீ எனக்கிருந்த ஆதரவிற்கும் அரவணைப்பிற்கும்!’ என்றான் மறுபடியும், பல்லைக் கடித்துக்கொண்டு.
எந்தத் தினுசில் அவள் சரியாயில்லை என்று திருஷ்டாந்தமாய் இப்பொழுது கூடச் சொல்ல முடியவில்லை. அவளுடன் நடத்திய வாழ்க்கை, வண்ணான் மடியிலிருந்து கட்டிய துணி போலிருந்தது. தேடினால் முட்கள் அகப்படா. ஆனால் குத்திக்கொண்டேயிருக்கும். ஓரிடத்து முள்ளை யெடுத்தால் இன்னொரு இடம் குத்திக்கொண்டிருக்கும். அவளுடையகாரணமற்ற கோபங்களும், சமயமற்ற சிரிப்புக்களும், பிறருக்கு கஷ்டம் நேர்ந்தாலும் தன் இஷ்டத்தைப் பூர்த்தி செய்து கொள்ளும் பிடிவாதமும், சிறுசிறு அசட்டுத் தனங் களும் அவளுடன் நடத்திய வாழ்க்கையை ஒரு தொடர்ந்த வேதனையாக்கி விட்டன.
கடைசி காலத்தில்கூட அவள் மனஸ்தாபத்துடன்தான் போனாள். நவராத்ரி அவள் உடன் பிறந்தவன், சாதாரண மாய்ப் பார்க்க வந்திருக்கையில், திடீரென்று பிறந்த வீட்டுச் போக வேண்டும் என்று சபலம் கண்டு கொலுப் பார்க்கப் பிடிவாதம் பிடித்து, அவனுடைய சௌகரியங்களையும் சம்ம தத்தையும் பொருட்படுத்தாமல் அவள் தம்பி சொல்லும் புத்திமதிகளையும் கேட்காமல் அழுது அழுச்சாட்டியம்பண்ணி குழந்தையைக் கூட்டிக் கொண்டு தம்பியுடன் பிறந்தகம் போய் விட்டாள்.
அச்சமயம் அவள் மேல் அவனுக்குக் கடுங்கோபம்தான். அவள் திரும்பி வந்தால் அவளைப் படியேற விடுவதில்லை என்று கறுவிக் கொண்டிருந்தான். அடுத்த நாளைக்கடுத்த நாள் அவன் மாமனாரிடமிருத்து கடிதம் வந்தது. பெண்ணின் அசட்டுத்தனத்துக்கு மன்னிப்புக்கோரி. தானே அவளைக் கொண்டு வந்து விடுவதாக. ஆனால் மனம் இளகவில்லை. வைரம் முற்றியது. அதற்கடுத்த நாள் ஆபிஸுக்குத் தந்தி வந்தது. அவன் மனைவிக்கு காலரா கண்டு ஆபத்தான நிலையிலிருக்கிறாள் என்று. இந்தத் தந்தியே ஒரு சூழ்ச்சியா யிருக்கும் என்று சந்தேகம் அடித்துக் கொண்டாலும் மனம் கேட்கவில்லை. ஆத்திரம் எல்லாம் எங்கோ பறத்தோடிப் போயிற்று. அன்றிரவு ரயிலையே பிடித்து எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிக்கொண்டு போனான்.
வாசலில் பாப்பாவை இடுப்பில் தூக்கிய வண்ணம் அவன் மைத்துனிதான் எதிர்ப்பட்டாள். அப்பொழுது ஒன்றும் தோன்றவில்லை. ஆயினும், இப்பொழுது நினைவில் அவளை வரவழைத்துக் கொள்கையில், அவளுடைய வெளுத்த சிவப்பும், கீழ் நோக்கிய சோகப் பார்வையில் தோன்றிய மௌனமான வரவேற்பும் சட்டெனப்படுகிறது.
உள்ளே கூடத்து அறையுள் போனான். எல்லோரும் அவளைச் சுற்றிக் குழுமியிருந்தனர். “மாப்பிள்ளை வந்து விட்டார்!-” அவன் வருகை ஒரு சிறு பரப்பரப்பை உண் டாக்கியது.
‘வந்துட்டேளா!’ அவளைப் பார்த்ததும் ‘திக்’ கென்றது இந்த மூன்று நாட்களுக்குள் அடையாளமே மாறிவிட்டது. கண்களிலும், கன்னங்களிலும் நெற்றிப் பொட்டிலும் விழுந் திருக்கும் குழிகளைக் கண்டதும் முதுகுத் தண்டில் ‘சில்’ லென்றது.
‘இப்படி உட்காருங்கள்’ என்றாள், குரல் அவ்வளவு பலஹீனமாயில்லை. “நான் என் ஆத்துக்காரருடன் பேசணும்; நீங்கள் எல்லோரும் போங்கோ-‘
அவனையும் அவளையும் தவிர அறை காலி ஆயிற்று, அவள் விரல்கள் சும்மாயில்லை. மேற்போர்வையின் ஓரத்தைச் சீண்டிக் கொண்டேயிருந்தன. அவற்றின் மேல் பதிந்த பார்வையுடன், “நான் திரும்பி வராத ஊருக்குப் போறேன். அதனால் போயிட்டுவரேன் என்று சொல்லிக் கிறதுக்கில்லை…” என்றாள்.
அவன் உள்ளம் நெகிழ்ந்தது. மூர்க்கத்தனமாய் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு, “பைத்தியம் மாதிரி உள ராதே-” என்றான், அவள் சிரிக்க முயன்றாள். “எனக்குச் சிரிச்சாக்கூட வேதனையாயிருக்கு- ஆனால் எனக்கு நாடி இன்னி விடி காலையிலே விழுந்துடுத்து. கால் முழங்கால் வரை செத்துப் போயாச்சு-‘ என்றாள்.
கண்களை உறுத்திக் கொண்டு கிளப்பும் கண்ணீரை அப்படியே உள்ளுக்கு அறைய வீணே முயன்றான். நல்ல கவளையாய் அவள் அவனைப் பார்க்கவில்லை. தன் விரல் ைேளயே பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘இப்பொ எனக்கு ஒண்ணு தோன்றது-‘என்றாள் அவள். வார்த்தைகளுக்கு அவன் காத்திருந்தான். “நாம்ப பேசி யிருக்க வேண்டியதும் செஞ்சிருக்க வேண்டியதும் பேச வேண்டியதும் செய்ய வேண்டியதும் ரொம்பரொம்ப இருக்கு ஆனால் இப்போ நேரமில்லை. நாளெல்லாம் நிமிஷமாய் ஓடிப்போயிட்டாப் போலிருக்கு -”
ஆம் என அவன் தலையை அசைத்தான். வாழ்க்கை யிலேயே நிமிஷங்கள் தாம் இருக்கின்றன.
திடீரென்று கோபத்தில் பொங்கும் அவசரத்துடன் ‘ஆனால் நான் உங்களை மன்னிப்புக் கோருகிறேன்னு அர்த்தமில்லை -” என்றாள். ‘சரி சரி’ என்று அவளைச் சமா தானப்படுத்தினான். இப்பொழுது அவளுடைய நம்பிக்கை யற்ற நிலைக்கு அவன் மனம் தனியாய் இரங்கிற்று. இருந்த வரைக்கும், இருக்கும் நாளெல்லாம் பொறுப்பற்று வி இளையா டிக் கொண்டிருந்து விட்டு, திடீரென்று எதிர்பாராதவித மாய், எதிர்பாராத சமயத்தில், அந்த இருப்பிற்கே முற்றுப் புள்ளியும் எதிர்பட்டுவிடவே, அவளுக்கு இதுவரை இருந்த இருப்பே திகைப்பாயிருந்தது. சாவு, தன்னைக் கண்டு அவள் பயப்படுவதற்குக்கூட அவளுக்குச் சகவாசம் அளிக்கவில்லை. அந்த முதல் திகைப்பிலேயே அவளைக் கொண்டு போய்க் கொண்டிருந்தது, அதன் கருணையே அதில்தான் இருக்கிறது.
“பாப்பா-” என்று ஆரம்பித்தாள்.
“பாப்பாவைப்பற்றிக் கவலைப்படாதே. நான் அவளை! என் கண்ணுக்குக் கண்ணாய்ப் பார்த்துக் கொள்வேன்.”-அவன் மார்பு வாய்வழி வெளியே குதித்து விடும் போலிருந்தது.
“ஆமாம் இப்படி சொல்லிப்பிட்டா நீங்கள் அப்புறம் பண்றத்தை யெல்லாம் நான் பாத்துண்டு இருக்கப் போறே னாக்கும்?” அவன் மனம் இறுகியது. சாகுந் தறுவாயில்கூட பூனை எலியுடன் விளையாடுவது போல்தான், அவனுடன் அவள் விளையாடினாள். அடுத்த நிமிஷம் “இல்லை இப்படி உங்களிடம் சொல்லி ஒப்படைக்காததினாலே, பாத்துக்காமே இருக்கப் போறேளா?-” அந்த விரக்தியும் அவனுள் ஊசி போல் ஏறியது. மாற்றி மாற்றி. இரக்கமில்லாமல் நெருப் பிலும் நெய்யிலுமாய் அவனை வதக்கினாள். கடைசிவரை அவள் கார்க்கோடகிதான்.
திடீரென்று அவள் முகத்தில் கபடம் புகுந்தது. எங் கேயோ பார்த்துக் கொண்டு, “பகையானாலும் பத்துநாள் பாக்கறதுண்டு-” என்றாள்.
‘என்ன சொல்கிறாய்?’ என்றான், ஒன்றும் விளங்காமல்? ஆனால் அவளுக்கு நினைவு அலைய ஆரம்பித்து விட்டது, ”பாப்பா இப்பவே என்னிடம் வரமாட்டேன் என்கிறாள்- இவள் சித்தி இடுப்பிலேயே சவாரி பண்ணிண்டிருக்காள்- மற்றவாள் எல்லாம் எங்கே? நீங்கள் எப்போ வந்தேள். அவளை வரச் சொல்லுங்கோன்னா
அப்புறம் அவளுக்குச் சுய நினைவு வரவில்லை!
“பகையானாலும் பாக்கறதுண்டு-” அவள் அர்த்தம் நாளாக ஆக அவனுள் ஊறஊற பதைப்பாயிருந்தது. கடைசி வரை அவள் கார்க்கோடகிதான். செத்த பிறகுகூட ஏளனத் தினாலேயே அவனை அவள் ஆள முயல்வதும், அவனுள் ளேயே அவனை அவனாலேயே அவள் கட்டுவதைக் கொஞ்சம் கொஞ்சமாய் உணர்கையில்……….
நினைவுகளிலிருந்து திடுக்கென விழித்தெழுந்தான். அறையில் கூட்டிலடைபட்டது போல் முன்னும் பின்னும் உலாவிக் கொண்டிருப்பதைக் கண்டான். எதிர் வீட்டுப் பிடில் சாதகத்திலிருந்து அந்தப் பாழும் பல்லவி திரும்பத் திரும்பத் தன்னையே தோற்றுவித்துக் கொண்டிருந்தது. கோபத்துடன் ஜன்னல் பக்கம் மறுபடியும் திரும்பினான். அதில் பதிந்திருந்த கண்ணாடியில் ஒரு உருவம் சிரித்துக் கொண்டு எழுந்தது. சமுத்திரக் கரையில் இன்று சந்தித்த வளின், வெள்ளைக் கழுத்தும், கட்டு உடலும் விழிகளும் கண்ணாடியிலிருந்து அவனை அழைத்தன.
“சௌகரியப் பட்டால் வீட்டுப் பக்கம் வாயேன்!- அவள் மேல் இருந்த புனுகின் மணம் திடீரென அறையில் கமழ்ந்தது.
அவன் தன் வசமில்லை. உள் தூசி உறுத்த ஆரம்பித்து விட்டது. அது இன்னும் போகவில்லை. புத்தம் புதிதாய்க் குத்தியது போல், பழைய வாசனையின் புது வேகத்துடன், விண் விண் எனத் தெறிக்க ஆரம்பித்தது. கைக் கடியாரத் தைப் பார்த்துக் கொண்டான். இன்னும் நேரமாகவில்லை. அவளை யழைத்துக் கொண்டு ஒரு சினிமாவுக்கோ டிராமா வுக்கோ போகலாம்- சௌகரியப் பட்டால்-அந்த வார்த்தை யில் தான் எவ்வளவு சூட்சுமமான அழைப்பு!-
சட்டென ஜிப்பாவை மாட்டிக் கொண்டான். கண்ணாடி யில் பார்த்துக் கொண்டு அவசரமாய் இருமுறை தலைமயிரை சீவி விட்டுக் கொண்டான். பையில் பணம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டான்.
“எங்கேப்பா போறே?”
‘உம் -?’ கதவின் குமிழின் மேல் வைத்த கை அப்படியே நின்றது. ஒரு மூச்சு திணறி வந்தது, களவும் கையுமாய்ப் பிடிப்பட்டவன் போல் மீளாத இடத்திற்குப்போனவனை அக் கேள்வி திரும்ப அழைத்தது.
“குளிர்ரது அப்பா-”
அவள் சொன்னது அவனுக்குச் சரியாய்க் காது கேட்க வில்லை.ஒரு நிமிஷத்தின் நிரந்தரம் அவனைத் தன்னுள் அமிழ்த்திக் கொண்டிருந்தது.
“குளிர்ரது அப்பா-‘ என்று குழந்தை மறுபடியும் முனகி னாள். அப்பொழுதுதான் அவன் தன்னில் மீண்டான். சொக் காயைக் கழற்றி எறிந்தான். தன் கோட்டையெடுத்து குழந் தைக்கு மாட்டினான். பாப்பா அப்பொழுது பார்க்க வேடிக் கையா யிருந்தாள்.
அவளைப் பிடித்த ஜூரம் அவளை விட்டதின் அடையாள மாய். முகத்தில் வேர்வை முத்து முத்தாய் நின்றது. ஜன்னல் கதவைத் திறந்தான். காற்று மோதியது. அப்பாடா பல்லவிக் கடுத்த அடி அப்பொழுது தான் எதிர் வீட்டுப் பிடியி லிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தது.
‘அப்பா என்கிட்டவந்து படுத்துக்கோயேன்-என்னை அணைச்சுக்கோயேன் – ” என்று குழந்தை கொஞ்சினாள்.
“இதோ வந்து விட்டேன்- ”
அன்று அவனுக்கு வந்த கடிதங்களுக்கு அவசர அவசர மாய்ப் பதில் எழுதினான். நாலு நாலு வரிகள் தாம். உடனே அவைகளைக் கொண்டு போய் வாசற்படியில் நின்ற தபால் பெட்டியில் போட்டு விட்டு வந்தான். அவனின்று ஒரு பெரு மூச்சுக் கிளம்பியது.
“பாப்பா – உன் சித்தியும் பாட்டியும் வரப்போறா!-‘ என்றான், பக்கத்தில் படுத்துக் கொண்டு மேலே போர்வையை இழுத்துக் கொண்டே.
“எப்போ அப்பா?-”
“சுருக்க-”
பாட்டியும் சித்தியும் வந்ததும், பாட்டி தன்னைவேடிக்கை பார்க்க அழைத்துக் கொண்டு போகப்போகும் இடங்களைப் பற்றியும், சித்தி தனக்கு தைத்து உடுத்தப் போகும் புதுப் புது சொக்காய், கௌன்களைப் பற்றியும், தான் இருவருக்கும் தன்சொப்புகளிலும், அன்று கடற்கரையில் பொறுக்கி வந்த கிளிஞ்சல்களிலும் சமைத்துப்போடப்போகும் பட்சணங்களைப் பற்றியும், பாப்பா, தன் அப்பாவிடம் வெகு நாழி பேசிக் கொண்டேயிருந்தாள்.
– மீனோட்டம், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1991, வானதி பதிப்பகம், சென்னை.
![]() |
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க... |