துணை அகதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,095 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிவா என்கிற சிவநாதன் அவ்விமானத்தில் தன் குளிர்காலக் கோட்டைக் கழட்டிப் பெட்டிகள் வைக்கும் இடத்தில் வைத்து, ‘ரையைத் தளர்த்திவிட்டு, தன்னுடைய சீற்றில் இருந்தான். சின்ன சூட்கேசைக் காலடியில் வைத்துக்கொண்டான். யன்ன லோரமான சீற். வெளியே விமானத்தின் இறக்கையும் ஜெட் இயந்திரமுமே, விமானத்தளத்தில் விழுந்திருந்த பனிப்படலங் களின் பின்னணியில் யன்னலுக்கூடாகத் தெரிந்தன. விமானம் கிளம்ப இன்னும் அரை மணியிருக்கும். இரவு படுக்கப்போகும் போது இரண்டு மணியாகிவிட்டது. வேலைகளை முடித்து, பிரயாணத்துக்குத் தேவையானவற்றையெல்லாம் ஆயத்தப்படுத்தி, டிவிஷன் மனேஜரிடம் சொல்லிவிட்டு விமானத்திற்கு வரும்போது நாலு மணி ஆகிவிட்டது. பீனிக்சில் (Phonenix) குளிராது.

அதிர்ஷ்டமிருந்தால் வெப்ப நிலை 75ஐயும் எட்டக்கூடும்.

விமானம் நிரம்பிக்கொண்டிருந்தது. பக்கத்து சீற்றிற்கு வருகைதந்தவரும் தன் கோட்டைக் கழட்டிவைத்து, உட்கார்ந்து சீற் பெல்ற்றை மாட்டிக்கொண்டார். சிவநாதனுக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது; தன்னுடைய சீற் பெல்ற்றை மாட்டிக் கொண்டான்.

“ஹாய்” என்றார் பக்கத்து சீற். சிவநாதனும் அதையே எதிரொலித்தான். ஒரு ரான்ச்சர் (rancher) போலிருந்தது. ஜீன்ஸ், பெரிய பெலற், வெஸ்டர்ன் பூட்ஸ், ஒரு பெரிய தொப்பி; கடின வேலைக்கு அஞ்சாத ஒரு அரிசோனா ரான்ச்சர். “நான் இந்த சிகாகோவுக்குச் செய்யப்பட்டவனில்லை” என்றார்.

“சிலருக்கு இங்கேதான் பிழைப்பு நடக்க வேண்டியிருக்கி றதே” என்று சிவா மறுபதில் சொன்னான்.

“ஓயா” என்றுவிட்டு, “உன் ஊர் எது” என்று கேட்டார்.

“ஸ்ரீலங்கா” என்றான் சிவா. யாழ்ப்பாணம் எங்கே தெரியப் 262 போகிறது?

“எந்த நகரத்தில் அது இருக்கிறது?”

“இந்தியாவுக்குக் கீழே ; சிலோன் என்று முன்னர் சொல் வார்கள்.”

“ஓ செய்லோன்! எனக்குத் தெரியும்.” “அரைப்பூமி தொலைவில் .” “இங்கே என்ன செய்கிறாய்?”

“கெமிக்கல் எஞ்சினியர்.’ கம்பெனி பெயரையும் சிவா சொன்னான்.

“ம்ம்ம் ….”

பிளைற் அற்ரெண்டன்ற் பெண் தர, சிவநாதன் கோப்பி யும், ரான்ச்சர் வைனும் எடுத்துக்கொண்டார்கள். தொலை வான பயணம். விமானம் கிளம்ப ஆயத்தமானது. சிவநாதன் தன் சின்ன சூட்கேசைத் திறந்து தான் போய்கொண்டிருக்கும் கூட்டத்தில் வாசிக்க வேண்டிய கட்டுரையை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டான். பாதுகாப்பு விபரங்களை அறிவித்தபடி விமானம் கிளம்பியது. இருட்டத் தொடங்கிவிட்டிருந்தது. வெள் ளையாகக் கீழே பனிப்படலங்கள். தன்னுடைய கட்டுரையை கையிலெடுத்துப் பார்த்தவுடன் அசதி மேலிட்டுக் கண் சொருகி யது. அதைத் திரும்பவும் பெட்டியில் போட்டுவிட்டு, சீற்றைச் சரித்துத் தூங்க ஆரம்பித்தான்.

“அரைப்பூமி தொலைவில் … பச்சைப் புகையிலைத் தோட் டங்கள், நாசியைத் தாக்கும் சுருட்டு வாசனைகள், துலாவுடன் கூடிய கிணறுகள், ஓணான்கள் வசிக்கும் கிடுகு வேலிகள், பல்வேறு நிலையிலிருக்கும் மதில் சுவர்கள், சனங்கள் நிறைந்த பஸ்கள், மாட்டுவண்டிகள், வாழைத் தோட்டங்கள், பனைமரங்கள் யாவும் மாறிமாறி மனத்திரையில் வர ஆரம்பித்தன. நினைவுகள் – பழைய நினைவுகளும் பழையன அல்லாத நினைவுகளும் கலந்து கலந்து வந்தாலும், சுருட்டு வாசனை கனவிலும் அடித்தது. ஆனால், காலத்தொடர்ச்சி கனவுகளுக்கேது?

யாழ்ப்பாணம்….

மிகவும் நிரந்தரமான இடம் என்பதில் சந்தேகமில்லா திருந்த ஊர். எங்கு போனாலும் திரும்பத்திரும்பக் கவரக்கூடிய காந்த மண். சிவா பிறந்த இடத்தில் செம்மண். கொழும்பு விமானத் தளத்தில் கடைசியாகப் பார்த்தபோது வரிசையாகத் தந்தை, தாய், இரு சகோதரிகள், தம்பி சண்முகநாதன், நண்பன் பாலகுமாரன் எல்லோரும் கவலையுடன்தான் அனுப்பிவைத் தார்கள். ரஞ்சனியால் வர முடியாது போய்விட்டது . ரஞ்சனியைப் பற்றிய நினைவுகளும் தேயத் தொடங்கியிருக்கின்றன. இருந்திருந்து தாக்கும் நினைவுகள் முற்றாகப் போகுமா? அவள் நினைவுகள் உலகின் எந்த மூலைக்குப் போனாலும் முற்றாகப் போகாது.

அவள் விமானத் தளத்திற்கு வருவாள் என்று நம்பியிருந்தான். அவள் வராது போனபோதே தெரிந்திருக்க வேண்டும். பால குமாரனுக்கு சிவாவின் ஏமாற்றம் தெரிந்தாலும், சொல்ல வழியில்லை . ரஞ்சனி வந்திருக்க முடியுமா?

பல்கலைக்கழக வாழ்க்கையில் மூன்றாவது வருடம். கோவிலுக்குப் போய்வரும் நெடுவழியில் அவள் செருப்பு அறுந்து போக, பின்னால் வந்த சிவா அதில் இடறத் தொடங் கியதான கதை அது. சிவா எடுத்து அவளிடம் கொடுத்தான். நண்பிகளிடம் வாங்கின ஊசியால் செருப்பை அதே இடத்தில் கல்லாயுதங்களால் திருத்திக்கொடுத்துத் தொடங்கின கதை. பாலகுமாரன் கல்லெடுத்துக் கொடுத்தவன். அவனுக்குத் தெரியும். தெரிய வேண்டியவர்கள் பலருக்குச் சரியாக ஒன்றும் தெரிய வரவில்லை .

ஒருத்தருக்கும் வருங்காலத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. சாதிகள் சனங்கள் இந்த மாதிரியான நம்பிக்கைகளுடன் வருங்காலத்தைச் சமாளிக்கிற முயற்சி. “நல்ல பரவணி” என்று பார்த்துப்பார்த்துத் தேடுகிற ஒரு தகப்பன், சிவாவை எப்படி மருமகனாய் ஏற்றிருக்க முடியும்?

ரஞ்சனி , “தாங்க்ஸ்” என்று பார்த்தது இன்னும் ஞாபக மிருக்கிறது. அவள் கூட்டத்தைத் தாண்டிக்கொண்டு சிவாவும் நண்பர்களும் போய்ச் சேர்ந்தார்கள். அவள் நினைவு சிவாவை விட்டுப் போகாதுபோனபோது, அவள் நினைப்பு என்ன என்று மட்டுக்கட்ட வேண்டும் என்று முயன்றான். யாழ்ப்பாணச் சுருட்டுக்கும் கொழும்பின் நாகரீகத்துக்கும் இயற்கையான தொடர்பு ஏதாவது இருந்தால், ரஞ்சனி இப்படித் தேய்கிற கனவாக அமைந்து போயிருப்பாளா?

கொழும்பா? ரஞ்சனியின் வீடும் அழகானது. முன் போர் டிக்கோவில் பூந்தொட்டிகளுக்கு நடுவே முளைத்த மாதிரி கார் நிற்பாட்டியிருக்கும். மருத்துவர் பத்மநாதன் – ரஞ்சனியின் தந்தை – பிரபல மருத்தவ நிபுணர்; அறுவைச் சிகிச்சையில் புகழும் பெரிது, அகந்தையும் பெரிது. எதற்கும் நேரம் வராத மனிதர். சிவா அவரை நெருங்கவும் முடியாது. ரஞ்சனி கோவி லுக்குப் போய் வருவது அவள் தாயின் பழக்கக் கட்டுப்பாட் டினால். பூந்தொட்டிகள் வாசம், புகையிலை வாசத்துடன் ஒத்துப்போக முடியாது போலிருந்தது. சுற்றுவதற்காகத் தயாராக இருக்கிற புகையிலையை எத்தனை நுணுக்கமாக ஆராய்கிறார்கள்?

ரஞ்சனி கொழும்புப் பெட்டை. செருப்பறுந்து போன விவகாரத்துக்குப் பிறகு சிவா, பாலகுமாரன் துணையுடன் அவளிருந்த ஹொஸ்டலில் போய்ச் சந்திக்க முயன்றான். ஒழுங்கு முறையாக நடந்த தேடல் . அவள் சிநேகிதிகளை விசாரித்து, எங்கிருக்கிறாள் என்று அறிந்து போனபோதுதான், கொழும்புப் பெட்டை என்ற விபரம் தெரிந்தது. மலைக் கோவில் முருகன் அருள் ரஞ்சனி விஷயத்தில் கிட்டும் என்று நம்பியிருந்தான். ரஞ்சனி பல்கலைக்கழகத்தில் நன்றாகக் கதைப்பாள். ரசாயனம் படித்துக்கொண்டிருந்தாள். பாலகுமாரன், தன் இன்னொரு நண்பன் நடராஜசிவத்தின் பெட்டை சுந்தரியிடம் சொல்லி 264 விசாரித்தான். சுந்தரி, சிவநாதனின் பூர்வீகத்தை ஆராய்ந்தாள்.

“உது சரி வராது” என்று முதலிலேயே தீர்க்கமாகச் சொன் னாள். சுந்தரி கலகலப்பானவள். எதையும் சமாளிக்கும் ஆற்றலும் அவளுக்கிருந்தது. பாலகுமாரன், “ஏன்?” என்று கேட்டான்.

“சிவநாதன் கறுவல்” என்று சொல்லுவாள் என்று எதிர் பார்த்தான். பாலகுமாரனுக்கு சிவநாதன் நண்பன். சிவநாதனை வேறு ஒரு கோணத்திலும் பார்த்ததில்லை. சுந்தரி சொன்னாள்.

“உங்கட நண்பருக்கு அவள் புளியங்கொம்பு….” பால குமாரனுக்கு இது சரியாக விளங்கவில்லை.

அப்படியே தென்டிப்பதை விடவும் மனமில்லை. “உண் மையாய், சிவா அருமையான பெடியன். நீங்கள் தயவு செய்து கேட்டுப் பாருங்களேன்” என்றான். நடராஜசிவமும் சுந்தரியிடம் சொன்னான். “ஒருக்கால் கேட்டுப் பாருமென்.”

தான் சொல்லுகிறேன் என்றுதான் சுந்தரி சொன்னாள்.

பாலகுமாரன் சிவாவிடம் வந்து, சுந்தரி சொன்ன மறு மொழியைச் சொன்னபோது சிவாவுக்கு அது மனதில் வருத்தத்தை உண்டாக்கியது. “இன்னொரு பிறப்புக் கிடைக்குமா?” சாதிக் கூறுலும் ஆயிரங்கூறுகள் போட்டு கவனப் பிழைப்பு நடத்துகிற சமுதாயம். சிவாவுக்குப் படிக்க வேண்டும்; இந்த இனத்தையும் தாண்டி, சாதிக் கடல்களைத் தாண்டி ரஞ்சனியை எட்ட வேண்டும்.

சிவநாதன் கதிரையை மேசைக்கு அருகில் போட்டுக் கவனமாகப் படிக்க ஆரம்பித்தான்.

ஓர் இரவு.

எங்கேயோ கண்ணாடிகள் நொருங்கிற சப்தமும், சிங்க ளத்தில் பலரிடமிருந்தான ஆவேச மொழிகளும் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகக் கேட்க ஆரம்பித்தன. “பற தெமலோ (பறைத் தமிழர்களே)” என்பதும் கேட்டு, அடிதடிச் சத்தமும் கேட்க ஆரம்பித்தன. சிவநாதனும் பாலகுமாரனும் தங்கள் அறைக்கு வெளியே வந்து ஹொஸ்டலின் நடுப்பகுதிக்கு வந்து பார்த்தபோது, சுந்தரமூர்த்தி ஓடிவந்து கொண்டிருந்தான். இரைக்க இரைக்க “தமிழ்ப் பெடியளை எல்லோரும் அடிக்கிறார்கள் – வெளிக்கிடுங்கோடாப்பா” என்று சொல்லித் தமிழ்ப் பெடியன்கள் இருந்த கதவுகளைத் தட்டிச் சொல்லிக்கொண்டே ஓடிக்கொண் டிருந்தார்கள்.

சிவா , பக்கத்திலிருந்த குணவர்தனாவின் கதவைத் தட்டி னான். அவன் அங்கு இல்லை . பாலகுமாரன் , “இவங்கள் ஏதோ பிளான் போட்டிருக்கிறாங்கள்” என்றான். பெட்டி களில், கிடைத்த புத்தகங்கள் உடுப்புகளை எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தார்கள். அந்த ஹொஸ்டலின் இரண்டாவது மட்டத்திலிருந்த தமிழ் மாணவர்கள் யாவரும் ஓட ஆரம்பித்திருந்தார்கள். ஓடின திசையில் எதிரே கையில் தடிகளுடன் சிங்கள மாணவர் கூட்டம் ஓடிவந்து கொண்டிருந்தது. “பற கொட்டியோ (பறைப் புலிகளே!) என்று ஆவேசமாகத் தமிழ் மாணவர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். கம்புகளும் கல்லும் மனிதச் சதைகளைச் சோதிக்கும் நேரம். சிவாவும் பாலகுமாரனும் எதிர்ப்பக்கமாக ஓட ஆரம்பித்து, மறு எல்லை மாடிப்படிகளை நெருங்கிய போது, அங்கும் பறைத் தமிழர்களையும் புலிகளை யும் கொல்லத் தீர்மானித்திருந்த இன்னொரு கூட்டம் வந்து கொண்டிருந்தது. சுந்தரமூர்த்தி இடையில் ஓரறையில் ஒளிந் திருந்தான். இவர்களைப் பார்த்தவுடன் அவர்களை இழுத்துக் கதவை மூடினான். “உந்தச் சன்னலால் குதிச்சு ஒடுங்கோடா” என்று கட்டளையிட்டான். கையிலிருந்த பெட்டியால் சன்னலை உடைத்துக் கீழே பார்த்தால் இருபது அடிகளாவது இருக்கும்.

“குதியுங்கோடா” என்றான் சுந்தரமூர்த்தி. சுந்தரமூர்த்தி அறைக் கதவைச் சிங்கள மாணவர் கூட்டம் உடைக்க ஆரம்பித் தார்கள். “போக வேண்டாம்” என்று கத்தினான் சுந்தரமூர்த்தி. ஓர் அலவாங்கு மரக்கதவைப் பிளந்து கொண்டிருந்தது. மூன்று பேரும் பெட்டிகளுடன் குதித்தார்கள். சிவாவும் பாலகுமாரனும் நிலத்தையடைந்திருந்தார்கள். பெரும் கால்வலியுடன் ஓட ஆரம்பிக்குமுன் சுந்தரமூர்த்திக்கு என்னவாயிற்றென்று திரும்பிப் பார்த்தால், குதித்த சுந்தரமூர்த்தியின் கால்களைப் பிடித்து அவனை உள்ளே இழுக்கத் தெண்டித்துக்கொண்டிருந்தது வெறிக்கூட்டம். பாலகுமாரனும் சிவாவும் ஒரு கணம் தாமதித்து என்ன செய்வது என்று யோசிக்கையில், “பற தெமலோ” என்று இன்னொரு கூட்டம் ஆவேசமாக இவர்களை நோக்கி வர ஆரம்பித்தது. பாலகுமாரனும் சிவாவும் பெட்டிகளை எறிந்து விட்டு வேகமாக ஓட ஆரம்பித்தார்கள். வெறிக்கூட்டம் இவர்கள் பெட்டிகளில் இருந்தவற்றைப் பங்குபோட ஆரம்பித்தது, வசதி யாகப் போயிற்று. ஒரு கழிவு வாய்க்காலின் கரையில் ஒதுங்கி, சுந்தரமூர்த்திக்கு என்ன ஆயிற்றென்று பார்க்க ஆரம்பித்தார்கள். நெஞ்சுப் பதட்டம் காதுச்சவ்வுவரை அடித்துக்கொண்டிருந்தது. மண்டையும் பிளக்கும் போல இருந்தது. சுந்தரமூர்த்தி நொண் டிக்கொண்டே வந்து சேர்ந்தான். நன்றாக அடித்துவிட்டிருந் தார்கள். சிவா, பாலகுமாரனின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு, “பெட்டைகளின் பாடு என்ன மாதிரி என்று நான் பாத்திட்டு வாறன். நீ சுந்தரமூர்த்தியைக் கூட்டிக்கொண்டு போ…” என்று பதிலுக்கும் காத்திராமல் பெண்கள் ஹொஸ்டல் பக்கமாக ஓட ஆரம்பித்தான்…

“சீற் பெலற்களைப் பூட்டிக்கொள்ளுங்கள்” என்ற வேண்டு கோளுடன் விமானம் தள்ளாடிக்கொண்டிருந்தது. சிவநாதன் விழித்துப் பார்த்தான். சீட்டை நிமிர்த்தி ரான்ச்சரிடம், “என்ன நடக்கிறது?” என்று கேட்டான். செயின்ட் லூயிஸில் இறங்கிப் போக வேண்டிய விமானம் பனிப்புயலால் வேறெங்காவது திருப்பப்படலாமாம். தான் எப்படியாவது பீனிச்சுக்குப் போய் விட வேண்டுமென்று சிவா சொன்னான். “அது நடக்கும் என்று தீர்மானமாகச் சொல்ல முடியாது” என்றார் ரான்ச்சர்.

சிவா மறுக்கவில்லை. வாழ்க்கையே இந்தத் திசைமாறல்களும் 266 தள்ளாட்டங்களும் நிறைந்ததாகத்தானே அமைந்துபோயிருக்கிறது?

ரான்ச்சர் வேகமாக வந்துகொண்டிருந்த பிளைட் அட் டென்டன்ரனிடம் செயின்ட் லூயிஸில் விமானம் இறங்குமா என்று கேட்டார். அதைத்தான் முயற்சி செய்கிறார்கள் என்று பதிலளித்து விமானத்தின் பின்பகுதிக்கு ஓடினான். திரும்பவும் விமானம் குலுங்கியது.

“இந்த மாதிரியான சொகுசான ரோடியோ (rodeo) வை நான் பார்த்ததில்லை” என்றார் ரான்ச்சர். “நிலத்தில் விழாமல் இருந்தால் சரி” என்றான் சிவா.

இதுவெல்லாம் என்ன பயம்? என்ன கஷ்டம்? சிங்கள வெறிக்கூட்டங்கள் துரத்திய போது வந்த மரண பயத்தைவிடவா?’

பாலகுமாரன் சுந்தரமூர்த்தியைப் பத்திரமாய் ஓர் இடத் தில் விட்டு வர, தான் அவனுடன் போய் ரஞ்சனியையும் சுந்தரியையும் தேடிப்பிடித்து, கொழும்பில் பத்மநாதன் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தபோது அடுத்த நாள் மத்தியானமாகிவிட்டது. நடராஜசிவத்தைக் காணவில்லை . சுந்தரி அழுதபடி இருந்தாள். பத்மநாதன் வீட்டில் பொலிஸ் ஜீப் நிறுத்தியிருந்தது. பத்மநாதன் வீட்டில் பொலிஸ் அதிகாரியுடன் பேசிக்கொண்டிருந்தார். இவர் களைப் பார்த்தவுடன், “இதோ, இங்கே வருகிறார்களே!” என்று முழு வீட்டிலும் கேட்கிற மாதிரி பெலத்தே சொன்னார். “வினோ” என்று மனைவியையும் கூப்பிட்டார். பொலிஸ் அதிகாரிக்குத் தனக்கு இனித் தலையிடி இல்லை என்று தெரிந்து சந்தோஷம் வந்தது. பத்மநாதனிடம் விடை சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.

பத்மநாதன் ஏற இறங்க பாலகுமாரனையும் சிவாவையும் பார்த்தார். பாலகுமாரனைத்தான் முதலில் விசாரித்தார். தன் தந்தை எஞ்சினியர் என்பதையும் அவர் பெயரையும் ஊரையும் சொன்னான். அவரைத் தெரியும்” என்று பத்மநாதன் சொன்னார். பாலகுமாரனை அவர் விசாரித்துக்கொண்டிருந்தபோது சிவாவுக்கு எரிச்சலும் கவலையுமாக இருந்தது. தன் முறை வருகிறபோது இந்த விபரங்களுக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, பாலகுமாரனே பதில் சொன்னான், “இது என் நண்பன் சிவநாதன். என்னுடைய ஊர்.” போன் மணி அடிக்க, அவர் நன்றி சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டார், பாலகுமாரனைப் பற்றி நல்ல அபிப்பிராயங்களுடன்.

ரஞ்சனி , இவர்களை உள்ளே அழைத்துத் தப்பி வந்த விபரங்களைக் கேட்டாள். சிவாவும் பாலகுமாரனும் சொன்ன போது சுந்தரி, நடராஜசிவத்தை நினைத்து அழுதபடி இருந் தாள். ரஞ்சனி தன் தாயிடம் சுந்தரியின் கவலையை விளக்கி னாள். சுந்தரி யாழ்ப்பாணம் போக வேண்டும் என்றாள். நடராஜசிவத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பை பாலகுமாரனும் சிவாவும் ஏற்றுக்கொண்டார்கள். புறப்பட்டுப் போகும் போது…

விமான கப்டன், செயின்ட் லூயிஸில் விமானம் இறங்கப் போவதாகவும் தொடர்ந்து பீனீக்சுக்கு எத்தனை மணிக்குத் தொடரும் என்பது காலநிலையைப் பொறுத்தது என்றும் அறிவித்தார்.

ரான்ச்சர் , டார்ன் (Darn) – என் மனைவி – திட்டப் போகிறாள் என்று சொல்லிவிட்டு, “உனக்குக் கலியாணம் ஆகிவிட்டதா?” என்று சிவாவைக் கேட்டார்.

“இல்லை ” என்றான் சிவா. “அதிர்ஷ்டக்காரன்” என்று ரான்ச்சர் சிரித்தார்.

“அதிர்ஷ்டம் செயின்ட் லூயிஸில் எப்படிப் போகுது என்று பார்க்கலாம்” என்றான் சிவா. ரான்ச்சர், “பை” சொல்லி விட்டுப் போய்விட்டார். பீனிக்சுக்குப் போக வேண்டிய விமானம் இன்னும் மூன்று மணிகள் தாமதமாகலாம் என்று சொன்னார்கள்.

சிவா விமானத்தளத்தில் கடை தேடி, இரவுச் சாப்பாட்டை முடித்துத் தான் போகவேண்டிய விமான வாசலுக்கு வந்து இடம் தேடி, தான் கொண்டுவந்திருந்த கட்டுரையை வாசிக்க லானான். தூக்கமும் வந்தது. அடுத்த நாள் நேரத்துக்குப் போய் விடலாமா என்பது சந்தேகமாக இருந்தது. ஊர் நினைவுகள் வந்தால், வேறெதுவும் மனதில் நிலவுவதாக இல்லை …

நடராஜசிவத்தை பாலகுமாரனும் தானும் தேடிக்கொண்டு போன விபரங்கள் மனதில் எழுந்தன. எங்கெல்லாமோ விசாரித்துக் கடைசியாகத் தெரியவந்தது, நடராஜசிவத்தை வெறிக்கூட்டங்கள் கொன்றுவிட்டிருந்தார்கள். அதை வந்து சுந்தரியிடம் சொல்ல எவ்வளவு கஷ்டமாயிற்று….?

சுந்தரி இப்போது எங்கே?

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போவதற்குள் எத்தனை பிரச்சினைகள்? யாழ்ப்பாணம் போகும் வரை சுந்தரி அழுத படியே இருந்தாள். கொழும்பில் இருந்தவரைக்கும் சிவா, ரஞ்சனியைப் பார்க்க முயன்றான். மருத்துவர் பத்மநாதன் வீட்டில் இல்லாத நேரம் போக வேண்டியதாயிற்று. ரஞ்சனி என்ன நினைக்கிறாள்? அவளைப் பற்றிய தன் நினைவுதான் சிவாவுக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது. சுந்தரியின் நிலையும் உதவுவதாக இல்லை. கொழும்பை விட்டு பத்மநாதன் குடும்பம் அசையாது இருந்தது. பல்கலைக்கழகம் திரும்பத் தொடங்கும் வரையில் சிவாவும் பாலகுமாரனும் ஊரில் இருக்க வேண்டி யதாகிவிட்டது. தம்பி சண்முகநாதன் இராணுவத் தொல்லை களினால் எப்போதும் “உது சரிவராது” என்று வெடித்துக் கொண்டே இருந்தான். அவன் பேச்சு, சுந்தரியின் “உது சரிவராது” என்ற தீர்ப்பை எதிரொலித்தது.

எது எப்போது சரிவரப் போகிறது? என்று சிவா நினைத்தது உண்டு. செம்மண்ணின் வாசனையே தன்னை பதப்படுத்துவதாக அமைந்தது. பூமிப்பந்தின் மூலைகளில் வெவ்வேறாக ஒதுங்கு 268 வோம் என்று யார் எதிர்பார்த்தார்கள்.

பல்கலைக்கழகப் படிப்பை சிவா முடித்துவிட்டு மேல் படிப்புக்காக நியூயோர்க்கிற்குக் கிளம்பும் போது ரஞ்சனியிடம் சொல்லப்போனதும் ஞாபத்துக்கு வந்தது. மருத்துவர் பத்ம நாதனுக்கு அப்போதுதான் “இவன் யார்?” என்று விசாரிக்கத் தோன்றியது. ரஞ்சனி அப்போதும் முடிவாக ஒன்றும் சொல்ல வில்லை. அமெரிக்கா வந்த பின்னர் எத்தனையோ கடிதங்கள் போட்டும், இரண்டே பதில் கடிதங்கள் போட்டிருந்தாள். இருதயக் கசிவு கடவுளுக்கு மட்டுந்தான் கேட்குமோ?

நண்பன் பாலகுமாரன் ஒரு வருட இடைவெளிக்குப் பின் ரெக்ஸாஸ் வந்து சேர்ந்தான். பாலகுமாரனுக்கும் நம்பிக்கை விட்டுப்போயிருந்தது. போனில் எத்தனை தரம் அவளை மறந்துவிட்டு வாழ்க்கையில் போகும்படி சொல்லியிருக்கிறான்? கொழும்பே நிலை என்றிருந்த பத்மநாதன் குடும்பம் அவுஸ்திரேலியா கிளம்ப வேண்டியதாகிவிட்டது. அவர்கள் போகும் போது ரஞ்சனி எழுதியிருந்தாள். அதுதான், அவளிட மிருந்தான கடைசிக் கடிதம்.

சிவாவின் நித்திரை கலைந்தது. ஒருதரம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சூடாக ஏதேன் அருந்தினால் நல்லது என்று தோன்றியது. பாரில் ரான்ச்சரைப் பார்க்கக் கிடைத்தது. “நீ நாளைக்கு பீனிக்சுக்குப் போக முடியாது” என்று சிரித்தார். பெரிய கண்ணாடிக் கோப்பையில் பியர் நுரை பாதிவரைக்கும் இருந்தது.

“எப்படியும் நாளை கூட்டத்துக்குப் போக வேண்டும்” என்றான் சிவா.

“நீ அடைய முடியாத கனவுகளைத் துரத்துகிறாய்” என்று ரான்ச்சர் சிரித்துவிட்டு, மறுபடியும் பியரைக் குடிக்க ஆயத்தமானார்.

“அடைய முடியாத கனவுகள் எத்தனை!” என்று மூச்சு விட்டபடி கோப்பியைக் குடிக்கலானான்.

போர்க்களமாகிவிட்ட ஊரில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிற தாய் தங்கையர், ஊரைவிட்டு வெளியேறத் துடிக்கிற சகோதரிகள் குடும்பங்கள்; இயக்கத்தில் சேர்ந்து விட்டிருந்த சகோதரன் எல்லோரைப் பற்றியும் கனவுகள் இருந்தன. வெளிச்சம் மிக இல்லாத வீட்டில் கள்ளின் ஆதிக்கத்தில் இருக்கும் தந்தையைப் பற்றிய நையாண்டிகள் இல்லாது போய் விடும் என்றும் எதிர்பார்த்திருந்தான். இந்த நையாண்டிகளும், குலப்பெருமைகள் எதுவுமில்லாததும் இவ்வளவு தூரம் பரந்திருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ரஞ்சனியைச் சூழ்ந்திருந்த பெண் கூட்டங்களுக்குத் தெரிந்திருந்த விபரங் கள்தான் எத்தனை?

இப்போது நையாண்டிகளுக்குள்ளானவர்கள் மட்டுந்தான் மிகுந்துவிட்டிருக்கிறார்களோ தெரியவில்லை. நையாண்டி செய்கிறவர்கள் எல்லோரும் தங்கள் அளவுகோல்களுடன் வெளியேறிவிட்டிருந்த மாதிரி இருக்கிறது. சகோதரிகளுக்குக் கல்யாணமும் நடந்து, அவர்கள் குடும்பங்களைப் படங்களில் மட்டுமே பார்க்க முடிந்தது. தம்பி சண்முகநாதனின் சிறு உருவமும் கனவில் வந்து கொண்டேயிருந்தது..

“இது வேறு பிறப்பு!” என்று நினைத்துக்கொண்டு பீனிக்ஸ் போகும் விமானம் எத்தனை மணிக்கு என்று விசாரித்தான். தன் அவசரத்தையும் சொன்னான். அவனைப் போல இன்னும் பல பேர் இருந்தார்கள்.

“அநேகமாகக் காலையில் தான்” என்று பதில் வந்தது.

‘கூட்டத்திற்குப் போக முடியாது’ என்று தனக்குள் முணு முணுத்துக்கொண்டே மறுபடியும் தங்குமிடத்தை நோக்கிப் போனான். பாலகுமாரனுடன் தொலைபேசியில் பேசலாம் என்று போனான். பாலகுமாரன் டென்வரில் வேலை பார்க்க ஆரம்பித்திருந்தான். கல்யாணமாகி , அவன் மனைவி கர்ப்ப மாகவும் இருந்தாள். யாழ்ப்பாணத்தில் பாரம்பரியம் தவறி எதுவும் நடக்க முடியாது.

இங்கே எதைக் கேட்க யார் இருக்கிறார்கள்’ என்று நினைத்தால்…. தொலைபேசியில் பாலகுமாரனைத் தொடர்பு கொண்டு தன் நெருக்கடியைச் சொன்னபோது, செயின்ட் லூயிஸில் கணேசுவரநாதன் இருக்கும் விபரம் தெரிந்தது. கணேசுவரநாதன் சிவாவுடன் ஊரில் கல்லூரியில் படித்த ஒரு நண்பன். கலகலப்பான கணேசுவரநாதனின் தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு போனில் தொடர்பு கொண்டான்.

“கணேஷ்…” என்று சிவா தொடங்குமுன்னரே, “ஏ , சிவா” என்று உற்சாகமாகப் பதில் வந்தது. கணேசுவரநாதன், தன்னுடன் அன்றிரவு தங்கிவிட்டு அடுத்த நாள் காலை போகலாம் என்று சொன்னான். சிவாவுக்கு இது பரவாயில்லை என்று தோன்றியது.

“சரியடாப்பா . ஆனால், பயங்கர ஸ்நோ , வெளியில் வர ஏலுமா?” என்றான் சிவா.

“அதை என்னட்ட விடு. ஒரு அரை மணித்தியாலமாகும். ரிடபிள்யூஏ வாசலில் நில், வாறன்” என்றான்.

அவன் வருவதற்கு முக்கால் மணி ஆகிவிட்டது. வெளியில் பனி பெய்து கொண்டேயிருந்தது.

பேசிக்கொண்டே அவன் இருப்பிடத்துக்குப் போனார்கள். கணேசுவரநாதன் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தான். அவன் குடும்பத்தில் மற்றவர்கள் எல்லோரும் அவுஸ்திரேலியாவில். அவனும் சிவாவைப்போல தனியாக இருந்தான். ஆனால், வாழ்க்கைக் குழப்பம் எதுவும் கிடையாது. அவனுக்கும் சிவாவின் விபரங்கள் தெரியும். கணேஷின் அபார்ட்மென்ட்டுக்கு போகும் போது பத்து மணியாகிவிட்டது. கொம்பியூட்டர் வேலை செய்துகொண்டிருந்தது. அங்குமிங்குமாக கடுதாசிகள், பத்திரிகைகள் பரந்து கிடந்தன.

“ஏதேன் சாப்பிடப் போறியோ?” என்று கேட்டான். “கோப்பி தந்தாக் காணும்” என்றான் சிவா.

“சொல்லடாப்பா….” என்று கணேஷ் கோப்பி வைக்கப் போனான். பேசத் தொடங்கினார்கள். பேசிக்கொண்டிருக்கும் போது ரெலிபோன் மணி அடித்தது. கணேஷ் ரெலிபோனில் பேசும் போது சிவாவுக்கு விளங்கியது – கிளிநொச்சியைத் தாக்குகிறார்கள் என்று.

“இது எதிர்பார்த்ததுதான்” என்று கணேஷ் பதிலளித்துப் பேசிக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது. பேசி முடித்துவிட்டு, “கொஞ்சம் இரு சிவா” என்று தொலை பேசியில் இன்னும் யாருடனோ பேச ஆரம்பித்தான். சிவா அங்கிருந்த தமிழ்ப் பத்திரிகைகளைப் பார்க்க ஆரம்பித்தான். ஊரின் யுத்த நிலைகள், அகதிகளின் அவலங்கள் எல்லாவற் றைப் பற்றியும் நிறையவே செய்திகள் இருந்தன. யாழ்ப்பாணம் என்ன நிலையோ தெரியவில்லை. குடும்பத்தில் யார் உயிருடன் இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை.

யாழ் மண்ணைவிட்டு நகரமாட்டேன் என்று பிடிவாத மாக இருக்கும் தாய்தந்தையரின் கடூரம் விளங்குவதாக இல்லை. இருந்த சமூக நெருக்குவாரங்களைவிட எதுவும் கொடூரமாக இருக்கமுடியாது என்ற நினைப்பா?

“கள்ளுக்கு கொப்பர் என்ன செய்யிறார்” என்று தெரிந்தவன் ஒருவன் கேட்டு எரிச்சல் அடைந்தது ஞாபகத்துக்கு வந்தது. நக்கல்களுக்கு எங்களிடம் குறை எப்போது இருந்தது? சகோ தரிகளின் கல்யாண வீடுகளுக்கும் போக முடியவில்லை .

படங்கள்… படங்கள்… எதற்கு உயிர் இருக்கிறது?

கணேஷ், “சிவா ஒரு நிமிடம்” என்று சொல்லிவிட்டு போனில் எண்களை அமுக்கலானான்.

“அகதிகள் முகாம்…” என்று பேசத் தொடங்கினான். ஊருக்கும் போகாமல் அவுஸ்திரேலியா போய் ரஞ்சனியைப் பார்க்க முயன்ற தன் கதை ஞாபகத்துக்கு வந்தது.

இது என்னுடைய யுத்தம்’ என்று சிவா பெருமூச்சு விட்டுக் கொண்டான். இந்த கணேசுவரநாதனின் சகோதரிகளில் ஒருத்தி மெல்போர்னில் இருந்தாள். பாலகுமாரன் விபரங்கள் எடுத்துத் தந்து, பத்து நாட்கள் அங்கே போயிருந்து ரஞ்சனியைப் பார்க்க முயன்றதும் ஒரு யுத்தந்தான். மருத்துவர் பத்மநாதன் எரிந்து விழுந்தது பரவாயில்லை. ரஞ்சனி பேசவும் மறுத்துவிட்டாள். அதுவே மனதை வருத்தியது.

“என் பரவணியைப் பற்றித் தெரியுமா?” என்று பத்மநாதன் வெடித்த சிறுமையும் வருத்தமாயிருந்தது. பாலகுமாரனும் எத்தனை தரம் தொலைபேசியில் ரஞ்சனியின் தாயிடம் சொல்லியிருப்பான்…. “சிவா ஒரு நல்ல பெடியன்.” எதையும் கேட்க பத்மநாதன் தயாராக இல்லை. திரும்பியபோது மன வெறுமை இதயத்தைத் தாக்கியது. வேலையே மனதுக்குத் திருப்தி தருவதாக அமைந்திருந்தது.

“சிவா” என்று சக வேலையாளர்கள் அழைப்பது ஒன்று தான் உணர்வு நரம்புகளைத் தொட்டன. கணேஷ் போனில் “… அகதிகள் முகாமுக்கு என்ன நடந்தது?” என்று கேட்டது, சிவாவைச் சூழலுக்குத் திருப்பியது.

ஊர் நிலவரம்தான் என்ன? புகையிலைத் தோட்டங்களுக்கு என்ன நடந்திருக்கும்? சிவா தலையைச் சிலிர்த்துக்கொண்டான். கணேஷ் “நான் பிறகு கதைக்கிறேன்” என்று போனை வைத்து

விட்டு ,

“மன்னிக்க வேணுமடாப்பா… சொல்லு உன்ர கதையளை ..” என்று சொல்லிக்கொண்டே கோப்பிக் கிண்ணங்களைக் கொண்டு வந்து வைத்தான். வேலையைப் பற்றிப் பேச்சு முதலில்.

“ரஞ்சனி அலுவல் எப்படி முடஞ்சுது?” கணேஷ் கேட்ட விதத்திலேயே அவனுக்கு நிறையத் தெரிந்திருக்கலாம் என்று தெரிந்தது.

சிவாவின் முகம் வருத்தத்தில் தோய்ந்தது. “சரிவந்திருந் தால் உனக்குத் தெரியாமல் போகுமா? எப்ப எங்கட சமூகம் திருந்துமோ தெரியாது….” என்று தொடங்கினான் சிவா.

“நாங்கள் அழியிறது எங்கட சின்னத்தனத்தினால்” என்று தன் கொதிப்பை கணேசுடன் பகிர்ந்துகொள்ள முயன்றான்.

கணேஷுக்குக் கோபம் வரப்போகிற மாதிரி இருந்தது. “நாங்கள் அழியிறது பிக்குகளின் சின்னத்தனத்தினாலயடாப்பா… சும்மா விட்டிட்டா நாங்கள் எங்களுக்குள்ள அடிபட்டுச் செத்துப்போய் விடுவமா?”

“நாங்களாகவே திருந்திக்கொள்றதுக்கு ஒரு சூழல் வேணு மடாப்பா. இரண்டையும் தேவையில்லாமல் தொடர்பு படுத்தாதே .” சிவா பொறுமையாகக் கேட்டுக்கொண்டான்.

“கணேஷ், இங்கே இருக்கிற தமிழர்களுக்கு யுத்தமா நடக்குது? என்ர நிலையில் இருந்தால் உனக்குத் தெரியும். உன்ர கொப்பரைக் கியூபாவுக்கு அனுப்பன். சுருட்டுக்கு அங்குதான் நல்லை வேலை என்று சொன்னதையும் கேட்டிருக்கிறேன். உனக்கு இதெல்லாம் என்னெண்டு தெரியப் போகுது? சொந்தப் பிரச்சினை இல்லாத வர்களுக்கு சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க நேரமும் இருக்குது வசதியும் இருக்குது” என்று சிவா சொல்லி முடிக்க ரெலிபோன் அடித்தது. கணேஷ் மறுபடியும் தன் உலகில் ஆழ்ந்தான்.

“கிளிநொச்சி … அகதிகள் …” கணேஷ் போனை வைத்துவிட்டு வந்தான்.

“பாத்தியா சிவா, சனங்கள் அங்கே அல்லல்படுகினம். இதைவிட அவலம் இருக்க முடியாது. என்னைக் கேட்டால் உதுக்குத்தான் உதவி செய்தால் உதவியாய் இருக்கும்…. உண்மை

யான உதவியாய் இருக்கும்.

“கணேஷ், என்ர குடும்பத்து ஆட்கள் எல்லோரும் இந்த அவலத்தில் தான் இருக்கினம். ஊரைவிட்டு வெளிக்கிடுகிற யோசனையும் என்ர பெற்றோருக்கு இல்லை. ஆர் உயிரோட இருக்கினம் , ஆர் உயிரோட இல்லை எண்டதும் தெரியாது. எனக்கு இந்த அவலங்கள் விளங்கும்….”

கணேஷ் மௌனத்தில் ஆழ்ந்தான்.

சிவா தொடர்ந்தான். “… சொந்தப் பிரச்சினையைப் பற்றியே யோசிக்கிறவன் மாதிரித் தெரியுது எண்டால், என்னால் ஒண்டும் சொல்ல முடியாது. அநீதி நடந்தால் ஒன்றென்ன, ஒரு லட்சமென்ன எல்லாம் ஒண்டுதான்.”

கணேஷ் ஏதோ சொல்ல வாயெடுத்தான். போன் மறுபடியும் அடித்தது. கணேஷ் எடுத்தான். “ஹலோ…” என்று கேட்டுவிட்டு “சிவா உனக்குத்தான் பாலகுமாரன்” என்று சொல்லி போனைக் கையில் கொடுத்தான்.

சிவா போனை வாங்கிக்கொண்டான்.

“பீனிக்ஸ் போக ஏலாதுபோலக் கிடக்கு” என்று பாலகுமாரன் தொடங்கினான்.

“பயங்கர ஸ்நோ” என்றான் சிவா.

“கொன்பரன்ஸைக் கான்சல் பண்ணிப்போட்டு போக வேண்டியதுதான்.”

“இல்லை பாலா, காலமை தெண்டிக்கப்போறேன். ஒண்டரைக்கு நிண்டால் காணும். போயிடலாம், பாப்பம்.”

ஒரு கணம் பாலகுமாரன் ஒன்றும் சொல்லவில்லை.

“… செந்தில் மெல்போர்னிலிருந்து இப்ப போன் எடுத்துக் கதைச்சான்…”

ஒ, இது ரஞ்சனியைப் பற்றிய செய்திதான். “சொல்லு” என்றான் சிவா.

“ரஞ்சனிக்குக் கலியாணமாம்.” “பொடியன் டொக்டர்.” “எப்பவாம் கலியாணம்?” “ஏப்ர லில்….” சிவநாதனால் மேலே எதுவும் செய்ய முடியவில்லை .

“நான் சிக்காகோ போனதன் பிறகு கோல் எடுக்கிறன்” என்று போனை வைத்தான் சிவா.

‘இவ்வளவு நாட்கள் பின்னரா?’

கணேஷிடம் விபரத்தைச் சொன்னான். “உந்தப் பேச்சுக்கள் நானும் கேள்விப்பட்டதுதான்” என்று கணேஷ் மெல்லச் சொன்னான்.

அவளும் உறுதியாயிருப்பாள் என்று நினைத்ததும் வீணாகிப் போன மாதிரியிருந்தது.

“கவலைப்படாதேயடாப்பா….” என்று கணேஷ் ஆறுதல் சொன்னான்.

“எயர் லைனைக் கேட்டுப் பாப்பம் எப்ப பிளைட் எண்டு…” சிவா அவசரப்படுகிறவன் மாதிரித் தோன்றினான்.

அடுத்த நாள் காலை 8 மணிக்கு என்ற விபரம் தெரிந்தது. கணேஷ், “நான் வேலைக்குப் போறதுக்கு முன்னால் எயர் போர்ட்டில் விட்டுட்டுப் போறேன்” என்றான்.

சிவா மறுபடியும் மௌனமானான். கணேஷ், சிவா தோளைத் தட்டினான். “வாழ்க்கையில் உன்னுடன் எப்பவும் வாறதுக்கு உயிர்த்துணைதான் வேணுமெண்டதில்லையடாப்பா.” கணேஷ் நிறுத்திக்கொண்டான்…

“சாகிறதுக்கு நான் இப்பவும் ஆயத்தந்தான். ஊருக்குப் போகவும் விருப்பந்தான். பாப்பம், கெதியில் போகத்தான் வேணும்…”

கணேஷ் தலையில் கையை வைத்துக்கொண்டான்.

“இந்த அகதிகள் உதவிக்கு நீ என்ன செய்யிறாய்…?” சிவா விபரங்களைக் கேட்க ஆரம்பித்தான். கணேஷ் சொல்ல ஆரம்பித்தான்…

அடுத்த நாள் காலை விமானத்தளத்தில், சிவா விமானத் துக்குக் காத்திருந்தபோது, ரான்ச்சர் சந்தோஷமாகவே வருவதைக் கண்டான்.

“எப்படி உன் இரவு கழிந்தது?” என்ற கேட்டார்.

“நன்றாகப் போனது. ஒரு துணை அகதியுடன் பேசிக் கொண்டேயிருந்தேன்.”

“உன் கூட்டத்துக்குப் போய்விடலாம்” என்றார். “நிச்சயமாக” என்றான் சிவா. பனி நின்றுவிட்டிருந்தது.

– கிழக்கும் மேற்கும், 1997

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *