தாரா தாரா வந்தாரா
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 158

ஞாயிற்றுக் கிழமை . மதிய நேரம். சென்னை நுங்கம்பாக்கம் எமரால்ட் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் துப்பறியும் பணிக்கான ஸ்டார்ட் அப் நடத்தி வரும் ஒடிசலான தாடி இளைஞன் ஜெகன் லேப்டாப்பில் மூழ்கி இருந்தான். அவனுடைய வீட்டின் கூடத்திலும் படுக்கை அறையிலும் சிறுவர் சிறுமிகள் நிறைந்து இருந்தனர். சில சிறுவர் சிறுமிகள் கேரம் விளையாடிக் கொண்டிருந்தனர். சில சிறுமிகள் , ஜெகனுக்காக காய்கறிகளைக் கத்தியால் நறுக்கிக் கொண்டிருந்தனர். சில சிறுவர்கள் , தங்களுக்குள் வார்த்தை விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஜெகனுடைய கைபேசி ஒலித்தது. அவனுடைய காதலி அழகான இளைஞி ஷீலா , வீடியோ அழைப்பில் வந்தாள்.
ஜெகன் லேப்டாப்பிலிருந்து மீண்டு அவளிடம் பேசினான் –
“வணக்கம் மேம் என்ன திடீர்ன்னு என்னோட ஞாபகம் “
“என்னய்யா ஒரே வாண்டுகளோட சத்தமா இருக்கு ? பழைய படம் எங்க மாமா சிவாஜி மாதிரி ஆதரவற்றோர் இல்லம் நடத்த ஆரம்பிச்சிட்டியா ? துப்பறியும் வேலைல போணி ஆகலையா?“
“ஆதரவற்றவர்களா ? இந்த சுட்டி பசங்க சிறுமிகள் எல்லோரும் எங்க அபார்ட்மென்ட்ல இருக்கிற பெரிய பெரிய ஆபீசர்ஸ் பிசினஸ் மேகனட்சோட பிள்ளைங்க… சண்டேலயும் அவங்க அப்பா அம்மா இவங்கள வீட்ல தனியா விட்டுட்டு போயிடறாங்க அதனால பிள்ளைங்க எல்லாம் என் வீட்ல அசெம்பிள் ஆகி டைம் ஸ்பெண்ட் பண்றாங்க அது பொறுக்கலியா ஒங்களுக்கு ? …. “
ஒரு சிறுமி , ஜெகனின் கைபேசி அருகில் வந்து ஹாய் ஆன்ட்டி என்று கூறிச் செல்கிறாள்.
“யோவ் நான் ஆன்ட்டியா ? “
“நான் மாமான்னா நீங்க ஆன்ட்டிதானே ? “
“நெனப்பு தான் “
“சரி அதை விடுங்க எதுக்கு எனக்கு கால் பண்ணிங்க ? மறந்துடற போறீங்க …ஒங்களுக்கு ஒங்கள மாதிரி பெரிய குடும்பத்துல வரன் பார்த்து இருக்காங்களா அவரைப் பத்தி துப்பறியணுமா ? “
“ஆமாம் எண்ணம் போவுது பார் உனக்கு ? சென்னை சப் அர்பன் ஊரப்பாக்கத்துல எங்களோட ஹாஸ்பிட்டல் இருக்கு தெரியுமா ? “
“கே ஆர் மருத்துவமனை … ஜிஎஸ்டி ரோட்ல பார்த்து இருக்கேன் … “
“அதான் .. அங்க என்னோட அண்ணன் ரகுநாத் சீப் டாக்டர். போன வாரம் ஆக்சிடன்ட் கேஸ்ன்னு ஒரு லேடிய பப்ளிக் அட்மிட் பண்ணாங்க. அவங்க பார்க்கறதுக்கு எங்க அண்ணன கிட்ட விவாகரத்து வாங்கிட்டு பிரிஞ்சு போன எங்க அண்ணி ராதா மாதிரி இருக்காங்க ன்னு சில ஊழியர்கள் சொல்றாங்க … அதனால தான் அண்ணன் அவங்கள எக்ஸ்ட்ரா கேர் எடுத்துப் பார்க்கறாருன்னும் சொல்றாங்க .. ஆனால் , சில பேரு அவங்க ராதா மாதிரி இருக்கற வேற யாரோன்னு சொல்றாங்க … அவங்களுக்கு நினைவு திரும்பி இருந்துடுச்சு .. ஆனா . .
“அம்னீஷியா பாதிப்பா?“
“ஆமாம் நீ வந்து பார்த்து அவங்க எங்க அண்ணி ராதா தானா இல்ல சில ஊழியர்கள் சொல்றா மாதிரி வேற யாராவதா ன்னு துப்பறிஞ்சு கண்டுபிடிக்கணும் … அவங்கள அட்மிட் பண்ண ஜனங்க அவங்களோட கைப்பை , மொபைல் எதையும் எங்க ஆளுங்க கிட்ட கொடுக்கல…. எங்க அண்ணி தானான்னு கன்பர்ம் பண்ணிக்க அவங்க உறவுக்காரங்க கிட்ட பேசிப் பார்த்துட்டோம் அவங்க அண்ணி பத்தி எதுவும் தெரியாதுன்றாங்க … “
“அவங்க தான் உறவுக்காரங்க …. ஒங்க ஆஸ்பத்திரில சம்பந்தம் இல்லாதவங்கள உள்ளே விட மாட்டாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன் … “
“நீ சிஸ்டர் விஜிய போய் பாரு”
“பசங்க பூரி கேட்டாங்க அவங்களுக்கு பூரி செஞ்சு கொடுத்துட்டு அவங்கள சாப்பிட வைச்சு அனுப்பிட்டு கிளம்பறேன்… “
“உன் அபார்ட்மென்டல் இருக்கறவங்க பிக் ஷாட்ஸ்னு சொல்றே .. Pied Piper of Hamelin ஸ்டோரில வர்றா மாதிரி நீ பிள்ளை பிடிக்கறவன்னு உன் மேல புகார் கொடுத்துட போறாங்க … “
“நல்ல சிந்தனை தான் உங்களுக்கு .. சரி பார்போம் “
உரையாடலை முடித்தான்.
அடுத்த நாள் இரவு எட்டு மணி . ஊரப்பாக்கம் கே.ஆர் மருத்துவமனையின் முன்வாசலில் காத்திருந்த ஜெகன் , நீள் இருக்கையில் அமரப் போகும் போது ஷீலா உள்ளிருந்து வந்தாள்.
“என்னப்பா அவங்கள பத்தி ஏதாவது தெரிஞ்சுதா …. “
என்று கேட்டபடியே அவனை அமரும்படி சைகை காட்டி அவனருகில் அமர்ந்தாள் அவள்.
“ நல்ல வேளை அவங்க ஒங்க அண்ணி இல்ல … ஒங்க அண்ணி விழுப்புரத்துல ஒரு தனியார் பள்ளிக்கூடத்துல டீச்சரா இருக்காங்க… மொபைல் , மெயில் தொடர்பு சாதனம் எல்லாத்துலேந்தும் அவங்கள துண்டிச்சுகிட்டு இருக்காங்க.. இங்க தன்னைப் பத்திய நினைவு இல்லாமல் அம்னீஷியால இருக்கறவங்க ஒங்க அண்ணி ராதா போல் உருவ ஒற்றுமைல இருக்கிற தாரா மேடம் .. செங்கல்பட்டுல இருக்கிற சமூக செயல்பாட்டாளர் சும்மா பேச்சளவில் இல்ல நிஜமாவே …. இவங்க காஞ்சிபுரம் மாவட்டத்துல சில ரிமோட் கிராமங்கள்ல நடக்கிற சிறுமிகள் திருமணங்கள் பத்தி தகவல் கொடுத்து நிறுத்தி இருக்காங்க .. அதைப் பத்தி ஜனங்க கிட்ட பேசி இருக்காங்க அது பிடிக்காத சில விஷமிகள் , ஊரப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன்லேந்து இறங்கி வந்து ஜிஎஸ்டி ரோட்ல நடந்து போன இவங்கள தாக்கி விபத்து மாதிரி ………. சில நாட்கள் இவங்க ஒங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கிறதுதான் பாதுகாப்பு இவங்கள வளர்த்த பாட்டி இருக்காங்க செங்கல்பட்டுல … நான் அந்த பாட்டி கிட்ட பக்குவமா தகவலை சொல்லிக்கறேன் … ” என்று நிறுத்தினான் ஜெகன்.
ஷீலாவிடம் ஜெகன் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த ஷீலாவின் அண்ணன் டாக்டர் ரகுநாத் அவனருகில் வந்தார்.
“தாங்க்ஸ்ப்பா … இங்க இருக்கிற பெண்மணி பத்தியும் என்னோட மனைவிய பத்தியும் தகவல் சொன்னே …” தழுதழுத்த குரலில் சொன்னார்.
ஷீலா, அண்ணனின் முதுகை வாஞ்சையோடு வருடினாள். ஜெகன் கண்களில் ஒரு துளி கண்ணீர்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
