கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 6,051 
 
 

”என்னங்க! சாப்பிட வாங்க.” அழைத்தாள் மனைவி மரகதம்.

”அம்மாவுக்கும் போடு.” என்றேன்.

அம்மா காலையில்தான் கிராமத்திலிருக்கும் தம்பி வீட்டிலிருந்து வந்தாள். வந்து இரண்டு நாட்கள் தங்குவாள். நல்லது கெட்டது சாப்பிட்டுவிட்டு கிளம்புவாள்.

அம்மாவிற்கு இங்கு கக்கூஸ் போகக் கஷ்டம். கிராமத்தில் காற்றாடச் சென்றவள். அடுத்து அவளுக்கு இங்கு பேச்சுத்துணைக்கு ஆளில்லை. அக்கம் பக்கம் பழக்கமில்லை. அவள் வாழ்ந்த கிராமம் அவளுக்கு எல்லாவிதத்திலும் வசதி. அதனால் அம்மாவிற்கு இங்கு இரண்டு நாள் இருப்பு என்பதே அதிகம்.

”அத்தையும் நானும் அப்புறம் சாப்பிடுறோம்.”

”ஏன் ? ”

”ஒ….ஒன்னுமில்லே.” அவள் முகம் மாறி மருகினாள்.

”ப்ச்! நாம ரெண்டுபேரும் தனியாய்த்தான் இருக்கோம் விசயத்தைச் சொல்லு ? ”

”ஒ…ஒன்னுமில்லே. அம்மாவுக்கும் பிள்ளைக்கும் கறி, மீனுன்னு எது வைச்சாலும் சரியாய் வைச்சு குறையில்லாம பரிமாறுறேன். நீங்க என்னடான்னா உங்களுக்கு வைச்சதை எடுத்து அம்மா தட்டுல தாராளமா வைச்சி சாப்பிடுன்னு சொல்லி சாப்பிடுறீங்க. மனசுக்குக் கஷ்டமா இருக்கு.” முகம் தொங்கி தரை பார்த்தாள்.

”அடச்சே! இதுக்கா வருத்தப்படுறே.?! தாய் என்கிறவள் தனக்காக உண்டு, அதில் தேவையானச் சத்தை தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தர்றாள். பிறந்த பின்னும் தன் ரத்தத்தைப் பாலாக்கித் தர்றாள். தனக்கு விருப்பமானது கிடைச்சாலும் தின்னாமல் குழந்தைக்கு வேணும்ன்னு தன் விருப்பத்தைத் தியாகம் செய்றாள். அப்போ இப்படி வளர்த்தத் தாய்க்கு இப்போ நாம உண்ணும் உணவில் கொஞ்சத்தைப் பிரிச்சுக் கொடுத்து அவளை மகிழ்விக்கிறது அவள் தியாகத்துக்குச் சோளப்பொறி. புரியுதா, தப்பா, செய்யக்கூடாதா ? ” பார்த்தேன்.

மரகதம் முகம் மலர்ந்தது.

”வாங்க அத்தையும் நீங்களும் சேர்ந்து சாப்பிடலாம்.” அழைத்து அகன்றாள்.

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *