தாய் என்பவள்!





ஜவுளிக்கடைக்குள் நுழைந்து பல மணி நேரமாகி விட்டது. நாளைய முக்கிய நிகழ்வுக்காக அணிந்து கொள்ளும் பொருட்டு வாங்க வந்ததில் தனக்குப்பிடித்த ஆடையைத்தேர்வு செய்ய முடியாமல் தவித்தாள் முகிதா.
நான்கு வருடங்களாக தாய் மவதி பல மேட்ரிமோனி வலைத்தளங்களில் கட்டணம் செலுத்தி மகள் முகிதாவுக்கு மாப்பிள்ளை பார்த்தாள். ஒரு மாப்பிள்ளையைக்கூட இதுவரை நேரில் பார்க்கவில்லை. சந்தித்துப்பேசவில்லை. பல மாப்பிள்ளைகளின் ஜாதகங்களை புகைப்படம் பிடிக்காததாலேயே நிராகரித்திருந்தாள்.
“இப்படியே பண்ணுனீன்னு வெச்சுக்கோ சீக்கிரமா முப்பத முழுங்கீருவே. அப்பறம் எவனும் பொண்ணுக்கேட்டே வர மாட்டான்.
வயிசு போயிருச்சுன்னா பணம் இருக்கும், சொத்து இருக்கும். ஒடம்புல பசபசப்பு இருக்காது. பசபசப்பு போயிருச்சுன்னா ஆருஞ்சீந்த வரமாட்டாங்க பாத்துக்கோ… அப்பறம் சொத்து, பணத்துக்காக கட்டிக்க வாரவங்குட்ட சொகத்தப்பாக்க முடியாது. நாஞ் சொல்லறத சொல்லிப்போட்டேன். அப்பறம் உன்ற இஷ்டம்….” பெற்ற தாய் கவலையை கண்ணீருடன் வெளிப்படுத்தினாள்.
நேற்று தான் ஒரு மாப்பிள்ளையின் புகைப்படத்தைப்பார்த்து ‘ஓகே’ என்றாள்.
சொன்ன அடுத்த நொடி சோதிடரைப்பார்க்க கிளம்பிய தாய் மவதி, ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்து, “பத்துக்கு எட்டு இருக்குது. முக்கியமானது அஞ்சும் இருக்குதுன்னு சோசியர் சொல்லிட்டாரு. ஒன்னி பையனை நேர்ல பார்த்து சரின்னு சொல்லீட்டீன்னா வர்ற ஐப்பசிலியே கல்யாணத்த முடிச்சிடலாம்” சொல்லி நிம்மதிப்பெருமூச்சு விட்டாள்.
மிகப்பெரிய கடையிலிருந்து ஒரு வழியாக அரைமனதுடன் ஒரு சுடிதாரை பில் போட்டு வாங்கி வந்தாள். “நம்ம டேஸ்ட்டுக்கு இந்த ஊரு மட்டுமில்ல. இந்த நாடே இல்ல. இன்ஸ்டாவுல என்னோட பிரண்டு சுகி தெனமும் விதவிதமா டிரஸ் பண்ணி போஸ்ட் போடறா. பேசாம அமெரிக்காவே போயிடலான்னு பார்க்கறேன்….” பர்கரை சுவைத்தபடி தாயிடம் புலம்பினாள்.
“நீ சுத்த ராசியே இல்லம்மா. உன்ற கூட வந்தா எனக்கு சரியா எதுவுமே அமையவே மாட்டேங்குது. நாளைக்கு கோயிலுக்கு மாப்பிள்ளை பாக்கப்போறப்ப நீ வர வேண்டாம். சண்முக மாமாவ வரச்சொல்லி போயிக்கிறேன்…” என மகள் கூறியதைக்கேட்டு பதில் பேசமுடியாமல் விக்கித்துப்போய் கண்ணீர் சிந்தினாள் முகிதாவின் தாய் மவதி.
“உன்னப்பத்து மாசம் வகுத்துல சொமந்து பெத்து வளத்து, சீராட்டி, சோறூட்டி எம்பட வாயக்கட்டி, வகுத்தக்கட்டி வளத்தது இப்புடிப்பேசறதுக்கா….? படிச்சுப்போட்டு சம்பாதிக்கறம்கிற திமிருடி உனக்கு… என்ற அப்பனாத்தா எனக்குப்போட்ட நகை, நட்ட வித்து பீஸ் கட்டி படிக்க வெக்காம நானும் உட்ருந்தன்னா நீ இப்புடிப்பேசுவியா…? பெத்தவீல மதிக்கத்தெரியாத நீ எங்க போயி மத்தவீல மதிச்சு வாழப்போறியோ….?” நா தழு தழுக்க பேசினாள்.
ஹோட்டல் கடையில் வாங்கிய தோசையை சாப்பிடாமல் எழுந்து வெளியே வந்த தாயை கையைப்பிடித்து “ஸாரிம்மா…வந்து சாப்பிவா… எல்லாரும் நம்மலையே பாக்கறாங்க…. கேவலமா இருக்கு…” எனக்கூறி அழைத்தாள் முகிதா.
“என்ற கைய உடுடி…. நீ பேசுனத விட இது கேவலமாப்போச்சா….? நீ எக்கேடு கெட்டோ போ…. நீ சம்பாதிச்சு வாங்குன உன்ற காருல நீயே ஏறி வந்துக்கோ… நாம் பஸ்ல ஏறி ஊட்டுக்குப்போறேன்…” கோபம் கொண்ட தாய் மகளின் பேச்சை மறுத்து புரோசோன் மாலிலிருந்து தனியாக வெளியேறினாள்.
பதட்டத்துடன் வீட்டிற்கு வந்து பார்த்த போது போர்வையை இழுத்து மூடியபடி தாய் படுக்கையில் படுத்திருப்பதைக்கண்டு பணிவாகச்சென்று, கால்களை பிடித்து விட்டு “நீ என்ற கூட இப்ப பேசுலீன்னு வெச்சுக்கோ, நாஞ்செத்தே போயிருவம் பாத்துக்கோ….” என முகிதா தாயிடம் கெஞ்சியபடி பேசியும் தாய் எழுந்து வந்த பாடில்லை என்பதை யறிந்தவள் வேறு வழியின்றி சமையலறைப்பக்கம் போனாள்.
பாத்திரங்களைக்கழுவி, வீடு கூட்டி, அழுக்குத் துணிகளைத் துவைத்து, கடைக்குச் சென்று மளிகை சாமான்களை வாங்கி வந்து இரவுக்கான உணவைச்சமைத்த போது தான் புரிந்தது தாய் என்பவள் யார் என்று. அவளது சிரமங்கள் எவையென்று.
இரவு உணவைத் தயாரித்து முடித்த பின் அழைத்தும் மனதைக் கல்லாக்கியபடி படுத்தே கிடந்தாள் மவதி.
ஒரே பெண் என்பதால் இருபத்தைந்து வயது வரை சமையல் கட்டின் பக்கம் முகிதாவை விடவே இல்லை. முகிதாவுக்கு பத்து வயது இருக்கும் போதே அவளது தந்தை விபத்தில் இறந்து விட, தாய் மவதி தான் குடியிருக்கும் வீடு போக உபரியாக இருக்கும் ஒரு வீட்டின் வாடகை வருமானத்தோடு வீட்டிலிருந்தே டெய்லரிங் வேலையும் செய்து வரும் வருமானத்தில் சிக்கனமாக செலவு செய்து மகளைப்படிக்க வைத்ததோடு, திருமணச்செலவுக்காக நம்பிக்கையான ஒருவரிடம் மாதாந்திர சீட்டும் போட்டிருந்தாள்.
ஒரு பவுன், இரண்டு பவுன் என அதற்கும் நகைக்கடையில் நகை சீட்டு போட்டு மகளுக்கு ஐம்பது பவுன் வரை நகை சேர்த்திருந்தாள்.
இவ்வளவு கஷ்டப்படும் தன்னை மகள் மதிப்பதில்லை என்பதால் மிகவும் மனம் உடைந்து போனாள்.
‘எப்போதும் போல் இருப்பதால் தானே நம்மை, நமது சிரமத்தை புரிந்து கொள்ளாமல் பேசுகிறாள். நாமும் செய்வதை செய்யாமல் அவளை செய்ய விட்டால் தான் நம் அருமை புரியும். திருமணம் செய்து போகிற இடத்திலும் வேலை செய்ய இடுப்பு வளையும்’ எனும் மனப்போக்கில் முகிதா எவ்வளவு கெஞ்சலுடன் பேசியும் மனம் மாறாமல் பிடிவாதமாக படுக்கையிலேயே இருந்தாள் மவதி.
“நாளைக்கு மாப்பிள்ளை பார்க்க வாராங்க.நீ இப்புடியே படுத்திட்டிருந்தீன்னா எனக்கு கல்யாணமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம். இப்புடியே காலம்பூராம் காலத்தக்கடத்திக்கறேன்….” சொல்லி தேம்பி அழுதாள் முகிதா.
காலையில் சண்முகம் மாமா சொல்லியபடி வந்திருந்தார். வேறு வழியின்றி அம்மாவை வீட்டிலேயே விட்டு விட்டு அவருடன் கோவிலுக்கு சென்று மாப்பிள்ளையை பார்த்தவுடன் இருவருக்கும் பிடித்துப்போக, ‘இன்னைக்கே ஊட்டுக்கு வாரோம்’ என மாப்பிள்ளை வீட்டினர் சொல்ல முகிதா தயங்கினாள்.
“அம்மாவுக்கு ஒடம்புக்கு சரியில்லை. இன்னொரு நாள் வந்துக்கலாமே….” என்றாள்.
“என்னங்க அம்மாவுக்கு ஒடம்புக்கு சரியில்லைன்னு சொல்லறீங்க….? உங்களப்புடிச்சு, நாங்க அவங்கள பார்க்காமப் போனா எப்படிங்க….? நல்லா இருக்கும் போது வந்து பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிடறத விட, நல்லா இல்லாத போது வந்து ஆறுதலா நாலு வார்த்த பேசறது தானுங்களே முறை….” மாப்பிள்ளைப் பையன் மதன் எதார்த்தமாகப் பேசியதால் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.
வீட்டிற்குள் நுழையும் போதே சாம்பிராணி வாசனை வீசியது. பூஜையறையில் விளக்குகள் எரிந்தன. சமையலறையில் உள்ள அடுப்பில் தனக்கு பிடிக்குமென எப்போதும் செய்யும் கொய்யாப்பழ அல்வாவை அம்மா செய்து கொண்டிருந்ததைப் பார்த்தாள். அதிலிருந்து வரும் நெய்வாசனை மூக்கைத்துளைக்க ஓடிச்சென்று தாய் மவதியை இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டாள் முகிதா.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |