தரிசனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 10, 2024
பார்வையிட்டோர்: 878 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனக்கு வயது பன்னிரண்டிலேயே கன்யாகுமரிமேல் காணாமலே காதல் கொண்டுவிட்டேன். நான் குமரன். அவள் குமரி. முதன் முதலில் காதல் வரும் வயதில் வரும் போதே மரங்களைச் சாய்க்கும் புயல் போன்ற காதல். 

காரணங்கள், எங்கள் குடும்பம் மூன்று தலைமுறை களாகவே சென்னைவாசிகள். எங்களுக்கு வெளிப்பிரயாணத் திற்கு வாய்ப்பு இல்லை. வசதியுமில்லை. வீட்டிலிருந்து வேலைக்கு. (வீட்டிற்குப் பெரியவர்களைச் சொல்கிறேன்.) மாலை, வேலையிலிருந்து வீடு. சனி, ஞாயிறு மற்றும் வீடு முறைகளில் கடற்கரைக் காற்று. 

அந்நாளில் கடற்கரையில் இவ்வளவு கூட்டமுமில்லை. கடுகு தெளித்தாற்போல் தூரத்துக்கு தூரம் கறுப்பும், சிவப்பும், வெள்ளையுமாய்ப் புள்ளிகள் அசையும், நகரும், ஆடும். 

உருளைக்கிழங்கு மஸாலா கறியும். வெங்காய சாம்பாரும் சம்பள வாரத்தில் சமைத்துவிட்டால், குழம்பைத் தாண்ட மாட்டோம். மோருக்கு லீவு. அன்று பூரா சாம்பார் சாதத்தை வெட்டுவோம். பள்ளியில், மதியத்தில் அலுமினியத்தில் (எவர்சில்வராமே…! எப்படி இருக்கும்?) சம்புடத்தைத் திறந் ததும், குழம்பு சாதத்தில் இரண்டு உருளைக்கிழங்குப் பத்தை கள் புதைந்திருந்தால் உவகைக்கு கேட்கவே வேண்டாம். நாக்கு சுரக்கையில் தாடை நரம்புகள் இழுக்கும். ‘சுறீ’ லெடுக்கும். 

அன்று உருளைக்கிழங்கின் விலை வீசை 5 அணா.-6அணா. 

முழுக் கத்திரிக்காயை வாயைப் பிளந்து, காரப்பொடி யைத் திணித்துப் பொன்னிறத்தில் எண்ணெயில் வதக்கி, மைசூர் ரசமும் வைத்துவிட்டால்-ஐயோ! ஐயோ! சொர்க் கம். இல்லை, எனக்கு சொர்க்கம் வேண்டாம். ரசமே போறும். 

எங்களை உருவாக்கிய அந்நாளையச் சமையல்கள், ருசி கள், பசிகள், நடப்பு, பெரியோர் சிறியோர், தாரதம்மியம், மட்டு மரியாதை, பேச்சு, அடக்கம், ஒளிவு, இலைதழை காய், பூமறைவு, ஆசைகள். கோபங்கள், அன்புகள், மயக்கங்கள் எல்லாமே வேறு. 

(காலத்தோடு ஒத்துப் போகாது. இந்தக் கிழங்கள்; என்றுமே இதுகளுக்கு ‘அந்தநாளும் வந்திடாதோ?’ பாட்டுத் தான்!) 

பொறி கண்டது பொரிந்து விடாது. கொழுந்து விட் டெரியக் கூசினாலும் தழல் கனிந்து தனக்கே ஒளிந்து வளர்கையில். 

எனக்கு எப்படித் தெரியும்? 

இந்த நாள்தான், ஆண் பெண் அடங்கலாக எல்லாம் கெட்ட வெளிச்சம். நெஞ்சத்தின் ஈரத்தையே சுவர்க்கும் வெளிச்சத்தின் வெய்யிலாப் போச்சே! 

‘காதலா? கலியா? முளைச்சு மூணு இலை விடல்லே. பிஞ்சிலே பழுத்த வெம்பல், அதுவும் யார் மேல்? அபராதம்! அபராதம்!! மிஷ்வா க்ஷமிக்கணும். முன்னால் வாயை அலம்பு. கை, கால் சுத்தி பண்ணிண்டு விபூதியிடு, உதிரி வித்தை வேண்டாம். குழைச்சு பட்டை பட்டையா, சுவாமி படத்துக்குத் தோப்புக்கரணம் போடு- இரு. விளக்கை ஏத்தறேன். அம்பாளை மன்னிப்புக் கேள். ஜகன் மாதா! பத்து நாளைக்குப் பயலுக்கு ராச்சோறில் மண்ணை வெட்டிக்கொட்டு. குடும்பத்தின் பேரைக் கெடுக்க எங்கிருந் துடா முளைச்சே? உனக்காக நானும் பிராயச்சித்தம் 108 காயத்ரி பண்றேன் – வேளை போறாத நேரத்தில் பாவி வேலை வைக்கிறான். அடியே வண்டைக்காய் வாங்கிண்டு வந்திருக் கேன். மறக்காமல் குழம்பில் வதக்கிப்போடு! போடறையா? போடறேன்னு சொல்லேன்! வாயில் கொழுக்கட்டையா அட்டைச்சிருக்கு?” 

நல்ல வேளை! 

இப்படியெல்லாம் கேட்பீர்கள். மண்ணில் கழுத்து வரை புதைத்துத் தலையை இடறுவீர்கள் என்று தெரிந்துதான் என் காதலை உங்களிடம் தெரிவிக்கவில்லை. ஆமாம்,கேட்கிறேன். காதலெனும் பேருக்கே இந்த பூச்சாண்டியா? அப்பா, அம்மா தாத்தா, பாட்டி எல்லாம் நீங்கள் இரவு உங்களைக் காலைப் பிடிக்கையில் சொன்ன கதை தானே! 

‘நாளைக்கு நாளைக்கு’ என்று நந்தனுக்குக் கண்டது என்ன? மூன்றே நாளில் கண்ணப்பன் முத்தி கண்டது என்ன? அவர்களுக்கு நேர்ந்தது எனக்கு நேரக் கூடாதா? 

“அவாள் எல்லோரும் அவதார புருஷாள். லோகத்துக்கு காண்பிக்க வந்தவாள் (என்னத்தை?) அறுவத்தி மூணு நாயன்மார்கள் நீ கேவலம்-சீ எதிர்த்தா பேசுறே? மூடு வாயை. எழுந்திருந்தேன்னா விசிறிக் கட்டை பிஞ்சுடும்.” 

அதனால்தான் உங்களைக் கேட்கவில்லை. 

ஆனால், அப்போ எல்லாமே வெறும் கதை தானோ? கன்யாகுமரிக்குப் போய் வந்த உறவினர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், இரவு வேளைக்கு வாசல் திண்ணையில் ஒதுங்கிய பைராகிகள், யாத்ரிகள், கதைசொல்லி, மஹிமை சொல்லி, விசிறி விட்ட வியப்பு, சென்னைக் கடற்கரையின் மாலைக் காற்றில் அந்திவானத்தின் வர்ணஜாலங்களில், காலை வேலையில் கடல் விளிம்பில், சூரியனின் உதய வாயில், கரையோரம் ஓடத்தின் நிழலில், கட்டைமரத்தின் மேல் சாய்ந்தபடி சிந்தனையில் கொழுந்து விட்டு, கண்டவர் கையோடு கொண்டுவந்த குங்குமம் கிளிஞ்சல் மாலை, சாய மண் என் கனவிற்கு கலவைகூட்டி, ஏக்கமாய்க் கட்டி, அதுவே அதிலேயே, அது வாய்ப்பந்தல் படர்ந்தது. 

சூர்ய உதயம், அஸ்தமனம்  இரண்டுமே குமரியில் காணலாமாமே! 

அவள் மூக்குத்தியே மணிக்கூண்டாமே! 

கன்யாகுமரி. 

பேரிலேயே, பேருக்குள்ளேயே ஏதேதோ நீரோட்டங்கள் விளையாடுகின்றன. நெஞ்சை மீட்டுகின்றன. 

அவள் குமரி! நான் குமரன். 

கடலோரம் கோவில், பாறை, பாறைகள், நெஞ்சிலும் பாறைகள், பாறைகளின் மேல் அலைகளின் மோதல்கள், சொல்லுள் அடைபடாது, என் கற்பனைக்கே சொந்தமான கதைகள், கவிதைகள், கதையின் நிழல்கள், நீழல்களின் காதைகள், கமகமப்புகள், கமகங்கள், இம்சைகள் சொல்ல முடிந்தவை, முடியாதவை, பேச்சில் முடிந்தவை, முடிந்தாலும் பங்கிட்டுக் கொள்ள மனம் வராதவை, சொல்லச் சொல்ல இல்லை இல்லை தலை சுத்தறது. 

சுற்றட்டும். மாரடைக்கட்டும். வெடிக்கவே வெடிக் கட்டுமே! உயிர் போகாதவரை மார்புள் விண்விண் கன்யா குமரி. கடன்காரி. 

இதற்காகத்தான். இதைத்தான் ‘நெருப்பில் கை வைக் காதே’ என்று பெரியவர்கள் கோபமெனும் பேரில் செய்த எச்சரிக்கையா? 

ஆனால் என்னிஷ்டத்தில் என்ன இருக்கிறது? 

மொட்டை மாடிமேல் கவிந்த வானத்தில் நக்ஷத்திரங்கள் என்னிடம் ஏதோ சொல்லத் தவித்து மூச்சு விடுகின்றன. இங்கு மட்டுமல்ல. இதே சமயத்தில் கன்யாகுமரியையும் கவிந்து கொண்டிருக்கிறோம் என்றா? 

அங்கு மாரிக்காலத்தில் மழை மேகங்கள் கடல்மேல், ஜல ரஸம் ஓட, லொங்கு லொங்கென்று குடம் குடமாய், பழம் பழமாய் நாங்கள் தொங்குவதை நீ பார்க்க வேண்டாமா? அவள் அபிஷேக சுந்தரி கடல் நீரில் குளிக்கும் கன்யாகுமரி. 

சப்தரிஷி மண்டலம் நெஞ்சில் ஏர் பிடித்து உழுகிறது; புவனமே ஒரு ரஸகுண்டு. நம் அவ்வப்போதைய எண்ணங் களின் ஏக்கங்களின் வர்ணங்களை, சாயங்களை உள்ளுக்கு வாங்கிக் கொண்டு ஆசைகாட்டிக் கொண்டு மினுமினுக்கிறது.

இரவு நேரத்தில் என்ன வெளிச்சம் எரிகிறது? சொக்கப் பானையா? இவ்வளவு பெரிய திருஷ்டி கழிப்பா? பிணமா? இத்தனை விதங்களில் நானா? 

ஏன்? 

ஏன்? ஏன்? ஏன்??? 

எதிர்வீட்டிலிருந்து வீணையில் மோகனம் கிளம்பி நெஞ்சில் கொக்கி மாட்டியிருக்கிறது. 

மோகனமா? கல்யாணியா? மோகன கல்யாணியா?

குங்கிலியச்சுடர் போன்று ‘குபுக் குபுக்’- ஸ்வரப்பந்துகள் குபீரிடுகின்றன, குவிகின்றன, குலைகின்றன, குழைகின்றன, குமைகின்றன. 

இந்த ராகமுமில்லை, அந்த ராகமுமில்லை, எந்த ராகமு மில்லை, ஆத்மாவின் ராகம் ஒரே ராகம்;அவரவர் உடன் கொண்டுவரும் அவரவரின் சொந்த ராகம். பிறவிக்காட்டில் மாட்டிக்கொண்டு திக்குத் தெரியாமல் எதிர்க்குரல் தேடி அலையும் அபயக் குரல். 

எதிர்வீட்டில் ஒரு பெண். வயது முப்பத்திரண்டாம். இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம். இங்கு நாங்கள் குடி வந்ததிலிருந்து நான் இன்னும் அவளை முகம் பார்த்ததில்லை. ஜன்னல் பக்கம் நிழல், மாடியில் துணி உலர்த்தவோ, கூந்தலை ஆற்றவோ, மாலை வேளையில் காற்று வாங் கவோ – ஊஹும். 

அவளை அவள் பயிலும் வீணையின் இசையாய்த் தான் அறிவேன். தன் ஆவியின் கொந்தளிப்பை வீணையில் ஆஹுதியாய்ச் சொரிகின்றாள். அவள் தாபத்தின் தஹிப் புக்கு வீணை வெறும் வடிகாலாய் இல்லை. இன்று இவள் வாசிப்பைக் கேட்கையில் வீணை இவள் தலைவிதி. “என் வேளை வரும்போது என் சிதையில் என் வீணையை என் தலைவிதியை என்னோடு எரித்துவிடுங்கள், என் வேளையே! எப்போது வருவாய்?” என்கிற மாதிரி. 

தன் கை பிடிக்க உகந்த புருஷனுக்குக் காத்திருந்து காத்திருந்து அவன் வராமல் கடைசியில் கல்யாணம் என்று ஆனால் போதும் என்கிற நிலைமைக்கு வந்தாகிவிட்டது. கன்யா- 

-இனி குமரி இல்லை. 

நாட்டில் பெண்களுக்குக் குறைவில்லை. பிள்ளைகளுக்கும் குறைவில்லை, ஆனால் தாலிமுடி ஏன் விழுவதில்லை? 

ஏன்? ‘ஏன்’களுக்கு முடிவே கிடையாதா? 

என்றுமில்லாத் திருநாளாய் இன்றிரவு வெற்றிலை போட்டுக் கொள்ள ஆசை எழுந்தது. செல்லத்தைத் திறந்து ஒரு வெற்றிலையை எடுத்துத் தொடையில் துடைத்தேன். நரம்புகளில் மஞ்சள் படர்ந்துவிட்டது. இன்று காலைதான் இளசு கண்டு மயங்கி, இளசுக்காகவே வாங்கினது. 

ஆமாம். நான் என்ன வாழ்ந்தேன்? முதன் முதலாய் என்னைக் கன்னிக் காதல் சுட்ட வாய்மையில், வீட்டை விட்டு ஓடி நடந்தே கன்யாகுமரியை அடைவேன் என்று நினைத்த மூர்க்கமெல்லாம் எங்கே போயிற்று? அறுபத்திநான்காவது நாயனாராக ஆவதற்குப்பட்ட ஆசையெல்லாம் என்னவா யிற்று? 

அப்பா காலமாகி, ஹேமா வந்து, ஒண்ணு, ரெண்டு- எண்ணிக்கோ-மூணு, நாலு, அஞ்சு – குடும்பம் பெருகி, வீடு குறுகி, அம்மா காலமாகி, (அவளுடன் போனது என்னென் னவோ) வீடு இரண்டாகி – குடும்பம் என்றால் எத்தனையோ சோதனைகள், மேடுபள்ளங்கள் (என் முகத்தில் கூடத்தான், முக்கியமாய் முகத்தில்) தலை நரைத்து, புருவம் நரைத்து (“சொட்டுக் காப்பி குடிச்சுக் குடிச்சே முடாக்குடி ஆயாச்சு. மாசக் கடைசியில் காப்பிப் பொடி உதைச்சால் வீடு ஒரே ரகளை! கட்டுப்படியும் ஆகல்லே. ஏன் உதைக்காது’); கரடிப் புருவங்களின் கீழ் விழிகள் அனற்பிழம்பு, (‘அதென்ன எப்போப் பார்த்தாலும் விறைப்பு முழி? நாட்டுப் பெண்ணாய் இந்த வீட்டுக்கு வந்தது மொதக் கொண்டு பாக்கறேன். ஒரு நாள்கூட சுமுகம் கிடையாதா?”) பசி விழிகள். 

-இன்னமும் கன்யாகுமரியைக் காணப் போகிறேன். கடைசியில் – காத்திருந்த தவம் பலித்ததம்மா என்று சொல்லவா? 

ஒரு நாள் நான் குடும்பமாய் மூட்டை முடிச்சுடன் (ஒரு ஸ்டௌவ், ஈயம் முழுக்க இலாத பாத்திரங்கள் இரண்டு, காப்பிப் பொடி, அஞ்சறைப் பெட்டி)ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருப்பதைக் காண்கிறேன். இது எப்படி நேர்ந்த தென்றுகூட எனக்கு நிச்சயமாய்த்தெரியாது.உத்யோகச் சலுகை ஏதோ கிடைத்தது.

மதுரை தாண்டும் வரைகூட திகைப்பு சரியாய்த் தெளிய வில்லை. அவளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன் என்பதை நம்ப முடியவில்லை.

மதுரையில் மீனாக்ஷி.

தென்காசியில் லோகநாயகி (ஆமாம். இனிமேல் வட காசிக்குப் போகப் போறேனாக்கும்!) திருநெல்வேலியில் – மறந்து போச்சு.

நாகர்கோயில்…

கன்யாகுமரியில் கன்யாகுமரி.

விடுதியில் மூட்டை முடிச்சுகளை எறிந்துவிட்டு, கடலில் ஸ்னானம் செய்துவிட்டு, முன்னால் அவளையும் குழந்தை களையும் போகவிட்டு நான் சற்றுப் பின் தங்குகிறேன். நெருங்க நெருங்க ஏன் ஒரு பயம்? திரும்பி விடலாமா?

இனிமேலா? நீ மட்டுமா? நடக்கிற காரியமா? அதற்குத் துணிச்சல் இருக்கிறதா? திரும்புதல் என்பதே கிடையாது. தெரியுமோன்னோ? திரும்புதல், மன்னிப்பு சென்று போனவை பரிகாரம், விடுதலை – ஏன், சொற்களே மாயமான்கள், மனிதன் துணை தேட அமைத்துக் கொண்ட கருவி. அவைகளின் அடிப்படை பயத்தின் மேல் மனித சுவர்க்கமே தாங்கி நிற்கிறது; பொய் மேல் எழுப்பிய பொய்க் கட்டிடம்.

காத்திருந்த வயது இத்தனை கழிந்தது கணக்குத் தெரிய வில்லை. கோயில் வெளி வாசல் கடந்து ப்ராகாரம் தாண்டி, உள் வாசல் புகுந்து உள் ப்ராகாரத்தில் பாதி சுற்றி சன்னிதானத்தில் நுழைந்து, அவளுடன் நேருக்கு நேர் ஆவதற்கு இருக்கும் இந்த சொற்ப நேரத்துக்கு வந்திருக்கும் கனத்தின் அழுத்தம், உள் பரபரப்புத்தான் தாங்க முடிய வில்லை. ஒரு கையால் மார்பை அழுத்திக் கொள்கிறேன். திரும்பி விடலாமா?

யாரோ, எங்கோ சிரிக்கும் சப்தம்,

சன்னதியில் மின்விளக்கு கிடையாது. கர்ப்பக்ருஹத்தின் வாசல் ப்ரபை பூரா அடுக்கடுக்காய் அகல்ஜோதிகள் எரிகின்றன. அசப்பில், ஹோமகுண்டத்தின் நடுவே அவள் நிற்கிறாள். 

அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. 

இருளில் நெருங்கிய வெண்கல விளக்குகளின் சுடர் தரும் ஒளி, நிழலாட்டத்தின் செதுக்கலில் அவள் வெளிப்படு கிறாள். 

கற்பனையில் ஆவாஹனம் ஆகி, கவிதை (வெறும் சொற் கட்டுகள் அல்ல, இதயத்தின் அடிவார எழுச்சிகள்) ஊட்டி, அலங்கரித்து, உள் பார்வை காத்த உருவை, கேவலம் ஐம் புலன்களும் சேர்ந்த வெளிப்படையில் காண நேர்கையில் இத்தனை நாளையக் கனவு அந்தக் கணமே சிதைந்து போகும் துக்கத்தைக் காட்டிலும் கொடுமை வேறு இல்லை- வேண்டாம். 

ஆனால் இங்கோ வேறு. புழு வெடித்துத் தட்டாரப் பூச்சி கிளம்புவது போல், கருப்பையில் பொத்திப் போற்றிச் சுமந்து வைத்திருந்த சிசு வெளியாகி, முதன் முதலாய்த் தாயின் கண்ணுக்குப் படுவது போல், நனவின் பொலிவு கனவையும் மீறிக் காட்டுகையில் – இந்த அனுபவத்தை விவரிப்பது எங்ஙனம்? 

கண்டேன், உடைந்தேன். எனக்குக் கண்ட பயமே இது தானோ? உன் விருப்பமும் இதுதானோ? உன் விருப்பத்தைத் தான் என் பயமாய்க் கண்டேனோ? ஏதேனும் தைரியம் சொல்லேண்டி – 

சிற்பியின் செதுக்கல் முடிந்து முழுமை கண்டதும் அவனையே காலால் உதைத்து தள்ளிக் கொக்கரிக்கும் சௌந்தர்யம். கிணறு வெட்டப் பூதம். கல்லைச் செதுக்கிக் கன்யாகுமரி, கல்மேல் உளிபிடித்த கையை நடத்தியவளே நீதானோ? ஸஹிக்க முடியாத சௌந்தர்யம் என்றால் அது இதுதான். 

போதும் போதும் தேவி, உன் அழகைக் காண எனக்கு அருகதை ஏது என்று கண்ணைப் பொத்திக் கொண்டால், உள் இமையில் அவள் ஏற்கெனவே நின்று சிரிக்கிறாள். 

இத்தனை நாள் காத்திருந்து என்னைப் பார்க்கத்தானே இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய்! 

அபிஷேகம் அந்த முடியிலிருந்து அந்த உடலில் வழிகை யில் அந்தந்த திரவியத்தில் பளபளக்கிறாள், ஜ்வலிக் கிறாள், மினுமினுக்கிறாள், மிளிர்கிறாள், ஒளிர்கிறாள், அங்கங்கள் பிதுங்குகிறாள், உள்ளத்தைச் சூறையாடுகிறாள். பாலருவி முகத்தை வெளிச்சமாக்கி, தோள்களில் வழிந்து, மார்க்குலையில் இழிந்து அடிவயிற்றில் அலைபிரிந்து, சொரிந்து பாதங்களை நோக்கி இறங்குகிறது. குருக்கள் பர பரவெனத் தண்ணீரைச் சொம்பு சொம்பாய்க் கொட்டி அலம்பி, சட்டென சிலையின் ஒரு கையில் ருத்ராக்ஷ மாலை யும் மறு கையில் கமண்டலத்தையும் கொடுத்து விட்டார். ஆ, என்ன நேர்ந்து விட்டது?தோற்றம் சட்டென மாறி விட்டது. 

தேவி திடீரென நீலச் சுடராகி விட்ட விந்தையை என்ன சொல்ல? அபிடேகப் போதின் வெகுளியும் சிரிப்பும் எங்கே? 

உடுக்கையும் மாட்டியாகி விட்டது. கன்யாகுமரி காஷாயினி. 

பதினாறு வயது பச்சிளம் பாலா (இப்போதுதான் அரும்பு கட்டிய ஸ்தனங்கள்) திடீரெனப் பழுத்த தபஸ்வினி. அவள் தவத்தில் அவள் காய்ந்து கணகணக்கிறாள். முகத்தில் தவத்தின் கடுப்பு. 

சீ- கிட்ட வராதே – என்னை யாரென்று நினைத்தாய்? நான் சிவசொத்து. 

வியப்பில் ஆழ்கிறேன். 

உமையைப் பிரிந்த சிவம் அங்கு இமயமலைச் சிகரத் தில் தவமிருக்கிறான். 

இங்கு தென் கோடியில் அவனை அடைய இவள் தவம் கிடக்கிறாள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். யார் முன்னால் தணிவது என்று இருவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

காத்திருப்பது என்றால் என்ன? 

இங்கு இத்தனை அழகும், அங்கு அத்தனை சௌகரிய மும், ஒன்றுடன் ஒன்று ஒன்றா ஏங்கி, வரட்டு கர்வத்தில் வியர்த்தமாகப் போவதுதானா? 

கப்பல்களைக் கவிழ்த்த கதைகளைத் தன்னுள் அடக்கிய அந்த மூக்குத்தி உண்மையில் கல்யாணமாகாமல் காத்திருக் கும் கன்னிகளின் ஏக்கம் ஒன்று திரண்ட கண்ணீர்ச் சொட்டு. 

வீம்புத் தவம், வீண் தவத்தில் ஒருவருக்கொருவர் ஏன் அரண் கட்டிக் கொண்டேயிருக்கிறீர்கள்? 

ஏன்? 

அர்ச்சகர் அலங்காரம் செய்யத் திரையை இழுத்து விட்டார். ‘ஏனா’கவே அவள் அதன்பின் மறைந்து போனாள்.

– மீனோட்டம், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1991, வானதி பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *