தந்தையுமாகி





(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த ஆதார வைத்தியசாலை முன்றில் பார்வையாளர்கள் கடல்கோள் அலையாகப் பெருக்கெடுத்து நின்றனர். சுருக்குக் கேற்றின் முன்னால் கதிரையை அரியாசனமாக்கி அமர்ந்திருந்த காவலாளியின் கையிலிருந்த மணி ஒலி எழுப்புவதற்காய் ‘ஒன்யுவர்மார்க்’இல் இருந்தது.
அந்தக் காவலாளி பார்வைக்கு கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் தன் தொழிலில் சுத்தமாய் இருந்தான். தன்னை மீறி எவராவது உள் நுழைந்தால் தனது பதவியையே துறப்பேன் எனச் சபதம் கொண்டவன் போல கடமையுணர்வுடன் செயற்படலானான்.
இரவுக் கடமைக்காக வைத்தியசாலைக்குள் நுழையும் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட அக்காவலாளிக்கு
‘சல்யூட்’ அடித்தே உட்செல்ல வேண்டியிருந்தது.
பார்வையாளர்களில் பெரும்பாலானோர் நோயாளிகளைப் பார்வையிட வேண்டும் என்பதை விட இருளமுன்னர் ‘பஸ் பிடித்துவிட வேண்டும்’ என்பதிலேயே முனைப்பாக இருந்தனர்.
தென்மேற்கு மூலையில், ஓங்கி வளர்ந்து காற்றோடு கதைபேசிக் கொண்டிருக்கும் அசோக மரத்தின் கீழ் கைக் குழந்தையுடன் ஒரு பெண் தனித்து நின்றிருந்தாள். அவளது முகத்தில் கருமையும் கூடவே சோகமும் கப்பியிருந்தது. கடல்கோள் அனர்த்தத்தில் காயப்பட்ட தன் கணவனை ‘வாட்டில்’ அனுமதித்தவளாக அவள் இருக்கலாம்.
காவலாளியின் கையில் இருந்த மணி ‘ஹெட் செட்’டாகி ஒரு பாட்டம் ஒலித்தோய்ந்திற்று. நோயாளிகளின் வரவுக்காக வாசலின் இருபுறமும் தவமியற்றிக் கொண்டிருந்த ‘ஸ்டெச்சரை’யும் இடித்துத் தள்ளியவாறே சனங்கள உள் நுழைந்து கொண்டிருந்தனர். ஸ்டெச்சரை இழுப்பதா தனது கதிரையைப் பிடிப்பதா என காவலாளி திணறிக் கொண்டிருந்தான்.
சைக்கிள் பாதுகாப்பில் கொடுத்த ரிக்கெட்டினை சேட் பொக்கெட்டினுள் பத்திரப்படுத்திக்கொண்டு கையில் தொங்கிய ஹோர்லிக்ஸ் போத்தலை மார்போடு அணைத்தவாறே சனங்களில் ஒருவனாக வைத்தியசாலை வாசலை நோக்கி மிதந்து செல்கிறேன்.
வெளிநோயாளர் பகுதியையும் தாண்டி உட்சென்றதும் வைத்தியசாலைக்கே உரித்தான நெடி நாசி வழி ஏறி வயிற்றுள் இறங்கியது. புதிய நேரம் நாலரை போல் சாந்தி தந்த தட்டை வடையும் தேநீரும் இரைப்பையிலிருந்தும் மேலெழுவேன் எனப் பயங்காட்டிற்று.
சுடுநீர்க் குடுவை, உணவுப் பொதிகள் தாங்கிய பிளாஸ்டிக் பாஸ்கட்டுகளைக் கையில் சுமந்தவாறே ஆளுக்கொரு திக்கில் சனங்கள் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தனர்.
நான் தெற்குத் திசையிலேயே செல்ல வேண்டியிருந்தது. எதற்கும் கைகாவலாக ‘ஆம்பிளையளின்ர வாட் எங்கை இருக்கு?’ என்று எவரையாவது கேட்டு வைப்பது நல்லது போல் தோன்றிற்று. முன்னமே பேசிப் பறைந்து வந்தது போல ‘மெட்டி ஒலி’ தொலைக்காட்சி நாடக சரோவை நினைவுபடுத்தியவாறே ஒரு தாதி இப்போ என் முன்னால் தயார் நிலையில் நின்றாள்.
என் சந்தேகத்தைக் கேட்கலானேன்.
‘உப்பிடியே நேரை போய் வலக்கைப் பக்கமாகத் திரும்ப வாற முதல் வாட்’ என்றாள் நிதானமாக. நோயாளிகளுடனும் என்னைப் போன்ற விபரமறியாத பார்வையாளர்களுடனும் எப்படி அன்பாகப் பேச வேண்டும் எனப் பயிற்சிக் காலத்தின்போது இடித்திடித்துக் கூறியிருப்பார்கள் போலும்.
‘தாங்ஸ் அம்மா’ என்றவாறே முன்னேறிக் கொண்டிருந்தேன். பதிலுக்கு அவளும் ஏதோ கூறினாள். ‘வெல்கம்’ என்று மட்டும் கூறியிருக்க மாட்டாள் என நினைத்துக் கொண்டேன்.
அடுத்து ஆறேழு கவடு வைத்திருக்க மாட்டேன்…
‘அண்ணை என்ன கனநாளாக இந்தப் பக்கம் காணேலை? இப்ப எந்தத் தேசத்திலை?’ என்ற குரல் கேட்டுத் திரும்புகிறேன்.
கிழக்குப் பக்கமாக பிள்ளையார் கோவிலே தஞ்சமெனச் சரணடைந்தவாறே நீண்டு கிடந்த அந்த வாட்டில் இருந்து தாடி வைத்த ஒரு நடுத்தர வயதுக்காரர் பற்பொடிக்கு விளம்பரம் செய்தவாறே என்னையே பார்த்துக் கொண்டு நின்றார்.
“ஓ…! நான் இப்ப கொழும்பிலை இருக்கிறன்” என்றவாறே அவரை இனங்காண எத்தனிக்கின்றேன்.
“என்னைத் தெரியவில்லையா? என்னைப் பார், என் கண்களைப் பார். நன்றாக உற்றுப் பார்” ஏதோ ஒரு திரைப்படத்தில் சிவாஜிகணேசன் செய்தவற்றை ‘இமிற்றேற்’ பண்ணியவாறே என்னைப் பார்த்து மீண்டும் சிரித்தார்.
நல்ல வேளை எனது முகவரி மற்றும் செலூலர், ஈ-மெயில் விபரங்களையும் கூறாமல் விட்டேனே என்று நினைத்தவாறே எனது வேகத்தினை ஆர்முடுகலாக்கி களஞ்சியசாலையையும் கடந்து நடக்கலானேன்.
என்னைப் பார்த்து புன்முறுவலித்தவாறே முன்னால் ஒரு தாதி வந்துகொண்டிருந்தாள்.
எங்கோ பார்த்துப் பழகிய முகம். யாரது? என்று யோசிப்பதற்குள் “ஆரைப் பார்க்கப் போறியள் அங்கிள்?” என்று கேட்டாள்.
“ஓ! புவனமக்காவின்ர பொடிச்சி… யூனிபோமிலை ஆளை உடனடியாக ஐடென்ரி பண்ணேலாமல் போச்சு. நான் பிள்ளை இவர் தாமோதரண்ணனைப் பார்க்கப் போறன்”.
“தாமோதரண்ணன் எண்டு?” என்பதை அலை போல் உயர்ந்த அவளின் புருவங்கள் வினவிற்று.
“இவர்தான் பிள்ளை. கதையள் எல்லாம் எழுதுவார். கனகாலமாக பிள்ளையார் கோயில் மடத்திலை இருந்தார். கந்தபுராணமெல்லாம் படிப்பார். ”
“ஓ…ஓ… எங்கடை தாமுவப்பாவையே சொல்லுறியள்?” ஆஸ்பத்திரிக்கே அவர் உரித்தாகி விட்டமை அவளது பேச்சில் தெரிந்தது.
“இப்ப ஆளைத் தெரியுதுதானே பிள்ளை?”
“தெரியுதுதானேயோ? இப்ப இரண்டு இரண்டரை மாதமா வாட்டிலைதானே இருக்கிறார். கடல்கோளால் பாதிக்கப்பட்டு வந்தாக்களிலே அவரைப் போல ஒருசிலர் தான் இன்னும் டிச்சார்ச் ஆகாமல் இருக்கினம். கொஞ்ச நாளைக்கு முந்தி இண்டைக்கோ நாளைக்கோ எண்டமாதிரித்தான் இருந்தார். இப்ப கொஞ்சம் பரவாயில்லை.”
“அவரைப் பற்றி நீங்கள் அறிஞ்சு சொல்லத்தக்கது வ்வளவுதான் பிள்ளை. ஆனால், அவர் ஆர், எப்படியிருந்தவர் எண்டதெல்லாம் உங்களுக்குத் தெரியுமோ?”
“கதைகள் எழுதினார் எண்டு அம்மா சொன்னா.’ பரீட்சையில் பாஸ் பண்ணாத ஒரு பாவத்தனம் அவளது முகத்தில் தெரிந்தது.
“கதைகள் இப்ப இப்ப எல்லாருந்தான் பிள்ளை எழுதியினம். ஆனால், இவற்றை படைப்புகள் சாதாரணமானவை இல்லை. உன்னத தரத்திலை இருப்பவை. பல்கலைக்கழகமே ஆய்வு செய்து பாடப்புத்தகங்களாகப் பேணி வைச்சிருக்கிற அளவுக்கு அந்த நாளையிலை பேரோடும் புகழோடும் இருந்தவர். எழுத்தையே நம்பி வாழ்ந்த சிலரில் ஒருவர். அப்படிப்பட்டவர் இப்ப அநாதையாக ஆதரவில்லாமல் ஆஸ்பத்திரியிலை படுத்திருக்கிறதுதான் பெரிய கவலையாக இருக்கு. ஏற்றுக் கொள்ளேலாமல் இருக்கு. ” நான் கூறியது ஆறாந்தரத்தில் மூத்ததம்பி வாத்தியார் சரித்திர பாடம் படிப்பித்தது போல் அவளுக்கு இருந்திருக்க வேண்டும். கொட்டாவி விடாத குறையாக நின்றாள். ஏறதத்தாழ எங்களை இடித்து விலகியவாறே அந்த ஒடுங்கிய ஓடை போன்ற நடைபாதை வழியே சனங்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.
“உங்களுக்கு அவர் இருக்கிற வாட் தெரியுமோ அல்லது கொண்டு வந்து விடட்டுமோ?” என்றவாறே நூற்றெண்பது பாகைகளில் அவள் திரும்பியது அவளில் இருந்த ஒழுங்கை எனக்கு உணர்த்திற்று.
“எனக்கென்ன இது புது இடமே? இருபது இருபத்தைஞ்சு வருசமா ஊரிலை இல்லாட்டிலும் முந்தி நாங்கள் வந்து மருந்தெடுத்துப் பழகின ஆஸ்பத்திரிதானே? நான் போய்ப் பார்க்கிறன்” என்றவாறே வலப்பக்கமாகத் திரும்புகிறேன். காலில் சளி போல ஏதோ மிதிபட்டது.
ஊர் வந்தால் வெறுங் காலுடன் திரியும் எனது கொள்கை எல்லா இடத்திற்கும் ஒத்து வராது என்பதை காலில் இழுபட்ட சளி நிறுவிற்று.
கழிப்பறை நீரைக் குடித்துவிட்டு நீந்தாத குறையாக அதன்’ வாசலில் கிடந்த சாக்கு ஒன்று ஆபத்திற்கு உதவிற்று.
ஆண்கள் வாட்’டிற்குள் நுழைகின்றேன். வரவேற்குமாப்போல் நடுத்தர வயதுத் தாதி ஒருத்தி அமர்ந்திருந்தாள். இடது கையில் யாரோ ஒரு நோயாளியின் எக்ஸ்ரேயை வைத்துப் பார்த்தவாறே வலது கையால் ஏதோ எழுதிக் கெண்டிருந்தாள். ஒரு வேளை நாளை காலை அந் நோயாளிக்கு சத்திரசிகிச்சையாக இருக்கக்கூடும்.
அத்தாதியை இடையூறு செய்ய விரும்பாதவனாக தாமோதரண்ணனைக் கட்டில் கட்டிலாகத் தேட ஆரம்பித்தேன்.
“வேலோன் ஆரைத் தேடுறாய்?” – ஒரு பெண்ணின் குரல் கேட்டுத் திடுக்குற்று, திரூம்பிப் பார்க்க நினைத்தேன்.
சற்று முன்னர் நடந்த சம்பவத்தின் படிப்பினையால் உஷாராகி, இன்னோர் தடவை ஏமாற விரும்பாதவனாக, எதுவுமே கேட்காதவன் போல, சேலைன் இறங்கிக் கொண்டிருக்கும் முதல் மூன்று நான்கு கட்டில்களிலும் அறிவற்ற நிலையில் கிடந்த அந்நோயாளிகளையும் ஏக்கத்துடன் சூழ நின்ற பார்வையாளர்களையும், தாண்டியவாறே நான் உள்ளே சென்று கொண்டிருந்தேன்.
“என்ன வேலோன், கேட்டது விளங்கல்லையோ, ஆரைப் பார்க்கவேணும்?”- மீண்டும் அதே பெண்ணின் குரல் சற்று உரக்கக் கேட்கவே திரும்பிப் பார்க்கின்றேன். தெரிந்த எவரையுமே காணவில்லை. “தாமோதரண்ணனைத் தேடுறன் என்று சொல்லாமலே திரும்பியது எவ்வளவு நல்லதாகப் போயிற்று. அல்லாட்டி நாலு பேர் மத்தியில் மரியாதை கழன்றிருக்கும்.
அந்தத் தாதி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
“கேக்கிறன்… கேக்கிறன்… பேசாமல் நிக்கிறாய்”- இதுவரை ஒலித்தது தன் குரலே என உரிமை கோரிய வண்ணம் என்னை நெருங்கிக் கொண்டிருந்தாள்.
“எட.. எங்கட காஞ்சனா…” என்றேன்.
“ஆளை மறந்தாலும் பெயரை மறக்காமல் இருக்கிறாய்.”
“காஞ்சனா உனக்கு ஒண்டு தெரியுமே? வாழ்க்கையிலை ஆரைத்தான் மறந்தாலும் சின்ன வயதிலை கூடப் படிச்சாக்களின்ரை பெயரை மட்டும் நாங்கள் சாகுமட்டும் மறக்கமாட்டோம்.”
எங்களூர் பாடசாலையில் புவனேசு அக்காவிடம் முதலாம் வகுப்பு படித்ததிலிருந்து நாகபூசணி ரீச்சரிடம் ஏழாம் வகுப்பு படித்தது வரை காஞ்சனா எனது வகுப்பிலேயே படித்ததும், ஐந்தோ ஆறாம் வகுப்பில் படிக்கும்போது ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டுச் செல்லும் வ ழியில் மூத்ததம்பி வாத்தியார் வீட்டு முடக்கில் வேலியோரமாக நின்ற இலந்தை மரத்தடியில் ரவிச்சந்திரனுடன் சேர்ந்து காஞ்சனா இலந்தைப்பழம் பொறுக்கும்போது, எவராலோ ஏற்கனவே எறியப்பட்ட கல் மரத்தில் தொங்கிக் கிடந்து அந்நேரமென்று பார்த்து வீழ்ந்து காஞ்சனாவின் மண்டையைப் பதம் பார்த்ததும், ஓடும் குருதியைக் கட்டுப்படுத்த ரவிச்சந்திரன் தன் சேட்டையே கிழித்து காஞ்சனாவின் மண்டைக்குக் கட்டுப் போட்டதும்.. அதன்பின்னர் ரவிச்சந்திரன் ‘பாரி’ எனவும் காஞ்சனா ‘முல்லை’ எனவும் சில காலங்கள் பழிக்கப்பட்டதும், காஞ்சனாவைக் கண்டதும் என் ‘பிளாஷ்பாக்கில்’ ஓடியது.
இன்னும் காஞ்சனா, ரவிச்சந்திரன் பற்றிய சில சுவாரசியமான ‘பிளாஷ்பாக்குகள்’ என் கைவசம் இருந்தன. காஞ்சனாவின் கேள்வி எல்லாவற்றையுமே நாசமாக்கி விட்டது.
“அது சரி… இஞ்சாலை ஆரைப் பார்க்க…”
“எழுத்தாளர் தாமோதரத்தைப் பார்க்கவெண்டு…”
“ஓ! உன்ரை இலக்கிய ஆசான். உன்ரை பிரசுரங்களிலைகூட அவரைப்பற்றி எழுதியிருந்தாய். பார்த்தன். அதோ அவர் அந்தக் கோணரிலை இருக்கிறார்… வா பார்ப்பம்”.
ஏழெட்டுக் கட்டிலைக் கடந்து மடியும் ஸ்கிறீனால் மறைக்கப்பட்ட மூலைக்கட்டிலை அடைந்தோம். காஞ்சனா ஸ்கிறீனை மடித்து விலக்க நான் கட்டில் அருகே சென்றேன்.
உடலில் தோல் சுருங்கி எலும்போடு படிந்திருக்க, வற்றிய நெஞ்சுக் கூட்டுடனும் பருத்த வயிற்றுடனும், சவரஞ் செய்து பல மாதங்களாகிவிட்ட முகத்தில் வெளித் தெரியும் பற்களுடனும் முகட்டைப் பார்த்தபடியே தாமோதரண்ணன் படுத்திருந்தார். அசாதாரணமாக வெளித் தெரியும் ஒவ்வொரு அங்கமும் அவரது நோயின் அகோரத்தினைச் சொல்லிக் கொண்டிருந்தது. அவரது கீழுடம்பினை மங்கலாகி விட்ட, ஆஸ்பத்திரிக்குரிய சாரமும் ஈக்களும் மூடியிருந்தன.
நான் வந்து சில நாழிகையாகியும் அவரது பார்வை என்னில் படர்வதாய் இல்லை. அவரது அரையில் வழுக்கியிருந்த சாரத்தைச் சரி செய்தவாறே குனிந்து அவரைக் கூப்பிடுகிறேன்.
“தாமோதரண்ணை… தாமோதரண்ணை”
ஒளியிழந்த அவரது விழிகள் என்னை நோக்கின.
“ஆரது மோனை” ஓரிரு சொல்லிற்கே மூச்சிரைத்தது.
“அண்ணை நான் வேலோன் வந்திருக்கிறன்.”
“ஆர்” வாய் கோணியது.
“வேலோன் வந்திருக்கிறன் அண்ணன்.”
அவரது தாடை எலும்புகள் தளர்வுற முகத்தில் ஓர் மலர்ச்சி தோன்றியது. எனது கைகளைப் பற்றியவாறே உமிழ்நீரிற்குள் நீந்திய நாக்கைத் தூக்கி “எப்ப வந்தனீ?” என்றார். கண்களில் மிதந்து வந்த நீர்ப்படலம் வெளியே வரத் தயார் நிலையில் நின்றது.
“நேற்றுத்தான் அண்ணை கொழும்பாலை வந்தனான். இண்டைக்கு மத்தியானமளவிலை உங்கடை நிலவரம் பற்றி அறிஞ்சு உடனை பார்க்க வந்தன்.”
தாமோதரண்ணை கட்டிலில் சாய்ந்திருக்கத் தக்கவராக உற்சாகம் கொண்டார்.
“இவர் வார்ட்டுக்கு வந்த இவ்வளவு நாளைக்குள்ளை இண்டைக்குத்தான் இவரைப் பார்க்க எண்டு ஒரு ஆள் வந்திருக்கு” – தொடர்ச்சியாக இருமிக் கொண்டிருந்த பக்கத்துக் கட்டில்காரர் இடைவேளைவிட்டு அடுத்தடுத்த கட்டிலில் படுத்திருப்பவர்களுக்குக் கூறிக் கொள்வது என் காதிலும் விழுந்தது.
ஒரு பக்கமாக நானும் மறுபக்கமாக காஞ்சனாவும் தாமோதரண்ணனைத் தூக்கி படுக்கையில் சாய வைத்தோம். புதுத்தெம்புற்றவராக அவர் கதைக்க ஆரம்பித்தார்.
ஊர்க கோவில் மடத்தை விட்டு அமைதி தேடி கடற்கரையடி காளிகோவில் மடத்தடிக்கு தான் இருக்கச் சென்றதும் ஆழிப்பேரலை பொங்கி வந்தபோது அதனின்றும் தப்புவதற்காக தான் ஓடி வந்தபோது குழியில் கால் வைத்து விழுந்து காயமுற்று மரமொன்றைப் பற்றியவாறே மணிக்கணக்கில் தண்ணீரில் இருந்ததையும், பின்னர் குற்றுயிராய் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது வரையிலான நடந்த கதைகளை அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
உண்மையில் அவர் கூறியதன் அரைவாசிப் பகுதியை காஞ்சனாதான் மொழி பெயர்க்கவேண்டி இருந்தது.
இண்டைக்கு இந்தளவிலையாவது கதைக்கிறார். அல்லாட்டி மருந்து குடிக்க மட்டுந்தான் இவர் வாய் திறப்பார்” என காஞ்சனா கூறியது தாமோதரண்ணனுக்குக் கேட்டதோ என்னவோ, “தம்பியைக் கண்டது சந்தோஷம் என இரண்டு மூண்டு தடவைகள் சொல்லிக் கொண்டிருந்தார்.
“உனக்கொரு புதினம் தெரியுமோ? இவரை மீட்டுப் பணியாக்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தாப்போலை இவரைக் காளி கோயிலடியிலை காணாததாலை, முதுபெரும் எழுத்தாளரை கடல்கோள் காவு கொண்டதாக உள்ளூர் பத்திரிகையிலை ஒரு செய்தி கூட வந்ததாம்” என காஞ்சனா சொன்னபோது “தம்பியைக் காண வேணுமெண்டு பலன்” என்று கூறியவர் மீண்டும் எதையோ சொல்வதற்கு முயன்று கொண்டிருந்தார்.
“மிஸ் முன் பெட் பேஷனுக்கு சேலைன் மாத்திறதா?”- மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்தவாறே காஞ்சனா அருகே ஒரு இளந்தாதி வந்து நின்றாள். அவளது வலதுகையில் ஒரு செலூலர் போன் இருந்தது. மிக முக்கியமான மெசேஜ் ஒன்றை எஸ்.எம்.எஸ். வழியாக எதிர்பார்த்திருப்பவளாக இருக்கலாம்.
ஒருவேளை இவளும் ஏதாவது வகையில் எனக்குத் தெரிந்தவளாக இருப்பாளோ என்ற ஓர் நப்பாசையில் ஓர் தடவை அவளை உற்றுப் பார்த்தேன்.
என்ன நினைத்தாளோ தெரியவில்லை, தன் புத்தம் புதிய யூனிபோர்மை ஓர் தடவை அஜெஸ்ட் பண்ணிக் கொண்டாள். எனக்கு அந்தரமாகப் போய்விட்டது.
“நீ தாமுவப்பாவோடை கதைச்சுக் கொண்டிரு. நான் ஒருக்கால் முன்னுக்குப் போயிட்டு வாறன்”- காஞ்சனா முன்னால் செல்ல, ஓடாத குறையாக கண்ணாடித் தாதி பின்னால் சென்று கொண்டிருந்தாள்.
போர்க் காலங்களில் தான் எழுதியவற்றுள் நூலுருப் பெறாத மூன்று நாவல்கள் ஊரிலுள்ள விரிவுரையாளர் ஒருவரிடம் கடல்கோளுக்கு முன்னரே கையளிக்கப்பட்டிருப்பதையும், தனக்கு இறுதி ஆசை என்று ஒன்று இருக்குமேயானால் அது தன் நாவல்கள் நூலுருவாவது பற்றியதேயெனவும் தாமோதரண்ணன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
“அண்ணை உங்கடை நாவல்களை புத்தகமாக்கித்தாறது என்ரை பொறுப்பு. அது எனக்கொரு கடமையுங் கூட” என்று நான் கூறியபோது “தம்பியைக் கண்டது சந்தோஷம்”, “தம்பியைக் காணவேணுமெண்டு பலன்” என்பதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்.
அட்வான்ஸ லெவல் பரீட்சை எழுதிய கையோடு அப்பியாசக் கொப்பி ஒன்றில் நான்கைந்து கதைகளை எழுதிக்கொண்டு அங்கீகாரத்திற்காக அலைந்தபோதுதான் தாமோதரண்ணனின் பழக்கம் எனக்கு ஏற்பட்டது.
பிள்ளையார் கோவிலுக்குத் தெற்காலே றெயில் கொம்பாட்மென்டைப் பழிப்பது போல அமைந்திருந்த மடங்களிலே மகிழமரத்தோடு ஒட்டியிருந்த மடத்தில்தான் தாமோதரண்ணன் தனித்திருந்தார்.
ஒரு பௌர்ணமி முன்னிரவில்தான் என் கதைகளைப் படித்துவிட்டு அவர் தனது அபிப்பிராயத்தைச் சொன்னார்- “பிரமாதம், நல்லா எழுதிறாய் தம்பி.”
அக்கதைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தானே பத்திரிகை ஒன்றுக்கு அனுப்பி வைத்ததும், நம்பவே முடியாது நான்காவது கிழமை அக்கதை பத்திரிகையில் பிரசுரமாகியிருந்ததும்…
“ஐயா, மணியடிச்சு எவ்வளவு நேரமாச்சு, இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறியள் அங்கை? வைத்தியசாலை வாசலில் அப்போது நின்ற அதே காவலாளி இப்போது… இதோ என் முன்னால்…
என்னைத் தவிர பார்வையாளர்கள் எவருமே அங்கு இல்லாததை அப்போதுதான் அவதானித்தேன். சகலரும் வெற்று சுடுநீர்ப் போத்தல்களையும், மதிய சாப்பாட்டுக் கோப்பைகளையும் அள்ளிக்கொண்டு ஏற்கனவே சென்று விட்டனர்.
முன்னால் காஞ்சனாவும் கண்ணாடித் தாதியும் நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பதற்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர். கண்ணாடித்தாதி எதிர்பார்த்திருந்த எஸ்.எம்.எஸ். மெசேஜ் வந்திருக்க வேண்டும். இப்போது மிகவும் உற்சாகத்துடன் இயங்கிக் கொண்டிருந்தாள்.
நான் அசைந்தால்தான் தானும் அசைவேன் என்பது போல காவலாளி முரண்டு பிடித்துக்கொண்டிருந்தான்.
“தாமோதரண்ணை நான் போயிட்டு வரப் போறன்”.
அவரது வலுவிழந்த கைகளைத் தடவியவாறே சொல்கிறேன்.
“தம்பியைக் கண்டது சந்தோஷம்”- அவரது கண்களில் ஓர் தந்தையின் கருணை பொங்கிற்று.
நான் ஓர் ஐந்தாறு மீற்றர் தூரம் நடந்ததை உறுதி செய்தபின்னரே காவலாளி அடுத்துள்ள வார்ட்டிற்குச் செல்ல ஆரம்பித்தான்.
“எப்ப பயணம்?” நோயாளி ஒருவரின் வாயினுள் தேமோமீற்றரைத் திணித்தவாறே காஞ்சனா கேட்டாள்.
‘சாந்தியின்ரை காணி அலுவல் ஒண்டுக்காக வந்தனாங்கள். பிள்ளையள் இரண்டு பேரும் கொழும்பிலை எண்டபடியாலை காலமைக்கே போறம்… உன்னுடைய பிள்ளையள் என்ன மாதிரி?”
“இரண்டு கேள்ஸ். இரண்டு பேருமே ஜவ்னா யூனிவசிட்டியிலை மெடிசின் செய்யினம். அவரும் வாற வருசத்தோட றிட்டயர் பண்ணப் போறார். பிறகு ஒரேயடியா எல்லோரும் ரவுணிலை போய் செட்டிலாகிற பிளான்.”
காஞ்சனா தேமாமீற்றரை எடுத்து தன் கண்ணெதிரே உயர்த்தும்போது இடையூறு செய்ய விரும்பாதவனாக விடைபெற்றவாறே வார்ட்டைவிட்டு வெளியே வந்தேன்.
அடுத்த நாள் அதிகாலையிலேயே நானும் சாந்தியும் எழும்பி அவசர அவசரமாகக் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு எங்கள் பொருட்களையும், தமது உறவினர்களுக்காகப் பிறர் தந்துவிட்ட பொருட்களையும் முதுகொடியச் சுமந்துகொண்டு வீட்டு நுழைவாசலுக்கும் அப்பாலுள்ள ‘கூட்’டடிக்கு வந்தபோது சத்தம் எழுப்பி வந்த மோட்டார் வாகனமொன்று இறுதி உறுமலுடன் ஒளியை அணைத்தவாறே எங்கள வீட்டுவாசலில் வந்து நின்றது.
“ஓட்டோ வந்திட்டுது, ஓட்டோ வந்திட்டுது” என்றாள் சாந்தி ஒருநாளும் காணாதவளைப் போல.
“ஓட்டோக்காரன் ஒண்டில் வெள்ளைக்காரனட்டை அல்லது வெளிநாட்டிலை வேலை செய்தவனாயிருக்க வேணும், சொன்னபடி சரியா அஞ்சரைக்கே வந்திட்டான் பார்” என்றவாறே வெறுங்காலுடனேயே நான் ஆயத்தமானபோது,
“இப்ப நாங்கள் போறது கொழும்புக்கு” என்பதை சாந்தி ஞாபகமூட்டினாள்.
“கேற் திறந்தாச்சா” என்று நான் சாந்தியைக் கேட்ட போது “வேலோன், வேலோன்” என கேற்வாசலில் ஒரு பெண்ணின் குரல் ஒலித்தது.
“இந்த அகால வேளையிலும் ஆரோ கொழும்பிலை குடுக்கிறதுக்குப் பாசல் கொண்டு வந்திருக்கினம் போலை கிடக்கு… பாசல் தாறதுக்கு ஒரு நேரம் காலம் இல்லையா?” என எமக்குள் பேசியவாறே செருப்பை மாட்டிக்கொண்டு கேற்றை நோக்கி நடந்தோம்.
“ஆரது?” முதலில் கேட்டது சாந்திதான்.
“நான், காஞ்சனா”- எனக்கு நெஞ்சில் தீப்பொறி ஒன்று கக்கிற்று.
“என்ன விசயம் காஞ்சனா, இந்த நேரம்?” “வேலோன் ஒரு சாட் நியூஸ். தாமுவப்பா போயிட்டார்.”
காவி வந்த ரவலிங்பாய்க் என் தோளை விட்டு நழுவிற்று. கைத்தாங்கலாகக் கேற்றைப் பிடித்துக் கொண்டேன்.
“நேற்று நீ வந்து போனதிலை இருந்து ஒரே சந்தோஷமாக இருந்தார். தம்பியைக் கண்டது சந்தோஷம் எண்டு அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். இராச்சாப்பாடே வேண்டாமெண்டு நீ கொணர்ந்து குடுத்த கோர்லிக்ஸ்சைத்தான் கரைச்சுத் தரச்சொல்லிக் கேட்டு நாலைஞ்சு கரண்டி குடிச்சார். காலமை இரண்டு இரண்டரை போலை அவற்றை கட்டிலடியிலை கொஞ்சம் வித்தியாசமான சத்தங் கேட்டுது. போய்ப் பார்த்தால் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தார். உடனை டொக்டரைக் கூட்டிக்கொண்டு வர ஆள் அனுப்பி சளியை எடுக்கவும் ஒக்சிசன் குடுக்கவும் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து போட்டு நான் திரும்பிப் போய்ப் பார்த்தால் தலை சரிஞ்சு கிடந்தது.”
அடிவயிற்றில் இருந்து கிளர்ந்தெழுந்த அதிர்வால் என் நெஞ்சு பதைபதைத்தது. கேற்றோடு உடல் சாய தொடர்ச்சியாய் என் தோள்கள் குலுங்கிற்று. நெற்றியில் பதித்த உள்ளங்கையில் கண்ணீரும் மூக்குச்சளியும் சங்கமித்து மணிக்கட்டு வரை வழிந்தோடிற்று.
“வாழ்க்கைத்துணை இல்லாமல் கடைசிவரை பிரமச்சாரியாகவே வாழ்ந்த தாமுவப்பாவுக்கு தனக்கெண்டொரு சொந்தம் கூட இல்லாததே கடைசியிலை பெரிய குறையாக இருந்தது. அதை நீ வந்து நிறைவு செய்தபிறகே அவற்றை சீவன் போயிருக்கு.
“நேற்றும் ஆஸ்பத்திரியிலை அவரைப் பார்த்ததுக்குப்பிறகு அதாலை நேரை அவற்றை அலுவலாகத்தான் லெக்சறட்டையும் போயிட்டு இரவு எட்டரை ஒன்பது மணி போலைதான் வீட்டுக்கு வந்தார் பெரிய பைல் கட்டுகளோடை… இப்ப என்ன மாதிரி அவற்றை இறுதிச் சடங்குகள்”- சாந்தியின் குரல் பனிக் குளிரோடு என் காதுகளில் ஏறியது.
“அநாதைப் பிணம் எண்டபடியாலை ஆஸ்பத்திரிதான் அடக்கம் செய்யும். இப்ப மோச்சறிக்கு ‘பொடி’ போயிட்டுது. இனி ‘டீ.எம்.ஓ. வந்ததுக்குப்பிறகு ‘கொறினல்’ வந்து விசாரணைகள் முடிஞ்சதுக்குப் பிறகுதான்… எல்லாம். எப்பிடியும் ஒரு பத்து பதினொரு மணியாவது செல்லும்.”
சாந்தி என்னை ஏறிட்டுப் பார்ப்பது பளபளக்கும் என் விழித்திரைகளுக்கு புலனாயிற்று.
“உதுகள் எல்லாத்தையும் கொண்டே உள்ளை வை சாந்தி!”- உடைந்தவாறே என் குரல் ஒலித்தது.
“எனக்கு இப்பதான் டியூட்டி முடிஞ்சது. இண்டைக்கு எனக்கு டே ஓவ். ஆனால், இந்த இன்சிடன்ராலை நான் இன்னுங் கொஞ்ச நேரத்தாலை ஆஸ்பத்திரிக்குத் திரும்ப வேணும். நீ இண்டைக்கு காலமை பயணமெண்டு சொன்னதாலை இப்ப வீட்டுக்குப் போற வழியிலேயே உனக்குச் சொல்லிப்போட்டுப் போவமெண்டு இதாலை வந்தன்… அப்ப நான் வரப்போறன்…
தான் வந்த ‘சீநயின்ரியை’ ‘ஸ்ராட்’ செய்து காஞ்சனா தன் பலன்சை எடுத்து வாகனத்தை முன்னெடுக்கும்போது, அவளை இடிக்குமாப்போல கோவில் பக்கத்தால் ஓட்டோ வந்து நின்றது.
“சரிதானே ஐயா போவமே?”- சொல்லி வைத்த நேரத்திற்குத் தான் வந்துவிட்டேன்தானே என்பது போல.. சாரதி இறங்கி வந்தான்.
“போவம்… பஸ்ஸுக்கு இல்லை… ஆஸ்பத்திரிக்கு… கொஞ்சம் நில்லுங்கோ வாறன்” என்றவாறே கேற்றடியை விட்டு நீங்கி வீட்டிற்குள் நுழைகின்றேன்.
‘கூட்’டடியில் செருப்பைக் கழற்றிவிட்டு வெறுங்காலோடு நான் உள்நுழைகையில் தோய்த்து வைத்த எனது வெள்ளை வேட்டி சால்வையை என் முன் நீட்டினாள் சாந்தி.
– தினக்குரல், 24-04-2005.
– திக்கற்றவர்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
![]() |
புலோலியூர் இரத்தினவேலோன், ஆறுமுகம் 1958.12.25 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், புலோலியூரில் பிறந்தார். சிறுகதை எழுத்தாளர். இவர் புற்றளை மகாவித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். இவர் யாழ் புற்றளை மகா வித்தியாலயம், யாழ் ஹாட்லிக் கல்லூரி மற்றும் யாழ் சென் ஜோன்ஸ் அக்கடமி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தினகரன் பத்திரிகையில் பிரசுரமான புரளும் அத்தியாயம் எனும் சிறுகதையூடு 1977 இல் இலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர். 1977 ஆம்…மேலும் படிக்க... |