தகவல் தருபவன்

வாரத்தின் முதல் மும்முரமான பணி நாளான திங்கட் கிழமை. காலை பத்து மணி. சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் ஜெமினி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள அலுவலக வளாகத்தின் தரை தளத்தில் செண்பகம், லிப்ட் கீழே வருவதற்காக காத்திருந்தாள். ஒடிசலான, மாநிறம் கொண்ட இளமை மாறாத அழகான நடுத்தர வயது துருதுரு பெண்மணியான செண்பகம் , நீலநிற சேலையும் எடுப்பான முழுக்கை ரவிக்கையும் அணிந்திருந்தாள். பின்னிய கூந்தலும் அவள் அழகைக் கூட்டியது. அவள் , ஏஜே கார்ப்பரேட் நிறுவனத்தின் நிர்வாகப் பொது மேலாளராகப் பணியாற்றி வருகிறாள். லிப்ட் வந்தது. அவள் லிப்ட்டில் பயணித்து மூன்றாவது தளத்தில் உள்ள அலுவலகத்திற்குள் சென்றாள். வந்திருந்த ஊழியர்களின் வணக்கங்களைப் புன்னகையுடனும் மலர்ந்த முகத்துடனும் ஏற்று தன்னுடைய அறைக்குள் சென்று தன்னுடைய இருக்கையில் அமர்ந்தாள். லேப்டாப்பில் வந்திருந்த மின்-அஞ்சல்களைப் பார்த்தாள். அன்றைய அலுவல்கள் பற்றிய குறிப்பு உள்ள காகிதத்தைப் பார்த்தாள்.
அவளுடைய உதவியாளன் ஒல்லியான தாடி முகம் கொண்ட இளைஞன் சதீஷ் , அறைக் கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்தான். அவளுக்கு வணக்கம் சொன்னான். செண்பகம், சதீஷிடம் அலுவல்கள் பற்றிப் பேச எத்தனித்த போது அறையின் கதவைத் திறந்து கொண்டு, சிவப்பு சூரிதார் அணிந்த கனமான உடல்வாகு கொண்ட இளம் பெண்மணி ரேஷ்மா வந்தாள். செண்பகத்தின் இருக்கைக்கு எதிரில் உள்ள நாற்காலியில் அமர்ந்தாள். ரேஷ்மா, அந்த நிறுவனத்தின் தலைவருடைய உதவியாளர். இரண்டு பெண்மணிகளும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் உரையாடினார். சற்று நேரத்தில் ரேஷ்மா அங்கிருந்து சென்றாள். செண்பகம் , சதீஷிடம் “வாங்க..போகலாம்” என்றாள். சதீஷ், என்ன என்பது போல் பார்த்தான். செண்பகம் பேசினாள்- “கேட்டுக்கிட்டு இருந்தீங்க இல்ல. இன்னிக்கு நம்ம வேலை கெட்டுது. சிஎம்டிக்கு இன்னொரு பி.ஏ எடுக்கறதுக்கு வாக் இன் இன்டர்வியூக்கு இருபது பேர் வந்திருக்காங்களாம். இன்னிக்கு ஜிஎம் ஹெச் ஆர் ராஜேஸ்வரி மேம் லீவாம். சேர்மனும் வரலையாம் இந்த இன்டர்வியூ நான் பார்த்துக்கணுமாம். இருபது பேர்ல நான் ரெண்டு பேர் ஷார்ட்லிஸ்ட் பண்ணிட்டா அந்த ரெண்டு பேர்ல ஒருத்தரை சிஎம்டி பார்த்து அப்பாயின்ட் பண்ணுவாராம். வாங்க சிஎம்டி சேம்பருக்குப் போவோம்… “
சதீஷ் “மேம் ஒரு வேண்டுகோள்…” செண்பகம் அவனுடைய முகத்தை ஆராய்ந்தாள்.
“என்ன ஒங்கள அந்த சீட்ல உட்கார வைக்கணுமா?“
“இல்ல மேம் என் நண்பன் வசந்த் ராஜான்னு கேன்டிடேட்டா வந்திருக்கான். அவனை நீங்க..“
“பார்ப்போம் டிசர்விங் கேன்டிடேட் ஆக இருந்தா ஷார்ட் லிஸ்ட்ல சேர்க்கலாம்.“
“அவன் என் ப்ரெண்ட் மட்டும் இல்ல..சாரி..மன்னிக்கணும் உங்களுக்கும் பர்சனலா…”
“எனக்கு என்ன பர்சனலா? என்ன வயசு வித்தியாசத்தை பொருட்படுத்தாம என்னை ஒரு தலையா காதலிக்கிறாரா?“
“இல்ல மேம் அவன் ஒங்க தங்கை அர்ச்சனாவோட…”
“இது வேறயா..சரி வாங்க கேன்டிடேஸ் வெயிட் பண்றாங்க…”
இருவரும் அறையிலிருந்து வெளியே சென்றனர்.
நேர்முகத் தேர்வுகளை நடத்தி விட்டு செண்பகம் மீண்டும் தன்னுடைய அறையில் இருக்கையில் வந்தமர்ந்தாள். கைபேசியில் அவளுடைய காதலர் நடுத்தர வயது சுதாகரைத் தொடர்பு கொண்டாள். சுதாகர் , மயிலாப்பூரில் உள்ள விளம்பர ஏஜென்சியில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். செண்பகத்தைப் போலவே வேலையில் கெட்டி என்று பெயர் எடுத்தவர். சுதாகர் , தன்னுடைய இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் முடித்த பின்னரே தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உறுதியில் இருக்கிறார். அவருடைய தங்கைகள் இருவருக்குமே கல்யாண காலம் கூடி வராமல் இருப்பதால் இவர்களின் காதல் , திருமணத்தில் முடியாமல் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
செண்பகம் பேசினாள் –
“யோவ் என்னய்யா ரெண்டு வாரமா அழைப்பு இல்ல மெசேஜ் இல்ல”
“இதே கேள்வியை நானும் தான் கேட்கலாம்.. என்ன யோவ்ன்னு கூப்பிடறே அப்புறம் டேய் ன்னு கூப்பிடுவ போல”
“காதலிச்ச பொண்ணுக்கு வருஷக்கணக்கா அல்வா கொடுக்கற ஆளை அப்படித்தான் கூப்பிடணும்…”
“கண்டிப்பா நான் உன்னை கரம் பிடிக்கும் நாள் வரத்தான் போகுது”
“வரும் வரும்..முந்தானை முடிச்சு படத்துல விளக்கு வெச்ச நேரத்துல மாமன் வந்தான் பாட்டுல ஒரு தாத்தா பாட்டி ரொமான்ஸ் பண்றா மாதிரி காமிப்பாங்க..அந்த காட்சில நான் உன்னையும் என்னையும் பொருத்தி பார்த்துக்கறேன்…”
“அந்த அளவுக்கு கால அவகாசம் நீட்டிக்காது..“
“அது எப்படியோ போகட்டும் சாமி எனக்கு என்ன விதிச்சதோ அதுதான் நடக்கும்… இப்ப உனக்கு வாட்ஸ் அப் ல வசந்த் ராஜான்னு ஒரு பையனோட படமும் தகவலும் அனுப்பி இருக்கேன். அவனைப் பத்தி துப்பறிஞ்சு மேல் தகவல்களை நீ எனக்கு அனுப்பி வை…ஒரு மணி நேரத்துல எனக்கு அவனைப் பத்தி தெரிஞ்சாகணும்…”
“அது என்ன ஒரு மணி நேரத்துக்குள்ளே…”
“கையை பிடிக்கறதுக்கு எலாஸ்டிக் பீரியட் ஆப் டைம் கேட்கற இ்ல்ல இதையாவது சீக்கிரமா செய் … அவன் அர்ச்சனாவோட லவ்வராம். ஒழுங்கானவனா இருந்தா அவளுக்கு கல்யாணத்தை பண்ணி அனுப்பிடுவேன்..“
“அப்படியா சரி அர்ச்சனாவோட வருங்கால கணவன் எப்படி ன்னு தெரிஞ்சுக்க எனக்கும் ஆர்வமா இருக்கு..என் செல்லம்…”
“உனக்கு குழையறது கொஞ்சறது வேறயா சரி எனக்கு வேலை நிறைய இருக்கு .. வெக்கறேன். “
“நான் மட்டும் என்ன ஊஞ்சலாடிகிட்டா இருக்கேன்..“
செண்பகம் இணைப்பைத் துண்டித்தாள்.
உணவு இடைவேளைக்குப் பின் , தன்னுடைய இருக்கையில் வந்தமர்ந்த செண்பகம் , லேப்டாப்பில் பணிகளில் மூழ்கி இருந்த போது சதீஷ் வந்து நின்றான். அவனை அமரும்படி சைகையில் சொன்னாள்.
செண்பகம் லேப்டாப்பை மூடி விட்டுப் பேசினாள் –
“என்ன மூஞ்சிய உம்முன்னு வெச்சகிட்டு இருக்கீங்க”
“என்ன மேம் நான் அவ்வளவு சொல்லியும் வசந்த் ராஜாவை ஷார்ட் லிஸ்ட்ல செலக்ட் பண்ணாம விட்டுட்டீங்க”
“அதுக்கு தான் மூஞ்சிய தூக்கி வைச்சுகிட்டு இருக்கீங்களா? நான் அவரை ஷார்ட்லிஸ்ட் பண்ணா, நான் , தங்கச்சி லவ்வரை எடுத்துட்டேன்னு கண்டுபிடிச்சு சிஎம்டி கிட்ட போட்டு கொடுக்கறதுக்கு மேனேஜ்மென்ட் டீம்லயே ஆள் இருக்கு அதனால தான்…அவருக்கு வேற வாய்ப்பு தேடலாம்.. அதை விடுங்க நான் ஒங்க பர்சனல் லைபை பத்தி கேட்டதே இல்ல… ஒங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை இல்ல…”
“ஆமாம் மேம்”
“ஏன்?“
“அண்ணன் சுதாகர் மாதிரி சிஸ்டரோட திருமணத்தை முடிச்சிட்டுதான் நான் திருமணம் முடிக்கலாம்னு இருக்கேன் மேம் “
“அவரு ஒங்களுக்கு அண்ணனா ? நல்லா இருக்கு. அவர் எப்படி பழக்கம் உங்களுக்கு?“
“அவரு நான் எல்லாம் எங்க ஏரியா நட்பு வட்டம்… நாங்க எல்லாம் ஒண்ணா … “
“தண்ணி அடிப்பீங்களா?“
“இல்ல மேம் … “
“போற வர்ற பொண்ணுங்கள சைட் அடிப்பிங்களா?“
“நீங்க வேற …ஏரியால நிறைய நற்பணிகள் செஞ்சு இருக்கோம் மேம் “
“நம்பிட்டேன், சரி அதை விடுங்க ஒங்க நண்பரை ஒங்க தங்கைக்கு பேசி முடிச்சிருக்கலாமே”
“முடிச்சு இருப்பேன..ஆனா மன்னிக்கணும் அதுக்குள்ளே ஒங்க சிஸ்டர் அவனை காதல் வலையில விழ வெச்சுட்டாங்க…”
“அவரு அவளுக்கு வலை விரிச்சாரா அவ அவளுக்கு வலை விரிச்சாராங்கறதை நான் துப்பறிய சொல்லி தெரிஞ்சுக்கறேன். ஒங்க கிட்ட ஒரு ஹைப்பதாட்டிக்கல் கொஸ்சின் கேட்கறேன்… இப்ப அவங்க ரெண்டு பேரும் காதலர்களாக இல்லைன்னா ஒங்க தங்கச்சிய அவருக்கு கட்டிக் கொடுப்பீங்களா?“
“கண்டிப்பா கொடுத்து இருப்பேன். கெட்டிக்காரன். இப்ப நல்ல வேலைல தான் இருக்கான். பெட்டர் ப்ராஸ்பெக்ட்ஸ்க்கு தான் நம்ம கம்பெனி கதவைத் தட்டினான்”
“ஒங்க நண்பர் வசந்த் ராஜா, வேலைக்குப் போறதோட போலீஸ் இன்பார்மராகவும் இருக்கார்ன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க..?“
“என்ன மேம் கூட சுத்தற எனக்கே தெரியாத பகீர் தகவலை சொல்றீங்க..அது உண்மைன்னா.. இவன்னு இல்ல வேற யார் போலீஸ் இன்பார்மரா இருந்தாலும் நானும் சரி எங்க பேரண்ட்சும் சரி பொண்ணு கொடுக்க மாட்டோம் ஏன்னா அவனால காட்டிக் கொடுக்கப்படறவங்களால ஆபத்து தானே மேம் எப்பவும்…நீங்களும் ஒங்க சிஸ்டர் கிட்ட அவனை மறந்துட சொல்லிடுங்க மேம்..“
“இல்ல நான் அப்படி யோசிக்கல…போதைப் பொருள் நடமாட்டம், விக்கற இடத்தை எல்லாம் பத்தி தகவல் சொல்லி இந்த சொசைட்டிக்கு ஒங்க நண்பர் நல்லதுதான் செய்யறாரு..அதனால அவங்க காதலுக்கு நான் க்ரீன் சிக்னல் கொடுக்க முடிவு பண்ணிட்டேன். வர்ற ஞாயித்துக் கிழமை அவரை அப்பா அம்மாவோட எங்க வீட்டுக்கு வர சொல்லுங்க”
பேசி முடித்த செண்பகம் லேப்டாப்பைப் பார்த்தாள்.
“சரி மேம்” என்று வேண்டா வெறுப்பாக கூறிய சதீஷ், நாற்காலியிலிருந்து எழுந்து அறையை விட்டு வெளியேறினான்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 143
