சொல்லிக் காட்டினார்!
கதையாசிரியர்: நா.பார்த்தசாரதி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,021
அக்காலத்துச் சேது நாட்டின் தலைநகரான இராமநாத புரத்தில் ஆதி சரவணப் பெருமாள் கவிராயர் என்று ஒரு கவிஞர் இருந்தார். அவர் படிப்பைப் போலவே தன்மானமும் மிகுந்தவர்; அட்டாவதானி என்ற சிறப்பும் பெற்றிருந்தவர். எந்த இடத்திலாவது தம் தகுதி, குறைவாக மதிப்பிடப் பெற்றுத் தாம் கீழான முறையில் நடத்தப் பெறுவதை உணர்ந்தால் அங்கே அவருடைய உள்ளம் குமுறும் தாம் குறைவாக நடத்தப்பட்டதைத் தம்மைக் குறைவாக நடத்தியவர்களுக்குச் சொல்லிக் காட்டிவிட நா துடிக்கும் அஞ்சாமல் முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிக் காட்டிவிட்டுத்தான் திரும்புவார்.

ஒரு சமயம் மலையாள தேசத்தின் கோநகரமாகிய திருவனந்தபுரத்துக்குப் போயிருந்தார் – ஆதி சரவணப்பெருமாள் கவிராயர். அக்காலத்துத் திருவனந்தபுரம் பகுதியில் யாவருக்கும் தமிழ்மொழி நன்கு தெரிந்திருந்தது. தமிழ்க் கவிகளைப் புரிந்த கொள்கிற அளவு தமிழுணர்ச்சி இருந்தது. அப்போது அரசராக இருந்த வீரகேரள மன்னரை ஆதிசரவணப் பெருமாள் கவிராயருக்கு நன்கு தெரியும். அந்த மன்னர் சிறிது காலத்துக்கு முன் இராமேசுவரத்துக்குச் சேது தரிசன யாத்திரை வந்திருந்தார். அந்தக் காலத்தில் எப்பேர்ப்பட்ட பெரு மன்னனாயினும் சேது தரிசன யாத்திரை முடிந்து திரும்பும்போது சேதுபதியரசரைச் சந்தித்து வணங்கி அளவளாவிவிட்டுப் போக வேண்டும் என்பது ஐதீகமாக இருந்தது. சேதுகாவலர் என்ற புனிதப் பெயர் சேதுபதிகளுக்கிருந்தது.
எனவே சேது யாத்திரை வந்திருந்த வீரகேரள மன்னர், தமது யாத்திரையை முடித்துக்கொண்டு சேதுபதியைச் சந்திப்பதற்காக இராமநாதபுரத்து அரண்மனைக்கு வந்தார். அப்போது சேதுபதி இராசராசேசுவரி பூசைக்காக ஏழு நாள் வெளியேறாமல் மெளன விரதமும், பிற நோன்புகளும் பூண்டு உள்ளேயே இருந்ததன் காரணமாக மலை நாட்டு வீரகேரள மன்னர் ஏழு நாட்கள் இராமநாதபுரத்தில் காத்துக் கிடக்க வேண்டியதாயிருந்தது. மலையாள தேசத்துக்கே அரசனான அந்த மாமன்னன் சேதுபதி அரண்மனை வாயிலில் ஏழுநாள் தரிசனத்துக்குக் காத்திருந்த செய்தி ஆதிசரவணப் பெருமான் கவிராயருக்குத் தெரியும். ஒவ்வொரு தினமும் தாம் புலவர் என்னும் உரிமையுடனே அரண்மனைக்குள் நுழையும்போது வாயிலில் காத்து நிற்கும் வீரகேரள மன்னனைப் பரிதாபத்தோடு பார்த்துக்கொண்டே நுழைந்திருக்கிறார் கவிராயர். கடைசியில் எட்டாவது நாள் வீரகேரள மன்னன் சேதுபதியைச் சந்தித்து அளவளாவி விட்டுத் தன் நாடு திரும்பினான்.”
அதே வீரகேரள மன்னனுடைய திருவனந்தபுரத்துக்குத் தற்போது நம் கவிராயர் வந்திருக்கிறார். ஊரெல்லாம் சுற்றிப் பார்த்தார். அநந்த பத்மநாப சுவாமி கோவிலுக்குப் போய்த் ” தரிசனம் செய்தார். கடைசியாக அரண்மனைக்குப்போய் வீரகேரள மன்னனையும் பார்த்து வரலாம் என்று கிளம்பினார். புலவர்கள் வந்து பார்க்கும்போது அந்தப் புலமையை மதித்து ஏதாவது மரியாதை செய்வது அரசர்கள் வழக்கம். அதனால் புலவர்கள் தயக்கமோ, கூச்சமோ இல்லாமல் எத்தனை பெரிய நிலையில் உள்ளவர்களையும் சந்திக்கக் கிளம்பி விடுவது இயல்பாக இருந்தது ஆனால் அன்று ஆதிசரவணப் பெருமாள் கவிராயர் வீரகேரளமன்னனைச் சந்திக்கப்போன வேளை சரியாக இல்லை. அரசன்/ ஏதோ கோபமாக இருந்தான். என்னதான் கோபமாக இருந்தாலும் வந்தவர்களை முகம் மலர வரவேற்பதுதான் பண்புக்கு அழகு. ஆனால் பண்பைப் பற்றி அவன் அதிகமாகக் கவலைப்படவில்லை .
“யாரையா நீர்? உமக்கு எந்த ஊர்? இங்கு எதற்காக வந்தீர்? என்ன வேணுமென்று சொல்லித் தொலையும்” என்று துரத்தியடிக்கிற வேகத்தோடு விசாரித்தான் வீரகேரள மன்னன். புலவருக்கு முகம் சுருங்கிச் சிறுத்தது. மனத்தில் ஆத்திரம் எழுந்தது. ‘இரு! இரு! உன்னைச் சரியானபடி மடக்கித் தலைகுனியப் பண்ணுகிறேன்’ என்று மனத்துக்குள் கறுவிக்கொண்டு அவன்
முகத்தை நிமிர்ந்து பார்த்தார்.
“பதில் செல்லுமேன் ஐயா! வாயில் கொழுக்கட்டையா அடைத்திருக்கிறது? உமக்கு எந்த ஊர்?”
“என் ஊரையா கேட்கிறீர்கள்? சொன்னால் வருத்தப் படக்கூடாது. உள்ளபடியே சொல்கிறேன். முன்பொருநாள் நீங்கள் சேதுபதியின் தரிசனத்துக்காக ஏழு நாட்கள் அநாதைபோல் வாயிலில் வந்து காத்துக் கிடந்தீர்களே, அந்த இராமநாதபுரத்து வித்துவான் யான்” என்று கோபத்தோடு சொல்லிக் காட்டுவதுபோல் கடுமையான கருத்து படத் தொடங்கிய புலவர் பாடலின் பிற்பகுதியில் சிறிது புகழ்ச்சியையும் சேர்த்துக்கொண்டு விட்டார். முன்னோர் புகழை அவன்மேற் கூறித் தப்புகிறார்.
“இலை நாட்டு வேல்கரத்துச் சேதுபதி தரிசனத்துக்கு ஏழுநாள் ஓர்
மலைநாட்டு ராசன் வந்து காத்திருந்த வாசல் வித்துவான் யான்கண்டாய்
கலைநாட்டிற் பெண்ணெனவே செய்த சர ணாசனகன் கன்னிக் காகச்
நிலைநாட்டி வளைத்த புய வீரகேரளமார் செயசிங்கேறே!”
திட்டுவதைக்கூட எத்தனை அழகாகத் திட்டியிருக்கிறார்கள் இந்தத் தமிழ்ப் புலவர்கள்? புலமை என்கிற பலம் எவ்வளவு நயமாக இடித்துச் சொல்லிக் காட்டும் உரிமையைத் தந்திருக்கிறது, பார்த்தீர்களா?
– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
![]() |
'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க... |
