சொல்லாமலே…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 16, 2024
பார்வையிட்டோர்: 4,636 
 
 

எனது பள்ளிநாட்களில் காதல் என்கிற வார்த்தையை ஒரு தீவிரவாதம் போல நினைக்க வைத்திருந்தார்கள். அதையும் மீறி காவிரிப்படுகையிலும் கடைவாசலிலும் சிலரின் காதல் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருந்தன. ஆனால் எங்களைப் போன்ற நடுத்தரக் குடும்பத்துப் பெண்களுக்கு ஒன்று காதலிக்க நேரமிருக்காது அல்லது காதலித்துவிட்டால் அதைச் சொல்ல தைரியம் இருக்காது.

நான் முதல் ரகம். ஆனால் என் சிநேகிதி ராஜி திருவரங்கம் தெற்குவாசலில் நாட்டு மருந்துக்கடை வைத்திருந்த ஓர் இளைஞனை விரும்பிவிட்டாள். இளைஞனின் அப்பாதான் பெரும்பாலும் கடையில் இருப்பார். அவர் மதியம் சாப்பிட வீடு போகும் போது இளைஞன் வருவான். அவன் பெயர் மதன் என்று வைத்துக் கொள்வோம் (உண்மைப் பெயரை எழுத இயலாது). மதன் வரும் நேரமாய் ராஜி கடைக்கு போய் கூந்தல் வளர்தைலம் தயாரிக்க தேவையான பொருட்களை வாங்கி வருவாள். ராஜிக்கு ஆறடி கூந்தல். மாநிறம் என்றாலும் துறுதுறு வென்றிருப்பாள். கட்டுப்பாடான் குடும்பம். அப்பா இல்லை என்பதால் அவள் அம்மாவும் அண்ணனும் அவளை மிகவும் போர்த்தி போர்த்தி வளர்த்தனர். ராஜியின் அண்ணனுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்த வந்தான் மதன். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு அவன் டிபளமோ படிக்க ஆரம்பிக்க ராஜியின் அண்ணன் சென்னை கல்லூரிக்கு மேற்படிப்பு படிக்கப் போனான்.

அண்ணனைப் பார்க்க மதன் வீடு வரும் போது அவனிடம் மனதைப் பறி கொடுத்திருக்கிறாள் ராஜி. ஆனால் அதை மதனிடம் அவள் சொல்லவில்லை. ஜாதி மதத்தடைகள்! வீட்டில் சொல்லவே முடியாது. ராஜியின் அண்ணன் சென்னை போனதும் மாதம் ஒருமுறை வீடு வருவான் அப்போது மதனும் அவனைப் பார்க்க வருவான்.

மதன் தன்னைக் காதலிக்கிறானா என்று ராஜிக்குத் தெரியவில்லை. ஆனால் அவனது பார்வை ஏதோ சொல்வது போல அவளுக்குத் தோன்றிவிட்டது. மனசுக்குள் மதனை மாதக்கணக்கில் அவள் காதலித்து கல்யாணம் செய்து குடும்பம் நடத்த திடீரென ராஜிக்கு அந்தப் பதினேழு வயதில் (கல்லூரிக்கெல்லாம் அனுப்பவில்லை) திருமணம் நிச்சயம் செய்துவிட்டனர். அப்போதாவது அவள் பெற்றோரிடம் சொல்லி இருக்கலாம். ஏன் என்னிடமே சொல்லவில்லை ராஜி.

கல்யாணமாகி ராஜி சென்னை சென்றுவிட்டாள். முதலில் சில நாட்கள் கடிதத்தொடர்பு இருந்தது. அப்புறம் அதுவும் நின்றுவிட்டது. எனக்குக் கல்யாணமாகி நானும் பெங்களூர் வந்து விட்டேன். கல்யாணத்திற்கு அவளை அழைக்கவில்லை. முகவரியை எங்கோ தவறவிட்டுவிட்டேன். அவள் பிறந்த வீட்டில் எல்லோரும் அவள் அண்ணனுக்கு துபாயில் வேலை கிடைத்து விட ஊரை விட்டே போய் விட்டார்கள்.

இருபது வருஷத்திற்குப் பிறகு ஒரு நாள் சென்னைக்கு உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு சென்ற போது கல்யாண மண்டபத்தில் சற்று குட்டையாய் இருந்தாலும் களையான முகத்துடன் இருந்த அந்தப்பெண்ணின் முகத்தை எனக்கு எங்கோ பார்த்த நினைவு. சட்டென் அவள் திரும்பி நிற்கவும் அந்த நீளமான பெரிய பின்னல் எனக்கு அவளை ராஜிதான் என்று உறுதி செய்ய நெருங்கினேன்.

இருவருக்கும் திகைப்பும் மகிழ்ச்சியும் பெருகின.

பிரியும் போது ஞாபகமாய் அவளது விலாசம் போன் நம்பரை வாங்கி கொண்டேன். அவள் என்னிடம் ரகசியமாய் கேட்டாள். ”நீ ஸ்ரீரங்கம் போகிறாயா இப்பவும்? எனக்குத்தான் அங்க யாருமே இல்லை. கணவர் கூட்டிட்டுப் போக மாட்டேங்கிறார். கல்யாணமாகி சென்னை போன ஒரே வருஷத்தில் கணவருக்கு வேலை மாற்றலாகி டில்லி போனவள் தான். இந்த மாதிரி ஏதாவது கல்யாணம்னா தான் சென்னைப் பக்கம் வரேன். என் மனசெல்லாம் ஊரிலேயே இருக்கு…“ என்றவள் கண் கலங்கினாள்.

“ஏய் என்னாச்சு?”

“உன்கிட்ட சொல்றேன் இப்பவாவது.” என்று ஆரம்பித்தவள் நான் இங்கு ஆரம்பத்தில் எழுதியவைகளை விவரித்தாள்

பிறகு ”நா நான்..மதனை விரும்பினேன். ரொம்ப நேசிச்சேன். அதை அவன் கிட்ட சொல்ல முடியல. அவனும் என்னை நேசிச்சானா தெரியல…நேசிக்கறதைவிட நேசிக்கப்படற சுகம் அலாதி இல்லையா? காலம் தாழ்ந்தாலும் அந்த உணர்வு அவன் கிட்டயும் இருக்குன்னு தெரிஞ்சா போதும். அடுத்த ஜன்மத்தில் நாங்க கண்டிப்பா இணைவோம். என் அன்பினை நீ அவனிடம் எனக்காக சொல்றியா ப்ளீஸ்? நீ மதனைப் பார்ப்பியா?” என்றாள் கெஞ்சுதலான குரலில்.

“வருஷா வருஷம் ஊர் போனா அவன் கடைலதான் என் பெண்களுக்கு கூந்தல்வளர் தைலத்திற்குத் தேவையான நாட்டு மருந்து சாமான்களை வாங்கறேன். அவன் அப்போல்லாம் உன்னை கேட்பான் ராஜி, எப்டி இருக்காங்கன்னு. நாந்தான் ‘தொடர்பே விட்டுப்போச்சு’ என்பேன். மதன் ஊர்ல சமூக சேவைலாம் செய்றானாம்.”

“இந்த தடவை போனா சொல்றயா, மதனை மனசுக்குள் ஆராதிச்சவ விஜாரிச்சான்னு?”

“கண்டிப்பா. அந்த நினைவு உனக்கு ஆறுதலாய் இருக்கும்னா தெரிஞ்சிட்டு வரேனே?”

விடைபெற்று ஊர் வந்த பிறகு மதனின் கடையின் பொருட்கள் வாங்கிய சீட்டினை எடுத்துப் பார்த்தேன். அதில் அவன் அலைபேசி எண் இருந்தது. அட பழம் நழுவிப் பாலில் இவ்வளவு சீக்கிரமாக விழுந்துவிட்டதே! சட்டென அவனை அழைத்தேன்.

“மதன்.” அழைத்து அவனிடம், ”ராஜியைப்பார்த்தேன்” என்றேன்.

உடனே ஆர்வமாய், ”எங்கே எங்கே பார்த்தீங்க, என் தேவதையைப் பார்த்திட்டீங்களா?” என்றவன் உடனே, ”ஸாரி. ராஜிக்குக் கல்யாணம் ஆகிடிச்சி. அவள் நினைவில் நான் வாழ்கிறேன் என்பதை என்னையும் அறியாம உளறிட்டேன் ஸாரி” என்றான்.

“பரவாயில்லை. சீக்கிரமே நான் ஊருக்கு வரேன். நேர்ல உங்ககிட்ட ஒரு விஷயம் சொலல்ணும்” என்று சஸ்பென்சாக சொல்லி போனை வைத்துவிட்டேன்.

மதனும் ராஜியை நேசித்திருக்கிறான். இன்னமும் நேசிக்கிறான். மானசீக அன்பு இருவரையும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது. அதை ஒருவருக்கொருவர் தெரிந்துகொண்டு விட்டால் வருங்காலத்தில் அந்தப்பிடிப்போடு இன்னமும் உற்சாகமாய் வாழ முடியும் என்று தோன்றியது. சில நினைவுகள் மனதிற்கு பலம்!

ராஜியிடமும் மதன் அவள் நினைவில் வாழ்வதை போனில் கூறியதும் மகிழ்ச்சி தாங்கவில்லை அவளுக்கு,, ”டீடீ, ஸ்ரீரங்கம் போய் எனக்காக அவனைப் பார்த்து என் மனசையும் அவன் கிட்ட சொல்லிடேன் ப்ளீஸ்” என்றாள்.

“நிச்சயம் சொல்வேன் ராஜி, அதை உனக்கும் தெரியப்படுத்துவேன்” என்றேன் நானும் நம்பிகையாக.

அன்று பஸ் ஏறும்போதே மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி.

திருச்சியில் இறங்கி ஸ்ரீரங்கம் செல்லும் ஒன்றாம் எண் பஸ்ஸில் ஏறி காவிரிப்பாலம் கடக்கையில் ஆடி வெள்ளத்தில் காவிரி கைவீசி போய்க்கொண்டிருக்க, பஸ்ஸில் எல்லோருமே சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்த மாதிரிப்பட்டது.

‘இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ?’ பஸ்ஸில் எஃப் எம் கூடசூழ்நிலைக்கு ஏற்ற பாட்டினை ஒலிபரப்பியது.

ஆயிற்று பஸ் ஸ்ரீரங்கத்திற்குள் நுழைந்துவிட்டது. தேவிடாக்கீஸ் வழியாக ரங்கநகர் மெயின் பஸ் நிறுத்தம் செல்ல திரும்பியபோது சட்டென என் பார்வை பக்கவாட்டுச் சுவரிலிருந்த போஸ்டரில் பதிந்தது.

‘எங்கள் அருமைச்சகோதரன், நாட்டுமருந்துக்கடை அதிபர், சமூக சேவகர் ஸ்ரீரங்கம் ஆர்.மதன் அவர்கள் நேற்று இரவு மாரடைப்பில் காலமானார். அவருக்கு கண்ணீர் அஞ்சலி தெரிவிக்கிறோம்.’ என்று மதனின் போட்டோவைப்போட்டு கீழே இரு கண்களை வரைந்து அதிலிருந்து கண்ணீர் வழிகிற மாதிரி வெளியிட்டிருந்தது.

’ஐயோ’

தூக்கிவாரிப்போட எழுந்துவிட்டேன்.

பஸ் நின்றதும். கீழே இறங்கினேன். ஸ்ரீரங்கம் பிரதான சாலை எங்கும் அந்த நோட்டீஸ்தான் கண்ணில் பட்டது.

நடைப்பிணமாய் ஊர் திரும்பினேன்…!

இன்னும் நான் இந்த விஷயத்தை ராஜிக்கு சொல்லவே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *