சொட்டு ரத்தம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 8, 2025
பார்வையிட்டோர்: 7,794 
 
 

(1966ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

4. காரின் பின் சீட்டில்…? 

டிரைவர் ஆசனத்தில் நாதமுனி உட்கார்ந்து தன்னுடைய பழைய மாடல் காரை ஓட்டிக் கொண்டு இருந்தான். அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த ராஜாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. 

காவற்கார ஜம்புலிங்கம் எதனால்…யாரால் கொலை செய்யப்பட்டான்? ஆபீஸ் நள்ளிரவு நேரத்தில் சோதனையிடப்பட வேண்டிய அவசியம் என்ன? 

ராஜா குழப்பத்தில் ஆழ்ந்தான். தன்னுடைய வீட்டுக்கு சேதுபதி வந்து பயங்கரச் செய்தியைப் பற்றி பேரம் பேசியதற்கும் இந்த விவகாரங்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் என்று எண்ணினான். 

“நாதமுனி! போலீஸ் இன்ஸ்பெக்டர் இருக்கும் போது நீ சேதுபதியைப் பற்றிச் சொன்னது தவறு. அப்படி ஏன் சொன்னாய்” என்று கேட்டான். 

“என்னை அறியாமல் சேதுபதியின் பெயரை இழுத்து விட்டேன்! ஒரு பெரிய மனிதனின் ரகசியம் பற்றிய ஆதாரக் காகிதங்களை எல்லாம் சேதுபதி சேகரித்து வைத்துக் கொண்டு அந்தப் பெரிய மனிதனைப் பயமுறுத்தி பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கத் திட்டமிட்டான் அல்லவா? அதற்காக உன் உதவியை நாடி உன்னிடம் வந்தபோது அந்த ரகசியங்களைத் தன்னோடு கொண்டு வந்திருப்பான் என்றும், அவற்றை உன்னிடம் கொடுத்து விட்டுப் போயிருப்பான் என்றும், அதனால் அவற்றைக் கைப்பற்றுவதற்காக அந்தப் பெரிய மனிதனோ அவனுடைய ஆட்களோ உன் ஆபீஸுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்று அதற்கு இடையூறாக இருந்த காவற்காரன் ஜம்புலிங்கத்தையும் கொலை செய்து போட்டு விட்டுப் போய் இருக்கிறார்களோ என்றும் நான் நினைத்தேன்!” என்றான் நாதமுனி. 

“அதெப்படி நீ நினைக்கலாம்! சேதுபதியின் பிளாக் மெயில் திட்டத்திற்கு நான் உதவ முடியாது என்று அவனை உதறித் தள்ளிய பிறகு, அது சம்பந்தப்பட்ட ரகசியக் காகிதங்களை என்னிடம் சேதுபதி கொடுத்து விட்டுப் போவானா?” என்று ராஜா கேட்டான். 

“அவற்றை சேதுபதி உன்னிடம் நேரில் கொடுத்து இருக்கமாட்டான். அவனுக்கு நீ உதவமாட்டாய் என்று தெரிந்ததும் அவன் நேரே அந்தப் பெரிய மனிதனிடமே தன்னந்தனியாக இன்று இரவிலே போய் பயமுறுத்திப் பணம் பறித்து விடலாம் என்று தீர்மானித்து, அந்த ரகசியக்-காகிதங்களை உன் ஆபீஸிலோ வீட்டிலோ மறைத்து வைத்துவிட்டுப் போயிருக்கலாம்! அதாவது அவற்றை உன்னிடம் கொடுத்து வைத்து இருப்பதாகப் பொய் சொல்லி, தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அக்காகிதங்கள் உன்னிடமிருந்து என் கைக்கு மாறி எங்கள் தமிழ் நேசன் பத்திரிக்கையில் நாளையே பிரசுரமாகி விடுமென்று சேதுபதி அந்தப் பெரிய மனிதனிடம் கூற நினைத்து இருக்கலாம் இல்லையா?” என்று கூறிய நாதமுனி, “டேய் ராஜா? எனக்கு சேதபதியை நினைத்தால் ரொம்பப் பயமாக இருக்கிறது!” என்று நடுங்கினான். 

“நீ ஏண்டா பயப்படுகிறாய்? அவன் உன்னைப் பிய்த்துத் தின்று விடப் போகிறானா, என்ன?” 

“அவன் என்னைப் பிய்ப்பது இருக்கட்டும் பெட்ரோல் சகிதம் அவன் அலைந்து கொண்டு இருந்தான் என்பதால், அவனுடைய இளம் மனைவி நித்திய கலாவுக்காக அனுதாபப்பட்டு சரியாக இரண்டு மணிக்கு டெலிபோன் செய்தேன்.” 

“நள்ளிரவு இரண்டு மணிக்கடா?” என்று ராஜா ஆச்சரியத்துடன் கேட்டான். எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கும் நள்ளிரவில் பிறத்தியான் மனைவிக்கு டெலிபோன் செய்வது என்றால் அதன் அர்த்தம் என்னவென்று ராஜா யோசித்தான். 

“ஆமாடா! சேதுபதியின் மனைவி நித்தியகலா டெலிபோனை எடுத்துப் பேசினாள். இன்னும் அவளுடைய கணவன் சேதுபதி வீட்டுக்கு வரவில்லையாம். கணவன் வரவில்லையே என்ற கவலையால் அவள் இடிந்து போய் இருக்கிறாளாம். மனமும் சரி இல்லையாம். கணவன் முட்டாள் தனமான காரியங்களில் ஈடுபட்டு எதையாவது செய்து விடுவானோ, இன்றிரவே உயிருக்கு ஆபத்து நேரிட்டு விடுமோ என்று பயமாகவும் இருந்ததாம்! அதனால் அவளுடைய கணவனை நானே தேடிக் கண்டுபிடிப்பதாகச் சொல்லி விட்டு இப்படித் தெருத்தெருவாய் சேதுபதியை தேடி அலைகிறேன்!” என்றான் நாதமுனி. 

“மிகவும் நன்றாக நடிக்கிறாயடா நாதமுனி! நீ அவளுடைய கணவனை ஏன் தேடுகிறாய்? அவன் யாரோ ஒரு பெரிய மனிதனைப் ‘பிளாக் மெயில்’ பண்ணி பணம் சம்பாதிக்க நினைக்கிறானே, அதில் பங்கு கேட்பதற்கா…? அல்லது நீயும் பிளாக்மெயில் பண்ணி வாழ்ந்து விடலாம் என்று நினைக்கிறாயா? டேய்! நீ ஏதோ திட்டம் போட்டு வேலை செய்து கொண்டு இருக்கிறாய் என்பது நீ நடந்து கொள்ளும் விதத்தில் இருந்தே தெரிகிறது!” 

ராஜா இப்படி நேரடியாகக் குற்றம் சாட்டியதும், நாதமுனியின் கால் தானாகவே ‘பிரேக்’ கட்டையை மிதித்து காரை நிறுத்தியது. 

“ஏண்டா ராஜா! உன் வாயினால் என்னை இப்படி எல்லாம் அபாண்டமாகப் பேசலாமாடா? நான் மற்றவர்களுக்காக வாழக்கூடியவன் ஆயிற்றே!” 

“நீ யாருக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறாய் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். வீணாகக் கதை விட்டுக் கொண்டு இருக்காதே” என்று கூறிய ராஜா “நீ ஏன் நித்தியகலாவுக்காக இவ்வளவு கவலைப்பட்டு அவளுடைய கணவனை இப்படி நடுராத்தியில் தேடி அலைகிறாய்?” என்று கேட்டான். 

“அவளுடைய கணவன் சேதுபதி இன்றிரவு ஒரு பெரிய மனிதனை பயமுறுத்தப்போய் அவனுடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு விட்டால் நித்தியகலா அல்லவா விதவையாகி விடுவாள்! அதைக் கற்பனை செய்து பார்க்கக்கூட என் மனம் பொறுக்கவில்லை” என்றான் நாதமுனி கண்கலங்க. 

“உனக்கு நித்தியகலாவின் மீது அவ்வளவு அன்பா?” என்று ராஜா ஒரு தினுசாகச் சிரித்தான். 

ராஜா எதனால் இப்படிப் பேசுகிறான் என்பது நாதமுனிக்குத் தெரியாமல் இல்லை. தண்ணீரிலேயே கால் தடயம் கண்டுபிடிப்பவன் ஆயிற்றே அவன்? 

“உனக்கு எல்லாமே விளையாட்டு தான்! சும்மா இருப்பவர்களை எல்லாம் ஒன்றாக இணைத்துப் போட்டு வேடிக்கை காட்டுவாய்” என்று சிரித்துக் கொண்டே சொன்ன நாதமுனி காரை மறுபடியும் ‘ஸ்டார்ட்’ செய்து ஓட்டிக் கொண்டு போய் திறந்திருந்த ஒரு கடையின் முன்னால் நிறுத்தி விட்டு கீழே இறங்கி சிகரெட் வாங்குவதற்குப் போனான். 

அவன் போன பிறகு ராஜா தற்செயலாக பின்னால் திரும்பிப் பார்த்தான். 

கடையில் இருந்து வந்த விளக்கு வெளிச்சம் காரின் பின் சீட்டைத் தெளிவாகக் காட்டியது. ஆனால் அந்தப் பின் சீட்டைப் பார்த்ததும்…? 

அதென்ன…? ஒரு சொட்டு இரத்தம் உறைந்து கிடப்பதைப் போல் தோன்றுகிறதே! மனித இரத்தம் தானா அது? 

ராஜா அந்த ஒரு சொட்டு இரத்தத்தைக் கூர்ந்து பார்த்து விட்டு அது மனித இரத்தமாகத்தான் இருக்கக் கூடும் என்று எண்ணினான். அதே நேரத்தில் அந்த இரத்தம் யாருக்குரியதாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்தது. அந்த சொட்டு ரத்தத்தில் ஏதோ ஒரு மர்மம் உறைந்து கிடப்பதாகவும், அதை உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஓர் ஆர்வம் ராஜாவின் மனதில் அதி பயங்கரமாய் உறுத்தியது. 

அவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது நாதமுனி ஒரு சிகரெட்டை எடுத்துப் புகைத்துக் கொண்டு எதுவுமே நடைபெறாததைப் போல் தன்னுடைய ஆசனத்தில் வந்து அமர்ந்து காரை ‘ஸ்டார்ட்’ செய்து ஓட்டினான். 

இவ்வளவு பக்குவமாக நடிக்கும் நாதமுனியின் சாதுரியத்தை என்னவென்று சொல்லுவது? காரின் பின் சீட்டில் சொட்டு ரத்தம் உறைந்திருப்பது அவனுக்குத் தெரியாதா என்ன! அதுவும் நாதமுனியின் சொந்த பழைய மாடல் கார் அது! அந்தக்காரின் பின் சீட்டில் சொட்டு இரத்தம் உறைந்து இருக்கிறது என்றால் அதன் மர்மம் என்ன? இவ்வாறு ராஜா உள்ளூரப் பரபரத்துக் கொண்டு இருந்தான். 

“உன்னுடைய வீட்டுக்கு நித்தியகலா வந்து இருந்தாளே அவள் உன்னிடம் என்ன சொன்னாள்” என்று நாதமுனி மெல்லக் கேட்டான். 

கணவன் மீது அதிகப்படியான பாரம் வைத்து இருப்பவளைப் போலவும், அவனைக் காப்பாற்றத் துடிப்பவள் போலவும் பிரமாதமாக நடித்தாள்” என்றான் ராஜா. 

“நோ…நோ…. நடிப்பு என்று சொல்லாதேடா அவள் ஒரு குடும்பப்பெண்.” 

“ஆமாம்…ஆமாம்! அவள் ஒரு குடும்பப் பெண் தான்! உல்லாசமாக வாழ்க்கையை எப்படி நடத்துவது என்ற வழிமுறைகள் எல்லாம் அவளுக்குத் தெரிந்து இருக்கின்றன!” என்று ராஜா சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு “உனக்கும் அவளுடைய கணவன் சேதுபதிக்கும் ஏதோ ஒரு பழைய மனஸ்தாபம் உண்டு என்று கூட நித்தியகலா என்னிடம் சொன்னாள்! அதாவது முன்பொரு சமயம் சேதுபதி உன்னோடு தமிழ்நேசன் பத்திரிகையில் வேலை பார்க்கும் போது ஏதோ ஒரு செய்தி விஷயமாக நீ ஏதோ ஒரு மோசடி செய்ததினால் உங்கள் இருவருக்கும் இடையே ஒரு தகராறு மூண்டதாகவும் அதன் விளைவாக அவனை அந்த வேலையில் இருந்து விலக்கி விரட்டுவதற்கு நீயே காரணமாக இருந்தாய் என்றும், அந்த மோசடி விஷயத்தை சேதுபதி அம்பலமாக்கி விடுவானோ என்று உனக்கு பயம் இருந்து வந்ததாகவும், அதனால் நீங்கள் இருவரும் இப்போது சந்தித்தால் உங்களுக்குள் பயங்கரமான சண்டை மூண்டு விடுமென்றும் நித்தியகலா பயந்தாள்!” என்றான் ராஜா. 

“இல்லை! இல்லை! சேதுபதி தான் அப்படி ஏதோ அவளிடம் புளுகி இருக்கிறான்!” என்று நாதமுனி பதறினான். 

“காரின் பின் ஆசனத்தைப் பார்த்தாயா? தண்ணீர் விட்டு சுத்தம் செய்ய மறந்து விட்டாய் போலிருக்கிறது” என்று ராஜா திடீரெனக் கூறினான். 

நாதமுனி காரை சாலையோரமாக நிறுத்தி தலைக்குமேல் இருந்த ‘டாப்’ விளக்கை எரிய விட்டு பின் சீட்டைப் பார்த்துத் திடுக்கிட்டான். 

“என்ன இது? இந்தச் சொட்டு இரத்தம் எங்கே இருந்து வந்தது?” 

“உனக்கா தெரியாது, நாதமுனி? நீதான் நித்தியகலாவின் சந்தோஷத்திற்காக சேதுபதியைத் தேடி அலைந்து கொண்டு இருப்பவனாயிற்றே. ஒருவேளை இது சேதுபதியின் இரத்தமாகவும் இருக்கலாம்!” 

ராஜா அவனையே நேரடியாகக் குற்றம் சாட்டுவதைப் போல் பேசியதும், நாதமுனி கோபமடைந்து, “விளையாடுகிறாயாடா?” என்று சீறினான். 

“நாதமுனி! நான் உண்மையிலேயே விளையாட ஆரம்பித்தால் இந்நேரம் நீ போலீஸ் ஸ்டேஷனில் கம்பி எண்ணிக் கொண்டு இருப்பாய். அப்படியொரு இக்கட்டான சூழ்நிலையை உண்டு பண்ண விரும்பாததால் தான் இப்படி எல்லாம் பேசுகிறேன்” என்று சொன்ன ராஜா, “உன்னுடைய காரின் பின் சீட்டில் இந்த சொட்டு ரத்தம் எப்படி வந்தது என்ற ரகசியத்தை என்னிடமாவது சொல்” என்று வற்புறுத்தினான். 

“எனக்கு எந்த இரத்தத்தைப் பற்றியுமே தெரியாது!” 

“இப்படிச் சொன்னால் போலீஸார் உன்னை விட்டு விடுவார்கள் என்று மட்டும் எண்ணாதே. இந்தச் சொட்டு இரத்தத்துக்கு நீ காரணம் காட்டியே தான் ஆக வேண்டும்.” 

“எனக்கு எதுவுமே தெரியாத போது நான் எப்படியடா ராஜா, காரணம் காட்ட முடியும்?” என்று நாதமுனி பரிதாபகரமாக விம்மினான். 

“நித்தியகலா மீதுள்ள ஆசையாலும் அவளை மறுமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற அவசரத்தாலும் நீயே சேதுபதியைக் கொலை செய்து உன்னுடைய காரில் பிணத்தை ஏற்றிச் சென்று எங்கேயாவது தள்ளிவிட்டாய் என்று போலீஸார் சொல்லுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது என்ன செய்வாய்?” 

ராஜா இப்படிக் கேட்டதும், ஆத்திரத்தினால் பொங்கிய நாதமுனி, “இனியும் ஒருமுறை இப்படிப் பேசாதே! அது மட்டுமல்ல: உன்னுடைய நண்பன் நாதமுனி நன்றாக வாழவேண்டும் என்றால் மறந்து போய்க்கூட யாரிடமும் இதைச் சொல்லி விடாதே” என்று கெஞ்சினான். 

‘அப்படியானால் காரில் காணப்படும் சொட்டு இரத்தத்திற்கு என்ன பதில் சொல்லுகிறாய்?” 

“சொல்லுவதற்கு என்ன இருக்கிறது. எனக்கு எதுவுமே தெரியாது.” 

“என் ஆபீஸ் காவற்காரன் ஜம்புலிங்கத்தின் கொலையைப் பற்றியாவது உன்னால் ஏதாவது யூகிக்க முடிகிறதா?” 

“நான் மிகவும் கலங்கிப்போய் இருக்கிறேன், ராஜா! என்னை அமைதியாக இருக்க விட்டுவிடு!” 

நாதமுனி அழாக்குறையாகக் கெஞ்சவே, தீர விசாரிக்காமல் அவனுடைய மனத்தைப் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணத்துடன் ராஜா அமைதியானான். 

5. ஏரிக் கரையில் ஒரு பிணம்! 

பப்ளிக் டெலிபோன் பூத் அருகில் காரை கொண்டு போய் நிறுத்தும்படிச் செய்த ராஜா, அமைதியாக நாதமுனியின் முகத்திற்கு நேராகத் திரும்பி, “சேதுபதிக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்பட்டு இருக்காது என்று நம்புகிறாயா?” என்று கேட்டான். 

“அதை எப்படி என்னால் சொல்ல முடியும்? யாரோ ஒரு பயங்கரமான பெரிய மனிதனை சேதுபதி பயமுறுத்தி பணம் பறிக்க இந்த இரவிலே போயிருந்தால் அவனுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் அல்லவா?” என்று நாதமுனி சொல்லி விட்டு, “எதற்கு காரை இங்கே நிறுத்தும்படிச் சொன்னாய்?” என்று கேட்டான். 

“சேதுபதி அவனுடைய வீட்டுக்கு வந்து இருக்கிறானா இல்லையா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் நீ அவனுடைய வீட்டுக்கு டெலிபோன் செய்து நித்தியகலாவிடம் விசாரித்துப்பார்..” 

ராஜா இப்படிச் சொன்னதும் நாதமுனி வெறுப்புடன் முகத்தைச் சுழித்துக் கொண்டான். 

“நான் டெலிபோன் செய்வதைப் பற்றி எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. சேதுபதி இப்பொழுதும் அங்கே இல்லாமல் இருந்தால் பதினைந்து காசும் நேரமும் நஷ்டமாகிவிடுமே என்று தான் யோசிக்கிறேன். நித்தியகலா இந்நேரம் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருப்பாள். நான் அவளுக்கு இரவு இரண்டு மணிக்கு நான் டெலிபோன் செய்தபோது தூக்கம் வராமல் தவிப்பதால் இரண்டு மூன்று தூக்க மாத்திரைகளைச் சாப்பிடப் போவதாக நித்யகலா தெரியப்படுத்தினாள்!” என்றான் நாதமுனி. 

“பதினைந்து பைசா நஷ்டமானால் பரவாயில்லை. அந்த நஷ்டத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். கடைசியாக ஒருமுறை அவளுடைய வீட்டுக்கு டெலிபோன் செய்து பார்!” என்றான் ராஜா. 

உடம்பை நெளித்துக் கொண்டே நாதமுனி காரை விட்டு இறங்கி முணங்கிக் கொண்டே டெலிபோன் பூத்தினுள் சென்று போன் செய்து விட்டு வந்தான். 

அவன் சுழற்றிய எண்களை கவனித்தபடி வெளியே நின்று கொண்டு இருந்த ராஜா, “நித்திய கலாவுடன் பேசினாயா?” என்று கேட்டான். 

“நான் தான் அப்பொழுதே உன்னிடம் சொன்னேன். நீதான் எதையுமே காதுகளில் வாங்கிக் கொள்ளவில்லை. டெலிபோன் மணி நித்தியகலாவின் வீட்டில் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கிறதே தவிர, யாருமே ரிசீவரை எடுக்கவில்லை. நித்தியகலா தூக்க மாத்திரைகளை விழுங்கி விட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறாள் போலும்! அவள் கணவன் சேதுபதியும் இன்னும் வீட்டுக்கு வந்து சேரவில்லை போலிருக்கிறது!” என்றான் நாதமுனி வருத்தத்தோடு. 

“கடைசியாக நீ நித்தியகலாவை எத்தனை மணிக்குப் பார்த்தாய்?” 

இரண்டு பேர்களும் காரில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். 

“இரவு பத்து மணி இருக்கும் என்று நினைக்கிறேன். சேதுபதியை னைத்து நித்தியகலா பொருமி பொருமி அழுது கொண்டே இருந்தாள். கணவன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுவதைப் போன்ற தவிப்பு அவளுடைய பேச்சிலிருந்து வெளிப்பட்டது!” என்றான் நாதமுனி. 

“சேதுபதி உயிர் பிழைக்க வேண்டும் என்று தான் நானும் ஆசைப்படுகிறேன்.” என்று சொன்ன ராஜா, எல்லா விஷயங்களும் ரகசியமாகவே இருக்கட்டும். நீ போலீஸ் அதிகாரியிடம் ஸ்டேட்மென்டு கொடுப்பதாக இருந்தாலும் என்னைக் கலந்து ஆலோசனை செய்து விட்டு அதன் பிறகு கொடு” என்று கூறியவன், தன் வீட்டருகில் கார் வந்ததும் இறங்கிக் கொண்டான். 

நாதமுனியும் அவனுடனேயே காரிலிருந்து இறங்கி வந்து ராஜாவின் வீட்டினுள் போடப்பட்டு இருந்த சோபாவில் உட்கார்ந்தான். அவனுடைய முகம் மங்கலான வெள்ளைத் தாளைப்போல் வெளுத்து இருந்தது. 

“நாதமூனி! என் வீட்டிலிருந்து கிளம்பிய சேதுபதி நேரே எங்கே போயிருப்பான் என்று நீ நினைக்கிறாய்?” என்று ராஜா கேட்டான். 

“அவன் இன்றிரவே மர்மமான பெரிய மனிதனைச் சந்தித்து பயமுறுத்திப் பணம் பறிக்க நினைத்து இருந்தால், நம்பகமான ஓர் இடத்தில் இருந்து அந்த மர்ம மனிதனுக்கு டெலிபோன் செய்து தன் உயிருக்கு அபாயம் நேரிடாதபடி ஏதாவது எச்சரித்து விட்டுத்தான் போவான்! அவனுக்கு நம்பகமான ஒரு கள்ளக் காதலி இருக்கிறாள். அவளுடைய வீட்டில் இருந்தபடியே சேதுபதி அந்த மர்ம மனிதனுக்கு டெலிபோன் செய்திருப்பான். அதன் பிறகு அவன் என்ன ஆனான் என்பது அந்தக் கள்ளக் காதலிக்குத் தான் தெரியும்” என்றான் நாதமுனி. 

“அந்தக் கள்ளக் காதலியின் பெயர் ராஜாத்தி என்று தெரிகிறது! அவளுடைய வீட்டு விலாசமும் என்னிடம் இருக்கிறது! நான் போய் விசாரிக்கிறேன்” என்றான் ராஜா. அப்போது-மேஜையின் மீதிருந்த டெலிபோன் மணி பயங்கரமாக அலறி அவனை அழைத்தது. 

இந்த நேரத்தில் டெலிபோன் செய்திருப்பது யாரோ…? மறுபடியும் ஏதாவது ஒரு பயங்கரம் நடைபெற்றுவிட்டதா? 

ராஜா ரிசீவரை எடுத்து, “ஹலோ……ராஜா பேசுகிறேன்” என்று சொன்னான். 

இன்ஸ்பெக்டர் அருளானந்தம் தான் டெலிபோனில் பேசினார். 

“மறுபடியும் உங்கள் தூக்கத்தைக் கலைக்க நேர்ந்ததற்காகப் பெரிதும் வருந்துகிறேன்.” 

“என்ன விஷயம் சார்? இதுவும் துக்ககரமான செய்தி தானா?” 

“நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன். ஆனால் முடியவில்லையே!” என்று சொன்ன இன்ஸ்பெக்டர் அருளானந்தம், “நீங்கள் உடனே புறப்பட்டு வந்து இறந்துபோன ஒரு மனிதனுடைய பிணத்தை அடையாளம் காட்ட வேண்டும்” என்று சொன்னார். 

“மனிதனுடைய பிணமா…அய்யோ…” என்று அலறிய ராஜா, “அந்த மனிதனைப் பற்றிய குறிப்பு ஏதாவது கிடைத்தா?” என்று கேட்டான்: 

“அவனுடைய சட்டைப் பையில் ஒரு ‘விசிட்டிங் கார்டு’ இருந்தது. அதை எடுத்துப் பார்த்தோம். அதில் ‘சேதுபதி உதவி ஆசிரியர், கலைத்தூதன்’ என்று அச்சடிக்கப்பட்டு இருக்கிறது. இறந்து போன அந்த மனிதனின் பெயர் சேதுபதியாக இருக்கக் கூடும் என்று எண்ணுகிறேன். சுமார் ஒருமணி நேரத்திற்கு முன்னால் உங்கள் ஆபீஸில் வைத்து நாதமுனி என்பவர் அந்தப் பெயரைச் சொன்னது நினைவிருக்கலாம்!” என்றார் டெலிபோனில் இன்ஸ்பெக்டர். 

அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டு இருந்த ராஜாவுக்கு என்ன பதில் பேசுவது என்றே தெரியவில்லை. டெலிபோனைப் பிடித்திருந்த கரம் நடுங்கியது. 

நாதமுனி அந்தப் பெயரைச் சொன்னதின் மூலம் அபாயத்தை வலுவில் தேடிச்சென்று அணைத்துக் கொண்டான் என்று ராஜாவுக்கு விளங்கியது. போலீஸார் என்று தெரிந்த பிறகும் அவன் ஏன் அப்படி நடந்து கொண்டான்? கொஞ்சமாவது இங்கிதம் தெரிந்திருக்க வேண்டாமா? 

“என்ன மிஸ்டர்! குற்றம் செய்து விட்டு அதிர்ச்சியான செய்தியைக் கேள்விப்படுவதைப் போல் வாயடைத்துப் போய் நிற்கிறீர்கள்? நாதமுனி என்பவர் சேதுபதி என்ற பெயரைச் சொன்னாரே அது நினைவில் இல்லையா?’ என்று சற்று கனத்த தொண்டையில் இன்ஸ்பெக்டர் அருளானந்தம் கேட்டார். 

ராஜா மென்று விழுங்கியவனாய், “ஓ எஸ்! எனக்கு நினைவு இருக்கிறதே!” என்று தத்தளித்தான். தெரிந்தோ தெரியாமலோ சந்தேகத்திற்குரிய விதத்தில் நடந்து போலீஸாரின் கையில் போய்ச் சிக்கிக் கொள்ளக்கூடாது அல்லவா?” 

“தெரியாது என்று சொன்னால் போலீஸார் விடமாட்டார்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று சொன்ன இன்ஸ்பெக்டர் அருளானந்தம், “இப்பொழுது நாதமுனி உங்களுடன் இருந்தால் அவரையும் கையோடு அழைத்துக் கொண்டு வாருங்கள்” என்று உத்தியோகத் தோரணையில் கட்டளை பிறப்பித்தார். 

ராஜா சுதாரித்துக் கொண்டான். 

“நாதமுனியை நீங்கள் அழைக்க வேண்டும் என்றால் அவனுடைய வீட்டுக்கு ‘போன்’ செய்யுங்கள்.” 

“போன் செய்யாமல் இருப்பேனா என்ன? ஆனால் நாதமுனியின் வீட்டில் யாருமே இல்லை போலிருக்கிறது. யாருமே போனை எடுத்துப் பேசவில்லை. அதனால் அவர் உங்களுடனேயே இருக்கக் கூடுமோ என்று நினைத்தேன்.” 

“என் கூட நான் ஏன் நாதமுனியை வைத்துக் கொள்ளப் போகிறேன்? என் ஆபீஸிலிருந்து நாங்கள் இரண்டு பேர்களும் வெளியே வரும்போது மட்டும் ஒன்றாகவே வந்தோம். ஆனால் அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து விட்டோம்.” 

டெலிபோன் மறுமுனையில் ஒருவினாடி நேர அமைதி நிலைவியது. இன்ஸ்பெக்டர் அருளானந்தத்தின் மூளை திடீரென்று வேலை செய்ய மறுத்துவிட்டது போலும்! 

“உங்கள் வீட்டில் நாதமுனி இல்லை என்று உறுதியாகச் சொல்லுகிறீர்களா?” 

ராஜாவின் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த நாதமுனி கழுத்தை வெட்டக் கொண்டு வந்திருக்கும் ஆட்டைப்போல் ‘திரு திரு’வென்று விழித்தான். 

எதையும் சொல்ல வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்பதைப் போல் நாதமுனி அவனைப் பார்த்து கையையும், தலையையும் அசைத்தான். 

“நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது சார்?” என்றான் ராஜா. 

”அவர் எங்கே இருப்பார் என்பதாவது உங்களுக்குத் தெரிந்திருக்குமே!” 

“தெரியாது.” 

“பரவாயில்லை! அந்த ஆசாமி எங்கே போய் மறைந்து கொண்டாலும் நாங்கள் தேடி கண்டு பிடித்துக் கொள்கிறோம்,” என்று சொன்ன இன்ஸ்பெக்டர் அருளானந்தம், “இப்பொழுதே நுங்கம்பாக்கம் ஏரிக் கரைக்கு வருகிறீர்களா? அங்கே தான் அந்தப் பிணம் கிடக்கிறது. நீங்கள் உடனே வந்து அடையாளம் காட்ட வேண்டும்!” என்று கூறினார். 

“சீக்கிரமாக அங்கே வருகிறேன்” என்று சொன்ன ராஜா ரிசீவரை அதன் இடத்தில் வைத்து விட்டு, கைகளைப் பிசைந்த படியே நின்று கொண்டு இருந்த நாதமுனியின் முகத்திற்கு நேராகத் திரும்பினான். 

“போலீஸார் சேதுபதியின் பிரேதத்தைக் கண்டுபிடித்து விட்டார்கள். அந்த பிரேதம் நுங்கம்பாக்கம் ஏரிக்கரையில் கிடக்கிறதாம்.” 

“ஓ மை காட்! சேதுபதியின் பிணத்தை போலீஸார் கண்டு பிடித்து விட்டார்களா?” 

நாதமுனி வாய்விட்டு அலறவில்லையே தவிர, ஆனால் அலறும் தோரணையில் கேட்டான். 

“ஆமாம்! பணத்தைக் குறுக்கு வழியில் சம்பாதிக்கத் துடித்துக் கொண்டு இருந்த சேதுபதி, இப்பொழுது பணம் தேவை இல்லாத நிலையிலேயே போய் விட்டான்.” என்று சொன்ன ராஜா, “என்னோடு நீயும் வருகிறாயா?” என்று கேட்டான். 

“பிணத்தை நான் பார்க்க வேண்டுமா? அய்யய்யோ. கொஞ்ச நேரத்திற்கு முன்னால் தானே கிழவரின் பிணத்தைப் பார்த்தேன். இன்னும் ஒரு பிணத்தை நான் பார்த்தால் என் உடல் நிலை என்னாவது? ஏற்கனவே நான் இருதய பலஹீனமானவன், பலத்த அதிர்ச்சியை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது.” 

“பிணங்களைக் கண்டு பயந்து நடுங்கும் நீ இங்கே தான் இருக்கப் போகிறாயா?” 

“நான் ஒரு வீட்டுக்குப் போக வேண்டிய அவசியம் இருக்கிறது.” 

“நீ எங்கே வேண்டுமானாலும் போ. ஆனால் போலீஸாரின் கண்களில் மட்டும் தென்பட்டு விடாதே! ஏனென்றால் நித்திய கலாவின் மீது நீ வைத்திருக்கும் விசேஷ அன்பை அவர்கள் விபரீதமாக அர்த்தப்படுத்திக் கொண்டு, அவளுடைய கணவனான சேதுபதியை நீ தான் கொலை செய்து விட்டாய் என்று சந்தேகிப்பார்கள். உன் காரின் பின் சீட்டில் உறைந்திருக்கும் சொட்டு இரத்தம் வேறு அந்தச் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தக்கூடும்! ஆகவே கொலை விவகாரத்தின் மாமத்தையும் உண்மைக் கொலையாளியையும் நான் கண்டு பிடிக்கும் வரை நீ எங்காவது தலை மறைவாகப் பதுங்கியிரு. நாதமுனி! அதோடு அவ்வப்போது எனக்கு டெலிபோன் செய்து தகவல்களைத் தெரிந்து கொள்.” 

“நான் என்னுடைய வீட்டுக்கு வேண்டுமானாலும் போகாமல் இருப்பேன். ஆனால் நித்தியகலா என்னைத் தேடிக் கொண்டு இருப்பாளே! நான் இல்லாவிட்டால் அவளால் அமைதியாகத் தூங்க முடியாது” 

இறந்த சேதுபதியின் மனைவியைப் பற்றி நாதமுனி இப்படிப் பேசுகிறான் என்றால் அதன் பொருள் என்ன? கணவன் சேதுபதி உயிருடன் இருந்தபோதே அவளுக்கும் நாதமுனிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது என்று தானே அர்த்தம்? 

அவன் அருகில் இல்லாவிட்டால் நித்தியகலாவால் அமைதியாகத் தூங்க முடியாதாமே! கணவன் உயிருடன் இருக்கும் போதே சோரம் போகக்கூடிய பெண்மணி எவ்வளவு மோசமான நடத்தை உடையவளாக இருப்பாள்! 

இளமை வெறிபிடித்த நித்தியகலாவையும், அவள் மீது அளவில்லாத காதல் கொண்டு இருக்கும் நாதமுனியையும் உள்ளூர நினைத்து வருந்திய ராஜா, இதைப் போன்ற தீயப் பழக்கங்கள் என்று தான் ஒழியுமோ என்ற எண்ணத்துடன், நண்பனுக்காகச் சிறிதளவு இரக்கப்பட்டு, “நித்தியகலா மீதுள்ள மோக வெறியால் நீ போலீஸார் கையில் சிக்கிக்கொள்வது என்ற முடிவுக்கு வந்து விட்டாயா?” என்று கேட்டான். 

“நான் யாரிடமும் சிக்கிக் கொள்ளக் கூடாது. சுதந்திரப் பறவைபோல் எந்த விதக் கவலையும் இல்லாமல் பறந்து திரிந்து கொண்டே இருக்க வேண்டும்.” 

“அப்படியானால் நான் சொல்லுவதைக் கேள், நாதமுனி! நீ நித்தியகலாவின் வீட்டுப்பக்கமே தலை நீட்டிப் படுக்காதே! நிலைமை கீரடையும் வரையில் வேறு எங்கேயாவது போய்த் தங்கி இரு.” 

நாதமுனி தலையை அசைத்தான். “இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நண்பன் என்ற முறையில் உன்னிடம் கேட்கிறேன். நித்தியகலா மீது வைத்துள்ள ஆசையால் உனக்கு இடைஞ்சலாக இருந்த அவளுடைய கணவனை நீயே கொலை செய்து விட்டாயா?” என்று நாதமுனியின் கையைப் பற்றிக் கொண்டே ராஜா கேட்டதும், அவன் பயத்தினால் துள்ளிவிட்டான். 

“நான் யாரையுமே கொலை செய்யவில்லையடா! என்னை நம்பு” 

“உண்மையை என்னிடம் சொன்னால் நீ தப்பு செய்திருப்பதால் கூட சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் உன்னை என்னால் காப்பாற்ற முடியும். என்ன இருந்தாலும் நீ என்னுடைய உயிருக்குயிரான நண்பன் அல்லவா?” 

ராஜா மிகவும் தந்திரமாக நடித்துக் கேட்டுப் பார்த்தான். ஆனால் நாதமுனியின் பதில் கடைசி வரையிலும் ஒரே மாதிரியாகவே இருந்தது. 

சிறிது நேரத்திற்கெல்லாம் நாதமுனியை அனுப்பி விட்டு, ஒரு வாடகைக் காரில் ஏறி நுங்கம்பாக்கம் ஏரிக்கரையை நோக்கி விரைந்தான் ராஜா. ஏனோ அவனுக்குப் பயமாகவே இருந்தது? 

6. கை விலங்கு வந்தது! 

வாடகைக் காரிலிருந்து இறங்கி வந்த ராஜாவை அழைத்துச் சென்று, “பிணத்தைப் பார்த்து அடையாளம் சொல்லுங்கள்” என்று கூறி ஓர் இடத்தைக் காட்டினார் இன்ஸ்பெக்டர் அருளானந்தம். 

அந்த இடத்தில் ஒரு மனிதனுடைய சவம் கிடக்கிறது என்பதை பிரகாசமாக வெளிச்சம் போட்டுக் கொண்டு இருந்த ‘பெட்ரோ மாக்ஸ்’ விளக்கு எடுத்துக் காட்டியது. 

திடுக்கிடும் கொலைக் கதைகளையே எழுதிப் பழக்கப்பட்ட ராஜாவுக்கு இப்பொழுது அர்த்தமில்லாமல் குலை நடுங்கியது. பகலில் உயிருடன் பார்த்த ஒருவனை பிணக்கோலத்தில் பார்க்கப் போகிறோமே என்ற பீதி உணர்வு அவனை என்னவெல்லாமோ செய்தது. 

கிழவர் ஜம்புலிங்கத்தின் பிணத்தைப் பார்க்கும் போதே அவன் மிகவும் சோர்ந்து போயிருந்தான். ஒரே இரவில் மீண்டும் ஒரு பிணத்தைப் பார்ப்பது என்றால்…? 

ராஜா கவலையுற்ற போதிலும் எப்படியும் நிலைமையைச் சமாளித்துத்தானே ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன் பிணத்தின் அருகில் நெருங்கிப் பார்த்தான். 

தன்னுடைய வீட்டுக்கு வந்து பேரம் பேசிவிட்டுப் போன சேதுபதியின் பிணம் தான் அது! 

சொட்டுச் சொட்டான ரத்தத்திலே அந்தப் பிணம் கண்களைத் திறந்த நிலையில் மல்லாந்தபடியே கிடந்தது. 

“யாரென்று அடையாளம் தெரிந்து கொண்டீர்களா?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் அருளானந்தம், அவன் பக்கத்தில் வந்து நின்று! 

தலையைத் தொங்க விட்டபடியே புருவங்களை மட்டும் உயர்த்திய ராஜா, “இவன் சேதுபதி தான்! கலைத்தூதன் பத்திரிகையில் துணை ஆசிரியராக வேலை பார்த்து வந்தான்” என்று சன்னமான குரலில் சொன்னான். 

இன்ஸ்பெக்டர் அருளானந்தம், அவனையும் கூட்டிக் கொண்டு போய் ஜீப் காரின் முன் பாகத்தைப் பிடித்தபடி நின்றார். 

எதிரில் நின்று கொண்டு இருந்த ராஜா, “இந்த மரணம் எப்படி ஏற்பட்டது? கொலையா? தற்கொலையா?” என்று கேட்டான். 

“கொலை தான் என்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. 22 ரகத்தைச் சார்ந்த கைத்துப்பாக்கியால் அவன் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறான். மண்டையின் பின் பாகத்தில் குண்டடிபட்டு இருக்கிறது.” என்றார் இன்ஸ்பெக்டர் அருளானந்தம். 

சிறிது நேரம் நெற்றியைப் பிடித்துக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்த ராஜா, “பிணத்தின் சட்டைப் பையிலிருந்து ஏதாவது சாமான்கள் கண்டு எடுத்தீர்களா?” என்று கேட்டான். 

இன்ஸ்பெக்டர் அருளானந்தம் ஒரு சிகரெட்டை எடுத்துப் புகைத்துவிட்டு, “ஒரு சிகரெட் பாக்கட்டும், தீப்பெட்டியும், கைக்குட்டையும், ஒரு சாவியும் கண்டு எடுக்கப்பட்டு இருக்கின்றன. அந்தச் சாவியின் மீது ஐந்து என்ற எண் மட்டுமே பொறிக்கப்பட்டு இருக்கிறது. அந்தச் சாவி எதற்குரியது என்பதை யாராலுமே தெரிந்து கொள்ளவில்லை. ஒரு வேளை அந்தச் சாவி அவனுடைய வீட்டிற்குரியதாக இருக்கலாம். அல்லது ஹோட்டல் அறைக்குரியதாகவும் இருக்கலாம்” என்று சொன்னார். 

ஐந்து என்று அடையாளமிட்ட சாவியை ராஜா நினைவில் பதித்துக் கொண்டான். 

“எனக்கு ஒன்றுமே புரியவில்லை சார்” என்று சொன்ன ராஜா, “அவனிடமிருந்து ஏதாவது ஒரு பொருள் காணாமல் போயிருக்கிறதா?” என்று கேட்டான். 

“காணாமல் போயிருக்கலாம். ஆனால் எதையுமே குறிப்பிட்டுச் சொல்லுவதற்கு இல்லை” என்று சொன்ன இன்ஸ்பெக்டர் அருளானந்தம், “இறந்துபோன சேதுபதியைப் பற்றி உங்களுக்கு என்னென்ன விபரங்கள் தெரியும்?’ என்று கேட்டார். 

ஒருவன் கொலை செய்யப்பட்டு விட்டான் என்பது உறுதியானால் இதைப்போன்ற கேள்விகள் தான் தொடரும் என்பது ராஜாவுக்கு மிகவும் நன்றாகத் தெரியும். எனவே அவர் கேட்டதும் ராஜா சலிப்படைந்து விடவில்லை. 

“எனக்கு அதிகமாகத் தெரியாது. ‘தமிழ் நேசன்’ பத்திரிக்கையில் நாதமுனியுடன் சேர்ந்து சேதுபதி வேலை செய்தபோது ஓரளவு எனக்குத் தெரியும். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற அவனுடைய திருமணத்துக்குப் போய் இருக்கிறேன்! வேலையில் சேதுபதி கெட்டிக்காரன் தேனீபோல சுறுசுறுப்பாக செய்திகளைச் சேகரிப்பான். பழகுவதற்கு நல்லவனும் கூட” என்றான் ராஜா. 

அவன் அமைதியாகச் சொன்னதைக் கேட்டுச் சிரித்த இன்ஸ்பெக்டர் அருளானந்தம், “பழகுவதற்கு நல்லவனாகிய அவன் உங்கள் வீட்டுக்கு வந்தபோது எதனால் அவனை வெளியே பிடித்துத் தள்ளினீர்கள்? நீங்கள் அப்படி நடந்து கொள்ள வேண்டிய காரணம் என்ன?” என்று கேட்டார். 

“அது என்னுடைய தனிப்பட்ட சொந்த விஷயம்.” 

“போலீஸ் வரையில் வந்துவிட்ட பின் சொந்த விஷயம் என்று எதுவுமே இருக்க முடியாது! அவன் கொலை செய்யப்பட்டு விட்டதால் உண்மைக் கொலையாளியைக் கண்டுபிடிக்க எங்களுடன் நீங்கள் ஒத்துழைத்தே தான் ஆகவேண்டும்.” 

“என்னைத் தொந்தரவு செய்யாமல் விட்டு விடுங்கள். மேலும் நான் அவனைப் பிடித்து வெளியே தள்ளினேன் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?” 

“ரகசியப் போலீஸார் மூலம் தெரிந்து கொண்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் என்ன பேசினான் என்பதற்காக ஆத்திரப்பட்டீர்கள்” 

“என்னுடைய சொந்த விஷயம் என்று தான் சொல்லிவிட்டேனே” 

ராஜா பிடிவாதமாகச் சொன்னதும் இன்ஸ்பெக்டர் அருளானந்தத்திற்குக் கடுமையான கோபம் வந்து விட்டது. 

“நீதியின் பிரதிநிதி என்ற முறையில் கண்டிப்பாகக் கேட்கிறேன். என்ன நடந்தது என்பதை ஒளிக்காமல் சொல்லுங்கள்.” 

“சொல்லுவதற்கு எதுவுமே இல்லை.” 

ராஜா கண்டிப்பாகச் சொன்னதும், கை விலங்கை எடுத்துக் கொண்டு வரும்படி போலீஸ்காரர்களுக்கு இன்ஸ்பெக்டர் உடனே இரண்டு போலீஸ்காரர்கள் கை விலங்கை ஒரு பையிலிருந்து எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்கள். 

“கதைகள் எழுதி கண்ணியமான முறையில் வாழ்க்கை நடத்தும் ஓர் எழுத்தாளன் என்பதற்காக இப்பொழுதும் அனுதாபம் காட்டுகிறேன். உங்கள் வீட்டில் வைத்து சேதுபதியுடன் என்ன நடந்தது என்று சொல்லுங்கள். அவன் எதற்காக உங்களைத் தேடிக் கொண்டு வந்தான்?” 

ராஜா கீழுதட்டை மடித்துக் கடித்தபடி எதுவும் சொல்லாமல் நின்று கொண்டு இருக்கவே இன்ஸ்பெக்டர் அருளானந்தம் பேச்சைத் தொடர்ந்தார். 

“ஏற்கனவே உங்கள் ‘வாட்ச்மேன்’ ஜம்புலிங்கம் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். அடுத்தபடியாக உங்களிடம் வந்து விட்டுப் போன சேதுபதியும் மரணமடைந்து இருக்கிறான். இரண்டு பேர்களையும் கொலை செய்தது ஒரே ஆளாகத்தான் இருக்கக்கூடும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதனால் தான் இந்த விஷயத்தில் நீங்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.” 

“நான் எந்த விதமான அலட்சியமும் செய்யவில்லை. இரண்டு பேர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்பது உண்மை தான். எனக்கு நீங்கள் தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் கொலை காரனைக் கண்டு பிடிக்க என்னாலும் உதவமுடியும்.” 

“வீண்பேச்சு வேண்டியதில்லை! சேதுபதி எதற்காக உங்கள் வீட்டுக்கு வந்தான் என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியுமா? முடியாதா?” 

பேச்சைச்சுற்றி வளைக்காமல் நேரடியாகவே கண்டித்தார் இன்ஸ்பெக்டர் அருளானந்தம். 

“சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன் என்பதற்காகப் பெரிதும் வருந்துகிறேன். இது ஒரு குடும்பத்தைப் பற்றிய விஷயம். எனவே பகிரங்கப்படுத்த விரும்பவில்லை.” 

சேதுபதி தன்னிடம் சொன்ன பிளாக்மெயில் செய்தி சட்ட விரோதமானது என்பதால் அதை வெளியிட்டால் தனக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதுடன் அவன் மனைவி நித்தியகலாவும் தன் நண்பன் நாதமுனியும் பாதிக்கப்படுவார்கள் என்று ராஜா எண்ணினான். நித்தியகலாவின் பெயர் இழுபட்டவுடன் சங்கிலித் தொடர்பு போல் இன்னொரு பெண்மணியான ராஜாத்தியும் வந்து விடும்! 

ராஜா உண்மையை வெளியிட மறுத்ததால் பொறுமை இழந்துவிட்ட இன்ஸ்பெக்டர் அருளானந்தம், “கொஞ்சமும் மரியாதை தெரியாதவர்! இவர் கையில் விலங்கு மாட்டுங்கள்!” என்று கத்தினார். 

விடுவார்களா போலீஸ்காரர்கள்? உடனே ராஜாவின் கைகளை விலங்கு வளையங்களில் நுழைத்துப் பூட்டினார்கள். 

“உம்மைப் போன்ற முரட்டுத்தனமான பிடிவாதக் காரர்களை வெளியே விட்டு வைப்பதே தப்பு. சில காலம் வரையிலாவது கம்பி எண்ணினால் தான் புத்தி வரும்.” என்று சீறிய இன்ஸ்பெக்டர் அருளானந்தம் சற்று குரலைத் தணித்துக் கொண்டு “நீங்கள் படித்தவர். மற்றவர்களுக்குப் புத்தி புகட்டும்படி கதைகள் எழுதக் கூடியவர்-அப்படி இருக்கும் போது போலீஸ் இலாகாவுக்கு எதிராக நடந்து கொள்ளலாமா?” என்று கேட்டார். 

“நான் எதிராக நடக்க வேண்டும் என்று ஒரு போதுமே நினைக்கவில்லை சார்! என்னால் முடிந்தவற்றை எல்லாம் செய்வதற்குத் தயாராகவே இருக்கிறேன்”. 

“அப்படியானால் இன்னும் ஏன் தயக்கம்? சேதுபதி எதற்காக உங்களைத் தேடிக் கொண்டு வீட்டுக்கு வந்தான் என்று சொல்லுங்கள்.” 

எதையாவது சொன்னால் தான் பயங்கரமான ஆபத்தில் இருந்து த ன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்த ராஜா, “நீங்கள் இரகசியமாக வைத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையினால் அந்தரங்கச் செய்தி ஒன்றைச் சொல்லுகிறேன்.” என்று சொன்னவன் சிந்தனை செய்வதைப்போல் பாவனை செய்து விட்டு, “நேற்று சாயங்காலம் சேதுபதி என்னிடம் வந்திருந்தான். இன்னும் பொழுது விடியாததால் அதை இன்று சாயங்காலம் என்று வேண்டுமானாலும் சொல்லலாம். நான் உதவி செய்யும் மனப்பான்மை உடையவன் என்பதைத் தெரிந்து சேதுபதி ஒரு இரகசிய உதவியை நாடினான். அதாவது அவனுடைய மனைவி நித்தியகலாவை விவாகரத்து செய்து விடப் போகிறானாம். நான் அதற்கு உதவி செய்ய வேண்டுமாம். குடும்பத்தைக் குலைக்கும் இந்தக் காரியத்தில் எந்த அறிவுள்ள மனிதனாவது ஈடுபடுவானா சார்? அதனால் தான் ஆத்திரமடைந்து அவனைப் பிடித்து வெளியே தள்ளினேன்!” என்று ஒரு பொய்யை மிகவும் கச்சிதமாகச் சொன்னான். 

இன்ஸ்பெக்டர் அருளானந்தம் நிமிர்ந்து அவனைச் சந்தேகக் கண்களுடன் பார்த்து விட்டு, “மனைவியை கணவன் விவாகரத்து செய்ய நி னைக்கிறான் என்பது சாதாரண விஷயம்தான். அதனால் நீங்கள் ஆத்திரம் அடைந்து அவனைப் பிடித்து வெளியே தள்ளுவானேன்?” என்று கேட்டார். 

“அவன் என்னைக் கட்டாயப்படுத்தினான். விவாகரத்துக்கு உடனடியாக ஏற்பாடு செய்யும்படி தொந்தரவு செய்தான். இந்தத் தொல்லை பொறுக்க முடியாமலேயே நான் அப்படி நடந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது.” என்றான் ராஜா. 

“நீங்கள் சொல்லும் விவாகரத்து உண்மையானது என்றே வைத்துக் கொள்வோம். நாதமுனி திடீரென்று எதற்காக உங்கள் ஆபீஸுக்கு வந்து ‘வாட்ச்மேன்’ பிணத்தைப் பார்த்தான்? போலீஸ் நடவடிக்கையை அவன் கண்காணிக்க வேண்டிய அவசியம் என்ன?” 

“அவன் அங்கே வந்தது உங்கள் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. என்னுடைய நண்பன் அவன். ஆபீஸின் முன்னால் போலீஸ் லாரிகள் நிறுத்தப்பட்டு இருக்கவே என்னவோ, ஏதோ என்று பதறிப்போய் வந்து இருக்கிறான். நண்பர்களாக உள்ள யாருமே இதைத்தான் செய்வார்கள்.” 

“நாதமுனிக்கும் சேதுபதிக்கும் இடையே உள்ள தொடர்பு எத்தகையது?” 

“இரண்டு பேர்களும் ஆரம்பகாலத்தில் ‘தமிழ்நேசன்’ என்ற பத்திரிகையில் வேலை பார்த்தவர்கள். பிறகு அவர்கள் தனித் தனியாகப் பிரிந்து விட்டார்கள்.” 

“அதிருக்கட்டும்! சேதுபதி தன் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று சொல்லக் காரணம் என்ன? அவள் தப்பு செய்து விட்டாளா? அவளுக்கும் நாதமுனிக்கும் ஏதாவது தொடர்பு இருந்து அதை சேதுபதி கண்டுபிடித்து விட்டானா? மனைவியின் மீது வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு ஆத்திரம் ஏற்பட வேண்டுமானால் ஏதாவது நடைபெற்று இருக்கத்தானே வேண்டும்.” 

மிகவும் தந்திரசாலியான இன்ஸ்பெக்டர் அருளானந்தம் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் கச்சிதமாகப் பேசினார். 

“என்ன நடைபெற்றது என்பதை நித்திய கலாவிடமே விசாரித்துத் தெரிந்து கொள்வது தானே…?” 

“சிறிது நேரத்திற்கு முன்னால் கூட அவளுக்கு டெலிபோன் செய்தேன், அவள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறாள் போலிருக்கிறது.” என்று சொன்ன இன்ஸ்பெக்டர் அருளானந்தம், “நாதமுனிக்கும் நித்தியகலாவுக்கும் இடையே உள்ள தொடர்பு எத்தகையது?” என்று கேட்டார். 

“அண்ணன்-தங்கை என்ற உறவு தான் என்று நினைக்கிறேன்.” 

“இப்படிப்பட்ட உறவைக் கொண்ட அவன், உங்களுடைய ஆபீஸில் வைத்து சேதுபதியின் பெயரை எதற்காகச் சொன்னான்? சேதுபதியை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்பது நாதமுனியின் திட்டங்களில் ஒன்றா?” 

“நாதமுனி அப்படிப்பட்ட பயங்கரவாதியாக இருப்பான் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நல்ல உறவை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் கடைசியாக நாதமுனி என்னிடம் சொன்ன வாசகம்”. 

“இந்த இரண்டு கொலைகளைப் பற்றி உங்களால் ஏதாவது யூகிக்க முடிகிறதா? ஏனென்றால் உங்களை மையமாக வைத்துத் தான் இந்தப் பயங்கரமான இரண்டு கொலைகளும் நடைபெற்று இருக்கின்றன.” 

“எனக்கு ஒன்றுமே புரியவில்லை.” 

ராஜா சிறிது நேரம் கழித்து, ‘என்னை இப்பொழுது நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லுகிறீர்களா? அல்லது…” என்று நிறுத்திவிட்டுச் சிரித்தான். 

“ஓஹோ…உங்கள் கைகளில் விலங்கு இருப்பதை மறந்துவிட்டேன்.” என்று சொன்ன இன்ஸ்பெக்டர் அருளானந்தம் கை விலங்கை அகற்றும்படி உத்தரவிட்டார். 

உடனே போலீஸார் விலங்கைக் கழற்றி எடுத்து மறுபடியும் பையினுள் வைத்தார்கள். 

“ராஜா! நீங்கள் இப்பொழுது நடந்த நிகழ்ச்சியை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள், நானும் நீங்களும் மனம் விட்டுப் பழகி ஒத்துழைத்தால் விரைவில் கொலைகாரன் யார் என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.” 

இன்ஸ்பெக்டர் இப்படிச் சொன்னதும் ராஜா முறுவலித்துக் கொண்டான். 

“சேதுபதி இறந்து எத்தனை மணிநேரம் இருக்கும் என்று டாக்டர் கருதுகிறார்?” 

“சில மணி நேரத்திற்கு முன்னாலேயே அவன் உயிர் பிரிந்து இருக்கலாமாம்! அதுமட்டுமல்ல! வேறு எங்கோ சேதுபதி சுட்டுக் கொல்லப்பட்டு அவனுடைய பிணத்தைத் தூக்கி வந்து இங்கே போட்டிருக்க கூடுமென்றும் டாக்டர் அபிப்பிராயப்படுகிறார்!” என்றார் இன்ஸ்பெக்டர். 

“அப்படியா?” என்று சொன்ன ராஜா, இன்ஸ்பெக்டர் அருளானந்தத்திடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான். இனி சேதுபதியின் கொலை மர்மத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் அவளுடைய கள்ளக் காதலியான ராஜாத்தியின் வீட்டுக்கு உடனே போய் நிலைமையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது.

– தொடரும்…

– சொட்டு ரத்தம் (மர்ம நாவல்), முதற் பதிப்பு: 1966, பிரேமா பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *