சேவற்குரலோன்
கதையாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 10, 2025
பார்வையிட்டோர்: 170
(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருநூற்று நாற்பத்தி மூன்று கூட்டங்களில் பேசி முடித்துவிட்டு தேர்தல் சூறாவளி சுற்றுப்பயணத்தின் கடைசி தினங்களுக்கு முந்தைய இரவில் பனைவிடலிகளுக்குள் இருந்த கிராமம் ஒன்றுக்குப் பேச வந்து சேர்ந்தார் எரியீட்டி கோவிந்தன்.
பத்தாம் வகுப்பில் பெயிலான பிறகு மிட்டாய்க் கடையில் சில காலம் வேலை செய்துவிட்டு தமிழ் வாழ்க எனப் பச்சை குத்திய கையும் திருகு மீசையுமாக அரசியலில் நுழைத்து பெரியவர் தமிழ்வேந்தனின் நகல் பேச்சாளராக அறிமுகமாகி, எட்டு ஆண்டில் நான்கு மனைவிகளும் இரண்டு குழந்தைகளுமாகக் கழகத் தலைமைப் பேச்சாளரானார். நட்சத்திரம் ஓய்ந்த இரவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் எரியீட்டியின் குரலைக் கேட்கக் காத்துக் கிடந்தனர். அவருக்காக வாங்கி வைக்கப்பட்ட பதினான்கு சோடா புட்டிகளின் கோலி கண் மூடாது திறந்து விழித்தன. ஜாலம் சிந்தும் பேச்சு தொடங்கிய அரை மணிக்குப் பிறகு கைத்தட்டல் நீள, கூட்டத்தில் இருந்த எவனோ ஒருவனுக்குத் தற்செயலாக ஒரு சேவலின் குரல் கேட்டது. சலனமற்றுத் திரும்பி அவன் எதிர்முகம் பார்த்துத் திகைக்க கொக்கரக்கோ சப்தம் இடைவிடாது கேட்கத் தொடங்குவதை ஜனத்திரளே கேட்டது.
எரியீட்டியோ உற்சாகம் ததும்ப வார்த்தைகளை மிதக்கச் செய்தபடி இருந்தார். அப்போது மேடையிலிருந்தவர்களும் கொக்கரக்கோ கொக்கரக்கோ, என்ற சப்தத்தினைக் கேட்டனர். எங்கிருந்து வருகிறது இந்தக் குரல்? அதுவரை எரியீட்டி தனது மனத்தில் பிறக்கும் வார்த்தைகள் வெளியே கொக்கரக்கோவாகக் கேட்பதை அறியவே இல்லை. “சேவல் மாதிரியில்லை கத்துறாரு” எனச் சலித்தபடி ஒரு பெண் எழுந்தபோது கூட்டமே அதை ஒப்புக்கொண்டு கலையத் தொடங்கியும்தான் தனக்கு ஏற்பட்ட விபத்தின் குரூரம் அறிந்து பயமும் வியர்வையுமாக நின்றார் கோவிந்தன். தான் பேசுவது வெளியே கொக்கரக் கோவாக கேட்கிறதே என்ற பீதி உடலில் படர்ந்தது. மனுசன் சேவல் குரலில் பேசுவதைப் பற்றி முணுமுணுத்தபடி மணல் பரப்பு கடந்து போயினர் மக்கள்.
காரில் நகரம் செல்லும்வரை யாரிடமும் எதுவும் பேசவில்லை. இரண்டு நாள்கள் செய்தித்தாளின் முதல் பக்க வரியான அவரை என்ன செய்வது எனத் தெரியாமல் கட்சி விழிக்க. பன்னிரண்டாம் வட்டச் செயலாளர்தான் அந்த யோசனையை முதலில் சொன்னார். “ஒவ்வொரு பொதுக்கூட்ட முடிவிலும் அவரை ஐந்து நிமிஷம் அறியாமை இருள் அகற்றி விழிப்புணர்வு தரும் சேவலாக, குரல் கொடுக்கச் செய்யலாமே. ” ஒப்புக் கொண்டது தலைமை. அதன்படி நகரம் நகரமாகக் கூட்டத்தின் இறுதியில் அவர் கொக்கரக்கோ விட்டார். மக்கள் அதைக் கேட்க நகரமெங்கும் காத்துக் கிடந்தனர்.
அந்தத் தேர்தலில் கொக்கரக்கோ கட்சி பெருவாரியாக வெற்றி பெற்றது. பதவி ஏற்கும்போது சேவல் குரல் கேட்பது அபசகுனம் எனச் சொன்ன எவர் பதிலிலோ புறக்கணிக்கப்பட்ட கோவிந்தன், தற்காலிக ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பப் பட்டார். “எந்த நேரமும் என்ன எழவு கொக்கரக்கோ’ என சவித்த மனைவிகள் அவரைப் படுக்கையில் கூட ஒதுக்கினர். செய்வதென்ன எனத் தெரியா மனக்கசப்பு கொண்ட கொக்கரக்கோ கோவிந்தன் வீட்டில் தனியே நாள்களைப் போக்கினார். சாப்பிடுவதற்கு தவிர எதற்கும் அவர் வாயைத் திறப்பதேயில்லை. ‘கொக்கரக்கோ மகளே’ என கேலி செய்த வாலிபர்களை ஏசி வீடு திரும்பினாள் கோவிந்தன் மூத்த மகள். எவருக்கும் பிடிக்காதவராகிப் போனார். சில சமயம் இதுநாள் வரை தாள் பேசியது எவ்வாம் கூட வெறும் கொக்கரக்கோ தானோ என்ற சந்தேகம் அவருக்கே வரும். புறக்கணிக்கப்பட்ட சேவற்குரலோனாக வீட்டிலிருந்தார்.
நெடுநாள்களுக்குப் பிறகு தன்னைத் தேடி வீட்டு வாசலில் வந்து நின்ற காரைக் கண்டு வியந்து வெளியே வந்தபோது, இறங்கிய நபர் தன்னை வேம்பு ஐயர் என்றும், காமிக் வோல்டு எனும் உல்லாசப் பூங்காவை நிர்வகிப்பதைக் கூறி, நீங்கள்தானே கொக்கரக்கோ எனக் கேட்டார். தலைக்குனிவோடு நின்றவருக்கு மேலும் வருத்தம் ததும்பியது. வந்தவர் “உல்வாசப் பூங்காவுக்கு வரும் ஒவ்வொரு சிறுவர் சிறுமி முன்பும் ஒரு முறை கொக்கரக்கோ விட்டால் மாசம் இரண்டாயிரம் சம்பளம், வர முடியுமா?” எனக் கேட்டார். ஒப்புக்கொண்டு வேலையில் சேர்ந்த எரியீட்டிக்கு நீலமும் மஞ்சளுமான உடையும் ஒரு நாற்காலியும் வண்ணக் குடையொன்றும் கொடுக்கப்பட்டது. சிறுவர்கள் முன்பு உற்சாகமான சேவலாகக் கூவினார். குழந்தைகள் இந்த வேடிக்கையை வெகுவாக ரசித்தனர். அந்த வேலை அவருக்கே சில வாரங்களில் ரொம்பவும் பிடித்துப் போனது. தன்னைப் பார்க்கத்தானே கூட்டம் வருகிறது என சந்தோஷமாகப் பகலெல்லாம் கூவினார். ஒரே மாதிரி கூவுவதை எத்தனை நாள்தான் கேட்க முடியும் என்று சிறுவர்கள் விலகிப் போகத் தொடங்கியதால் அங்கும் அவரைத் தனிமை சுற்றியது. ஆடு போலவோ,காகம் போலவோ, ஏன் ஒரு தவளை போலக் கூட குரலை மாற்றிக் கத்தத் தெரியலையே எனக் கோபமுற்ற வேம்பய்யர் கடைசியில் அவரை வேவையை விட்டு நீக்கினார். இனி தான் இருந்து என்னதான் பயன்? கட்சி, குடும்பம். மனைவிகள், மகள், சிறுமிகள் கூட இந்தச் சேவல் குரலை வெறுத்தப் பின்பு வாழ்வின் விதிவசத்தை மூன்று நாள் தனிமை யில் யோசித்துவிட்டு, செத்துவிடலாம் எனக் கடற்கரைக்குப் போனார்.
அங்கு முறுக்கு விற்கும் சிறுவன் ஒருவன் அவரைப் பின் தொடர்ந்து சார் முறுக்கு வேணுமா முறுக்கு! என விரட்ட, வேண்டாம் என மனதில் பட்டபோதும் அது பேசும்போது கொக்கரக்கோவாகத்தானே கேட்கும் என்ற வேதனையோடு சாகப் போகும்போதும் கூட சிறுவனின் கேலிக்கு ஆளாக வேண்டுமா என வாயை மூடியபடி கடலினுள் இறங்கி நடந்தார். கால்கள் நீரினுள் அமிழ்ந்தன. அப்போதும் கரையில் இருந்த சிறுவனின் குரல் கேட்டது. “சார் முறுக்கு வேணுமா?” போய்த் தொலைகிறான் எனத் திரும்பி, கடைசியாக ஒரு முறை கொக்கரக்கோ எனக் கூவுவதால் என்னவாகிவிடப் போகிறது என நினைத்தபடி கையை மறுத்து ஆட்டி வேகமாகக் கொக்கரக்கோ என்றார். கடற்கரையில் இருந்த சிறுவனுக்கு அது “வேண்டாம்” என்ற வார்த்தையாகக் கேட்டது.
– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.