செல்வராணியின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 22, 2026
பார்வையிட்டோர்: 276 
 
 

வேலூர் தங்கக்கோவிலில் தரிசனம் முடிந்த பின் ரத்னகிரீஸ்வரர் கோவிலுக்கு செல்லலாமா என்று வைத்தியும் அவன் மனைவி காயத்ரியும் விவாதித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சென்னை வாசிகள் …வைத்தியே காரை ஓட்டி வந்திருந்தான். வேலூரில் அண்ணாமலையார் ஓட்டலில் ரூம் எடுத்து தங்கி இருந்தனர். அவர்களது ஒரே பையன் தினேஷ் பெங்களூரில் எர்ணஸ்ட் அண்ட் எங் கம்பனியில் வேலை பார்த்து வந்தான். அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்று பெரிதாகக் கிடையாது.

வேலூர் வெய்யில் கொளுத்தியது. உடலில் வேர்வை வழிந்தது.

“ரூமிற்கு போவோம். டிபன் சாப்பிட்ட பின்னர் மதியம் நான்கு மணிக்கு ரத்தினகிரீஸ்வர் கோவிலுக்கு கிளம்புவோம்” என்றான் வைத்தி. அவன் சொல்வதை ஆமோதித்தவாறே காயத்ரி காரில் ஏற முற்பட்டபோது…

“அண்ணா, அக்கா, கொஞ்சம் உதவி செய்யறீங்களா” என்றது ஒரு குரல்.

வைத்தி ட்ரைவர் சீட்டில் உட்கார்ந்து விட்டான். திரும்பின போது…ஒரு பெண் அவர்கள் காரின் பக்கத்தில் நின்று கொண்டு இருந்தாள்.

முப்பத்தி ஐந்து வயது இருக்கலாம் அந்த பெண்ணுக்கு. அவள் லக்ஷணத்தைப்பார்த்தால் குடும்பப்பெண் மாதிரி இல்லை. ஆனால் சுவாமி கும்பிட்டு வந்தவள் என்று தெரிந்தது.

“அண்ணா, என்னை வேலூர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் விட முடியுமா?” என்று அவள் கெஞ்சும் குரலில் கேட்ட போது என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான் வைத்தி. காயத்ரி தான் சுதாரித்துக்கொண்டாள்.

“என்னம்மா, நீ யாரென்றே தெரியாது. நீ ஆட்டோவில் போகலாமே” என்றாள் காயத்ரி.

அவள் அழுது விடுவாள் போல் இருந்தது. கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

வைத்தியும் காயத்ரியும் திடுக்கிட்டனர்.

“என்னம்மா, கண்ணைக் கசக்கிக்கிட்டு நிக்கிறே? இப்போவெல்லாம் காலம் கெட்டுக்கிடக்கு. யாரை நம்புவது என்றே தெரியவில்லை. நீ இப்படி அழுதா மத்தவங்க என்னைப்பற்றி என்ன நினைப்பாங்க” என்றான் வைத்தி.

“பரவாயில்லை அண்ணா…என்னால் உங்களுக்கு எந்த சிரமும் வேண்டாம். அண்ணி, வரேன்” என்று அவள் நகர்ந்தாள்.

காயத்ரி மனம் இரங்கினாள். அந்த பெண்ணைப்பார்த்தால் பாவமாக இருந்தது.

“வாம்மா, உட்காரு” என்று காயத்ரி கார் கதவைத் திறந்தாள்.

அந்த பெண் சுற்றுமுற்றும் பார்த்தபடியே உள்ளே உட்கார்ந்தாள்.

“அண்ணா, அண்ணி, வண்டியை இங்கிருந்து எடுங்கள்” என்றாள்.

வைத்தி லாவகமாக வண்டியைத் திருப்பினான். கார் வேகம் பிடித்தது.

அந்த பெண் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

” அண்ணா, அண்ணி, என் பெயர் செல்வராணி. குடியாத்தம். நீங்க இன்னும் கொஞ்ச நேரம் நின்றிருந்தால், அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் வந்திருப்பார்கள்”…என்றாள்.

புரியாமல் விழித்தனர் வைத்தியும் காயத்ரியும்.

“அண்ணா, அண்ணி, உங்களிடம் உண்மையைச் சொல்ல என்ன தயக்கம். என்னை நடுவில் இறக்கி விட்டாலும் பரவாயில்லை. நான் ஒரு விலைமகள்” என்றாள் செல்வராணி.

அயர்ந்து போய் விட்டனர் வைத்தியும் காயத்ரியும்.

“என்னம்மா, நாங்க கோவிலுக்கு போய் விட்டு வரோம். இப்படி காரில் லிப்ட் கேட்டு எங்களை சங்கடத்தில் ஆழ்த்தி விட்டாயே” என்றாள் காயத்ரி ஆதங்கத்துடன்.

“நடுவில் இறங்கிக்கொள்கிறேன் அண்ணா. அந்த ஆட்டோ டிரைவர் கூட்டம் என்னை சும்மா விட்டிருக்க மாட்டார்கள். என்னை சொன்ன இடத்திற்கு அழைத்துப்போகிறேன் என்று சொல்லி என்னை வேட்டையாடி சுகம் கண்டவர்கள் சில பேர். இதனால் எனக்குள் கிலி பிடித்து விட்டது”…என்றாள் செல்வராணி பரிதாபமாக. கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

வைத்தி சற்றுத் தள்ளிச் சென்று வண்டியை நிறுத்தினான். அவள் இறங்க முற்பட்டபோது , “என்னை அண்ணா என்று கூப்பிட்டு விட்டாய் ராணி. இந்த இரண்டாயிரம் ரூபாயை வைத்துக்கொள்” என்றான்.

“வேண்டாம் அண்ணா..நீங்கள் என்னைத் தங்கை போல் பாவித்து பரிவு காட்டியது ஒன்றே போதும்”…என்றாள் ராணி.

“ராணி…உன்னை மாதிரி குடும்பப்பாங்கான பெண் எப்படி இந்த தொழிலுக்கு வரலாம். இது பாவம் இல்லையா? குடும்ப கௌரவத்தை இப்படியா காற்றில் பறக்க விடுவாய்” என்றாள் காயத்ரி.

ராணி எதையோ சொல்ல முற்பட்டாள். வைத்தி வண்டியைச் செலுத்தினான். ஓட்டல் அண்ணாமலையார் ரெசிடென்ஸ் பார்க்கிங் லாட்டில் காரை நிறுத்தினான்.

“ராணி, நீ எங்களுடன் வருகிறாய். முதலில் உன் கதையைச் சொல். எனக்குத் தெரிந்த சமூக சேவை நிறுவனம் இருக்கிறது. அல்லது வேறு வழி கண்டு பிடிப்போம் .என்னால் உனக்கு உதவ முடியுமா என்று பார்க்கிறேன்” என்றான் வைத்தி தீர்மானத்துடன்…

காயத்ரி மறுப்பேதும் சொல்லவில்லை.

ஓட்டல் ரூம் சென்ற பின்னர் மூன்று பிளேட் வடை இட்லி புரோட்டா என்று ஆர்டர் செய்தனர்.

செல்வராணி தனது கதையைக் கூற ஆரம்பித்தாள் .

“எனக்கு சொந்த ஊர் குடியாத்தம். என் மாமா தனபாலன் எனக்குத் தாலி கட்டினார். சொந்த தாய் மாமன் தான். ஆனாலும் அவர் ஒரு காமுகன். நான் படித்தது ஏழாம் வகுப்பு வரை தான். அதற்கு மேலும் ஸ்கூல் அனுப்ப என் தந்தையின் மரணம் மட்டும் வீட்டு சூழல் அனுமதி அளிக்கவில்லை. பதினேழு வயதிலேயே தனபாலன் என்ற அரக்கனிடம் மாட்டிக்கொண்டேன். நான்கு வருடங்களில் மூன்று குழந்தைகள். இரண்டு பெண் மற்றும் ஒரு பையன். தனபாலன் மொடாக்குடியன். ” என்று நிறுத்தினாள் செல்வராணி.

“தனபாலன் என்று ஒருமையில் சொல்கிறேன் என்று தப்பாக நினைக்க வேண்டாம் அண்ணா அண்ணி. அவன் பண்ணின செயல் அப்படி” என்று நிறுத்தின ராணி சில வினாடிகள் மௌனமாக விட்டத்தை வெறித்துப்பார்த்தாள்.

“குடியும் அடியும் என் வாழ்க்கை என்று ஆகிப்போனது. தனபாலன் ஒரு பூக்கடை வைத்திருந்தான். அதில் பெரிய வருமானம் என்று கிடையாது. இதில் பாதி நாள் குடி வேறு.”

“ஒரு நாள்….” நிறுத்திய ராணி அந்த இரவின் பயங்கரத்தை நடுங்கும் குரலில் விவரிக்கத் தொடங்கினாள்.

“இரவு…குழந்தைகள் உறங்கி விட்டனர். தனபாலன் இரண்டு நண்பர்களை அழைத்து வந்தவன் அவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு…”

விம்மத் தொடங்கினாள் ராணி.

“கற்பை இழந்த பின்னர் உயிரை விடலாம் என்று நினைத்த போது என் மூன்று குழந்தைகளும் கண் முன்னே நின்றனர்.”

தனபாலன் மூலமாகவே செல்வராணி விலைமாதுவாகிப் போனாள். அது தான் கொடுமை.

அவர்களது சொந்தம் பந்தம் அனைவரும் காறித்துப்பினர்.

விஷயம் கேள்விப்பட்ட தனபாலனின் தமக்கை மண்டையைப்போட்டு விட…அவனுக்கு கொண்டாட்டம் ஆகி விட்டது.

இதற்கு பின்னர் அவளை ஓட்டலுக்கு அனுப்புவது தனபாலனுக்கு வாடிக்கை ஆகி விட்டது. செல்வராணி இரவு ராணி ஆகிப்போனாள். அவளுக்கு போக்கிடம் ஏது? தனபாலன் அவளை உடும்புப்பிடியாக பிடித்து வைத்து அவளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தான்.

பூக்கடையை மூடி விட்டான் தனபாலன்.

தனது குழந்தைகளின் முகத்தில் முழிப்பதே பாவம் என்று ராணி நினைத்தாலும் வீட்டுச் செலவுக்கு என்ன பண்ணுவது? தனபாலனின் சித்தப்பா மகன் முத்துப்பாண்டி இன்னொரு வழியை அறிமுகப்படுத்தினான். அதாவது மட்டரகமான வீடியோ படங்களில் அவளை நடிக்குமாறு தனபாலனும் முத்துவும் வற்புறுத்தத் தொடங்கினர். முத்து தான் அதில் நாயகன். பகல் முழுவதும் டெலிவரி பாய் ஆக வேலைப்பார்த்து விட்டு இரவு நேரம் இந்த மாதிரி மட்டரகமான காணொளிகளை படம் பிடிக்க வேண்டியது. ஒவ்வொரு இரவிற்கும் மூன்று அல்லது நான்கு லக்ஷம் கிடைக்கும். அதில் இரண்டு லக்ஷம் தனபாலனுக்கு.

வாழ்க்கை வெறுத்துப்போனது செல்வராணிக்கு. ஒரு முறை அவள் தற்கொலைக்கு முயன்று தனபாலன் அவளைக்காப்பாற்றி விட்டான்.

இரவு நேரத் தொழில் தங்கு தடை இல்லாமல் தொடர்ந்தது. ராணி நடைப்பிணம் ஆகி விட்டாள். உடையில் இடை கூடியது.

வாலாஜாப்பேட்டைக்கு வீடு மாறினார்கள். ராணியின் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். தனபாலன் திடீர் என்று குடல் நோயினால் செத்து விட்டான்.

முத்துப்பாண்டி அவனை வற்புறுத்திய போது ராணி அவனைக்கெஞ்சினாள். அவனும் சரி போகட்டும் என்று விட்டு விட, தொழில் நின்றது. ஆனால் அவள் வீட்டு வேலைக்குச் சென்றால் அங்கே உள்ள ஆண்கள் அவளை அடைவதிலேயே குறியாக இருந்தார்கள். எங்கே வேலைக்குச் சென்றாலும் நாக்கைத் தொங்க போட்டுகொண்டு நாய் மாதிரி அலையும் ஆண்களைப்பார்க்க பார்க்க ஆத்திரம் பொங்கியது ராணிக்கு. வேறு வழியில்லாமல் முத்துவை த் தொடர்பு கொள்ள …அந்த பலான வீடியோ தொழில் மீண்டும் தொடங்கியது. ஆனால் மாதத்தில் ஐந்து அல்லது ஆறு முறை மட்டுமே செல்ல வேண்டிய சூழ்நிலை.

ஆனாலும் பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு ஒரு விதமான களை அவர்கள் தோற்றத்தில் தெரிந்து விடும். செல்வ ராணியும் அதற்கு விதி விலக்கல்ல.

ஒரே ஆறுதல். முத்துப்பாண்டி அவளை ஏமாற்றாமல் அவளுக்கு உரிய தொகையைக்கொடுத்து விடுவான். அவளைத் திருமணம் செய்து கொள்ள அவன் தயார். தொழிலையும் அவள் விட்டு விடலாம் என்று உறுதி அளித்தான். செல்வராணி தான் ஒத்துக்கொள்ளவில்லை. செல்வராணி நிறுத்தியபோது வைத்தியின் இதயம் கனத்துப்போய் இருந்தது.

இந்த மாதிரி மட்டரகமான காணொளிகளில் நடிக்கும் ஆணும் பெண்ணும் ஏழ்மையினால் தான் இதைச் செய்கிறார்கள். பாவம்.

“இந்த விஷயம் உன் குழந்தைகளுக்குத் தெரிந்தால்?” என்று நிறுத்தினாள் காயத்ரி.

“பெரியவளுக்குத் தெரிந்து இருக்கும். ஆனால் அவள் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளவில்லை. நல்ல காலம் என் குழந்தைகள் நன்கு படிக்கிறார்கள். அதுவே எனக்கு போதும். இன்னும் சிறிது நாட்களில் இந்த தொழிலுக்கே முழுக்கு போட்டு விடுவேன் அண்ணி” என்ற ராணி இட்லி வடை பரோட்டா என்று சாப்பிடத் துவங்கினாள்.

மணி நான்கு. வெயில் சற்றே தாழ்ந்து இருந்தது.

“நான் கிளம்பட்டுமா…” என்றாள் ராணி.

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை” என்று நெகிழ்ந்தாள்.

“எனது ஆஃபீஸ் நண்பன் ஒருவனின் தாய் தந்தை வேலூரில் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கையான ஒரு பணிப்பெண் தேவை. இருவருக்கும் வயதாகி விட்டது. சமையல், வீட்டு வேலை என்று அவர்களுக்கு காலை எட்டு மணியில் இருந்து மாலை ஆறு வரை வேலை பார்க்க வேண்டும். உனக்கு சம்மதமா தங்கச்சி” என்றான் வைத்தி.

“அண்ணா…அவர்கள் என்னை வேலைக்கு வைத்துக் கொள்வார்களா.” என்று சந்தேகத்துடன் வினவினாள் செல்வராணி .

“நான் பேசிப்பார்க்கிறேன் …அவர்கள் முற்போக்கு சிந்தனை உடையவர்கள். எனது ஆஃபீஸ் நண்பன் பெயர் செந்தில். அவன் மனைவி ஜெனிபர். செந்திலின் பெற்றோர் அவன் மனைவியை முழு மனதாக ஏற்றுக்கொண்டனர். செந்திலின் தந்தை சீர்திருத்தவாதி. சமூக நலனில் அக்கறை கொண்டவர். அவருக்கு மூட்டு வலியால் மூட்டு மாற்று சிகிச்சை நடைப்பெற்று உள்ளது” நிறுத்திய வைத்தி..

“ராணி, நீ நாளை என்னை இங்கே சந்திக்க முடியுமா. என் பெயரை க் காப்பாற்றுவாய் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என்னை அண்ணன் என்று அழைத்து இருக்கிறாய். நாளையே அவர்கள் வீட்டிற்கு செல்லலாம்” என்ற வைத்தியின் கால்களில் சட்டென்று விழுந்தாள் ராணி. அவளது கண்ணீர் அவன் கால்களை நனைத்தது. காயத்ரி கணவனை பெருமிதத்துடன் பார்த்தாள்.

அவர்களிடம் விடை பெற்று சென்ற போது செல்வராணியின் கண்களில் நம்பிக்கையின் கீற்று அப்பட்டமாகத் தெரிந்தது.

நம்பிக்கை தானே வாழ்க்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *