சுமையற்ற வாழ்க்கை சுவையற்றுப் போகும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2024
பார்வையிட்டோர்: 2,741 
 
 

“வாப்பா நாளைக்கு கிளாஸ் பீஸ் எட்நூறு ரூபா கட்டாயமாக கொடுக்கனும்” என்றாள் இளையமகள்  ஸாரா.

“ஏன்ட கிளாஸ் பீஸும் ஆயிரம் ரூபா கொடுக்கனும் “என்றான் மகன் அர்ஷத்.

“வாப்பா நான் கிளாஸ் போட்டுக் கொண்டு போறது உம்மாட பழய ஹபாயா இதற்கு மேலேம் எனக்கு அத போடேல்லா.. புதியொண்டு தைக்கோனும் “என்றாள் மூத்தமகள் ருகைய்யா.

“எனக்கும் புதிய ஹபாயா வேணும் “என்று சொன்னாள் இரண்டாவது மகள் ரம்லா. கையில் ஏதோ கடதாசித் துண்டோடு வந்தாள் மனைவி ஹாஜரா. அது வெறும் கடதாசியல்ல தண்ணி பில் அதை வாங்கிப் பார்த்தான். ‘மூவாயிரத்து ஐந்நூறு ‘
வழமையான கணக்குத்தான் என நினைத்தவாறு இரண்டாக மடித்து மேசை லாச்சியில் வைத்தார் அஸாம்.

பிள்ளைகள் நால்வரும் அவரவர் தேவைகளை கூறிவிட்டு தந்தை நிறைவேற்றி வைப்பார்  என்ற நம்பிக்கையோடு அவ்விடத்தை விட்டுச் சென்றனர்.
பிள்ளைகள் அவர்களது தேவைகளை இலகுவாக சொல்லி விட்டார்கள். ஆனால் அத்தேவைகளை நிறைவேற்ற எப்படியெல்லாம் சிரமப் பட வேண்டும் என்பதை அத்தனை பொறுப்புக்களையும் தனியாளாக சுமக்கும் அஸாமுக்குத்தான் தெரியும்.

“பாவம் மகளுங்க…ஒங்கட பழைய ஹபாயா வைத்தானே இன்னமும் கிளாஸுக்கு போட்டுட்டு போறாங்க. என்னால அதக் கூட நிறைவேற்ற முடியல்லையே! அவசரமாக புடவை வாங்கி மூன்று ஹபாயாகள் தச்சக் குடுக்கனும்” என்று அஸாம் மனைவியிடம் கூறவும் ஹாஜராவின் முகம் பிரகாசமாயின.

“நான் ஏன் சொல்றன்டா இளைய மக எப்ப வானாலும் பெரியமனுஷி ஆகலாம் . அவ நல்லா வளர்ந்துட்ட அவக்கும் சேர்த்துதான் தைக்கோனும் “என்ற போது பிரகாசமான முகம் அதே வேகத்தில் வாட்டம் கண்டன.

தனக்கும் சேர்த்தே ஹபாயா தைக்கப் போகிறார் என்றுதான் அவள் நினைத்து விட்டாள்.

“என்னங்க நீங்க சின்னமவளுக்கு பிறகு தைக்கலாம்தானே! எனக்கும் தச்சு எத்தனை 
வருஷம் ஆயிட்டது. வெள்ளம் வரும் முன்னே அணைகட்டப் பாக்கிய நீங்க. அவ சின்னப் புள்ளை அவக்கு இப்ப எதற்கு?விட்டா உங்க மகள்களுக்கு கல்யாணத்துக்கு தேவையான எல்லாத்தையும் ரெடி பண்ணிடுவீங்க போலிருக்கே!” என்றாள் சட்டென்று.

“நல்லந்தானே. முடிஞ்சா அதையும் செய்வன்.பிறகு விலைவாசி கூடினா இன்னம் கஸ்டமாயிடும்.” என்று தமாஷாக பேசினார் அஸாம்.

‘இவர் தமாஷாக பேசிய மாதிரியல்ல அப்படி செய்தாலும் செய்வார். பிள்ளைகளுக்காக எவ்வளவும் கஷ்டப்படுவாரே அவர் ‘ என்று மனதினால் நினைத்தாள் ஹாஜரா. அப்படியே சிந்தனையில் மூழ்கினாள்.

அஸாமும் சிந்தனைகளோடே அவரது கடைக்குச் சென்றார்.

‘ஹாஜராவும் பாவம்தான் கல்யாண வீடுகளுக்கு போட்ட ஹபாயாவே திரும்ப திரும்ப போடுகிறாள். அவள் புதியது தச்சியுடுத்து எத்தனை வருஷமாச்சு. அவ அப்படி என்கிட்ட வாய்திறந்து என்னதான் கேட்டிருக்கா! அப்படி கேட்டாலும் அவ கேட்கும்
சின்ன தேவைகளைக் கூட என்னால நிறைவேற்றி வைக்க முடிவதில்லையே!’ என்று மனதினால் கவலைப்பட்டார் அஸாம். மனைவிக்காக கவலைப்பட்டாலும் பிள்ளைகளுடைய தேவையென்று வரும் போது எப்படியோ பூர்த்தி செய்ய முடிகின்றது அஸாமால்.

அவர் மனைவி எல்லாவற்றையும் புரிந்து நடப்பாள் என்கிற நம்பிக்கை போலும் அவருக்கு.

ஹாஜராவும் அப்படி ஒன்றும் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு பொறுத்துப் போகும் பெண்ணல்ல! தனக்காக விட்டுக் கொடுக்காமல் வாதம் புரியும் படிக்காத லோயர் எனலாம்.

சிலபோது விட்டுக் கொடுத்தாலும் அவரவர் உரிமைகள் பேணப் படவேண்டும், உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பாள் ஹாஜரா.

தான் எதிர் பார்க்கும் தேவைகள் கிடைக்காத பட்சத்தில் முடியுமானவரை போராடி கடைசியில் தோற்றுப் போனால் மனம் உடைந்து விடுவாள். எதுவும் புரியாதவர்களோடு போராடினால் கடைசியில் இதுதான் நடக்கும் என்பது அவளுக்கும் தெரியாமலில்லை. இருந்தாலும் அவளது இரத்தத்தில் ஊறிப்போன குணத்தை மாற்ற முடியுமா? இதனால் அவ்வப்போது இருவருக்கிடையிலும் மோதல்கள் வந்து போயின.

நாளுக்கு நாள் செலவுகள் அழையா விருந்தாளியாய் வந்து கொண்டே இருந்தன.
அஸாம் கடினமாய் உழைப்பதிலையே கவனத்தை செலுத்தினான்.அவரது கடின உழைப்பால் உடல் சற்று இளைத்திருந்தார்.

திருமணத்துக்கு முன்னரே வெளிநாட்டில் வேலைபார்த்து சொந்தமாய் வீடு கட்டினார். பின்னர் அவரது வாப்பாவின் உறவுக்காரப் பெண்ணான ஹாஜராவை மணந்தார். சிறிய கூலிக்கடையொன்றை எடுத்து செருப்பு தைக்கும் வியாபாரத்தை ஆரம்பித்து நம்பிக்கையோடு வாழ்க்கையைத் துவங்கினார். ஆறு வருடங்களுக்குள் நான்கு குழந்தைச் செல்வங்கள் வீட்டை நிரப்பி கண்களுக்கு குளிர்ச்சியைத் தந்தது அவர்களுக்கு. மூன்று மகள்களும் ஒரு மகனும் அவசரமாக வளர்ந்து பெரியவர்களானார்கள்.

வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களுக்கு முகம் கொடுத்தாலும் வறுமையின் கோட்டினைக் கூட மிதிக்க விடாமல் தனது பிள்ளைகளை வளர்த்தார் அஸாம். தானாகக் கிடைக்கும் உதவிகளை ஏற்பார் ஒழிய யாரிடமும் இதுவரை காலமும் கையேந்தினதில்லை.

பிள்ளைகள் வளர வளர தேவைகளும் கூடவே செய்தது. மூத்த மகள் ருகைய்யா கல்விப் பொதுத்தர சாதாரண தரப் பரீட்சை எழுதி முடித்துவிட்டு பரீட்சை முடிவுகளுக்காய் காத்திருந்தாள். அவளது எதிர்பார்ப்பு டாக்டராக வர வேண்டும் என்பது.

எதிர்பார்ப்பு மட்டும் இருந்தால் போதுமா? அதற்காக எவ்வளவு முயற்சிக்க வேண்டும். பணத்தை செலவழிக்க தயாராக இருக்க வேண்டும். சும்மாவா! இலக்கை நோக்கி பயணிக்க விரும்பும் மகளுக்காக தன் உழைப்பின் ஒரு பகுதியை வேறுபடுத்தி சேமிப்பில் வைக்க வேண்டும். அது மட்டுமா! இன்னும் இரண்டு வாரங்களில் ஏ எல் படிப்புக்கான டியூசன் கிளாஸ்கள் ஆரம்பிக்கவுள்ளன. அதற்கு தேவையான அட்வான்ஸ் பணம் எட்டாயிரம் கட்டணும். அது  போக மாதாமாதம் ஆராயிரத்து ஐந்நூறு வேறு , மகளின் முக்கிய தேவைகளுக்கு கையில் சேமிப்பாக கொடுக்கனும். அடுத்து
மகன் அர்ஷத் பதினொராம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அவனும் ஓ எல் பரீட்சையை எழுதுவதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருந்தன. அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக  அவனையும் முக்கியமான நாலைந்து  பாடங்களுக்கு டியூசன் கிளாஸ்  சேர்த்து விட்டிருந்தார்.அதற்கு வேறு மூவாயிரம் ஒதுக்க வேண்டி இருந்தது.

மூன்றாவது மகள் ரம்லா  ஒன்பதாம் வகுப்பும், இளைய மகள் ஸாரா ஏழாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கணிதப் பாடத்துக்கு மட்டும் கிளாஸ் போனார்கள். அவர்கள் இருவரினதும் டியூசன் பீஸ் ஆயிரத்து அறுநூறு, பாடசாலைக்கான அவ்வப்போது உள்ள செலவுகள், பிள்ளைகளுக்கான நாளாந்த போக்கட் மணி, தண்ணி பில், கரண்ட் பில், வீட்டு வரிப் பணம், மருந்துச் செலவுகள், மூன்று வேளை சாப்பாட்டுக்கான செலவுகள் இன்னும் சில சின்னச் சின்ன செலவுகள் என்று வாழ்க்கை பட்ஜெட் கூடிக் கொண்டே போனாலும் அஸாம் தளர்ந்து போகாமல்
நம்பிக்கையோடு உழைத்துக் கொண்டிருந்தார்.

தான் படும் கஷ்டங்களை பிள்ளைகள் படாமலிருக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில்
இருந்தார். பிள்ளைகள் நல்ல நிலையில் உயர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காக
படைத்த ரப்பிடம் பிரார்த்திப்பார் ஐவேளைத் தொழுகையிலும். அத்தோடு நின்று விடாமல் பிள்ளைகளுக்கு அடிக்கடி புத்திமதிகளை கூறிவந்தார்.

குடும்ப வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்து பதினெட்டு வருடகாலத்தை எட்டிப் பிடிக்கும் நிலையில் இருந்த இவர்களது வாழ்வில் எந்த விதமான முன்னேற்றமும், மாறுதலும் காணப்படா விடினும் வறுமை நிலைக்கு தள்ளப்படாமல்  எல்லாவற்றையும் சமாளித்து மரியாதையோடு வாழ்ந்ததே பெரிய விஷயம்தான்.

இத்தனைக்கும் ஹாஜராவால் அவளது கணவனின் தொழிலுக்கு பெரிதாக உதவ முடியாவிட்டாலும் வீட்டுக்காக, கணவன், குழந்தைகளுக்காக தனதுநேரகாலத்தை, தனது உடல் சக்தியை செலவழித்துள்ளால் இத்தனை வருடங்களும். அஸாம் செலவுகளை சிறப்பாக கொண்டு செல்ல முக்கிய காரணியாக இருப்பதே அவனது மனைவி ஹாஜராதான்.

திருமணம் முடித்த காலம் தொட்டு இன்று வரை வீணான செலவுகளை முற்றாகவே தவிர்த்து சிக்கனமான வாழ்க்கையை முன்னெடுத்து வாழ்ந்ததே அஸாமின் வாழ்வில் அவள் செய்த முக்கிய பங்களிப்பு.

பொதுவாக ஆண்களைவிட பெண்களுக்கு அளவுக்கு அதிகமான ஆசைகளும், தேவைகளும் இருக்கும். அவர்கள் அதிகமாக எதிர்பார்ப்புக்கள் உள்ளவர்கள். அப்படியான பெண்களில் ஹாஜராவும் ஒருத்திதானே!

பவுடர், ஷாம்பு,பேfஸ் வாஷ், மேக்கப் சம்மந்தப்பட்ட பொருட்கள், ஆடைகள், நகைகள், இவைகளோடு விரும்பிய இடங்களுக்கு பயணம் சுற்றுதல் பெண்களின் இயல்பான குணங்கள்தானே. இவைகளில் ஒன்றிறன்றிலாவது அவளுக்கு ஆசைகள் இருக்கத்தானே செய்யும். ஆனாலும் அவள் தனக்குள்ள ஆசைகள் நிறைவேறாத பட்சத்திலும் பொறுமையாக அமைதிகாத்தாள்.செலவுகளைக் குறைக்க தன் ஆசைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

ஹாஜரா பெருநாட்கள் வரும் போது கூட கணவன் எதை வாங்கிக் கொடுக்கிறாறோ அதையே திருப்தியோடு அணிந்தாள்.

சுற்றுலாப் பயணங்கள் அவளுக்கு பகல் கனவாகவே இருந்தது. தனக்கான தேவைகள் அத்தனையும் தியாகம் செய்து கணவனின் உழைப்புக்கு ஒத்துழைத்தாள்.

இவை அனைத்தும் அஸாம் அறிந்தாலும் அவரால் என்னதான் செய்ய முடியும் !

அவர் கவனம் முழுக்க உழைப்பைப் பற்றியே இருந்தது. அவரும் என்ன செய்ய! குடும்ப சுமைகள் முழுக்க அவர்தானே சுமக்கிறார். அதனால் அவர் கவனத்தில் இவை ஒன்றும் பெரிதாகப் படவில்லை. இதைப் புரிந்ததால்தான் ஹாஜராவும் அமைதியாக இருந்தாள்.

“உம்மா நாளைக்கு என்னை அவசரமாக எழுப்பிவிடுங்கோ. நான்  படிக்கனும்” என்றவாறு மகள் ரம்லா அவ்விடத்துக்கு வரவும் ஹாஜரா நீண்ட சிந்தனையில் இருந்து விடுபட்டாள்.

நேரம் இரவு ஒன்பதைக் காட்டியது. கணவன் அஸாம் இன்னும் வரவில்லையே என நினைக்கும் போதே”அஸ்ஸலாமு அலைக்கும்.” என்றவாறு  உள்ளே நுழைந்த அஸாம் “மக ஸாரா தண்ணி ஒரு கோப்பை கொண்டுவாங்கோ” என்றார். தண்ணீரை வாப்பாவின் கையில் கொடுத்தவளின் கவனம் முழுக்க அவர் கொண்டுவந்த பையில் இருந்தது. வழமையாக பிள்ளைகளுக்கு அவர் ஏதாவது தீண்பண்டங்கள் கொண்டு வருவார். இன்றும் அவர் கொண்டுவந்த இனிப்பு முறுக்கை சின்ன மகளின் கையில் கொடுத்தார். “உங்களுக்கு என்ன ஊற்றனும்? தேநீரா கோபியா?” என்று கேட்டவாறு பக்கத்தில் வந்தாள் ஹாஜரா. “இன்டைக்கு நல்லா லேட்டாச்சு. பசிவேற வாட்டிஎடுக்குது நான் மேல் கழுவிட்டு வந்து தின்னுறன். கறிகளைச் சூடாக்கி வைங்க” என்றார்.

மனைவி அவ்விடத்தை விட்டு செல்ல முட்படுகையில் “ஹாஜரா “என்றழைத்து  கையில் அவர் கொண்டு வந்த பேக்கை நீட்டினார். அதைத் திறந்து பார்த்தாள் அவள். அதில் கருப்பு நிற ஹபாயாத் துணி இருந்தது. “சொன்ன மாதிரி மகள்களுக்கு ஹபாயா தைக்க கொண்டு வந்திருக்கீங்க” என்றாள் ஹாஜரா. “இல்ல உங்களுக்கும் சேர்த்துத்தான் கொண்டு வந்த” என்று அஸாம் சொன்ன போது அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.

“ஹாஜரா இந்தாங்க பிள்ளைங்க இன்று கேட்ட அவங்கட கிளாஸ் பீஸ் முழுக்க இதில் இருக்கு. பாத்து கொடுங்க ” என்று கூறி பணத்தை அவள் கையில் வைத்துவிட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றார் அஸாம்.

அன்று நாள் முழுக்க அவர் பட்ட கஷ்டம் அவருக்கு உடல் வலியைத் தந்தாலும்
குடும்பத்திற்காய் உழைப்பது அவருக்கு இன்பத்தையே தந்தது.

அவர்கள் முகங்களில் காணும் மகிழ்ச்சி அவரின் மகிழ்ச்சியாய் உணர்ந்தார். வாழ்க்கையில் சுமைகள் இருந்தால்தான் சுவைகள் இருக்கும் என்பது அஸாமுக்கு நன்றாகப் புரிந்தது. சுமைகளை அவர் சுமந்தாலும் அதை இறக்கி வைக்க அல்லாஹ் ஒருவனே தனக்கு துணை நிற்பான் என்று முழுமையாக நம்பிக்கை வைத்தார் அஸாம்.

(யாவும் கற்பனை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *