சிவகாமியின் செல்வன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: சாவி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 10, 2025
பார்வையிட்டோர்: 39 
 
 

(1990ல் வெளியான வாழ்க்கை வரலாறு, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

அத்தியாயம் – 13

காமராஜ் முதலமைச்சராகப் பதவி ஏற்றதால் அவருடைய வாழ்க்கைத் தரத்தில் பெரிய மாறுதல்கள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. அதே ‘முக்கால் கை’க் கதர்ச் சட்டைதான்; அதே பழைய வீடுதான்; அதே எளிய வாழ்க்கைதான். கைக்கு ஒரு ‘ரிஸ்ட் வாட்ச்’ வாங்கிக் கொண்டாரா? கிடையாது. சட்டைப் பை பெரியதாக இருக்கிறதே, அதில் ஒரு மணிபர்ஸ் வைத்துக் கொண்டாரா? கிடையாது. போகட்டும்; ஒரு பௌண்டன் பேனா? மூச்! 

“இப்படிக் கைக்கடிகாரங்கூட இல்லாமல் இருக்கிறீர்களே, எப்போதாவது நேரம் தெரிய வேண்டுமானால் என்ன செய்வீர்கள்?” என்று அவரிடம் கேட்டேன். 

“கடிகாரம் எதுக்கு? யாரைக் கேட்டாலும் நேரம் சொல்றாங்க!” என்று பதில் கூறினார் காமராஜ். 

“முதல் மந்திரியாக இருந்தீர்களே, சம்பளம் வாங்கினீர்களே, அந்தப் பணத்தை என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன். 

“காங்கிரஸ் வேலையாக டில்லிக்குப் போய் வந்தால் நானே தான் பிளேன் டிக்கட் வாங்கிக் கொள்வேன். தாயாருக்கு மாதம் நூறு, நூற்றைம்பது ரூபாய் செலவுக்குக் கொடுப்பேன். அப்புறம் ஏது என்னிடம் பணம்?” 

‘காமராஜ் திட்ட’த்தைச் செயலில் நிறைவேற்றிய போது அவர் முதல் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் அல்லவா? அப்போது ஒரு முறை அவருடன் டில்லிக்குப் போயிருந்தேன். பிரயாணத்தின் போது அவரைக் கேட்டேன். 

“இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன? எதற்காகப் பதவியிலிருந்து விலகினீர்கள்?”

“காங்கிரஸ்காரர்கள் பலருக்குப் பதவி மேலே ஆசை வந்துட்டுது. உயர்ந்த பதவியில் இருக்கிறவர்களைப் பார்த்துத் தாமும் ஒரு மந்திரியா வரணும்னு அவங்க நினைக்கிறாங்க. பதவிங்கிறது மக்களுக்குச் சேவை செய்யறதுக்குத் தான் என்கிறதை மறந்துடறாங்க. இதனாலே காங்கிரஸ் கட்சி வேலை சரியா நடக்காமல் போயிடுது. கட்சிக்கும், மக்களுக்கும் சரியான தொடர்பு இல்லாமல் போயிடுது. நேருஜியிடம் இதை பற்றிப் பேசறப்போ, சில பேர் பதவியிலிருந்து விலகிக் கட்சி வேலை செய்யணும்னு சொன்னேன். அவருக்கு என் திட்டம் ரொம்பப் பிடிச்சிருந்தது. எதுக்கும் ஒரு ‘பெர்ஸ்பெக்டிவ்’ வேணுமில்லையா? நாமே பதவியிலே உட்கார்ந்துகிட்டிருந்தா நாம் செய்யறது சரியா, தப்பாங்கிறது நமக்குச் சரியாப் புரியாது. அதனாலே பதவியிலிருந்து விலகிப் போய்ப் பார்த்தால் தான் சரியான ‘பெர்ஸ்பெக்டிவ்’வா இருக்கும்னு தோணிச்சு. கோபுரத்தின் உள்ளே இருந்து அதை அண்ணாந்து பார்க்கிறதை விட, வெளியே போய்த் தூர நின்னு பார்த்தால் ‘கரெக்ட் பெர்ஸ் பெக்டிவ்’ கிடைக்கும் இல்லையா? அதுக்காகத்தான் ராஜிநாமா செய்தேன். 

என் திட்டத்தைப் பற்றி 1963 ஆகஸ்ட்லே காங்கிரஸ் காரியக் கமிட்டியிலே நேருஜி எடுத்துச் சொல்லி அங்கீகாரம் வாங்கினார். அதுக்குத்தான் ‘காமராஜ் திட்டம்னு’ பேர் வந்தது. அப்புறம் ரெண்டு மாசத்துக்கெல்லாம் டில்லி மந்திரி சபையிலேருந்து ஆறு காபினெட் மந்திரிகளும், ராஜ்ய மந்திரி சபைகளிலிருந்து ஆறு முதல் மந்திரிகளும் ஆக மொத்தம் பன்னிரண்டு பேர் ராஜிநாமா செய்தோம்.”

“பதவியிலிருக்கிறப்போ உங்களைப் பல பேர் வந்து சலுகை கேட்டிருப்பாங்களே, அவங்களுக்கெல்லாம் ஏதாவது செய்தீங்களா?” 

“எங்கிட்டே எல்லாரும் வருவாங்க. பேசுவாங்க. சலுகை கேட்பாங்க. நானும் செய்வேன். ஊருக்குப் பொதுவான, மக்களுக்குப் பொதுவான சலுகையாய் இருந்தால் செய்வேன். சொந்த முறையில் சலுகை கேட்டால் எப்படிச் செய்ய முடியும்? எனக்கு எவ்வளவு வேண்டியவங்களா யிருந்தாலும் நியாயமில்லாத முறையில் கேட்டால், ‘அது முறையில்லே, முடியாது’ன்னுதான் பதில் சொல்லி அனுப்புவேன். அப்புறமும் அவங்க தயங்கித் தயங்கி நேரத்தை வீண் பண்ணாங்கன்னா மணியடிச்சு அடுத்தவங்களை உள்ளே வரச் சொல்லுவேன்… வேறே என்ன செய்யறது?” 

‘காமராஜ் நம்மிடம் இவ்வளவு அன்பாகப் பேசுகிறாரே, இவ்வளவு நட்போடு பழகுகிறாரே, அவரிடம், சமயம் பார்த்து சொந்தக் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம்’ என்று யாராவது எண்ணினால் நிச்சயம் அவர்கள் ஏமாந்துதான் போவார்கள். காமராஜை யாரும், எந்தச் சமயத்திலும் ஏமாற்றிவிடமுடியாது. 

அவருக்கு நாடு, சுதந்திரம், மக்களுடைய நல்வாழ்வு இவற்றில்தான் எப்போதும் அக்கறை. முதல் மந்திரியாக இருந் தாலும், தலைவராக இருந்தாலும், தொண்டராக இருந்தாலும் சிந்தனையும், செயலும் மக்களுக்குத் தொண்டு செய்வதில்தான். முதலமைச்சராகப் பதவி வகித்த போது எதையும் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்து, பிரச்னைகளின் தன்மைகளை நுட்பமாகப் புரிந்து கொண்ட பிறகுதான் அவற்றை நிறைவேற்றுவதற்கு அனுமதி வழங்குவார். மேலெழுந்த வாரியாகப் பார்த்து முடிவு செய்வதென்பதோ, அவசரப்பட்டு முடிவு எடுப்பதோ அவர் அகராதியில் கிடையாது. 

ஒரு சமயம் பஸ் முதலாளிகள் சிலர் கும்பலாக வந்து “பஸ் விடும் தொழிலில் அதிக லாபம் இல்லை, நஷ்டந்தான் அதிகம். வரியைக் குறைக்க வேண்டும்” என்று சொன்ன போது, “ரொம்ப சரி. நஷ்டம் என்று சொல்கிறீர்கள்; ஒப்புக் கொள்கிறேன். அப்படியானால் எதற்காக மேலும் மேலும் ‘ரூட்’ கேட்பதில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள்? நஷ்டத்தில் நடக்கும் தொழிலுக்கு இவ்வளவு போட்டி எதற்கு?” என்று பதில் கேள்வி போட்டுப் பிரச்னையின் மென்னியைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கினார். அவ்வுளவுதான்; வந்தவர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறித் திரும்பிப் போய் விட்டார்கள். 

இன்னொரு சமயம் கோயமுத்தூரில் மருத்துவக் கல்லூரி ஒன்று திறக்க வேண்டும் என்றும், அதற்காகக் கோவையைச் சேர்ந்த சில பணக்காரர்கள் இருபது லட்சம் ரூபாய் நன்கொடை தருவதற்குத் தயாராயிருப்பதாகவும் ஒரு குழுவினர் வந்து கோரிக்கை விடுத்தனர். 

“இந்தத் திட்டத்துக்கு மொத்தம் எவ்வளவு பணம் செலவாகும்?” என்று காமராஜ் கேட்டார். 

“ஒரு கோடி ரூபாய் ஆகும். மிச்சப் பணத்தைச் சென்னைச் சர்க்கார் கொடுக்க வேண்டும். கல்லூரி நிர்வாகத்தை இருபது லட்சம் நன்கொடை கொடுப்பவர்கள் ஏற்று நடத்துவார்கள். சுகாதார மந்திரிகூட இந்தத் திட்டத்தை அங்கீகரித்து விட்டார்” என்றார்கள் வந்தவர்கள். 

“ரொம்ப சரி, சர்க்காரிடமிருந்து எண்பது லட்சம் ரூபாய் எதிர்பார்க்கிறீர்கள், இல்லையா?” என்று கேட்டார் காமராஜ். 

“ஆமாம்.” 

“எண்பது லட்சம் கொடுக்கக்கூடிய சர்க்காரால் இன்னும் ஓர் இருபது லட்சமும் சேர்த்து ஒரு கோடியாகவே கொடுக்க முடியாதா?” 

“முடியும்.” 

“அப்படின்னா ஒரு கோடியைச் சர்க்காரே போட்டுச் சர்க்கார் கல்லூரியாகவே அதை நடத்திடலாமே! நீங்க எதுக்கு நிர்வாகம் செய்யணும்? இது என்ன நியாயம்? உங்க வீட்டுக்கு வர விருந்தாளி உங்க வீட்டுச் செலவிலே பத்திலே ஒரு பங்கு செலவழிக்கிறதா வெச்சுக்குவோம். அவன் உங்க பணத்தை யெல்லாம் எடுத்துக்கிட்டு வீட்டு நிர்வாகத்தைத் தானே நடத்தறதாகச் சொன்னால் அதுக்கு நீங்க சம்மதிப்பீங்களா?” என்று கேட்டார். 

அவ்வளவுதான்; அப்புறம் அந்தத் திட்டத்தைப் பற்றி யாருமே மூச்சு விடவில்லை. 

காமராஜ் முதன் முதல் இந்த ராஜ்யத்தின் முதல் அமைச்சராகப் பதவி ஏற்ற போது அவர் சென்னைச் சட்டசபையில் அங்கத்தினராக இல்லை. டில்லி பாராளுமன்ற மெம்பராகத் தான் இருந்தார். மந்திரியாக வருகிறவர்கள், சட்டசபை அங்கத்தினராக இல்லையெனில், அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் தேர்தலில் நின்று அசெம்பிளி அங்கத் தினராக வரவேண்டும் என்பது விதி. மேல்சபை மெம்பராக வருவது சுலபம். ஆனால் அது ஜனநாயக முறைக்கு அவ்வளவு பொருத்தம் ஆகாது. அசெம்பிளித் தேர்தலில்தான் மக்களின் நேரடியான கருத்தை அறிந்து கொள்ள முடியும். ஜனநாயகத்தில் அசைக்க முடியாத பற்றுதலும், நம்பிக்கையும் கொண்ட காமராஜ் அசெம்பிளி தேர்தலில் நின்று வெற்றி பெறவே விரும்பினார். அப்படியானால் எந்தத் தொகுதியில் நிற்பது? விருது நகர் அவர் சொந்த ஊர். அங்கே நின்று வெற்றி பெறுவது தான் வழக்கம். இம்முறை அம்மாதிரி நிற்பதென்றால் ஏற்கெனவே அங்கு எம்.எல்.ஏ ஆக உள்ள ஒருவரை விலகிக் கொள்ளச் செய்ய வேண்டும். அதைவிட வேறு எங்காவது காலியாகும் ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெறுவதையே காமராஜ் விரும்பினார். குடியாத்தம் தொகுதியில் ஒரு ஸ்தானம் காலியா யிருந்ததால் அங்கே வந்து நிற்கும்படி அந்தத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் காமராஜைக் கேட்டுக் கொண்டார்கள். காமராஜ் ‘சரி’ என்றார். வேறொரு தொகுதியில் போய் நிற்பதற்கு ரொம்ப தைரியம் வேண்டும். காமராஜ் அதற்குத் துணிந்தார். 

குடியாத்தம் தேர்தலின் போது தமிழ் நாட்டின் கவனம் முழுதும் அங்கேதான் இருந்தது. தமிழ் நாட்டின் காங்கிரஸ் பிரசாரகர்கள் எல்லாரும் குடியாத்தத்தில் போய் முகாம் போட்டார்கள். திராவிடக் கட்சியும், முஸ்லிம் லீக்கும் காமராஜுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தன. முடிவு? காமராஜே வெற்றி பெற்றார். 

இந்த ராஜ்யத்தின் முதல் அமைச்சராகப் பதவி வகித்த காமராஜ் மக்களின் சேவைக்காகவே அந்தப் பதவியை வகித்தார். சொந்தத்தில் ஒரு வீடு கட்டிக் கொண்டாரா? கார் வாங்கிக் கொண்டாரா? கைக்கடிகாரம் உண்டா? பேனா உண்டா? பாங்கில் பணம் போட்டு வைத்தாரா? முதலமைச்சராகும் முன்பு எப்படி எளிய வாழ்க்கை நடத்தி வந்தாரோ அப்படியே தான் அணுவளவும் மாறாமல் இன்றளவும் வாழ்ந்து வருகிறார். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்காகப் பாடுபட்டு வரும் காமராஜ் தம்முடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று எப்போதுமே எண்ணியதில்லை. 

அத்தியாயம் – 14

வரலாறு கண்டிராத வகையில், நேருஜியே கண்டு வியக்கும் வண்ணம் 1955- இல் நடைபெற்றது ஆவடி காங்கிரஸ். இந்த மாபெரும் மாநாட்டின் வெற்றிக்கு மூலகாரண புருஷராயிருந்தவர் திரு.காமராஜ். 

இதற்கு முன்னால் டாக்டர் அன்ஸாரி தலைமையில் 1927-ல் சென்னை எழும்பூர் ஸ்பர்டாங்க் மைதானத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கும் ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருந்தது. 

அந்தக் காலத்தில் எழும்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கு மூலக்காரண புருஷராக விளங்கியவர் திரு. எஸ். சீனிவாசய்யங்கார். அவருடைய மகளே தற்போது ஸ்ரீநிவாச காந்தி நிலையத்தின் தலைவியாக உள்ள திருமதி அம்புஜம்மாள். 

ஆவடி காங்கிரஸ் வரவேற்புக் கமிட்டித் தலைவராக இருக்கும் கௌரவத்தைத் திருமதி அம்புஜம்மாளுக்கு அளித்த தன் மூலம் திரு. எஸ். சீனிவாசய்யங்காரை நினைவு கூர்ந்து பெருமைப்படுத்தினார் காமராஜ். அதைப் போலவே தம் முடைய அரசியல் குருவான திரு.எஸ்.சத்தியமூர்த்தியின் ஞாபகார்த்தமாக ஆவடி காங்கிரஸ் நடைபெற்ற இடத்துக்கு ‘சத்தியமூர்த்தி நகர்” என்று பெயர் சூட்டினார். 

ஆவடி காங்கிரஸில்தான் புகழ் பெற்ற ‘சோஷலிஸப் பாணி சமுதாயம்’ என்ற கவர்ச்சியான சொற்றொடர் பிறந்தது. 

அந்த மாநாட்டின் கோலாகலமான ஏற்பாடுகளைக் கண்டு வியந்த நேருஜி, “இந்த மாநாட்டின் இத்தனை சிறப்புக்களுக்கும் காரணம், முதலமைச்சர் காமராஜ் நின்ற இடத்தில் ஒரு நிமிஷங் கூட நிற்காமல் இங்குமங்கும் ஓடியாடி, எல்லாக் காரியங்களையும் தாமே கவனித்ததுதான்!” என்று பாராட்டிப் பேசியதை இதற்குள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். 

காமராஜை 1936ஆம் ஆண்டிலிருந்தே நேருஜி அறிவார். அந்த ஆண்டு நேருஜி காங்கிரஸ் தலைவராக சென்னை மாகாணத்தில் சுற்றுப் பயணம் செய்த போது திரு.சத்தியமூர்த்தியும் காமராஜும் அவருடன் பயணம் செய்தார்கள். 1949-லிருந்து காங்கிரஸ் காரியக் கமிட்டி அங்கத்தினர் என்ற முறையில் நேருஜியை அடிக்கடி சந்தித்துப் பேசும் வாய்ப்பு காமராஜு க்குக் கிட்டியது. நாளடைவில் நேருஜியின் மதிப்பில் காமராஜ் உயர்ந்து கொண்டே போனார். ஆவடி காங்கிரஸின் போது காமராஜின் உண்மையான மதிப்பு, சக்தி, ஆற்றல், செல்வாக்கு எல்லாமே எவ்வளவு பெரியவை என்பதை நேருஜி நன்கு புரிந்து கொண்டார். 

ஆவடி காங்கிரஸைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு நேருஜி தம்மைப் பணித்தபோது காமராஜ் தமிழ் நாட்டின் காங்கிரஸ் தலைவராக மட்டுமே இருந்தார். ஆவடியில் மாநாடு நடைபெறுவதற்குள் அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் ஆகிவிட்டார். 

நேருஜியின் உள்ளத்தில் வளர்பிறை போல் வளர்ந்து கொண்டிருந்த காமராஜின் பெருமை, திறமை ஆகியவை யெல்லாம் அவர் முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து விட்டுத் தம்மைப் போன்ற மூத்த தலைவர்க ளெல்லாம் கட்சி வேலையில் ஈடுபட வேண்டும் என்ற திட்டத்தை அறிவித்த போது ‘எவரெஸ்ட்’ அளவுக்கு உயர்ந்து விட்டது. அதுவரை தமிழ்நாட்டுத் தலைவராக மட்டுமே இருந்து வந்த சிவகாமியின் செல்வர் ‘காமராஜ் திட்ட’த்துக்குப் பின்னர் அகில இந்தியத் தலைவராக மாறும் அளவுக்கு உயர்ந்து விட்டார். 

“நேருவுக்குப் பிறகு யார்?” என்ற கேள்வி இந்தச் சமயத்தில்தான் எழுந்தது. காங்கிரஸ் தலைவர்களுக்குள் இந்தக் கேள்வி எழுந்த போதெல்லாம், “இதுபற்றிக் காமராஜ் என்ன நினைக்கிறார்?” என்ற கேள்வியும் அத்துடன் எழுந்தது. சஞ்சீவ ரெட்டி, நிஜலிங்கப்பா, அதுல்யகோஷ், காமராஜ் ஆக நால்வரும் திருப்பதியில் கூடிச் சாமி கும்பிட்ட பிறகு அந்தப் புண்ணிய ஸ்தலத்திலேயே நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இந்தத் திருப்பதி சந்திப்புத்தான் இந்திய நாட்டின் அரசியலில் ஒரு பெரிய திருப்பத்தையே ஏற்படுத்தி விட்டது. இதுவே பின்னாப் பத்திரிகைக்காரர்களால் ‘ஸிண்டிகேட் மீட்டிங்’ என்று வருணிக்கப்பட்டது. இந்த ஸிண்டிகேட் தான் நேருவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரியைத் தலைவராக்கும் பணியில் முக்கிய பங்கு வகித்தது. 

இந்த நால்வருக்குள் திருப்பதியில் எழுந்த இரண்டு முக்கிய கேள்விகள் என்ன தெரியுமா? 

  1. நேருவுக்குப் பிறகு யார்? 
  2. அடுத்த காங்கிரஸ் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது?

திரு.சஞ்சீவய்யா அப்போது காங்கிரஸ் தலைவராயிருந்தார். அவருக்குப் பிறகு, வரப்போகும் தலைவர் தேர்தலில் போட்டி எதுவும் இருக்கக்கூடாது. அதற்கு ஏற்ற தலைவர் காமராஜா? அதுல்யகோஷா? 

இது இரண்டாவது கேள்வியைத் தொடர்ந்து எழுந்த கேள்வி. 

புது டில்லியில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இதற்கு விடை கிடைத்தது. “காமராஜ்தான் அடுத்த காங்கிரஸ் தலைவராக வேண்டும்” என்று நேருஜி தம்முடைய விருப்பத்தை வெளியிட்டார். அவருடைய விருப்பப்படி காமராஜையே அடுத்த தலைவராகத் தேர்ந் தெடுப்பதென்று முடிவாயிற்று. இது காமராஜுக்குத் தெரியாது. 

இது சம்பந்தமான பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தபோது நான் டில்லிக்குப் போயிருந்தேன். காமராஜுடன் சில நாட்கள் ‘மெட்ராஸ் ஹவு’ஸில் தங்கியிருந்தேன். அச்சமயம் அகில இந்தியக் காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு யார் வரப் போகிறார்கள் என்பது பற்றி எல்லாப் பத்திரிகைகளிலும் ஊகங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. நாட்டு மக்களும் யார் தலைவர் என்பதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

ஒருநாள் காமராஜ் அன்றைய காலைப் பத்திரிகைகளில் வெளியான செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தார். 

அவரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்து, “காங்கிரசின் அடுத்த தலைவராகச் சாஸ்திரியைப் போடலாமே?” என்றேன் நான். 

“போடலாம். ஆனால் அவர் ஒப்புக் கொள்ள மாட்டேங்கிறாரே, என்ன செய்ய? மறுபடியும் அவரைப் பார்த்துப் பேசி ஒப்புக் கொள்ளச் செய்யணும்” என்றார் காமராஜ். 

காலையில் டிபன் சாப்பிடும்போது இந்தப் பேச்சு நடந்தது. பகல் உணவுக்குக் காமராஜ் நேருஜியின் இல்லத்திலிருந்து மெட்ராஸ் ஹவுஸிற்குத் திரும்ப வந்தார். 

அதற்குள் காமராஜ்தான் அடுத்த தலைவர் என்று தீர்மானமாகி விட்டது. 

“என்ன இப்படி…” என்று நான் இழுத்தேன். 

“எனக்கு ஒன்றும் தெரியாது. சஞ்சீவ ரெட்டியும் அதுல்ய கோஷும் சேர்ந்து காதைக் கடிச்சுக்கிட்டிருந்தாங்க. திடீர்னு நேரு என் பேரைச் சொன்னார். எல்லாரும் கையைத் தூக்கிட்டாங்க. நான் என்ன செய்வேன்?” என்றார் காமராஜ், 

“இதைப் பற்றி நேருஜி உங்களிடம் ஒண்ணுமே சொல்ல வில்லையா?”

“அஞ்சாறு மாசத்துக்கு முன்னாலே அவர் என்னை ஹைதராபாத்திலே சந்திச்சப்போ அதைப் பற்றி பிரஸ்தாபிச்சார். நான், ‘வேண்டாம், அவ்வளவு பெரிய பாரத்தை என் தலைமீது வைக்காதீங்க’ன்னு சொன்னேன். அதோடு நான் முதலமைச்சர் பதவியை ராஜிநாமாச் செய்ததே தமிழ் நாட்டில் கட்சி வேலை செய்யணுங்கிறதுக்குத் தான்னும் சொன்னேன். அப்ப சும்மா இருந்துட்டார். அது அவர் மனசிலேயே இருந்திருக்கும் போல இருக்கு. இப்ப திடீர்னு இப்படி செஞ்சுட்டார்.” 

காமராஜே தலைமைப் பதவிக்கு ஏற்றவர் என்று நேருஜி முடிவு செய்ததற்கு என்ன காரணம்? ஒன்றா, இரண்டா, எத்தனையோ காரணங்கள்: 

  1. காமராஜ் திட்டத்துக்குப் பிறகு அவருடைய புகழ் நாட்டு மக்களிடையே இரட்டிப்பாகப் பெருகியிருந்தது. 
  2. பதவி மீது அவருக்குத் துளியும் பற்றுதல் இல்லை என்பது. 
  3. முதலமைச்சர் என்ற முறையில் சென்னை ராஜ்யத்தின் நிர்வாகத்தை ஒன்பதாண்டுக் காலம் மிகச் சிறப்பாக, துல்யமாக நடத்தி வந்தது. 
  4. காங்கிரஸ் தலைமைப் பதவிக்குப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய தகுதி அவர் ஒருவருக்கே இருந்தது. 
  5. தமக்குப் பிறகு காங்கிரஸ் ஸ்தாபனத்தை நல்ல முறை யில் நடத்திச் செல்லக் கூடிய ஆற்றல் உள்ளவர் என்று நேருஜி எண்ணியது. 

அடுத்த காங்கிரஸ் தலைவர் காமராஜ் என்று அறிவிக்கப்பட் டதும் தமிழ் மக்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடத் தொடங்கியது. 

புவனேசுவர் காங்கிரஸ் மாநாட்டில் கூடிய ஆயிரக்கணக்கான தமிழ் மக்களே அதற்குச் சான்று. 

1926-இல் கௌஹாதி காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் திரு.எஸ்.சீனிவாசய்யங்கார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பின் தமிழ் நாட்டிலிருந்து காமராஜே அந்த மாபெரும் பதவியை வகிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

புவனேசுவரில் கூடிய மாநாட்டில் காமராஜ் தம்முடைய தலைமைப் பேருரையைத் தமிழிலேயே நிகழ்த்தினார். கருத்து மிக்க அந்தச் சொற்பொழிவைத் தமிழிலேயே காமராஜ் படிக்கக் கேட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்த மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டது போல் ஆகி விட்டது அச்சமயம் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி. 

அதுதான் அந்த மாநாட்டுக்கு வந்திருந்த நேருஜியின் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அது காரணமாக அவர் மாநாட்டுப் பந்தலுக்கு வர முடியாமல் அவருடைய ஆசனம் காலியாக இருந்தது. அதைக் கண்ட லட்சோபலட்சம் மக்கள் சோகத்துடன் திரும்பிச் சென்ற காட்சி என் மனக் கண்முன் இன்னமும் அப்படியே நிழலாடிக் கொண்டிருக்கிறது. 

அத்தியாயம் – 15

காமராஜை சந்தித்துப் பேசுவதற்காக நான் டில்லியில் சில நாட்கள் தங்கியிருந்தபோது, அநேகமாகத் தினமும் அவர் வீட்டுக்குப் போய் வந்து கொண்டிருந்தேன். 

ஒரு நாள் பேச்சு வாக்கில் பழம் பெருந் தலைவர்களைப் பற்றி அவர் என்ன கருத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில், “ராமசாமி நாயக்கரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டேன். 

“சின்னப் பையனாக இருந்தபோதே நான் அவரைப் பார்த்திருக்கேன். ஆனால் அவ்வளவாகப் பழக்கம் கிடையாது. நேரடியாத் தொடர்பும் கிடையாது. விருதுநகருக்கு வருவார், பார்த்திருக்கேன். ரொம்ப ஸின்ஸியர் ஆசாமி. சரியோ தப்போ. தைரியமாகச் சொல்லுவார். செய்வார். ஐம்பத்திரண்டிலே ராஜாஜியை சப்போர்ட் பண்ணினார். அப்ப தி.மு.க. பிரிஞ்சுட்டாங்க. ‘நாய்க்கர் பரவாயில்லே, சப் போர்ட் பண்றாரு. தி.மு.க. தான் ஆதரவு கொடுப்பது கிடையாது’ என்று ராஜாஜியே என்னிடம் சொல்லியிருக்கார்.” 

“உங்களைக் கூட அவர் குடியாத்தம் தேர்தலின் போது சப்போர்ட் பண்ணினாரே! உங்க ஆட்சியை ‘அசல் தமிழன் ஆட்சி’ என்று அவர் சொன்னார், இல்லையா?”

“ஆமாம்; அவருக்கு அப்போ டி.எம்.கே. மேலே கோபம். என்னை ஆதரிச்சதுக்கு அதுவும் ஒரு காரணம்.” 

“நீங்க பதவியிலிருந்தப்போ அவர் எப்பவாவது உங்களிடம் சிபாரிசுக்கு யாரையாவது அனுப்பியிருக்காரா?” 

“கிடையாது.” 

“அவரைத் தனியாச் சந்திச்சுப் பேசியிருக்கீங்களா?” 

“ஒரு முறை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு எதுக்கோ போயிருந் தேன். அப்ப அவரும் அங்கே படுத்திருந்தார். உடல் நலம் பற்றி விசாரிச்சுட்டு வந்தேன்; அவ்வளவுதான்.” 

“எஸ்.சீனிவாசய்யங்காரைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?”

“அடாடா! எப்பேர்ப்பட்ட லீடர்!” என்று கூறிய காமராஜ் உணர்ச்சி வசப்பட்டவராய் இரண்டு கைகளையும் தூக்கிக் காட்டி. “ஆகா!” என்று சூள் கொட்டி வியப்பொலிகளை உதிர்த்து விட்டுச் சொன்னார். 

“அந்த காலத்திலே சுபாஷ் போஸ், சீனிவாசய்யங்கார், நேரு இவங்க ஆரம்பிச்ச ‘இந்தியா லீக்’ கொள்கை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நானும் அதை ஆதரிச்சேன். ஆனா எந்தக் கொள்கையும் காந்திஜியை எதிர்க்க வந்தால் அதோடு சேர எனக்கு மனம் வராது. அது என்னால் முடியவும் முடியாது…” 

“1929-இல் காங்கிரஸிலிருந்து விலகி விட்டார் சீனிவாசய் யங்கார். அவரை மறுபடியும் காங்கிரசுக்குள்ளே கொண்டு வரணும்னு அபேதவாதிகள் சிலர் முயற்சி பண்ணாங்க. நான் அதுக்கு ஒத்துழைச்சா, அய்யங்கார் மறுபடியும் காங்கிரஸ் பிரசிடெண்டா வந்துடலாம்னு சொன்னாங்க. அவரே என் கிட்டே வந்து பேசினார். 

நான் கேட்டேன், நீங்க காங்கிரசுக்குள்ளே வந்து என்ன செய்ய போறீங்கன்னு. காந்தியை எதிர்ப்பேன்னு சொன்னார். அது எனக்குப் பிடிக்கல்லே. ‘காந்தியை எதிர்க்கிறதுங்கிறது நடக்காத காரியம், அதுக்கு நான் உடன்பட மாட்டேன் சொல்லி அனுப்பிச்சுட்டேன்,” 

“நேரு – படேல் இவங்க ரெண்டு பேருக்குள்ளே அடிக்கடி தகராறு நடக்குமாமே; அது உங்களுக்குத் தெரியுமா? அதுக்கு என்ன காரணம்?” என்று காமராஜிடம் கேட்டேன். 

“ஜெலசிதான் காரணம். காந்தி இருக்கிற போதே அவங் களுக்குள்ளே இந்த ‘ட்ரபிள்’ ஆரம்பமாயிட்டுது. அப்ப வல்ல பாய், ராஜாஜி, ராஜன் பாபு, பஜாஜ், இன்னும் ஒருத்தர் ஆக அஞ்சு பேர் – அவங்களைப் பஞ்சபாண்டவங்கன்னு சொல்லு வாங்க. அஞ்சாவது ஆள் யாருன்னு ஞாபகத்துக்கு வரல்லே…” 

“கிருபளானியா?” 

“ஊஹும், வேறு யாரோ ஒருத்தர் – சட்டுனு ஞாபகத் துக்கு வரலே. அவங்க அஞ்சு பேரும் காந்திஜி பாலிஸியை அப்படியே பின்பத்தறவங்க. நேரு அப்படி இல்லை. இளை ஞர்களைத் திருப்பி ஒரு லீடர்ஷிப் ‘பீல்ட்’ பண்ணிக்கிட்டு. வந்தார். 1930-இல் அவர் காங்கிரஸ் தலைவர். முப்பத்திரண்டிலே ஜெயிலுக்குப் போனார். முப்பத்தஞ்சிலேயும் போய் வந்தார். அந்த வருஷத்தில் லக்னோ காங்கிரஸ் தலைவராக ஆனார். அவர் இரண்டாவது தடவையாகத் தலைவராய் வரக் கூடாதுன்னு சிலர் சொல்லிப் பார்த்தாங்க. காந்திஜி கேட்கல்லே. 

நேருஜி தம்முடைய தாயார், தந்தை, மனைவி எல்லாரை யும் இழந்து விட்டிருந்த சமயம் அது. அப்பவே அவர் முற் போக்குவாதி. இப்ப அவர் மகளும் தன்னை முற்போக்குவா தின்னு சொல்லி ஏமாத்திக்கிட்டிருக்காங்க. இது வேறே. அது கிடக்கட்டும். 1920-லே கல்லூரியை விட்டு வெளியே வந்த ஒரு செட் காந்தியைச் சுத்திச் சுத்தி வந்தாங்க. அதே மாதிரி 1930- இலே வந்த ஒரு செட் நேருவைச் சுத்தினாங்க (மேஹ்ராலி, ஜயப்பிரகாஷ் போன்றவர்கள்) அப்பவே நேரு பலத்தை வல்ல பாய் உடைக்கப் பார்த்தார். காந்திஜி விடல்லே. யுத்தம் ஆரம் பிச்சவுடன் வல்லபாயின் கை ஓங்கி விட்டது. இளைஞர்கள்கூட அவர் பக்கம் சேர்ந்துட்டாங்க. 

47-இல் சுதந்திரம் வந்தது. நேருஜி பிரதமரானார். வல்ல பாயைக் கண்ட்ரோல் பண்ண நினைச்சார். முடியல்லே, தகராறு வளர்ந்துக்கிட்டே இருந்தது. இவங்களைச் சமரசம் பண்ணி வைக்கிறதே காந்திஜிக்கு வேலையாப் போச்சு. தினம் சாயங் காலம் பிர்லா மாளிகையிலே இவங்க ரெண்டு பேரையும் கூட்டி வச்சு அவர் சமரசம் பண்ணி வைப்பார். அதுக்கு முன்னாடி 120 வயசு வரை வாழ்வேன்னு காந்திஜி சொல்லிக் கொண்டிருந்தாரா? அப்புறம் செத்துப் போனா தேவலாம்னு கூடச் சொல்ல ஆரம்பிச்சுட்டார்… சரி ; நேரமாகிறது; லோக சபாவுக்குப் போகணும். ராத்திரிக்கு மறுபடியும் பார்க்க லாமே!’ என்று எழுந்தார் காமராஜ். 

“லோக் சபாவிலே இன்றைக்கு அப்படி என்ன முக்கியம்?” என்று கேட்டேன். 

“அங்கே பதவிக்காக அப்படியும். இப்படியுமா இருக்கும் சிலர் என்னைச் சந்தித்துப் பேசணும்னு நினைக்கிறாங்க. அவங்க என் வீட்டுக்கு வரமுடியாது. அப்படிப்பட்டவங்களும் என்னைப் பார்த்துப் பேச நான் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டாமா? அதுக்குச் சரியான இடம் லோக் சபா லௌஞ்சுதான். அந்த இடத்திலேதான் யார் வேணாலும், யாரை வேணாலும் பொதுவா சந்திச்சுப் பேசலாம்” என்று அர்த்த புஷ்டியுடன் சிரித்துக் கொண்டே எழுந்தார் காமராஜ். நான் புன்னகையுடன் விடை கொடுத்தேன். 

– தொடரும்…

– சிவகாமியின் செல்வன், சாவியில் தொடராக வெளிவந்த காமராஜரின் அரசியல் வாழ்க்கை, நான்காம் பதிப்பு: ஜனவரி 1990, மோனா பப்பிளிகேஷன்ஸ், சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *