சிறை ஸத் ஸங்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 9, 2024
பார்வையிட்டோர்: 1,266 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1931-32-60 வேலூர் சிறைச்சாலையிலிருந்த ஏ-வகுப்பு அரசியல் கைதிகள் அவ்வனுபவத்தை மறக்க முடியாது. அங்கே சுமார் 40 பேர் இருந்தார்கள். ஒருவிதத்தில் பார்த்தால் 40 பேரும் ஒரு அச்சில் வார்க்கப்பட்டவர்கள். தெலுங்கு, தமிழ், மலையாளம், மராட்டி, கன்னடம், சௌராஷ்டிரம், துளுவம், கொங்கணி, பிராம்மணர், பிராமணரல்லாதார், ஹிந்து,ஹிந்து அல்லாதார், வக்கீல், வியாபாரி, டாக்டர் என்ற பேதம் இல்லா மல் ஏகமனதுடன் காந்தீய முறையில் இந்தியாவுக்குப் பூரண சுயராஜ்யம் கோருபவர்கள் அவர்களனைவரும். ஆனால் தினசரி வாழ்க்கையில் அவர்கள் ஒரு நெல்லிக்காய் மூட்டை -ஒவ்வொரு வரும் ஒரு தனி ‘பிரகிருதி ‘. சற்று மிகைப்படுத்திக் கூறினால், ஸ்நான-பான-சாப்பாடு பேச்சு வார்த்தை விஷயங்களில் இருவர் மனம் ஒத்திராது. இருவர் தேவை ஒன்றுபட்டிராது; பொறுமை யின்மை, அசூயை நிலவியிருக்கும் எனலாம். 

அநேகமாய் எல்லாரும் தம்தம் வழியில் நன்றாய்ப் படித்த வர்கள், தீவிரமான தனி அபிப்பிராயங்கள் கொண்டவர்கள். வினோதமான ஆராய்ச்சிகளில் பற்றுள்ளவர்கள் . முன் காலத்தில் லங்கைத் தீவின் ஒரு அம்சமாக ஆஸ்டிரேலியாக் கண்டம் இருந் தது என்று ‘தக்க சான்றுகளுடன் பருத்த புஸ்தகங்கள் பவர் ஒருவர் ; பிரிட்டிஷாரின் அசிரத்தை மனப்பான்மை இல்லா விட்டால் கங்கையாற்றின் தண்ணீரைக் கொண்டு வைகை யாற்றை ஜீவநதியாக்கலாம் என்று நிரூபிப்பவர் ‘ ஒருவர் ; இவ்வாறு பலர். ஆதி பாஷை ‘களைப் பற்றி விவாதம் கிளம்பி விட்டால் ஜெயில் மேலதிகாரிதான் வந்து அமைதி நிறுவ வேண்டும். 

ஒன்றிரண்டு தலைவர்கள் இவ்வளவு அதிகப்படி சக்தியையும் பயனுள்ளதாக்குவதற்காகப் பலவிதப் படிப்பு வட்டங்கள் உண் டாக்கினார்கள். கீதை, உபநிஷத், குறள், பைபில், குரான், ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த உபதேசங்கள் வகையறா ; ஹிந்தி யும் அயல் பிராந்தீய பாஷைகளும்; ஷேக்ஸ்பியர், ஷெல்லி, கீட்ஸ்; தெய்வ பஜனை, தேசிய பஜனை, உபந்நியாசம், கால க்ஷேபம்; குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றிய விமர்சனங்கள், விளக்கங்கள், கொள்கைகளைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள், சுயசரித்திரம் முதலியன எழுதுதல்; இது போன்ற காரியங்களில் பிற்பகல் நேரம் கழிந்தது. நூற்பு வேலை எல்லாருக்கும் ஏற்பட்டது; பெரும்பாலோர் திட்டப்படி அரைமணி நேரம் நூற்பார்கள்; சிலர் மணிக்கணக்கில் நூற்றுக்கொண்டே இருப்பார்கள். 

சிலர் மாஜிஸ்டிரேட்டின் தண்டனை வாசகத்தின்படி தமக்கு ‘கடுமையான வேலை’ கொடுக்க வேண்டுமென்று பிடிவாதம் செய்வார்கள்! சிறை அதிகாரியோ அதை மறுத்து, “உங்களுக்கு வேலை கொடுப்பதற்கு உபகரணங்கள் வேண்டும்: அவற்றை அமைத்து கச்சாப் பொருள் சப்ளை செய்து மேல் பார்வை நடத்த எனக்கு வசதிகள் இல்லை; ஆகையால் ‘ஹாய் யாக சும்மா இருங்கள் ” என்பார். சத்தியாக்கிரகி, ”ஓய், நீர் விதியை மீறினாலும் நான் மீறமாட்டேன் ; எங்கே வேலை?” என்பார். 

அதிகாரி, “கொலை களவு செய்த கைதிகளைச் சமாளிப்பது சுலபமாக இருக்கிறதே!” என்று அலுத்துக்கொண்டு, பல இலாக்காக்களுடன் கலந்தாலோசித்து கஜானாப் பைகள் பின் னும் வேலையைக் கொடுப்பார். (அதற்கு ஒரு முளையும் கெட்டி நூலுந்தான் தேவை; ஆனால் செய்து முடித்த பைகளுக்குத் தான் அதிகத் தேவையில்லை ; ரூபாய் நாணயம் அதிகமிருந்தால் தானே கஜானாப் பைகள் வேண்டும்!) பட்டுப் போன்ற கைக ளுள்ள வக்கீலோ, டாக்டரோ, வியாபாரியோ கொப்புளங்கள் நிறைந்த விரல்களுடன் சோறுகூடப் பிசைய முடியாத நிலையில் தம் கொள்கைகளைக் கொண்டு செலுத்திய ஆத்ம திருப்தியில் மூழ்குவார். 

ஒரு தலைவர் தாம் தனியாய் இருக்கும் நேரமெல்லாம் நூற் றுக்கணக்கில், ஆயிரக் கணக்கில் காயத்திரி ஜபம் ஜபித்து ‘உலக க்ஷேம பாங்கி’யில் டிபாசிட் செய்வார். அவரிடம் இன்னொரு வினோதப் பழக்கம் உண்டு. சிறைச்சாலைத் தோட் டத்தின் பூச்செடிகளை நன்கு பராமரித்து, சாயங்காலம் மல் லிகை முல்லை வகையறா மொட்டுகளைச் சேர்த்து, ராத்திரி விரிக்கப்படும் படுக்கைகளில் தலையணை மீது இரண்டிரண்டு வைத்து விடுவார். கைதிகள், “என்னையா உமது கைங்கரியம்! இயற்கையாகவே குடும்ப நினைவு வாட்டுகிறது; குண்டு மல் லிகை போட்டு அத் தீயை வளர்க்கிறீர்களே!” என்று ஆட் சேபிப்பார்கள். அவர் பிரம்மச்சாரிக் கட்டையல்ல, குடும்பப் பாசத்தால் வாட்டப்பட்டவர். 

சிறை வாழ்க்கையே விரசமானது. அதிலும் சிறைச்சாலை ரெயில் நிலையத்திற்கு அருகாமையில் இருந்துவிட்டால் சொல்ல வேண்டியதில்லை. நடுநிசியில் தூக்கம் கலைந்திருக்கும் சமயத்தில் ரெயில் எஞ்சின் ஊதினால், சுதந்திரம், யதேச்சையான பிரயா ணம், சொந்த வீடு வாசல் போன்றநினைவுகள் மனத்தைக் கசக்கிப் பிழியும். ஏக்கம் வதைக்கும். அந்நிலையில், தலையணை யில் மல்லிகைப்பூ வாசனையும் சேர்ந்து கொண்டால்! 

ஒரு தியாகி மேற்கூறிய ஒரு வகையிலும் சேராமல் ஒன்றும் இச்சிக்காமல் ஒன்றும் குறை கூறாமல், தான் உண்டு, தன் புத்த கங்கள் உண்டு என்று காலம் தள்ளுவார். தபால் மூலமும் அவரைப் பார்க்க வருவோர் மூலமும் கட்டுக் கட்டாகப் புத்தம் புதிய புத்தகங்கள் அவர் அறையில் குவியும். அவை பெரும் பாலும் வறட்டு விஷயங்களைப் பற்றியவை: உண்மையின் தத்துவம்” “சிந்தனையின் விகாசம்” ‘புள்ளி விவரங்கள்- என்ன, ஏன், எங்கே?”, “எதிர்காலம்–உண்மையா, கற்பனையா?’ என்பவை போன்ற தலைப்புக்கள் கொண்டவை. அவருடைய நூல்கள் இரவல் பிரயாணம் சென்று தங்கிவிடும் என்ற பயமே இல்லை. 

மற்றொரு தலைவர் திடீரென்று அரசாங்கப் பொறுப்பு கைக் கெட்டிவிட்டால் அப்பொழுது ஆற அமர ஆலோசிப்பதற்கு அவகாசம் இருக்குமோ இருக்காதோ என்ற கவலையில், காங் கிரஸ் ஆட்சிக்குகந்த தீர்மானங்களும் திட்டங்களும் எழுதிக் கட்டுக்கட்டாகத் தயாரித்துக் கொண்டிருந்தார். எதிர்பார்க் கக்கூடிய ஆட்சேபங்களும் அவர் அளிக்க இருக்கும் சமாதானங் களும்கூட ஆதியிலேயே அவர் அமைதியுடன் ஆலோசித்துக் குறித்து வைத்து விடுவார் என்று சொல்லுவதுண்டு. உண்மை யில் அவை எதிர்பார்த்தபடியே பயனும் பட்டன. 

டாக்டர் கேசவராவ் அதி சீக்கிரத்தில் எல்லாருக்கும் வேண்டியவரானார். அவர்கள் அவரைச் சமையல் அறை அதிகாரி யாகத் தேர்ந்தெடுத்தார்கள்.சென்னை ஹாஸ்டல் அனுப வத்தை வைத்துக்கொண்டு அவர் ஒவ்வொரு கோஷ்டியாரின் நாப்பழக்கத்திற்கும் தக்கபடி சமையலும் பரிமாறும் திட்டமும் அமைத்தார். ஜெயில் ஆபீஸரின் ஒத்துழைப்புடன் உணவுப் பொருள் குத்தகைக்காரரை வழிக்குக் கொண்டு வந்து அன்றாடம் ஏற்பட்ட தலா எட்டணா அலவன்ஸைக் கூடியவரை நல்ல பண்டமாக வாங்க அவர் ஏற்பாடு செய்தார். கைதிகளுக்கும் அப்பளாம், வடாம், ஊறுகாய், பக்ஷணங்கள் முதலியன பெற்றுக் கொள்ளும் வசதி இருந்ததினாலும் அநேகமாய் எல்லாரும் தமக்கு வரும் பார்சல்களைப் பிறரோடு பங்கிட்டுக் கொள்ளும் வழக்கம் இருந்ததாலும் சாப்பாட்டுப் பிரச்னை திருப்திகரமாகவே தீர்ந்தது. 

அநேகமாய் வாரத்திற்கொரு விருந்து நடக்கும். புதிதாய் ஒரு நபர் சேரும்போது வரவேற்பு உபசாரம்; ‘காலமானவர்கள்’ வெளியேறும்போது பிரிவு உபசாரம்; பிறந்த நாள் கொண்டாட்டம்; ஊரிலிருந்து மக்கட் பேறு போன்ற நற் செய்தி கிடைத்தாலும் விருந்து. இவ்வாறு ஜெயில் சமையல் அறைக்கு வாதாம், சேமியா, முந்திரிப்பருப்பு, குங்குமப்பூ முதலியவற்றின் வாசனை பருகும் (முன்பின் ஏற்படாத) சுக அனுபவம் அடிக்கடி கிடைக்கும். 

கடிதங்கள் பெறுதல் உற்றார் உறவினர் சந்திப்பு, இவை சிறைவாசத்தில் வறண்ட மனங்களையும் மகிழ்விக்கும் நிகழ்ச்சி கள். கேசவராவுக்குக் கடிதங்கள் சுமாராய் ஒழுங்காய் வந்து கொண்டிருந்தன. ஒரு கடிதத்திலிருந்து, பண்டிகைகளின் போது வீட்டில் வழக்கமாய் ஏற்பட்ட எல்லாத் தின்பண்டங்களும் செய்யப்படுவதில்லை, பெயரளவுக்குச் செய்கிறார்கள், என்று அவர் ஊகித்து, தான் எழுதிய பதிலில் சென்ற நான்கு வாரங் களில் சிறையில் நடந்த விருந்துகளின் விவரம், தயாரிக்கப் பட்ட விதவிதமான மிட்டாய்களின் ஜாபிதா எல்லாம் வர்ணித் தார். வீட்டாரனைவரும் சாங்கோபாங்கமான அந்தக் கடிதத் தைப் படித்து, ‘ஐயோ பாவம், கஷ்டப்படுகிறார்கள் !’ என்று நாம் நினைக்கிறோம். பயல்கள் அங்கே கும்மாளமடிக்கிறார்கள் என்று சொல்லிச் சிரித்தனர். அதன் பிறகு அவர்களுக்கும் வாழ்க்கை சற்று சகிக்கக்கூடியதாக இருந்தது. 

இவ்வாறு நாட்கள் கழிந்தன. ஒவ்வொருவரும் தம்தம் விடுதலைத் தேதியை – நன்னடத்தைக்கான போனஸ்’ போக- கணக்கிட்டுக் கொண்டிருந்தனர். அநேகர் சட்ட மறுப்பு நடத்தி மறுபடி மறுபடி சிறை திரும்பத் தீர்மானித்தவர்கள். இருந்த போதிலும் விடுதலை என்பது பிரியமாகத்தானிருந்தது. 

இதற்கிடையே எதிர்பாராத வெளியிடமுடியாத சில காரி யங்களின் தொடர்பாக, கடிதப் போக்குவரத்து, பேட்டி சந்திப்பு என்னும் வசதிகளை இக் கைதிகள் தியாகம் செய்து விட்டனர். அப்பெரிய நஷ்டத்தின் காரணமாக வாழ்க்கை இருள் மூடியிருந்தது. சாப்பாட்டிற்குப் பிறகு கடிதங்களுக்காக ஜெயில் காரியாலயத்திற்குச் செல்லும் இனிய உற்சவம் நின்று போயிற்று. ஆகவே விடுதலை தினம் மிகமிக விரும்பத்தக்க நாளாயிற்று. 

இத்தியாகத்தையொட்டி நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்தது. ஜெயில் அதிகாரி சாதாரணமாகக் கைதி களின் கடிதங்கள் எல்லாவற்றையும் பரிசீலனை செய்ய வேண் டும். சாதாரண நாட்களில் அது சிரமமான காரியமல்ல; கடிதங்கள் அபூர்வமாகத்தான் வரும். ஆனால் படித்த, பல தொடர்புகள் கொண்ட அரசியல் கைதிகள் மந்தை மந்தை யாக வந்து குவியும்போது அது சாத்தியமில்லாத காரியமா யிற்று. அதற்காகவே இரண்டு மூன்று அந்தரங்கக் குமாஸ்தாக் கள் வேண்டும். ஆகவே, அதிகாரி எது குடும்பக் கடிதம், எது அரசியல் சம்பந்தமானது என்று ‘முகர்ந்து பார்த்து’, தனி யாகப் பிரித்து, முக்கியமானது மாத்திரம் படித்துத் தணிக்கை செய்வார். மனைவிமார் எழுதும் கடிதங்களுக்கு அவர்  ‘கண்ணே! மூக்கே!’ என்ற அர்த்தத்தில், ஆங்கிலத்தில், ‘ஐஸ் நோஸ் லெட்டர்ஸ்’ என்று பெயரிட்டிருந்தார்! 

ஆனால் ஒருநாள் வக்கீல் ஒருவருக்கு வந்த குடும்பக் கடிதம் ஆங்கிலத்தில் டைப் அடிக்கப்பட்டிருந்தது. அதிகாரியின் கண் அதன்மேல் சற்று தங்கிற்று. பிறகு விஷயத்தை முழுவதும் படித்தார். வக்கீல் தொழில் பார்க்கும் அத்தலைவருக்கு அவ ருடைய குமாஸ்தா எழுதியதாவது: “…சென்ற இரண்டு மூன்று கடிதங்களுக்கு அவ்விடத்திலிருந்து பதில் வராததால் தங்கள் மனைவி மிகவும் திகில் அடைகிறார்கள். தங்கள் தேக நிலை எப்படி இருக்கிறது? முறைப்படி வைத்தியம் நடக்கிறதா? அம்மா அவர்களுக்கு இங்கே இருப்புக் கொள்ளவில்லை. நாளை ரெயிலில் புறப்பட்டு நான் அவரை அங்கு அழைத்து வருகிறேன். கைக் குழந்தையையும் கொண்டு வருகிறோம். தாங்கள் அவருக்குத் தக்க ஆறுதலளிக்கவேண்டும்…” 

அதிகாரி கைதியை அழைத்துக் கடிதத்தைக் கையில் கொடுத்தார். கைதி அதைப் பெற்றுக்கொள்ள மறுத்தார். அதிகாரி தனக்குத் தெரிந்த தர்க்கமெல்லாம் பிரயோகித்தார். பயனில்லை. பிறகு அவர் கடிதத்திலுள்ள செய்தியைத் தெரி வித்தார். கைக் குழந்தை வக்கீலின் சிறைவாசத்தின் மத்தியில் ஆறுமாதங்களுக்கு முன் பிறந்தது. கைதி துக்கமும் உணர்ச்சி யும் உருவெடுத்து, நீங்கள் அதைப் படித்துக் காட்டியிருக்கக் கூடாது. என்னைப் பொய் நடத்தைக்காரனாக ஆக்கிவிட்டீர்கள். என் மனைவியை நான் வரவேற்றுப் பேசுவது சாத்தியமில்லை” என்று மிக்க சிரமத்தின் பேரில் கூறினார். 

அதிகாரி, “அப்படியானால் வரவேண்டாம் என்று அவருக்குத் தந்தியடித்து விடுங்கள்” என்றார். 

“அந்த உரிமைதான் எனக்கு இப்பொழுது இல்லையே” என்று தெளிவுப்படுத்தினார் வக்கீல். 

“என்ன கல் நெஞ்சு! முன்னுக்கும் போகாமல் பின்னுக்கும் போகாமல்…அப்படியானால் என் சொந்த ஹோதாவில் நான் தந்தியடிக்கிறேன்”, என்றார் அதிகாரி. 

“அதை எனக்குத் தெரிவிப்பதும் என்னைப் பொறுத்தவரை தர்மசங்கடமான விஷயம்தான். சரி – என்று ஒப்புக்கொள்வதாக இருந்தால் நானே அடித்துவிடலாமே!” என்று தர்க்கித்தார் கைதி. 

பொறுமையிழந்த அதிகாரி, “சரி நீர் போம்- நீரும் உம் சத்தியமும் நியாயமும் வக்கீல் பேச்சும் ! எதற்கும் ஒரு எல்லை வேண்டும்” என்று அவரைக் கண்டித்து அனுப்பிவிட்டு வக்கீ லின் குமாஸ்தாவுக்கு ‘தற்சமயம் புறப்பட வேண்டாம்” என்று தந்தியடித்தார். எக்காரணத்தாலோ அவர்கள் மறுநாள் வந்து சேர்ந்து விட்டார்கள். நடந்த விஷயங்களை அறிந்து அந்தம் மாள் கைகால் தளர்ந்து அப்படியே உட்கார்ந்துவிட்டார். 

அதிகாரி தமக்கு யோசனையளிப்பதற்காகத் தம் மனைவியை வரவழைத்தார். அவர் நன்றாய்ப் படித்தவர், நல்ல குடும்பத் தைச் சேர்ந்தவர். எல்லா விவரமும் அறிந்து கொண்டபின் அவர் வக்கீலின் அறைக்குச் சென்று, ”ஐயா, எந்த அபிப்பிரா யத்திற்கும் மறுபுறம் உண்டு. எந்த விரதத்திற்கும் விலக் குண்டு. அதுவுமில்லாமல் நீர் பீஷ்மப் பிரதிக்ஞை என்று நினைப்பதை உலகம் அசுரப் பிடிவாதம், மமதையின் அழுத்தம் என்று கருதலாம். உம் சகாக்கள் எல்லோரும், உம் மாகாணத் தலைவர் உள்பட, நீர் உம் மனைவியைக் கண்டு பேசி ஆறுதல் கூறவேண்டும் என்று ஒப்புக்கொள்கிறார்கள். பஹுஜன வாக்குக்கு மதிப்புத் தரவேண்டும். ஸ்திரீ, அதிலும் தேகநிலை சரியாய் இல்லாதவள், என்றால் யாரும் மனம் இரங்குவார்கள், தபஸ்விகளும் இரங்குவார்கள், பேயும் இரங்கும். இது உம் சொந்த விஷயமாக இல்லாததால் இதே யோசனை தான் நீங்க களும் கூறுவீர்கள். ஐயா, தயவு செய்து வாரும்” என்று அழைத்தார். 

வக்கீல் தலை நிமிராமல் கண்ணீர் வடித்துக்கொண்டிருந் தார். அவர் உடல் குளிர் காய்ச்சல் வந்தாற்போல் நடுங்கிக் கொண்டிருந்தது. பிறகு சூபரிண்டன்டெண்டு ஒரு வார்டரை அனுப்பி அவரை ஆபீசுக்கு வரும்படி உத்தியோக முறையில் கட்டளையிட்டார். அங்கு சென்றபின் வக்கீல் தலை நிமிராமல் கீதையில் ஸ்திதப் பிரக்ஞனை வர்ணிக்கும் சுலோகங்களை உச்சரித்துக் கொண்டே இருந்தார். அதிகாரி, “அக்கிரமம், பிடிவாதம், அளவு கடந்த அகம்பாவம்” என்று ஆங்கிலத்தில் அலுத்துக்கொண்டு, “பேட்டி முடிவடைந்தது; கலையலாம்” என்று கூறிவிட்டார். 

இந்தச் சோதனையின் அதிர்ச்சியால் வக்கீலுக்கு இரண்டு மூன்று நாட்கள் ரத்த அழுத்தமும் மற்ற உபத்திரவங்களும் இருந்தன. கேசவராவும் ஜெயில் டாக்டரும் கவனித்து வந் தார்கள். சந்தர்ப்பம் வாய்த்ததும் ராவ், “ஏன் சார், ஆதியி லிருந்தே நீங்கள் இந்த சலுகைத் தியாகத்தை எதிர்த்தீர்களே! இந்த வம்புக்குக் காரணமாயிருந்த நிகழ்ச்சிகளில் முதல் தப்பு நம்முள் ஒருவருடையது. அதைப் பகிரங்கமாய் ஒப்புக்கொண்டு சர்க்காரிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்கிறீர்களே. ஆகையால் உங்கள் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் உங்கள் மனைவியிடம் பேசியிருக்கலாமே” என்ற சந்தேகத்தைக் கிளப் பினார். 

அதற்கு வக்கீல், “தர்மத்தின் மார்க்கம் மிகவும் சூக்ஷ்ம மானது, மிஸ்டர் ராவ். வாள் முனை போன்றது என்பார்கள். நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இந்தத் துக்ககரமான நிலைமைக்கு நம்முள் ஒருவர்தான் காரணம், அதை நாம் அறி வோம். ஆனால் அதை மறைத்து வைத்து, பிற்கால நடத்தைக் கான ஒரு முடிவுக்கு வந்தபின், கசப்போ இனிப்போ, அந்த முடிவுப்படி தான் நாம் நடக்கவேண்டும். சௌகரியப்பட்ட போது கூட்டத்தாரின் தீர்மானம், அது அசௌகரியமானால் என் சொந்த தீர்மானம் என்று மாறி மாறி நடக்கக் கூடாது. மொத்தத்தில் இது தர்மசங்கடமான நிலைகளில், சுகமான பாதையைக் காட்டிலும் கடினமான பாதையே சரியான மார்க்கமாகும் என்று நாம் வைத்துக் கொள்ளலாம். உங்களுக் குத் தெரியாததல்ல, கேட்டதினால் சொல்கிறேன்,” என்று பலஹீனத்துடன் விடையளித்தார்.

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *