மொழியும் சிறுகதைகளும் – நா.பார்த்தசாரதி

 

கதை பிறக்கும் கதை

கதைகளைப் படிக்க வேண்டுமென்ற ஆர்வமும் கதைகளை எழுத வேண்டு மென்ற முனைப்பும் ஒத்த அளவில் வளர்ந்து வருகிற காலம் இது! தமிழ் மறுமலர்ச்சி இலக்கியத்தின் நல்ல காலம்; இதை நாம் பெருமிதத்தோடு சொல்லிக்கொள்ளத் தயங்க வேண்டியதில்லை.

மனித சமுதாயத்தில் கதைகள் எப்படி உண்டாயின? கதைகளை எழுதுகிறவர்களும் படிக்கிறவர்களும் எப்படித் தோன்றினர்? ஓயா வாழ்க்கைப் போரில் பிறந்த நாள் தொட்டு ஒழியாது முனைந்து கிடக்கும் மனித இனம் கதைகளில் இன்பம் காணத் தொடங்கிய காலம் எது?

சுவை நிறைந்த இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டால் கதையின் கதை ஓரளவு தெளிவாகப் புரிந்துவிடும். வாழ்வின் இன்பத் துன்பங்களையும் ஏற்ற தாழ்வுகளையும் குறைவு நிறைவுகளையும் அதில் இருந்து கொண்டே அதனின்றும் நினைப்பில் விலகி நின்று கலை நோக்குடன் பார்க்கும் ஆசை முதன் முதலாக மனித இனத்திற்கு என்று ஏற்பட்ட தோ அன்றே கதைகளை உருவாக்கும் ஆசையும் படிக்கும் ஆசையும் ஏற்பட்டிருக்க வேண்டும்.

நம்மைப் புகைப்படம் எடுத்துப் பார்க்க வேண்டுமென்ற ஆசை; நம்மைப் பிறர் புகழ வேண்டும் என்ற ஆசை; (சில சமயங்களில் பிறர் செய்யும் புகழ்ச்சியை நாமே செய்து கொள்ளுதலும் உட்பட) நம்முடைய நிழலைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை – நமக்கு ஏற்படவில்லையா? கதை இலக்கியம் படைக்கப்பட்டதும், இது போன்றதோர் அவாவின் விளைவுதான் என்று கருதலாம்.

வாழ்க்கையில் மலிந்து கிடக்கும் உயர்வு தாழ்வான குணங்களையும் வியப்பு விந்தை கலந்த நிகழ்ச்சிகளையும் சாதாரண அசாதாரணச் சம்பவங்களையும் கலைக்கண்ணாலே காணும் நளினமான விருப்பம் இந்தத் தலைமுறையில் அளவு கடந்து வளர்ந்திருக்கிறது. வாழ்க்கையே வளர்ந்திருக்கும் போது கலைகள் மட்டும் வளராமலிருக்க முடியுமா? சிறு கதை, நாடகம், நாவல், திரைப்படம் ஆகிய பல துறைகளிலிருந்தும் கதைக்கு மதிப்புப் பிறந்ததே இந்தக் கலைக் கண்ணோட்டத்தின் காரணமாகத்தான்.

புதிய சிறுகதை

பஞ்ச தந்திரக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் இன்னும் பழைய தலைமுறையைச் சேர்ந்த எண்ணற்ற நீதிக் கதைகள், ஆகியவற்றையும் சிறுகதைகளென்று கூறலாம். ஆனால், உண்மையில் கால் நூற்றாண்டுக் காலத்திற்குள்ளாகத் தமிழில் புதிய முறையில் வளர்ந்திருக்கும் சிறு கதை இலக்கியத்தை ஈடு இணையற்ற வளர்ச்சி என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். புறநானூற்றிலும், சங்க நூல்களில் மிகுந்திருக்கும் அகத்துறை பாடல்களிலும், பிற்காலத்துப் புலவர்கள் தத்தம் அநுபவங்களைக் கூறிப் பாடிய தனிப் பாடல்களிலும், சிறு கதையின் சாயல் இருக்கிறது. ஆனால் அவைகளே முழுமையான சிறுகதைகள் ஆக இயலாது. ஒரு உணர்ச்சியை, ஒரு நிகழ்ச்சியை உருக்கமாக விவரித்துப் பொருத்தமாகக் காட்டுவதுதான் சிறு கதை என்றால் சங்கப் பாடல்கள் பலவும் (Lyrics) பிற்காலத் தனிப் பாடல்கள் பலவும் (Ballads) சிறு கதை அமைப்பு மட்டுமாவது உடையவைதாம்.

இருந்தாலும் இன்று மக்களிடையே பேரும் புகழும் பெற்று நிலவும் உரைநடைச் சிறு கதைகள் ஆங்கில மரபு பற்றிய சார்புடையவை. பழைய காலத்தில் செய்யுள் இலக்கியத்திற்கு எவ்வளவு மதிப்பு இருந்ததோ அவ்வளவு மதிப்பும் தகுதியும் உரைநடை இலக்கியம் இன்று பெற்றிருக்கிறது. எதையும், எப்படியும், எவ்வளவு தெளிவாக வேண்டுமாயினும், உரைநடையில் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை எழுதுகிறவர்களுக்கும், படித்துத் தெரிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை படிக்கிறவர்களுக்கும் ஏற்பட்டு விட்டது.

ஈழத்திலும் தமிழ்நாட்டு வார, மாத இதழ்களிலும் உரைநடையில் நல்ல கருத்துக்களைக் கொண்ட சிறு கதைகளை அடிக்கடி காண்கிறோம். ஒரு நல்ல சிறு கதையை நன்றாக எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு ஈடு கூறலாம். குறிப்பிட்ட காட்சியைக் குறிப்பிட்ட விநாடியில் உள்ளது உள்ளபடி எடுத்துக்காட்டும் புகைப்படக் கருவி போல ஒரு குறித்த நிகழ்ச்சியை ஒரு குறித்த நோக்குடன் (Theme) விவரித்து முடிப்பது சிறுகதை. ஓவியன் ஓவியத்தில் தன் கை விரும்பிய வண்ணமெல்லாம் புனைந்து பொலிவுகாட்டலாம். புகைப் படத்தில் அப்படிச் செய்ய முடியுமா? ஒரு நல்ல சிறுகதை அளவு மீறிய நிகழ்ச்சிகளைப் புனைந்து கதைப்போக்கின் ஒருமைப்பாடு குன்றுமாறு செய்யுமானால் அதை எங்ஙனம் சிறுகதை என்பது? அம்பு பாய்வது போல் நேரே பாய்ந்து சென்று நிகழ்ச்சியின், மையக் கருத்திலே படிக்கும் உள்ளம் பொருந்துமாறு சிறுகதை முடிவு பெற வேண்டும். புதிய சிறு கதையின் மரபும் இதுதான். உலகத்துச் சிறு கதைகளின் வெற்றிக்குக் காரணமும் இதுதான்.

மாதம் ஒன்றிற்கு ஏறக்குறைய இருநூறு சிறுகதைகளுக்குக் குறைவில்லாமல் தமிழ் நாட்டு இதழ்களில் வெளிவருகின்றன. எண்ணிக்கையின் பெருக்கத்தைக் கொண்டு மட்டும் பார்த்தால் இது வளர்ச்சியாகலாம். தமிழ் மரபோடு கூடிய நடை, என்றும் நிலைத்து நிற்கக்கூடிய உண்மை (Eternal Truth), சிறு கதை அமைப்பிற்கு இயைந்த போக்கு, என்று மூன்று வகையால் சமன் செய்து சீர்தூக்கிப் பார்த்தால் மாதத்திற்குப் பத்துக் கதைகளாவது தேறும்.

தமிழில் சிறுகதை இலக்கியத்திற்கு முதலில் வித்திட்டு வளர்த்த பெருமக்களுக்கு வணக்கம் செலுத்திவிட்டு இன்றைய நிலையைக் காண்போம். உருவாகிக் கொண்டிருக்கின்ற, இனி மேல் உருவாகப் போகும் நல்ல சிறுகதையாசிரியர்களுக்கும் நாம் வணக்கம் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இன்றைக்கு எழுதுகிறவர்களில் இரண்டு வகை. எப்படி எழுதினாலும் சரி; அது படிக்கிறவர்களைத் திருப்திப் படுத்து வதாக இருந்தால் மட்டும் போதுமானது என்று எண்ணுகிறவர்கள் ஒருவகை. முடிந்தால் தரமுள்ள, உரமுள்ள, பண்பாட்டோடு கூடிய சிறு கதைகளை எழுதவேண்டும். இல்லாவிட்டால் எழுதாமலிருப்பதே நல்லது – என்றெண்ணும் பொறுப்புள்ள கதாசிரியர்கள் மற்றொரு வகை. இந்த இரண்டு வகையில் முன் வகையைச் சேர்ந்தவர்கள் செல்வம், செல்வாக்கு இரு துறையிலும் உடனடியாக வளர்ச்சி பெற்று வருகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை .

மக்களை உருவாக்க வேண்டிய எழுத்தாளர்கள், சமூகத்தின் நேர்மையான வளர்ச்சிக்குக் காரணமானவர்களாக இருக்க வேண்டும். குற்றவாளிக்கு விடுதலை பெறவேண்டும் என்ற விருப்பம் இருந்தால் மட்டும் சட்டமோ, நீதியோ அவனை மன்னிக்க முடியாது. சட்டத்துக்கும் நீதிக்கும் எவ்வளவு பொறுப்பு உண்டோ அவ்வளவு பொறுப்பு எழுத்தாளர்களுக்கும் உண்டு.

நீங்கள் எழுதும் சிறு கதையால் எத்தனை மக்களைக் கவரலாம்? என்று எண்ணிப் பார்த்து மதிப்பிடாதீர்கள். எத்தனை மக்கள் திருந்துவர்? எத்தனை பேருடைய உள்ளத்துக்கு உண்மையைப் புரிய வைக்கலாம்? என்று இப்படியும் தெரிந்து மதிப்பீடு செய்யுங்கள். அறத்தையும், நேர்மையையும் வற்புறுத்தத் தவறிய எத்துறையும் கலை யென்ற பெயரில் நிலைத்ததில்லை. தமிழ்நாட்டின் வாழ்வில் தான் எத்தனை குழப்பங்கள்? இந்தத் துன்பம் நிறைந்த சூழ்நிலையில் பொழுது போக்குவதற்காக மட்டும் எழுதிக் கொண்டிருக்கலாமா? மக்களைச் சிந்திக்கச் செய்யும் சிறு கதைகள்தான் இன்றையத் தேவை!

எழுத்தாளர் பொறுப்பு

ஆகவே, தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களுக்கு ஒரு வார்த்தை! காரில் ஏறப்போகிற அவசரத்தில் பணப் பையைத் தவற விட்டுவிட்டுக் காருக்குள் ஏறியபின் டிக்கெட்டுக்குப் பணமின்றித் தவிக்கும் பிரயாணியைப் போல் இன்றைய வளர்ச்சியின் வேகத்தில் உங்களுக்கிருக்கும் பொறுப்பைத் தவற விட்டுவிடாதீர்கள். பின்னால் வருத்தமடைய நேரிடும்.

ஒவ்வொரு கலைக்கும் அந்தக் கலையை ஏற்றிருக்கும் கலைஞனுக்கும் அதனதன் நிலைக்கேற்ப ஒரு பொறுப்பு உண்டு. அந்தப் பொறுப்பைப் புறக்கணித்தால் நிலைக்க இயலாது. புதுமைப்பித்தனும், கு.ப.ராவும், அடிப்படையிட்டுப் படைத்த தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தை வளப்படுத்தும் தூய முயற்சிகளைச் செய்யுங்கள். தமிழ் மரபும், தமிழ்ப் பண்பும், தமிழ் மக்கள் இனமும், என்றும் எதற்காகவும் பொறுப்பின்மைக்குத் தொடர்ந்து ஆதரவளித்தது இல்லை. இதை நீங்கள் நன்றாக நினைவு வைத்துக்கொள்ள வேண்டும். கரையில்லாமல், துறையில்லாமல் தன்போக்கில் ஓடும் ஆறு ஆக்கத்துக்குப் பயன்படுமா? கரைக்கு அடங்கித் துறைக்கு நிறைந்து ஓடுவதுதான் ஆறு. பொறுப்பு என்பது இதுதான். சிறு கதைகளுக்குத் தமிழ் மக்கள் மத்தியில் இப்போதிருக்கும் ஆதரவைத் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

இன்றைய நாளில் சமூகத்துக்கு எத்தனையோ உண்மைகளை எளிய முறையில் புரியவைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். இதனால் சிறு கதைகளை வெறும் பிரச்சாரம் செய்யும் கருவிகள் என்று நான் சொல்வதாக நினைக்கக்கூடாது. தெளிவாக ஆராய்ந்தால் குறிக்கோள் இல்லாமல் வெறும் பொழுதைக் கழிப்பதற்கென்று எந்த ஒரு கலையும் உலகில் ஏற்படவில்லை . சிறுகதை இலக்கியம் உண்மையை நிறுவுவதற்காகப் புனைந்து காட்டப் படும் ஒரு பொய் (Short story is a lie to create a truth). இந்தப் பூட்டுக்கு இந்தச் சாவியைத்தான் பயன்படுத்த வேண்டுமென்பது போல் உண்மையைப் பரப்புதற்காகத்தான் சிறு கதை என்ற பொய்யைப் பயன்படுத்த வேண்டும். இது உங்கள் பொறுப்பு.

வாசகர் பொறுப்பு

தமிழ் வாசகர்கள் முன்னைப்போல் இல்லை. உணர்ந்து, தெளிந்து எதையும் எடைபோட்டுச் சொல்லும் பொறுப்பு வாசகர்களுக்கும் சிறிது சிறிதாக ஏற்பட்டு வருகிறது. ‘தரமுள்ளது இது’ – ‘தரமில்லாதது இது’ – என்று பிரித்துப் பார்க்கும் அறிவு தமிழ் வாசகர்களுக்கு முழு அளவில் ஏற்பட்டு விட்டால் கவலை இல்லை.

படிக்கிறவர்கள் விழிப்படைந்திருக்கிறார்கள் என்று தெரிந்தாலே எழுதுகிறவர்களுக்கு அது ஒரு முன்னெச்சரிக்கை மாதிரி. சிறு கதைகளில் என்ன பயனை மக்கள் எதிர் பார்க்கிறார்கள் என்பது எழுதுகிறவர்களுக்குப் புரிந்துவிடும். படிக்கிறவர்கள் எல்லோரும் சிறு கதை எழுதும் ஆற்றல் உள்ளவர்களாக மாறிவிடுவதற்கு முடியாது. சிறு கதைகளை எழுதும் ஆற்றல் கருவிலே வாய்க்கப்பெற்ற திரு. ஆனால், பெறுவதற்கரிய அந்தத் திரு தவறான வழியில் பயன்பட்டு விடாமல் நேரிய வழியில் செலுத்திக் கொண்டு போகும் பொறுப்பு உயர்தர வாசகர்களின் கையில் இருக்கிறது.

தமிழ்ச் சிறுகதைகள் உலக இலக்கியத்தில் மிகச் சிறந்த இடத்தைப் பெறப் போகும் காலம் தொலைவில் இல்லை. உண்மையுணரும் திறனுள்ள வாசகர்களே! நிலைத்து நிற்கும் இலக்கியத் தரமுள்ள சிறு கதைகளை எழுத ஆர்வமுள்ள எழுத்தாளர்களே! இந்தப் பொற்காலத்தில் தமிழில் வரும் சிறு கதைகளை, ‘இது ஒரு நல்ல சிறுகதை’ – என்று பிற மொழியினரும், தாய் மொழி வாசகரும் பாராட்டத்தக்க விதத்தில் உருவாக்குங்கள். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். இதைச் செய்வதில் அவ்வளவாகத் துன்ப மில்லையே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *