சிறுகதை – நா.பா.வின் முன்னுரை

 

கதாசிரியனின் சிந்தனையில் பிறந்து வாசகனின் சிந்தனையில் நிறைவு பெறுவதுதான் சிறுகதை என்று எனக்குத் தோன்றுகிறது. சில சமயம் கதாசிரியனின் நினைவு வித்து வாசகனின் மனத்திற் புகுந்தும் நிறைவு பெற்றுவிடாமல் வளர்வது உண்டு. கதைக்கு மையமான கருத்து எதுவோ அதன் சிந்தனை வளர்ச்சியையும், வலுவையும் பொறுத்தது அது. கதைகளின் அழகோ, வளமோ, சிந்தனையோ, எதுவானாலும் அது சங்கமமாகும் இடம் வாசகர் சிந்தனையே. எனது இந்தத் தொகுதியுள் அமைந்த கதைகள் வாசகர் மனத்தில் சங்கமமாகும் போது என்னென்ன உணர்வுகள் கிளருமோ அவை என்னால் எழுபவை, அவை நல்லனவாகுக. இந்தச் சிறுகதைகள் தமிழ் வாசகர்கள் மனங்களில் வலுவான சிந்தனைகளை நிறைத்தாலும் சரி, வளர்த்தாலும் சரி – அவற்றுக்காக இவற்றை உருவாக்கியவன் பெருமிதம் அடைய முடியும். அப்படி அடையலாம் அல்லவா?

கற்பனை இலக்கியம் படைக்கும் எழுத்தாளனின் மனத்தில் பூக்கும் உணர்ச்சி மலர்களில் உதிர்ந்து மடிந்துவிடுவன சில. பிஞ்சுவிட்டுக் காய்த்துக் கனிந்து கனிகளாய்ச் சுவை நல்குவனவோ மிகவும் சில. ஒரு நல்ல சிறுகதையில் பல நல்ல சிறுகதைகளுக்கான வித்துக்கள் பொதிந்திருக்க வேண்டும். பழத்தின் உள்ளீடாகிய வித்துக்களைப் போல் நல்ல சிறுகதைக்கு இந்த உள்ளீடு இன்றியமையாதது.

போட்டோ ஆல்பத்தைப் பேணும் புகைப்படக் கலைஞனைப் போல உலகத்துக் காட்சிகளின் பல்வேறு உயிர்ப் படங்களைத் தன் மனமாகிற ஆல்பத்தில் சேர்த்து வைத்துக் கொண்டு சிந்திக்கிறவன் எழுத்தாளன்.

இங்கே தொகுக்கப்பட்டுள்ள இந்தச் சிறுகதைகளின் படைப்பாளியாகிய நான் இப்போது விலகி நின்று இவற்றைப் பார்க்கிறேன். என்னுடைய கண்களும், மனமும் எண்ணங்களும் உலகத்தைக் கண்டு, கற்று, உணர்ந்து கொண்ட எத்தனையோ உண்மைகளைக் கதையாக்கிவிடத் துடித்தேன். சில கதைகளாயின! சில கனவுகளாயின. இன்னும் சில நினைவுகளாகவே தங்கிவிட்டன. எரிகிற தீபத்திலிருந்து குறைவது தெரியாமல் எண்ணெயைத்திரி உறிஞ்சிக் கொண்டு எரிகிற மாதிரிப் பிரபஞ்ச வாழ்க்கை என்று என் கண்களுக்கு முன் எந்தப் பேரியக்கம் நடந்து கொண்டிருக்கிறதோ அதிலிருந்து ஏதோ ஒன்றைக் குறைவது தெரியாமல் நான் எடுத்து என் மனத்தில் சேர்த்துக் கொண்டு வருகிறேன்.

சந்தர்ப்பங்கள் நேரும்போது அப்படி மனத்தில் சேர்த்துக் கொண்டு வருகிற இலக்கிய முதலில் இருந்து வேண்டியதை எடுத்துக் கதைகளை எழுதுகிறேன். இந்தத் தொகுதியிலுள்ள கதைகளையும் அவ்வப்போது சேர்த்த இலக்கிய முதலிலிருந்து உருவாக்கித் தந்திருக்கிறேன். இவற்றில் நயமும், நளினமும் நயமின்மையும், நளினமின்மையும், கருத்தும், கற்பனையும், கருத்தின்மையும், கற்பனையின்மையும் எல்லாம் இருக்கலாம். எப்படியிருந்தாலும் இவற்றைப் படைத்து இவற்றுக்குத் தாய்மையும், தந்தைமையும் பூண்ட சொந்தக்காரன் நான்தான். இந்தக் கதைகளை இப்போது காண்கிற சமயத்தில் என்னையே பல்வித நிலைகளில் காண்பதுபோல் எனக்கு ஒரு பிரமை உண்டாகிறது. அப்படி உண்டாவது இயல்பே!

என் மனத்தில் சேர்த்து வைத்திருக்கும் இலக்கிய முதலீட்டிருந்து உருவாக்கிய இந்தச் சிறுகதைகளைத் தமிழ் வாசகர்களுக்கு முன் வைக்கிறேன்.

விருந்தோம்பல் தமிழர்களுக்கு மிகவும் நல்லதொரு பண்பு. இலக்கியப் படைப்பாளியும் விருந்து பேணத் தகுந்தவனே. ஆனால் அவன் அளிக்கிற விருந்தும் இலக்கிய விருந்தாகத்தான் இருக்க முடியும். இலக்கிய ஆசிரியனுக்குப் பெருமை ஒரு கற்பு. அதை விட்டுவிடாமல் போற்றிக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இலக்கியப் பணி புரிகிறவனுக்கு நேர்மையும், பெருமை பேணிக் கொள்ளுதலும் ஒழுக்கங்கள், கற்பை ஒத்த சிறந்த ஒழுக்கங்கள். இன்றுவரை இந்த ஒழுக்கங்களைக் காப்பாற்றிக்கொண்டும், இனி என்றும் காப்பாற்றிவிட வேண்டுமென்ற ஆசை கொண்டும் ஏதோ தமிழில் எழுதி வருகிறேன். எழுத்து ஒரு தொழிலாக என்றும் என் மனத்தில் பட்டதில்லை. நான் எழுதத் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை அதை ஒரு தூய புனிதமான வேள்வியாகவே எண்ணிக் கொண்டு வருகிறேன்.

என் கதைகளைப் படிப்பதற்கு முன்னால் என்னைப் படித்துக் கொள்ள வாசகர்களுக்கு இந்தச் சில வார்த்தைகளை எழுதினேன்.

நாவலுக்கும், சிறுகதைக்கும், குறுநாவலுக்கும் எல்லை, உத்தி, அமைப்பு எல்லாம் வேறுபடலாம். ஆனால் படைப்பதனால் ஏற்படும் இன்பமும் செருக்கும், இரசிப்பதனால் ஏற்படும் சுவையும் எல்லா இலக்கிய வகையினாலும் தருவோர் – பெறுவோர் இரு தரப்பிலும் நிச்சயமாகவும் நிரந்தரமாகவும் உண்டு.

கவிகளின் இதயதாபங்களையும், சொற்களுக்காகச் சமயா சமயங்களில் அவர்கள் தவமிருக்கும் நிலைகளையும் பல சந்தர்ப்பங்களில் அனுபவித்து உணர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அந்த அனுபவம் ஒருசிறுகதையாகக் கிடைத்திருக்கிறது. சண்பகப்பூவும் லண்டன் ஸ்கூலும், வேனில் மலர்கள் போன்ற என் சிறுகதைகள் கவியின் மோகனமான மனக்கிறக்கத்தின் வேறு வேறு சுழிப்புகளை ஒரே அடிப்படையிற் கூறுபவை.

‘இந்தக் கதைகள் எல்லாம் ஒரே அடிப்படையில் உள்ளனவே?’ என்று என்னுடைய வாசகர்களே பலர் வினாவியிருக்கிறார்கள். மேலே கூறிய கவி மனநிலையை மையமாக வைத்துப் பார்த்தால் இக்கதைகளில் வேறு வேறு நயங்கள் இருப்பது புரியும் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

சிவந்த தாமரைப் பூப்பாதங்கள், நளினமான வளை ஒலிக்கும் கரங்கள், கவியின் நளினம், நாட்டியக்காரிகளின் இங்கிதம், பதங்களின் பக்குவம் – இவையே என் கதைகளில் திரும்பத் திரும்ப வருவதாகக் கூறப்படுகிறது. எழுத்துலகில் எனக்கு என்று ஒரு நளினமான தமிழ் நடை, இங்கிதம் , கவிதைப் போக்கு இவை நிச்சயமாக உண்டு என்பதையே இது காட்டுகிறது. ஒவ்வொருவருக்கும் இப்படிச் சில முத்திரைகள் இருப்பதை ஆராய்ந்தால் கண்டுபிடிக்க முடியும். இதற்கு உலகின் எந்த எழுத்தாளருமே விதிவிலக்கு இல்லை.

‘சண்பகப்பூவும் லண்டன் ஸ்கூலும்’ வியாபாரக் குடும்பத்தில் பிறக்கும் ஒரு வாலிபக் கவியின் – மனநிலையை நுணுக்கமாகச் சித்திரிக்கிறது. கவிகள் இடம் மாறியும் பிறக்கிறார்கள்’. தொடர்ந்து கவிகளாகவே இருக்கிறார்களா என்பதை வைத்துத்தான் அவர்களுடைய இடம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பெரிய தொழிலதிபரின் இயந்திர மனப்பான்மையைத் தன் கவி மனப்பான்மையினால் ஒரு சிறுவன் இளகச் செய்துவிடுவதென்பதும் அமைதியாக நடந்தேறும் பெரும் புரட்சிகளில் ஒன்றாக அமைய வேண்டியதுதானே? பதினேழாவது நம்பருக்கு ஒரு பதில், வண்டு என்ற இரு கதைகளும் எப்படிப்பட்ட வாசகரையும் மனத்தைப் பிசைந்து கண்களில் நீர் நெகிழச் செய்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. காக்கை வலிப்பு, இரவல் ஹீரோ, இரண்டும் சமூக நிலையின் ஏற்றத்தாழ்வுகளை எண்ணிச் சித்திரிக்கப்பட்டவை.

‘சிறுகதை என்பது நிமிஷத்தை நித்தியமாக்குவது’ என்கிறார்கள். சொற்கள் கிடைக்கும் ஏதோ நிமிஷத்தை நித்யமாக்கும் கவியும், ஏதோ ஒரு நிமிஷத்தில் தன் பேரன் வியாபாரியாயில்லாததையும் அங்கீகரித்துக் கொள்ளும் தொழிலதிபரும், ஏதோ ஒரு விநாடியில் மனம் மாறிய அறிவுச் செல்வனும், நன்மைக்காக மனம் மாறி ஒரு விநாடியில் பொய் சொல்லும் தபால்காரரும், நிமிஷ நேர ஹீரோவான தோட்டியும், நிமிஷ நேரக் கிழிசலில் அனைத்தையும் கிழியக் கொடுத்த ஒருவரும், பிறரும் இச் சிறுகதைகளில் விநாடியை நித்தியமாக்குகிறார்கள். இவற்றின் சிறுகதைத் தன்மையை இந்த எல்லையில் மாற்றியறியுமாறு வாசகர்களை வேண்டுகிறேன்.

‘இந்தப் பிரதிபிம்பத்தின்’ கண்ணாடிகளில் சிறிதும் பெரிதுமாகப் பல்வேறு பிம்பங்களின் எதிர் விளைவுகளைக் காண்கிறீர்கள். கலை, கதை, கவிதை எல்லாமே ஏதோ ஒரு வகையில் எதிரே தெரிகிற வாழ்க்கையின் ‘பிரதிபிம்பம் தான். இந்தத் தொகுதியில் உள்ள சிறுகதைகள் எத்தனையோ பிரதிபிம்பங்களை – சாயைகளை வாசகர்களுக்குக் காட்டலாம். இவை வெறும் கதைகள் மட்டுமில்லை. கதாசிரியனின் மனத்தில் எந்த அடிப்படையில் எந்த வேளையில் இவை முனைந்து நின்று கருக் கொண்டு வளர்ந்து வெளிப்பட்டன என்பதற்கான கருத்தோட்டத்தை வாசகனுக்கு ஒளிக்காத படைப்புக்களாக இவற்றைக் கூர்ந்து கவனிக்கிற வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும். எதனோடும் ஒட்டாமல் எவற்றோடும் பட்டுக் கொள்ளாமல் அந்தரத்தில் தொங்குவது போன்ற திரிசங்குக் கற்பனைகளோ, சொப்பனாவஸ்தைச் சித்திரிப்புக்களோதான் மேலே கூறியது போன்ற ஒரு கருத்தோட்டத்தைத் தவிர்க்க முடியும். அப்படிப்பட்ட சொப்பனாவஸ்தைச் சித்திரிப்புக்கள் மரத்தூளையோ தவிட்டையோ தின்பது போல் சப்பென்றிருக்கும். அப்படிக் கதைகளை நீங்கள் இதில் எங்கும் காண முடியாது. ஒவ்வொரு கதையும் உங்கள் மனத்தை அலைக்கழிக்கக் கூடியது. இதில் யார் யாருடைய பிரதிபிம்பங்களை நீங்கள் காண்கிறீர்களோ அல்லது காண்பதாக நினைக்கிறீர்களோ அவர்களில் சிலர் உங்கள் மத்தியிலும் இருக்கலாம். ஏனெனில் இந்தக் கதைகள் வாழ்க்கையிலிருந்து விளைந்தவை. வாழ்க்கையோடு போய்க் கலக்கின்றவை. வாழ்க்கையை அடையாளம் காட்டுகின்றவை.

இதை ஞாபகம் வைத்துக் கொண்டு இந்தக் கதைகளை நீங்கள் படித்தால் கதாசிரியனுக்குப் பெரிதும் உதவியவர்களாவீர்கள். அந்த உதவிக்கு நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

இந்தக் கதைகள் நான் பல்வேறு சூழ்நிலைகளில் எழுதியவை. சமீபகாலத்து அரசியல் பொருளாதார மாற்றங்களின் சாயல்கள் உள்ள சில கதைகளும், சமூக மாறுதல்களின் சாயல்கள் உள்ள சில கதைகளும் இத்தொகுதியில் உள்ளன. பிரியத்துக்கு ஏங்கும் பெண்கள். அதே வகை ஆண்கள், பெருமிதம் நிறைந்த பௌருஷம் நிறைந்த ஆண்கள், புரிந்து கொள்வதற்குச் சற்றே சிக்கலான நவீன காலத்துப் பெண்கள், நளினமான கவிகள், இங்கிதமான இளைஞர்கள், அவர்களின் உணர்வுகள், தாபங்கள், தாகங்கள், எல்லாவற்றையும் இக்கதைகளில் அங்கங்கே நீங்கள் சந்திக்கலாம். இந்திய நாட்டுக் கிராமத்தின் ஒளிநிறைந்த பெருமை தரும் ஒரு பாத்திரத்தைப் பனையூர் என்றொரு பல்கலைக் கழகம்’ என்ற கதையிலும், கிராமத்துக்குப் பெருமை தராத பழமையிலும் சேராத புதுமையிலும் சேராதவர்களை ‘அமெரிக்காவிலிருந்து ஒரு பேராசிரியர்’ – என்ற கதையிலும் காணலாம். ஜமீன்தாரி ஒழிப்பு, ராஜமான்யம் ஒழிப்பு ஆகிய மாறுதல்களுக்குப் பின்பும் காலத்தோடு ஒத்துப் போகத் தெரியாத சமஸ்தானங்களும், சமஸ்தானாதிபதிகளும் அரச குடும்பங்களும் படும் சிரமங்களைச் சித்தரிக்கும் ‘ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது’ என்ற கதைக்காக நானே ஒரு பழைய சமஸ்தானத்தைச் சுற்றிப் பார்க்க நேர்ந்தது. இந்தக் கதைகள் வெறும் கதைகளில்லை. இவற்றின் உயிர்த்துடிப்புள்ள சிந்தனைகள் இக்கதைகளை நீங்கள் படித்து முடிப்பதோடு முடிந்து விடுபவை அல்ல. பல சிந்தனைகள் இவற்றை நீங்கள் படித்து முடிக்கும் போதுதான் ஆரம்பமாகவே செய்யும். சிந்தனைகளை முடித்துக் கணக்குத் தீர்த்து முற்றுப் புள்ளி வைத்துவிடாத இக்கதைகள் உங்களையும் தொடர்ந்து சிந்திக்க வைக்கும் உங்களிடம். இவை பற்றிக் கேள்விப்படுகிறவர்களையும் அவை சிந்திக்க வைக்க வேண்டும். அதுவே இதை எழுதியவனுடைய ஆசை நோக்கம் எல்லாம் ஆகும்.

எனது இந்தச் சிறுகதைகள் வாழ்க்கை அனுபவங்களின் சாயல்கள் உள்ள கற்பனைக் கதைகள். சில முழுவதும் கற்பனையாகவே உருவாக்கப்பட்ட கதைகள். பல பிரச்னைகளைத் தழுவிய கற்பனைகள் இவை. பயண அனுபவத்தை இணைத்து உருவாக்கிய கற்பனையே சந்தேகங்களின் முடிவில்!’ வெளிநாடுகளில் புதிய சூழலில் வளரும் பேரனைக் கீழ்நாட்டுத் தாத்தா ஒருவர் பார்க்க நேரும் போது ஏற்படும் சிக்கலே அமெரிக்காவிலிருந்து பேரன் வருகிறான்’ சிறுகதை. நாட்டு நடப்பும் அரசியல் லஞ்ச ஊழலுமே ‘களவும் கற்று’ கதைக்கு ஆதார சுருதியாகக் கிடைத்தவை. சினிமா, பொதுவாழ்வு, செமினார் என்ற பெயரில் நடக்கும் ஹம்பக்குகள் ஒருமைப்பாடு விவகாரம், முதலிய பலவற்றைத் தழுவி நடக்கும் கதைகள் இத்தொகுதியில் உள்ளன.

சிறுகதைகளில் கதாசிரியனின் அனுபவச் செல்வமும், அவற்றை அவன் விவரிக்கும் திறமும் நயமுமே முக்கியம். அந்தச் சுகானுபவம்தான் அவனுக்கும் அவன் வாசகர்களுக்குமிடையே உள்ள இலக்கிய உறவு. அவ்வுறவு இத்தொகுதி மூலம் செழிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு இதை வாசகர்கள் முன் வைப்பதில் மகிழ்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *