சின்னச் சின்ன மேகங்கள்…





(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விடியற் பொழுது, ஜன்னலைத் திறந்து அவன் முதற் பார்வையை வீசிய போதே கண்களில் பட்டது. பரந்த வெளியில் நீந்திக் கொண்டிருக்கும் அந்தச் சின்ன மேகங்கள் தான்.
அடித்துவிட்ட பஞ்சைப் போன்று வான் வெளியில் அநாதரவாகத் தத்தித் தத்தி தவழ்ந்து…. தவழ்ந்து நீந்திக் களிக்கும் குட்டி மேகங்கள். வண்ணங்களை வார்ப்படம் செய்து தூளிகட்டி ஆடும் அந்தச் சின்னச் சின்ன மேகங்களில் புதைந்து விட்ட பார்வையைப் பெயர்த்தெடுத்தான்… செவிகளில்தேன்…. சில்வண்டுகளின் ரீங்காரம். பக்கத்து வீட்டில் சுவேந்தினி பாடிக் கொண்டிருக்கிறாள். “காக்க காக்க..கதிர்வேல் காக்க..” புலரிப் பொழுதிலேயே நீராடி, கொத்துக் கொத்தாக குண்டு மல்லிகையும் பிடிபிடியாகத் துளசியையும் அரித்தெடுத்த அறுகம்புல்லையும் பிள்ளையார், முருகன்; சரஸ்வதி, இலட்சுமி படங்களின் முன்னால் வைத்து வணங்கிவிட்டு இசையில் மூழ்கி விடுவாள்.
அவன் மனதில் சுகந்தம். இசையில் எழுந்த கிறக்கம், பாடல்கள் என்றால் அவனுக்கு உயிர். மனசைத் தொட்டுவிட்ட, மனசுக்குப் பிடித்த வரிகளைத் திருப்பித் திருப்பிப் பாடியும் ‘ஹம்’ செய்து கொண்டே இருப்பான். இசையில், கவித்துவ படிமத்தில் மனசைக் கொட்டி ஆராதனை செய்து கொண்டே இருப்பான். நேற்று வாசித்த அந்தக் கவிதா வீச்சுக்களின் வரிகள் மனதில் அபிநயம் பிடித்துக் கொள்ள அவன் மனசை கொக்கி போட்டு எழுப்பும் வினாக்கள்,
அவள்…
நிர்மலமான மனசில் இவளின் நினைவு எப்படித் தொற்றிக் கொண்டது?
இது பிராப்தமா? அல்லது வெறும் நினைவுகளின் ஊர்வலமா? அவன் இதுவரை கனவுகளைக் காதலித்ததே கிடையாது. நிதர்சனமே அவன் நெஞ்சம். யதார்த்தத்தையே நேசித்து வந்துள்ளது. ஆனால் இப்போது…? அப்படி என்ன அவனுக்கு நடந்துவிட்டது? சின்ன சின்ன மேகங்களாகக் கனவுகளுடன் கை கோர்த்து வானவெளியில் மிதப்பது போல் நீந்துவது போல இப்படித்தான் பள்ளி வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் அவன் வாழ்வில் ஒரு வசந்தப் பூ மலர்ந்தது. வண்ணச் சிறகுகள் விரியும் வசந்த பருவத்தின் விடியற் பொழுது… அப்போது அதுதான் சொர்க்கம். அந்த நினைவுகள் இப்போது, காணாமல் போய்விட்டன.
கரையை அடைந்தால் காணாமல் போகும் கடல் அலைகாளக, தூரத்துத் தோட்டத்தில் தொலைந்த அந்த நாட்கள் ஏனோ இப்போது அவனுக்கு இதம் தருவதாக இல்லை.
அலையென்னும் போது தான் நினைவிற்கு வருகின்றது. அவன் கடற்கரையில் வைத்து அவளுக்குத் தனக்குப் பிடித்தமான மகா கவியின் கவிதை வரிகளைக் கூறினான். அவள் குழந்தையைப் போன்று அதன் பொருளைக் கேட்க அதனை பெருமையுடன் விளக்கிக் கூறினான்.
“சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும். சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்.”
அவன் இந்தக் கவிதையின் வரிகளை அவளுக்குக் கூறி முடித்த சிறிது நேரத்திற்குள் அலையடித்த கடற்கரையை உற்று அவதானித்துப் பார்த்து உணர்ந்து பூரித்துப் போனாள். இந்தக் கவிதையை இசையோடு பாடும்படி அவளை அவன் கேட்டான். ஆனால், அவளால் உடனடியாகப் பாட முடியவில்லை. ஒரு குழந்தையைப் போல் திருப்பிச் சொன்னாள். அவன் இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் எத்தனையோ பாடல்களைப் பாடும்படி அவளைக் கேட்டுக் கொண்ட போதும் இதுவரை அவளால் அவனுக்குப் பாடிக் காட்ட முடியவில்லை.
இப்போது அவன் நினைத்தான். நேற்றுப் படித்த புதுக் கவிதையை அவள் குரல் எடுத்துப் பாடினால் எத்தனை இனிமையாக இருக்கும்! ஒரு புல்லாங்குழலை யாசித்த என்னை மூங்கிற் புதர் காட்டிலா போட்டு எரிப்பது? அட்சதையே என் அட்சய பாத்திரத்தில் ஏன் வேதனைச் சோற்றையே கொட்டுகின்றாய்?
ம்… அவள் பாட மாட்டாள். அவன் விரும்பும் இதுபோன்ற பாடல்களை அவளால் பாட முடிவதில்லை. இதைப் பற்றிய பிரக்ஞை மட்டுமல்ல, அவள் கற்ற சங்கீத ஞானம் கூட அவளை இவ்வாறு பயிற்றவில்லை. பழைய பல்லவிகளில் லயித்து விடுவதே அவள் சுகம். அவன் நினைத்தான்.
இது என்ன நினைப்பு? நினைத்த மாத்திரத்தில் ஒருத்தியை அடைந்துவிட முடிகின்றதா என்ன? வாழ்வுக்கு எத்தனை ஆதாரங்கள் அர்த்தமற்ற பொய்யான போலியான வேலிகள்.
பளிச்சென்றிருக்கும் அவள் முகம். எதையோ சதா தேடிக் கொண்டிருக்கும் அந்த விழிகள். இவள் என்னைப் பற்றி எனன்தான் நினைக்கிறாள்? வாழ்க்கையைப் பற்றி இவளது அபிப்பிராயம் தான் என்ன? இவளது மனோபாவம் கலை, இலக்கியம் என்று ஏதேதோ வாசிக்கின்றாள். இப்படியே இவளை அழைத்துக் கொண்டு போய்விட்டாள் என்ன? அப்படிச் செய்தால் அது தர்மத்திற்கு அப்பாற்பட்ட செயல். ஆமாம், இந்த தர்மம் தான் நம் பெண்களை ஏக்கப் பெரு மூசசில் சாபமில்லாமலே கல்லாகச் சமைக்கும் அகலிகைகளாக்கி விடுகின்றதே. எரிப்பதற்கு இன்னும் எத்தனை மதுரைகள் இங்கு மீதமிருக்கின்றன? எந்த மணிமேகலை துறவு கொள்ளத் தயாராக இருக்கின்றாள்?
அருச்சுனன் சுபத்திரையைப் புறங்கொண்டு போனான்? கிருஷ்ணன் ருக்மணியை அழைத்துக் கொண்டுபோய் மணந்து கொண்டார். இந்தக் கதைகளெல்லாம் பௌராணிகள் காலாட்சேபம் செய்கின்றார்கள். நமது வாழ்வில்……. எப்படி.. ? வாழக்கை என்றால் என்ன வாழ்க்கைக்கு ஆதாரம் எது எவை? அவன் கற்ற தத்துவசாத்திரம், காரண காரிய விளக்கம் இப்படித்தான் அவனை சிந்தனை செய்யத் தூண்டியது. அவளை அவன் சந்தித்தது சமீபத்தில் தான். அதுவும் அந்த அறைக்குக் குடிவந்த பின்னர் தான் ஏற்பட்டது. அவள் பாடல் அவன் மனசைத் தொட்டு நெகிழச் செய்கின்றது. அவள் நட்பு அவன் மனதில் புற்றெடுத்திருந்த தனிமையைப் போக்கி ஒரு புதிய பூங்காவைப் புஷ்பித்து விட்டது.
அவள் அவனுடன் கூட இல்லாமலிருந்த வேளையில்; அவளின் சிநேகம் அவனை அவளையும் அவனுள் உணர்த்தி நிற்கின்றது.
இப்போது அவன் கற்பனை உலகில் மிதக்கத் தொடங்கிவிட்டான். சிறுவனாக இருந்தபோது இவனிடம் ஒரு கார் இருந்தது. அதற்கு வாயு வேகம், மனோ வேகம் உண்டு. அவன் கூப்பிட்ட நேரத்தில் வந்து மனதில் அது ஆஜராகி விடும். எங்கு சென்றாலும் அதில் ஏறித்தான் செல்வான்.
அவன் தான் பார்த்த கார்களையும் ஒன்று சேர்த்து அதை உருவாக்கி இருந்தான். அம்மாவுக்கு மளிகைச் சாமான் வாங்கக் கடைக்குச் செல்வதென்றால் என்ன? மற்றும் கோயில், குளம் எங்கென்றாலும் அதில் ஏறித்தான் செல்வான். பத்தாம் வகுப்புப் படிக்க நகரிலுள்ள கல்லூரியில் சேர்ந்த போது அவனுடைய கற்பனைக் கார் அவனிடமிருந்து பிரிந்து போய்விட்டது. இப்போது மீண்டும் அவனுடைய நினைவுகள், கற்பனைகள், மனோரதத்தில் பறக்கத் தொடங்கி விட்டன.
அவன் சினிமாச் சித்திரங்களை, போஸ்டர் அழகிகளை மோகித்தது. கிடையாது. அழகு என்பது அவனுடைய பாஷையில் அவன் அர்த்தத்தில் வேறுபட்டதாக இருந்தது. அவன் ரதி, மதன் ஆட்டத்தைச் சிறு வயதில் பாரத்து ரசித்திருக்கிறான். கிளி வாகனத்தில், கரும்பு வில்லும் மலர்க்கணையும் கொண்டு ரதி மதன் ஆட்டம் அவன் நெஞ்சில் இன்றும் மலர்ந்து கொண்டே இருக்கின்றது.
ரதி – மதன் மலர்க்கணையுடன் இருக்கும் சித்திரத்தை அவன் தனது அறையில் மாட்டி வைத்திருக்கிறான். அது அவனுக்குப் பிடித்த ஓவியம், ஆனால் அதில்கூட அவன் யதார்த்தத்தைத் தேடிக் களைத்துப் போயிருக்கிறான்றான். சுவேந்தினி பத்து மாதங்களுக்கு முன்னர் முதன் முதலில் சந்தித்து மறையும் லட்சோப லட்ச மக்களில் ஒருவராகத்தான் நினைத்தான். பின்னர் நெருக்கமாக சந்தித்து உரையாடி உறவாட வேண்டிய சூழ்நிலைகளில் கூட அவளை ஒரு பொருட்டாக நினைக்கத் தோன்றவில்லை. அவளைத் தன்னுடையவளாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்ற “தாபம்” இருந்தது கிடையாது.
ஆனால், தற்போது எழுந்துள்ள “வேட்கை” அவனுக்கு இனம் புரியாததாகவும், தேவையானதாகவும் இருந்தது. அவளுடைய பழக்கம், தான் எதிர்பார்த்திருந்த அந்த ஒருத்தி என இனம் காட்டியது. எதிர்பாராமல் ஏற்பட்ட தனிமையான சந்திப்பில் அவன் கேட்டான். சுவேந்தினி நான் நான்…. உன்னிடம் என் மனைசைப் பறிக்கொடுத்து விட்டேன்
ஆழ்ந்த மெளனம் நான் திருமணம் செய்ய விரும்புகிறேன். அவள் பதில் சொல்லாமல் போய்விட்டாள் அவன் மனசை வேதனை அரித்துச் சாப்பிட்டது.
இனி அவள் முகத்தில் விழிக்கவே கூடாது. வேண்டாம் வேண்டவே வேண்டாம்….ம் வேதனை… அவன் சோர்ந்து போனான். கவலை ம்……… அழக்கூடாது. இனி அவளோடு பேசவதே இல்லை. அடுத்த நாள் காலை அவள் சிரித்து நின்ற போது… குழந்தைத்தனமான சிரிப்பு…. அவனது நெஞ்சுறுதி கரைந்து போய்விட்டது. அவனது கேள்விக்கு அவளிடமிருந்து பதிலில்லாத போதும், விசித்து, விசித்து அவள் அழுத போது, அவன் அவளில் கரைந்து போய்விட்டான்.
ம்…. என்று ஒரு வார்த்தை சொல்வாள் என அவன் எதிர்ப்பார்த்தான் அவன் திரும்பவும் கேட்டான். “நான் கேட்டதற்கு பதில் சொல்லவில்லையே.” அவள் “நான் இன்னமும் இல்லையென்று சொல்லவில்லையே.” சிரிப்பு உதிர்ந்தது.
அப்படியென்றால் நீங்கள் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை” அவன் மீண்டும் குழம்பிப் போனான். அவன் மனம் நிலை கலங்கித் தவித்தது. விரக்தி அவன் நெஞ்சைச் சுட்டெரித்தது. வாழ்க்கை என்பது என்ன? இதுவரை நிர்மலாமாக இருந்த மனதில் ஒரு தொற்று நோயைப் போல இவளுடைய நினைவுகள் எப்படித் தொற்றிக் கொண்டன?
அவன் மனதைத் தத்துவவிசாரம் குடைந்தெடுத்தது. காதல் என்பது கருத்தா…..? காட்சியா? காட்சி என்றால் என்ன? புலக்காட்சியா உண்மையானதா? காண்பது தான் காட்சியா?இல்லது ஊனக் கண்களுக்குத் தெரியாத ஞான உண்மை உண்டா? உண்மை என்றால் என்ன? உண்மை நன்மையானதா? நன்மை என்றால் என்ன?
ஒருவன் கயிற்றைப் பாம்பாக நினைக்கிறான். கயிற்றரவு….. கயிற்றரவு. நீரில் அழுத்திய தடி வளைந்து தெரிகின்றது. காட்சி என்பதே இல்லை. எல்லாம் மாயை. தத்துவ ஞானிகளும் சித்தர்களும் ஒரு பாட்டம் அவன் மனதில் தரிசனம் தந்து போனார்கள். “கடமையைக் கடமையாகச் செய்” “கான்ட்'” எழுதியவை வெறும் கரிக்கோடுகள் அல்ல.
அலுவலகத்திற்குப் போய் ஜன்னலைத் திறந்து திரைச் சேலையை நீக்கிவிட ‘ஜில்’ லென்று கடற்காற்று உள்ளே புகுந்தது ஜன்னல் வழியே பார்வை ஜனித்த போது……. பரந்த வானில் சின்னச் சின்ன மேககங்கள் நீந்நிக் கொண்டிருந்தன. மாலையில் அலுவலகம் முடிந்த பின்னர் ஆயாசம் தீர காலிமுகக் கடற்கரையில் வந்தமர்ந்தான். வழமையை விட அலைகள் சீறிச் சீறி வீசி அடித்து மூர்ச்சித்துக் கொண்டிருந்தன. என்ன என்ன அலுவல்களோ இல்லையோ….. மக்கள் இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். குடை நிழலில் சங்கமம் தேடும் ஜோடிகள், எவரையுமே சட்டை செய்வதாகத் தெரியவில்லை. பட்டம் விடும் சிறுவர்கள், பலூன், ஐஸ்கிரிம்காரர்கள் எல்லோருமே வழமை போலத் தான்.
கலர் கலரான கனவுகளில் இளஞ் சிட்டுக்கள் மிதந்து கொண்டிருக் கின்றன. மீண்டும் அவனுடைய தத்துவ விசாரம் முளைகாட்டியது. நிதானமாக யோசித்தான். அமைதியாகச் சிரித்தான். அவள் என்ன முடிவு செய்வாள்? அது அவள் பொறுப்பு. பிரச்சினை எங்குதான் இல்லை. மனம் ஆறுதலடைந்தது.
மேல் வானத்தில் நீந்திக் கொண்டிருந்த சின்னச் சின்ன மேகங்களை காணவில்லை. நீல வானில் வரிசை பிசகாமல் பறக்கும் பறவைகளின் அழகைப் பார்த்து ரசித்தான். பறவைகள் பறந்து பறந்து
அந்தக் கவிதைையப் போலவே அந்தப் பட்சிகளின் ஒருமித்த பரப்பும் அவனுக்கு இதமூட்டியது.
சின்னச் சின்ன மேகங்கள்… சின்னச் சின்ன மேகங்கள். பறவைகளின் சிறகடிப்பு போல அவள் இதுவரை பதில் சொல்லவில்லை. சொல்லவும் வேண்டாம். அவளுக்கு எத்தனை பொறுப்புகள் உள்ளனவோ…. அவளுக்கு மட்டுமா எல்லோருக்கும் தான்… இதுதானே வாழ்க்கை இல்லாமல் வாழ்வு…என்பது! கண்டதே காட்சி கொண்டதே கோலம்… என்பதா…? கலைந்து கலைந்து… செல்லும் சின்னச் சின்ன மேகங்கள்….
– தினகரன், 16-07-1989.
– அட்சய வடம், முதற் பதிப்பு: 2012, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.
![]() |
சிறுகதை, நாவல், நாடகம், கவிைன ஆகிய இலக்கியத் துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ள வடிவேலன், இதுவரை ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். கதைகள் சில சிங்களம், ஆங்கிலம் மொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளன. இவர் எழுதி தமிழகத்தில் வெளியான சில கதைகள் அங்கு மறுபிரசுரமும் செய்யப்பட்டன. வடிவேலனின் 12 சிறுகதைகள் அடங்கிய 'வல்லமை தாராயோ!' என்னும் சிறு கதைத் தொகுதி மலையக வெளியீட்டகத்தின் பிரசுரமாக வெளிவரவுள்ளது. 'தோட்டக் காட்டினிலே…' என்னும்…மேலும் படிக்க... |