சிநேகிதனே!.. சிநேகிதனே!
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: March 31, 2026
பார்வையிட்டோர்: 163
(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-13
அத்தியாயம் – 11

கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்து முடித்தாலும் இன்ஸ்பெக்டர் தனசேகருக்குத் தலைவலி தீரவில்லை. “ஏம்பா ஏட்டு?” – அழைத்தார்.
“சார்!” – சங்கரன் எதிரில் வந்தான்.
“அந்த பெண்ணை எப்படி விசாரிச்சும்.. கொலையை நான் செய்யலை நான் செய்யலைன்னு ஒரே பாட்டாய்ப் பாடுனாளே. அவ சொல்றதுல ஏதாவது உண்மை இருக்குமா?” – அவனைக் கேட்டார்.
“தெரியலை சார்!”
“கான்ஸ்டபுளா இருந்த நீ முப்பது வயசுல மேலிடத்துல பணத்தைக் குடுத்து பதவி உயர்வை வாங்கிக்கிட்டு வந்தா எதையும் யோசிக்கக்கூடாதுன்னு நெனைப்பா?” – பார்த்தார்.
“இ….இல்ல சார்….” – அவன் நெளிந்தான்.
‘‘பின்னே என்ன காரணம் தெரியலைன்னு சொன்னே?” – பிடித்தார்.
பாவம் விழித்தான்.
“ஒரு குற்றவாளி தப்பிக்கலாம். ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கக்கூடாது தெரியுமா?”
“ச……சரி சார்.”
“நல்லா சொல்லு”.
“நியாயம் சார்.”
“அப்படி சொல்லு.” என்றவர் கொஞ்சம் நிறுத்தி, “அப்போ அவனை யார் கொலை செய்ஞ்சிருப்பா?” சங்கரனுக்கு இவரிடம் வசமாய் மாட்டிக்கொண்டோம்! நினைக்க சங்கடமாய் இருந்தது.
“விடு. போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் என்ன சொல்லுது?”
“ஆள் கத்தியால குத்தி இறந்திருக்கான்னு சொல்லுது.”
“அதான் பார்த்தாலே தெரியுமே. வேற விசேசம்?”
“பார்ட்டி கொலையாறதுக்கு முன்னால செக்ஸ்ல ஈடுபட்டிருக்கான் சார்.”
“பார்ட்டி யார்?”
“சத்தியமா சிறையில இருக்கிற பொம்பளை இல்லே சார்.”
“அதை எப்புடி அவ்வளவு நிச்சயமா சொல்றே?”
“அவ மருத்துவ பரிசோதனையில நிருபணமாகி இருக்கு சார்.”
“அப்போ அவளை வெளியில விடலாமே?!”
“ஜாமீன்ல வந்திருக்காங்க சார்.”
“அப்படி போடு அருவாளை. அப்போ நாம இந்த கேசை கண்டுபிடிச்சே ஆகணும். குற்றவாளி சிறையில இருக்குன்னு தூக்கிப்போட முடியாது?.”
“முடியாது சார்.”
“இப்போ இந்த கொலை எப்புடி நடந்திருக்கும்ன்னு உன் புத்திக்குப் பட்டதைச் சொல்லு?”
“வசந்த் ஒரு பொம்பளைப் பொறுக்கி சார். ஏற்கனவே மூணு பொண்ணுங்க கொலை கேஸ்ல இவன் பேர் அடிபட்டிருக்கு. பணத்தைக் கொடுத்து தப்பிச்சிருக்கான். இப்பவும் அவன் எவகூடவாவது உல்லாசமா இருந்திக்கணும் இவளையும் வரச்சொல்லியிருக்கனும். இவ வந்ததைப் பார்த்ததும் அவளுக்கும் இவளுக்கும் தகராறு வந்திருக்கனும் இல்லே மூணு பேருமே சண்டை போட்டிருக்கனும். அவளோ இவளோ ஆளைக் குளோஸ் பண்ணிட்டு தப்பிச்சிருக்கனும் அவ தப்பிக்க இவ மாட்டிக்கிட்டா. கிராமத்தான் கண்ணுல பட்டிருக்காள்.”
“சரி. இவ கொலை செய்யலை. கத்தியைப் பயன்படுத்தலை. அப்படித்தானே..!”
“ஆமாம். ஆனா..; இவ கத்தியைத் தூக்கி எறிந்ததுதான் இடறல். தப்பிக்க நெனைச்சா?”
“அதான் தெரியலை?!” தனசேகர் சிந்தனையிலாழ்ந்தார். சங்சரனும் மௌனமாய் அவரைப் பார்த்தான்.
“ஆக இந்த கொலையில மூணாவதா ஒரு ஆள் இருக்குன்னு கண்டிப்பாய்த் தெரியுது.”
“ஆமாம் சார்.”
“இது நிச்சயமா பொம்பளைதான்.”
‘ஆமாம் சார்!’ என்று சொல்ல வாயெடுத்தவன் “எப்புடி?” தன் சந்தேகத்தைக் கேட்டான்.
“பையன்தான் உல்லாசமா இருந்திருக்கிறான்னு மருத்துவ மரண அறிக்கையில இருக்கே!”
“‘ஆமாம் சார்.” தன் தவறுக்கு வருந்தியவன் போல தலைகுனிந்தான்.
“அவ யார்?” – இன்ஸ்பெக்டர் தனசேகர் கேள்வி எழுப்பினார்.
“இந்துவை விசாரிக்கலாம் சார்!” பதில் சொன்னான்.
“அவதான் நம்ம விசாரணையில நான் கொலை செய்ஞ்சு கிடந்ததைதான் பார்த்தேன். நான் கொலையாளியைப் பார்க்கலைன்னு சொல்லிட்டாளே.”
“இப்போ கடைசியா இன்னொருதரம் விசாரிச்சுடலாம்சார்.”
“செய்யலாம்” எழுந்தார்.
இவர்கள் தணிகாசலம் வீட்டிற்குச் சென்றபோது அங்கு மூவருமே இருந்தார்கள்.
போலீஸ் தலையைக் கண்டதுமே, “எங்க மருமக களங்கமில்லாதவ. நீங்க களங்கப்படுத்திட்டீங்க. கோர்ட்ல கேஸ் இருக்கு. உங்களுக்கு நாங்க எந்த ஒத்துழைப்பும் தர முடியாது,‘‘ தணிகாசலம் முகத்திலடித்தமாதிரி திட்டவட்டமாக சொன்னார்.
காமாட்சிதான் அவரிடம், “வந்தவங்களுக்கு மரியாதை குடுக்கனும் அதிகாரிகளை மதிக்கனும்” என்று சமாதானப்படுத்தி, “நீங்க இந்துகிட்ட என்ன கேள்வி வேணுமின்னாலும் கேளுங்க சார். நாங்க உங்களுக்கு ஒத்துழைப்பு தர்றோம்” – சொன்னாள்.
தனசேகரும் சங்கரனும் ஆசுவாசமாய் அமர்ந்தார்கள்.
இன்ஸ்பெக்டர் கொஞ்சம் நிதானமாக பேசினார்.
“சார், அம்மா, இந்து, நீங்க மூணுபேரும் நான் சொல்றதை அமைதியாய்க் கேளுங்க. நான் உங்களுக்கு எதிரி கிடையாது. அன்னைக்கி சாட்சி, சந்தேகம் வலுவா இருந்ததினால நான் சட்டபடி நடவடிக்கை எடுத்து கூண்டுல அடைக்க வேண்டியதாயிடுச்சு. இதை நீங்க மனசுல நல்லா பதிய வைச்சுக்கனும். இப்போ நான் உங்களுக்கு உண்மையாவே உதவ வந்திருக்கேன். இந்து! நீ இதுவரைக்கும் மனசுல ஏதாவது மறைச்சு வைச்சிருந்தாலும். இப்போ மறைக்காம சொல்லு. நீ ஏன் அங்கே போனே, அங்கே என்ன நடந்துது, என்ன பார்த்தே…எல்லாத்தையும் விலாவாரியா சொன்னா நான் சரியான நடவடிக்கை எடுப்பேன் சொல்லு.” – என்றார்.
“கோர்ட்ல கேஸ் இருக்கும்போது நாம இதைப்பத்தி பேசலாமா சார்?” – தணிகாசலத்திற்கு மறுபடியும் சந்தேகம கேட்டார்.
“விசாரணைக்காகப் பேசலாம். நான் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிச்சாத்தான் நீங்க சிக்கலில்லாம வெளியே வரலாம். அதுக்கு உங்க ஒத்துழைப்பு தேவை!” – என்றார். கேட்ட மூவருக்கும் மௌனமாக இருந்தார்கள்.
“சொல் இந்து?”
இந்து நிமிர்ந்தாள்.
“நடேசன் காட்டேஜ்ல ரகசிய பைலெல்லாம் இருக்கு அதை சரி பண்ணனும்ன்னு வசந்த் அழைச்சார் சார். மகாபலிபுரம்ன்னதுமே இவர் ஏதாவது கெட்ட எண்ணத்தோட அழைக்கிறாரோன்னு எனக்குள் ஒரு சின்ன சந்தேகம். ஆயிரம்தான் நல்ல மனுசன் உதவி செய்யறார்ன்னாலும் பெண் தனியா இருந்தா ஆள் சபலப்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு, தற்காப்புக்கு ஏதாவது ஒரு கத்தி வைச்சிக்கிறது நல்லது என்கிற எண்ணத்துல அவரை முன்னே அனுப்பிட்டு நான் கடைத்தெருவுல ஒரு கத்தியை வாங்கிக்கிட்டு அவர் சொன்ன இடத்துக்குப் போனேன். வாசல்ல யாரையும் காணோம். கதவு திறந்திருந்துது. நான் மெல்ல உள்ளே போனேன். வசந்த் ரத்த வெள்ளத்துல கெடந்தார். எனக்கு ஆளை அந்த நிலையில பார்த்ததுமே என் ரத்தமெல்லாம் உறைஞ்சு போய் அரண்டுட்டுட்டேன். வியர்வையில உடல் தொப்பலா நனைஞ்சுப் போச்சு. பழி நம்ப மேல வந்துமேங்குற பயத்துல உடனே அந்த இடத்தைவிட்டு வெளியே வந்தேன். கையில கத்தி இருந்தா சந்தேகம் வலுக்கும் எண்ணத்தில் இருந்தா ஆபத்துன்னு அங்கேயே தூக்கி வீசினேன். இதைத் தவிர வேற எதையும் நான் அங்கே பார்க்கலை, செய்யலை சார்” – என்றாள்.
“உன்னை விசாரணை செய்ஞ்சப்போ சொன்னதையே திருப்பி சொல்றே இந்து.” – இன்ஸ்பெக்டர் முகம் களை இழந்தது.
“நான் அன்னையிலேர்ந்து இன்னையவரைக்கும் உண்மையைத்தான் சார் சொல்றேன். நீங்கதான் நம்பமாட்டேன் என்கிறீங்க.” – இந்து குரல் உடைந்தாள்.
“நிசம்தான் இன்ஸ்பெக்டர். நாங்களும் இந்துவைத் தனியே விசாரிச்சோம். இப்போ சொன்னதையே அவ ஒரு வரிகூட மாத்தாம எப்பவும் சொல்றா, சார்! இந்து உண்மையைத்தான் சொல்றாள். உண்மையைத்தானே சொல்ல முடியும்?!” – தணிகாசலம் சொன்னார்.
இன்ஸ்பெக்டருக்கும் சங்கரனுக்கும் இவளிடம் இதைத் தவிர வேறு பண்டம் இல்லை புரிந்தது.
“வாங்க சார் போகலாம்.” – என்றான் சங்கரன்.
தனசேகரன் எழுந்தார்.
“ரொம்ப நன்றிம்மா, நன்றி சார்.” எல்லாருக்கும் சொல்லிவிட்டு சங்கரனுடன் வெளியே வந்தார்.
புல்லட்டில் ஏறி அமர்ந்து, “எங்கே இருக்கு சிக்கல்?” சங்கரனைக் கேட்டார்.
“விசாரிக்கலாம் சார்!” என்றான் அவன்.
“எங்கே விசாரிக்கிறது?”
“வசந்த் அலுவலகத்துல விசாரிக்கலாம் சார்.”
“அதைத்தான் ஏற்கனவே விசாரிச்சுட்டோமே. வசந்த் அலுவலகத்துல ஒழுங்கு. வெளியில எப்படின்னு தெரியாதுன்னு எல்லாரும் சொல்லிட்டாங்களே!?”
“வசந்த்துக்கு நெருக்கமானவாகள் நண்பர்களை நாம இன்னும் தொடலை சார்.”
தனசேருக்கு ஆச்சரியமாக இருந்தது.
“அட! உனக்கும் புத்தி வேலை செய்து. நாம அந்த வழியை இன்னும் தொடலை!” என்றார்.
“ஆமாம் சார்!” ஆமோதித்தான்.
‘இதை எங்கிருந்து, எப்படி ஆரம்பிப்பது?’
இன்ஸ்பெக்டருக்குள் மூளை தீவிரமாக வேலை செய்ய ஆரம்பித்தது.
மெலிசாய் ஏதோ ஒரு முனை தட்டுப்பட்டது.
“வண்டியில உட்கார்!” சொல்லி அவன் அமர்ந்ததும் வண்டியை விட்டார்.
“எங்கே சார் போறோம்?” – சங்கரன் கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை.
அத்தியாயம் – 12
சுற்றிலும் காம்பௌண்ட். பத்து ஏக்கர் பரப்பளவின் நடுவில் அந்த பங்களா வெள்ளை மாளிகையாய் அமைதியாக இருந்தது, எதிரே பூந்தோட்டம், கொரியன் புற்கள் என்று ஆடம்பரமாக இருந்தது. இன்ஸ்பெக்டர் கேட் அருகில் வண்டியை நிறுத்தினார். ஏட்டு இறங்க புல்லட்டை ஸ்டாண்ட் போட்டார்.
“என்ன சார்?” – கூர்க்கா.
“ஐயாவைப் பார்க்கனும்.”
கதவைத் திறந்து விட்டான்.
இருவரும் நுழைந்தார்கள். அழைப்பு மணி அழுத்தி நின்றார்கள்.
வேலையாள் கதவைத் திறந்தான். போலீஸ் தலைகளைப் பார்த்ததும் கொஞ்சம் மிரண்டான்.
அவன் யாரைப் பார்க்கனும் என்று கேட்பதற்கு முன்பே தனசேகரன் “ஐயாவைப் பார்க்கனும்!” – என்றார்.
“வாங்க” – அழைத்துச் சென்றான்.
பெரிய கூடத்தில் சந்தானம் கம்பீரமாக அமர்ந்திருந்தார். முகம் வாட்டமாய் இருந்தது.
அருகில் மனைவி செங்கமலம் கவலையில் ரொம்ப வாடி இருந்தாள்.
சுவரில் சந்தன மாலை போட்டு வசந்த் சிரித்துக்கொண்டிருந்தான்.
“உட்காருங்க” – சந்தானம் இன்ஸ்பெக்டருக்கும் ஏட்டுவிற்கும் நாற்காலிகளைக் காட்டினார்.
எதிரில் அமர்ந்தார்கள்.
“உங்க பையனைப் பத்தி விசாரணை சார். கொஞ்சம் ஒத்துழைக்கனும்!” – தனசேகரன் தயக்கமாய் சொன்னார்.
“‘கேளுங்க”
“வசந்த் குணாதிசயம்?”
“நல்ல பையன்.”
“எதிரிங்க?”
“அப்புடி யாரும் இருக்கிறதா எனக்குத் தெரியலை.”
“உங்களுக்கு?”
“என் வளர்ச்சி தொழில் திறமையைப் பார்த்து யாராவது பொறாமை பட்டிருக்கலாம். ஆனா குறிப்பிட்டுச் சொல்லும்படியா எனக்கு யாரையும் தெரியாது.”
“வசந்திற்கு நெருங்கிய நண்பர்கள்?”
“ராமுன்னு ஒருத்தன் இருந்தான். அவனையும் இப்போ காணலை.”
“எங்கே இருக்கார்ன்னு சொல்ல முடியுமா?”
“தெரியலை. வசந்த் சாவுலகூட அவனைப் பார்க்க முடியலை.”
“ராமு எப்படி சார்?”
“தங்கமான பையன். ஒரு குறையும் சொல்ல முடியாது.”
“எப்படி சார் சொல்றீங்க?”
“அவன் பால்ய வயசிலேர்ந்தே பழக்கம். இங்கே அடிக்கடி வந்து போவான்”
“சமீபத்துல எப்போ சார் வந்தார்?”
“சரியாத் தெரியலை. நான் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் போயிடறதுனால நான் அவனைப் பார்த்தே ஒரு வருசத்துக்கு மேல ஆகும்.”
“ஐயா சொல்றது சரியாம்மா?” தனசேகரன் திரும்பி செங்கமலத்தைப் பார்த்தார்.
“சரிதான்”
“வசந்த்கிட்ட பெண்கள் பழக்கம் இருக்குன்னு கேள்விப்பட்டேன். உங்களுக்கும் தெரியும். மூணு பொண்ணுங்க தற்கொலையில்கூட பையன் பேர் அடிபட்டிருக்கு. அந்த வகையில அவருக்கு எதிரிகள்?”
“வயசுல பையன்கள் அப்படி இப்படி சகஜம். அநாவசியமா இவன் பேர் அதுல இழுப்பட்டிருக்கு. அந்த வகையிலேயும் எங்களுக்கு யாரும் எதிரிங்க இருக்கிறதா எனக்குத் தெரியலை.”
தனசேகரன் அவர்களிடம் மடக்கி மடக்கிக்கேள்விகள் கேட்டும் பிரயேஜனமில்லை.
விடைபெற்று வெளியே வந்தார்.
புல்லட் கிளப்பினார். சங்கரன் தொற்றிக்கொண்டான்.
“ஏன் சங்கர்! புள்ளை போக்கு சரியில்லேன்னு பெத்தவனே வசந்தை ஆள் வைச்சி தீர்த்திருப்பானா?”
“அப்படி ஏதும் தெரியலை சார்.”
“போடா வெண்டைக்காய்! மனுசனைப் பார்த்தா நல்லவன் மாதிரி இருக்கான்னு நெனைக்கிறீயா? அதெல்லாம் நடிப்பு. தன் பணத்துக்கு அழிவு வரும், பேர் கெட்டுப்போயிடும்ன்னு தெரிஞ்சா இந்த மாதிரி பெரிய பணக்காரனுங்க பொண்ணு, புள்ளை, பொண்டாட்டிங்களை ஆள் வைச்சு தீர்த்துக் கட்டவும் தயங்க மாட்டாங்க. செய்ஞ்சிட்டு நல்ல புள்ளைங்க மாதிரி இருப்பானுங்க.”
சங்கரனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மௌனமாக இருந்தான்.
“சங்கர்! இந்த மூணு பொண்ணுங்க சாவைக் கொஞ்சம் தோண்டிப் பார்க்கலாமா…?”
இதற்கும் மௌனமாக இருந்தான்.
“ராமுவைப் பத்தி விவரம் தெரிஞ்சா தேவலை இல்லே.”
“ஆமா சார்.”
“ஆள் எப்படி இருப்பான்?”
“தேடிக் கண்டு பிடிச்சுடுவோம் சார்.”
“கொஞ்சம்கூட அவனைப் பத்தி விசயம் தெரியாம எப்படி தேடுறது?”
“அதான் சார் எனக்கும் யோசனையா இருக்கு.”
வண்டி காவல் நிலையத்தை வந்தடைந்தது. நிறுத்திவிட்டு இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.
பணியில் இருந்த காவலர்கள் மரியாதை நிமித்தம் சலியூட் அடிக்க…தனசேகர் நாற்காலியில் அமர்ந்தார்.
சுவரோர பெஞ்சில் முந்தானை போர்த்தியபடி ஒருத்தி அமர்ந்திருந்தாள்.
“112349! இது என்ன பிராத்தலா?” – கேட்டார்.
“இல்ல சார். புருசனைக் காணோம்ன்னு புகார் கொடுக்க வந்திருக்காங்க.”
“எங்கே போயிட்டாராம்?”
“தெரியலையாம்!”
“இங்க வாம்மா.” – தனசேகர் அழைத்தார்.
அவள் எழுந்தாள். முகத்தில் பொலிவில்லை. பூ இல்லை பொட்டில்லை!
அத்தியாயம் – 13
தனசேகரனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
“என்ன உன் புருசனைக் காணோமா?!” – திகைப்பாய் ஏறிட்டார்.
“ஆ..ஆமா சார்.” – சொல்லும் போதே அவளுக்குக் குரல் உடைந்தது.
“அழுவாமச் சொல்லு? உன்னைப் பார்த்தா விதவை மாதிரி தெரியுது?!”
“அ….ஆமா சார்.”
“பின்னே எப்படி புருசன் காணாம போவான். சொர்க்கத்திலேல்ல இருப்பான்!”
“இவர் எனக்கு ரெண்டாவது புருசன்.”
:கழுத்துல தாலியைக் காணோம்?!”
“கட்டாம குடும்பம் நடத்துறோம்!”
“அப்படியா….?! பேரு?”
“சாந்தி சார்.”
“காணாமல் போனவன் பேரு?”
“ராமு!”
“வயசு?”
“முப்பது.”
“உன் வயசு இல்லேம்மா. அவர் வயசு?”
“இருபத்தி ஆறு!”
“இது என்ன ஏடாகூடமா இருக்கு. உன்னைவிட அவன் சின்னவனா?”
“அ…ஆமா சார்.”
“தொலைஞ்சி போங்க. எத்தினி நாளா காணோம்?”
“இருபத்தி அஞ்சு நாளா.”
“அதென்ன கணக்கு?”
“நான் உண்டானதிலேர்ந்து.”
“இது வேறயா? அவனுக்கு வேற பெண்கள் தொடர்பு இருக்கா?”
“தெரியலை சார்.”
“உங்களுக்கு எப்போ கலியாணம் ஆச்சு?”
“ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே தொடர்பு சார். நான் உண்டானதும் குடும்பம் நடத்தனும்ன்னு சொன்னேன். சேர்ந்து வாழறோம்.”
“தாலி கட்டாமலேயா?”
“அ………..ஆமாம்.”
“என்ன பொண்ணு நீ. தாலி கட்டினவனே பொண்டாட்டி புள்ளைங்களை விட்டு கம்பி நீட்டுறான். நீ விதவை. தாலி கட்டாம வாழ எப்படி சம்மதிச்சே?”
“தாலின்னா எனக்குக் கிலி. அதுல கண்டம். அதனால்தான் நான் திருமணமே செய்யலை. எனக்கு பெண்ணு கழுத்துல தாலி கூடாது. கூந்தலில் பூ, நெற்றியில் பொட்டு இல்லாம விதவைதான் ராசி! அப்படி இருந்தாத்தான் ஆசை வரும். நாம தாலி கட்டாமலேயே குடும்பம் நடத்தலாம்ன்னு அவர்தான் சார் சொன்னார். சம்மதிச்சேன். இப்போ காணோம்.”
“ஆள் எப்படி இருப்பான்?”
“நல்ல வாட்டசாட்டம்.”
“என்ன வேலை பண்றான்?”
“நிர்மல்-விமல் கம்பெனியில வேலைன்னு சொல்வார். ஆனா ஒருநாள் கூட வேலை பார்த்து இல்லே. சம்பளம் மட்டும் வாங்கி வருவார்.”
தனசேகரன் நிமிர்ந்து அமர்ந்தார்.
“இன்னொரு தரம் சொல்லு?”
சொன்னாள்.
“அதெப்படி வேலை செய்யாம சம்பளம்?”
“அந்த கம்பெனி முதலாளி தன்னோடைய நெருங்கிய கூட்டாளி. அதனால எனக்கு இப்படி சம்பளம் சொன்னார் சார்.‘‘
“பையனுக்கு வேற பழக்க வழக்கம்…?”
“கொஞ்சம் குடிப்பார்.”
“போட்டோ இருக்கா?”
நீட்டினாள்.
“இவர் மொதலாளி கொலைன்னு பேப்பர்ல படிச்சேன் சார். அந்தக் கொலையிலிருந்து இவரைக்க காணலை. நெருங்கிய கூட்டாளி. ஆதனால கொலைக்காரங்க இவரையும் போட்டுத் தள்ளி இருப்பாங்களோன்னு எனக்குப் பயம், சந்தேகம் சார்.”
“பயப்படாம ஒரு புகார் எழுதி கொடுத்துட்டுப் போ. சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன்”.
அவள் புகார் எழுதி கொடுத்துவிட்டுச் சென்றாள்.
அவள் அகன்ற அடுத்த விநாடி…
“ஏட்டு! இவன்தான் அவன் நெருங்கியக் கூட்டாளி. இவனைக் கண்டு பிடிச்சா வசந்த் கொலையாளி யாருன்னு தெரியும்” – தனசேகரன் கண்களில் ஒளிவிட சொன்னார்.
“புரியுது சார்?”
“இவன் நடவடிக்கையே விசித்திரமா இருக்கு. தன்னைவிட மூத்தவளை விரும்பறான். விதவை மேல ஆசைப்படுறான். கூட்டாளிகிட்ட வேலை செய்யாம சம்பளம் வாங்குறான். ஒருவேளை இவன் வசந்த்துக்கு பொண்ணுங்களை ஏற்பாடு பண்ணி கொடுக்கிற வேலையைச் செய்து சம்பளம் வாங்குவான் போலிருக்கு”
“இருக்கலாம் சார்!” சங்கரன் தலையாட்டினான்.
“சரி. விலங்கை எடு.” – எழுந்தார்.
“எங்கே சார்?”
“ராமுவைப் பிடிக்கத்தான். குடிகாரன் எங்கேயாவது மல்லாந்துதான் கெடப்பான்.”
“சாந்தி சந்தேகப்படுறா போல கொலைகாரன் வசந்த்தோட சேர்த்து இவனையும் கொலை செய்திருந்தால்?”
“அப்புடி இருக்க வாய்ப்பு இல்லே. உடல் சுத்துப்பட்டவட்டாரத்துலதானே கெடக்கனும். நம்ம கையில சிக்கலையே?!”
“கடத்திபோய் கொலை பண்ணியிருந்தால்?”
நடந்தவர் இவன் பேச்சில் குழம்பி கொஞ்சம் தடுமாற்றத்துடன் நின்றார்.
“அப்படி இருக்க வாய்ப்பில்லே” – பலகீனமாய்ச் சொன்னார்.
“நான் சொன்னதுல ஒன்னும் தப்பில்லையே சார்?”
“இல்லே இருந்தாலும் குழப்பாம வா” – நடந்தார்.
“சார்! அவன் குடிகாரன். ஊர்ல எத்தனையோ பார். நாம எந்த பாரைத் தேடிப் போக…? அவன் பார்லதான் இருக்கானா இல்லே கள்ளச் சாராயம் காய்ச்சுற இடத்துல கவுந்து கிடக்கானான்னு எப்புடி கண்டுபிடிக்க?” கேட்டான்.
தனசேகருக்குக் கடுப்பு வந்தது.
“வாயை மூடிக்கிட்டு கையில விலங்கோட என் பின்னால வா” – வேகமாக நடந்தார்.
கையில் புகைப்படத்தை மறைத்து வைத்துக் கொண்டு ஏற…அனைத்துப் பாரிலுள்ள குடிகாரர்களும் போலீஸ் தலைகளைக் கண்டு கொஞ்சம் மிரளத்தான் செய்தார்கள்.
ஒரு சிலர் மட்டும் போதையில் “பார்! டிரெஸைப் போட்டுக்கிட்டே குடிக்க வந்துட்டான்ங்க!” என்றார்கள்.
“குடிக்க இல்லே மாமூல் வேட்டை!” – சிலர் குழறினார்கள்.
தனசேகர் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. ராமுவைத் தேடுவதிலேயே குறியாக இருந்தார்.
பார் அலசலை முடித்து… கள்ளசாராயம் விற்குமிடம் சந்து பொந்துக்களிலெல்லாம் தேடினார்கள்.
ராமு எங்கேயும் கிடைக்கவில்லை.
போலீஸ் தலைகளைப் பார்த்ததும் கள்ளச்சாராய கலிவரதன் மிரண்டான்.
இன்ஸ்பெக்டர், ஏட்டு.. அவனை நெருங்கியதுமே…
“சா சார்! நான் மாமூல் சரியா அனுப்பறேன்!” தொடை நடுங்கினான்.
“அட! அது இல்லேப்பா. இங்கே குடியாவே கெடந்து சந்தேகப்படும்படியா எவனாவது கெடப்பானான்னு தேடுறேன்”.
“எ..எதுக்கு சார்?”
“ஒரு நாய் கொலையைச் செய்துவிட்டு எங்கேயோ ஒளிஞ்சு கெடக்குது.” சலிப்புடன் சொன்னார்.
“ஆள் எப்புடி இருப்பான் சார்?”
“ஏன் நீ எவனையாவது பதுக்கி வைச்சிருக்குறீயா?”
“ஐயோ! அது இல்லே சார்.”
“பின்னே?”
“அடையாளம் சொன்னீங்கன்னா ஐயாவுக்கு உதவலாமேன்னு……நெனைச்சேன்.”
தனசேகருக்கு ஒதுங்கிக் கிடக்கும் லாரி கண்ணில் பட்டது.
“என்ன! லாரியில சரக்கு ஏத்தற அளவுக்கு முன்னேறிட்டியா?” – பார்த்தார்.
“இல்ல சார். நாலுநாளா ஒரு சோமாறி. குடிக்கிறதும் உருள்றதுமா இருக்கான் சார்.”
“யார் டிரைவரா?”
“ஆமாம் சார்!”
“ஏன்.. என்ன விசயம்?”
“எப்போதும் போதை தலைக்கேறி… பணம் காய்ச்சி மரத்தை வெட்டி கொலை செய்து என்னை பரதேசியா விட்ட அவனைப் பழிவாங்காம விடமாட்டேன்னு ஒரே புலம்பல்!” தனசேகருக்குள் மூளை சுறுசுறுப்படைந்தது.
“எங்கே அவன்?”
“கண்டுபுடிச்சிட்டேன்னு சொல்லி இப்போதான் தண்ணியை நிறைய ஏத்திக்கிட்டு அந்தப் பக்கம் போறான்.” முந்திரி காட்டுப்பக்கம் கையைக் காட்டினான்.
தனசேகர் சங்கரனை இழுத்துக்கொண்டு கலிவரதன் காட்டிய பக்கம் விரைந்தார். பாதி வழியில் கத்தியைத் தூக்கிக் கொண்டு கொலை வெறியுடன் ஒருத்தன் துரத்த, இன்னொருவன் ஓட….தனசேகரன் ரிவால்வாரை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார்.
இருவரும் அதிர்ந்து திரும்பினார்கள்.
“அசைஞ்சா சுட்டுடுவேன்” நெருங்கினார்.
சாமிக்கண்ணும் ராமுவும் பிடிபட்டார்கள்.
காவல் நிலையம். தனசேகரன் நாற்காலியில் வசதியாய் அமர்ந்து தன் முன் கைகட்டி தலைகுனிந்து நிற்கும் இருவரையும் பார்த்து.
“சாமிக்கண்ணு வசந்த்தைக் கொன்னது நீதான்னு நெனைச்சு உன்னைக் கொல்ல வந்ததா உண்மையைச் சொல்லிட்டான். இந்து புருசன் வெங்கடேசையும் லாரி ஏத்தி கொன்ன குத்தத்தை ஒப்புத்துக்கிட்டான். நீ ஏன் வசந்த்தைக் கொன்னேன்னு சொல்லு?” ராமுவைப் பார்த்துக் கேட்டார்.
“சொல்றேன் சார். வசந்த்துக்கும் எனக்கும் ஹோமோ செக்ஸ் சார். ஓரினச்சேர்க்கை.! வசந்த் மத்த பொண்ணுங்க மாதிரி இல்லாம இந்துவை ரொம்ப மெனக்கட்டு புடிச்சான். அவ விதவையாகியும் அவ மேல அவனுக்கு மோகம் தீரலை. இந்த அளவுக்கு மோகம் உள்ளவன் அவளைத் தொட்டுட்டா என்னை விட்டு விலகிடுவானோன்னு எனக்குள் பயம் வந்துது. அதனால அவளை விடுவிடுன்னு வசந்த்கிட்ட பலமுறை சொன்னேன். அவன் விடாம அதே பிடியாய் இருந்தான். இது சரிவராதுன்னு எனக்குள் தோணிச்சு. வசந்துக்கு அவளா நானான்னு யோசிச்சேன். நான்தான்னு முடிவுக்கு வந்தேன். இந்து மேல எனக்கு கோபம் இல்லே. அவளை விடாப்பிடியாய் புடிச்சிக்கிட்டிருக்கிற இவன் மேலதான் கோபம் வந்துது. வசந்தைத் தீர்த்துக்கட்டிடனும்ன்னு முடிவுக்கு வந்தேன். இந்து வர்றதுக்கு முன்னாடி நடேசன் காட்டேஜ் போனேன். அவளை வரச்சொன்னாலும் அவன் என்னைப் பார்த்ததும் வழக்கம் போல் ஆசைப் பட்டான். அவன் ஆசை தீரும்வரை பொறுமையா இருந்தேன். முடிந்ததும்…கடைசி முறையா ‘இந்துவை விடு!’ சொன்னேன். மறுத்தான். சொருகிட்டு வெளியேறிட்டேன். அதுக்கு அப்புறம் இந்து வந்திருக்காள், உள்ளே நுழைந்திருக்காள், அரண்டு வெளியே வர….மாட்டுக்காரன் கண்ணில் பட்டிருக்காள், மாட்டியிருக்காள்”. முடித்தான்.
காதலனோ கணவனோ…. கை மாறிய பெண்ணைப் போல் என்ன வெறி? ஹோமோ செக்ஸ் பிரிவு, வெறுத்துப் போய் தற்கொலை முயற்சி, அது இதுவென்று கேள்விபட்டிருக்க கொலை என்பது உச்சம. வெளிநாட்டில் இப்படி ஒரு சம்பவம் எங்கோ நடந்ததாய் படித்தது ஞாபகத்திற்கு வர…
இன்ஸ்பெக்டர் தனசேகர் அவனை அதிர்ச்சி, ஆச்சரியமாய்ப் பார்த்தார்.
காவல் நிலையத்திலிருந்த மற்றவர்களும் அப்படி அவன் மேல் பார்வையைத் திருப்ப… ராமு தலைகுனிந்தான்.
(முற்றும்)
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
