சிநேகிதனே!.. சிநேகிதனே!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 25, 2026
பார்வையிட்டோர்: 154 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

அத்தியாயம் – 7

வசந்த்… தணிகாசலம் வீட்டு முன் காரை நிறுத்தும் போது வாசலில் யாருமில்லை. அழைப்பு மணியை அழுத்தினான். வாடிய முகமாய் இந்துதான் வந்து கதவைத் திறந்தாள். அவள் இவனை எதிர்பார்க்கவே இல்லை..! அதிர்ந்தாள். ‘‘வா….வாங்க” – வரவேற்றாள்.

“என்னை நீ எதிர்பார்க்கவே இல்லை இந்து,” – என்னு கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான்.

“உட்காரலாமா?” கேட்டு சோபாவில் பவ்வியமாக அமர்ந்தான்.

“நீயும் உட்காரலாம் இந்து.” எதிர் நாற்காலியைக் காட்டினான்.

அமர்ந்தாள். என்ன பேசுவது தோன்றவில்லை.

“வீட்டுல யாருமில்லே?‘‘ கண்களைச் சுழற்றினான்.

“இல்லே. மாமா மாமி கோயிலுக்குப் போயிருக்காங்க.‘‘

“எப்போ திரும்புவாங்க?”

“கொஞ்ச நேரத்துல திரும்பிடுவாங்க.”

‘‘அதுக்குள்ள நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் இந்து”

மௌனமாய் இருந்தாள்.

‘‘நீ அவசரப்பட்டுட்டே இந்து” – நிறுத்தி கூர்ந்து பார்த்தான்.

அவள் நிமிரவில்லை.

“அப்பா ஊர்ல இல்லே. அம்மா சரி வரமாட்டாங்க. கொஞ்சம் ஆச்சாரம் உள்ளவங்க. உடனே சம்மதிக்க மாட்டாங்க. பேசித்தான் வழிக்குக் கொண்டு வரனும், நாளாகும்ன்னு சொன்னேன். நீ… நான் முரண்டு பிடிக்கிறதா நெனைச்சு நண்பர்களா பிரிவோம்ன்னு அவசரப்பட்டுட்டே.” மெல்ல சொன்னான்.

“….”

“நீ அவசரப்பட்டதன் பலாபலன் உன்னைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு.” – தழுதழுத்தான்.

அவனின் ஆறுதல் பேச்சு இந்துவிற்குள் லேசாக கலக்கியது.

கண்களில் கண்ணீர் அரும்பு கட்ட ஆரம்பித்தது,

அதைப் பார்த்த வசந்திற்கு இப்போது கொஞ்சம் தெம்பு தைரியம் வந்தது.

“நான்…உன் திருமணத்துக்கு வந்து கலந்து உன்னைச் சந்திச்சதோட சரி. அதுவும் அன்னைக்கு உன்னை மணப்பெண்ணாய்ப் பார்த்தேன். அதுக்கப்புறம் நான் உன் பக்கம் திரும்பலை. நீ நல்லா இருக்கனும்ன்னு பிரார்த்தனை. இந்த இடியைக் கேள்விப்பட்டபிறகு என்னால தாங்கவே முடியலை. இடிஞ்சு போய்ட்டேன். உன்னைப் பார்த்தா நமக்கு துக்கம் அதிகம் ஆகும், எப்படி பார்த்து ஆறுதல் சொல்றதுன்னு எனக்குள்ளே பெரிய போராட்டம். ஒரு வழியாய் தெளிஞ்சு இப்போ வந்திருக்கேன் இந்து” – நிறுத்தினான்.

‘ஒரு வகையில் இவன் சொல்வதெல்லாம் சரி. நாம்தான் அதிகம் அவசரப்பட்டுவிட்டோம் போல. ஒருவேளை உயிருக்குயிராய்க் காதலித்தவனை விட்டு வந்ததன் பலாபலன் இந்த தண்டனையோ?’ இவளுக்குள் ஓடியது.

“விதியை யாராலும் மாத்த முடியாது வசந்த்.” – கரகரத்தாள்.

“இப்பவும் நீ நல்லா இருக்கனும்ன்னு விரும்பறேன் இந்து. உனக்கு உதவி செய்ய வந்திருக்கேன்.”

“எனக்கு எந்த உதவியும் வேணாம் வசந்த்.”

“வீடு சிறை இந்து. அதிலும் இப்போ நீ உள்ள நிலைக்கு அது கொடுமையா இருக்கும். சுத்தி சுத்தி உன் புருசன் நெனைப்பே வரும். வெளியில வா. நாலு பேரோட பழகு. உன் துக்கம் தானாய்க் குறையும். கஷ்டம் மெல்ல கரையும்.” நிறுத்திப் பார்த்தான்.

இந்துவின் முகம் இளகவில்லை. இறுக்கம் அப்படியே இருந்தது.

“என் கம்பெனியில ஒரு நல்ல வேலை போட்டுத் தர்றேன். நீ என்னதான் வாய்ப்பு வசதிகளோட இருந்தாலும் உன் சொந்தக் கால்ல நிக்கிறது நல்லது. அது மட்டுமில்லாம நாலு பேரோட பழக்க வழக்கம், அவர்கள் துக்கம் சுமையெல்லாம் பார்க்கறப்போ உன் துக்கம் தூசாத் தெரியும். மத்தவங்க மாதிரி நாமும் நடக்கலாம்ன்னு மனசுல ஒரு தெம்பு தைரியம் வரும். யார் இழப்பினாலேயும் எவர் எதிர்காலமும் பாழாகிறதில்லே. நம்ம வாழ்க்கை அடுத்தவங்க கையில இல்லே. நமக்கு நாமே துணை. நம்ம தெளிவு தெம்பு தைரியம்தான் நம்மை நல்லா வாழ வைக்கும்.” – நல்லவர்களைவிட கெட்டவர்கள் புத்திசாலிகள் என்பதை நிரூபிக்கும் வகையில் முகத்தில் கனிவை வரவழைத்துக் கொண்டு குரலில் குழைவு நெளிவு வைத்துப் பேசினான்.

இந்து பாவம். இளகினாள்.

அவன் பேச்சு பிடித்திருந்தது,

கல்லூரியில் எத்தனையோ பெண்களிடம் உயிருக்குயிராய்ப் பழகியும் யாரும் வந்து எட்டிப் பார்க்கவில்லை. துக்கத்தை விசாரிக்கவில்லை.

இவனைக் காதலித்து கைவிட்ட பிறகும் நண்பனாய் திருமணத்திற்கு வந்தான். இப்போது துக்கம் விசாரிக்கவும் வந்திருக்கிறான். காரணம் நம் மேல் உண்மையான அன்பு, அக்கறை – நெகிழ்ந்தாள்.

“நன்றி வசந்த்” – என்றாள்.

“அப்போ வேலையை ஏத்துகிறே?!” – ஆவலாய்க் கேட்டான்.

“ஏத்துக்கலை! ஏத்துக்கிற நெலைமையிலேயும் நான் இல்லே.”

“ஏன் இந்து?”

“நான் என் மாமனார் மாமியாருக்கு நல்ல மருமகளாய் இருக்கப் போறேன்.”

“…”

“ஒரு புள்ளையைப் பெத்து அயல்நாட்டுக்கு அனுப்பிட்டு தானே பொங்கி கையும் காலுமாய்க் கஷ்டப்பட்டாங்க வசந்த். மருமகள் தேடியும் பிள்ள இல்லாத நிலை. துக்கத்தைச் சுமந்து நடைபிண வாழ்க்கை. மறுபடியும் கஷ்டமா? நாம ஏன் புள்ளையாய் இருக்கக்கூடாது எனக்குள் தோணுச்சு. அதனாலதான் என் அண்ணன் வந்து அழைத்தும் நான் வரலைன்னு அனுப்பிட்டேன்”. சொன்னாள்.

‘ஏய்! எவன்கிட்ட டகில் விடுறே. நீ இந்த வீட்டை விட்டுப் போனா இந்த சொத்து பத்து கெடைக்காது என்பதை மனசுல வைச்சு மாமனார் மாமியார் மேல பாசம் உள்ளது மாதிரி நடிச்சி, பேசி அனுப்பிட்டே.‘ – இவன் மனசுக்குள் நினைத்தான்.

அதை மறைத்து, “உன் மனசுக்கு வாழ்த்துக்கள் இந்து!” பாராட்டினான்.

அவள் தரையைப் பார்த்தாள்.

“நீ பழைய இந்துவா மாறனும்ன்னுதான் வேலை சொன்னேன் இந்து. அப்புறம்… வேலை படிச்ச படிப்புக்குப் பலன். அதனால வர்ற சம்பாத்தியம் மனசுக்கு தெம்பு, திடம். வேலை புருச லட்சணமில்லே மனுச லட்சணம்.” – என்றான்.

“நல்லது சொன்னேப்பா” – குரல் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள்.

தணிகாசலம் காமாட்சி வந்தார்கள்.

வசந்த் இவர்களைத் திருமணத்தில் பார்த்திருந்தாலும் தெரியாதவன் போல் திடுக்கிட்டு எழுந்தான்.

“சா…சார் நீங்க?” மிரண்டவன் போல் கேட்டான்.

“நான் இந்துவோட மாமனார் இவ மாமியார்.” – தணிகாசலம் தன்னையும் மனைவியையும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.

“வணக்கம் சார்! வணக்கம் அம்மா!” – அவர்களைப் பார்த்து கை கூப்பி மரியாதை செய்தான்.

“இவர் என்னோட நண்பர்” – இந்துவும் இவனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள்.

‘‘வணக்கம் உட்காருங்க.” – சொல்லி தணிகாசலம் எதிரிலமர்ந்தார்.

“காபி எடுத்து வர்றேன்” – காமாட்சி அடுப்படியை நோக்கிச் சென்றாள்.

“நீங்க பேசினதெல்லாம் கேட்டோம். எங்களுக்கு இந்து சம்பாதிக்கனுமெல்லாம் ஆசை இல்லே. பழையபடி ஆகனும்ன்னுதான் விருப்பம். அதனாலதான் வேலைக்குப் போன்னு நாங்களும் சொன்னோம் அண்ணன் அண்ணியும் வந்து சொன்னாங்க. இந்து தயங்குது. நாங்க வயசான கட்டை. வாழ்ந்து முடிச்சிட்டோம். வாழ வேண்டிய பெண்ணு இதுவாவது நல்லா கலகலன்னு இருந்தாத்தானே எங்களுக்குச் சந்தோசமா இருக்கும்?”

தணிகாசலம் தன் மனதிலுள்ளதை வெளிப்படையாயக் கொட்டினார். காபி எடுத்துக் கொண்டு வசந்த் எதிரில் வைத்த காமாட்சி…

“தம்பி! எங்களுக்கு எந்த கொறையுமில்லே. பெத்த மகன் போனாலும் பரவாயில்லே நான் வைச்சு காப்பாத்துறேன்னு மனசு வைச்ச பொண்ணு அதுவும் நல்லா இருந்தாத்தானே எங்களுக்கும் நிம்மதி.” – என்றாள்.

மாமனாரும் மாமியாரும் இப்படி முன்பின் தெரியாதவன் பக்கம் சாய்வார்களென்று இந்து சிறிதும் எதிர்பார்க்கவில்லை. காபியை எடுத்து குடித்த வசந்த், “நானும் சொல்லியிருக்கேன். நீங்களும் சொல்லுங்க இந்து மனசு மாறும்” சொல்லி எழுந்தான்.

தணிகாசலமும் காமாட்சியும் அவனை வாசல்வரை வழியனுப்ப சென்றார்கள்.

இந்து அறைக்குள் நுழைந்தாள்.


வசந்த் காரில் ஏறி சென்ற பிறகு தணிகாசலம் வாசலிலிருந்தபடியே திரும்பி பார்த்தார்.

இந்து இருந்த இடத்தில் இல்லை.

‘‘பையன் நல்லா அழகா இருக்கான். நல்ல மனசாவும் தெரியறான். கலியாணம் முடிக்கலைன்னா இவன் நம்ம இந்துவுக்கு ஏத்த மாப்பிள்ளை.!” – என்றார் மனைவியிடம்.

“ஆமாங்க” – அவளும் இசைவாய்த் தலையசைத்து தன் விருப்பத்தை வெளியிட்டாள்.

‘‘ஒருவேளை இதுக்குத்தான் வேலைக்கு வா சொல்றானோ. மனசை மாத்தி முடிக்க நெனைக்கிறானோ?!” – காமாட்சி தன் மனதில் பட்ட இதையும் சொன்னாள்.

“இருக்கலாம். அப்படி முடிஞ்சா நாம வணங்குற தெய்வத்துக்கு ஆயிரம் நன்றி! எல்லாம் அவன் செயல்.” தணிகாசலம் மேலே பார்த்து கை கூப்பினார்.

‘பழம் பழுக்கும்!‘ வசந்த் உற்சாகமாய் மெல்ல விசிலடித்துக் கொண்டு காரை ஓட்டினான்.

அத்தியாயம் – 8

இந்துவிற்கு உறக்கம் வரவில்லை.

வசந்த் சென்றபிறகு மாமனார் மாமியார் வந்து, “நீ வேலைக்குப் போறது நல்லதும்மா!” சொன்னது மனதில் சுழன்று சுழன்று அடித்தது.

“நாங்க புடிச்சுத் தள்றேம்ன்னு நெனைக்காதே. உன் நன்மைக்குத்தான் சொல்றோம்.” – காமாட்சி அழுத்திச் சொன்னது மனதில் ஆழமாகப் பதிந்தது.

‘வேலை படித்ததற்குப் பலன். நான்கு பேர்களுடன் பழக, சுமை குறைய வாய்ப்பு. எல்லாம் சரி. பின்னால் பிரச்சனை..?‘ யோசனையில் ஆழ்ந்தாள்.

எவனாது வழிந்தால்? இல்லை…! நாமே மனசு மாறினால்? முதலில் இறந்து போன கணவனுக்குத் துரோகம். அடுத்து மாமனார் மாமியாருக்கு அவமானம், களங்கம்.

‘வழிவார்களா?‘ – ஆடவர்களுக்குப் புடவையைப் பார்த்தாலே சபலம். அதிலும் அவள் பளிச்சென்றிருந்தால் போதும்.. ஆள்.. குமரியா, கிழவியா, திருமணம் ஆனவளா, ஆகாதவளா, கன்னியா, கைம்பெண், விவாவகரத்தானவள் என்ற கவலையெல்லாம் கிடையாது. மாட்டுவாளென்று படக்கென்று வழிவார்கள். சூடு பட்ட பிறகுதான் விலகுவார்கள். அப்படி இருக்கும்போது தன்னிடமும் வழிவார்கள். விலக வேண்டியதும், விலக்க வேண்டியதும் நம் பொறுப்பு. மனசுக்குள் ஓடியது.

‘வசந்த் காதலை நினைத்து வந்தால்?!‘… நினைக்க நெஞ்சு நடுங்கியது.

வசந்த் அப்படிப்பட்ட ஆள் இல்லை. காதலிக்கும் போதுகூட தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, தன் கை தொடாதவன். – அழித்தாள்.

அறையில் தணிகாசலத்திற்கும் காமாட்சிக்கும் வேறு பிரச்சனை.

“என்னங்க! இந்த பையன் வளைஞ்சு வர்றதைப் பார்த்தால் நம்ம மருமவளை வளைச்சுடுவான் போலிருக்கு.” – பக்கத்தில் படுத்திருந்தவரிடம் கிசுகிசுத்தாள்.

“அதைத்தான் நான் விரும்பறேன் எதிர்பார்க்கிறேன்!”

“என்ன சொல்றீங்க?!”

“நாமதான் அவுங்க பேச்சைக் கேட்டோமே. கல்லூரியில் இவுங்க முன்னப்பின்ன பழகியிருப்பாங்க போலிருக்கு. நீ நல்லா வாழனும்னுதான் வழிவிட்டேன்னு அந்த பையன் சொல்றதிலேர்ந்து புரியுது, நான் அதை ஒன்னும் பெரிசா எடுத்துக்கலை. நல்ல காதலர்களுக்கு அது அழகு. அதனால இப்போ காதலி இப்படி தவறிட்டாள்ன்னு வருத்தப்படுறான். ஒரு வேலை குடுத்து பழைய ஆளாக்கலாம்ன்னு பார்க்கிறான். அவன் திருமணம் செய்ய விருப்பப் பட்டான்னா எனக்கு முழு சம்மதம்.”

“அது எப்படிங்க இவ நம்ம மருமவ.” – காமாட்சி இழுத்தாள்.

“என்ன.. மனசு சரி இல்லைப்போல தெரியுது…?”

“ஆமாங்க. ஒப்புக்கலை..!!”

“அதுக்காக அந்த பொண்ணு வாழ்க்கையை இப்படியே நாசம் பண்ணிடுறதா..?! அது பெரிய பாவம் காமாட்சி. வாழ வேண்டிய வயசுல எல்லாரும் வாழனும். வீண் சடங்கு, சம்பிரதாயத்தில் முடக்கி யார் வாழ்க்கையையும் யாரும் கெடுத்து நாசப்படுத்திடக்கூடாது”

“அது தெரியுதுங்க. இந்து அண்ணன் அண்ணி…?”

“ஒப்புக்கு வேணும்ன்னா கேட்டுக்கலாமேயொழிய அவுங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் கெடையாது, இந்து இப்போ நம்ம வீட்டுப் பொண்ணு.!”

“ஊர் உலகம்?”

“யார்டி இவ. ஊர் உலகம் அது இதுன்னுகிட்டு…? பொண்ணு வாழ்க்கையை இழந்து நிக்கிறா. ஊர் உலகமா கவலைப்படுது.?! அப்படியே அது.. ஐயோ அறுத்து நிக்கிறாளேன்னு கவலைப்பட்டாலும் வருத்தப்பட்டாலும் நின்னு எதுவும் செய்ய முடியாது. நாம்தான் செய்யனும். ஊர் வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும். நாம செய்யிறதைச் செய்யனும் அதைப்பத்திக் கவலைப்படக்கூடாது.‘‘ தணிகாசலம் திட்டவட்டமாகச் சொன்னார்.

“காரெல்லாம் வைச்சிருக்கிற அவ்வளவு பெரிய பணக்கார வீட்டுப் பையன் நம்ம வீட்டுப் பொண்ணைக் கட்டுவானா..? அதிலும் விதவை”.

“காதல், கருணை இதெல்லாம் கண்டுக்காது!”

“அவனுக்குக் கலியாணம் முடிஞ்சிருந்தா?”

“வாய்ப்பில்லே. விசாரிக்கலாம்”.

“அவுங்க நெருங்கிப் பழகினாத்தானே இந்த வாய்ப்பு?”

“அதுக்குத்தான் வேலைக்கு அழைக்கிறான்.”

“இவ போகமாட்டேன்னா?”

“போக வைக்கனும். காமாட்சி! இந்து வேலைக்குப் போனாள்ன்னா இந்த பையன் இல்லேன்னா இன்னொரு பையன். இவ அழகுல மட்டம் கெடையாது. விதவை மறுமணம், விவாகரத்து திருமணமெல்லாம் இப்போ சர்வசாதாரணமாய்ப் போயிடுச்சு. பொண்ணு கெடைக்கலைன்னு யாரும் போய் விழலை. மக்கள் மனசுல மாற்றம் உண்டாகிடுச்சு.”

“இந்துவுக்கு வாழ்க்கை கெடைக்குமா?”

“கெடைக்கனும்ங்குறதுதான் என் விருப்பம். உனக்கு எப்படி?”

“நல்லதுக்கு நான் மறுப்பு சொன்னதே கெடையாது.”

“இப்போ தயங்குனது?”

“ஒரு காரியம் செய்யும்போது மத்ததையும் கொஞ்சம் அலசிப்பார்க்கனும். நம்ம உறுதி தெரிஞ்சு காரியத்துல இறங்கனும்.”

“நான் உறுதியா இருக்கேனா?”

“இருக்கீங்க”.

“நீ?”

“நானும் அப்புடியே இருக்கேன்.”

“அடுத்து நாம முடிக்க வேண்டிய காரியம்?”

“இந்து வேலைக்குப்போகனும்.”

தெளிவாய் உறங்கினார்கள்.


காலை எழுந்தபோது எல்லோருக்குமே விடியல் புதிதாக இருந்தது.

சாஸ்திர சம்பிரதாயங்கள் முடிக்காததினால் இந்து தணிகாசலத்தின் வீட்டுப் பெண் போலிருந்தாள். மாமனார் மாமியார் சம்மதத்துடன் தாலியை மட்டும் கழற்றி இருந்தாள். பத்து பன்னிரண்டு நாள் துக்கத்தில் உடல் கொஞ்சம் வாடி இருந்தது.

“என்னம்மா முடிவு?” – தணிகாசலம் அருகில் வந்தார்.

“எதுக்கு மாமா..?”

“வேலைக்கு?”

“நான் போறதில்லேன்னு முடிவுக்கு வந்துட்டேன் மாமா.”

“ஏன்??”

இவள் பதில் சொல்ல வாயெடுக்கு முன் வாசலில்,…

“சார்!” – குரல் கேட்டது.

இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். காக்கி பேண்ட் சட்டையில் ஒருவன் தபால்காரன் போலிருந்தான்.

“என்னப்பா?” அருகில் சென்றார்.

“தணிகாசலம்?” இழுத்தான்.

“நான்தான்.”

“சார் இதை குடுத்து வரச்சொன்னாங்க.” – ஒரு கடிதத்தை நீட்டினான்.

தணிகாசலம் அதை வாங்கவில்லை.

“சார்ன்னா யாருப்பா?” – கேட்டார்.

“நிர்மல் – விமல் கம்பெனி எம் டி. வசந்த்.”

“என்ன அது?” – கேட்டார்.

“தெரியலை” என்றவன் “இந்தாங்க வாங்கிக்கிட்டு இதுல ஒரு கையெழுத்துப் போடுங்க.” கடிதத்துடன் தாளும் பேனாவும் எடுத்து தந்திகாரன் போல் நீட்டினான்.

“என்னவாக இருக்கும்?” – தணிகாசலம் குழம்பியவராக வாங்கினார்.

தாளில் கையெழுத்துப் போட்டு அவனை அனுப்பினார். கவரை உடைத்து இரண்டு தாள்கள் எடுத்தார். முதல் தாளைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது. அடுத்ததைப் பிரித்தார். பின்னால் வந்த காமாட்சி, “என்னங்க அது?” – கேட்டு அருகில் வந்தாள்.

தணிகாசலம் படித்து முடித்து அவளிடம் நீட்டினார். காமாட்சியும் படித்தாள்.

‘அன்புள்ள ஐயா! வணக்கம். இத்துடன் இந்துவிற்கு வேலைக்கான உத்தரவு அனுப்பியுள்ளேன். பெற்றுக்கொண்டு உடன் தங்கள் மருமகளை வேலைக்கு அனுப்பவும்‘
வசந்த்.

காமாட்சி மருமகளிடம் நீட்டினாள்.

படித்துப் பார்த்த இந்துவிற்குத் தலை சுற்றியது.

“பெர்சனல் செக்ரட்ரிம்மா மாசம் இருபத்தி ஐயாயிரம் சம்பளம். பையன் ரொம்ப சுறுசுறுப்பு” – தணிகாசலம் மகிழ்ந்தார். இந்து முகம் இருண்டிருந்தது.

“எங்களைவிட பையனுக்கு உன் மேல அக்கறை. நீ அழகி சினிமா பார்த்தியோ?” – கேட்டார்.

“…”

“அந்த படத்துல உன்னை மாதிரி ஒரு தோழிக்கு நண்பன் உதவி செய்வான். அதே கதைதான் இங்கேயும் நடக்குது. பையன் மேல குத்தம் குறை இருந்தாலும் யோசிக்கக்கூடாது. மனுசன்னா நாலும் இருக்கத்தான் செய்யும். நம்மை மீறி எதுவும் நடந்துடாது. புடிக்கலைன்னா விலகிடலாம் ஒன்னும் அடிபுடி கட்டாயம் கெடையாது.” – அவள் மனதை படம் பிடித்தவர்போல் சொன்னார்.

“ஆமாம் இந்து வாய்ப்பு வரும்போது நழுவவிடக்கூடாது. இது உனக்கு நல்லது.” – காமாட்சியும் எடுத்துச் சொன்னாள்.

இந்து தடுமாறினாள்.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *