சாவி




(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கடிதத்தைப் பிரித்தவுடன் அதிலிருந்து இனிய மெட்டி சத்தத்துடன் ஏதோ ஒண்ணு தரையில் விழுந்தது. கையில் எடுத்துப் பார்த்தால் சாவி பளபளத்தது. பித்தளைச் சாவி. அதனின்று ‘பழநி’ கம்மென்று ஆளைத் தூக்கிற்று. அவரை அறியாமல் வாய் முறுவலித்தது.

“புள்ளையாண்டான் கடுதாசி’ போட்டிருக்கானா?”- கேட்டுக் கொண்டே உள்ளிருந்து அவள் வந்தாள். அவ ளுக்குக் கட்செவி, லேசான நரை கூந்தலில் அங்கு மிங்குமாய் சுடர் விடுகையில் அவள் முகம் தனியாய்ப் பொலிந்தது. கடிதத்தை அவளிடம் நீட்டினார். கடிதமோ, கதையோ, புராணமோ எதாயிருந்தாலும் அவள்தான் அவருக்குப் படித் துக் காட்டுவாள். தான் உரக்கப் படிக்கையில் தனக்கும் காது கேட்கும். அவருக்கும் படிக்கும் சிரமம் தவிர்க்கலா மல்லவா?
“அம்மாவுக்கு அநேக கோடி நமஸ்காரம். க்ஷேமம். க்ஷேமமா? கடைசி நிமிஷத்தில் என் பிளான் தடமாடி விட் டது. இதோ எக்ஸ்கர்ஷனுக்கு வாத்யாருடனும், பையன்களு டனும் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இது என் படிப் புக்கு அவசியம். மன்னிக்கவும். எளக்கும் ஏமாற்றம்தான் என்று சொல்லணுமா?
ஆனால் அம்பாளுக்கு இங்கே இப்போ கோடி அர்ச்சனை நடக்கிறது. நான் வர முடியாவிட்டாலும் அப்பாவும் நீயும் இங்கு வந்து ஏன் தங்கக்கூடாது? அறை ஜன்னலிலிருந்து கோயில் ஸ்தூபி பார்க்க அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும் ரூம் சாவியை இத்துடன் அனுப்பியுள்ளேன்.
நமஸ்காரம்.
பி.கு:- அம்மா, எனக்காக சுடச்சுட ஆவி பறக்க நெய் சொட்டச் சொட்ட சர்க்கரைப் பொங்கலை ஒரு தடவை வழிச்சு அடித்தொண்டையில் விட்டுக்கோ. சூடு உள் இறங்கும்போது என்னை நினைச்சுக்கோ. எனக்குத்தான் கொடுப்பனை இல்லை.
பி. பி.கு:- திரும்பி வர்றப்போ நேரில் சாவியை வாங்கிக்கறேன்.”
அவள் விழியோரங்கள் லேசாய்ப் பனித்தன.
அவன் ஆசையாத்தான் எழுதியிருக்கான். ஆனால் பொங்கல் தொண்டையிலே விக்கிக்கத்தான் போறது. சேந் தாப் போல பத்து நாள் பையன் வந்து இருந்தான்னா அவன் வாய்க்கு உணக்கையா மோர்க்குழம்பில் பருப்புருண்டை, அடிநாக்கில் தொட்டு இழுக்கிற மாதிரி வெத்தக் குழம்பும் தேனாப் பண்ணிப் போடலாம். ஆனா அவருக்குக் காரம் ஆகாது. அம்பி வந்தால் வீட்டுக்கு வெளிச்சம் போட்டாப் போல இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி நடந்துக் கறதுல மன்னன். அவருக்கேற்ப பூஜைக்குக் குடலை வழிய மலர் பறிப்பதும், மூணு வேளை மூக்கைப் பிடிப்பதும், எனக்கு அம்மியிலே அரைச்சுக் கொடுப்பதும், தேங்காயை மடல் உரிப்பதும் “ஏண்டா உனக்கு தலையெழுத்து என்னால் முடியாதா? அப்பிடியே முடியாட்டாலும் சிவாமி யும் காத்தானும் இருக்காளே’ ன்னாலும் கேக்க மாட்டான். “தில்லிக்குப் பாச்சா, தல்லிக்குப் பிட்டா. நான் இதெல்லாம் பண்ணாட்டா, இதெல்லாம் எனக்குத் தெரியும்னு உனக்கு எப்பம்மா தெரியறது?” அப்பிடிம்பான். பிரிவுங்கறது கஷ்டமாத்தான் இருக்கு. அதுவும் ஒரே பிள்ளை. முன்னாலே யும் பின்னாலேயும் போயாச்சு. இந்தக் குடும்பத்துலே மட்டும் ஏன் தான் இப்படி ஒரு மரத்துக்கு ஓர் இலையாப் போ இத்தனைக்கும் இவருக்குக் கூடப் பிறந்தவா இரண்டும் மூணுமா அஞ்சு பேர் இருக்கா. மச்சினமார்களுக் கும், நாத்தனார்களுக்கும் புத்ர சம்பத்துக்குக் குறைவில்லே. எல்லாரும் சௌகரியமாத்தான் இருக்கா. அண்ணாவுக்கு தங்கள் பங்கை எழுதி வெச்சுட்டா, நமக்கு வயல்லேந்து வர்றது வயத்துக்கு போறும்னு புள்ளையை ஆத்தோடு நிறுத்தி வெச்சுக்க முடியல்லீயே! படிப்பு, உத்யோகம் எல்லாத்தையும்விட அவளோட போட்டி அதுலல்லாம் ஆசை விட வில்லையே! மச்சினன்மார் கெட்டிக்காராள். ஆனாலும் அவா பேரை விளங்க வெக்கற மாதிரி அவர் குழந்தைகள் சுவாரஸ்யமா இல்லை. சரி, புத்தி எங்கேயோ குப்பை மேட்டைச் சுத்தறது, நம்ம விதி நம்மதுன்னு இல்லாமே.
“போவோமா?”
அவள் கேள்விக்கு அவர் தலையசைக்கா விட்டாலும்- பேசாமலிருந்தாலே அவள் அனுபவத்தில் அப்பிடித்தானே அர்த்தம்.
ஆனால் வீட்டை விட்டு வெளியூருக்குக் கிளம்பறதுங் கறது லேசா இருக்கா? வீட்டுக்குக் காவலாப் படுக்க, பக்கத் தாத்து தயவை நாடணும். அந்தப் புது ஜோடிக்கு கொண் டாட்டந்தான், மாமியார் காவலிலிருந்து இரண்டு மூணு ராவேனும் விடுபடலாமே!கொட்டிலில் மாட்டைப் பராமரிக்க ணும்; புது மாடு புதுக் கன்னு. ஆனால் நல்ல பால். கள்ளிச் சொட்டாட்டம் கறந்து காய்ச்சி வீட்டுக்குக் காவல்காரா குடிக்கத்தான் போறா. குடிச்சுட்டுப் போறா. நெல்லு மூட்டையை எலி கடிக்காமல், மல்லிச் செடி வாடாமல், தண்ணி ஊத்திப்பாத்துண்டா சரி. இன்னும் ஏதோதோ இருக்கு; சொல்றதும், சமயத்துல சொல்ல மறந்து போறதும்.
எல்லாத்துக்கும் மேலே அவரோட உடம்புவாகு இருக்கு. மூல உபத்திரவம். மாடி ஏறினால் மேல்மூச்சு வாங்கறது. ப்போது சமீப காலமா ரத்தத்துல ஏதோ சக்கரையாம், உட்காந்தா குத்தம். நின்னா அபராதம்னு இருக்கு. இப்ப டியே இருந்தா வீடே ஜெயில், உடம்பே சிறைன்னு இன்னும் எத்தனை நாள் ஓட்ட இருக்கோ? போனாலும் போறதுன்னு துணிஞ்சவாளுக்குத் தான் சாமியும் பின்வாங்கறார்.
‘போவோமா?’ என்றாள்.
பஸ் ஸ்டாண்டிலிருந்து ஊருக்குள் நுழைகையிலேயே கூட்டம் நெரிந்தது. பிளாட்பாரங்களில் வளையல், துணி, மிட்டாய், பட்டாணிக் கடைகள் போட்டு வியாபாரம் மும் முரமாய் நடக்கிறது. ஊரே ‘ஜே ஜே கலகல’ ன்னு எவ்வளவு நன்னாயிருக்கு! ஏற்கெனவே இங்கே வருடம் முந்நூத்தி அறுவத்தி அஞ்சு நாளும் உற்சவம். உற்சவருக்குத் தன் கிரகமே மறந்திருக்கும், எப்பவும் தெருவில்தானே வாசம். கூட கோடி நாமம் சேந்துண்டா கேக்கவும் வேணுமா? கிரா மத்துலேயே உட்காந்துண்டிருந்தா இதெல்லாம் கிடைக்குமா?
நூறு ஆயுசு. சாமியே தோ வந்துட்டாரே! என் கையைப் புடிச்சுக்கோங்கோ. பரவாயில்லே. கூட்டத்தில் நம்ப நாட்டுப்புறம். இன்னிக்கு என்ன நந்தி வாகனமா? வெள்ளிக் கவசமா? சாமிக்கு ஏன் இந்த அவசரம், திருவாசிகூட இல்லாமல்? சாமியா? அம்மனா? தாரை, தப்பட்டை, கொட்டு முழக்கு, யானைமேலே நகார், குதிரை…என்ன தான் இருந்தாலும் ராஜகுமாரி இல்லையா?
அட, ஒட்டகமும் வந்துருக்கே. இந்த அஷ்டக் கோணல்லே என்ன ஒய்யார் நடையடி? கொண்டையலங் காரம் குட்டி நாத்தனார் போல கழுத்து ஒடிப்புடி! ஸ்படிகம் உடைந்தாற்போல் சிரிப்பு மணிகள் அவளினின்று தெறித்துத் தெருவில் ஓடின்
அவள் சிரிப்பைக் கண்டு அவளே சற்று மிரண்டு போனாள். இதுபோல வயசு உதிர்ந்து சிரிச்சு எவ்வளவு நாளாச்சு! அம்பி, சின்னக் குழந்தையாய் அவள் முழங்காலில் ஏற்றம் ஆடினபின் இப்போத்தான்.
சாமி அவர்களைத் தாண்டியதும் கூட்டம் சற்று நெகிழ்ந்தது. கையில் விலாசத்தை வைத்தபடி வழியைக் கணித்துக் கொண்டே, “அட இதோ, தெருவும் வந்தூடுத்தே, கீழக் கோபுரத்துக்கு இவ்வளவு கிட்டவா? தினம் கோபுர தரிசனம், அம்பி கொடுத்து வெச்சவன்தான். நாப்பத்தஞ்சு, நாப்பத்தாறு… இதோ நாப்பத்தொம்போது. ஐயோ, மாடி ஏறணுமா? மெதுவா ஏறுங்கோ. கம்பியைப் புடிச்சுண்டு முன்னாலே போங்கோ, தடுக்கினாலும் நான் தாங்கிப்பேன். பரவாயில்லே -”
“ஐயா, ரூம் நம்பர் பதிமூணு எங்கே?”
“ஓ, காலேஜ் குமார் ரூமா, வாங்கோ வாங்கோ அவரோட அப்பா அம்மா…? சரி, சரி! நீங்க வருவீங்கன்னு அவர் ஏற்கனவே சொல்லி இருக்காரு. டேய், யாரங்கே பையா. வந்தையாடா? வா. இவங்களை பதிமூணுக்கு அழைச்சிட்டுப் போ…”
‘வணக்கம் ஐயா, வணக்கம் அம்மா. வாங்க. என் கையிலே ஒரு மூட்டையை கொடுங்க.”
“அட ராமா. இன்னொரு மாடியா? அட பாவி!”
“என்னங்க?”
“சொல்லாம கொள்ளாம சோத்து மூட்டெயெப் புடுங் கிண்டூட்டையே? ராவுக்கு வாயில் மண்ணைப் போட்டையா?”
ஏற்கனவே நறித்த பாகற்காய் போன்ற அவன் உருவம் இன்னும் வெட்கத்தில், பச்சாதாபத்தில், திடீர் பயத்தில் குறுகிற்று. “நான் என்னம்மா கண்டேன்? என்னை மன்னிச் சுக்கிடுங்க.”
“சரி, சரி. வழியைக் காண்பி. உன்னைச் சொல்லி என்ன பண்றது? ஈஸ்வரா! பவுதான்யா தெருவுக்கு வந்தப்புறம் ஆசாரத்து மேலே ஆசை. கூழுக்கும் மீசைக்கும் இருக்கற ஒப்புறவுதான். பசி இப்பவே வயத்தெக் கிள்ளறது. சோத்து மேலே விபூதியைத் தெளிச்சுட்டு வாயிலே போட்டுக்க வேண்டியதுதான். சரி. இன்னிப்பொழுது இப்படி. அவர் வேணும்னா எனக்கும் சேர்த்துக் கூட நாலு காயத்ரி பண்ணட்டும்.”
“அம்மா சாவியைத் தர்றீங்களா?”
இரு கதவுகளையும் விரியத் திறந்து, ஸ்விட்சைத் தட்டி விட்டு அவர்களுக்கு வழிவிட்டு, பையன் வெளியே நின்றான்.
புது உலகத்துள் நுழைவது போல் இருந்தது. எங்கு பார்த்தாலும் புஸ்தகங்கள் வழிந்தன. கட்டிலில், மேஜையில், நாற்காலியில், ஸ்டூலில், ஒன்றிரண்டு பாய்மேல் கவிழ்த்துப் போட்டு தரையிலும் சிதறுண்டு கிடந்தன. கால்பட்டு, கண்ணில் ஒற்றிக் கொண்டாள். தன்னை அறியாமலேயே வரும் பழக்கம். இரண்டு புத்தகங்களை ஒதுக்கி அவரைக், கட்டிலில் அமர வைத்தாள். சுற்றும் முற்றும் அவள் பார்வை வெள்ளோடிற்று. ஒரு ஜன்னல் கம்பியிலிருந்து இன்னொரு ஜன்னல் கம்பிக்கு ஓடிய கொடியில் ‘லாலிபீலி’ என்று துணிகள் தொங்கின. அழுக்கும், அவசரமும் கசங்க லுமாய், சொக்காய், பனியன், பாண்ட், வேஷ்டி-அம்பி லுங்கிகூட கட்டறானா?
எதிர் மூலையில் ஆள் உயரக் கண்ணாடி அடியில் ஒரு முக க்ஷவர செட்டு இன்னும் அலம்பாமல் மயிரோடு காய்ந்து, உலர்ந்து கிடந்தது. சீப்பில் அரை டஜன். அது என்ன வாரலோ? ஒரு தடடில எண்ணெய் தினுசில் நாலு சீசா, பவுடர், ஸ்னோ. சுவரோடு சுவராய் ஒட்டினாற்போலிருந்த ஒரு கதவைத் திறந்ததும் குபீரென பினாயில் நெடி முகத்தி லடித்தது. ‘ஓஹோ!” சட்டென மூடினாள். இப்போ கால மெல்லாம் காலலம்பறதிலிருந்து தலைக்கு விட்டுக்கறதுவரை, கைக்கெட்டற தூரத்தில் இருப்பதுதானே பாஷன் ! ராமா, ராமா, அங்கு பத்து நாள் வந்து தங்கற அம்பியாவே இல்லையே’ ஒரே ஊழலாயிருக்கே! ஆனால் அவாளையும் சொல்லிக் குத்தமில்லை. பிரும்மச்சாரிக் கட்டை, காலா காலத்தில் கால்கட்டுப் போடும்வரை கலைச்சுப் போடறதை எடுத்துவைக்க அம்மா. இதெல்லாம் ஒழுங்குபடுத்தி காணப் போறோமான்னு நினைக்கறப்பவே தலையைச் சுத்தறது, முருகா!
“கூப்பிட்டீங்களாம்மா? இதோ இருக்கேன். என்ன வேணும்?’
அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “அட நீயும் முருகனா?”
“ஆமாம். நான்தாம்மா முருகன், நீங்க குரல் கொடுத்தா எங்கிருந்தாலும் வந்துடுவேன். இங்கேதான் சுத்திக்கிட்டு இருப்பேன். இப்ப என்ன வேணும்? சூடா நாயர் கடையி லேந்து இட்லி, காபி, பன்… தனியா கிளாஸ்லே தக்காளி சாம்பார். நல்லாயிருக்கும் அங்கே. காலையிலே குளிக்க வெந்நியா? தண்ணியா? வெந்நி ஒரு பக்கெட் எட்டணா, சூடா நானே போடுவேன். குமாரய்யா என்திட்ட, பெசலா உங்களை கவனிச்சுக்கும்படி சொல்லிட்டுப் போய் இருக்காரு உங்களிடம் எந்தக் கணக்கும் கேக்கக்கூடாது. சொல்லக் கூடாது நீங்க சொன்னதை உடனே செய்யணும்னு உத்தரவு.
அவளுக்கு மறுபடியும் சிரிப்பு வந்தது.
“எனக்கு ஒண்ணும் வேண்டாம். எங்கேயாவது நல்ல மோர் கிடைக்குமா?”
“ஓ இந்தச் சந்து முனைலே ஒரு ஆயா சில்லுன்னு பானைலே விக்கறா. ஒரு கிளாஸ் இருவது பைசா, ரெண்டு வாங்கிவாரேன். கூஜாவுலே தண்ணியை மாத்திட்டு போறேன்”.
கீழே போனவன் இரவு பூராத் திரும்பி வரவில்லை. இளக் கிக்க மோரோ, நீரோ இல்லாமல் இறுகிப்போன தயிருஞ் சாதம் மாரில் வில்லுண்டையாய் அடைத்தது. அவருக்கு நல்ல வேளையாய் இட்லி மெதுவாய் இருந்தது. மிஞ்சின இரண் டைக் கொடுக்க அவனைத் தேடி, பிறகு வேறு வழியில்லாமல் வாசலுக்கு வெளியே, வாஷ் பேஸினடியில், குப்பைத் தொட்டியில் எறியும்படி ஆயிற்று. அதிலிருந்து கும்பி நரற்றம் குடலைக் குமட்டிற்று. ஸஹிக்காமல் மூக்கைப் பிடித்துக் கொண்டு உள்ளே ஓடிவந்துவிட்டாள்.
கோடி அர்ச்சனைக்கு டிக்கட் அனாசாரம்தான் போலருக்கு. புண்ணியத்தை எப்படியெல்லாம் தேடறோம். புது இடமோ. என்னவோ தெரியல்லே, ராப்பொழுது சரியாகத் தூக்க மில்லை. விடியற் காலம் கண்ணசந்துட்டு தூக்கிவாரிப் போட்டாற்போல் விழிப்பு வந்ததும் கூடவே ஜன்னலுக்கு வெளியே கோயில் ஸ்தூபி மேல் வெய்யிலும் வந்து விட்டது. அறைக் கதவை யாரோ தட்டும் சத்தம்.
உடம்பு முறித்துப் போட்டாற்போல வலித்தது. திறந்த தும் எதிரே முருகன் துடைப்பத்தோடு நின்றான். (காலையில் எழுந்ததும் நல்ல முகமுழி!)
“என்னடா முருகா, மோர் வாங்கப் போனவன் மாடு பிடிக்க சந்தைக்கே போயிட்டையா?’
அவன் முகத்தில் அசடு வழிந்தது. கேலிப் பொம்மைக் குப் போல் முருகனுக்கு முகம் பூரா முழிதான். அவன் உதட்டோரம் கோடைவாய் காய்ந்து இருந்தது.
“பெட்டியும் கூடையுமா ஒரு புதுப் பேரம் இறங்கிச்சு. கூடப் போய் கொண்டு வெச்சா ஒரு கால் ரூபா கிடைக்கும் அவசரம். மறந்து போச்சு. நெனப்பு வந்தப்போ நேரமாயிடுச்சு. ஆயா பானையைத் தூக்கிட்டா”.
“சரி, சரி, வெந்நீரைப் போடு.”
“இன்னிக்கு வெந்நீரில்லேம்மா.”
“என்னடா வந்தவுடனே ஆனை பூனைன்னே. இப்போ வெந்நீரில்லேங்கறே?”
அவனிடம் துளிக்கூடப் பதட்டமே இல்லை. “நான் என்ன செய்ய? முதலாளி கரி வாங்கிப் போடல்லே. பத்த வைக்க எதிர் வீட்டில் எப்பவும் கங்கு வாங்கிப்போம். அவங்க கதவைப் பூட்டிக்கிட்டு எங்கேயோ ஊருக்குப் போயிட்டாங்க.”
“அதனால எங்களுக்கு வெந்நீருக்கு அஸ்தமிச்சு போச் சாக்கும்! நீ கெட்டிக்காரன்தான். கையாலாகாட்டாலும் எல்லாத்துக்கும் பதில் சொல்லி வாயாலே இட்டு ரொப்பறே. என்ன திருதிருன்னு முழிக்கிறே? இங்கே பால் கிடைக்குமா?’
“பால் என்ன? காபி, டீ, பன்-”
“தக்காளி சாம்பார்” என அவள் முடித்தாள். அவ ளுக்குச் சற்று அலுப்பாய்த்தானிருந்தது. “சரி, நீ இடத்தைக் காட்டு போறும். நான் வாங்கிக்கறேன்.”
பாலுக்குத் தோஷமில்லே. கொண்டு வந்திருக்கற சுட்ட சப்பாத்தியை வெச்சிண்டு இன்னிப் பொழுதை ஓட்டலாம். நாளைக்கு அவுல்லே தண்ணி தெளிச்சு, ராத்திரி ஏதாவது பழம். அப்புறம் சுமங்கலிக்குத் தோஷமில்லே. “இன்னிக்கு நீங்க குளியல் இல்லாமே மடி மாத்திக்க வேண்டியதுதான். வேணும்னா கூட இன்னும் நாலு காயத்ரி.”
அவர் நெற்றிப் பொட்டை ஒற்றை விரலால் தேய்த்துக் கொண்டு நின்றார். சில சமயங்களில் அவர் அப்படித்தான் மசமசவென்று ஆயிடறார்.
அப்போது பஞ்சக்கச்சம் கட்டக்கூட அவள் தான் ஒத்தாசை செய்ய வேண்டியிருக்கு. நின்னா நின்னபடி உட்கார்ந்தால் உட்கார்ந்தபடி. நிலையைக் கலைக்காட்டா, அதிலேயே மலைச்சு நிப்பார். நான்தான் நேரம் பாத்து, வேளை பாத்துத் தபஸைக் கலைக்கணும். இப்பத்தான் போன மாசியில் மஞ்சக்காமாலை வந்தப்புறம் இப்படி ஆயிட்டார். முன்னாலே இவ்வளவு மோசமில்லை. இருந்தாலும் முன்னே யும், பின்னேயும் புதைச்ச பிறப்புகள் என்னைவிட இவரைத் தான் தாக்கி இருக்கு. ஆம்பிளைக்கு ஊமைக்காயம். ஆமாம், இவரைச் சாக்கிட்டு நானா? என்னைச் சாக்கிட்டு இவரா? இப்போதைக்கு என் தாலிபலத்தில்தான் அவர் கடிகாரம் ஓடிண்டிருக்குன்னு ஜோஸ்யனும், வைத்தியனும் சொல்றான். ஆனால் இந்த மஞ்சள் குங்குமமும் இவர் இல்லாமல் எனக் கேது? முன்னாலே? எது பின்னாலே?
இதுபோன்ற இன்பகரமான ஆச்சர்யங்கள் அவளை அழுத்துகையில் லேசான பயம், திடீர் ஆதங்கம் கண்டது. இப்பவே அவர் முகத்தை உடனே பார்க்கணும். இது என்ன அசட்டுப் பரிவு? ஆனால் முழுக்கவும் அசடோ? பால்யம் திரும்பிப் போச்சா? அவருக்கா? எனக்கா? கோவிலைச் சாக்கிட்டு இதென்ன தேனிலவா?
”என்னம்மா சிரிக்கிறீங்க?”
சிரிச்சேனா என்ன?
பாலை வாங்கிக் கொண்டு ‘திடுதிடு’வென மாடியேறி வருகையில் பையன் கேள்வி கேட்ட படியண்டை அங்கே பதுங்கியிருந்த சிரிப்பு திரும்பவும் அவள் மேல் பாய்ந்து தோளில் தொத்திக் கொண்டது. முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கையில் அவள் தோள்கள் குலுங் கின. உள்ளுக்குள் வெட்கம், பால் கொழுக்கட்டை போல் அற்புதமான உண்டை உருளையாய் தித்திப்புடன் கழுத்து நரம்பில், நெற்றிப் பொட்டில், வகிடு நடுவில் உள்ளோடி கிளுகிளுத்தது. கிழங்களின் கொம்மாளம்.
என்னை இப்போது கிழம் என்று யார் சொல்லுவா?
ஜன்னலுக்கு வெளியே வான் நீலத்தில் பிதுங்கிய ஸ்தூபி காலையின் மஞ்சள் வெய்யிலில் செம்பொற்சுடர்க் கொழுந்து விட்டெரிந்தது. அம்பி சரியாத்தான் ஆசைகாட்டி இருக்கான். அந்தத் தகதகப்பில் அத்துடன் அவளே பிழம் பானாற்போல் உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை பயங் கர ரோமாஞ்சலி. காலடியில் பூமி கிடுகிடுத்தது. அந்த பூகம்பம் அவளை உள்ளோடு அவள் சதையினின்று பிய்த் தெடுத்துக் கோயிலின் ஸ்தூபி உயரத்திற்குப் பந்தாடுகையில் –
‘வேண்டாம், வேண்டாம். தாங்க முடியலை, நான் முன்னாலோ, அவர் பின்னாலோ அது எங்கள் கையில் இல்லை. இப்போ தோன்றுவது அம்பிகே, இந்தத் தருணத்தை மட்டும் என்னை விட்டுப் பிடுங்காமல் எனக்கே கொடுத்து விடு. தாலியோடு பவழமாய், என் தவமணியாய், யார் கண்ணுக்கும் படாமல், எனக்குக்கூடத் தெரிய வேண் டாம், கோர்த்து அணிஞ்சுக்கறேன்.’
காலடியில் பூமியின் நடுக்கம் மெதுவாய் அடங்கி படிப் படியாய் நிலை திரும்பி மேலே மெத்திகின்றது. ஸ்தூபி மேல் மஞ்சள் மாறுகையில் பச்சைக்கிளி அதன்மேல் பறந்துவந்து குந்துகிறது. ஏண்டிம்மா, நான் கேட்டதைக் கொடுக்க நீயே நேரவே வந்துட்டையா? பச்சைக் கிளி, கோயில் ஸ்தூபிமேல் இறங்கிவந்து தன் இறகுகளை அழகாய்க் கோதிக் கொண்டது. அர்ச்சகர்களின் பல குரல்களில் அர்ச்சனை இரைச்சல் கோயிலிலிருந்து அறைக்குள் மிதந்து வருகிறது.
அவரது உதடுகள் சப்தமற்ற அசைவில், உள்வந்த ஒலி யைத் தேவியின் நாம் மந்திரத்தில் திரும்ப உருவாக்கி உதிர்க்கையில் அந்நந்நாமத்தின் அதனதன் நளினத்திற்கும் உக்ரத்திற்கும் ஏற்ப உதிர்ந்தது மலரா? குங்குமமா? மறு மலர். மறு குங்குமம். நாடி பூஜையில் நெஞ்சுக்கு நெஞ்சு நரம்புகளின் மறு மீட்டல்.
தங்கள் விழுப்பும், புள்ளையாண்டான் சேர்த்து வைத் திருந்த அழுக்குகளையும் ஒருவாறாக நனைத்து, கசக்கி முதுகு நிமிர்வதற்குள் உச்சி வெய்யில் பட்டை வீறிற்று. வெறும் வயிறு வலித்தது. அந்த சுட்ட சப்பாத்தியை இப்போ முறித்துப் போட்டுண்டால் தொப்புளைத் திருகும். ஒண்ணும் வேண்டாம். முதுகு வலி தீர படுத்துப் புரண்டால் போதும். இன்னிக்கு சாயந்தரமாவது அவரோடு கோயிலுக்குப் போகணும். சொர்க்கத்தினும் சுகமாய நித்திரைக்கும் விழிப்புக்கும் இடைவிளிம்பில் கண் சொக்கிற்று.
“என்னம்மா, தூங்குறீங்களா? தூங்குங்க; தூங்குங்க.”
‘பாபி!’- மனத்திற்குள் சபித்தாள். இனி தூக்கமேது?
எதிரே மசால் வடையைக் கடித்துக் கொண்டு முருகன் நின்றான்: “ஒண்ணு அஞ்சு பைசா. நாலணாக்கு வாங்கி வரட்டா. சூடா நல்ல மணம்மா-‘
“என்னடா முருகா, சாப்பிட்டயா? என்ன சாப்பிட்டே?”
“முதலாளி வீட்டிலேந்து அவருக்கு சாப்பாடு வரும். மிச்சத்தைத் தின்னுப்புட்டு டிப்பனைக் கழுவறச்சே வயிறு என்ன ரொம்பிச்சோ அதான். குறைக்கு உங்களைப் போல வங்க கொடுக்கற துட்டோ, பண்டமோ’
“முருகா, உனக்கு கூடப்பொறந்தவா இருக்காளா?”
“அதுக்கென்ன குறைவு? முன்னால் அண்ணன், அப்புறம் ஏழு அக்கா, அப்புறம் நான்.”
அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “என்னடா, இந்த ரயில் வண்டிக்கு உங்க அண்ணன் டிரைவர். நீ கார்டா?”
அவன் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
‘அப்பா என்ன பண்ணறா?”
‘அப்பா வயசானவரு. அம்மா பாங்கிலே வாசல் கூட்டி, தண்ணி எடுத்து வைக்கிறா. அண்டையில் ரெண்டு கடைக்கு சாணி தெளிக்கறா. ஏசண்ட் ஐயா வீட்டில் பத்து தேய்க்கறா. ஆனா அதுக்குத் தனி கூலி இல்லை. ஏசண்ட் ஐயா சொல்றாரு பாங்க் சம்பளத்தோடு சேர்ந்து போச்சாம். அண்ணன், நாயர் கடையிலே மேஜை துடைக்கறான். பூனைக் குட்டி ஒண்ணு வளருது. எங்க சம்பாதனை என்னத்துக்கு காணும்? இந்த புண்ணியத்தையும் குமாரய்யாதான் கட்டிக் கிட்டாரு.”
“எந்தப் புண்ணியம்?”
“எங்கம்மாவுக்கு வேலை பண்ணிவச்சது அவருதான்.” அவள் களைப்பு பறந்தோடி விட்டது. எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தாள். அவள் மட்டுமல்ல, அவரும் முருகனை உன்னிப்பாய்க் கவனிப்பது தெரிந்தது.
“தானும் அப்பப்போ கொடுப்பாரு. ட்ரவுஜரும், சொக் காயும் புதுசா எடுத்துத் தரேன்னு சொல்லியிருக்காரு. அவரு சொன்னாலே கிடைச்ச மாதிரிதான்.” பையன் தன் பேச்சிலேயே உற்சாகம் அடைந்தான். “டேய் முருவா’ன்னா, கூப்பிட்ட குரலுக்குப் பக்கத்தில் நிக்கணும் உள்ளே வந்ததும் சொக்காயைக் கயட்டி அடிப்பாரு. கொடி யிலே மாட்டிக்கிட்டாலும் சரி, குறி தப்பி கீளே விளுந் தாலும் சரி, கொட்டின சில்லறையை கையாலே தொட மாட் டாரு. அது அப்பாலே முருவனுது. படா குஷி. ஆனா ‘டாம், தாட்பூட்’ என்னென்னவோ இங்கீஸுலே பொரிஞ்சு தள்ளு வாரு. ஏச ஏச எம்பாடு குசாலு. சில்லறை நிறைய கொட்டு மில்லே!”
“முருகா, நீ பெரிய ஆளுதான்.”
“என்னம்மா செய்ய? திட்டினாலும், என் முதுவுலே டமாரம் கொட்டினாலும், ஒட்டிக்கவா போவுது? அதுவும் அந்த அம்மா வந்துட்டா அவருக்கு இன்னும் குஷி கூடிடும், அவங்க எதிரே என்னைக் கம்பியிலே இறைச்சியாட்டம் கோத்துத் திருப்பித் திருப்பி வாட்டுவாரு. எனக்கென்ன? செவுத்தோரம் எலியாட்டம் பதுங்குவேன். ஆனால் ஓட மாட்டேன். ஒரு தபா அவங்க எதிரே பவுடர் டப்பாவை என்மேலே வீசி எறிஞ்சாரு பாருங்க…”
“அவங்க அவங்கன்னா எவங்கடா?”
“அதாம்மா ஏசண்ட் ஐயா மவள். டப்பியை அடிச் சாரா? என் கறுப்பு மூஞ்சியிலே மாவு அப்பி வெள்ளை கோத்துக்கிட்டு நின்னேன். வாசனை என்னைத் தூக்குது. ரெண்டு பேருமா சிரிச்சு சிரிச்சி, என்னையும் சிரிப்பு தொத்தி டிச்சு. நான் சிரிக்க அவங்க சிரிக்க விலாவைப் புடிச்சிக் கிட்டு கட்டில்லே உருள்றாங்க. அப்புறம் அந்த அம்மாதான் என்ன குமார், உங்களுக்கு ஆனாலும் இவ்வளவு கோபம்’னு தன் மணிபர்சுலேருந்து ஒரு நோட்டை என் மேலே வீசி எறிஞ்சாங்க. மொடமொடன்னு அஞ்சு ரூவா காயிதம் மூஞ்சிலே விழுந்தா நோவுமா? நோவட்டுமே! கண்ணுலே ஒத்திக்கிட்டு, ஜார்ப் பையிலே சொருவிக்கிட்டேன். பாங்க் ஏசண்ட் மவளில்லே, எப்பவும் புத்தம் புதுசா நோட்டு. ஒரே மவ. விதவிதமா உடை, உடைக்கேத்த நடை. ஒடிச்சி ஒடிச்சி நடப்பாங்க. எனக்கு ஆச்சரியமா இருக்கும், இதென்ன இடுப்புப் பூட்டுக் கயண்டு போச்சா?” வெளியே கானலில், பக்கத்து, எதிர் வீடு, கடை கூரைகள், மொட்டை மாடிகள் நடுங்கின.
“அந்த அம்மாவே, பெரிய தமாஸ் பேர்வழி. ஒரு வாட்டி திடீர்னு பாத்ரூமிலிருந்து குளிச்சிட்டு வராங்க பாருங்க, ஐயாவோட பாண்ட்டை மாட்டிக்கிட்டு ஐயாதானோன்னு அசந்துட்டேன், குமார். எனக்கு இது நன்னாயிருக்கோ? அவங்களும் கிட்டக்கிட்ட ஐயா காதுக்கு வருவாங்க. திடீர் திடீர்னு என்ன கிசுமுசு பேசுவாங்களோ? என்ன சிரிப்பாங்களோ?”
அவள் மண்டையுள் சுறீல் சுறீலென இரு மின்னல்கள் வெட்டின. இரு மின்னலா? அல்லது ஒரு மின்னலே கொடி பிரிந்தா? வெற்றி நடுவுள் அதன் நீலப் பேரொளி மின்னி மறைகையில் மண்டை தீய்ந்தது. அவரை ஓரக்கண்ணால் திகிலுடன் நோக்கினாள். அவர் நெற்றிப் பொட்டை ஒற்றை விரலால் தேய்த்துக் கொண் டிருந்தார். திடீரென அவர் நெற்றியில் நாலு தண்டவாளங் கள் புடைத்து ஓடின.
“ஒருநாள் ராத்ரி ஐயாவுக்குக் காத்திருந்து வாசற்படியி லேயே உறங்கிட்டேன். விலாவுலே பூட்ஸ்கால் செவுட்டி முளிச்சுகிட்டேன். ஐயாவும் அம்மாவும் நிக்கிறாங்க. நடு ராவா, விடிகாலையா எனக்குத் தூக்க மயக்கம் நிச்சயமா வல்லே. ‘ழேய் முழுவா, நீ முழுவன் தானாடா? தொழைஞ்சு போச்சடா ஷாவி, மழு ஷாவி-‘
“நிறுத்து,நிறுத்து” எனக் கூவினாள். அவள் காதைப் பொத்திக் கொண்டாளாயினும் அவன் குரல் கிரக்கமற்று செவிப்பறையில் நகார் அடித்துக் கொண்டே இருந்தது. வேகமெடுத்துவிட்ட சொல் ‘சட் ப்ரேக்கு ‘ கேட்குமா?
“அந்தம்மா, இவருக்கு மேலே தள்ளாடறாங்க, அதுவே ஒரு சிரிப்பு. ரூமைத் துறந்து விட்டேன். ‘முழுவா, ழெண்டு கப் ஷூடா நாயர் கடை பெசல் டீ இந்தா, மிச்சத்தை நீயே வெச்சுக்க’
“துப்பட்டியாட்டம் கெட்டியா பத்து ரூவாத்தாள். அவர் சொன்னாலும் எனக்கே ஜரிக்காது. ஆனால் டீயைக் கொணாரத்துக்குள்ளே கதவு மூடியாச்சு. தட்டுத் தட்டுன்னு தட்டறேன். ஊ-ஹூம். பேச்சு மூச்சு இல்லே. ஒண்ணைக் குடிச்சேன். ஒண்ணைக் கொட்டினேன். சூடு ஆறிப் போவுதில்லே! வாசப்படியிலேயே நாயாட்டம் முடங்கிட்டேன். முளிப்பு வந்தப்போ கதவு திறந்தாச்சு. எப்போ திறந்தது எப்போ போனாங்க தெரியாது.”
ஜன்னலுக்கு வெளியே கோயில் ஸ்தூபிமேல் ஒரு பருந்து பறந்து வந்து அமர்ந்தது அதன் காலுக்கிடுக்கில் ஏதோ-
‘அம்மா! அம்மா! ஐயாவைப் பாருங்களேன்-!”
முருகன் விழிகள் திகில் வட்டங்களாயின. அவர் உடம்பு கிடுகிடென ஆடிற்று. வாயோரம் எச்சில் வழிந்தது. பாய்ந்தோடிப் போய் அவரைத் தாங்கிக் கொண்டாள்.
“முருகா, வண்டி கொண்டா-”
முருகன் கீழே ஓடினான். அவரைக் கட்டிலில் மெது வாய்ச் சாய்த்துவிட்டு ஒரு மாத்திரையைத் தண்ணீருடன் உள் செலுத்தியதும் நடுக்கம் சற்று அடங்கிற்று. ஆயினும் அவ்விழிகளின் வெறிச்சை அவளால் ஸஹிக்க முடியவில்லை. பறித்துப் பறித்து ஒட்ட மொட்டையான கறிவேப்பிலை மரம்.
தொடுத்த மலர் சருகாய்க் கருகி உதிர்ந்து காற்றில் ஆடும் வெற்று நார்.
ஆற்று மணலில் அமாவாசை நள்ளிருள். அக்ரஹாரத்தில் ராப்பிணம் இன்னும் எடுக்காமல் தெருவும் கோவிலும் உச்சி வெய்யில் பட்டினி. பயிர் அறுத்தபின் நடுப் பகலில் வயலில் தீய்ந்து நிற்கும் முளைகள்.
காலையில் குவளை பொங்கப் பால் தந்துவிட்டு மந்தைக்குப் போன தாய் திரும்பாமல் காலிக் கொட்டிலில் ராப்பூரா கன்றின் அலறல்.
அவசர அவசரமாய்ப் பெட்டியுள் துணிமணிகளை அள்ளிப்போட்டு மூடி, மேல் உட்கார்ந்து அழுத்திமூடினாள். “அம்மா,வண்டி வாசல்ல நிக்கிது. டாக்டர் வீட்டுக் குப் பெட்டி ஏதுக்கம்மா? ஐயாவை நான் பிடிச்சுக்கவா?” “தொடாதே!”-சீறினாள். குழந்தை மிரண்டு பின்னி டைந்தான். அதுவும் தெரியறது. யார் மேல் தப்பு சொல்றது? நம்மேல்தான். வாசப்படி தாண்ட நாம் லாயக் கில்லை. அதுவும் தெரியறது. ஆத்துலே துளசி மாடத் துக்கு வெக்கற அகல் விளக்கு, தோய்க்கற கல்லுக்கடி யிலே, அப்படியே வடிச்ச கஞ்சியோடு பருப்பும் நெய்யும் பளபளக்க வெங்கலாப்பையில் காக்கைக்கு வெக்கற சோத் துக்கு மேல் புண்ணியம் இங்கே என்ன இருக்கு? கடப்பைக் கல்லில் சோத்துக் கரண்டியின் தட்டலே மணியோசை, “கா! கா!” குரல் கொடுப்பே வேத மந்தரம். முதல் “கா” வுக்கே ரக்கை நிழல் கடப்பைக் கல்லில் தட்டுமே? எல்லாம் தெரியறது. தெரிஞ்சு என்ன பயன்? கொள்ளி போடன்னு எதிர்பார்த்துக் கொள்ளியையே பெத்துட்டேன். அதனால் இல்லை, எப்பவுமே எனக்கு இவர்தான்–
அவரைத் தாங்கிக் கொண்டு அவள் இறங்கினாள். அவர் கண்களில் வெறிச்சு, வாயில் சிரிப்பு. ஆனால் வாய்விட்ட சிரிப்பல்ல. அசட்டுச் சிரிப்பு. நல்ல வேளை இப்படியே இருந் தாலும் சமாளிச்சுப்பேன்.
“அப்பா, பஸ் ஸ்டாண்டுக்கு ஓட்டப்பா-‘
ஊருக்கு மேல் கோவில் ஸ்தூபி ஓங்கிநின்றது. நீல வானத்தைக் கழுவேற்றிக் கொண்டு அதில் இப்போது கழுகுமில்லை; கிளியுமில்லை.
இத்தனையும் பாத்துண்டு, கேட்டுண்டு தானே இருக்கே? எங்களை வேடிக்கை பார்க்கணும்னுதானே இங்கே இழுத்துண்டு வந்தே? ஏண்டி, நீயே இருக்கையா, இன்லையா?
“என்னம்மா. ஏதாச்சும் சொன்னீங்களா?” என்று ரிக்ஷாக்காரன் கேட்டான்.
“பஸ் ஸ்டாண்டுக்கு ஓட்டு, சுருக்க ஓட்டு-”
“அம்மா அம்மா மறந்துட்டீங்களா!”- பின்னால்முருகன் கையை உயரத் தூக்கிக் கொண்டே ஓடி வந்தான். ஆனால் அவனால் வண்டியைப் பிடிக்க முடியவில்லை. வண்டி வேக மெடுத்து விட்டது.
முருகன் வீசியெறிந்தான். ரிக்ஷாவுள், காலடியில், ‘கிண்’ணென்று தெறித்தபடி விழுந்தது. வெய்யிலில் அதன் பித்தளை பளபளத்தது.
சாவி. வண்டி பறந்தது.
முருகா, என் பிள்ளை அறையைத் திறக்கக் கொண்டு வந்தேன். என்னத்தையோ திறந்துட்டையேடா!
கைகளில் முகம் புதைந்தது. அவள் தோள்கள் குலுங் கின. அதற்கு மேல் தாங்க முடியலில்லை. அதுவரைதான் சக்தி.
அவர் கை, அவள் முதுகைத் தடவி, அவள் தோளை லேசாய் அணைத்துக் கொள்வதை உணர்ந்தாள்.
அவளுள் அப்போது நேர்ந்த கரையுடைப்பு அவளைத் தன்னோடு இழுத்துச் செல்கையில் தலைநிமிரவே பயமாயிருந்தது.
ஆனால் -? அப்போ?? -அப்படின்னா??? நீ இருக்கையா????
– மீனோட்டம், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1991, வானதி பதிப்பகம், சென்னை.
![]() |
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க... |