சாக்கிபனின் பல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 10, 2025
பார்வையிட்டோர்: 163 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூன்று மஞ்சளர்கள் எனும் சீன விவசாயிகளான லியூ சகோதரர் கன் நதி அருகாமை கிராமமொன்றின் வயல் வெளிகளுக்குள் அமைந்த வீட்டில் வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் தகப்பன், தான் பிறந்த நாளில் இருந்து தன் சொந்த கிராமம் தவிர்த்து வேறு எங்கும் போனதேயில்லை. வயல்களுக் குள்ளாகவே மூன்று தலைமுறையாக மரவீடு அமைத்து வாழ்ந்து பிள்ளைகள் கண்டு பெருகி வசித்தனர். இறந்துபோன தனது மனைவியையும் சிசுக்களையும் தனது வயல் வீட்டின் பின்பே புதைத்திருந்த தகப்பனாளவன் நதிக்கரையிலே அலைந்து கொண்டிருந்தான். அவனுக்கு விவசாய வேலைகள் இருந்து கொண்டேயிருந்தன. இளமையிலே தன் மனைவியை இழந்த அவன் மூன்று பிள்ளைகளை வளர்ப்பதிலே கவனமாக இருந்தான். மூவரும் தகப்பனோடு வயல் வேலைகளில் நாள்களைக் கழித்து வந்த கோடையில் தகப்பனோடு நெருக்கம் கொண்ட மருத்துவனொருவன் யாத்ரீகன் சுவானின் கதையில் வரும் புனித சாக்கியனின் பல் ஒன்று எங்கோ தொலைவில் பாதுகாக்கப்படுவதாகவும் அது ஒரு விநோத விதையென்றும் அதை எப்படியாவது திருடி வந்து நிலத்தில் புதைத்துவிட்டால் பின் எப்போதும் விதைக்காமலே தானியங்கள் வயலில் விளைந்துகொண்டேயிருக்கும் என்றும், அப்படி விளையும் தானியங்களின் மணிகளை ருசித்த எவரும் மூப்படைவதில்லை என்பதை அறிவித்த நாளில் இருந்தே சகோதரர்கள் மூவரும் அந்தப் பல்லை எப்படியாவது திருடி வந்துவிட வேண்டுமென ஆசைகொண்டவர்களானார்கள்.

தகப்பன் ‘தனது வயோதிகக் காலத்திலும் நதியின் போக்கிளை அறிந்து கொண்டவனாக நதி தனது மூர்க்கத்தைக் காட்டும் முள்பாகத் தனது விவசாயப் பணிகளை முடித்துக்கொள்ளத் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருந்தான். விதைப்புக் காலம் தொடங்குவதற்கு முன்பாக அவர்கள் ஒரு நாளில் வீட்டில் அடையும் கழுதைகளோடு தகப்பன் அறியாமல் அந்தப் பல்லைத் தேடிப் புறப்பட்டபோது மூவரும் இருபதுக்குள்ளான வயதே கொண்டிருந்தனர். பாதைகள் கிளைக்காத காவமென்பதால் அவர்கள் தூரதேசம் செல்லும் வணிகர்களின் பாதைகளில் பின்தொடர்ந்து நடந்தனர். மலையாடுகளும் தொலைவில் மறையும் சூரியனுமாகக் கண்டபடி நடந்தனர். சாக்கியனின் பல் இருக்குமிடத்தினை எப்படி அறிவதெனத் தெரியாமல் நீண்ட பனி மலையை அடுத்த மடாலயமொன்றில் வசிக்கும் துறவி களைக் கேட்டு அறிவதென முடிவுற்றவர்களாக, பதினெட்டு நாள்கள் நடந்து தொலைவில் செம்மஞ்சள் கொடியசையும் ஒரு மடாலயத்தைக் கண்டனர்.

அது சுற்றுச்சுவர் கொண்டு அரைக் கோள வடிவில் இருந்தது. மடாலயத் துறவிகளைக் கண்டபோது அவர்களில் மூத்த துறவி மூவரும் தங்களது மடாலயத்தின் சமையல் அறையிலும் காய்கறித் தோட்டமிடுவதற்கு சம்மதிக்கிறார்களா எனக் கேட்க. ஒப்புக்கொண்டார்கள். அந்த நிலத்து மண் செழுமை யோடிருந்தது. அதிகாலை முழுவதும் காய்கறித் தோட்டத் தினைச் சீரமைப்பதிலும் அதைப் பராமரிப்பதிலும் செலவாகி விடும். பின்பு மூவரும் துறவிகளுக்கான ரொட்டிகளைத் தயார் படுத்துவதில் நேரம் சென்றபடி இருக்கும். நாட்கள் கடந்து போய்க் கொண்டிருந்ததேயன்றி ஒருவரும் தங்களது பயண நோக்கம் பற்றிப் பேசிக்கொள்ளவேயில்லை. எப்போதாவது ஓர் இரவில் மூவரும் பேச்சரவமற்றுப் பெருமூச்சிட்டுக்கொள் வார்கள். துறவிகளில் மூத்தவன் அவர்களின் கண்களில் ஒளிந்த ஆசையறிந்தவளாக இரண்டு கோடைகளுக்குப் பிறகான ஒரு நானில் கேட்டான்,

‘நீங்கள் எதைத் தேடி வந்தீர்கள்?”

‘ஒரு பல்லை’ எனத் தலை கவிழ்ந்தபடி ஒருவன் சொன்னான். துறவி அவர்கள் தங்களைப் போலவே சாக்கியனின் மீதான அன்பு கொண்டவர்கள் போலும் என அறிந்தவனாகச் சொன்னான்.

‘அது தொலைவில் தெற்கே எங்கோ இருப்பதாகச் சொல்கி றார்கள். அது களவைப் போல் எங்கோ விரிந்திருக்கிறது.

‘தெற்கே போவது எப்படி?’ என மற்றவன் கேட்டான்.

இதைக் கேட்ட மூன்றாம் நாளின் இரவில் அவர்கள் மூவரையும் உணவும் தானியமும் தந்து துறவி வஸ்திர வணிகர்களோடு அனுப்பி வைத்தான். அவர்கள் நிழலைப் போலச் சப்தமின்றிக் கூடவே நடந்து போனார்கள்.

தெற்கு நோக்கி நடக்க நடக்க வெக்கையும் உடல் நோவும் அதிகமாகிக்கொண்டே வந்தது. புகைந்துகொண்டிருக்கும்

கிராமங்களையும் நீண்ட வயல் வெளிகளையும் பசித்த விருட்சங் களையும் கண்டவர்களாக அவர்கள் உஷ்ணம் மீறிய ஒரு கிராமத்துக்கு வந்து சேர்ந்தபோது மூவரில் ஒருவனுக்கு வைசூரி கண்டது. வணிகர்கள் அவனை அங்கேயே விட்டுவிட்டு மற்ற இருவரும் தங்களோடு வரச் சொன்னார்கள். மூவரில் நோயுற்ற வனை விடுத்து இருவரும் வர மறுத்தனர். சகோதரர்கள் மூவரையும் கிராமத்தின் தனிமையில் விடுத்தவர்களாக வணிகக் கூட்டம் பயணம் சென்றது. வைசூரி கண்டவன் வேதனை மீறிடச் சப்தமிட்டுக்கொண்டிருந்தான். எங்கே அடைக்கலம் கொள்வ தெனத் தெரியாத நேரத்தில் தண்ணீர் தூக்கி வர வந்த பெண்ணொருத்தி அவர்களைத் தனது தோட்டத்து வீட்டுக்குக் கூட்டிப்போனாள். வைசூரி கண்டவனை வாழை இலையில் ஆடைகளற்றுப் படுக்க வைத்து இருவரும் இரவெல்லாம் மயிலிறகால் தடவி, சாந்தம் கொள்ளச் செய்தனர். அந்தப் பெண் தனது மூன்று குழந்தைகளோடு விவசாயக் காரியங்கள் பார்த்துக் கொண்டிருந்தாள். வீட்டில் அவன் கணவனில்லை. வயதாகி நோயுற்ற ஒரு ஸ்திரி மட்டும் இருட்டறையில் படுத்திருந்தாள். மூன்று வாரமானது வெம்மை இறங்குவதற்கு. நோயுற்றவன் உடல் தேறத் தொடங்கிய தாளில் அவன் உடனே பயணம் செய்யக் கூடாதெனத் தடுத்தவளாக நிறுத்தி, தங்கிப் போகச் சொன்னான். அங்கிருந்த நாள்களில் இரு சகோதரர்களும் அவளது வயல் வேலைகளில் பங்குகொண்டார்கள். சகோதரர்களில் மூத்தவன் அவளோடு நிலத்தை உழுவதற்கும் விதைப்பதற்கும் ஈடு கொடுத்தான். கடின உழைப்பாளிகளாக இருந்த அவர்கள் அந்தப் பெண்ணோடு நாட்களைக் கழித்தனர். ஒரு நாளின் இரவில் அவள் மூத்தவன் படுக்கைக்கு வந்து சொன்னாள்,

‘நீண்ட நாட்களாக எனது படுக்கை தனிமையில் சுருட்டப்பட்டுக் கிடக்கிறது. நீ அதை அவிழ்த்து என்னோடு துயில் கொள்வாயா அவன் மறுக்கவில்லை. பின்பான நாட்களில் மூவரும் அவளது வீட்டு மனிதர்களைப் போலானார்கள். நீண்ட நாள்களுக்குப் பிறகு அந்த ஸ்திரி கர்ப்பிணியானாள். அவளது கர்ப்ப சிசுவின் தகப்பனான மூத்தவன் தனது சிசு பிறக்கும் நாள் வரை இங்கே காத்திருக்கலாம் என்றான். மூர்க்கமான கோடைக்காலத்தில் அவள் பிரசவித்தாள்.

சிசு பிறந்த நாளில் இருந்தே குற்ற உணர்ச்சியால் பீடிக்கப்பட்ட மூத்தவன் சகோதரர்களிடம் அவளிடமிருந்து தன்னால் விடை பெற முடியாது. அவள் அறியாமல் விலகிப் போவோம் எனச் சொல்லி நள்ளிரவில் அவ்வூரைப் பிரிந்தபோது மூவருக்கும் ஆறு வயது அதிகமாகியிருந்தது.

தெற்கில் நடந்து வந்தபோது தாங்கள் தேடிவந்த பல் கடல் தாண்டிய நிவப்பரப்பில் உள்ளதென அறிந்தவர்களாக அங்கே நடக்கவிருக்கும் பூர்ணிமை விழாவுக்குப் போவதற்காகக் கடற்சோதனை விடுதியில் வைசூரி கண்டு வடு கிளைத்த உடலோடு காத்திருந்தபோது, சாக்கிய முனியின் உதிர்ந்த பல் ஒன்று காலம்தோறும் சித்திரை விழாவின் இறுதி நாளில் பார்வைக்கு வைக்கப்படுமென்றும் அந்த அதிசயமான, காலம் மீறிய பல்லைக் காணப் பல்லாயிரம் பேர் திரளக் கூடுமென்பதை அறிந்து தங்கள் வாழ்நாளில் எப்படியாவது அந்தப் பல்லைத் திருடிப் போய்விட வேண்டும் என முடிவுற்றவர்களாகக் கடல் பயணம் கூடிடக் காத்திருந்தனர். பண்டிகை நடக்கும் ஊரில் எங்கும் மனிதர்கள் ஆரவாரமிட்டு நடந்தனர். புனிதப் பல் இருக்கும் மடாலயத்தின் முன்பாக நீண்ட வரிசை நின்றிருந்தது. எங்கும் சரணகோசமும் பாடல்களும் நிரம்பின. தாங்கள் ஆசையுற்ற பல்லைக் காணவேண்டி இரவெல்லாம் காத்திருந் தனர். ஒரு தங்கப் பேழையில் வைத்துக் கொண்டுவரப்பட்டு அந்தப் பல் துல்லியமான பாலோட்டம் கொண்டிருந்தது. அதைப் திருடுவதற்காக அவர்கள் மடாலயத்தில் பணியாள்களாகப் பல்லை நெருங்கிக் காத்திருந்தனர். விழா முடிந்து அந்தப் பல் திரும்பவும் பேழைக்குள் வைக்கப்படும் இறுதி நாள் இரவு அதைத் திருடுவதற்காக மூவரும் திட்டமிட்டுச் சென்று பேழையை எடுத்தனர். பல் அவர்கள் விரலில் பட்டபோது குளிர்ச்சியும் உயிரோட்டமும் இருந்தது. மிக உணர்ச்சியுற்ற வர்களாக அவர்கள் பல்வை எடுத்தபோது ஒருவளின் கை நடுங்கிப் பல் கீழே விழுந்தது. குனிந்து எடுப்பதற்குள் விழிப் புற்ற காவலர்கள் அவர்களைக் கையோடு பிடித்துக் கொண்டார்கள். குற்றம் உறுதி செய்யப்பட்டது. மடாலய முதன்மையாளர் தணிவான குரலில் கேட்டார்.

தங்கப் பேழையைத் திருட முயன்றதை ஒப்புக்கொள்கிறீர்களா? மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கண்களைத் தாழ்த்திக் கொண்டு ஒப்புக்கொண்டதாகச் சம்மதித்தனர். வாழ்நாளெல் லாம் மடாலயத்தில் உள்ள மணியை அடிப்பவர்களாகவும் தண்ணீர் இறைத்து ஊற்றுபவர்களாகவும் வேலை செய்ய தண்டனை தரப்பட்டது. அவர்கள் எவ்விதமான மறுப்புமின்றித் தங்கள் தண்டனைப் பணிகளைச் செய்துகொண்டேயிருந்தனர். ஒவ்வொரு பூர்ணிமைக்கும் பல் மக்கள் பார்வைக்காக எடுத்து வரப்படும். அவர்கள் செய்வதறியாது பார்த்துக்கொண்டே யிருந்தார்கள். இதிலே அவர்களுக்கு வயோதிகம் வந்து சேர்ந்தது. அவர்கள் குற்றத்தின் பொருட்டான பணியாளர்கள் என்பதே யாவருக்கும் மறந்துபோனது.

ஒரு நாளில் அவர்கள் தங்களது தேசம் திரும்ப அனுமதி கேட்டனர். அசதியும் களைப்பும் மேலிட இரண்டு ஆண்டுகள் பயணம் செய்து தங்கள் தகப்பனின் ஊர் திரும்பினார்கள். அதற்குள் நதி திசை மாறி ஓடத் தொடங்கியிருந்தன. தகப்பனின் வீடும் நிலமும் அடித்துப் போகப்பட்டிருந்தது. ஒரு மரத்தை இறுகப் பற்றியவனான மனிதனின் சடலமொன்று கிடந்தது. வெள்ளத்தில் இறந்த தங்கள் தகப்பன் அவன் என அடையாளம் கண்டவர்கள் அந்த உடவை விடுவித்தபோது கபாவம் சிதறியது. அதில் மிஞ்சிய பல்லில் ஒன்று தெறித்து விழுந்தது. அதை எடுத்த மூத்தவன் கைகளிவே பார்த்துக் கொண்டிருந்தான். சகோதரர் களும் வாங்கிப் பார்த்தனர். அந்தப் பல்லிலும் பால் ஒளிர் வதையும் அதுவும் சாக்கியனின் பல்லைப் போலவே அசப்பில் இருப்பதாகவும் கண்டனர். மாறி மாறிக் கையில் வாங்கிப் பார்த்தபோது அதில் உயிரோட்டம் துளிர்ந்தது எப்படி எனப் புரியாதபோது வெயிலில் தகப்பனின் கபாலம் சூடேறிக் கொண்டிருந்தது.

– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *