கொழும்புத்தம்பி




(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தோட்டம் திருவிழா சந்தோசத்தில் மூழ்கியிருந்தது.
நேரக் காலத்தை அணுசரிக்காமல் ஒலிக்கும் பக்தி பாடல்கள் லயத்தை கதிகலங்கச் செய்துக் கொண்டிருந்தது.
தோட்ட வீதிகளெல்லாம் வழமைக்கு மாறாக ஒளியூட்டப்பட்டிருந்தன. அம்மனின் வீதியுலாவைக் காண்பதற்கு பக்த அடியார்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். கண்டி, கொழும்பு பகுதிகளில் பிழைப்புக்காக சென்றிருந்தவர்களில் கணிமானோர் திருவிழாவைக் காண்பதற்கு வந்திருந்தனர்.
லயத்தில் வயசுப் பையன்கள் ஒருவரையும் காணமுடியவில்லை. லயமோ வெறிச்சோடிக்கிடந்தது. வாசலில் கட்டப்பட்டிருந்த வாழை மரங்களில் செருகியிருந்த மின்குமிழ்கள் ஒளிர்ந்துக் கிடந்தன. லயத்தில் மிஞ்சியிருந்த பெரிசுகள் முன்னைநாள் திருவிழா புராணங்களை வாயோயாமல் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது லயத்தில் கொழும்புத் தம்பியையும் காணவில்லை.
வழமையாகவே தோட்டத்தில் திருவிழா தொடங்கி விட்டால் லயத்து பையன்கள் கொழும்புத்தம்பியை சூழ்ந்து விடுவார்கள்.
கொழும்பு ஹோட்டல்களில் பராட்டா சுட்டும், கொத்தடித்தும் சம்பாதித்த பணத்தையெல்லாம் சாராயப் போத்தல்களாகவும் பியர்போத்தல்களாகவும் கரைப்பதற்கு கொழும்புத்தம்பியை மிஞ்சுவதற்கு தோட்டத்தில் ஆளில்லை. அன்றும் போத்தல்களை கண்ட பக்தப் பதறுகள் அம்மன் பிரசாதத்தைக் கண்ட திருப்தியுடன் ஆரவாரித்தனர்.
அன்றைய இரவும் மதுவுடன் கரைந்துக் கொண்டிருந்தது.
நேரம் இரவு பதினொரு மணியைக் கடந்திருந்தது. கொழும்புத் தம்பியின் வீட்டுக்கு முன்னால் போட்ட பைலா கூச்சல் சூடுபிடிக்கத்தொடங்கியிருந்தது. காதைக்கிழிக்கும் கானா பாடல்களுக்கு ஏற்றாற்போல உடலசைவுகளைக் காட்டி எல்லோரும் கூடிக் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களின் ஆட்டம், பாட்டத்தைக் கண்டு தீர்ந்துப்போன போத்தல்களும் பியர்டின்களும் நகைத்துக் கிடந்தன.
பனி நன்றாக இறங்கியிருந்தது. பனியின் தீவிரத்தில் ஏற்றப்பட்டிருந்த போதை கரையத்தொடங்கியிருந்தது. அப்போதுதான் ஞானம் வந்தாற்போல் வீதியுலா வரும் அம்மனை நினைத்துப்பார்த்த பக்தர்கள் கோயில் வாசலை அடைந்திருந்தனர். எல்லோரும் முழு போதையில் திளைத்திருந்தனர். பேண்டு வாத்தியங்கள் புது உற்சாகத்துடன் இசைக்கப்பட்டன. கொழும்புத் தம்பிக்கோ இருப்புக் கொள்ளமுடியவில்லை. பொட்டலில் இறங்கி ஆட்டத்தை தொடங்கி விட்டான். ஜெல் வைத்து மழித்து சீவப்பட்டிருந்த தலைமயிரும் உடலை ஒட்டிக்கிடக்கும் Lo சேர்ட்டும் டெனிமும் அணிந்திருந்த அவனை ஒளிவெள்ளம் சினிமா கதாநாயகன் கணக்காய் காட்டிக்கொண்டிருந்தது. கறுப்புக் கண்ணாடியை தலையில் பொருத்திய வண்ணமே ஆடிக்கொண்டிருந்தான்.
தோட்டத்து இளசுகளின் பார்வைகள் தன்னையே மொய்த்துக் கொண்டிருப்பதாக எண்ணி பெருமிதத்தில் ஆழ்ந்திருந்தான் அவன். ஆனால் அவனின் கோமாளிதனத்தை கண்டு பலர் நகைத்துக்கிடந்தது அவனுக்கு தெரியாது. இசைக்கு ஏற்றாற்போல இடுப்பை வளைத்து வளைத்து அவன்காட்டிய நளினங்களில் அங்கிருந்த குமருகளில் அநேகர் வீழ்ந்திருந்தனர்.
விடிய விடிய ஆடி பலரையும் பரவசத்தில் ஆழ்த்தியிருந்தாலும் அவனின் பார்வை மட்டும் மல்லிகாவை சுற்றித்தான் வட்டமடித்துக் கொண்டிருந்தது. விழுங்குமாற் தன்னையே அவன் வெறித்துப்பார்க்கும் போதெல்லாம் வெட்கத்தால் நாணி குறுகி காலால் மண்ணில் கோலம் போடுவாள் அவள். பருவத்துக்கு வராத போதும் அவளின் ஆசை பருவத்துக்கு வந்திருந்தது. வயசுக்கு மீறிய பொலிவுடன் நிற்பதால் அவள் மீது தோட்டத்து பையன்களுக்கு ஒரு கண்ணிருந்தது. எத்தனையோ பையன்கள் முயற்சி களத்தில் குதித்திருந்தப்போதும் விழுந்ததென்னவோ கொழும்புத் தம்பிக்குத்தான்.
கொழும்புத்தம்பி வீட்டுக்கு வந்துவிட்டானென்றால் மல்லிகா ஸ்கூலுக்கு போவதேயில்லை. அவனின் ஒவ்வொரு அசைவுகளையும் பெரிதும் ரசிக்கப் பழகியிருந்தாள். அவன் என்னக் கேட்டாலும் சிரிப்பை மட்டும் பரிசளிக்கும் மல்லிகாவை வெகு சாமர்த்தியமாய் தன் வலையில் வீழ்த்தியிருந்தான்.
லயத்தில் மல்லிகாவுக்கு தனி மௌசு உண்டு. மல்லிகாவைப் எல்லோருக்கும் பிடிக்கும். எப்போதும் முகத்தில் சிரிப்புக்கு பஞ்சமிருக்காது. சக மனிதர்களோடு பழகுவதில் மட்டுமல்ல படிப்பிலும் கூட கெட்டிக்காரிதான் தன் தாயின் வெளிநாட்டு பயணத்துக்கு பின்னர் குடும்ப பொறுப்பே அவள் தலையில் விழுந்தப்போதும் முகத்தில் சலனத்தைக் காணமுடியவில்லை. தாய்க்கு தாயாய் நின்று தன் குடும்பத்தை இழுத்துசெல்லுமளவுக்கு அவளுக்கு பக்குவம் இருந்தது. தான் உண்டு தன் வேலையுண்டு என்றோடிய வாழ்க்கை நதியில் கொழும்புத்தம்பின் வருகை சலனத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஒவ்வொரு நாளும் ஏதாவது சாக்கு போக்கு காட்டி ஸ்கூலுக்கு போகாமலிருந்து விடுவாள்.
எல்லோரும் வேலைக்கு சென்றவுடன் வெறிச்சோடிக்கிடக்கும் லயத்தில் தன் எண்ணங்களை எல்லாம் பாடல்களாய் ஒலிபரப்பிக் கொண்டிருப்பான் கொழும்புத்தம்பி அப்போதெல்லாம் அவளுக்கு உள்ளுக்குள் ஆயிரம் ஆசைகள் பூக்கும்.
ஆளைத் தூக்கும் சென்ட்வாசனையோடு அவன் அவளை அணுகும் போதெல்லாம் கிரங்கிப்போவாள். பளபளப்பாய் இருக்கும் அவனின் தோற்றத்தில் முழுமையாய் மயங்கி போயிருந்தாள். பேசிப் பேசி அவளை தன்வசப்படுத்தி விட்டிருந்தான். மல்லிகாவுக்கு படிப்பு முழுமையாய் தூரமாகியிருந்தது. பொறுப்புகள் எல்லாம் மறைந்து தொலைந்து புள்ளியாய் மாறிப்போக யாருமில்லா தனிமையில் அவனை சந்தித்து பேசுவதற்கும் பழகியிருந்ததாள். இப்போதெல்லாம் கொழும்புத்தம்பி தன்னை நெருங்கும் போது முன்பிருந்த பதற்றமோ அச்சமோ அவளிடம் இருக்கவில்லை. தனிமையில் ஆளில்லா இடங்களில் எல்லாம் அவனை சந்தித்துப் பழகத் தொடங்கியிருந்தாள்.
கொழும்புத் தம்பிக்கு பத்து வயசு இருக்கும் போது ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று அடம்பிடிப்பான். லயத்தை சுற்றிச் சுற்றி ஓடி ஒழிந்து வேடிக்கை காட்டுவான். அநேகமான நாட்கள் பன்னீருக்கு பயந்து விறகு கொட்டகையான அட்டாலில் ஒலிந்துக் கொண்ட நாட்கள் அதிகம். அதனால் பன்னீரிடம் வாங்கிய அடியுதைகளுக்கு அளவேயில்லை. ஆனாலும் அடியுதைகளுக்கு மசியாத அவன் ஒருநாள் யாருக்கும் தெரியாமல் பஸ்சேறி கொழும்புக்கு ஓடியதுதான் பத்து வருஷமாக தோட்டப்பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை.
பன்னீரும் பார்க்காத சாமி கிடையாது அடிக்காத கோடாங்கி கிடையாது. எல்லோருமே பிள்ளையின் உயிருக்கு மோசம் இல்லை என்று சொன்ன வார்த்தையை தவிர ஆறுதலாய் வேறொன்றையும் சொல்லவில்லை.
ஒவ்வொரு தீபாவளிக்கும் பொங்கலுக்கும் கொழும்பே திரண்டு வந்து ஹட்டனில் இறங்கும் போது டவுன் முழுவதும் அவனை தேடித்திரிந்து ஓய்ந்து உலையும் பன்னீரின் கால்களில் பரவியிருக்கும் வலியில் மகன் மீதான பரிவிருக்கும். எதிர்பார்த்திருந்து எதிர்பார்த்திருந்தே பார்வதி நோயாளி ஆகி படுக்கையோடு படுக்கையாகி பரலோகமும் சென்று விட்டாள். ஒரே பிள்ளை என்று உருவி உருவி உறியில் சோறு கொடுத்து வளர்த்த மகனுக்கு தன் தாயிற்கு கொல்லி வைப்பதற்கும் கொடுத்து வைக்கவில்லை. பார்வதியின் மறைவுக்கு பின்னர் பன்னீரும் நோயாளியாகி விட்டிருந்தான்.
கவனிப்பாரற்று பன்னீரு புழுங்கிக் கிடந்த போதுதான் செல்லத் தொப்பையோடும் உப்பிய கன்னத்தோடும் கொழும்பு ஹோட்டல்களில் தின்று வளர்த்திருந்த மாமிசபிண்டமாய் வந்து கண்ணீரை துடைத்தான் கொழும்புத்தம்பி.
பத்து வயசில் தோட்டத்தை விட்டு ஓடும் போது கிழிந்த காற்சட்டையோடு மூக்கு வடித்து திரிவான். வயிறும் சட்டிமாதிரி முட்டிக்கொண்டிருப்பதால் பாண்டி எனும் பெயருக்கு அடையாக சட்டி என்பது வந்து சேர்ந்து விட்டிருந்தது. அன்று முதல் ”சட்டி பாண்டி” என்பது தோட்டம் அவனுக்கு சூட்டிய பெயராயிற்று. சட்டி பாண்டிதான் கொழும்பு விஜயத்தின் பின்னர் கௌரவமாக கொழும்புத்தம்பி என்றழைக்கப்பட்டான்.
விடிந்தும் விடியாமலும் கிடந்த காலைப் பொழுதை பனி ஆக்கிரமித்திருந்தது. கொழும்புத் தம்பி ஒலிபரப்பிக் கொண்டிருந்த குத்துப்பாடல்கள் லயத்தை உழுக்கிக் கொண்டிருந்தன.
“கொழும்புத் தம்பி” வந்து விட்டால் லயத்தில் ஏனைய வீடுகளில் ரேடியோவோ,எம்.பி பிளேயரோ போடத் தேவையில்லை எல்லா வீடுகளுக்கும் சேர்த்து அவனே ஒலிபரப்பி விடுவான். லயத்துக்கு வந்து விட்டானென்றால் லயத்தில் உள்ள பெரிய கட்டைகள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். காது கிழியும் கானா பாடல்களை கேட்டு சகிக்கமுடியாமல் கரித்துக் கொட்டுவார்கள். அவையெல்லாவற்றையும் விழுங்கி ஏப்பமிடும் பாடல்கள் திருவிழாவுக்கு மைக்செட் போட்டது மாதிரி எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
நேரங்காலம் இல்லாமல் பாடல்களைப் போட்டு தொல்லைபடுத்தும் போதெல்லாம் யாராவது வந்து முறையிட்டு விட்டால் வயசுக்கும் மரியாதையில்லாமல் எடுத்தெறிந்துப் பேசிவிடுவான். இப்படித்தான் ஒருநாள் பக்கத்து வீட்டு முனுசாமி
“தம்பி சின்னப்புள்ளைங்க துாங்க முடியாம கத்தி கதறுதுங்க பாட்ட கொஞ்சம் கொறச்சி வையி”
ஊரு ஒலகமே ஒன்னோட பாட்டக் கேட்குதுனு நெனப்பா? மனுசன நிம்மதியா துாங்க கொட விட மாட்டேங்குற” என்று சொல்லி வாயோயும் முன்னமே
“ஒனக்கு கஸ்டமுனா காதுல பஞ்ச வச்சி அடச்சிக்க இத்தன பேரு சும்மா இருக்கும் போது ஒனக்கு மட்டும் என்னாய்யா புதுசா காது சவ்வு கிழியிது”? வந்துட்ட பெரிய பஞ்சாயித்து தலவரு மாதிரி பொத்திக்கிட்டு போவியா?” என்று வானொலி பெட்டியின் சத்தத்தை இன்னும் கூட்டினான். அன்றிலிருந்து அவனிடம் யாரும் வாயைக் கொடுப்பதில்லை.
கொழும்பில் இருந்து வரும்போது கொண்டுவரும் காசு பையில் இருக்கும் வரை அவனின் ஆட்டத்தை யாராலும் அடக்க முடியாது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் கொழும்பில் இருந்து வருவான் வந்தாலும் இரண்டு வாரங்களுக்கு கிடந்து லயத்தையே ஒரு உழுக்கு உழுக்கி விடுவான். அதுவும் பாடசாலை விடுமுறை நாட்களில் வந்து விட்டான் என்றால் சொல்லவே வேண்டாம் லயத்தில் உள்ள குஞ்சு கொலவான்கள் எல்லாம் அவனையே சுற்றித் திரிவர்.
விடியற் காலையிலேயே பாடல்களை உச்சத்தாயில் ஒலிபரப்பி விட்டு பிரஸ்சை வாயில் பொருத்திவிட்டான் என்றால் அவனோடு பேசுவதற்கும் புதினம் விசாரிப்பதற்கும் ஒரு கூட்டம் கூடிவிடும். கொழும்பு புதினங்களை எல்லாம் பேசி பேசி வாயோய்ந்துப் போகும் வேளை சிக்னல் வாயோரமாய் காய்ந்து படிந்து பூத்துவிடும் அதுவரை அலறித்துடிக்கும் வானொலி பெட்டியின் கழுத்தை யாரும் முறிக்க முடியாது. அது கேட்பாரின்றி ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
முதல் நாள் சிக்னலோடு தொடங்கும் காலை நேரம் கடைசி நாளில் கரித்துண்டில் வந்து நிற்கும். வரை தொழிலுக்கு செல்ல வேண்டும் என்ற உணர்வு அவனுக்கு சுத்தமாய் இருக்காது.
உள்ளங்கையளவில் வைத்திருக்கும் கைபேசியில் அப்படி என்னதான் காட்டுவானோ தெரியாது அதனால் அவனை சுற்றி எப்போதும் ஒரு கூட்டமிருக்கும். பருவ வயசுப் பையன்களிடம் ஆசையை தூண்டி விடுவதில் கொழும்புத் தம்பி சமர்த்தன். ஆசை வார்த்தைகளை காட்டியே பலரின் படிப்பை கெடுத்து கொழும்புக்கு இழுத்து விட்டிருந்தான்.
ஊருக்கு வந்துப் போனான் என்றால் லயத்தில் உள்ள பையன்களின் நடையுடை பாவணை எல்லாமே மாறிவிடும். காப்பிரி கோழிகளின் மயிர் போல எல்லோரது தலைமயிரும் சிலிர்த்து நிற்கும். காற்சட்டை இடுப்பிலேயே நிற்காது குனிந்து நிமிரும் போதெல்லாம் அரைநிர்வாணக் கோலமாய் அருவறுப்பை ஏற்படுத்துவர். மண்டை ஓடுகளாலும் சிப்பிகளாலும் ஆன கழுத்து மாலைகளையும் கைப்பட்டிகளையும் அணிந்து திரியும் போதுதான் எம் பரம்பரை உணர்வுகளை சரியாக அறியக் கூடியதாக இருக்கும். இவற்றையெல்லாம் கேட்டால் அதுதான் ஸ்டைல் என்று ஒரு பதிலையும் வைத்திருப்பார்கள்.
ஒழுங்காக ஸ்கூலுக்கு சென்றுக் கொண்டிருக்கும் பையன்களும் இவன் வந்து போகும் போது அவனுடனே கொழுப்புக்கு ஓடி விடுவார்கள்.அதனால் லயத்தில் சண்டைகள் மூளும். லயம் ஒரு கொழும்புத் தம்பிக்கே இப்படி அல்லாடிப் போகும் போது அவனால் உருவாக்கப்படும் கொழும்புத் தம்பிகளால் என்னப்பாடு படப்போகின்றதோ என்று நினைத்தாலே ஈரக்கொலை நடுங்கிப் போகும்.
இது இப்படி இருக்கும் போதுதான் மல்லிகா கொழும்புத்தம்பியின் வலையில் வீழ்ந்திருந்தாள். தீவிரமாய் காதலில் வீழ்ந்திருந்த அவளுக்கு அவனே உலகமாகியிருந்தான். தன் தாயின் வெளிநாட்டுப் பயணத்துக்கு பின்னர் தனக்கிருக்கும் ஒரே ஆறுதல் கொழும்புத்தம்பிதான் என்று எண்ணியிருந்தாள்.
இடுப்புவரை நீண்டு வளர்ந்திருக்கும் கூந்தலை வாரி சுருட்டியிருந்தவளின் பின்னழகை ரசிப்பதற்கு ஆயிரங்கண்கள் வேண்டும். வேட்டை நாய் கணக்காய் அவளின் மதாளிப்பு குறையாத அங்கங்களை கண்களால் அளப்பதில் கொழும்புத்தம்பி கைதேர்ந்தவன்.
மிளாறுகாடு அவளும் அவனும் தனிமையில் சந்திப்பதற்கான களமாகியிருந்தது. சரிந்துக் கிடக்கும் பள்ளங்களில் யாருக்கும் தெரியாமல் சந்தோஷித்திருந்தனர். கொழும்புத்தம்பிக்கு மல்லிகா கிறுக்கு தலைக்கடித்திருந்தது. மெதுமெதுவாய் தன் கபட நாடகத்தை தொடங்கியிருந்தான்.
கொழும்புத்தம்பியால் தீட்டப்பட்டிருந்த சூழ்ச்சியின் தீவிரம் புரியாமல் அப்பாவியாய் பலியாகிப்போனாள் மல்லிகா. மறுநாளில் இருந்து கொழும்புத்தம்பியை லயத்தில் காணவில்லை.
மல்லிகாவுக்கு உலகமே மருண்டநிலை அவனின் கைபேசிக்கு அழைப்பெடுத்து அழைப்பெடுத்து அவனின் இலக்கங்கள் மனப்பாடமாகியிருந்தது. ஆனால் அன்றைய நாளுக்கு பின்னர் தொலைபேசி நிறுத்தியே வைக்கப்பட்டிருந்தது. பேசி பேசி புதிய அனுபவங்களை தந்து விட்டு படிப்பை தூரமாக்கி கண்ணைக்கட்டி காட்டில் விட்டாற் போல் திடுமென மறைந்து விட்ட அவனை அவ்வளவு சுலபமாய் அவளால் மறக்கமுடியவில்லை. தனிமையில் கிடந்து உழன்றாள்.
வழமைக்கு திரும்புவதற்கு முயன்று முயன்று தோற்றுபோனவளுக்கு கொழும்புத்தம்பியின் ஞாபகம் வந்து வந்துப் போனது.
வீட்டில் யாருமில்லா தருணங்களில் அழுது தீர்த்தாள். மேசையில் கிடக்கும் புத்தகங்களையும் கொப்பிகளையும் கண்ட மாத்திரத்தில் பொங்கி வெடிக்கும் அழுகையை அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. குற்றமிழைத்த மனசு குறுகுறுத்து கிடந்தது.
நாட்கள் வெகுவிரைவாக கடந்திருந்தன ஸ்கூலில் இருந்து அவளுக்கான அழைப்பு வந்த வண்ணமே இருந்தது. நடந்தவற்றை எல்லாம் மறந்து விட்டு ஸ்கூலுக்கு செல்வதற்கு மனசு ஒப்பவில்லை. லயப்பகுதியை தவிர எங்கும் இருள் வியாபித்திருந்தது. வீட்டில் இருந்து சற்றுத்தள்ளியிருக்கும் கக்கூசுக்குள் இருந்து திடுமென எழுந்த தீச்சுவாலை லயத்தில் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உள்ளுக்குள் தாழிடப்பட்டிருந்த கதவை உடைப்பதற்கு போதும் போதுமென்றாகி விட்டநிலையில் உடைத்து பார்த்தப் போதுதான் வெந்து தணிந்திருந்தது மல்லிகாவின் உடல் என்பது ஊர்ஜிதமானது.
தோட்டம் மல்லிகாவின் மரணத்தின் பின்னணியில் இருக்கும் மர்மம் புரியாமல் பலதையும் பேசிக்கொண்டிருந்தது. பேசிப் பேசி வாயோய்ந்துப் போன தோட்டம் பின்னர் வழமைக்கும் திரும்பியது. ஆறு மாதங்கள் ஓடி மறைந்து விட்ட நிலையில் தோட்டம் தீபாவளி விஷேசத்தில் மூழ்கியிருந்தது.
விடிந்தால் தீபாவளி
லயத்தில் சனம் வருவதும் போவதுமாய் இருந்தனர். இரவில் இருந்து ஓயாமல் பட்டாசுகள் வெடித்து தீர்க்கப்பட்டன.
நேரம் அதிகாலை 5.00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
இருளோடு கிடந்த பொழுதை உழுக்கினாற் போல கொழும்புத்தம்பி வீட்டில் இருந்து மீண்டும் பாடல்கள ஒலிக்கத் தொடங்கியிருந்தன.
லயம் கதிகலங்கி போனது.
கதவைத் திறந்துக் கொண்டு பலரும் வந்து, பார்வையை கொழும்புத்தம்பியின் வீட்டுப்பக்கம் வீசினர். பாடல்கள் அங்கிருந்து ஒலிக்கவில்லை. ஓட்டுலயத்தின் தொங்கல் வீட்டில் இருந்து ஒலித்துக் கொண்டிருந்தது. தோட்டப்பக்கமாய் வந்து பலர் லயத்தை எட்டிப் பார்த்தனர். பொழுது பளபளப்பாய் விடிந்திருந்தது. போனவருஷம் வீட்டுக்கு தெரியாமல் கொழும்புக்கு ஓடிய சுகுமாருத்தான் வந்திருந்தான்.
“பள்ளிக்கூடம் போகலாமா? அதுக்கு புத்தகத்த வாங்கலாமா? என்று எஸ்.பி.பீ பாடிக்கொண்டிருக்கிறார். பீலியில் வைத்திருந்த குடம் நிரம்பி வழிந்ததும் தெரியாமல் நாணி கோணி காலால் கோலமிடும் அடுத்த லயத்து சின்னப் பொண்ணு ஒலித்துக் கொண்டிருக்கும் காதல் பாடலில் கிரங்கியபடி நின்றுக் கொண்டிருந்தாள்.
– மலைநாட்டு எழுத்தாளர் மன்றம்
– மீன்களைத் தின்ற ஆறு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 2016, பெருவிரல் கலை இலக்கியா இயக்கம், இலங்கை.
![]() |
சிவனு, மனோகரன் (1978.09.17 - ) ஹட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டதாரி. இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வருகின்றார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, ஞானம், தினமுரசு, தினக்குரல், சுடரொளி, மித்திரன், வடம், லண்டன், சுடரொளி, புதினம் ஆகியவற்றில் வெளியகியுள்ளன. ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும், கோடங்கி ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புக்களாகும். இவரது நூல்கள்…மேலும் படிக்க... |